Advertisement

அவளே என் பிரபாவம் 7  
“சொல்லுங்கண்ணா..”  என்று  மதுமித்ரா தனக்கு  போன் செய்த குமாரிடம் கேட்டாள். 
“மது.. அங்கிள் கால் பண்ணியிருந்தாரு.. நியூ டிசைன்ஸ் எல்லாம் நல்லா போகுதாம், இன்னும் சரக்கு  வேணும்ன்னு சொல்றாரு..” என்றான். 
“சரிண்ணா.. நான் டீலர்கிட்ட சொல்லிடுறேன், இன்னும் ரெண்டு மூணு நாள்ல வந்திரும்ன்னு சொல்லிடுங்க..” என்றாள். 
“சரி  மது.. நான் அங்கிளுக்கு சொல்லிடுறேன்..” என்ற குமார், 
 “மது..  ப்ரேம் கால் செஞ்சிருந்தான்..” என்று சொல்லவும், மது என்ன ஏதென்று கூட கேட்காமல் அமைதியாகவே இருந்தபோதும், குமாரே தொடர்ந்து, 
“நல்லா இருக்கானாம்.. அவனோட ப்ரொஜெக்ட்டும்  நல்லா போயிட்டிருக்காம், இன்னும் ஒரு மூணு  மாசத்துல முடிஞ்சிட வாய்ப்பிருக்குன்னு சொன்னான்..” என்று  மது  கேட்டு கொண்டு தான் இருக்கிறாள் என்பதாலே சொல்லி முடித்தவன், வைத்துவிட, மதுமித்ரா  போனை வைத்துவிட்டு கண் மூடி கொண்டாள். 
ஆயிற்று ப்ரேம் வெளிநாடு சென்று வருடம் ஒன்றுக்கு  மேல் ஆகிறது. அன்று குமாரின் ஹோட்டலில் வைத்து ப்ரேமிடம் கோவப்பட்டு பேசியபின் இன்றுவரை அவனுடன் பேசவதில்லை. 
“நான் அப்பாக்கும் உண்மையா  இல்லை, இவருக்கும் நியாயம் செய்யலை..” என்ற எண்ணம், அவளுள் ஒரு விரக்தியை, வெறுமையை கொடுக்க, முன்போல் இருவரிடமும் இருக்க முடியவில்லை. 
அதோடு அவளுக்கு இருவரிடமும் நெருங்க பயம். வடிவேலு அளவுக்கு அதிகமான பாசத்தால் கட்டி போட்டார் என்றால் ப்ரேம் காதலில் கட்டி வைத்தான். இருவரையும் விட்டு கொடுக்க முடியாமல் இறுதியில் இருவரையும் தள்ளி வைத்தாள்.
“மேம்.. சுகுணா மேடம் கால் பண்ணியிருந்தாங்க, ஆர்டர்ல சில கரெக்ஷன் சொல்லியிருக்காங்க..”  என்று என்ன என்னவென்று சொன்னாள்  மீனா, மதுவின் பொட்டிக்கில் டைலரிங் பிரிவில் இருப்பவள். 
“சரிங்க மீனா..  அப்படியே செஞ்சுடலாம்ன்னு சொல்லிடுங்க..” என்று சொல்ல, 
“ஓகே மேம்..  எப்போ ஆர்டர் ஸ்டார்ட் செய்ய போறோம்..?” என்று கேட்டாள். 
“ஸ்டார்ட் பண்ணிடலாம்.. நான் சொல்றேன்..” என்று அனுப்பிவிட்டவளுக்கு பணம் இல்லாமல் முழிக்கும் நிலை.  கடந்த மூன்று நாட்களாக யோசித்து கொண்டிருந்தவளுக்கு  லோனை தவிர வேறு வழி தெரியவில்லை, 
ஆனால் அதற்கு ஷூரிட்டி கையெழுத்து போட ஆள் வேண்டும். அவளுக்கு ரவியை தவிர வேறு யாரும் தென்படவில்லை, அவனிடமும் கேட்க முடியாது, ஏன் உன் பணம் எங்கே என்று கேட்பான்..? அதற்கு பதில் இல்லை. 
ஆனால் இனியும் தள்ளி போடமுடியாது, இரு வாரம் தான் இருக்கு, அதற்குள் ஆர்டரை முடித்து கொடுக்க வேண்டும், அதனாலே வேறு வழி இல்லாமல் அண்ணனுக்கு அழைத்துவிட்டாள்.
.
“மது.. என்னடா இது..? ஏன் லோன் கேட்கிற..? உன் பணம் எங்க..? என்ன பிரச்சனை..? எவ்வளவு  பணம் வேணும்..?”  என்று ரவி படபடப்புடன் தொடர்ந்து கேள்விகள் கேட்க, 
“ண்ணா.. ரிலாக்ஸ், எதுக்கு இப்போ இவ்வளவு  டென்க்ஷன் ஆகுற..? பிஸ்னஸ்ல லோன் வாங்கிறது  நார்மல் தானே..?”  என்று மது சாதாரணமாக சொன்னாள். 
“மது.. எனக்கு உண்மையை சொல்லு..? என்ன பிரச்சனை..? எதுக்கு இப்போ  லோனுக்கு போற..?”  என்று அண்ணனின் கண்டிப்புடன் கேட்க, மதுவிடம்  சொல்ல முடியாத மௌனம். 
“என்னவென்று  சொல்லுவாள்..?  அவளின்  பணம் முழுவதும் ப்ரேமின் கடை டீலருக்கு கட்டியிருக்கிறாள் என்றா..? ஆமாம்.. இவள்தான் கட்டியிருக்கிறாள், ஆனால் அது குமாரை தவிர வேறு யாருக்கும் தெரியவும் தெரியாது..”
ப்ரேம் அவர்களின் கடை மேல், அவனின் சம்பளத்தின் மேல் லோன் போட்டு ஏற்பாடு செய்த பணம் முழுவதும் அடமானம் வைத்திருந்த சொத்தை மீட்கவே சரியாக போக, கடையின் நிலை அப்படியே தான் இருந்தது. 
இதில் அவனின் ஆபிஸில் இருந்து பிரச்சனை ஆரம்பித்தது. அவனின் ரெஸிகினேஷனை ஏற்க முடியாது.. சைன் செய்த அக்ரீமெண்ட் இருக்கிறது என்று மறைமுகமாக மிரட்டவும் செய்தது. 
அவன் தயார் செய்த ப்ராஜெக்ட்டின் ஆதி முதல் அந்தம் வரை அவனுக்குதான் முழுவதுமாக தெரியும், அவன்தான் அதற்கு ஹெட்டும் கூட. இந்த நிலையில் அவன் விலக முடியாது என்று கண்டித்தது. அவனே சென்று முடித்து கொடுக்க உத்தரவும் வந்தது. 
இப்படியொரு  சூழ்நிலையில் மாட்டி கொண்டு தவிப்பவன்  மேல் மதுவால் கோவத்தை இழுத்து பிடிக்க முடியாமல் போக, தானே குமாருக்கு அழைத்து பேசினாள். 
“ண்ணா.. நீங்க  அவங்க அப்பாகிட்ட போய் பேசுங்க, அவர் கண்டிப்பா யார்கிட்டயும் எதுவும் சொல்ல மாட்டார், அதோட  அவங்க அப்பாவை இப்படி விட்டு கிளம்பவும் மாட்டார். அவர் போகட்டும், நாம இங்க பார்த்துக்கலாம்..”
“அந்த ப்ராஜெக்ட் அவரோட இத்தனை வருஷ உழைப்பு, ட்ரீம், ஆம்பிஷன், அவர்  அதை பார்க்கட்டும்.. நாம  இங்க கடையை பார்க்கலாம்.. ஆனா அவருக்கு தெரியாம..” என்றாள். 
“என்ன  மது சொல்ற..? அவனுக்கு தெரியாம ஏன்..?” என்று குமார் கேட்கவும், 
“நான் செய்றேன்னு தெரிஞ்சா அவர் கண்டிப்பா ஒத்துக்க  மாட்டார்ண்ணா..” என்று மது சுருக்கமாக  முடித்துவிட, குமாருக்கு அவர்களின்  சண்டை ஓரளவுக்கு தெரியும் என்பதால்  மேற்கொண்டு கேட்க முடியவில்லை. 
அவனுக்கும் நண்பனின் நலம், உழைப்பு, கனவு முக்கியம்தானே, அதனால அன்றே சண்முகத்திடம் சென்று ப்ரேமின் இக்கட்டான நிலையை சொல்லிவிட்டான். சண்முகத்திற்குமே இது புதிய செய்திதான், மகனின் நிலைக்கு தானும் ஒரு காரணம் என்று புரிந்து வேதனை கொண்டவர், மகனிடம் பேசினார். 
“ப்ரேம்..   நான் இப்போ நல்லா இருக்கேன், என்னால  கடையை நடத்த முடியும், நீ உன் ப்ராஜெக்ட்டை பாரு..” என்று சொல்ல, ப்ரேம் முடியாது என்று மறுத்தான். 
“உங்களுக்கு இன்னும் உடம்பு செட் ஆகல, ரொம்ப பிரஷர், டெங்ஷன் இருக்க கூடாது, நான் பார்த்துகிறேன்..” என்று சொல்ல, 
“ப்ரேம்.. எனக்கு அந்த கடன் பிரச்சனை தான் அட்டேக் வரவச்சது, அதுதான் முடிஞ்சிருச்சே, இனி என்னால பழையபடி கடையை நடத்த முடியும், எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு, நீ கிளம்பு..” என்று பலவாறாக பேசி மகனை ஒத்துக்க வைக்க, குமாரும்,
“நான் அங்கிளுக்கு சப்போர்ட் பண்றேன்.. நீ தைரியமா கிளம்பு..” என்று துணை நின்றான்.  நாளாக நாளாக ஆபிஸில் வேறு பிரஷர் கூடி கொண்டே போக, வேறு வழி இல்லாமல் ப்ரேமும் கிளம்பினான். 
அவனை வழியனுப்ப எல்லோரும் சென்னை வந்திருக்க, ப்ரேமிற்கு மதுவை பார்க்காமல் கிளம்ப முடியும் என்று தோன்றவில்லை. அதனாலே சில வாரங்கள் கழித்து மதுவிற்கு அழைத்தான். 
அவள் எடுக்கவே இல்லை, எடுக்க போவதும் இல்லை என்று புரிந்து மெசேஜ் அனுப்பினான். அதை பார்த்துவிட்டாலும் பதில் வரவில்லை. இன்னும் சில மணி நேரங்களில் அவன் ஏர்போர்ட்டில் இருக்க வேண்டும். 
ஆனால் மதுவை பார்க்காமல்.. ம்ஹூம்.. என்று தலையை ஆட்டிகொண்டவன், “ம்மா.. நீங்க எல்லாம் ஏர்போர்ட் போங்க, நான் வந்துடுறேன்..”  என்று சொல்ல, 
“ப்ரேம்.. இந்த நேரத்துல எங்க கிளம்புற..? ஏர்போர்ட்டுக்கு போகணும்.. செக் இன்னிக்கு டைம் ஆகிடும்..” என்று வைஜயந்தி மகன் மேல் சந்தேகம் கொண்டு கோவமாக  கேட்டார். 
“ம்மா.. நான் கரெக்ட் டைம்க்கு வந்துடுவேன், நீங்க எல்லாம் கிளம்புங்க..” என்று  உறுதியாக சொன்னான் 
“இவ்வளவு அவசரமா யாரை பார்க்க போற..? அந்த மதுவையா..?” என்று வெறுப்புடன் கேட்டார். 
“அதிலென்ன சந்தேகம் உங்களுக்கு..? அவளை பார்க்காம நான் கிளம்பிடுவேனா..?”  என்றான் அழுத்தமாக. 
“ஏன் அந்த மகாராணி உன்னை பார்க்க வரமாட்டாளாம்..? நீதான்  கடைசி நேரத்துல ஓடணுமா..?” என்று மேலும் கேட்டவரை தீர்க்கமாக பார்த்தவன், 
“ம்மா.. நீங்க சொன்னாலும், சொல்லலைனாலும்  அவ   எனக்கு மகாராணி தான்.. மகாராணி நம்மளை பார்க்க வரமாட்டாங்க,  நாமதான் அவங்களை பார்க்க போகணும்..  நான் போய் என் மகாராணியை பார்த்திட்டு வரேன்..  நீங்க கிளம்புங்க..”  என்று வைஜயந்தியின் பிபியை ஏற்றிவிட்டு நேரே மதுவின் பொட்டிக்கிற்கு வந்தான். 
சென்னையின் மத்திய இடத்தில் உயர்தர டிசைனர் உடைகளை மட்டுமே கொண்டு இயங்கும் பொட்டிக் மதுவுடையது. அங்கிருக்கும் உடைகள் எல்லாமே அவளின் சொந்த தயாரிப்பு. ஆரம்ப விலையும்  சில ஆயிரத்திலே இருக்கும், அதற்கான நியாயமும், தரமும், அப்டேட்டான் ஸ்டைலும்  அவளின் தயாரிப்பில் இருக்கும், 
 டிவி ஷோக்களுக்கும் உடைகளை டிசைன் செய்து கொடுத்து கொண்டிருக்கிறாள். அதில் நல்ல லாபமும், பேரும் கிடைத்தது. அவளின் கனவான ஒரு பெரிய பேஷன் ஷோக்கான வேலைகளும், பொட்டிக்கை பெரிது படுத்துவதற்கான முதலீட்டையும் கடந்த இரண்டு வருடங்களாக சேமித்து கொண்டிருப்பவள். 
அதனாலே வடிவேலு திருமணம் செய்ய கேட்ட பொழுது மறுத்தவள், ப்ரேமை கண்டவுடன் பிடித்து தன் வாழ்க்கை துணையாக ஏற்று கொள்ளும் நேரத்தில் முடிந்தும் போனது.
“மித்ராவை பார்க்கணும்..” என்று வேலை பார்க்கும் பெண்ணிடம் சென்று ப்ரேம் சொல்ல, அவளுக்கும் ப்ரேமை தெரியும் என்பதால், நேராக மதுவின் அறைக்குள் அழைத்து சென்றுவிட்டாள். 
அங்கு மது டேபிளில் தலை சாய்த்து படுத்திருக்க, ப்ரேம் தான் பார்த்து கொள்வதாக சைகை செய்து அப்பெண்ணை அனுப்பி வைத்தான். சில நொடிகள் அவளையே பார்த்தபடி நின்றவன், “மித்ரா..”  என்றான். 
அவனின் குரலில் வேகமாக நிமிர்ந்து பார்த்தவளுக்கு ப்ரேமை அங்கு காணவும் கண்ணில் நீர் தேங்கியது. இன்று கிளம்புவான் என்று தெரியுமாதலால் தொய்ந்து போய் படுத்திருந்தவளுக்கு அவனின் வரவு பல்வேறு உணர்ச்சிகளை தூண்ட, அவனையே இமைக்காமல் பார்த்தாள். 
ப்ரேமிற்கும்  முதல் ஊடல் உண்டாக்கிய பிரிவிற்கு பிறகான சந்திப்பு என்பதால் உணர்வுகள் சமநிலையில் இல்லை. அவளுக்கு கண்ணில் நீர் தேங்கியது என்றால் இவனுக்கு பேச்சு வராமல் தொண்டை அடைத்தது. 
அவளை பார்த்தபடியே அவளின் அருகில் சென்று நின்றவனை மது தவிப்புடன் நிமிர்ந்து பார்த்தாள். அவளின் பார்வை அவனை வருத்தசெய்ய ஆதரவாக அவளின் தலையை  வருடினான். 
அவனின் வருடலை கண் மூடி அனுபவித்தவளுக்கு, இன்னும் சிறிது நேரத்தில் அவன் கிளம்பிவிடுவான்.. என்ற பிரிவின் துயரம் இப்போதே வாட்ட ஆரம்பித்துவிட்டது. அதை உணர்ந்து கொண்ட ப்ரேம், அவளை அப்படியே தன் வயிற்றோடு அணைத்து கொள்ள, மதுவும் மெலிதான கண்ணீர்  தேடலுடன் ஒட்டிகொண்டாள்.
“மித்ரா..” என்றவாறே அவளை எழுப்பி தன்னோடு அணைத்து  கொண்டவனின் விரல்கள் தவிப்புடன் அவளின் தலை, முகம், கை, தோள் என்று வருட, அவனின்  இதய துடிப்பு சற்று அதிகமாகவே இருக்க, அவனின் நிலையையும் உணர்ந்த மது கைகளை இறுக்க மூடி நின்றாள். 
அவள் தன்னை அணைக்காமல் இருப்பதை உணர்ந்தவன், “மித்ரா..  ஹக் மீ.. எனக்கு உன்னோட ப்ரெஸ்னஸ் வேணும்.. கிவ் மீ எ டைட் ஹக்.. ப்ளீஸ்டி..”  என்று கெஞ்சவே செய்த போதும், வைராக்கியத்துடன் அணைக்காமல் நின்றவளை,  விலக்கி பார்த்தான்.
அவனின் பார்வையை சந்திக்காமல் முகம் திருப்பி நின்றவளை இயலாமையுடன் பார்த்தவன், மீண்டும் தன்னோடு அணைத்து கொண்டான் சற்று இறுக்கமாகவே. இருவருக்குமே  பேசபிடிக்காமல் அமைதியை மட்டுமே விரும்பும் நிலை, 
 இடையில் ப்ரேமின் போன் வேறு விடாமல் ஒலித்த போதும் அதை கவனிக்கும் மனநிலை இருவரிடத்திலும் இல்லை.  வைஜெயந்தியும், திவ்யாவும் தான் வேண்டுமென்றே தொடர்ந்து போன் செய்து கொண்டிருந்தனர். 
ஒரு கட்டத்தில் நிற்காமல் போன் வர, எரிச்சலுடன் அதை எடுத்து பேசியவனிடம் இருந்து மது விலகி நின்றாள். 
“என்னமா.. இதோ வரேன், நான் பார்த்துகிறேன், நீங்க வைங்க..” என்று எரிச்சலுடன் பேசி வைத்தவன், மதுவை பார்க்க, “கிளம்பப்போகிறான்..” என்று அவளிடம் ஓர் விறைப்பு. 
ப்ரேமும் ஏதும் பேச இயலாதனவனாக தலையை கோதி கொண்டவனுக்கு ஒரு வார்த்தை கூட பேசாத அவளின் மௌனம் உறுத்தியது. 
அவனுக்கும் அவளிடம் இன்னமும் அந்த ஏமாற்றம், கோவம் இருக்கத்தான் செய்தது. அதிலும் இன்று அவளை விட்டு கிளம்புவதில் இன்னும் இன்னும் அதிகமாகவே  இருந்தது. 
“இவள் மட்டும் திருமணத்திற்கு ஒத்துக்கொண்டிருந்தால் இருவரும் சேர்ந்து இல்லை போயிருப்போம்..” என்ற கோவம் அடங்க மறுக்க, “நான் கிளம்புறேன்..”  என்றுவிட்டான். 
அவனின் முகத்தில் தெரிந்த கோவத்தை புரிந்து கொண்ட மதுவிற்கு “இது முடியவே முடியாது..”  என்ற விரக்தி தோன்ற,  அவளின் டேபிளுக்கு சென்று ஒரு பார்சலை கொண்டு வந்து கொடுத்தாள்.

Advertisement