Advertisement

“என்ன ப்ரேம் நீங்க..? இத்தனை வருஷம் ஒர்க் செஞ்சு நம்ம கம்பெனியை பத்தி புரிஞ்சுக்கலையே..?” என்று கிண்டலாக  சொன்னார். 
“ஓஹ்.. என்ன புரிஞ்சுக்கணும், நான் போக முடியாதுன்னு சொன்ன என்மேல லீகல் ஆக்ஷன் எடுப்பீங்க அப்படிங்கறதையா..?” என்று நக்கலாக சிரித்தவன், 
“போனமுறையும்  என்னை நீங்க இப்படித்தான் மிரட்டுனீங்க இல்லை, ஆனா பாருங்க, உங்களுக்கு ஒன்னு தெரியல, நான் லாஸ்ட் டைம் யுஸ் போனது உங்க மிரட்டலுக்கு  பயந்து இல்லை, என்னால இங்க இருக்க முடியாத சூழல், கொஞ்சம் கமிட்மெண்ட்ஸ், அதோட நான் கஷ்டப்பட்டு உருவாக்கின ப்ராஜெக்ட்.. இது எல்லாம் தான்  காரணம்..”
“இந்த முறையும் அப்படி ஒரு சூழல் இருக்குதான், ஆனா போகமாட்டேன், எனக்கு  என் வைப்போட நான் இருக்கனும், சோ நீங்க வேற ஏதாவது ஆப்ஷன் இருந்தா பாருங்க..”
“நோ ப்ரேம், எந்த ஆப்ஷனும் இல்லை, நீங்க தான் போகணும்..” என்று மோகன் மேலதிகாரியாக சொன்னார். 
“முடியாது மோகன்.. நான் போகமாட்டேன், இந்த முறை நீங்க தலை கீழா நின்னாலும் என்னை யுஸ் அனுப்ப முடியாது..” என்று உறுதியாக மறுத்துவிட, மோகன் ப்ரேமை கோபத்துடன் பார்த்தார். 
“வேண்டாம் ப்ரேம், இதுக்கான விளைவுகள் மோசமா இருக்கும்..” என்று மேலதிகாரியாக எச்சரிக்கை செய்தவரை தீவிரமாக பார்த்த ப்ரேம், 
“என்ன மிரட்டுறீங்களா மோகன்..? இந்த வேலையை நம்பிதான்  நான் இல்லை.. என்மேல் நீங்க எந்த ஆக்ஷன் எடுத்தாலும் எனக்கு கவலை இல்லை,  இந்த செகண்டே நான் பேப்பர்  போட்டுட்டு போயிட்டே இருப்பேன்,  உங்களால என்னை எதுவும் செய்ய முடியாது, எனக்கு எந்த நஷ்டமும் இல்லை..”
“ஆனா உங்களுக்கு அப்படி இல்லை, நான் போயிட்டா உங்களால் அந்த ப்ராஜெக்ட்டை கன்டினியூ செய்யவே முடியாது, அது உங்களுக்கும் நல்லா தெரியும், பார்த்துக்கோங்க..” என்றவனை இயலாமையுடன் பார்த்த மோகன், 
“அப்போ இதுக்கு என்னதான் வழி..? வெள்ளைக்காரன் என்  உயிரை வாங்குறான்..” என்று வெடிக்க, 
“செந்திலை அனுப்புங்க, நான் அவங்க டைம்க்கு இங்கேயே உட்கார்ந்து  செந்திலை கைட் செஞ்சு ப்ராஜெக்டை முடிச்சு கொடுக்கிறேன், என்னால இதை மட்டும் தான் செய்ய முடியும், வேற ஆப்ஷன் கிடையாது..”
“ஏத்துக்கிட்டா ஏத்துக்கோங்க, இல்லை என்னை விடுங்க.. நான் போறேன்..” என்று தோள்களை குலுக்கி அலட்சியமாக சொன்ன ப்ரேமை பார்த்து பல்லை கடித்த மோகனுக்கு வேற வழி இல்லாமல் போக அதன்படியே தான் நடக்க வேண்டியதாகி போனது.
“அத்தை.. மித்ரா எப்படி இருக்கா..?”  என்று ப்ரேம் எப்போதும் போல போன் செய்து  வசந்தாவிடம் கேட்டான். 
மனைவி மேல் இருந்த கோவம் அவளுக்கு பேச தடுக்க, வசந்தாவிடமே மித்ராவை பற்றி கேட்டு தெரிந்து கொண்டான். அது போலே இன்றும் அழைத்து மனைவியை பற்றி விசாரித்தான்.
“இருக்கா மாப்பிள்ளை..” என்றார் கவலையாக. 
“என்ன ஆச்சு அத்தை..? என்று ப்ரேம் லேசான பயத்துடன் கேட்டான். 
“கொஞ்சம் வீக்கா இருக்கா மாப்பிள்ளை, சாப்பிடற எதுவும் தாங்கவே மாட்டேங்குது, உடனே வாமிட் எடுத்துடறா..” என்று வசந்தா மகளை பார்த்து கவலையாக சொன்னார். 
“இதுக்கு என்ன செய்யன்னு  நீங்க உங்க அக்காகிட்ட கேட்டிங்களா அத்தை..” 
“இன்னும் கொஞ்ச நாளைக்கு அப்படித்தான் இருக்கும் மாப்பிள்ளை.. அக்கா வாமிட் எடுத்தாலும் திரும்பி கொடுக்க சொல்ராங்க, மதுவாலத்தான் சாப்பிட முடியல, ரொம்ப சோர்ந்து  போயிட்டா..” என்று சொல்ல, ப்ரேமிற்கு மனைவியை பார்க்க வேண்டும்  போல் இருந்தது. 
“அத்தை.. வைங்க.. நான் வீடியோ கால் பண்றேன்..” என்று உடனே அவரின் மொபைலுக்கு அழைத்து மனைவியை காட்ட சொன்னவனுக்கு மனைவியின் உடல் மெலிவு கவலையை கொடுத்தது. 
“என்ன அத்தை இப்படி நாளுக்கு நாள் மெலிஞ்சுகிட்டே போறா..?” என்று வசந்தாவிடம் கேட்ட அவனின் குரலில் சோபாவில் அமர்ந்திருந்த மது திரும்பி போனில் தெரிந்த கணவனை பார்த்தாள். 
“ம்க்கும்.. இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி இருக்கார்ன்னு நானும் பார்க்கிறேன்..” என்று மனதில் கருவி கொண்டவள், சட்டென எழுந்து உள்ளே சென்றுவிட ப்ரேம் பல்லை கடித்தான். 
“வேணும்ன்னே பண்றா..” என்று கொதித்தவன், வசந்தாவிடம் பேசிவிட்டு வைத்துவிட்டான். 
அவன் மதுவை விட்டு  சென்னை வந்து இரண்டு மாதங்கள் கடந்து விட்டது. ஓரளவிற்கு பணமும் ரெடி செய்துவிட்டான், ஆனால் அதற்கு மேல் ரெடி செய்ய முடியாமல் ஓரிடத்திலே நிற்க, ப்ரேம் சற்று சோர்ந்து தான் போனான். 
சண்முகம்  அவன் மீட்டு கொடுத்த சொத்தை விற்று கொடுக்கிறேன் என்று சொன்னதற்கும் வேண்டாம் என்று  உறுதியாக மறுத்துவிட்டான். யுஸ் ம் போக  மாட்டேன் மறுத்து விட்டதால் , கம்பெனியில் அப்ரைசல் தரமாட்டேன் என்றுவிட்டார்கள். 
எந்த வழியும் இல்லாமல் அடைபட்டவனுக்கு மீதம் இருந்தது ஒரே வழிதான், அவன் மித்ராவிற்காக ஆசை ஆசையாக வங்கியிருந்த ப்ரைவேட் பீச் வில்லா. எந்த சூழ்நிலையிலும் மனைவிக்காக விற்காமல் வைத்திருந்தவன், இப்போது மனைவிக்காகவே விற்க முடிவெடுத்துவிட்டான். 
என்னதான் அவள் மேல் கடளவு கோவம் இருந்தாலும், அவளின் மீதான தேடலும் அதிகம் தான். இருவரும் சேர்ந்து வாழ்ந்த அந்த சில மாதங்களின் சந்தோஷத்தை நினைத்து ஏங்கி போனான். 
அவளின் அருகாமை வேண்டும் என்று துடிக்கும் மனதை சமாளிக்க முடியாமல் திணறியவன், முழு மூச்சாக  வில்லாவை  விற்கும் வேலையில் இறங்கி விட்டான். அதன்படியே அடுத்த  சில தினங்களில் அதை விற்று காசெடுத்தவன், இறுதியாக ரவிக்கு போன் செய்தான். 
“சொல்லுங்க ப்ரேம்..” என்ற ரவியிடம், 
“நீங்க கடையை எடுத்துகிறீங்களா ரவி..?” என்று இன்னொரு முறை கேட்டு கொண்டான். 
“இல்லை ப்ரேம்.. கடை உங்களுது தான்..” என்று ரவி உறுதியாக முடித்துவிட, 
“இல்லை ரவி.. நீங்க எதுக்கும் உங்க அப்பாகிட்ட  ஒரு வார்த்தை  கேட்டு சொல்லுங்க..” என்றான். 
“அவர் இதை  முதல்லே சொல்லிட்டார் ப்ரேம்..” என, சரி என்று வைத்துவிட்டவன், அடுத்து குமாருக்கும், சண்முகத்துக்கும் அழைத்து பேசிவிட்டு, உடனே ஊருக்கும் கிளம்பிவிட்டான். 
“இனியும் மித்ராவை விட்டு பிரிந்திருக்க முடியாது..” என்ற மனைவி மீதான தேடலில் மறுநாள் தந்தையோடு வடிவேலு வீடு நோக்கி சென்றான். 
“வாங்க சம்மந்தி, வாங்க மாப்பிள்ளை..” என்று அவர்களை வரவேற்ற வசந்தா, கணவனையும், மகளையும் அழைத்து வர சென்றார், ரவிக்கும் ப்ரேம் போன் செய்திருந்ததால் அவனும் அவசரமாக ஹாலுக்கு வந்தான்.
“வாங்க மாமா.. வாங்க ப்ரேம்..”  என்று வீட்டு ஆளாய் இருவரையும் வரவேற்றவன், ப்ரேம் நிற்பதை பார்த்துவிட்டு, “ உட்காருங்க ப்ரேம்..” என்றான். 
“இருக்கட்டும் ரவி..” என்று மறுத்துவிட்ட ப்ரேமின் பார்வை முழுதும், கீழிருக்கும் ரூம் வாசலிலே  நிலைத்திருந்தது. முதலில் வடிவேலு வர, அவருக்கு பின் வசந்தா  வர, இறுதியில் மது வந்தாள். 
“மது.. என்னம்மா இப்படி மெலிஞ்சுட்ட..?” என்று சண்முகம் மருமகளை பார்த்து கவலையுடன் கேட்டார். 
“அது கொஞ்ச நாள் அப்படித்தான் இருக்கும் மாமா, சரியாகிருவேன்..” என்று மது முகத்தை தெளிவாக வைத்து சொல்ல, சண்முகத்திற்கு நிம்மதியானது. 
“ண்ணா.. காபி எடுத்துகோங்க..” என்று வசந்தா சண்முகத்திற்கும், ப்ரேமுக்கும் கொடுக்க, இருவரும் அதை எடுத்து அங்கிருந்த டீபாய் மேல் வைத்துவிட்டனர். 
“சம்மந்தி.. இதுல மது கொடுத்த பணம் இருக்கு, அதோட  மது இத்தனை நாளா  வரைஞ்சு கொடுத்த டிசைனுக்கும் சேர்த்து மதிப்பு போட்டு பணம் இதிலே வச்சிருக்கோம்..” என்று வடிவேலுவிடம்  கொடுக்க,  வடிவேலுவின் முகத்தில் சங்கடத்தோடு கோவமும் சேர்ந்து கொண்டது. 
“என்ன சம்மந்தி நீங்க..? நான் அன்னிக்கே உங்ககிட்ட மன்னிப்பு கேட்டுட்டேன் இல்லை, அப்பறம் ஏன் இப்படி பணத்தை கொடுத்து என்னை கஷ்டபடுத்துறீங்க..?” என்று ப்ரேமை முறைத்து கொண்டே ஆதங்கத்துடன் சண்முகத்திடம் கேட்டார். 
“இருக்கட்டும் சம்மந்தி.. இது மதுவோட இத்தனை வருஷ கஷ்டம், அவளுக்கு சேர்றது தான் முறை.. வச்சிக்கோங்க..” என்று அவரின் கையில் திணித்துவிட்டபணத்தின் கணம் வடிவலுவின் முகத்தில் நன்றாக தெரிந்தது. 
அவர் அன்று கொட்டிவிட்ட வார்த்தைகளின் பாரத்தை இன்று உணர்ந்தவர், மகளை பார்த்தார். அவளோ தனக்கும், இதற்கும் சம்மந்தம் இல்லை என்பது போல வெளியே வெறித்து கொண்டிருக்க, வடிவேலு அப்பணத்தை டீபாய் மேல் வைத்துவிட்டார்.
“நீங்க ஒரு டைம் பார்த்துக்கிட்டிங்கன்னா நான் என் பொண்டாட்டியை கூடிட்டுகிட்டு கிளம்பிடுவேன்..” என்ற ப்ரேமை வடிவேலு முறைக்க, ரவி சங்கடத்துடன் பார்த்தான். இன்னும் வேணும் இவருக்கு.. என்று வசந்தா கணவனை எரித்து பார்த்து கொண்டிருந்தார். 
“ப்ளீஸ்.. ப்ரேம் இப்படி பேசி எங்களை சங்கடபடுத்தாதீங்க, நான் அன்னிக்கும் சொன்னேன், இன்னிக்கும் சொல்றேன், அப்பா பேசினது ரொம்ப தப்பு தான், அவருக்காக நான் உங்ககிட்ட மன்னிப்பு கேட்டுக்கிறேன், ப்ளீஸ்.. இந்த பணத்தை எடுத்துக்கோங்க..” என்று ரவி வேண்டுகோளாக சொல்ல, ப்ரேமின் முகத்தில் வலுவான மறுப்பு. 
“மாப்பிள்ளை.. நமக்குள்ள இந்த பணம் எல்லாம் வேண்டாம், தயவு செஞ்சு எடுத்துக்கோங்க..” என்று வசந்தாவும் கெஞ்சலாக சொல்ல, 
“இருக்கட்டும் அத்தை..” என்ற ப்ரேமின் பார்வை முழுவதும் மனைவியிடமே இருந்தது. அவளிடம் தெரிந்த வித்தியாசம் அவனை மிகவும் யோசிக்க வைத்தது. 
“ப்ரேம்.. ஏன் இப்படி செய்றீங்க..? அந்த பணத்தை எடுத்துக்கோங்க..” என்று மீண்டும் வற்புறுத்திய ரவியை பார்த்து மறுப்பாக தலை ஆட்டினான், 
“ரவி.. நான்  சொன்னது சொன்னது தான், அதை மாத்தவேண்டாம், விட்டுடுங்க, நான்  சொன்னது போல பணத்தை கொடுத்திட்டேன், இப்போ என் பொண்டாட்டியை கூட்டிட்டு போறேன்..” என்று பொதுவாக சொன்னவாறே  மனைவியின் முன் சென்று நின்றவன். 
“மித்ரா கிளம்பு போலாம்..” என, அவளோ  அவனை பார்க்காமல் வெளியே பார்க்கவும், அவளின் கன்னத்தை பிடித்து தன்னை பார்க்க செய்தவன், 
“உன்னைத்தான் சொல்றேன்.. கிளம்பு நம்ம வீட்டுக்கு போலாம்..” என்றான் அழுத்தமாக. 
“என்னை ஏன் நீங்க உங்க வீட்டுக்கு கூப்பிடுறீங்க..?”  என்று இதுக்கு தான் இத்தனை நாளா காத்திருந்தேன்.. என்று மனதில் கருவி கொண்டவள்,  கணவனை பார்த்து கூர்மையாக கேட்டாள். 
“எதுக்கு கூப்பிடுறேன்னா..? இது என்னடி கேள்வி..? என் பொண்டாட்டியை நான் கூப்பிடுறேன்..” என்று ப்ரேம் அவளை உறுத்து பார்த்து சொல்ல, விரக்தியாக சிரித்தவள், 
“உங்க பொண்டாட்டியா..?  நானா..? அதைத்தான் இப்போ பணம் கொடுத்து முடிச்சுட்டீங்களே..? இனி உங்களுக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை..” என்று பணத்தை கண் காட்டி சொல்ல ப்ரேம் மட்டுமில்லை எல்லோரும் அதிர்ந்துவிட்டனர்.
“எப்போ நான் உங்களுக்காக கொடுத்த பணத்தை திருப்பி கொடுத்து நான்  வேற தான்னு சொல்லிடீங்களோ அப்போவே உங்களுக்கும் எனக்கும் ஒன்னுமில்லை..” என்று மதுமித்ரா அழுத்தமாக சொல்ல, 
“என்ன பேசுற நீ..? நான் பணத்தை கொடுத்தது உங்க அப்பா பேச்சுக்காக..” என்று ப்ரேம் கோபத்துடன் சொல்ல,   வடிவேலுவை பார்த்த மது, 
“ப்பா. இது யாரோட பணம்..?” என்று கேட்டாள். 

Advertisement