Advertisement

அவளே என் பிரபாவம் 8
“விடியற்காலை பிளைட்ல  சென்னை வந்துடுவேன்.. காரை  ஏர்போர்ட் அனுப்பிவிடுங்கம்மா, ட்ரைவர்கிட்ட நான் சொன்ன பணத்தையும் கொடுத்துவிடுங்க..”  என்று ரவி வசந்தாவிடம் போன் செய்து சொல்ல, 
“ஏன் ரவி இவ்வளவு பணம்..? ஏதாவது பிரச்சனையா..? நீ ஏன் சென்னை வர..? மது நல்லாத்தானே இருக்கா..?”  என்று தொடர்ந்து கேள்விகள் கேட்ட அம்மாவிடம், 
“ம்மா.. எந்த பிரச்சனையும் இல்லை,  எல்லோரும் நல்லா இருக்கோம், மதுவுக்கு புது ஆர்டர் கிடைச்சிருக்கு, அதுக்குத்தான் இந்த பணம்..”  என்று ரவி பொறுமையாக விளக்கினான். 
“என்ன மதுவுக்கா..? அவ இப்படி எல்லாம் காசு வாங்கமாட்டாளே..? அவகிட்ட தான் பணம் வேண்டிய அளவு இருக்குமே..?” என்று வசந்தா சந்தேகத்துடன் கேட்டார். 
“ம்மா.. இப்போ என்ன..? பிஸ்னஸ்ன்னா அப்படி  இப்படித்தான் இருக்கும், இதுக்கு எல்லாம் காரணம் கேட்பீங்களா..? உடனே கொஞ்சம்  கேஷா தேவைப்படுது அவ்வளவுதான், அதுவும் அவ லோன் தான் போறேன்னு சொன்னா..”  என்று ரவி சொல்லவும்,  
“என்ன லோனா..? அவ ஏண்டா லோன் போகணும்..? நான் காலையிலே ட்ரைவர்கிட்ட காசு கொடுத்து விடுறேன்..” என்று வசந்தா போன் பேசிவைத்தவர், பக்கத்தில் இருந்த கணவனிடம், 
“இந்த மதுவை பாருங்க, பணம் வேணும்ன்னா எடுத்துக்க வேண்டியதுதானே, அதைவிட்டு லோன் போறேன்னு சொல்லியிருக்கா.. ஏன் இப்படி எல்லாம் செய்றா..? வரவர நம்மளைவிட்டு ரொம்ப தள்ளி போற மாதிரியே இருக்கு..”  என்று தன் போக்கில் புலம்ப, 
“ச்சு விடு.. இந்தா  கேஷ் லாக்கர் சாவி, ரவி சொன்ன பணத்தை விட ஒரு பத்து இருபது லட்சம் சேர்த்தே கொடுத்துவிடு.. நம்ம கந்தனை அனுப்பிவை..” என்ற வடிவேலு கசங்கிய முகத்துடன் படுத்து கொண்டார்.   
“என்ன..? எதுக்கு அந்த மதுவுக்கு இவ்வளவு பணம்..? அவ காசு எல்லாம் எங்க..? என்ன நடக்குது..?” என்று கணவன் பேசுவதை ரூமில் இருந்தபடியே கேட்டு கொண்டிருந்த திவ்யா, ஓர் முடிவோடு வெளியே வந்தவள்,
“நானும் ஊருக்கு வரேன்..”  என்று சொல்ல, அவளை எரிச்சலுடன் பார்த்த ரவி, 
“நான் ஊருக்கு ஒன்னும் போகல, சென்னைக்கு தான் போறேன்..”  என்று சொன்னான். 
“நானும் உங்களோடே சென்னை வந்து   அங்கிருந்து ஊருக்கு போயிக்கிறேன்..” என்று அடமாக நிற்கும் மனைவியை சலிப்பாக பார்த்தவன், அவளுக்கும் சேர்த்தே பிளைட் டிக்கெட் போட்டான். 
மறுநாள் காலையிலே பெங்களூரிலிருந்து  சென்னை வந்திறங்கியவர்கள் ஏர்போர்ட்டை விட்டு வெளியே வரவும், “மதுவை பார்க்க வரியா..?” என்று கடமைக்காக கேட்டான். 
அவளும் முகத்தை அலட்சியமாக திருப்பியவள், “வரல..” எனவும், பல்லை கடித்து தன் கோவத்தை அடக்கியவன், 
“சரி.. என்னை மது பொட்டிக்ல டிராப் செஞ்சுட்டு நீ நம்ம காரிலே ஊருக்கு போயிடு..”  என்று அவர்களுக்காக வந்திருந்த காரில் மனைவியுடன் தானும் ஏறிக்கொண்டான். 
“சிட்டிக்குள்ள போய்ட்டு போனா எனக்கு ரொம்ப நேரம் ஆகும், அதுவும் இந்த டைம்ல நிறைய ட்ராபிக் வேற இருக்கும்..”  என்று கடுப்பாக முணுமுணுத்த மனைவியை முறைத்தவன், 
“சீக்கிரம் ஊருக்கு போய் நீ ஒன்னும் வெட்டி முறிக்க போறதில்லை, லேட்டாவே போ..” என்று  சிடுசிடுத்த ரவி, 
“ண்ணா.. அம்மா கொடுத்த பேக் எங்க..?” என்று டிரைவரிடம் கேட்டான். 
“இதோ இருக்கு தம்பி..” என்று அவர் கொடுத்த பையை வாங்கி தன் பேக்கில் வைத்து கொண்டு தானே காரை எடுத்தவன், மதுவின் பொட்டிக்கில்  இறங்கி கொண்டான். 
“ண்ணா.. வீட்டுக்கு போயிடுங்க..” என்று டிரைவரிடம் சொன்னவன், “பார்த்துக்கோ..”  என்று மனைவியிடம் விடைபெற,  
“ம்ம்..”  என்று மட்டும்  முணுமுணுத்த திவ்யா, முகம் திரும்பி கொண்டு கிளம்பிவிட்டாள். பொட்டிக் வாசல் வரை வந்தும் உள்ளே சென்று மதுவை பார்க்காமல் கிளம்பிவிட்ட மனைவியை நினைத்து கோவம் கொண்ட,  ரவி  உள்ளே செல்ல, அங்கு குமார் மதுவிடம் பேசிக்கொண்டிருந்தான்
“ண்ணா.. நீங்க..?” என்று காலையிலே தன் பொட்டிக்கிற்கு வந்து நின்ற குமாரை பார்த்த  மது ஆச்சரியமாக  கேட்கவும், அவளை வருத்தத்துடன் பார்த்த குமார், 
“மது ஏன் இப்படினு எங்கிட்ட சொல்லலை..?” என்று கேட்டான். 
“என்னண்ணா சொல்லலை..?” என்று மது புரியாமல் கேட்க, 
“அதான் உனக்கு காசு தேவைப்படுதுன்னு..” என்று சொல்லவும், 
“உங்களுக்கு எப்படி..?”  என்று மது புரியாமல் பார்த்தாள். 
“ரவி நேத்து நைட் போன் பண்ணியிருந்தார்..”  என்று சொல்லவும், பதட்டம் கொண்ட மது,  
“ண்ணா.. நீங்க எதுவும் சொல்லிடலையே..?” என்று  வேகமாக கேட்டாள். 
“மது நான் எதுவும் சொல்லலை, ஆனா அவரே  எல்லாம் தெரிஞ்சுதான் எனக்கு கால் பண்ணியிருந்தார், நானும் இன்னும் ஏன் மறைக்கணும்ன்னு சொல்லிட்டேன்..”  என்று சொல்லவும், மது அமைதியாக நின்றுவிட்டாள். 
“ஏன் மது..? ரவி ஏதாவது கோவப்படுவாரா..?” என்று கவலையாக கேட்ட குமாரின் கேள்வியை கேட்டு கொண்டே உள்ளே நுழைந்த ரவி, 
“ஆமாங்க.. கோவபடுவேன்..” என்றுமுறைத்து  சொன்னான். 
“ண்ணா..” என்று தன்னை தடுக்கும்  மதுவை கண்டு கொள்ளாமல், 
“போயும் போயும் அந்த பேமிலுக்காக நீ ஏன் இவ்வளவு  கஷ்டப்பட்டுக்கணும்ன்னு கோவபடுவேன், உனக்கென்ன தலையெழுத்துன்னு கோவபடுவேன்.. அதுக்கான வொர்த் அவங்க இல்லன்னு கோவபடுவேன்..”  என்று  பேச, குமார் அதிர்ப்தியாக பார்த்தான். 
“நீங்க ப்ரேம் பேமிலியை இப்படி பேசறது சரியில்லை ரவி, அதுவும் நீங்க அவங்க மருமகன்..” என்று கோவம் வெளிப்பட சொன்ன குமாரை பார்த்து நக்கலாக சிரித்த ரவி,  
“உங்க ப்ரண்ட் பேமிலியை பத்தி சொன்னா உங்களுக்கு கோவம் வரத்தான் செய்யும், ஆனா நான் சொல்றது எல்லாம் நூத்துக்கு நூறு உண்மை, அதை ஒரு நாள் நீங்களே  புரிஞ்சுப்பீங்க.. அண்ட்  நான் அவங்க வீட்டு மருமகன்னாலும் எனக்கு என் தங்கச்சி தான் முதல்ல..” என்று சொல்லிவிட குமாருக்கு ரவியின் பேச்சு ஒப்பவில்லை. 
“ண்ணா.. ப்ளீஸ்..”  என்று ரவியின்  கையை பிடித்து கொண்டவள், குமாரிடம்,  
“சாரிண்ணா.. அண்ணா  கொஞ்சம் கோவமா பேசிட்டாங்க..”  என்று அண்ணனின் செயலுக்காக மன்னிப்பு வேண்டினாள். 
“இட்ஸ் ஓகே மது, நான் வேணும்ன்னா  நீங்க கொடுத்த காசை பத்தி அங்கிள்கிட்ட பேசி வாங்கி தரவா..?”  என்று கேட்க, பதறிப்போன மது. 
“ண்ணா.. அதை மட்டும் செஞ்சிடாதீங்க, இது அவருக்கு தெரிஞ்சதுன்னா அவ்வளவுதான்.. நான் பார்த்துகிறேன்..”  என்று சொல்ல, குமாருக்கும் அவளின் பயம் புரிந்துதான் இருந்தது. 
“இவள் யோசனை சொல்வதற்கே மறுத்தவன், பணம் விஷயம் தெரிந்தால்..” என்று அவனும் ப்ரேமை நினைத்து  தலையை உலுக்கி கொண்டவன், 
“சரி மது.. நான் பேசல,  நான் உங்களுக்கு  காசு..”  என்று சொல்லும் போதே கோபத்துடன் இடையிட்ட ரவி, 
“என் தங்கச்சிக்கு கொடுக்க நான் இருக்கேன்..”  என்று சொல்லிவிட, குமாருக்கு எப்படியோ ஆனது. ஆனாலும் மதுவின் குணத்துக்காக பொறுத்தவன், 
“மதுவுக்கு நானும் அண்ணன் மாதிரிதான்,  அந்த உரிமையிலதான் கேட்டேன்..” என்று  உணர்ந்தே சொன்னான்
“என்ன சொன்னீங்க அண்ணன் மாதிரின்னா..?  என்று நக்கலாக சிரித்த ரவி,  
“அண்ணன்  மாதிரி எல்லாம் அண்ணன் ஆகிட முடியாதுங்க, நீங்க உண்மையிலே மதுவை உங்க தங்கையா நினைச்சிருந்தா அவ   அவ்வளவு காசு கொடுத்தப்போ அவளை தடுத்திருக்கணும், இல்லை என்கிட்டயாவது சொல்யிருக்கணும், இல்லை  இருக்கிற காசை எல்லாம் கொடுத்திட்டு இவ என்ன பண்ணுவான்னாவது யோசிச்சிருக்கணும்..”  என்று சாரமாரியாக கேட்டான். 
“ரவி.. நான் தடுத்தேன், மது கேட்கல.. ஆனா நீங்க சொன்னதுல ஒன்னு சரி, நான் மதுவோட கமிட்மெண்ட்ஸை பற்றி யோசிச்சிருக்கணும்தான், பட்.. உங்களோட பினான்ஷியல் பேக்கிரவுண்ட் தெரிஞ்சதாலதான் அதை பெருசா யோசிக்க தோணல..”  என்று தன் எண்ணத்தை சொல்ல, ரவி தங்கையை கோவமாக பார்த்தான். 
“ப்ளீஸ்..  இதுல உங்க ரெண்டு பேரோட தப்பு எங்கேயும் இல்லை,  நான்தான் தப்பு, எனக்குதான் எதையும் ஹாண்டில் செய்ய தெரியலை, விடுங்க..”   என்ற மதுவின் மனவுளைச்சல் புரிந்த ரவிக்கு அதற்கு மேலும்  பேசமுடியாமல் போக, 
“இந்தா வச்சுக்கோ..” என்று ஒரு சிறு பேக்கை தங்கையின் கையில் கொடுத்த ரவி. 
“இதுல நீ எதிர்பார்க்கிற பணம் இருக்கு, சீக்கிரம் அந்த ஆர்டரை ஸ்டார்ட் பண்ணு..”  என்று சொல்ல, மதுவிடம் மறுப்பு. 
“வேண்டாம்ண்ணா.. நான் லோனே போறேன், நீ எனக்காக கையெழுத்து மட்டும் போடு போதும்..”  என்று சொல்ல, அவளை கடுமையாக பார்த்தவன், 
“மது.. என்னதான் நினைச்சுட்டு இருக்க நீ..? எதுக்கு இப்போ காசு வேண்டாம் சொல்ற..?  லோன் போவ, ஆனா நம்ம காசை எடுத்துக்க மாட்ட.. அப்படித்தானே..? ஒழுங்கா இதை வச்சு இப்போவே  ஆர்டரை ஸ்டார்ட் பண்ற வழியை பாரு..”  என்று அதிகாரமாகவே அவளின் கையில் பணத்தை திணித்துவிட்டு  சென்றுவிட, மது மறுக்கமுடியாமல் அன்றே வேலைகளை ஆரம்பித்துவிட்டாள். 
“மது.. நான் கிளம்புறேன், ஏதாவது உதவி தேவைப்பட்டா தயங்காம கேளு..”  என்று குமார் விடைபெற்று கொள்ள, ரவி தங்கையுடனே இரண்டு நாள் தங்கியிருந்து அவளுக்கு உதவி செய்தான். 
ஆர்டர் ஸ்டார்ட் செய்துவிட்ட முதல்  இரண்டு நாட்கள் எல்லாம் நன்றாக சென்று கொண்டிருப்பதாக தோன்றினாலும் எதோ மிஸ் செய்வதை உணர்ந்து கொண்டே இருந்த மதுவிற்கு, ரவி தந்தையிடம் பேசி கொண்டிருப்பதை காணவும் தான் புரிந்தது. வடிவேலு அவளுடன் முன்போல் பேசவில்லை, எதோ ஒரு விலகல்.. இருப்பதை. 

Advertisement