Advertisement

அவளே என் பிரபாவம் 22
“என்ன..? என்ன சொல்றீங்க..?”  என்று திவ்யா நம்பாமல் தன் காதில் இருந்த போனை எடுத்து பார்த்துவிட்டு மறுபடியும் கேட்க,  
“உங்க வீட்டுக்கு வெளியேதான் இருக்கேன், வா..” என்று ரவி அதையே திரும்ப அழுத்தமாக  மனைவியிடம் சொன்னான். 
“இதோ.. இதோ வரேன்..” என்று திவ்யா பரபரப்பாக சொல்லவும், 
“ஏய்.. வேகமா எல்லாம் வராத, பொறுமையாவே வா..” என்று எச்சரிக்கை செய்து  வைத்துவிட, திவ்யா கண்ணில் பொங்கும் நீரை துடைத்தபடி ஹாலுக்கு வந்தவள், 
“ம்மா.. ப்பா.. அவர் வந்திருக்காராம்ப்பா.. வெளியே இருக்காராம், என்னை.. என்னை வர சொல்றாரு..”  என்று அழுகையுடன் சொல்லிவிட்டு வெளியே கணவனிடம் வர, சண்முகமும் மகளுக்கு பின்னே வந்தார்.  
“இவளை.. எதுக்கு மாமாவை கூட்டிட்டு வரா..?” என்று பல்லை கடித்தவன், அவர்கள் நெருங்கவும் முகத்தை சாதரணமாக வைத்தான். 
“வாங்க.. வாங்க மாப்பிள்ளை, வீட்டுக்குள்ள வாங்க மாப்பிள்ளை..” என்று சண்முகம் மருமகனை மரியாதையுடன் வீட்டுக்குள் அழைக்க, 
“இருக்கட்டும் மாமா.. நான் பெங்களூர் கிளம்பனும்.. திவ்யாகிட்ட சொல்லிட்டு போக வந்தேன்..” என்று உள்ளே வரமாட்டேன் என்று  மறைமுகமாக மறுத்துவிட, அப்பா, பெண்ணின் முகம் வாடித்தான் போனது. 
“ஒரு காபியாவது குடிக்கலாம்  இல்லை மாப்பிள்ளை..” என்று சண்முகம் வருத்தத்துடன் கேட்க, 
“வேண்டாம் மாமா..” என்றுவிட்டவன், மனைவியை சற்று கோவமாக  பார்க்க, முதல் முறையாக கணவனின் எண்ணம் புரிந்து கொண்டவள், 
“விடுங்கப்பா.. அவருக்கு நேரம் ஆச்சு போல.. நீங்க போங்க நான் பேசிட்டு வந்துடுறேன்..” என்று சொல்ல, சண்முகமும் மருமகனிடம் சொல்லி கொண்டு தளர்ந்த நடையுடன் உள்ளே சென்றவர், வாசலில் நின்றிருந்த மனைவியை  வெறுப்புடன் பார்த்தார். 
“நல்லா கண் குளிரா பாரு, வீட்டு மாப்பிள்ளை வீட்டுக்குள்ள வரமாட்டேன்னு  சொல்லிட்டு ரோட்டுல நிக்கிறார், இதுதான் நாம வாழ்ந்த லட்சணம்.. நம்ம பிள்ளைங்க வாழ்க்கையில  நாமளே பிரச்சனையை கொண்டு வந்திருக்கோம், யாருக்கும் நிம்மதியில்லை..” என்று வேதனையோடு சொல்லி செல்ல, வைஜெயந்தி குறுகி போய் நின்றார். 
மதுவை பற்றி தெரியாமல் பேசிவிட்டதே அவரை கூனி குறுக வைத்திருக்க, ப்ரேம் விலகி சென்றது அவரையே மொத்தமாக உருக்குலைத்து விட்டது. 
எந்த செயலும் செய்யும் போது அதன் வினை புரியாது, புரியும் போது அதை சரி செய்ய முடியாது, எல்லாம் முடிந்திருக்கும், அதே நிலை தான் வைஜெயந்திற்கு, 
அவரால் யாரிடமும் தலை நிமிர்த்து பேச முடியவில்லை, தன்னை தானே கீழே உணர்ந்தார் என்றுதான் சொல்ல வேண்டும். மகனின் மனதில் இவ்வளவு வேதனை, தனிமை, வெறுமை இருக்கும் என்பதே அவருக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக இருந்தது. 
ஒரு மனைவியாக மட்டுமில்லாமல் ஒரு அம்மாவாக தான் மிகவும் மோசமாக தோற்று விட்டதை புரிந்து கொண்டவரின் பேச்சும் சுத்தமாக நின்றுவிட்டது. எந்நேரமும் அழுகை, வெறுமை தான். இதுவரை அவர்  செய்துவிட்ட செயல்களின், பேச்சுக்களின் வீரியத்தை அவரே இப்பொது தான் உணர்ந்து கொண்டே இருக்கிறார், இன்னும் உணருவார் என்பது தான் உண்மை. 
“நான் பெங்களூருக்கு கிளம்புறேன்.. நீ பார்த்து பத்திரமா இருந்துக்கோ, வாக்கிங் போ, எப்போவும் போல சுபா பெரியம்மாக்கு போன் செஞ்சு பேசிட்டு  ரொட்டின் செக் அப் போய்ட்டு வந்துடு,  அவங்க கொடுக்கிற மெடிசனை கரெக்ட்டா எடுத்துக்கோ.. நல்லா சாப்பிடு, பேபியை பார்த்துக்கோ..” என்று  இறுக்கத்துடனே சொன்ன ரவி, மனைவியை பார்க்க, அவள் வேதனையுடன் கலங்கும் கண்களை மறைக்க போராடுவது தெரிந்தது. 
“ச்சு.. என்ன திவ்யா..?” என்று  ஆற்றாமையுடன் தலையை கோதி கொண்ட ரவிக்கும் மனைவியின் வேதனை  பாதிக்க தான் செய்தது,  இருவரும் விரும்பி மணந்தவர்கள் தானே,  பிரிவின் தாக்கம் இருவருக்குள்ளும் இருக்கத்தானே செய்யும்,
அதிலும் தங்களின் வருங்கால சந்ததியை எதிர்பார்த்திருக்கும் இந்நேரத்தில் இது போல வேதனைகள், மனசங்கடங்கள், பிரிவு இருவக்கும் வலியை கொடுக்காமல் இல்லை. 
“நான்.. எனக்கு.. எனக்கு..” என்று என்ன சொல்ல என்று கூட தெரியாமல் அழுகையில் திக்கிய திவ்யா கணவனை ஏக்கத்துடன் பார்த்தாள். 
“என்ன சொல்லு..?” என்று ரவி இறுக்கத்தை குறைத்து ஆறுதலாக கேட்க, 
“தெரியல..” என்றாள் உதடு பிதுக்கி அழுகையுடன். 
“ச்சு.. என்னடி..? ஏன் இப்படி பண்ற..?” என்று மேடிட்ட வயிற்றோடு மறுகும் மனைவியை பார்த்து ஆற்றாமையுடன்  கேட்க, அவள் மேலும் பொங்கி அழுதவள், 
“என்னை உங்களோடே நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு போயிடுறீங்களா..?” என்று கேட்டுவிட்டாள். 
“என்ன..?”  என்று ரவி திகைக்கும் போதே மேலும், 
“ப்ளீஸ்ங்க.. எனக்கு நம்ம வீட்டுக்கு போகணும், என்னால.. எனக்கு..  உங்களோட.. உங்களுக்கு..” என்று கணவன் மீதான தன் தேடலை சொல்ல முடியாமல் தவித்தவள், அவனின் கையை பற்றி கொண்டாள். 
“என்ன வீட்டுக்கா..? ஏன்..?என்ன ஆச்சு..? உடம்பு எதாவது செய்யுதா..? பேபி எப்படி இருக்கு..?” என்று ரவி பதட்டத்துடன் கேட்க, திவ்யாவிற்கு மேலும் தான் அழுகை பொங்கியது. 
தன் தேடலை அவன் புரிந்து கொள்ளவில்லை.. என்று நினைத்த நேரத்தில் அவளின் மனசாட்சி விழித்து கொண்டு, “அவன் அவ்வாறு நினைப்பதும் போலவும் நீ நடந்து கொள்ளவில்லை..” என்று குத்த, திவ்யா உதடு கடித்து தன் துக்கத்தை அடக்கினாள்.
“ஏய்..? என்னடி ஆச்சு..? உன்னைத்தானே கேட்கிறேன், பதில் சொல்லு..” என்று ரவி மனைவியை ஆராய்ந்து கேட்டான். 
“ஒன்னுமில்லைங்க.. நான் நல்லா இருக்கேன், பேபியும் நல்லா இருக்கு..” என்று சொல்ல, ஆசுவாசமடைந்த ரவி, 
“அப்பறம் என்ன..? ஏன் அப்படி சொன்ன..?” என்று யோசனையாக கேட்டவனுக்கு மனைவியின் வயிற்றை தொட்டு பார்க்க கை பரபரத்தது, ஆனால் ரோட்டில் நின்று கொண்டு எப்படி தொட..? என்று தவித்தவனின் கண்கள் தன்னுடைய காரை காணவும் மின்னியது. 
“வா.. காருக்கு போவோம்..” என்று மனைவியுடன் பின் சீட்டில் ஏறி கொண்டவன், அவளின் சேலையை விலக்கி வயிற்றை தொட்டு தன் மகவின் அசைவை உணர முயன்றான். 
“என்ன திவ்யா  குழந்தை அசையவே இல்லை..” என்று ஏக்கமாக கேட்டவன், தன் குழந்தையிடம் பேச ஆரம்பிக்க, சில நொடிகளில் லேசான அசைவு தெரியவும் ரவியின் முகம் மலர்ந்தது. 
“தங்க குட்டி அப்பாவை கண்டு பிடிச்சிட்டிங்களா..?” என்று கொஞ்சியவாறே மனைவியின் வயிற்றில் லேசாக இதழ் பதித்தவன், அடுத்த சில நொடிகள் தன் மகவை கொஞ்சி கொண்டான். 
“சரி.. பார்த்துக்கோ.. நான் கிளம்புறேன்..” என்று குழந்தையை கொஞ்சிவிட்டு தள்ளி அமர்ந்துவிட்ட கணவனை திவ்யா ஏக்கத்தோடு பார்த்தாள். 
“இதோ.. இப்போது கிளம்பிவிடுவான்..” என்ற உண்மை  அவளை நிலை கொள்ளாமல் தவிக்க செய்ய, மறுபடியும் தானே எட்டி அவனின் கையை பற்றி கொண்டவள். 
“நான் நிறைய தப்பு தான், என்னை வெறுத்துட மாட்டீங்கள்ல..?” என்று கணவனின் கையில்  முகம் புதைத்து அழுதாள்.
அவளின் ஏக்கம், தவிப்பு ரவிக்கு புரிய, விரக்தியாக சிரித்து கொண்டான். எல்லாம் முடிஞ்ச பின்னாடி வேதனை பட்டு என்ன செய்ய..? இதுக்குத்தான் நான் முதல்லிருந்தே தலை பாடா அடிச்சிகிட்டேன், எங்க என் பேச்சை கேட்டா..? என்று உள்ளுக்குள் மருகியவனுக்கு, ஒரே ஆறுதல், பிரச்சனை நடந்த அன்று மனைவி எதுவும் பேசாததே, அவளின் அம்மா பேசிய போதும் பயத்துடன் கையை பிசைந்தவாறே  தன்னை அழுகையுடன் பார்த்ததும் தான்,   
“திவ்யா, போதும்.. நிறைய அழுகிற..” என்று லேசாக கடிந்து கொண்டவன், அவளின் கையில் இருந்து தன் கையை விடுவித்து கொள்ள, திவ்யா தாவி அவனை அணைத்தே கொண்டாள். 
“இல்லை.. நீங்க என்னை  வெறுத்துட்டீங்க,  எனக்கு தெரியும், நான் ரொம்ப கெட்ட பொண்ணு.. உங்களுக்கு நான் கொஞ்சம் கூட பொருத்தம் இல்லை..” என்று புலம்பி இன்னும் அழுதாள். 
“ம்ப்ச்.. ஏன் இப்படி உனக்கு நீயே கஷ்டத்தை  கொடுத்துகிற திவ்யா..  கொஞ்சம்  ரிலாக்ஸா இரு, அதுதான் உனக்கும், குழந்தைக்கும் நல்லது..” என்று ரவி மனைவியை விலக்கி சொல்ல, அவள் மறுபடியும் கணவனை இறுக்கமாக அணைத்து கொண்டவள், 
“எனக்கு தெரியும் நீங்க என்னை வெறுத்துடீங்க, அதான் திவி கூப்பிடவே இல்லை, இப்போ கூட பாருங்க நான் தான் உங்களை கட்டிபிடிச்சிருக்கேன், நீங்க என்னை தொடவே இல்லை..” என்று ஏங்கி ஏங்கி அழுதவளை பார்த்த ரவிக்கு இவளது எல்லாம் எக்ஸ்ட்ரீம் தான், கோவம், அழுகை, காதல்..  என்ற பெருமூச்சுவிட்டவன், 
“திவ்யா முதல்ல நீ அழுகையை நிறுத்து, போதும், வந்ததில் இருந்து அழுதுட்டே இருக்கே..” என்று கண்டிப்புடன் மனைவியை விலக்கி அதட்டினான்.  
தான் வாய் விட்டு சொன்ன பிறகும் தன்னை திவி என்றும் அழைக்காமல், அணைக்காமல் இருந்த கணவனை ஏமாற்றத்துடன் பார்த்தாள் திவ்யா. 
“இங்க பாரு திவ்யா.. எல்லாம் உடனே சரியாகாது, அததுக்கு டைம் தேவைப்படும், நாம்தான் கொஞ்சம் பொறுமையா இருக்கனும், ஏன் இப்படி எல்லாத்திலும் அவசரப்படுற..?”  
“எல்லோருக்கும் அவங்கவங்க கோவம், வருத்தம் போக டைம் எடுக்கும், அதுக்கான ஸ்பேஸ் அவங்களுக்கு கொடு, நான் இதை எனக்கு மட்டுமில்லை, உங்க அண்ணன் ப்ரேமுக்கும் சேர்த்து தான் சொல்றேன்..” என்று கண்டிப்புடன் சொன்னவன், 
“நடந்ததை எல்லாம் நினைச்சு உன்னை நீயே ரொம்ப ப்ரெஷரைஸ் செஞ்சுக்கிறேன்னு நினைக்கிறேன், வேண்டாம், எதுவும் இவ்வளவு சீக்கிரம்  சரியாகாது, நீ இப்போதைக்கு உன்னையும், நம்மோட குழந்தையையும் பத்தி மட்டும் தான்  நினைக்கணும்..”
‘ நீ இப்படி அழுதுகிட்டே இருந்தா வயித்துல இருக்கிற நம்ம பாப்பா எப்படி ஹாப்பியா இருக்கும் சொல்லு, நம்ம குழந்தைக்காக நீ இத்தனை நாளா எவ்வளவு ஏங்கின..?” என்று மனைவியை பார்க்க, அவளுக்கு தன் தவறு புரிந்தது. 
“நான் முதல்லே சொன்னது போல நம்ம குழந்தையோட சந்தோஷமான வாழ்க்கைக்கு  நாமதான் பொறுப்பு, அதிலும் ஒரு அம்மாவா உன்னோட பொறுப்பு ரொம்ப ரொம்ப அதிகம், பார்த்துக்கோ, நம்ம பிரச்சனைகளை நாம பார்த்துக்கலாம், அதுக்காக குழந்தையை கஷ்டபடுத்தாத.. சரியா..?”  என்ற கணவனை பரிதவிப்புடன் பார்த்த திவ்யா. 
“நான் இனி ரொம்ப அழுகமாட்டேன், நம்ம குழந்தையை சந்தோஷமா வச்சுப்பேன்..”, என்று உறுதியாக சொல்ல, ரவிக்கு சற்று நிம்மதியானது. 
“ஆனா நான் உங்களையும் சந்தோஷமா வச்சுப்பேங்க, என்னை நம்புங்க, நான் மாறிட்டேன்..” என்று கணவனை பார்த்து ஏக்கத்தோடு சொன்னாள். 
“திவ்யா நீ மாறனும்ன்னு நான் நினைக்கவே இல்லை, எல்லாத்தையும் உணரணும்ன்னு தான் எதிர்பார்த்தேன்..”  என்று கூர்மையாக சொல்ல, திவ்யாவின் முகம் சுருங்கி விரிந்தது. 
“நீங்க சொல்றது புரியுது, நான்.. நான் முயற்சி பண்றேன்..” என்று யோசனையுடன் சொல்ல, அவளின் கையை பற்றி கொண்ட ரவி, 
“நான் திரும்பவும் சொல்றேன், ரொம்ப யோசிச்சு உன்னை நீயே வருத்திக்காத, விடு பார்த்துக்கலாம்..” என்று முடித்துவிட்டவன் நேரத்தை பார்த்தான். 
“ஓஹ்.. ரொம்ப நேரமாச்சு, நான் கிளம்பனும்.. பார்த்துக்கோ.. டெலிவரில பார்க்கலாம்..” என்று குறிப்பு கொடுத்தவன், ஆறுதலாக மனைவியை கையில்  தட்டி கொடுக்க, திவ்யாவிற்கு இதுவே போதும் என்றிருந்தது. 
இவ்வளவு நடந்த பிறகும் கணவன் தன்னை வந்து பார்த்தது திவ்யாவின் மனதை நிறைந்திருக்க,  மலர்ந்த முகத்துடனே தலை ஆட்டி அவனை வழி அனுப்பி வைத்தாள்.
“சொல்லுங்க  மோகன்..”  என்று வந்த ப்ரேமிடம், அவனின் மேலதிகாரி மோகன், 
“எப்போ யுஸ் கிளம்புறீங்க ப்ரேம்..?” என்று கேட்டார். 
“மோகன்.. நான் இந்த முறை யுஸ் போக போறதில்லைன்னு உங்களுக்கு போன வாரமே  சொல்லிட்டேனே..?” 
“நீங்க  அப்படி சொல்ல முடியாதே ப்ரேம், இது உங்களோட ப்ராஜெக்ட், நீங்கதான் செய்யணும்..” என்று மோகன் சொல்ல, லேசாக சிரித்த ப்ரேம், 
“நீங்க சொல்றது சரிதான் மோகன், இது என்னோட ப்ராஜெக்ட்தான். ஆனா  இது  என்னோட ப்ராஜக்ட் மட்டுமில்லை, எனக்கு கீழ செந்தில் இருக்கார், அவருக்கு கீழ என்னோட முழு டீமும் இருக்கு.. அவங்க எல்லோருக்கும் இந்த ப்ராஜக்ட் பத்தி A டு Z தெரியும்..” என்று அவரை குறிப்பாக பார்த்தான். 
“நோ.. நோ ப்ரேம், நீங்கதான்  போகணும், வேற யாரையும் அனுப்ப கம்பெனி ஒத்துக்காது..” என்று மோகன் அவசரமாக சொல்ல, ப்ரேமின் முகத்தில் இறுக்கம் அமர்ந்தது. 
“என் வைப் கன்ஸீவா இருக்கா, அவளை விட்டு நான் யுஸ் போக மாட்டேன்னு  ஒரு  வாரத்துக்கு முன்னாடியே, உங்களுக்கு நான்  இன்பார்ம் பண்ணிட்டேன் மோகன்..”, 
“சரிதான் ப்ரேம்.. நீங்க சொன்னேங்க தான், ஆனா கம்பெனில ஒத்துக்க மாட்டேங்கிறாங்களே.. நீங்கதான் போகணும் சொல்ராங்க..”  என்று மோகன் வினயத்துடன் சொல்ல, ப்ரேம் தீர்க்கமாக பார்த்தான். 
“நான் போக முடியாதுன்னு சொல்லிட்டா..?”

Advertisement