Advertisement

அவளே என் பிரபாவம் 6
“வெளியே வா..”  என்று ப்ரேம் போன் செய்து சொல்லவும், எதிர்பார்த்திருந்த மதுமித்ரா, அம்மாவிடம் சொல்லிக்கொண்டு வெளியே வந்தவள், அமைதியாக காரில் ஏறி அவனின் பக்கத்தில் அமர்ந்து கொள்ள, கார் பறந்தது. 
காரின்  வேகத்திலே ப்ரேமின்  கோவம் புரிந்த மதுமித்ராக்கு எப்படி அவனை சமாளிப்பது என்ற கவலை தோன்றாமல் இல்லை, இருந்தும் தைரியமாக நிமிர்ந்து அமர்ந்திருந்தவளுக்கு ரவி போன் செய்து பேசியது மனதில் ஓடியது. 
“மதுமா.. ஏண்டா அவசரப்பட்டு அந்த பேங்க் ஸ்டாப்பை அனுப்பிவிட்ட..?”  என்று வேகமாக கேட்ட அண்ணனிடம், 
“இல்லைண்ணா.. இன்னும் ஒரு வாரத்துல அவர் வெளிநாடு கிளம்பணும்ன்னு பார்த்திட்டிருக்கார், அதுக்குள்ள பேசிடலாம்ன்னு  தான்  பேங்கிலிருந்த்து அவரை  மீட் பண்ண சொல்லியிருந்தேன், ஆனா இப்போன்னு பார்த்து  இப்படி பிரச்சனை ஆகும்ன்னு எதிர்பார்க்கலண்ணா..”  என்று தவிப்பாக சொன்ன தங்கையின் கவலை புரிந்த ரவிக்கு திவ்யாவின் மேல் கோவம் பொங்கியது. 
“அவங்க குடும்பத்துக்கு என்ன மாதிரியான இக்கட்டான நிலை போயிட்டிருக்கு..?  இந்த நேரத்தில் இந்த பிரச்சனை எல்லாம் தேவையா..? ச்சே..”  என்று மனைவியை மனதுள் அர்ச்சித்தவன், 
“இல்லடா.. ப்ரேம் முகமே சரியில்லை, ஏதோ ரொம்ப கோவமா இருக்கிற மாதிரி இருக்கு..” என்று சொல்லவும், 
“எப்படி இருந்தாலும் சமாளிச்சுத்தான் ஆகணும்ண்ணா..” என்றாள் உறுதியாக.  
“அவர் ஒத்துக்கிட்டா நல்லதுதான் மது, ஆனா..? ம்ப்ச்..  எனக்கு என்னமோ நம்பிக்கை இல்லைடா..”  என்றான் ப்ரேமின் கோவத்தை நன்றாக பார்த்ததால், 
“பார்க்கலாம்ண்ணா..” என்ற மதுவுக்கும் ப்ரேமின் கோவம் புரிந்து தான் இருந்தது. 
“மதுமா..  எனக்கென்னமோ நீ இதிலிருந்து  பேசாம ஒதுங்கிடலாம்ன்னு தோணுது, அவங்க என்னமோ செஞ்சிட்டு போறாங்க, இப்போ பாரு உனக்குத்தான்  தேவையில்லாத ஸ்ட்ரெஸ்..”
“இதுல அத்தையும், திவ்யாவும் வேற தேவையில்லாம  உன்னை டார்கெட்  செய்றாங்க.. எனக்கு இது கொஞ்சம் கூட பிடிக்கல, இவங்களுக்காக  நீ ஏன் உன் கனவை..  உழப்பை  இழக்கணும்..?  அதுக்கான வொர்த் இவங்க இல்லைடா..” என்று ஒரு அண்ணனாக  சொன்னான். 
“ண்ணா.. இப்படி பேசாதீங்க..” என்று கண்டிப்புடன் மது சொல்ல, 
“பின்ன என்னடா..? அவங்க பேமிலி என்ன மாதிரி சூழ்நிலையில மாட்டிக்கிட்டுருக்கு, அதை பத்தி கொஞ்சம் கூட கவலையில்லாம உன்னை வம்பிழுத்திட்டு இருந்தா என்ன அர்த்தம்..?” என்று லேசான வெறுப்பு மேலிட சொன்ன அண்ணனின் மனநிலை மதுவிற்கு பயத்தை கொடுத்தது. 
“ண்ணா.. இது நான்  அவருக்காக செய்றேன், நான் முதல்லே சொன்னது போல அவருக்கு இல்லாததன்னு என்கிட்ட எதுவுமே இல்லை, இதுல நீங்க  அண்ணி மேல வீணா கஷ்டபட்டுக்காதீங்க, மே பி அவங்களுக்கு இதெல்லாம் தெரியாம கூட இருக்கலாம்..”
“நீ எங்க உறவையும், உங்க உறவையும்   போட்டு குழப்பிக்காத, நாங்க வேற, நீங்க வேற.. எல்லாம் உறவுக்கும் ஒரு தனிதன்மை உண்டு.. எவெரி ரிலேஷன்ஷிப் ஈஸ் யூனிக்.. நீங்க எங்களை பத்தி  யோசிக்காம உங்க வாழ்க்கையை வாழுங்க..”  என்று தெளிவாக சொல்ல, ரவிக்கு அதை ஏற்கும் மனநிலை  இல்லை.
“நான் உங்க உறவுக்குள்ள வரல, ஆனா ஒரு அண்ணனா உன்னை பத்தி யோசிக்க,  கவலைபட எனக்கு உரிமை உண்டு மதுமா.. நான் அப்பா போல ஓவர் எமோஷனல் கிடையாதுதான்..”
“ஆனா அதுக்காக உன்மேல பாசம் இல்லைன்னு ஆகிடுமா..? உனக்கு ஒன்னுன்னு நான் கண்டிப்பா நிப்பேன்டா, அதுக்கு யாரும் என்னை தடுக்க முடியாது..”  என்று உறுதியாக சொன்னவன்,  
“ப்ரேம் உன்னை பார்க்கத்தான் வந்துட்டு இருக்கார்.. பார்த்துக்கோ..” என்று வைத்துவிட்டான். 
“அண்ணன் பேசியதை நினைத்து அமர்ந்திருந்த  மதுமித்ராவிற்கு எல்லாம் சிக்கலாகி கொண்டே போவது போல் இருந்தது.  இதில் ப்ரேமின் கோவம் வேறு அவளை மிரட்டியது..”
“இவர்   நிதானமாக இருந்தாலே ஒத்துக்கொள்ளமாட்டார், இப்போது எப்படி..? ம்ஹூம்.. வாய்ப்பே இல்லை.. வேற ஏதாவது வழி இருக்கா..?”  என்று அலசி ஆராய்ந்தவாறே   ப்ரேமை பார்க்க, அவனோ உர்ரென்று அமர்ந்திருந்தவன், இவளின் பார்வையை உணர்ந்து, 
“என்னை பார்த்த கொன்னுடுவேன்.. திரும்புடி..”  என்று அவள் புறம் திரும்பாமலே வெடிக்க, மதுமித்ரா படக்கென தன் பார்வையை மாற்றிகொண்டாள். 
“பார்த்தத்துக்கே இப்படியா..?” என்ற நொந்து கொண்டே  பயணித்தவள், கார் ஒரு ஹோட்டலுக்கு சென்று நிற்கவும், அமைதியாக இறங்கிகொண்டாள். 
“வா ப்ரேம்.. வாங்க மது.. எப்படி இருக்கீங்க..?”  என்று குமார் வரவேற்று, நலம் விசாரித்தான். குமார் ப்ரேமின் நெருங்கிய நண்பன், அவனுடைய ஹோட்டல் தான் இது,  
“நல்லா இருக்கேன்ண்ணா..” என்று மது சொல்லவும், பேசியபடியே அவனின் பர்சனல் ரூமிற்குள்  அழைத்து கொண்டு சென்றவன், இருவருக்கும் காபி  கொண்டு வரச்செய்து கொடுத்தான். 
வந்ததிலிருந்து தன்னிடம் ஒரு வார்த்தை கூட பேசாமல், கொடுத்த காபியையும் குடிக்காமல் இறுகி போய் அமர்ந்திருந்த  ப்ரேமின் முகம் பார்த்த குமாருக்கு எதுவோ சரியில்லை என்று உணர்த்த மதுவை பார்த்தான். 
அவளின் முகத்திலும் மெலிதான பதட்டம் தெரிய, “ஓகே.. நீங்க காபி குடிங்க, எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு, வந்துடுறேன்..” என்று இருவரையும் தனியே விட்டு கிளம்பிவிட, ப்ரேம் நன்றாக மதுவை பார்க்கும்படி அமர்ந்தவன் எடுத்தவுடனே..  
“இன்னும் என்னை என்னதான் செய்ய  நினைக்கிற நீ..?”  என்று  தீரக்கமாக பார்த்து  கேட்க, அவனின் கேள்வி மதுவிற்கு வருத்தத்தை கொடுத்தது. 
“ஏன்..? ஏன் இப்படி பேசுறீங்க..?” என்று கம்மிய குரலில் கேட்டாள். 
“வேறெப்படி பேச சொல்ற..? உனக்கு என்னை பார்த்தா எதோ உன்னோட பெட் டாக் போல இருக்கா..? நீ என்ன சொன்னாலும் கேட்டுட்டு உன்  பின்னாடியே சுத்திட்டு இருக்கணும்ன்னு நினைக்கிறியா..?”  என்று  கேட்டுவிட, மதுவிற்கு கண்கள் கலங்கிவிட்டது. 
“ப்ளீஸ்.. என்னை ஹர்ட் செய்யணுங்கிறதுக்காக  இப்படி  எல்லாம் பேசாதீங்க..?”
“ஏன் உண்மையை சொன்னா கசக்குதா..? அதான் என்னை கல்யாணம் செய்ய மாட்டேன்னு சொல்லிட்ட இல்லை, அதிலே எல்லாம் முடிஞ்சது தானே.. இன்னும் உனக்கும் எனக்கும் என்ன இருக்குன்னு என்னை இப்படி படுத்துற..?”   என்று அவளுக்கு  வலிக்க வேண்டும் என்றே பேசினான். 
அவளுக்கும் வலிக்கவே செய்ய, அவன்  முகம் பார்க்காமல் குனிந்து கொண்டவளின் உள்ளம் கொதிக்க, கை விரல்கள் மொபைலை இறுக பற்றி கொண்டது. 
“சொல்லு.. உன்கிட்ட தானே கேட்கிறேன்..?   ஏன் என் விஷயத்துல தலையிடற..? உனக்கும் எனக்கும் என்ன இருக்கு..?” என்று மேலும் கேட்டவன், குனிந்திருந்தவளின்  கன்னத்தை பிடித்து தன்னை பார்க்க செய்தான். 
அவனின் தீர்க்கமான பார்வையும், மதுவின் கோவத்தை தாங்கிய பார்வையும் ஒன்றோடு ஒன்று மோதி நின்றது. 
“உங்களுக்கும், எனக்கும் ஒன்னுமில்லைன்னு சொல்லிட்டு நீங்க எந்த உரிமையில என் கன்னத்தை பிடிச்சிட்டு இருக்கீங்க..?” என்று மது கேட்க, ப்ரேம் அவளை பார்த்து உதட்டை வளைத்து சிரித்தவன், 
“நீ எந்த உரிமையில உன்னோட  கன்னத்தை தொட என்னை  அனுமதிச்சியோ  அந்த உரிமையிலதான்..”  என்று சொல்ல, மதுமித்ரா அவனின் கையை தட்டிவிட்டாள். 
“ஓஹ்.. என் கையை தட்டிவிடற அளவு வந்துட்டியா..? பின்ன வராம..? நீதான் உங்க அப்பா முக்கியம்ன்னு என்னை கழட்டிவிட்டவ இல்லை..” என்று வைஜெயந்தியும், திவ்யாவும் சொல்லி காட்டியதில் கொதித்து கொண்டிருந்தவன், அதை மதுவிடம் காண்பிக்க, மதுவிற்கு ஆயாசமாக இருந்தது. 
“இன்னும் எத்தனை நாளைக்கு இதை சொல்லியே என்னை வலிக்க வைக்க போறீங்க..? ஒரு கட்டத்துக்கு மேல எனக்கு மனசே மருத்துடும்.. போங்க..”  என்று வேதனையோட  சொன்னவள், வலுவாக அவனை கையை தட்டிவிட்டு  கை கட்டி அமர்ந்துவிட்டாள். 
அவளுக்கு வலிக்க வேண்டும் என்றுதான் பேசினான், ஆனால் அவளின் வலியையும் அவனால்  தாங்க முடியாமல் போக, இயலாமையுடன் கண் மூடி சாய்ந்துவிட்டான். 
இருவரிடமும் முழு அமைதி, மிகவும் கனமான அழுத்தம், அதை உடைக்கவோ, விலக்கவோ இருவருக்கும் மனம் இல்லை, ஏனோ மனம் முழுவதும் வெறுமை நிறைந்துவிட்டது போல் இருந்தது. 
அப்படியே சில நிமிடங்கள் செல்ல, நேரம் ஆவதை உணர்ந்து கொண்ட மது, திரும்பி ப்ரேமை பார்த்தாள். கண் மூடி அமர்ந்திருந்தவனின் முகத்தில் தெரிந்த  இறுக்கம் மதுமித்ராவிற்கு கவலையை கொடுக்க, அதை மறைத்து கொண்டு  விறைப்பாகவே நிமிர்ந்து அமர்ந்தவள், 
“கடை விஷயத்துல என்ன முடிவு எடுத்து இருக்கீங்க..?” என்று கேட்டாள். 
“மறுபடியும் ஆரம்பிக்காத மித்ரா.. நான் முதல்லே சொல்லிட்டேன், நீ உங்க அப்பாவோட மகளா இதுல  தலையிட முடியாதுன்னு..” என்று கண்ணை மூடி கொண்டே கோவமாக வந்து விழுந்தது வார்த்தைகள். 
“கண்ணை திறந்து பார்த்து பேசுங்க..” என்று மதுமித்ரா எரிச்சலுடன் சொல்ல,  
“உன்னை பார்த்து பார்த்து நான் விழுந்தது போதும், இனியும் பார்த்தேன் மொத்தமா காணாமலே போயிடுவேன், அதனால இப்படியே சொல்லு..” என்று கோவமாக  சொன்னாலும் அதில் தெரிந்த காதலில் மதுவின் மனமும் லேசான இளக்கம் கொண்டது. 
“இப்போ ஏன் இப்படி பிடிவாதம் பிடிக்கிறீங்க..? நான் வந்தா என்ன..?”  என்று மதுமித்ரா  கெஞ்சுதலாக கேட்க, 
“முடியாது.. என்னோட முடிவுல எந்த மாற்றமும் இல்லை.. மறுப்படியும் இதைப்பத்தி பேசாத.. அப்பறம் ரெண்டு பேருமே தாங்கமாட்டோம்..” என்று உறுதியாக சொல்லிவிட்டான். 
“சரி.. என்ன முடிவு எடுத்து இருக்கீங்கன்னாவது சொல்லுங்க..” என்று கேட்டாள். 
“என்ன முடிவு எடுக்க..? எனக்குத்தான் ஆப்ஷனே இல்லையே..? அப்பாக்காக கடையை எடுத்து நடத்தி தான் ஆகணும்..” என்று கோவமாக வெடித்தவனை  வருத்தத்துடன் பார்த்த மதுமித்ரா, 
“அப்போ உங்க ப்ராஜெக்ட்..? அது எப்படி..?”
“ எப்படின்னா..?  எல்லாம்   முடிஞ்சது, காலி, என்னோட ஆசை,  கனவு, ஆம்பிஷன், உழைப்பு.. எல்லாம்  போச்சு, தூக்கி போட்டுடணும்..”
“நீங்க இதைபத்தி மாமாகிட்ட பேசலாம் இல்லை..”
“ என்ன பேச சொல்ற..? அவருக்கு கடையை எப்படியாவது மேல கொண்டு வந்துடனும்..”
“அவர் ஆசைப்படுறது தப்பு  இல்லையே..?”
“நீ  இதைத்தான் சொல்லுவன்னு எனக்கு தெரியும்.. அப்பறம் இதுக்கு நான் ஏதாவது பேசினா இருக்கிற சண்டை இன்னும் அதிகம்தான் ஆகும் விட்டுடு..”
“ சரி.. நான் அதை பேசல, ஆனா ப்ளீஸ்.. நான் சொல்ல வர ஐடியாவாவது கேளுங்க..” என்று ஆரம்பித்தவளை கண் திறந்து  கடுமையாக பார்த்தவன், 
“எத்தனை டைம் சொன்னாலும் கேட்க மாட்டியா..? உன்னோட எந்த உதவியும் எனக்கு வேண்டாம்.. ஒன்னு கடையை நடத்தறேன், இல்லை இழுத்து மூடிட்டு போறேன்.. ஆனா நீ வேண்டாம்..” என்று அதையே சொல்ல, மதுவிற்கு ஆதங்கம் உண்டானது. 
“அப்படி என்ன ஈகோ உங்களுக்கு..? நான் என்ன வேண்டாதவளா..?”
“பின்ன நீ என்ன எனக்கு வேண்டப்பட்டவளா..?  என் பொண்டாட்டியா..?”  
“இப்போ உங்களுக்கு அதுதான் பிரச்சனையா..?”
“ஆமாம்ன்னு சொன்னா உடனே என் கையால தாலி வாங்கிப்பியா..?”  என்று  சீறினான். 
“திரும்பி திரும்பி இதையே பேசாதீங்க.. நான் கடையை பத்தி, உங்க ப்ராஜெக்ட்டை பத்தி பேசிட்டிருக்கோம், அதுக்கு என்ன வழின்னு பாருங்க..?”
“இன்னும் என்ன வழி இருக்கு..? அதான் எல்லாம் முடிய போகுதே..?  என்னோட இத்தனை வருஷ கனவை, ஆம்பிஷனை, உழைப்பை மொத்தமா நானே தூக்கி போட போறேன்.  இந்த ப்ராஜெக்ட்டுக்காக டே அண்ட் நைட் உழைச்சிருக்கேன்,  எல்லாம் காலி..”
“ஆனா ஒன்னு  எனக்கு இந்த வலி எல்லாம் பழகிடும் போல, முதல்ல நீ இப்போ இந்த ப்ராஜெக்ட்..” என்றவனின் வேதனையில்  மதுவிற்கு கண்கள் கலங்கியது. 
“கடைசில உன்னோட சேர்ந்து நானும் உன்னை போலவே மாறிட்டேன்.. அப்பாக்காக, குடும்பத்துக்காகன்னு எல்லாம் தூக்கி போட்டுட்டு ஜடம் மாதிரி வாழனும்..”என்று சொல்லிவிட துடித்து போன மது, 
“என்ன என்ன..? ஏன் இப்படி எல்லாம் பேசுறீங்க..?” என்று கேட்டாள். 
“என்ன பேசிட்டேன், உண்மையைதானே சொல்றேன், நீ சொன்ன இல்லை, மனசு மருத்துடும்ன்னு,  அது எனக்குத்தான் நடந்திடும் போல..” என்று பொரிந்தவனின் கையை ஆறுதலாக பற்ற போக, 
“தொடாத.. தொட்ட கண்டிப்பா உன்னை ஏதாவது செஞ்சுடுவேன்.. நான் இப்போ கொஞ்சம் கூட நிதானத்துல இல்லை..” என்று  சேரை தள்ளிவிட்டு எழுந்தே நின்றுவிட்டவனின் செயலில் காயப்பட்டு போன மது, தன் காயத்தை மறந்து தன்னவனின் வேதனையை கருத்தில் கொண்டு, 
“இங்க பாருங்க.. நீங்க இந்த ப்ராஜெக்டை  விடாம  கடையை   நடத்த முடியும், அதுக்கு எனக்கு  ஒரு வாய்ப்பு மட்டும் கொடுங்க..” என்று கேட்டவளை பார்த்து கண் மூடி திறந்தவன், 
“உனக்கு ஏன் என்னை புரிஞ்சுக்க முடியல..?  இப்போ நீ என் கண்ணுக்கு மிஸ்டர் வடிவேலு மகளா மட்டும்தான் தெரியுற, அவர் என்னோட சந்தோஷத்தை, வாழ்க்கையை என்கிட்ட காமிச்சு  பிடிங்கிட்டவர், அவரோட பொண்ணு கிட்ட நான் எப்படி உதவு வாங்குவேன்..?”
“அப்போ அவரோட பொண்ணை கல்யாணம் செய்ய மட்டும் பிடிக்குமா..?” என்று மதுமித்ரா  கேட்டாள். 
“அதான் நடக்க போறதில்லையே..?” என்று சாதாரணமாக சொல்லிவிட்டவனை வெறித்து பார்த்தவள், 
“அப்புறம் எதுக்கு நாம மீட் பண்ணனும்..?  முடிஞ்சிருச்சுன்னு போக வேண்டியதுதான்..”
“நானும் இப்போ அதை சொல்லதான் வந்தேன்.. இருக்கிறதையும் முடிச்சிக்கலாம்..” என்றுவிட, மது அதிர்ச்சியாக பார்த்தாள். 
“என்னால முடியல.. உன்னை பார்க்கறப்போ எல்லாம் நீ  உங்க  அப்பாக்காக என்னை வேண்டாம்ன்னு  சொன்னது தான் ஞாபகத்துக்கு வருது, அதனாலே உன்னையும் காயப்படுத்துறேன், நானும் காயப்பட்டு போறேன்..”
“மதுமித்ரா.. நீ உங்க அப்பாக்கு பலம்.. ஆனா எனக்கு நீ என்னோட ரொம்ப பெரிய பலவீனம்.. என்னால உன்னை மீறி எதுவும் செய்ய முடிய மாட்டேங்குது, எங்க போனாலும் மனசு  உன்னையே சுத்தி சுத்தி வருது..”
“இவ்வளவு நடந்ததுக்கு அப்பறமும் என்னால உன்னை போடின்னு தூக்கி போட்டுட்டு போக முடியாம தவிச்சிட்டு நிக்கிறேன், எனக்கு இப்படியே இருக்க  வேண்டாம், போதும்.. நாம ஒருத்தரை ஒருத்தர் காயப்படுத்திகிட்டது போதும், கொஞ்ச நாளைக்கு  தள்ளியே  நிக்கலாம்..” என்று நீளமாக சொன்னவனை வெறித்து பார்த்தவள், 
“கொஞ்ச நாளைக்கு மட்டுமா…? இல்லை காலத்துக்கும் இப்படியேவா..?” என்று கேட்டாள். 
“எனக்கு தெரியல, நான் உங்ககிட்ட என் வாழ்க்கையை கொடுத்து ரொம்ப நாளாச்சு, நீங்கதான் டிசைட் செய்யணும்.. ஆனா.. ம்ஹூம்..”  என்று உதட்டை பிதுக்கி நம்பிக்கை இல்லாமல் தலையாட்டியவனை கோவம், ஆதங்கம், ஆற்றாமை,பொங்க முகம் சிவக்க பார்த்தவள்,  
“என்ன சொன்னீங்க.. கொஞ்ச நாளைக்கு தள்ளி நிக்கலாமா..? இப்போ மட்டும் என்ன ஓட்டிட்டா நிக்கிறோம்.. நான் தொட வந்தா கூட தொடாதன்னு எழுந்து தள்ளி  இல்லை போறீங்க..?”
“அப்பறம்  என்ன சொன்னீங்க…? நான் எங்க அப்பாக்கு பலம், உங்களுக்கு பலவீனமா..? இல்லை.. இல்லவே இல்லை.. நீங்க ரெண்டு பேரும் தான் என்னோட ரொம்ப பெரிய பலவீனம்.. உங்களுக்கு இடையில மாட்டிகிட்டு நான்தான் தினம் தினம் மருகிட்டு  இருக்கேன், நீங்க இல்லை..”
“என்னை போடின்னு தூக்கி போட்டுட்டு போக முடியாம நீங்க ஒன்னும்  தவிக்க வேண்டாம், நானே போயிடுறேன்.. போங்க.. இனி எதுவும்  கிடையாது போங்க..” என்று கோவம் கொண்டு சொன்னவள், அங்கிருந்து கிளம்பிவிட, அவளின் முதல் கோவத்தில் ப்ரேம்  திகைத்து நின்றுவிட்டான்.

Advertisement