Advertisement

“வரோம்..” என்று பொதுவாக சொன்ன ப்ரேம், மாப்பிள்ளையும், தங்கையை அழைத்து கொண்டு கிளம்பிவிட்டான்.  
அடுத்த சில நிமிடங்களில் அவர்களின் வீட்டில் இருந்தவர்கள் முதல் முறை பொண்ணும், மாப்பிள்ளையும் வருவதால் ஆரத்தி எடுத்து சில சடங்குகளை முடித்து ரவியை தங்கையின் அறைக்கு அனுப்பிவைத்த ப்ரேம், சண்முகத்தின் ரூமில் தங்கையையும், தாயையும் தீர்க்கமாக பார்த்து கொண்டிருந்தான். 
“என்ன ஆச்சு ப்ரேம்..?” என்று சண்முகம் புரியாமல் கேட்க, 
“அதை நீங்க இவங்களை தான்ப்பா கேட்கணும்..?” என்று திவ்யாவை  பார்த்து சொன்னான்.
“என்ன ஆச்சு ஜெயா..? தம்பி ஏன் இப்படி சொல்றான்..?” என்று மனைவியை கேட்டார். 
“ப்பா.. நீங்க முதல்ல உங்க பொண்ணை கேளுங்க.. என்ன செஞ்சான்னு..?” என்று திவ்யாவை சொல்ல, 
“ண்ணா.. நான் எனக்காக ஆசைப்பட்டு ஒரு பூ கேட்டது தப்பாண்ணா..” என்று திவ்யா வீராப்புடன்  கேட்டாள். 
“திவ்யா.. நீ ஆசைப்பட்டு தான் அந்த பூவை கேட்டியா..?”  என்று ப்ரேம் அவளை கூர்மையாக பார்த்து கேட்டான். 
“ஏன்..? ஏன்ண்ணா..? இப்படி கேட்கிறீங்க..?” என்று திவ்யா லேசான தடுமாற்றத்துடன் கேட்க, 
“நான் ஏன் கேட்கிறேன்னு உனக்கு தெரியாதா திவ்யா..? உனக்கு பூ பிடிக்கும் அப்படித்தானே..?” என்று அழுத்தத்துடன் கேட்டான். ஏனெனில் திவ்யாவிற்கு பூ என்றாலே  அலர்ஜி, முடியை பின்னல் போடவே மாட்டாள். எப்போதும் ப்ரீ ஏர் தான், 
“சொல்லு திவ்யா..? உனக்கு ரெட் ரோஸ்  பிடிக்கும், ம்ம்..  நம்ம தோட்டத்துல கூட ரெட் ரோஸ் இருக்கு, ஆனா இதுவரை ஒரு நாள் கூட நீ அதைவச்சு நான் பார்த்ததே இல்லையே..?” என்று கேட்டான். 
“அது அந்த மதுவுக்கு பிடிக்கும்ன்னு நீ வச்சுது, அதை போய் நான் வைப்பேனா..?” என்று திவ்யா வெறுப்புடன்  கேட்டாள். 
“ஓஹ்.. மித்ராக்கு வச்ச செடிங்கற ஒரே காரணத்துக்காக அந்த பூ பக்கமே போகாத நீ அங்க மட்டும் போய்  எப்படி கேட்ட..? அதுவும் நான் இந்த வீட்டு மருமக, எனக்கு பூ இல்லையான்னு உரிமை வேற கேட்டிருக்க, அதுவும் கல்யாணம் ஆன மறுநாளே..” என்று சொல்ல, கேட்டிருந்த சண்முகத்திற்குமே அதிர்ச்சிதான். 
“என்ன ப்ரேம் சொல்ற..? திவ்யா நீயா இப்படி..?” என்று அதிர்ப்தியாக கேட்டார். 
“நீங்களும் அவனோட சேர்ந்து பேசாதீங்க, அங்க என்ன நடந்துச்சுனு தெரியுமா உங்களுக்கு..? அந்த மதுவோட அப்பா நம்ம பொண்ணை நடுவீட்ல நிக்க வச்சி எல்லோரும் பார்க்கிறமாதிரி கேள்வி கேட்டுட்டு இருக்கார்..”
“அதுவும் அந்த  வீட்ல அவங்க பொண்ணுக்கு சரிக்கு சமமான உரிமை இருக்காம், திவ்யா அவ உரிமையில தலையிட கூடாதாம், அவங்க பொண்ணு தான் எல்லாமா..” என்று வைஜெயந்தி கோபத்தோடு பொரிந்தார். 
“ஏன் அதுல என்ன தப்பு  இருக்கு..? அவர் பொண்ணுக்கு அந்த வீட்ல உரிமை இல்லையா…? உங்க பொண்ணு அங்க மருமகளா போயிட்டா எல்லாம் இவளுக்கு வந்துருமா..?” என்று ப்ரேம் கேட்டான். 
“ண்ணா.. நீ சும்மா சும்மா அந்த மதுவுக்கு சப்போர்ட் செய்யாத..” என்று திவ்யா கோவத்தோடு பேச, 
“மித்ராக்கு மட்டுமில்லை அந்த இடத்துல யாரா இருந்தாலும் அப்படிதான் பேசுவேன், ஏன் நாளைக்கு எனக்கு கல்யாணம் ஆகி என் பொண்டாட்டி இந்த வீட்டுக்கு வந்தவுடனே உனக்கு இங்க எந்த உரிமையும் இல்லைன்னு  சொன்னா நீ ஏத்துக்குவியா..?”
“இல்லையில்லை..   அப்படித்தான்..   அந்ததந்த வீட்டு பொண்ணுக்கு உள்ள உரிமையை புதுசா வர்ற மருமக எடுத்துக்க முடியாது, அதது அவங்கவங்களுக்கு தான், யாரையும்  யாரும் ரீபிலேஸ் செய்திற  முடியாது..”  என்று அழுத்தி சொன்னவன், 
“அதோட  நீ அந்த வீட்ல உனக்கான உரிமையை மட்டும் தான் கேட்கிற, எதிர்பார்க்கிற, ஆனா அவங்க வீட்டு மருமகளா உனக்குள்ள கடைமையை பத்தி யோசிக்க கூட மாட்டேங்கிற..”
“காலையில நாங்க உன்னை கூப்பிட வந்தப்போ கூட எங்களுக்கு அவங்க தான் எல்லாம் செஞ்சாங்க, நீ எங்க பக்கத்துல சும்மாவே நின்னிட்டு இருந்த, எங்களை விடு உன் புருஷனுக்கு என்ன செஞ்ச..?”
“அவர் கிளம்பறப்போவும் சரி, இங்க வந்தப்போவும் சரி, எதுவுமே செய்யல, இதுதான்  உன் உரிமையா..? இதுக்குத்தான் வரிஞ்சு கட்டிக்கிட்டு எல்லார்கூடவும் சண்டை போட்டுட்டு இருந்தியா..? இதுக்கு நீங்களும் சப்போர்ட்..” என்று அம்மாவை பார்த்து கேட்டான். 
“ப்ரேம்.. என்ன நீ இப்படி எல்லாம் பேசுற..?” என்று வைஜெயந்தி  திணற, 
“ம்மா.. எனக்கும் எல்லாம் தெரியும், நீங்க இப்படியே அவளுக்கு கொம்பு சீவிட்டு இருந்தீங்கன்னா கஷ்டம் உங்களுக்குதான், தெரிஞ்சுக்கோங்க, இவ ரவிகிட்ட கூட ஒழுங்கா நடந்துக்கிறதில்லை போல, பார்த்துகோங்க..” என்று எச்சரிக்கையாக சொல்ல, திவ்யாவிற்கு மேலும்தான் ஆத்திரம் வந்தது. 
“ண்ணா.. நீ அந்த மதுவுக்காக என்னை தப்பு சொல்ற,  ஆனா அவ மேலதான் தப்பு.. அவதான் என்னை இப்படி கோவப்படுத்துறா..”  என்று சொல்ல, அவளை  தீவிரமாக பார்த்தபடி அவளின் முன் கைகட்டி நின்றவன், 
“சொல்லு.. மித்ரா  என்ன தப்பு செஞ்சான்னு சொல்லு, இந்த செகண்ட் அவளை உன்கிட்ட மன்னிப்பு கேட்க வைக்கிறேன், சொல்லு..” என்றான் உறுமலாக. 
“ண்ணா.. அது அது..” என்று திவ்யா சொல்ல முடியாமல்  திக்க, 
“சொல்லுன்னு சொல்றேன் இல்லை..” என்று கோவமாக கத்தியேவிட்டான். 
“டேய்.. என்னடா நீ  அந்த மதுவுக்காக என் பொண்ணை மிரட்டுற..? சரியில்லை ப்ரேம்..” என்று வைஜெயந்தி பேச, அவரை உறுத்து பார்த்தவன், 
“நீங்க ஒரு வார்த்தை கூட மித்ராவை  பத்தி பேசாதீங்க, அதுக்குள்ள எந்த அதிகாரமும் உங்களுக்கு இல்லை,  காலையில அவ வீட்ல  வச்சு அவளை எப்படி பேசுனீங்க..? ம்ம்.. அவளை அப்படி பேசறதுக்கான ரைட்ஸை உங்களுக்கு யார் கொடுத்தா..? நீங்க தேவையில்லாத பிரச்சனை செஞ்சுட்டு அவளை அப்படி பேசுவீங்களா..? இத்தனைக்கும் அவ மேல எந்த தப்பும் இல்லை..” என்று கொதித்தான்.  
“உங்களை   வேண்டாம்ன்னு தூக்கிபோட்டுட்டு போன அந்த மதுவுக்காக  எங்ககிட்ட நீங்க சண்டை போடுறீங்க..”  என்று திவ்யா சொல்லிவிட, ப்ரேமிற்கு அந்த நிராகரிப்பின் வலி சுருக்கென குத்தியது. அதுவும் மற்றவர் சொல்லி கேட்கும் போதே சொல்லவென்னா ஆத்திரமும் தோன்றாமல் இல்லை. 
“திவ்யா.. இனியொருமுறை என்னை பத்தியோ, மித்ராவை பத்தியோ ஒருவார்த்தை கூட நீ பேசக்கூடாது, நீ மட்டுமில்லை யாரும் பேசக்கூடாது, இது எங்களுக்கான பர்சனல், இதுல தலையிட்டு பேச யாருக்கும் எந்த உரிமையும்  இல்லை..” என்று மது மீதான தன் கோவத்தை அடக்கி கொண்டு திவ்யாவிடம் விரல் நீட்டி சொல்ல, 
“நல்லாயிருக்கு ப்ரேம்.. ரொம்ப நல்லாயிருக்கு, அவ அவங்க அப்பா சொன்னான்னு உன்னை தூக்கி போட்டுட்டு போயிட்டா, அவளுக்காக  எங்களை நீ  தள்ளி வச்சு பேசுற..” என்று வைஜெயந்தி மறுப்படியும் அதையே பேச ப்ரேமிற்கு மதுமித்ரா மேல் உண்டான கோவம் உள்ளுக்குள் எரிமலையாய் கொதித்தது. 
“ம்மா.. இப்பதானே சொன்னேன், இது எங்க பர்சனல்..” என்று ப்ரேம் தன்னை கோவத்தை அடக்கி அழுத்தமாக சொல்ல, 
“இன்னும் என்னடா உங்க பர்சனல்..? அதான் எல்லாம் முடிஞ்சிருச்சே..”  என்று வைஜெயந்தி நொடிப்பாக சொன்னார். 
“யார் சொன்னா..? ம்ம்.. எல்லாம் முடிஞ்சிருச்சுன்னு யார் சொன்னா..? நான் சொன்னேனா..? இப்போ சொல்றேன் கேட்டுக்கோங்க.. எதுவும் முடியல, முடியவும் முடியாது..”
“என்னிக்கு இருந்தாலும் அவதான் என் பொண்டாட்டி, இந்த வீட்டு மருமக, உனக்கு அண்ணி.. இது மாறாது, மாறவும் நான் விடமாட்டேன்.. பார்த்து இருந்துக்கோங்க..”  என்று மிரட்டலாகவே சொல்லிவிட, சண்முகத்திற்கு  அதிர்ச்சி என்றால் வைஜெயந்திக்கும், திவ்யாவிற்கும் பூமியே சுழலும் நிலை.
அப்போது  “தம்பி.. தம்பி..”  என்று கதவை தட்டும் சத்தம் கேட்கவும்  “வரேன்..” என்று குரல் கொடுத்த ப்ரேம், அதிர்ச்சியாகி நின்றிருந்த மூவரையும் தீர்க்கமாக பார்த்தவன்,  
“என்னை பத்தியும், மித்ராவை பத்தியும் நீங்க எல்லா பேசறது இதுவே கடைசியா இருக்கட்டும்,  நான் சொன்னது சொன்னதுதான்.. எதுவும் எப்போதும் யாருக்காகவும் மாறாது, மாத்தவும் முயற்சி செய்யாதீங்க,  பலன் இருக்காது..” என்று  நிச்சயமாக சொன்னவன், மூவரையும் கண்டு கொள்ளாமல் கதவை திறந்தான். 
“தம்பி உங்களை பார்க்க ஏதோ பேங்க்ல இருந்து வந்திருக்காங்களாம்..” என்று அங்கு  வேலை செய்யும் பொன்னம்மா சொல்லவும், அவருடன்  ஹாலுக்கு சென்றவன், “சொல்லுங்க.. நான்தான் ப்ரேம்..” என்றான். 
“சார்.. நாங்க xxx பேங்க்ல இருந்து வந்திருக்கோம், உங்க டெக்ஸ்டைல் பிஸ்னஸ் மேல லோன் கேட்டிருந்தது பத்தி பேசணும்..” என்றார் வந்தவர், 
“என்ன..? நாங்க எப்போ பிஸ்னஸ்  மேல லோன் கேட்டோம், அப்படி எல்லாம் ஒன்னுமில்லை..” என்று ப்ரேம் மறுத்து கொண்டிருக்கும் போது இறங்கி வந்த ரவி, அந்த பேங்க் ஸ்டாப்பை கண்டுகொண்டான். 
“சார்.. நீங்கதானே ப்ரேம், உங்க கடைக்கு தான் சார் லோன் கேட்டிருந்தது, பாருங்க..” என்று அட்ரசை காட்ட, வாங்கி பார்த்த ப்ரேம், 
“ஆனா நாங்க அப்படி எதுவும் கேட்கல.. இது..” என்று ப்ரேம் யோசிக்கவும், 
“சார்.. இது மதுமித்ரா மேம் எங்ககிட்ட பர்ஸனலா  சொன்னது..” என்றார் அந்த  பேங்க் ஸ்டாப். 
“என்ன..? மித்ராவா…?” என்று ப்ரேம் கேட்கவும், 
“ஆமா ப்ரேம்.. இது   மதுவோட அப்ரோச் தான்..?” என்றான் ரவி. 
“ஓஹ்..”  என்ற ப்ரேமிற்கு “நான்தான்  கடை விஷயத்துல இவளை  உள்ள வரக்கூடாதுன்னு சொல்லியிருக்கேன் இல்லை, அதையும் மீறி உள்ள  வந்தா என்ன அர்த்தம், என்னை பார்த்தா இவளுக்கு எப்படி இருக்கு..? இவ யாரு எனக்கு செய்ய..?..” என்ற கோவம் அதிகரித்து உச்சிக்கு சென்று நிற்க, அதை மறைத்தவன், 
“சார்.. நானே உங்களுக்கு பேசுறேன்..  உங்க போன் நம்பர் கொடுங்க..” என்று வாங்கிகொண்டு அவரை அனுப்பி வைத்தவன், 
“ரவி.. எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு, நான் போய்ட்டு வந்துடறேன்,  நீங்க ரெஸ்ட் எடுங்க..” எனவும்,  அவன் எதற்காக செல்கிறான்..? என்பதை கண்டு கொண்ட ரவி, 
“ப்ரேம்..  மது.. சொல்றதை  கொஞ்சம் நிதானமா கேளுங்க..” என்றான், 
“ம்ம்..”  என்று  மட்டும் சொல்லி  காரை ஜெட் வேகத்தில்  கிளப்பிய ப்ரேமிற்கு மதுமித்ராவை குதறிவிடும் வேகம்.

Advertisement