Advertisement

அவளே என் பிரபாவம் 4
“நான் செய்வேங்க.. அண்ட் இது ஒன்னும் உதவி கிடையாது..  என்னோட பொறுப்பு, கடமை..”  என்று மதுமித்ரா ஒவ்வொரு வார்த்தையாக நிறுத்தி நிறுத்தி சொன்னாள். 
“இது எங்களுடைய கடை, உன்னோட எந்த  உதவியும் எங்களுக்கு  தேவையில்லை..” என்று ப்ரேம் அவளை  ஒதுக்கி வைத்து  பேசியது மிகவும்  பாதித்தாலும், தன்னுடைய பொறுமையை இழக்காமல் நிதானமாக பேசினாள். அதில்  ஓர் நொடி மவுனமாக இருந்த ப்ரேம் ஒரு நக்கல் சிரிப்பை சிந்தினான். 
“என்ன சொன்ன..? உன்னோட பொறுப்பு, கடமை..? சரி.. இருக்கட்டும், உன்னோட இந்த பொறுப்பு, கடமையை   உங்க அப்பா மிஸ்டர் வடிவேலுகிட்ட சொல்லிட்டு செய்வியா..?” என்று கிண்டலாக கேட்டான். 
“உங்களுக்கு நான் அவர்கிட்ட சொல்லிட்டு செய்யணுமா..?” என்று மது கூர்மையாக கேட்டாள். 
“ம்ப்ச்..” என்ற ப்ரேமின் உள்ள குமுறல் மதுவிற்கு புரிய, 
“நான் அவர்கிட்ட சொல்லிட்டு செய்றதால உங்களுக்கு ஒரு சந்தோஷம் கிடைக்கும்ன்னா நான் கண்டிப்பா அவர்கிட்ட சொல்லிட்டே செய்றேங்க..  ஆனா நீங்க அப்படி இல்லை, உங்களுக்கு அவர் மேல இருக்கிறது வெறும் கோவம் மட்டும் தான், அதை வெறுப்பா மாத்திக்காதீங்க..” என்று பொறுமையாக சொன்னாள். 
“ச்சு.. இப்போ உனக்கு என்ன வேணும்..? இதை சொல்லத்தான்  கூப்பிட்டியா..? மனுஷன்  இருக்கிற கடுப்புல வந்துட்டா அவங்க அப்பாக்கு கூஜா தூக்கிட்டு..” என்று ப்ரேம் பொறுமை இழந்து கேட்டான். 
“என்னாச்சு..? ஏதாவது பிரச்சனையா..?”  என்று அவனின் நிதானமில்லா நிலை  புரிந்து மது கவலையாக கேட்டாள். 
“சொல்ல முடியாது போடி..” என்று ப்ரேம் வெடிக்க, அவனின் உச்சகட்ட கோவம்  புரிந்துகொண்டாள். 
“ஏன் சொல்ல முடியாது..? என்கிட்ட சொல்லாம, வேற யார்கிட்ட சொல்ல போறீங்க..? என்ன ஆச்சுன்னு சொல்லுங்க முதல்ல..” என்று மது சற்று அதிகாரமாகவே கேட்டாள். 
“என்னமோ என் கையால தொங்க தொங்க தாலி வாங்கிட்ட மாதிரி ரொம்பதான்  அதிகாரம் பண்ற..?” என்று ப்ரேம் நக்கலாக கேட்டாலும், அதில் உள்ள ஏமாற்றம் புரிந்து உதடு கடித்தவள், 
“என்னிக்கு இருந்தாலும் உங்க கையால தொங்க தொங்க தாலி வாங்க போறது நான்தான், அதனால என்ன பிரச்சனைன்னு சொல்லுங்க முதல்ல..” என்று மது விடாமல் கேட்கவும், பெருமூச்சு விட்டவன், 
“வேறென்ன கடையை விக்க சொல்லி ப்ரெஷர்.. அப்பாவால எதையும் சமாளிக்க முடியல, அது தாங்காம தான் அட்டேக்கும் கூட..” என்று சண்முகத்தின் திடீர் அட்டேக்கிற்கான காரணத்தை சொன்னான். 
“ஓஹ்.. நீங்க என்ன முடிவு எடுத்து இருக்கீங்க..?”
“நான் என்ன முடிவு எடுக்கட்டும்..? எனக்குதான்  இந்த பிஸ்னஸ் எல்லாம் செட் ஆகாதுன்னு  எனக்கு பிடிச்ச சாப்டவேர் லைன்க்கு போயிட்டேனே, அப்படி இருக்கிறப்போ  நான் என்ன செய்ய..? எந்த  ஐடியாவும் இல்லை..”
“அப்பாக்கு தான் எப்படியாவது கடையை காப்பாத்திறனும்ன்னு  ஆசை.. செஞ்சா அவருக்காகதான் செய்யணும்..” என்று தன் மேல் திணிக்கப்படும் கோவத்தில்  பொரிந்தான். 
“அப்பாக்காக செய்றது ஒன்னும் தப்பில்லையே..? என்று மதுமித்ரா எதார்த்தமாக சொல்லவிட்டவள், புரிந்தபின் நொந்தே போனாள். 
“ஆமாம்.. ஆமாம்…  அப்பாக்காக எதுவேணாலும் செய்யலாம், , யார வேணும்னாலும் நிமிஷத்துல தூக்கி போட்டுடலாம்.. தப்பே இல்லை.. இதை உன்னவிட்டா வேறயாராலும் பெட்டரா சொல்லிட முடியாது, உனக்குத்தான்   இதுக்குள்ள  முழுதகுதியும் உண்டு..”  என்று ப்ரேம்  மித்ராவை  வார்த்தைகளால் குத்த, அவளுக்கும் வலிக்கவே செய்தது. 
“இன்னும் எத்தனை நாளைக்கு என்னை இப்படியே பேசுவீங்க..?”  என்று மது கம்மிய குரலில் கேட்டாள். 
“உன்னை எப்போல்லாம் மிஸ் செய்றேனோ அப்போல்லாம்   இப்படித்தான்  பேசுவேன், நீ தாங்கிதான் ஆகணும்..” என்று ப்ரேம் தன் ஏமாற்றத்தை வார்த்தைகளால் அடித்தான்.
“சரி.. பேசுங்க, நான் கேட்டுக்கறேன், ஆனா கடை விஷயத்துல நான்..” என்று மதுமித்ரா பேசி கொண்டிருக்கும் போதே இடையிட்டவன், 
“கடை விஷயத்துல நீ உள்ள வரணும்னா என்னோட பொண்டாட்டியாதான் வரணும், மிஸ்டர் வடிவேலு மகளா கிடையாது, இதுக்கு சம்மதம்னா மேற்கொண்டு பேசு, இல்லை பேசாத..” என்று ப்ரேம் அழுத்தமாக சொல்ல, மதுவிடம் முழு அமைதி. 
அவளின் மறுப்பை அவளின் அமைதியிலே உணர்ந்தவன், திரும்பவும் ஏமாற்றமா..? என்று கொதித்துவிட்டான். 
“வரமாட்ட இல்லை, என்னோட பொண்டாட்டியா வரமாட்ட இல்லை.. அப்போ கடைசிவரை மிஸ்டர் வடிவேலுவுக்கு மகளாவே இருந்துட்டு போ.. எனக்கு பொண்டாட்டியா வரவே வராத.. வைடி போனை..”  என்று கட் செய்துவிட மது கண் மூடி நின்றுவிட்டாள். 
“மதுமா..” என்ற ரவியின் குரலில் தன்னை மீண்டவள், தூரத்தில் இருக்கும் அண்ணனை நோக்கி சென்றாள். 
“என்ன ஆச்சுடா..? ப்ரேம் ஒத்துக்கலையா..?” என்று தங்கையின் முகவாட்டத்தை வைத்து கேட்டான். 
“இல்லைண்ணா.. ஆனா அவர் ஒத்துகிற வரைக்கும் கண்டிப்பா விடமாட்டேன்..” என்று உறுதியாக சொல்ல, ரவி ஆறுதலாக கூட எதுவும் சொல்ல முடியாமல் நின்றுவிட்டான். 
“ரவி.. உன்னை எங்க எல்லாம்  தேட..?” என்று வசந்தா வர, 
“ஏன்மா..?” என்றான் ரவி. 
“அது ஒன்னுமில்லைப்பா.. மருமக உன்னை  டீக்காக எதிர்பார்த்திருப்பா போல, நீ வரலன்னதும் குடிக்கல..” என்று வசந்தா மேலோட்டமாக சொன்னாலும், திவ்யா எதோ கோவத்தை காட்டியிருக்கிறாள் என்று அண்ணனுக்கும், தங்கைக்கும் புரிந்தது. 
காலையில் தான் திருமணம் முடிந்து இருந்தது, அதற்குள் பிரச்சனையா..? என்ற வசந்தாவின் கவலை அவரின்  முகத்திலே தெரிய, ரவி ஆதரவாக அவரின் கையை பற்றிகொண்டான். 
“நான் பார்த்துகிறேன்மா..” என்றவன், பெருமூச்சோடு உள்ளே சென்றான். அங்கு அவர்களின் ரூமில் திவ்யா முகத்தை தூக்கி வைத்து உட்கார்ந்திருக்க, அவளின் பக்கத்தில் வைஜெயந்தியும் கடுகடுவென அமர்ந்திருந்தார். 
“அத்தை.. டீ சாப்பிடீங்களா..?” என்று மரியாதையாக அவரிடம் கேட்டான். 
“பரவாயில்லை  மாப்பிள்ளை.. நான் வீட்டுக்கு கிளம்பனும், உங்ககிட்ட சொல்லிட்டு கிளம்பலாம்ன்னு இவ்வளவு நேரம் காத்திருந்தேன், நான் வரேன்..” என்றவர், ரவியின் பதிலை கூட எதிர்பார்க்காமல் கிளம்ப, 
“அத்தை.. இருங்க சாப்பிட்டு போங்க..” என்று ரவி சொல்லவும், 
“இருக்கட்டுங்க.. நாளைக்கு மறுவீடு கூப்பிட வரோம்..” என்றவர் நிற்காமல் நடந்துவிட  அதிர்ப்தியாக பார்த்தவன், மனைவியை பார்க்க, அவள் இவனை சிறிதும் கண்டு கொள்ளாமல் எங்கோ பார்த்துகொண்டிருந்தாள். 
“என்ன ஆச்சு இவளுக்கு..? காலையில் இருந்து நல்லாதானே இருந்தா..?” என்று மனைவியை ஆராய்ச்சியாக பார்த்தவன், 
“திவி.. என்ன ஆச்சு..? ஏன் இப்படி உட்கார்ந்திருக்க..?” என்று கேட்டே விட்டான். 
“ம்ம்.. என் தலையெழுத்து இப்படித்தான்னா நான் என்ன செய்ய முடியும்..?” என்று திவ்யா கோவமாக பேசினாள்.  
“இப்போ என்ன ஆச்சுன்னு இப்படி பேசற..?”  என்று ரவி நிதானமாகவே  கேட்டான். 
“இன்னும் என்ன ஆகணும்..? காலையில ஒருத்திக்கு தாலி கட்டி கூட்டிட்டு வந்தோமே, அவள் என்ன பண்றா..?  ஏது பண்றான்னு கொஞ்சம் கூட அக்கறையில்லாம தங்கச்சியோட அரட்டை அடிச்சிட்டு உட்கார்ந்திருக்கிற புருஷன் கிடைச்சா இப்படித்தான்..”என்று பொரிய, அவளின் பேச்சு ரவிக்கு கசப்பை கொடுத்தது. 
“அரட்டை அடிச்சிட்டு உட்கார்ந்திருந்தோமா..?”  என்று நினைத்தவன், “சரி விடு.. வா டீ குடிக்க  போலாம்..” என்று கூப்பிட்டான். 
“இப்போ டைம் என்ன தெரியுமா..? டீ குடிக்கிற  டைம் எல்லாம் முடிஞ்சு போச்சு..” என்று கடுகடுக்க, 
“அப்போ வா சாப்பிட போலாம்..” என்று  பொறுமையை இழுத்து பிடித்து கூப்பிட்டான்
“இவ்வளவு நேரம் என்னை கண்டுக்காம இருந்துட்டு இப்போ மட்டும் என்ன புதுசா அக்கறை வேண்டிக்கிடக்கு..?” என்று மேலும் பேசுபவளை பார்த்த ரவிக்கு ஆற்றாமையாக இருந்தது. 
“முதல் நாளே இவ்வளவு சண்டையா..? வேண்டாம் திவி.. அப்பறம் வாழ்க்கை கசப்பாகிடும்..” என்றுவிட்டவன், கட்டிலில் தலை பிடித்து உட்கார்ந்துவிட்டான். 
அப்படியே எவ்வளவு நேரம் இருந்தார்களோ “ரவி.. ரவி..”  என்று வசந்தா கூப்பிடவும் தான் வெளியே வந்தார்கள். 
“டின்னருக்கு நேரம் ஆச்சுபா..” என்ற வசந்தா மகனின் முகத்தில் தெரிந்த வாட்டத்தில் உள்ளுக்குள் தவித்தவர்,  “திவ்யா.. வாம்மா..  சாப்பிட போலாம்..” என்று அவளையும் கூப்பிட்டார், 
“திவ்யா.. எவ்வளவு நேரம் சாப்பிட வா.. இன்னும் கொஞ்ச நேரத்துல  நீயும் மாப்பிள்ளையும் தானே இருக்க போறீங்க..?” என்று திவ்யாவின் அக்கா முறை மேனகா அவளுடன் துணைக்கு இருந்தவர் கிண்டலாக சொல்ல, லேசாக சிரித்தவர்கள் சாப்பிட  அமர்ந்தனர்.
“மதுமா.. சாப்பிட வா..” என்று சோபாவில் அமர்ந்திருந்த மகளையும் வசந்தா கூப்பிட, அவளும் வந்தவள், லேசான சிரிப்புடன் திவ்யாவின் பக்கத்தில் அமர்ந்தாள். 
அவள் சிரிப்பை சிறிதும் கண்டு கொள்ளாமல் முகம் சுருக்கி அமர்ந்திருந்த திவ்யா அவள் பக்கத்தில் அமரவும், பட்டென எழுந்துவிட, மதுமித்ராவிற்கு சுருக்கென குத்தியது. 
“என்ன ஆச்சு திவ்யா..? ஏன் எழுந்துட்ட..?” என்று மேனகா கேட்க, 
“எனக்கு இங்க உட்கார பிடிக்கல, இந்த சேர் சரியில்லை..” என்று  மதுவை பார்த்தவாறே  சொல்ல  ரவிக்கு கோவத்தில் முகம் சிவந்துவிட்டது  
“ஏய்.. என்ன பேசுற நீ..?” என்று மனைவியிடம் கோவமாக கேட்கும் நேரம், 
“ண்ணா..” என்று அதட்டிய மதுவை தொடர்ந்து தானும் பார்த்தவனுக்கு வடிவேலு வருவது தெரிய, தங்கையின் கெஞ்சாலான பார்வையில் வாய் மூடினான். 
“மதுமா.. சாப்பிட உட்கார்ந்தாச்சா..?  வாடா.. அப்பா பக்கத்துல வந்து உட்காரு..” என்று எப்போதும் போல மகளை கூப்பிட்டு தன் பக்கத்தில் அமரவைத்து கொண்டார்.  
“வாம்மா.. மருமகளே.. ஏன் நின்னுட்டு இருக்க..?  உட்காரு..”  என்று திவ்யாவிடம் சொன்னார். 
“ம்ம்..” என்ற முணுமுணுப்போடு அமர்ந்த திவ்யாவை ஆராய்ச்சியாக பார்த்த வடிவேலு மகளின் கன்றிய முகத்தையும் கவனிக்க தவறவில்லை. 
“மேனகா.. மாப்பிள்ளை என்னமா செய்றாரு..?” என்று மேனகாவிடம் பொதுவாக பேசியபடி சாப்பிட்டவர், மகளுக்கு தேவையானதை தானே பார்த்து எடுத்து வைத்து கொண்டிருந்தார். 
“மாமா.. விட்டா உங்க மகளுக்கு நீங்களே ஊட்டியே விடுவீங்க போல..” என்று மேனகா கவனித்து சிரிப்புடன் கேட்டாள். 
“என் மக விடமாட்டா இல்லை ஊட்டி விடுறதுதான்..” என்று வடிவேலுவும் சிரிப்புடன் சொன்னாலும் அதை செய்ய கூடியவர் தான். 
“க்கும்..” என்று வடிவேலுவின் பாசம்  பொறுக்க முடியாமல் திவ்யா கிண்டலாக முனங்க, ரவி பல்லை கடித்தான். இப்படியே இரவு உணவு முடிந்து எல்லோரும் அவரவர் ரூமிற்கு சென்றுவிட, 
“திவ்யா.. சீக்கிரம்  வா..” என்று மேனகா அவளை  முதல் இரவுக்கு தயார் செய்து ரவியின் அறைக்கு அனுப்ப,  உதவிக்கு நின்ற வசந்தாவிற்கு  திவ்யாவின் முகத்தில் தெரிந்த இறுக்கம், கவலையை கொடுத்தது. 
“கடவுளே.. இவங்களோட வாழ்க்கை நல்லா இருக்கனும்..” என்று வேண்டியபடி நின்றுவிட்டார். அவரின் கவலை சரியே என்பது போல  உள்ளே சென்ற திவ்யா, கட்டிலில் அமர்ந்திருந்த ரவியை சிறிதும் கண்டு கொள்ளாமல் பாலை அங்கிருக்கும் டேபிளில் வைத்துவிட்டு  நைட்டியை எடுத்துக்கொண்டு உடை மாற்ற சென்றுவிட்டாள். 
“ம்ம்.. இது எதிர்பார்த்தது தானே..”  என்று ரவி நினைத்தாலும், புதுமணமகனுக்கான ஏமாற்றம் சூழாமல் இல்லை. புடவை மாற்றி கொண்டு வந்த திவ்யா, அமைதியாக கட்டிலில் ஏறி ஒரு ஓரமாக படுத்துவிட, 
“திவ்யா..” என்று மனைவியை கூப்பிட்டான்.  அவன் கூப்பிட்டது கேட்டும் பதில் சொல்லாமல் படுத்திருந்தவளுக்கு ரவியை இப்போதே தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விடும் வேகம். 
அதை செயல்படுத்த தான் அவனை கண்டு கொள்ளாதது போல் படுத்துவிட்டவள், அவனும் கூப்பிடவும் அவன் பக்கம் திரும்பாமலே பிகு செய்தாள். 
“திவ்யா..” என்று மறுபடியும் கூப்பிட்ட  ரவி,  “நீ என்னை பார்க்கலன்னா போகுது, ஆனா நான் சொல்றதை நல்லா காது கொடுத்து கேட்டுக்கோ..” என்றவன்,
“நீ என் விஷயத்துல என்ன செஞ்சாலும் நான் பொறுத்துப்பேன்.. ஏன்னா நான் உன்னை விருப்பப்பட்டுதான் கட்டிகிட்டேன், ஆனா.. மது விஷயத்துல உன்னோட பிகேவியர் சரியில்லை..”
“அப்பா..  மதுன்னு வந்துட்டா யாரையும் பார்க்க மாட்டாரு, என்னை உட்பட.. பார்த்து இருந்துக்கோ.. அப்பறம் நான் எதுவும் செய்ய முடியாது.. என்கிட்ட எதுவும் எதிர்பார்க்கவும் பார்க்காத..”   என்று வடிவேலுவின் ஆராய்ச்சி பார்வையை கண்டு கொண்டு மனைவியை எச்சரிக்கவே செய்தான். 
ஆனால் திவ்யா இருக்கும் மனநிலையில்  கணவனின் அறிவுரையை சிறிதும் காதில் ஏற்று கொள்ளாததோடு மறுநாள் காலையிலே வம்பையும் இழுத்துவிட்டாள்.
“மதுமா.. மதுமா..:” என்ற தோட்டத்தில் வேலை செய்யும் மாணிக்கத்தை பார்த்தவாறே கிழிறங்கி வந்த திவ்யா, 
“என்ன சொல்லுங்க..?” என்றாள் அவரிடம். 
“அதுங்கமா.. நம்ம மதுமாக்கு ரோஸ் கொண்டுவந்தேன்..” என்று கையில் இருக்கும் ரெட் ரோசை காட்டினார். மதுவிற்கு ரெட் ரோஸ் என்றால் மிகவும் பிடிக்கும் என்பதால் வடிவேலு மகளுக்காகவே ஒரு பக்கம் முழுவதும் ரெட் ரோஸ் தோட்டத்தையே வைத்திருந்தார். 
“கொடுங்க.. எனக்கு வேணும்..”  என்று அவரிடம் அவளுக்காக கேட்க, சங்கடமாக முழித்தார்  மாணிக்கம். 
“கொடுங்கன்னு சொல்றேன் இல்லை..”  என்று தான் கேட்டும் கொடுக்காமல் இருந்தவரை பார்த்து அதிகாரமாகவே கேட்டு கொண்டிருந்தவளின் சத்தத்தில் நியூஸ் பேப்பர் படித்து கொண்டிருந்த  ரவியும், கிச்சனில் இருந்த வசந்தாவும் அங்கு வந்தனர். 
“என்ன ஆச்சு திவ்யா..?” என்று  வசந்தா மருமகளிடம் கேட்டு கொண்டிருக்கும் போதே அங்கு வந்த மதுவை வெறுப்பாக பார்த்த திவ்யா, 
“இந்த வீட்டு மருமக நான், நான் கேட்டும் இவர் எனக்கு பூ தரமாட்டேன்கிறார்..” என்று புகார் படிக்க, அங்கிருக்கும் சூழ்நிலையை நொடியில் புரிந்து கொண்ட மது மாணிக்கத்தை  பார்த்து கண் காட்டினாள். 
அதற்கு பிறகே அவர் திவ்யாவிடம் பூ கொடுக்க, கொதித்தெழுந்த திவ்யா, அந்த பூவை வாங்கி  கீழே வீசிவிட்டாள்.  
“என்ன நடக்குது இங்க..?” என்று கீழே இருக்கும் பூவையே பார்த்தவாறே வந்த வடிவேலுவின்  முகத்தில் தெரிந்த கடினத்தில்  அனைவருக்கும் லேசான பதட்டம் திவ்யா உட்பட. 
“மாணிக்கம்..  மதுமாக்கு தானே ரோஸ் கொண்டு வந்த..?  ஏன்  கீழ விழுந்துருக்கு..? என்று மாணிக்கத்திடம் நேரடியாக கேட்டார் வடிவேலு.  
“அதுங்கய்யா..”  என்று மாணிக்கம் ஆரம்பிக்கும் போதே இடைமறித்த மது, 
“ப்பா.. தாத்தா எனக்குத்தான் கொண்டு வந்தார், கைதவறி கீழே விழுந்துருச்சு..”  என்றாள். 
“அப்படியா மாணிக்கம்..?” என்ற வடிவேலுவின் கூர்மையான பார்வையில் அவர் நடந்ததை படபடவென சொல்லிவிட, ரவி மனைவியை ஆற்றாமையாக பார்த்தான்.
“என்னமா இது..?”  என்று வடிவேலு  திவ்யாவிடம் கேட்க, 
“அது.. எனக்கு வேணும்ன்னு கேட்டேன் மாமா, அவர் தரலை.. அதான்..” என்று திவ்யா அசட்டு துணிச்சலுடன் சொல்ல, 
“ஓஹ்.. உனக்கு வேணும்னா அவர் தந்தரனும், அப்படியா..? அது யாருக்கு எடுத்திட்டு வந்த பூ உனக்கு அவர் சொல்லலையா..?”  என்று கேட்டார். 
“சொன்னார் தான், ஏன் இவளுக்கு எடுத்துட்டு வந்தா எனக்கு கொடுக்க கூடாதா..? நான் இந்த வீட்டு மருமகதானே..?” என்று அவள் வழக்கடிக்க, ரவி மனைவியை பார்த்து  வேண்டாம் என்று கண் காட்டினான். 
அது புரிந்தும் திவ்யா மதிக்காமல் பேச, ரவி வாங்கி கட்டி கொள் என்ற தோள் குலுக்களுடன் நின்றுவிட்டான். 
“இந்த வீட்டு மருமக.. ம்ம்.. அப்படின்னா உனக்கு இந்த வீட்ல எல்லா உரிமையும், அதிகாரமும் இருக்கு, அப்படித்தானேமா..?”  என்று கேட்டார். 
“ஏன் இல்லையா மாமா..?” என்று திவ்யா கேட்க,  அவளை கண் இடுக்கி பார்த்தவர், 
“இருக்கு.. ஆனா என் மகளுக்கு மிஞ்சி இல்லை,  இங்க பாருமா..  இந்த வீட்டு மருமகங்கிற ஒரே காரணத்துக்காக என் மகளை நீ ஒதுக்க முடியாது, மத்த வீட்ல எப்படியோ  தெரியாது, ஆனா என் வீட்ல என் பிள்ளைகளுக்கு சரிசமமான உரிமை தான், அதுல மருமகங்கிற பேர்ல நீ தலையிட முடியாது..” என்று சொல்ல திவ்யா திரும்பி கணவனை முறைத்தாள். 
“ப்பா.. ஏன் இப்படி..?”  என்று மது தந்தையை நிறுத்த பார்க்க, அவளை கோவமாக பார்த்த வடிவேலு, 
“மது.. நான் என் மகளுக்காக பேசுறேன், நீ இதுல தலையிடாத..” என்று கண்டித்தவர், 
“இங்க பாரு மருமகளே.. நீ என் மகனுக்கு பொண்டாட்டியானதால வந்த சொந்தம், ஆனா  என் பொண்ணு  இந்த வீட்டு மக, நேரடி வாரிசு, முழு உரிமைபட்டவ..”
“அவளுக்குன்னு இருக்கிற எதுலயும் நீ உரிமை கொண்டாட முடியாதுமா, உன்னோட புருஷனுக்கு என்ன உரிமைபட்டதோ அதுக்கு மட்டும்தான் நீ உரிமை கொண்டாட முடியும்..”
“இதுவே கடைசியா இருக்கட்டும், இனியும் இதுபோல என் மக விஷயத்துல நீ தலையிட கூடாது..” என்று எச்சரிக்கையாகவே சொல்லவிட, திவ்யா கறுத்து போன முகத்துடன் நின்றிருந்தாள். அப்போது,
“திவ்யா..” என்ற வைஜயந்தியின் குரலில், எல்லோரும் வாசலை பார்க்க, அங்கு வைஜெயந்தியுடன், ப்ரேம் நின்றிருந்தான். அவர்களை பார்த்ததும் திவ்யா, 
“ம்மா..”  என்று ஓடிச்சென்று  வைஜெயந்தியை கட்டி கொண்டு அழுக,  மதுமித்ரா பதட்டத்துடன் ப்ரேமை பார்த்தாள். 
அவனோ இவள் புறம் சிறிதும் திரும்பாமல் வடிவேலுவை தீவிரமாக முறைத்து கொண்டிருந்தான்.

Advertisement