Advertisement

“அவங்களால எழ முடியாது மித்ரா, நாம தான் தூக்கிட்டு போகணும்..” என்று வடிவேலுவை பார்க்க, அவரின் கண்களில் மரண பீதி தெரிந்தது. ஏனெனில் நம் வசந்தா  குஷ்பூ போல பூசிய உடல்வாகு..!! 
“என்னது..? தூக்கிறதா..?” என்று அரண்டு போய் நின்றவரிடம், 
“ப்பா.. பிடிங்கப்பா.. அம்மாவை முதல்ல  படுக்க வைக்கணும்..” என்று மது அவரை தூக்க முனைய, 
“வேண்டாம் மதுமா.. நீ அவளை தொடாத, உன்னை தான் டாக்டர்  வெய்ட் தூக்க கூடாதுன்னு சொல்லயிருக்காங்க இல்லை..” என்று மகளுக்காக பேச, வசந்தா கணவனை கண்ணாலே பஸ்பமாக்கி கொண்டிருந்தார். 
“ப்பா.. என்ன இது..?” என்று மது தந்தையை கண்டிக்க, 
“மதுமா.. நான்  உண்மையை தான் சொல்றேன், நீ தள்ளி நில்லு, நான் பார்க்குறேன்..” என்று மகளை விலக்கிவிட்டு மனைவியிடம் வந்தவரால், அவரை எழுப்பகூட முடியவில்லை. 
“நீங்க அந்த பக்கம் பிடிங்க..” என்ற ப்ரேம், வசந்தாவை தூக்க குனிந்தான். 
“ஐயோ.. வேண்டாம் மாப்பிள்ளை.. நானே எழ பார்க்கிறேன்..” என்று சங்கடத்துடன் சொன்னவர், வலியை தாங்கி கொண்டு எழமுயல, அவரால் முடியவில்லை. 
“அத்தை.. என்ன இது..? என்கிட்ட போய் ஏன் சங்கடபடுறீங்க..?” என்று உரிமையாய் சொன்ன ப்ரேம் அவரின் ஒரு பக்கம் பற்றி கொள்ள, வடிவேலு மனைவியின் மறுபக்கம் பற்றி எழுப்பி கை தாங்கலாக அழைத்து சென்று பெட்டில் படுக்க வைத்தனர். 
“ம்மா.. நான் இங்க பக்கத்துல யாராவது டாக்டர் இருக்காங்களான்னு பார்க்கிறேன்..” என்று முயன்று பார்த்த மது, அவசரத்துக்கு யாரும் கிடைக்காமல் போக, சுபாவிற்கு அழைத்து சொன்னார். 
“மது.. நீ வலிக்கு இப்போதைக்கு ஆயின்மென்ட், ஹாட் பேக் போல ஏதாவது செய், நான் வந்துடுறேன்..” என்று அடுத்த அரை மணி நேரத்தில் சுபா  பண்ணை வீட்டில் இருந்தார். 
“என்ன செஞ்சிங்க என் தங்கச்சியை..?” என்று வடிவேலுவை பார்த்து முறைப்புடன் கேட்ட சுபா, ரூமிற்குள் சென்று வசந்தாவை பரிசோதித்தார். 
“என்னாச்சு வசு..” என்று கேட்டு கொண்டே வலி மிக்க இடத்தை ஆராய, 
“கீழ ஆயில் சிந்திருச்சுக்கா, அதை தொடைக்க, மேல ஹாங்கர்ல இருந்த துணியை எட்டி எடுக்கும் போது கால் ஆயில்ல பட்டு இழுத்துருச்சுக்கா..” என்று வலியில் திணறினார். 
“ம்ம்.. பார்த்து செய்றதில்லை..”என்று அக்காவாக கடிந்து கொண்டவர், “லேசான சுளுக்கு தான், இரண்டு நாள் புல்லா ரெஸ்ட் எடுத்துக்கோ, ஸ்ட்ரைன் பண்ணாத..” என்றார். 
“ரெண்டு நாளா..? எப்படிக்கா.. மதுவை பார்த்துக்கணுமே.. மாப்பிள்ளை வேற இருக்கார்..”  என்று தான் படுத்துவிட்டால் எப்படி சமாளிக்க..?  என்ற கவலையில் கேட்டார். 
“அதுக்கு என்ன செய்ய முடியும்..? வேணும்ன்னா தேக்கிட்டே போய் எல்லா வேலையும் பாரு..” என்று எப்போதும் போல அவரின் பாணியில் பொரிந்தார்.
“ம்மா.. பெரியம்மா சொல்ற மாதிரி நீ புல்லா ரெஸ்ட் எடு, பார்த்துக்கலாம்..” என்று மது வசந்தாவின் கை பிடித்து ஆறுதலாக சொன்னாள். 
“நீ எப்படி மது..?” என்று வசந்தா கவலைப்பட, 
“அவ ஏன் செய்யணும்..? அதான் இந்த வீட்ல ரெண்டு சண்டி வீரங்க இருக்காங்களே, அவங்க செய்யட்டும்..” என்று ப்ரேமையும், வடிவேலுவையும் சொல்ல, அம்மாவும், மகளும் அதிர்ந்து தான் போனார்கள். 
“க்கா.. என்ன இது..? நம்ம வீட்டு மாப்பிளையை போய்..” என்று  வசந்தா கோபத்துடன் ஆட்சேபிக்க, 
“அப்போ உன் புருஷன் செய்யட்டும்..” என்றார் கூலாக. 
“பெரியம்மா.. அப்பா  என்ன செய்வார்..? பாவம்..” என்று மது தந்தைக்காக பேச, 
“அப்போ மொத்த குடும்பமும் நைட்டுக்கு பட்டினி கிடங்க.. எனக்கென்ன..?” என்று நொடித்தவர், ரூமை விட்டு வெளியே வந்தார். 
“சுபா.. என்ன ஆச்சு..?” என்று வடிவேலு பதட்டத்துடன் கேட்க, 
“ம்ம்.. எல்லாம் தான் ஆச்சு, இன்னும் ரெண்டு நாளைக்கு என் தங்கச்சி எந்த வேலையும் செய்ய கூடாது, எல்லாம்  நீங்களே பார்த்துக்கோங்க..” என்று சொன்னார். 
“என்ன பிரச்சனை டாக்டர்..?” என்று ப்ரேம் கேட்க, அவனை கண்ணை சுருக்கி  பார்த்த சுபா, 
“என்ன டாக்டரா..? நான் உங்களுக்கு  பெரிய மாமியார்.. ஒழுங்கா அத்தை  கூப்பிடனும்..” என்று அதிகாரத்தோடு மிரட்ட, ப்ரேம் மனைவியை காண்டாக பார்த்தான். 
“உனக்கு இவங்களை விட்டா வேற டாக்டரே கிடைக்கலையா..?” என்று மனைவியிடம் மெல்லிய குரலில்  சிடுசிடிக்க, 
“என்ன அங்க என் பொண்ணை அரட்டிட்டு இருக்கீங்க..?” என்று அதற்கும் பேசிய சுபாவை கடுப்பாக பார்த்த ப்ரேம், 
“முதல்ல  அத்தைக்கு என்ன பிரச்சனை சொல்லுங்க..” என்றான். 
“ம்ம்.. சுளுக்கு.. சரியாக ரெண்டு நாள் ஆகும்.. பத்திரமா பார்த்துக்கோங்க..” என்றவர், 
“மது எனக்கு பசிக்குது.. நான் சாப்பிட போகும் போது நீ போன் பண்ணவும் அப்படியே ஓடி வந்துட்டேன்.. போய் சாப்பாடு எடுத்துட்டு வா..” என்று டைனிங் டேபிள் நோக்கி சென்றார். 
“என்ன மதுமா செய்றதா..? அவ எப்படி செய்வா..?” என்று வடிவேலு சுபாவிடம் ஆட்சேபிக்க, 
“அப்போ நீங்க செய்ங்க..” என்றார். 
“என்ன நானா..? ஏன் நீ செய்ய மாட்டியா..? இது உன் தங்கச்சி வீடு தானே..?” என்று வடிவேலு கேட்க,  
“நான் விருந்தாளி.. விருந்தாளி தெய்வத்திற்கு சமம்.. நீங்க கேள்விப்பட்டதில்லையா..” என்று நக்கலடித்தவர், சட்டமாக டேபிளில் அமர்ந்து கொண்டார். 
“ப்பா.. ஏன் இப்படி பேசுறீங்க..? அமைதியா இருங்க..” என்று தந்தையை அடக்கிய மது, 
“நீங்க உட்காருங்க பெரியம்மா.. நான் என்ன இருக்கன்னு பார்க்கிறேன்..” என்று கிட்சன் உள்ளே செல்ல போனவள்,
“மித்ரா.. மதுமா..” என்ற பதட்ட குரலில் திரும்பியவளிடம் மாமனாரும், மருமகனும், 
“உள்ள போகாத, ஆயில் கிளீன் பண்ணனும்..” என்று அவளை தடுத்தனர். 
“சரி.. நான் பொறுமையா பார்க்கிறேன்..” என்று பொதுவாக சொன்ன மது, மறுபடியும் உள்ளே செல்ல போனாள். 
“நீ போகாத, நான் பார்க்கிறேன்..” என்று ப்ரேம் உள்ளே செல்ல, 
“இதென்னடா கலிகாலம் இது..? மருமகன் கிளீன் பண்றதா..?” என்று வடிவேலுவை  பார்த்து சுபா நக்கலாக சீண்ட, வடிவேலுவும் மருமகனுக்கு உதவ  பின் சென்றார். 
“வீடு கிளீன் பண்ண ஆள் வைக்கலயா மது..?” என்று சுபா மகளை பிடித்து தன் பக்கத்தில் அமரவைத்து கொண்டு கேட்டார். 
“இருக்காங்க பெரியம்மா.. காலையில தான் வருவாங்க..” என்ற மதுவின் பார்வை கிட்சனிலே  இருந்தது. 
அங்கு ப்ரேம் துணி எடுத்து ஆயில் துடைக்க, வடிவேலு அதற்கு மேல கொஞ்சம் லைசால் போட்டு வேறொரு துணி கொண்டு தொடைத்தார். அடுத்து ப்ரேம் வசந்தா என்ன செய்திருக்கிறார் என்று பார்த்தான். 
சட்னி, குருமா, சாம்பார், இட்லி எல்லாம் தயாராக  இருக்க, சப்பாத்தி போட மாவு பிசைந்து  வைத்திருந்தார். “சரி..” என்று அடுப்பை பற்ற வைத்து தவா வைத்த   ப்ரேம் பூரி கட்டையை எடுத்து   சப்பாத்தி தேய்க்க ஆரம்பித்தான். 
வடிவேலு தான்  என்ன செய்ய என்று ஓர் நொடி தடுமாறியவர், ப்ரேம் தேய்த்து போட்ட சப்பாத்தியை தவாவில் எடுக்க ஆரம்பித்தார். இருவருக்கும் ஓர் வார்த்தை பேச்சில்லை, பார்வை இல்லை.. ஆனால் வேலை மட்டும் நடந்து கொண்டிருக்க, மது நெகிழ்வுடன் அதை பார்த்து கொண்டிருந்தாள். 
“என்ன மகளுக்கு கண் வேர்க்குதா..?” என்று சுபா சிரிப்புடன் கேட்க, மதுவும் கலங்கிய கண்களுடன் ஆமாம் என்று  தலை ஆட்ட, அவளை தன்  தோளில் சாய்த்து கொண்ட சுபா, ஆதரவாக தட்டி கொடுத்தார். 
“மது.. இந்த சின்ன பிள்ளை சண்டை எல்லாம் கொஞ்ச நாளைக்கு தான், அப்புறம்  அவங்களுக்கே எதார்த்தம் புரிய ஆரம்பிச்சுடும், இதையே நினைச்சு உன்னை நீயே கஷ்டபடுத்திக்காத..”

“வேணும்ன்னா இந்த ரெண்டு சண்டி குதிரைகளையும் இப்படி வேலை வாங்கு, அதுதான் இவங்களுக்கு சரியா இருக்கும்..” என்றவர், அவளின் கண்ணீர் நிற்காமல் பெருகவும், 
“போதும்.. கண்ணை துடை மது.. அப்பறம் நான்தான் உன்னை அழவச்சேன்னு  ரெண்டு பேரும் என்னை  கண்ணாலே எரிச்சுருவாங்க..” என்று சொல்ல, மது லேசான சிரிப்புடன் முகம் துடைத்து கொண்டாள். 
“மது..” என்ற வசந்தாவின் அழைப்பில், ரூமிற்கு சென்ற மது, 
“என்னம்மா.. ரொம்ப வலிக்குதா..?” என்று கேட்டாள். 
“இல்லைடா.. நைட் சாப்பாடு என்ன செய்ய போறீங்கன்னு..?”
“ ம்மா.. கவலையே படாதீங்க, சாப்பாடு வேலை எல்லாம் ஜோரா நடந்துட்டு இருக்கு, உங்க புருஷனும், மருமகனும் தான் சேர்ந்து செஞ்சிட்டு இருக்காங்க..” என்றாள். 
“என்ன..? உண்மையாவா சொல்ற  மது..?” என்று வசந்தா நம்பாமல் ஆச்சரியத்துடன் கேட்க, கதவை நன்றாக திறந்து வைத்த மது, 
“அங்க பாருங்க..” என்று டைனிங் டேபிளை காட்டினாள்.  ப்ரேமும், வடிவேலுவும் ஆளுக்கொரு பாத்திரமாக எடுத்து வந்து டேபிளில் நிரப்பி கொண்டிருந்தனர். 
“பாவம் என் மருமகன்..” என்று ப்ரேமிற்காக கவலைப்பட்ட வசந்தா,  
“நல்லா செய்யட்டும்.. இன்னும் ஏதாவது வேலை இருந்தா உங்க அப்பாக்கு கொடு மது..” என்று வடிவேலுவை பார்த்து உற்சாகத்துடன் குதூகலித்தவர், அடுத்த நாள் முழுதும் கணவனை படுத்து எடுத்துவிட்டார். 
“மதுமா.. எனக்கு தண்ணி வேணும்..” என்று பெட்டில் படுத்தபடியே  வசந்தா அதிகாரமாக கேட்க, வடிவேலு மனைவியை கொலை வெறியுடன் பார்த்தார். 
“ஏய்.. இப்போத்தானே ஜுஸ் குடிச்ச..? அதுக்குள்ள தண்ணி கேட்கிற..?”
“ம்ம்.. ஜுஸ் தண்ணி மாதிரி இருக்குமா..? என்ன தான் இருந்தாலும் தாகத்துக்கு தண்ணி தான் பெஸ்ட்..” என்று  வியாக்கினம் பேசினார். 
“அதுக்கு முதல்லே தண்ணி குடிச்சிருக்கலாம் இல்லை, எதுக்கு ஜுஸ் குடிச்ச..?” என்று காய்ந்தார். 
“நான் உங்களையா கேட்டேன், என் மகளை தானே கேட்டேன்..” என்று வசந்தா மறுப்படியும் மகளை கூப்பிட போகவும், 
“ஏய்.. அவளை தொந்தரவு செய்யாத, அவ ரெஸ்ட் எடுக்கட்டும்.. நானே எடுத்து வந்து தரேன்..” என்று கடுப்படித்தவர்,  தண்ணி எடுக்க டைனிங் டேபிள் வந்தவர், 
தோட்டத்தில் அமர்ந்திருந்த ப்ரேம்  எப்போதும் போல மனைவியின் பாதத்தை எடுத்து தன் மடிமேல் வைத்து இதமாக சுளுக்கு எடுத்து  கொண்டிருப்பதை பார்த்து வேகமாக வந்த வழியே திருப்பி ஓடிவிட்டார். 
“தண்ணி  எங்க..?” என்று வசந்தா சட்டமாக கேட்க, 
“அது.. கொஞ்ச நேரம் இரு தரேன்..” என்றவரின் முகத்தில் சங்கடம் தெரிந்தாலும், அதை மீறிய மகிழ்ச்சி, மகளை கணவன் தாங்கும் உவகை உள்ளுக்குள் பொங்கமால் இல்லை. அவர் தினம் தினம் வேண்டுவதும் இதை தானே..!!
“என்னங்க.. இன்னும் தூங்க வராம என்ன செய்றீங்க..?” என்று விடியற் காலை ஆகியும் தூங்காமல் வேலை பார்த்து கொண்டிருந்த கணவனிடம் மது கேட்க, 
“அவ்வளவுதான் மித்ரா.. இன்னும் கொஞ்ச நேரம் தான் முடிஞ்சுடும்..” என்று  நெற்றியை தேய்த்து விட்டு கொண்டே வேலை பார்த்தவனின் தலை வலியை புரிந்து கொண்டவள், கிட்சன் வந்தாள். 
“என்ன மதுமா..? தூங்காம இந்த நேரத்தில  இங்க என்ன செய்ற..?”  என்று எப்போதும் விடியற் காலையிலே எழுந்து கொள்ளும் பழக்கம் கொண்ட வடிவேலு, மகளை பார்த்து கேட்டார்.
“இல்லைப்பா.. அவர் நைட் எல்லாம் தூங்காமலே வேலை பார்த்ததுல தலை வலிக்குது போல, அதான் காபி கலக்க வந்தேன்..” என்று பால் எடுக்க வெளியே செல்ல முயன்றவளை தடுத்த வடிவேலு, 
“நீ உட்காரு மதுமா.. நான்.. நான் கலந்து தரேன்..” என்று மகளின் முகம் பார்க்காமல் சொல்லி செல்ல, “இதுதான்  என் அப்பா..!!” என்று மது தந்தையை பெருமையுடன் பார்த்தாள். 
“இந்தா மதுமா..” என்று காபி கலந்து எடுத்து வந்து கொடுத்த தந்தையை பார்த்த மது, கலங்கிய கண்களுடன் எழுந்து அவரின் தோளோடு அணைத்து கொண்டாள்.  
நீண்ட நாட்களுக்கு பிறகு கிடைத்த மகளின் அணைப்பில் சிலிர்த்த வடிவேலு சந்தோஷத்துடன் தானும் மகளை அணைத்து கொண்டார்.
“ரொம்ப தேங்ஸ்ப்பா..  எல்லாத்துக்கும்..” என்று கண்ணில் நீர் தேங்க, முகம் சந்தோஷத்தில் மின்ன நன்றி சொன்ன மகளை பார்த்த வடிவேலு, 
“என்ன மதுமா..? அப்பாகிட்ட போய்  தேங்ஸ் சொல்ற..?” என்று கரகரத்த குரலுடன் சொன்னவர், 
“போ.. போய் காபி கொடு போ..” என்று மகளை அனுப்பிவைத்தார்.
இந்த ஆத்மார்த்தமான அன்பு தானே உண்மை..!!  என்றென்றும் நிலைத்தும் நிற்கும்..!!   இடையில் வரும் கானல் நீர் போன்ற  சில சில பிரச்சனைகளில் வலுவிழந்துவிடுமா என்ன..?
அடுத்தது ப்ரேம்..!!??

Advertisement