Advertisement

அவளே என் பிரபாவம் 26
“இங்க பாருங்க.. நம்ம வீட்டுக்கும் போக மாட்டேன்னு சொல்றீங்க.. எங்க வீட்லயும்  இருக்க முடியாது, வேறென்னதான் செய்ய..?” என்று மது கணவனை பார்த்து கேட்டாள். 
“அதான் நான் இப்போ தங்கிட்டிருக்கிற வீடு இருக்கில்லை, அங்க போகலாம்..” என்று ப்ரேம் சொன்னான். 
“போகலாம் தான், ஆனா அங்க எங்க அப்பா தங்கமுடியாதே..” என்று உதட்டை பிதுக்கி சொல்லவும், அவளை கண்ணை சுருக்கி பார்த்த ப்ரேம், 
“அதுக்கு இதுதான் ஒரே வழியாக்கும்..” என்றான். 
“ஆமா.. எனக்கு தெரிஞ்சு இதுதான் பெஸ்ட் வழி..” என்றாள் மது. 
“சரி.. அப்போ நீ இங்கேயே உங்க அப்பாவோட இருந்துக்கோ, நான் அப்பப்ப்போ வந்து உன்னை பார்த்துகிறேன்..” என்று முடிவாக சொன்னான். 
“இதுக்கு நீங்க யுஸ்ஸே போயிருக்கலாம்..” என்றாள் கிண்டலாக, 
“ஓய்.. என்னடி..?”
“பின்ன என்னங்க.. நீங்க என்னோட இருக்கனும்ன்னு தானே  யுஸ் ட்ரிப்பை  கேன்சல் பண்ணீங்க..? இப்போ இப்படி சொன்னா எப்படிங்க..?” என்று கேட்க, ப்ரேம் திரும்பி வடிவேலுவை பார்த்தவன், 
“அவரோட நான் எப்படி ஒரே வீட்ல.. கஷ்டம்.. முடியவே முடியாது.. புரிஞ்சுக்கோடி..” என்று ப்ரேம் மனைவியிடம் மறுக்க, அவனை தீர்க்கமாக பார்த்த மது, 
“எனக்கு உங்களோட இருக்கனும்ன்னு ஆசையா இருக்கு, இருப்பீங்களா..? மாட்டேங்களா..? அதை மட்டும் சொல்லுங்க..” என்று கேட்டுவிட, ப்ரேம் அடுத்த ஒரு மணி நேரத்தில் பொட்டி படுக்கையுடன் அந்த வீட்டில் குடியேறிருந்தான். 
“இப்போ சந்தோஷமா..?” என்று மனைவியிடம் சிடுசிடுத்தவன், 
“உங்க அப்பாவையும் இப்படி தான் கேட்டியா..?” என்று கேட்க, 
“கொஞ்சம் அப்படித்தான்..” என்று சொல்லிவிட்டு சென்றாள். 
“ஓஹ்..  அதுக்குத்தான் மனுஷன் இப்படி முகத்தை தூக்கி வச்சு உட்கார்ந்திருக்காரக்கும்..” என்று தோட்டத்திலே குடி கொண்டிருந்த மாமனாரை பார்த்தான். 
“என்னங்க.. சாப்பிட வரலையா..? என்று வந்த வசந்தாவை முறைத்து பார்த்த வடிவேலு, 
“எனக்கு தெரியும், நீ போ..” என்று கடுகடுத்தார். 
“அட.. சும்மா வாங்க, இப்படி சமைஞ்ச பொண்ணு மாதிரியே தோட்டத்திலே உட்கார்ந்தா எப்படியாம்..?” என்று வசந்தா கிண்டலாக சொன்னார். 
“உனக்கு ரொம்ப கொழுப்பு கூடி போச்சு, போ.. உன் சாப்பாடு எனக்கு ஒன்னும் வேண்டாம்..” என்று மறுத்தவரை வசந்தா சரிக்கட்டி சாப்பிட இழுத்து செல்ல, அங்கு ப்ரேம் அமர்ந்திருக்கவும், அப்படியே நின்றுவிட்டவர், 
“எனக்கு இப்போ வேண்டாம்.. நான் அப்பறமா சாப்பிட்டுகிறேன்..” என்று பின்வாங்க, 
“ஏன்பா..?” என்ற கேள்வியோடு மகள் வந்தாள். 
“இல்லை மதுமா.. பெருசா பசிக்கல, அதான்..”
“இருக்கட்டும்ப்பா.. பசிக்கிற வரையே சாப்பிடுங்க, டேப்லட் போடணும் இல்லை..” என்று கையோடு இழுத்து செல்ல, அவர்கள் இருவரையும்  கண் உருட்டி பார்த்த ப்ரேம், மனைவியை தன்  பக்கத்தில் அமரும்படி குறிப்பாக பார்த்தான். 
அவளோ அவனின் குறிப்பு புரிந்தும் கவனிக்காதது போல் வடிவேலுவை ப்ரேமின் பக்கத்தில் அமரவைத்துவிட்டு  இருவருக்கும் பரிமாற ஆரம்பித்துவிட்டாள். 
“என்னடா  இது..?” என்று மாமனாரும், மருமகனும் எழவும் முடியாமல், பக்கத்தில் அமரவும் முடியாமல்  தடுமாறவே செய்தனர்.
“இவ எல்லாம் வேணும்ன்னே செய்றா..?” என்று மனைவியை கண்டு கொண்ட ப்ரேம், உர்ரென்ற முகத்துடனே சாப்பிட்டு கொண்டிருந்தான். 
“எனக்கு போதும் மதுமா..” என்று மகள் மேலும் சாதம் வைக்க தடுத்த வடிவேலு வேகமாக சாப்பிட்டுவிட்டு ஓடிவிட, மது கணவனை பார்த்தாள். அவனும் அவளை தான்  பார்த்து கொண்டிருந்தவன், 
“நாங்க என்ன பிரிஞ்சு போன லவ்வர்ஸாடி..? எங்களை பேட்ச் அப் பண்ண..?” என்று நறநறத்தான்
“எனக்கென்ன தெரியும்..? உங்களுக்கு தான் முன் ஜென்ம பந்தம் ஆச்சே..?” என்று மது சிரிப்புடன் கணவனை சீண்டினாள். 
“நீ அடங்கவே மாட்டியாடி..? உனக்கு பலமுறை சொல்லிட்டேன், என்னை உங்க அப்பாவோட சேர்த்து வச்சு பேசாதன்னு..” என்று கடுப்புடன் சொல்ல, சிரித்த மதுமித்ரா, 
“நான் என்ன செய்யட்டும்…? நீங்க ரெண்டு பேரும் நடந்துகிறது அப்படித்தான் இருக்கு..” என்று மேலும் சீண்ட, எட்டி அவளின் கை பற்றி இழுத்து தன் மடியில்  அமரவைத்தவன், 
“போதும்டி.. ரொம்ப சீண்டின  கடிச்சு வச்சுடுவேன்..” என்று கடிந்து கொண்டே, அவளுக்கு ஊட்ட செய்தான். 
“போதும்..” என்று மது மறுத்த பின்பும், மேலும் இரு வாய் உணவு ஊட்டியவன்,   
“இது என் பேபிக்கு..” என்று அவளின் வயிற்றை வருடி கொஞ்சி கொண்டான். 
“மது..” என்று வசந்தா வரும் சத்தம் கேட்கவும், கணவனின் மடியில் இருந்து எழுந்து கொண்ட மது, அங்கு வந்துவிட்ட அம்மாவிடம்,
“என்னம்மா..?” என்று கேட்டாள். 
“நீ சாப்பிடணும் இல்லை. நேரம் ஆச்சே..” என்று சொல்ல, 
“நான் சாப்பிட்டேன்ம்மா..” என்ற மகளின் மலர்ந்த முகத்தில் வசந்தாவின் முகமும் மலர்ந்து போனது. 
“அப்பா.. எத்தனை நாள் ஆச்சு என் பொண்ணு இப்படி மனசார சிரிச்சு..?” என்று மனதில் பூரித்தவருக்கு  மருமகன் மேல் மேலும் பாசம் பொங்கியது. 
“என்னதான் நாங்க எல்லாம் இவளை  தலையில் வச்சு தாங்கினாலும், இவரை போல  வருமா..? இதுதான் உடைந்தபட்டவங்க.. இது எங்க அந்த மனுஷனுக்கு புரியுது..?” என்று கணவனை மனதில் தாளித்தார்.
“நீங்க சாப்பிட்டீங்களா அத்தை..” என்று ப்ரேம் கேட்க, வசந்தாவிற்கு முகம் பூரித்து போனது. 
“இப்போ சாப்பிடுறேன் மாப்பிள்ளை..” என்றார். 
“சரிங்க அத்தை..” என்றவன், எழுந்து சென்றுவிட, வடிவேலு உள்ளே வந்தார். 
“மதுமா.. நீ சாப்பிடு.. டைம் ஆச்சே..” என்று மகளிடம் சொன்னவர், 
“நீ என்ன பார்த்திட்டே இருக்க..? மதுமாக்கு சாப்பாடு கவனி..” என்று மனைவியிடம் அதிகாரமாக சொல்லவும், வசந்தா அவரை கண் இடுங்க பார்த்தவர் 

“அதெல்லாம் அவ புருஷன் பொறுப்பா சாப்பிட வச்சுட்டு தான் போனார், பின்ன எல்லோரும் எனக்கு கிடைச்சவங்க  மாதிரியா இருப்பாங்க..? என் மருமகன் கோடியில் ஒருத்தன்..” என்று கழுத்தை நொடித்து சொன்னார். 
“இப்போ எதுக்குடி தேவை இல்லாம பேசிட்டிருக்க..?” என்று ப்ரேமை அவருடன் சேர்த்து வைத்து நொடித்ததில் கோவம் கொண்டு மனைவியிடம் எகிறினார். 
“எது தேவை இல்லாதது..? என் மருமகன் உங்க ஆருயிர் மகளை பொறுப்பா கவனிச்சிக்கிறதா..?” என்று வசந்தா கேட்டு வைக்க, பதறிபோன வடிவேலு, 
“ஏய்.. நான் என்ன சொன்னா நீ என்ன சொல்ற..?” என்று மகளை பார்த்து சங்கடத்துடன் கேட்டார்.
“நீங்க சொன்னதை தான் நான் கேட்டேன்..?” என்று வசந்தா விடாமல் பேச, மது தான் தந்தைக்காக தாயை அடக்கினாள். 
“ம்மா.. போதும்..  நீங்க முதல்ல சாப்பிடுங்க..” என்று அம்மாவை பிடித்து சேரில் உட்காரவைத்தவள், பரிமாறவும், 
“நீ விடு மதுமா.. அவளே போட்டுப்பா, நீ போய் ரெஸ்ட் எடு போ..” என்று மகளுக்காக சொல்கிறேன் என்று மனைவியின் கோவத்திற்கு மேலும் ஆளானார். 
“ஆமா மதுமா.. நீ போ.. நானே சாப்பிட்டுகிறேன்..” என்று கணவனை வினயத்துடன் பார்த்தவாறே மகளை அனுப்பி வைத்தார். 
“மாப்பிள்ளை.. கிளம்பலாமா..?” என்று குழந்தையையும், திவ்யாவையும் பார்க்க  ஹாஸ்பிடல் கிளம்ப, வடிவேலு, 
“நான் வரல.. நீங்க முதல்ல போய்ட்டு வாங்க, நான் அப்பறம்  போயிக்கிறேன்..” என்றார். 
“ஏன்..? எங்களோட வந்தா என்னவாம்..?” என்று வசந்தா கேட்க, 
“மதுமா எப்படி தனியா இருப்பா..?” என்றார். 
“அதை பத்தி நீங்க ஒன்னும் கவலை பட வேண்டாம், ரவி இங்கதான் வந்துட்டு இருக்கான், நீங்க எங்களோடே கிளம்புங்க..” என்று கணவனை வம்படியாக இழுத்து வந்தார். 
“வா ரவி..” என்று காரை நிறுத்தி இறங்க வந்த மகனிடம் சென்ற   வசந்தா, “தம்பி என்ன செய்றான்..? தூங்குறானா..? திவ்யா எப்படி இருக்கா..?” என்று விசாரிக்க கடுப்பில் இருந்த வடிவேலு,  
“எல்லாத்தையும் இங்கேயே விசாரிக்க எதுக்கு ஹாஸ்பிடல் போகணும்..?” என்று மனைவியை பார்த்து காய்ந்தவர், 
“நீ உள்ள போய் ரெஸ்ட் எடு ரவி, மதுமாவை பார்த்துக்கோ..” என்றவர், அவர் காரை எடுக்க போக, ப்ரேம் சென்று அவனின் காரை ஸ்டார்ட் செய்தான். 
“ஆரம்பிச்சிட்டாங்களா..?” என்று மதுவும், ரவியும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டு  வசந்தாவை பார்க்க அவர் ஆளே இல்லை. 
“எங்க போனாங்க..?”  என்று பார்த்தவர்களுக்கு, 
“என்னங்க..” என்ற அவரின் சத்தம்  ப்ரேமின் காரில் இருந்து கேட்டது. 
“என்னங்க.. உங்களை தான்.. அங்க என்ன செய்றீங்க..? வாங்க வந்து மருமகன் கார்ல ஏறுங்க..” என்று கணவனை மிதப்பாக பார்த்தபடி  கத்தி கொண்டிருந்தார். 
“இவளை..” என்று பல்லை கடித்த வடிவேலு, “நான் இந்த கார்லே வரேன், நீ போ..” என்று சொல்ல, 
“ஒரே இடத்துக்கு ரெண்டு கார்ல பிரிஞ்சு போக நாம என்ன பகையாளிங்களா..? வாங்க.. நம்ம மருமகன் தானே.. அட வாங்க.. உங்க பொண்ணு வீட்டு கார்தான்..” என்று மேலும் சத்தமாக சொல்ல, வடிவேலு மகளை பார்த்து வேறு வழி இல்லாமல் ப்ரேமின் காருக்கு சென்றவர், மனைவியுடன் பின் சீட்டில் ஏறப்போனார்.  
“இங்க எங்க ஏறீங்க.. என் மருமகன் என்ன உங்களுக்கு டிரைவரா..? போங்க போய் முன்னாடி ஏறுங்க..” என்று கதவை மூடி கொள்ள, நொந்து போன வடிவேலு, முன் சீட்டில் ஏறிகொண்டார். 
வசந்தாவின் பேச்சில் பொங்கி வந்த சிரிப்பை அடக்கியபடி ப்ரேம் மனைவியை பார்க்க,  அவள் ஒருவிரல் நீட்டி “கொன்னுடுவேன்..” என்று மிரட்டி கொண்டிருந்தாள். 
“போடி..” என்று இதழசைத்தவன், காரை கிளப்பி கொண்டு செல்ல, ரவி அதுவரை அடக்கி கொண்டிருந்த சிரிப்பை  சத்தமாக சிரித்தான். 
“ண்ணா.. நீங்களுமா..?” என்று மது தந்தைக்காக பாவப்பட்டு அண்ணனிடம் கோவப்பட்டாள். 
“இல்லை மது.. அம்மா கிடைச்சிருக்கிற சேன்ஸை படுபயங்கரமா  யூஸ் பண்ராங்க, அதான்..” என்று மேலும் சிரிக்க, 
“ஆமாண்ணா.. அம்மா அப்பாவை காய்ச்சி எடுக்க நேரம் பார்த்துட்டே இருக்காங்க, பாவம் அப்பா..” என்று மது தந்தைக்காக பரிதாபபட்டாள். 
“இதுக்கேவா..? அம்மா இப்போதான் ஆரம்பிச்சே இருக்காங்க, போக போக அப்பாவை துவம்சம் பண்ணிருவாங்க, கடைசில ப்ரேமே மாமனாருக்கு சப்போர்ட் செய்ற அளவுக்கு அவரை தூர் வாரிடுவாங்க..” என்று சொல்லி சிரிக்க, வசந்தா அதை தொடர்ந்த நாட்களில் உண்மையாக்கி காட்டினார்.
“அய்யோ.. அம்மா.. போச்சே..” என்ற அலறலில் எல்லோரும் கிட்சன் நோக்கி ஓட,  வசந்தா காலை விரித்து பேவென்று  கீழே விழுந்திருந்தார். 
“ம்மா.. அத்தை.. வசந்தா..” என்று மூவரும் பதறி போய் அவரை தூக்க, எழ முடியாமல் இடுப்பை பிடித்து கொண்டு வலியில் கத்தினார். 
“ம்மா.. என்ன செய்து..? எங்க வலிக்குது..?” என்று மது அவரின் அருகில் நின்று கவலையுடன் கேட்க, 
“தெரியல மது..” என்று  வலியில் முணங்கியவரை பார்த்த ப்ரேம், அவரால் எழ முடியாது என்று புரிந்து கொண்டான். 

Advertisement