Advertisement

அப்போதே பிரித்து பார்த்தவனுக்கு அது அவனின் பனிக்கால உடைகள் என்று புரிந்தது, அதுவும் அதை மதுவே ஸ்பெஷலாக தனக்காக  தயாரித்திருக்கிறாள் என்று புரிய அவனின் கோவம் மறைந்து காதல் வெளியேவர, பார்சலை வைத்துவிட்டு மறுப்படியும் மதுவை அணைத்துகொண்டான்.
அவளும் அவனின் அணைப்பை விரும்பி மறுக்காமல் நின்றாள். இருவருக்கும் “பேசி பேசி காயப்பட்டது போதும்..” என்ற வெறுமை உள்ளுக்குள் இருக்க, மௌனத்தை தங்களின் கவசமாக மாற்றிகொண்டனர். 
“இப்படியே எவ்வளவு நேரம் இருக்க முடியும்..? கிளம்பிதானே ஆகணும்..” என்ற உண்மை புரிய, விலகி நின்றனர். 
“மித்ரா..”  என்று மேலும் ஏதும் சொல்ல முடியாமல் தலையை மட்டும் கிளம்புவதாக ஆட்டியவன், பார்சலை எடுத்து கொண்டு கிளம்பிவிட, மதுவிற்கு முதல் முறையாக தனியாக நிற்பது போல் ஓர் எண்ணம். 
அதை உணர்ந்தது போல் கதவு வரை சென்று திரும்பி பார்த்தவன்,  வேகமாக வந்து அவளை அணைத்து  அவளின் முகம் பார்த்தான். மதுவும் அவனை ஏக்கமாக பார்க்க, அவளின் முகத்தை தன் இரு கைககளாலும் பற்றி கொண்டு அவளின் துடித்த உதடுகளில் தன்  உதடுகளை பொருத்தி ஆழ்ந்த முத்தத்தை கொடுத்தவன் விருட்டென கிளம்பிவிட,  மது கண் மூடி நின்றுவிட்டாள்.   
அதற்கு பிறகு இதுவரை இருவரும் பேசி கொள்ளவில்லை, ப்ரேம் இடையில் சில முறை அழைத்தபோதும் மது பேசவில்லை. அவளுக்கு என்னமோ தான் தனி என்ற எண்ணம் ஆழமாக பதிந்து கொண்டே சென்றது. அதற்கு அவளின் வீட்டு சூழ்நிலையும் காரணமாகி போனது.
என்னதான் வடிவேலு மகளை தாங்கினாலும், உற்றவன் துணை போல் வருமா..? அதை வடிவேலு புரிந்து கொள்ளாதது தான்  வினையாகி போனது. இதுநாள் வரை அவரை எதிர்த்தோ..?   மறைத்தோ..?  எதுவும் செய்யாதவள், முதல் முறையாக ப்ரேமிற்காக  செய்தாள். 
“மது.. சண்முகம் அங்கிள் அவரோட டீலரை மாத்தலாம்ன்னு யோசிக்கிறார்..” என்று குமார் போன் செய்து சொல்லவும், 
“ஏன்ண்ணா.. அவங்க ரொம்ப வருஷமா வாங்கிற டீலர் தானே..? இப்போ  ஏன் வேண்டாங்கிறார்..?”  என்று கேட்டாள். 
“அது  அந்த டீலர் கொடுக்கிற துணி  முன்ன போல குவாலிட்டி இல்லையாம். அதோட  அவரு ரொம்ப பழைய டிசைன் துணியை தான் கொடுக்கிறார் போல, அப்டேட்டடா வேணும்ன்னு எதிர்பார்க்கிறார்.” 
“அவர் சொல்றதும் ரொம்ப சரிதான்ண்ணா, வேற எந்த டீலரை பார்த்திருக்கார்..?” என்று கேட்டாள். 
“பார்த்துட்டே இருக்கார் மது.. எதுவும் சரியா வரல..”
“ஓஹ்.. ண்ணா, என்னோட பொட்டிக்கு சப்ளை பண்ற டீலரையே பேசிடலாமா..? அவர் என்னோட ப்ரண்டோட அப்பாதான், ரொம்ப நல்லா செய்வார்..”
“நீங்க உங்களுக்கு தெரிஞ்சவங்கன்னு அங்கிள்கிட்ட பேசுங்க, நானும் சில மாடல் துணிகளை அனுப்புறேன்..”  என்று சொல்ல, குமாரும் சண்முகத்திடம் பேச, அவருக்கும் சேம்பிள் துணி எல்லாம் பிடித்துவிட, 
“சரிப்பா.. உன் மேல இருக்கிற நம்பிக்கையில் ஒத்துகிறேன்,  உனக்கே தெரியும் இல்லை, ஏற்கனவே நிறைய அடிவாங்கிட்டோம், இதுக்கு மேலவும் விழுந்தா எழவே முடியாது..” என்று வேதனையாக சொன்னார். 
“அப்படி எல்லாம் எதுவும் நடக்காது அங்கிள், நம்பி செய்ங்க..”  என்ற குமார், அவரின் பயத்தை மதுவிடம் பகிர்ந்தான். 
“கண்டிப்பா இந்த டைம் விழமாட்டாங்கண்ணா.. பார்த்துக்கலாம்..” என்றவர்களின் பிரச்சனையாக வந்து நின்றது பணம்.
“மது.. அங்கிள் கிட்ட டீலர் கேட்கிற அளவு முன்பணம் இல்லை..”  என்று குமார் போன் செய்து சொல்லவும், 
“என்னண்ணா சொல்றீங்க..? அப்பறம் எப்படி..?” என்று மது அதிர்ச்சியாக கேட்டாள். 
“இல்லை மது அவங்க ஏற்பாடு செஞ்ச பணம் எல்லாம் சொத்தை மீட்டு வட்டி கட்டவே சரியா போச்சு, அதனால அங்கிள் மறுப்படியும் கடன் வாங்க போறேன்னு நிக்கிறார்..”  என்று குமார் சொன்னான்.  
“வேண்டாம்ண்ணா.. அது சரியா வராது, பணம் நாமளே அரேஞ் செய்யலாம், அவரை வெய்ட் பண்ண சொல்லுங்க..” என்ற மதுவுக்கு தன்னிடம் இருப்பதை கொடுப்பதில் தவிர வேறு வழி இருக்கவில்லை. 
குமார் வேண்டாம், என்று மறுத்தபோதும், “இருக்கட்டும்ண்ணா.. பார்த்துக்கலாம்..” என்று முடித்துவிட்டவள், சண்முகம் கொடுத்த சிறிதளவு பணத்தோடு தன்னுடைய முழு பணத்தையும் சேர்த்து முன்பணமாக கட்டிவிட்டாள். 
சண்முகத்திடமும், அவர் கொடுத்த பணமே போதும், அடுத்த முறை சேர்த்து கொடுக்க வேண்டும் என்று முடித்துவிட்டார்கள். முதல் சில மாதங்கள் தள்ளுப்படி, சலுகை, பரிசு.. என்று மறுபடியும் புதிதாக ஆரம்பித்தவர்களுக்கு எதிர்பார்த்த அளவு முன்னேற்றம் இல்லை என்றாலும் மோசமாகவும் இல்லை, 
அதற்கு காரணம் மது ஸ்பெஷலாக டிசைன் செய்து கொடுத்த அவளின் கலெக்ஷனும், சண்முகத்தின் விடா முயற்சியும் தான். இவர்களின் கடைக்கு மட்டுமே மது ஸ்பெஷலாக தயாரித்து கொடுத்த டிசைன்கள் நாளாக நாளாக எல்லோரின் கவனத்தையும் ஈர்த்தது. 
முதலில் டல்லாக சென்ற வியாபாரம், அடுத்த சில மாதங்களில் நன்றாகவே உயர்ந்தது. அவளின் டீலரும் இவளின் கலெக்ஷ்ணை வேறெந்த கடைக்கும் கொடுக்க முடியாதபடி காபிரைட் இருக்க, சண்முகத்திற்கு நல்ல லாபம்தான். 
இதில் மிகவும் பாதித்தது மதுவின் சொந்த தொழில்தான், அவளின் கவனம் முழுவதும் இதிலே இருக்க, அவளின் பொட்டிக்  தேங்க ஆரம்பித்தது. அதை சரி செய்யத்தான் பணம் இல்லாமல் நின்றவளுக்கு லோன் தேவைப்பட, ரவியின் உதவியை நடவேண்டியதாகி போனது. 
“ண்ணா.. எனக்கு இப்போ ஒருபெரிய ஆர்டர் கிடைச்சிருக்கு, அதுக்கு பணம் வேணும்,  நீ ஷூரிட்டி மட்டும் போடு போதும், நான் சமாளிச்சிப்பேன்..” என்று சொன்ன தங்கையின் பேச்சில் கோவம் கொண்ட ரவி, 
“மது.. என்னை கோவப்படுத்தற மாதிரி பேசாத, நான் காசே தரேன் சொல்றேன், நீ ஷூரிட்டி பத்தி பேசுற, என்ன நினைச்சிட்டிருக்க நீ..?  லோன் வாங்கிற அளவு என்னாச்சு..? அதை ஏன் சொல்ல மாட்டேங்கிற..?” என்று கோவத்தோடு கேட்டான். 
“ம்ப்ச்.. ண்ணா.. இப்போ எதுக்கு கோவப்படுற..? போ, எனக்கு உன் ஷூரிட்டி வேண்டாம்.. நான் பார்த்துகிறேன்..” என்று பட்டென வைத்துவிட்ட தங்கையின் செயலில் ரவிக்கு ஆச்சரியம் கலந்த பயம் உண்டானது. 
அவள் இது போல் எல்லாம் செய்ய கூடியவள் இல்லையே.. ஏன் என்னாச்சு..? என்று தவித்தவன், உடனே தங்கைக்கு அழைத்தான். 
“என்னண்ணா..?” என்று சலிப்புடன் பேசிய தங்கையிடம், 
“மதுமா.. ப்ளீஸ்டா என்ன ஆச்சுன்னு சொல்லு..? உன் பணம் எல்லாம் எங்க..?  அண்ணாகிட்ட  சொல்லுடா ப்ளீஸ்..” என்று கெஞ்சியே கேட்க, 
“ஏன்ண்ணா..? சொன்னாதான் எனக்கு ஹெல்ப் செய்வியா..?” என்று ஒரு மாதிரியாக கேட்ட தங்கையின் கோவம் புரிந்தவன், 
“நான் நாளைக்கு பணத்தோடு  சென்னை வரேன்..” என்று வைத்துவிட்டான். 
“என்ன நடக்குது..? என்ன செய்ற மது நீ..?” என்று யோசித்தவனுக்கு லேசான பயம் தோன்றியது. தங்கை எதிலாவது மாட்டிகொண்டாளா..? என்ற தோன்ற, வேறு வழி இல்லாமல், அவளுக்கு தெரியாமல் அவளின் பேங்க் டீடெயில்ஸை ஆராய்ந்தான். 
அதில் டீலருக்கு பெருமளவு பணம் கொடுக்க பட்டது தெரிய, சந்தேகத்துடன் குமாருக்கு அழைத்து நேரடியாகவே கேட்டுவிட்டான். குமாரும் மது பணம் கொடுத்ததை ஒப்புக்கொள்ள, ரவிக்கு என்ன சொல்ல என்று கூட தெரியாமல் திகைக்கும் நிலை தான். 
“ஏன் என்கிட்ட முன்னாடியே சொல்லலை..?  நான் அவளோட டிசைன் மட்டும்தான் கொடுக்கிறான்னு நினைச்சிருந்தேன், ஆனா பணம்.. எனக்கு தெரியவே தெரியாது, ஏன் குமார் இப்படி..? இப்போ அவ காசே இல்லாம நிக்கிறா..?”  என்று மனத்தாங்கலுடன்  வைத்துவிட்டவனிடம் வந்த திவ்யா, 
“”என்னங்க.. ஷாப்பிங் போகணும், போலாமா..?” என்று கேட்க,  சலிப்புடன் பார்த்த ரவி, 
“இப்போ முடியாது திவி..” என்று மெலிதான கோவம் வெளிப்பட சொன்னான். அவனுக்கு தங்கையின் நிலையை  நினைத்து தாங்கவே முடியவில்லை, வடிவேலுவுக்கு தெரிந்தால் என்ன ஆகும்ன்னு என்று வேறு  பயமாக இருந்தது. 
“திவி..  நான் நாளைக்கு சென்னை போறேன்..” என்று சொல்ல, திவ்யா சந்தேகத்துடன் பார்த்தவள், 
“எதுக்கு போறீங்க..?” என்று கேட்டாள். 
“மதுவை பார்க்க போகணும்..”  என்று சொன்ன கணவனை கடுப்புடன் பார்த்தவள், 
“நாளைக்கு என்னை கோவிலுக்கு கூட்டிட்டு போறேன்னு சொல்லியிருந்தீங்க..” என்று சண்டைக்கு நின்றாள். 
“திவி.. நீ வேணும்ன்னே சண்டைக்கு நிக்கிற, எனக்கு தெரியும் நீ மது விஷயத்தில் மாறமாட்டேன்னு..” என்று சொல்லி சென்றுவிட திவ்யா கொதித்து போய் நின்றிருந்தாள்.
முதல்லே வைஜெயந்தி மகளுக்கு மிக தெளிவாக சொல்லி கொடுத்துவிட்டார், நீ உன் கணவனிடமும், மாமனார், மாமியாரிடமும் ஒழுங்காக நடந்து கொள், அவர்களை உன் கைக்குள் வைத்து கோள்.. என்று, அதை புரிந்து கொண்ட திவ்யாவும், சரியாயகவே பின்பற்றுகிறாள் என்றுதான் சொல்ல வேண்டும். 
ரவியிடம் முன்பு இருந்த அந்த உதாசீனம் இல்லை, மதுவை  பற்றியும் பேசுவதில்லை, மிகவும் அன்பான மனைவியாக நடந்து கொள்ள ரவிக்கும் மனைவியின் மாற்றம் மகிழ்ச்சியை கொடுக்க, இருவரும் தங்களின் வாழ்க்கையை ஆரம்பித்திருந்தனர். அவளின் கோவம், வெறுப்பு எல்லாம் மதுவிடம்  மட்டும்தான்,
இதுநாள் வரை அந்த வெறுப்பு மாறவும் இல்லை,  மாற்றி கொள்ளவும் தயாரில்லை, அதனாலே மதுவின் பேச்சு என்று வந்துவிட்டால் கணவன், மனைவிக்குள் கண்டிப்பாகவே சண்டை வரும், 
ரவியும் மனைவியின் குணம் புரிந்து தங்கையை இம்மியும் விட்டு கொடுப்பதில்லை, அதுவே திவ்யாவிற்கு மேலும் வெறுப்பை வளர்த்தது. முதலில் நடந்தது போல் இப்போதும் தங்கைக்காக தன்னை தள்ளி வைக்கும் கணவன் மீது திவ்யாவிற்கு கோவம் தோன்ற ஆரம்பித்தது.  
“வடிவேலு.. எப்படி  இருக்கீங்க..?”  என்று மதுவின் டீலர் சந்திரன் காஞ்சிபுரம் கோவிலுக்கு வந்தவர், வடிவேலுவை வழியில் பார்த்து நலம் விசாரித்தார். 
“நான் நல்லா இருக்கேன் சந்திரன்.. நீங்க எப்படி இருக்கீங்க..?” என்று பதிலுக்கு இவரும் நலம் விசாரித்து பொதுவாக பேசியவர்கள், 
“அப்பறம் வடிவேலு.. இங்க சண்முகத்தோட கடை எங்க இருக்கு..?” என்று கேட்க, 
“ஏன்ப்பா..?” என்று கேட்டார் வடிவேலு. 
“அவருக்கும் நான்தான் சரக்கு சப்ளை பண்றேன் வடிவேலு, மது மூலமா வந்த டீல்தான், ஏன் உனக்கு தெரியாதா..? மது சொல்லலை.. அவதான் அவங்களுக்கு டிசைனும் செஞ்சு கொடுக்கிறா..” என்று சொல்ல,  வடிவேலு கல்லாய் சமைந்துவிட்டார்.

Advertisement