Advertisement

அவளே என் பிரபாவம் 5
“வாங்க.. வாங்க சம்மந்தி, வாங்க தம்பி..  உள்ள வாங்க..”  என்று சட்டென சுதாரித்த வசந்தா இருவரையும் வீட்டினுள் அழைக்க, வடிவேலுவும்  எந்தவிதமான முக பாவமும் இல்லாமல் “உள்ள வாங்க..” என்று சாதரணமாய் வரவேற்றார். 
“ம்ம்..”  என்றபடி ப்ரேம் மட்டும் வீட்டினுள்  வந்தவன், தன்னுடன் வராத  தன் அம்மாவையும், தங்கையையும் திரும்பி அழுத்தமாக பார்த்தான். அவனின் பார்வையிலே இருவரும் உள்ளே வர, வசந்தாவும், மதுவும்  வேகமாக  சென்று தண்ணீரை கொண்டு வந்தனர். 
மது ப்ரேமிற்கு தண்ணீர் டம்ளரை நீட்ட, அவளை  உறுத்து பார்த்தவன்,  “முதல்ல  இங்க சுத்தி நின்னு வேடிக்கை பார்க்கிறவங்களை எல்லாம்  அனுப்பு..”  என்றான்  சத்தமாகவே, அவனின் சத்தத்திலே எல்லோரும்  சென்றுவிட, வடிவேலுவுக்கு எதிரில் நின்ற ப்ரேம்,  
“இங்க என்ன பிரச்சனை நடந்துச்சுன்னு எங்களுக்கு தெரியாது, தெரியவும் வேண்டாம், இது உங்க குடும்ப பிரச்சனை.. ஆனா.. உங்க வீட்டுக்கு வாழவந்த மருமகளை  இப்படித்தான் நடுவீட்ல நிக்க வச்சு எல்லோரும் பார்க்கிற மாதிரி கேள்வி கேட்பீங்களா..?”  என்று கோவம் வெளிப்பட கேட்க,  வடிவேலு சிறிதும் கோவப்படாமல், அவனை மெச்சுதலாக பார்த்தவர், 
“தம்பி.. நீங்க கேட்டது சரிதான், நான் இதை யோசிக்கல.. தப்புதான் ஒத்துகிறேன்..  ஆனால்.. தம்பி, எனக்கு இது போலெல்லாம்  பார்க்க தெரியல.. ஏன்னா எங்க வீட்ல இதுவரை இப்படி ஒரு சம்பவமே நடந்ததில்லை,  ஆனா  உங்களுக்கு இது பழக்கம் தான் போலயே..” என்று அம்மாவையும், மகளையும் பார்த்து சிறிது கிண்டலாகவே சொல்லிவிட, ப்ரேம் அவரை கண்ணோடு கண் பார்த்து நன்றாகவே முறைத்தான். 
“தம்பி.. கோப்படாதீங்க, நான் உண்மையைதான் சொல்றேன்,  உங்க வீட்டு பொண்ணு, என் மருமக வந்த ரெண்டாவது நாளே வீட்ல உரிமை கேட்கிறாங்க,  என் மகளை வீணா வம்புக்கு இழுக்கிறாங்க..”
“நேத்து  கல்யாணம் முடிச்சு வந்த பொண்ணு இந்த வீட்ல பொறந்து வளந்த பொண்ணுகிட்ட சரிக்கு சமமா உரிமை கேட்டு நிக்குறாங்க.. இந்த இடத்துல என் பொண்ணுக்கு அப்பாவா  நான் என்ன செய்யட்டும்..? நீங்களே சொல்லுங்க..?”  என்று அவனிடமே கேட்டார். 
“என் தங்கைச்சி அப்படி கேட்டிருந்தா அது கண்டிப்பாவே தப்புதான், நான் ஒத்துகிறேன்,  ஆனா.. அதுக்காக இப்படி நடுவீட்ல வச்சி எல்லாரும் பார்க்கிற மாதிரி பேசறது எல்லாம் சரியில்லங்க..”
“அவளும் இனி இந்த வீட்டு பொண்ணு தான், தப்பு செஞ்சா சொல்லி கொடுங்க, உரிமையா கண்டிங்க..  பாசமா அரவணைச்சு போங்க, அதை விட்டு இப்படி ஒரேடியா வெட்டி பேசாதீங்க.. உங்க மகனும், மகளும் இப்படி பேசினா அவங்ககிட்ட இப்படியா நடந்துப்பீங்க, இல்லையில்லை..” என்று ப்ரேம் பொறுமையாக பேசினாலும் அதில்  கோவம் ஒளிந்துதான் இருந்தது. 
அவன் பேசுவதை வடிவேலுவும்  நிதனமாக கேட்டவர், “தம்பி நீங்க சொல்றது சரிதான், நான் ஏத்துக்கிறேன்.. ஆனா.. எனக்கு என்னமோ உங்க வீட்டு பொண்ணு இங்க வரும் போதே என் மக மேல பகையை, விரோதத்தை வளத்துட்டு வந்த மாதிரி இருக்கு, அது சரியில்லைங்களே..” என்று திவ்யாவை கணித்து சொல்லிவிட, ப்ரேம் திரும்பி தங்கையை பார்த்தவன், 
“நான் அவகிட்ட பேசுறேன், இனி  உங்க பொண்ணு விஷயத்துல அவ இப்படி நடந்துக்க மாட்டா..” என்று உறுதியாக சொன்னான். 
“தம்பி எனக்கு என் பொண்ணு தான் உசுரு, அவளுக்கு ஒரு கஷ்டம்ன்னா நான் யாரையும் பார்க்க மாட்டேன், அது என் பொண்டாட்டியா இருந்தாலும் சரி, என் மகனா இருந்தாலும் சரி இல்லை யாரா இருந்தாலும் சரி..” என்று வடிவேலு திவ்யாவையும், வைஜெயந்தியையும் பார்த்து அழுத்தமாக சொல்ல,  ப்ரேமிற்கோ அதை கேட்டு உடலும், மனதும் கொதித்து இறுகி போனது.
“இந்த விஷயம் என் தங்கச்சிக்கு தெரியாதுங்க, உங்க ரெண்டு பேருக்குள்ளும் யார் வந்தாலும் கொஞ்சம் கூட யோசிக்காம தூக்கி  அடிச்சுடுவீங்கன்னு  அவளுக்கு தெரியாதுங்க, தெரிஞ்சிருந்தா இப்படி நடந்திருக்க மாட்டா..” என்று கோவம், ஏமாற்றம், ஆற்றாமை, ஆத்திரம் கலந்து சொல்ல, அவனை பார்க்க முடியாமல் முகம் திருப்பி நின்ற மதுவிற்கு மறுப்படியும் நெஞ்சினில் சுரீர் வலி. காலத்துக்கு இப்படி தான் குத்தி கொண்டே இருக்க போகிறான் என்ற உண்மை வலித்தது. 
ப்ரேம் சட்டென இப்படி சொல்லுவிடுவான் என்று வடிவேலுவும் எதிர்பாரக்கமால் சற்று திணறிதான் போனார். அவருக்கும் தெரியத்தானே செய்யும், அவர் ப்ரேமிற்கு செய்தது அநியாயம் என்று.. 
“சரி தம்பி.. உட்காருங்க, வசந்தா தம்பிக்கு காபி எடுத்துட்டு வா, சாப்பிட ரெடி பண்ணு..”  என்று அவரின் குற்ற உணர்ச்சியை மறைக்க வேகமாக வேகமாக சொல்ல, ப்ரேமின் முகத்தில் கசப்பு. 
“இருக்கட்டுங்க..  நாங்க பொண்ணு மாப்பிள்ளையை அழைச்சிட்டு கிளம்பனும்..” என்றான் அவரின் உபசரிப்பை மறுத்தவனாக. 
“தாராளமா கூட்டிட்டு போங்க தம்பி.. ரெண்டு வாய் சாப்பிட்டு கூட்டிட்டு போங்க..”  என்ற வசந்தா, “மதுமா.. வாடா..”  என்று மகளுடன் கிட்சனுக்குள் சென்றார். 
“உட்காருங்க ப்ரேம்..” என்று  நின்று கொண்டேயிருந்தவனிடம் ரவி வற்புறுத்தலாக சொல்ல, மறுக்க முடியாமல்  முகம் இறுக அமர்ந்த ப்ரேம், தன் தாயையும், தங்கையையும் பார்த்தான்.  இருவரும் கடுகடுவென்ற முகத்துடன் நின்றிருந்தனர். 
அப்போது “சார்..”   என்று வெளியில் இருந்தே குரல் கொடுத்த கடையின் சூப்பர்வைசர் முருகனை பார்த்த வடிவேலு, 
“முருகா.. இருய்யா ஒரு அஞ்சு நிமிஷம்.. உட்காரு..”  என்று வெளியே போடப்பட்டிருந்த  சோபாவை கை காட்டியவர், 
“தம்பி..  ஒரு முக்கியமான வேலை, கிளம்பனும்..  நீங்க இருந்து சாப்பிட்டு கிளம்புங்க..” என்று ப்ரேமிடம் சொன்னார். 
“சரிங்க.. நீங்க பாருங்க..” என்று ப்ரேம் சொல்லவும், 
“சரி  தம்பி..” என்றவர், “பார்த்துக்கோ ரவி..” என்று மகனிடமும் சொன்னவர் “சம்மந்தி வரேன்..” என்று முகத்தை தூக்கி வைத்து நின்றிருந்த வைஜெயந்தியிடம் தானே சொன்னார். 
“ம்ம்..” என்று மட்டும் முணுமுணுத்த வைஜெயந்தியை, தொடர்ந்து 
“மதுமா… அப்பா கிளம்பிட்டேன்..” என்று உள்நோக்கி மகளுக்கு குரல் கொடுத்தார்.  
“ப்பா.. சாப்பிட்டு கிளம்புங்க.. வாங்க..”  என்று  வந்த மதுமித்ரா, டேபிளில்  வேகமாக உணவை  எடுத்து வைக்க, 
“இல்லமா.. ஒரு முக்கியமான இடத்துக்கு போகணும்..” என்று வடிவேலு தயங்கவும், “ப்பா..”  என்று அழுத்தி குரல் கொடுத்த மகளை மீறமுடியாமல் உணவுண்ண அமர்ந்தார் வடிவேலு. 
“கமலாம்மா.. முருகன் அங்கிளுக்கு காபி எடுத்துட்டு போங்க..” என்று வேலை செய்யும் அம்மாவிடம் காபியை கொடுத்தவள், தந்தைக்கு தானே பக்கத்தில் நின்று பரிமாறியவள், ஹாலில் அமர்ந்திருந்த ப்ரேமின் கடுகடு முகத்தை பார்க்கவே அஞ்சிகொண்டு அவன் பக்கமே திரும்பவில்லை. 
வசந்தா ப்ரேமிற்கும், வைஜயந்திக்கும் காபி கொண்டு சென்று கொடுக்க, ப்ரேம்.. “வேண்டாம்..”   என்று சொல்வது கேட்கவும், அவனின் பக்கம் திரும்பியவள், “ப்ளீஸ்..” என்று பார்வையாலே கெஞ்சினாள். அப்போதும் அவன் எடுக்காமல், 
“இல்லங்க.. நான் வீட்லே குடிச்சுட்டு தான் வந்தேன்..” என்று உறுதியாக மறுத்துவிட, வைஜெயந்தியும் “வேண்டாம்..” என்றுவிட்டார். எடுத்து சென்ற காபியை அப்படியே  ரிட்டர்ன் எடுத்து வந்த வசந்தா மகளை பார்த்து பெருமூச்சோடு உதடு பிதுக்கினார்.  
“சரிம்மா.. நான் கிளம்புறேன்..” என்று உணவை முடித்த வடிவேலு எழவும், மதுமித்ரா  அவரின் பிபி மாத்திரைகளை கொடுத்தாள். அவரும் மாத்திரைகளை எடுத்து  முடிக்க, அவருடனே சென்று மொபைல், பர்ஸ்.. போன்றவற்றை எடுத்து தந்தைக்கு  கொடுத்தவள், கார் வரை சென்று தந்தையை வழி அனுப்பிவிட்டே வந்தாள்.  
இதை எல்லாம் பார்த்து உள்ளுக்குள் எரிந்து கொண்டிருந்த ப்ரேமை, கண்டு லேசாக பயம் வந்தாலும், துணிந்து அவனிடம் சென்றவள், “சாப்பிட வாங்க..” என்றாள்.  
அவள் கூப்பிட்டது காதில் விழுகாதது போலே அமர்ந்திருந்தவனின் உள்ள கொதிப்பை புரிந்து கொண்ட ரவி, “ப்ரேம்.. ப்ளீஸ் சாப்பிடலாமே..” என்றான்.  
“ரவி.. எனக்கு வேண்டாம், நீங்க கிளம்புங்க, டைம் ஆச்சு..” என்று அவனிடம் மறுவீடு செல்ல கேட்கவும், அவனின் உறுதி புரிந்து ரவி கிளம்ப மேலே சென்றுவிட்டான். 
மதுமித்ரா ப்ரேமை கெஞ்சலாக பார்க்க, அசையாத அமர்திருந்தவனை விடுத்து, வைஜெயந்தியிடம் சென்றவள், “அத்தை சாப்பிட வாங்க..” என்றாள் மரியாதையாக. அவள் அருகில் வந்து கேட்கவும், அதுவரை தன் கொதிப்பை கட்டுப்படுத்தி கொண்டிருந்த வைஜெயந்தி, 
“உன் சாப்பாடு ஒன்னும் எங்களுக்கு  வேண்டாம்..”  என்று வெறுப்பாக சொல்லிவிட, மதுவின் முகம் கசங்கி போனது. அவர் அதோடு நிறுத்தாமல், 
“கல்யாணம் ஆன ரெண்டாவது  நாளே என் பொண்ணை அழவச்சிட்டு இப்போ வந்து  என்னமோ  ரொம்ப நல்லவ மாதிரி உபசரிக்கிற..?” என்று பேசிவிட, 
“ம்மா..” என்று ப்ரேம் சத்தமாகவே அதட்டிவிட்டான். 
“என்ன ப்ரேம்..? நான் என்ன தப்பா சொல்லிட்டேன்..?  இப்போ  எதுக்கு  என்னை அதட்டுற..? இத்தனை பிரச்சனைக்கும் காரணம் இவதானே..?  இங்க பாரு கல்யாணம் ஆன மறுநாளே என் பொண்ணு எப்படி அழுதுட்டு இருக்கான்னு, எல்லாம் யாரால..?  இவளாலதானே..?” என்று விடாமல் பேச, மதுமித்ரா உள்ளுக்குள் துடித்து போனவள், கைகளை இறுக்கி கொண்டு நின்றாள். 
அவளின் துடிப்பை அவளின் சிவந்த கண்ணிலே கண்டுவிட்ட ப்ரேம், “ம்மா.. போதும்..” என்று சற்று அழுத்தமாகவே சொல்ல, வைஜெயந்தி மகனின் கோவம் புரிந்து அமைதியானாலும், மதுவை குரோதமாக பார்ப்பதை மட்டும் விடவில்லை. 
“சம்மந்தி.. தம்பி.. சாப்பிட வாங்க.. எல்லாம் ரெடி..”  என்று வந்த வசந்தா, மகளின் கன்றிய முகத்தை பார்த்துவிட்டவர்,
“மதுமா.. என்னடா..? ஏன் முகம் எப்படியோ இருக்கு..?” என்று பதறிபோய் கேட்டார்
“க்கும்..” என்று தொண்டையை செறுமியவள், “ஒன்னுமில்லைமா..” என்றுவிட, வசந்தா  நம்பாமல் சந்தேகமாக ப்ரேமையும், வைஜெயந்தியையும் பார்த்தார். தயாராகி வந்த   ரவியும் தங்கையின் முகத்தையும், அம்மாவின் சந்தேக பார்வையையும் கண்டு யோசனையாக எல்லோரையும் பார்த்தான். 
“என்ன ஆச்சு மது..?” என்று கேட்க, அடுத்த பிரச்சனையா..?  என்று உஷாரான மதுமித்ரா, 
“ண்ணா.. ஒன்னுமில்லை, இன்னும் சாப்பிடல இல்லை, அதான் கொஞ்சம் டையர்டா இருக்கு..” என்றாள் சாதாரணமாக. 
“ஓஹ்..”  என்றுவிட்ட ரவியும் சரி, வசந்தாவும் சரி அவளின் பேச்சை நம்பவில்லை என்று மற்ற மூவரையும் பார்த்த பார்வையிலே தெரிந்தது. 
“ரவி.. கிளம்பலாமா..?” என்று  அதற்கு மேலும் அங்கு நிற்க முடியாமல் ப்ரேம் கேட்டான். 
“போலாம்  ப்ரேம்..” என்றுவிட்ட ரவியின் முகமும் முன்போல் இல்லாமல் சற்று இறுகிதான் போனது. 

Advertisement