Advertisement

அவளே என் பிரபாவம் 18
“இன்னும் கிளம்பலையா மது..?”  என்று வடிவேலு அன்றைய நாளில் பத்தாவது முறையாக போன் செய்து கேட்டு கொண்டிருக்க, சங்கடத்துடன் சிரித்த மதுமித்ரா, 
“இதோ கிளம்பிடுவோம்ப்பா..”  என்றாள். 
“இதையேதான் காலையிலிருந்து  சொல்லிட்டே இருக்க, இன்னும் கிளம்பல..” என்று வடிவேலு மனத்தாங்கலாக சொன்னார். 
நாளை திவ்யாவின் வளைகாப்பு என்பதால் ப்ரேமும், மதுவும் ஊருக்கு செல்ல கிளம்பி கொண்டிருந்தனர். வடிவேலு நேரமே வரச்சொல்லி மகளை கிளப்பி கொண்டிருக்க, ப்ரேமா நேரம் கடந்து செல்ல தாமதித்து கொண்டிருந்தான். மது தான் எப்போதும் போல இருவரையும் சமாளித்து ஊருக்கு கிளம்பி கொண்டிருந்தாள். 
“என்னவாம்..? எத்தனை முறை போன் செய்வார்..? இப்படியே போன் செஞ்சிட்டிருந்தா எப்படி கிளம்பறதாம்..?” என்று வடிவேலுக்குகேட்க வேண்டுமென்று சத்தமாகவே ப்ரேம் சொல்ல, பதறிபோன மது கணவனை முறைத்தாள். 
“இல்லாட்டி மட்டும் அப்படி கிளம்பிடுவார்..” என்று  வடிவேலுவும் மருமகனின் குணம் தெரிந்து கடுப்பாக சொன்னார். காலையிலிருந்து அவரும் கிளம்பி வரச்சொல்லி போன் செய்து கொண்டே இருக்க, இவனும் கிளம்ப முடியாது என்று லேட் செய்து கொண்டே இருந்தான். 
“இதோ கிளம்பிட்டோம்ப்பா..” என்று இருவரும் ஆரம்பித்து விடக்கூடாது என்று வேகமாக போனை வைத்தவள், கணவனை முறைத்து பார்த்தாள். 
“ஏங்க இப்படி..?  ஊருக்கு போறதுக்காக மூணு நாள் லீவ் போட்டும் கிளம்பாம இங்கேயே இருந்தா அவர் கேட்க மாட்டாரா..?” 
“கேட்பார்.. ஏன் கேட்க மாட்டார், வளைகாப்பு சாக்கா வச்சு உன்னை அங்கயே  தங்கவைக்க பிளான் போடுறார் மனுஷன், விடமாட்டேனே.. நாளைக்கு வளைகாப்பு முடிஞ்சு கையோடு என்கூட கிளம்பி சென்னை வர, சொல்லிட்டேன்..” என்று அதையே திரும்ப திரும்ப சொல்லியவனை ஆயாசத்துடன் பார்த்த மது, 
“அதுக்கு முதல்ல ஊருக்கு போகணுங்க, இங்கேயே உட்கார்ந்திருந்தா எப்படி ரிட்டர்ன் வர்றது..” என்று கிண்டலாக சொன்னாள். 
“என்ன நக்கலா..? அப்பாவை பார்க்க போறேன்னு வாய் கூடுதோ..?” என்று ப்ரேம் கண்ணை இடுக்கி பார்த்து கேட்க, சமாதானமாக அவனை இடையோடு அணைத்தவள், 
“போதுங்க.. கிளம்பலாம்..”  என்றாள். 
“ம்ம்..” என்று தானும் அவளை அணைத்து கொண்டவனுக்கு மனம் ஏனோ குறுகுறுவென்றே இருந்தது. இரண்டு நாளாக ஏதோ ஒரு உறுத்தல், தவிப்பு  இருக்க மனைவியை இன்னும் நெருக்கமாக அணைத்து கொண்டான்
“என்ன ஆச்சு..?” என்று கணவனின் திடீர் இறுக்கமான அணைப்பில் மது கேட்க, லேசாக தன் அணைப்பை தளர்த்தியவன், 
“இல்லை.. ஊருக்கு போனவுடனே என் பொண்டாட்டி என்னை மறந்துட கூடாது   இல்லை,  அதான் விடாம இப்படி  இறுக்கமா பிடிச்சிகிட்டேன்..” என்று குறும்பாக சொல்வது போல சொன்னாலும், அவனின் தவிப்பும் அதில் இருக்கத்தான் செய்தது. மதுவிற்கு அவன் குறும்பாக சொல்வது மட்டுமே புரிய, விளையாட்டாக அவனின் நெஞ்சில் குத்தியவள், 
“அப்படி மறந்திடுவேன்.. நீங்கதான் என்னை மறந்து  உங்க மாமனாரை ரொமேன்டிக் லுக் விட ஆரம்பிச்சிடுறீங்க.. நான் இல்லைப்பா..” என்று அவளும் கிண்டலாக சொன்னாள். 
“அடங்கவே மாட்டியாடி.. எப்போ பார்த்தாலும் அந்த மனுஷனோட என்னை  சேர்த்து வச்சு பேசி கடுப்பேத்துற..” என்ற ப்ரேம் அவளின் இடையில் கிள்ள, வலியில் குதித்தவள். 
“ஸ்ஸ்.. உங்களை..”  என்று தானும் அவனை கிள்ள செய்ய, ப்ரேமும் சளைக்காமல் அவளை சீண்ட, முடிவு மாலையில்  தான் கிளம்ப முடிந்தது. 
“உங்களால பாருங்க எவ்வளவு லேட் ஆயிடுச்சுன்னு..?” என்று  காலையில் கிளம்ப வேண்டிய பயணம் மாலையில் தொடங்கிய கோவத்தில் மது பேச, ப்ரேம் அவளை பார்த்து உல்லாசமாக சிரித்தவன், 
“நான் என்ன செஞ்சேன், நீதான் என்னை கட்டிபிடிச்ச, நீதான் என்னை உசுப்பேத்தின, நான் இல்லை..” என்று கண்ணடித்து குறும்பாக சொன்னான்.
“நான் எங்க உங்களை  உசுப்பேத்தினேன்..?”  என்று மது கண்ணை விரித்து கோபத்துடன் கேட்டாள். 
“பின்ன  நீதானே என்னை இங்க கிள்ளின, இங்க கிள்ளின, இங்க கடிக்க கூட செஞ்ச..  சரி பொண்டாட்டிக்கு நம்மளை  தேடுது போலேன்னு தான்..”  என்று கிறக்கமாக அவள் பக்கம் சாய்ந்து கிசுகிசுக்க, வெட்கத்திலும் கோவத்திலும் சிவந்த மது 
“உங்களை..” என்று கார் ஒட்டி கொண்டிருந்தவனின் தோளில் அடிக்க, சிரித்தபடி வாங்கி கொண்டவன், 
“என்னடி.. என்னை இன்னும் தேடுற  போலயே.. பேசாம வீட்டுக்கு போயிடலாமா..?” என்று கண் அடித்து கேட்டான். 
“உங்ககிட்ட பேசி ஜெயிக்க முடியுமா..? போங்க..” என்று வெட்கத்தில் சிவந்த முகத்துடன் மது  தள்ளி அமரந்து கொள்ள, ப்ரேம் மனைவியின் வெட்கத்தில் மேலும் சீண்டியபடியே வர, அவர்களின் பயணம் முழுக்க காதல் தான். 
ஆனால் அது அவர்களின் வீட்டில் அடியெடுத்து வைக்கும் வரைதான் நிலைத்தது.
“நாளைக்கு பங்கஷனுக்கு வர்ற நேரமா இது..?”  என்று வைஜெயந்தி மகனும், மருமகளும் உள்ளே நுழையும் போதே சிடுசிடுப்புடன் பேச, மது பதில் சொல்ல முடியாமல் நின்றுவிட்டாள். 
“ஜெயா.. என்ன பேசுற நீ..? வாயை மூடு..” என்று சண்முகம் மனைவியை அதட்டியவர், 
“நீங்க போய் ரெப்ரஷ் ஆகி வாங்க..”  என்று பிள்ளைகளை ரூமிற்கு அனுப்பினார். 
“ஏய்.. என்னடி அம்மா பேசினதுல அப்செட் ஆகிட்டியா..?” என்று மதுவின் வாடிய முகத்தில் ப்ரேம் கேட்டான். 
“அவங்க உண்மையை தானே சொன்னாங்க, நாம சீக்கிரமே வந்திருக்கணும்..” என்று மது வருத்தத்துடன் சொல்ல, அவளை தட்டி கொடுத்த ப்ரேம், 
“அவங்க பேசணும்ன்னு பேசறாங்க மது,  நம்ம பக்க ஏற்பாட்டை எல்லாம் நான் ஆளுங்களை வச்சு முடிச்சிட்டேன், முன்னமே வந்திருந்தாலும் நமக்கு பெருசா ஒரு வேலையும் இருந்திருக்காது, அதனாலதான் லேட்டாவே கிளம்பலாம்ன்னு கிளம்பினேன்..” என்றவனுக்கு 
முன்னரே வந்திருந்தால் வைஜெயந்தி மதுவை ஏதாவது சொல்லி நோகடித்து கொண்டே இருப்பார் என்று தெரிந்ததாலே இந்த முடிவு.  அதை மனைவியிடம் சொல்லாமல் சமாதான படுத்தியவன், ரெப்ரெஷ் முடித்துவிட்டு மனைவியுடன் கீழிறங்கியவன். 
“ப்பா.. ஸ்வீட் வந்துடுச்சா..” என்று சண்முகத்திடம் கேட்டான்.
“இப்போதான்ப்பா வந்தது, நிறைய இருக்கிற மாதிரி இருக்கே ப்ரேம்..” என்று தந்தை சொல்ல,
“இருக்கட்டும்ப்பா.. எல்லோருக்கும்  கொடுத்துவிடனும்ன்னு தான் வாங்கியிருக்கேன், நம்ம வீட்டுக்கு வர முதல் குழந்தை.. பெருசாவே செய்யலாம்ப்பா..” என்று ப்ரேம் மகிழ்ச்சியுடன் சொன்னான். 
“சரிப்பா..” என்றவர், “மது.. சம்மந்தி வீட்டுக்கு கொண்டு போக வேண்டிய  சீர் எல்லாம் சரியா இருக்கான்னு பார்த்துடுமா..” என்று நாளை வடிவேலு வீட்டுக்கு கொண்டு செல்ல வேண்டிய சீர் பொருட்களை காட்டி சொன்னார். 
“அத்தை பார்த்திருப்பாங்க இல்லை மாமா..” என்று சங்கடத்துடன் மறுத்த மதுவை முகம் சுளித்து பார்த்த வைஜெயந்தி, 
“ஏன் அந்த சின்ன வேலை கூட செய்ய முடியாதா..? எல்லாம் நான்தான் செய்யணும்..” என்று பொரிய, ப்ரேம் அம்மாவை எரிச்சலாக பார்த்தான். அவள் மரியாதை நிமித்தம்தான் சொன்னாள் என்று ப்ரேமுக்கு புரிய, அம்மாவை பார்த்து பேச வாயை திறந்த நொடி, 
“அப்படி இல்லை அத்தை.. நீங்க எல்லாம் பார்த்துதான் வங்கியிருப்பீங்க, அதான்..” என்று பணிவாகவே தன் எண்ணத்தை சொன்னாள். 
“ஹாஹா..” என்று சிரித்த ப்ரேம், “உங்க அத்தை எல்லாம் ஒன்னும் பார்த்து வாங்கலை, எல்லாம் நானும், அப்பாவும் தான் வாங்கினோம், அவங்களுக்கு என்ன இருக்குன்னு கூட தெரியாது..”
“அவங்க எந்த வேலையும் செய்யல, நீ போய் செக் பண்ணு.. போ..” என்று கிண்டல் தோணியில் அம்மாவை பார்த்து சொன்னவன், அவரின் ஆத்திர பார்வையை பொருட்படுத்தாமல் தந்தையிடம் பேச ஆரம்பித்துவிட, மது எல்லாவற்றையும் சரிபார்த்து எடுத்து வைக்க ஆரம்பித்தாள்.
“வாங்க.. வாங்க..” என்று சம்மந்தி வீட்டாரை வரவேற்று உள்ளே அனுப்பிய  வடிவேலு, மகளின் கையை பற்றி கொண்டவர்,  
“இன்னிக்கு  என் பொண்ணா  எல்லா சடங்கையும் நீதான் செய்யணும் மது..” என்று ப்ரேமை பார்த்து வேண்டுமென்றே சொல்ல, உள்ளே செல்ல அடியெடுத்து வைத்த ப்ரேம், அவரின் பேச்சில்  மனைவியுடனே நின்றுவிட்டான். 
“நீங்க உள்ள போங்க.. நான் வரேன்..”  என்று தந்தையின் பேச்சில் கவலை கொண்ட  மது கணவனிடம் கெஞ்சலாக கேட்டாள். 
“நீ இப்போ வந்திருக்கிறது என் பொண்டாட்டியா..?  இந்த வீட்டு மகளா இல்லை, வா உள்ள  போலாம்..”  என்று ப்ரேம்  பிடிவாதமாக அங்கேயே நிற்க, வடிவேலு மருமகனை  நேருக்கு நேராகவே முறைத்தார். 
“அவ என் பொண்ணும்தான், இந்த வளைகாப்பு அவ அண்ணிக்கு, அவ பிறந்த வீட்டு சார்பா அத்தை  முறையில அவதான் எல்லாம் செய்யணும்..”  என்று நேரடியாக சொல்லிவிட, மது பயந்தே போனாள். 
“ப்பா.. என்ன பேசுறீங்க..? ப்ளீஸ்.. நான் ரெண்டு பக்கமும் செய்வேன் தான்ப்பா..” என்று அப்பாவிடம் கண்ணாலே கெஞ்சியவள், 
“வாங்க.. போலாம்..” என்று அவரின் கையை விடுத்து, உடல் இறுக நின்றிருந்த கணவனின் கையை பிடித்து கொண்டு உள்ளே சென்றுவிட, வடிவேலு மனதில் அடிவாங்கினார். 
ப்ரேமின் கோவத்திற்கு பயந்து எதாவது பிரச்சனை ஆகிவிட கூடாது என்று தான் மது அப்படி செய்தாள் என்பதை புரிந்து கொள்ள முடியாத வடிவேலுவுக்கு மகள் தன்னை விலக்கி வைப்பது போல் தோன்ற, மொத்த கோவமும் ப்ரேம் மேல் திரும்பியது. 
“கொஞ்ச நேரம் கூட என் மகளை என்கூட விடமாட்டாரா..? அப்படியென்ன மது அவருக்கு மட்டுமேங்கிற மாதிரி அதிகாரம் செய்றது, அவ என் மகள் இல்லையா..? அவ என் வாரிசு இல்லையா..? அவ உடம்புல ஓடறது என் ரத்தம் இல்லையா..? நான் இல்லாமலா என் மகள்..? எனக்குத்தானே முதல் உரிமை..?” என்று ப்ரேம் மேல் கொண்ட ஆத்திரத்தில் கொதித்தார். 
“என்னங்க.. இங்கேயே நின்னுட்டிங்க..? உள்ள பங்க்ஷன் ஸ்டார்ட் ஆயிடுச்சு.. வாங்க..” என்று வசந்தா கணவனை தேடி வெளியே வரும் வரை அங்கேயே கொதிப்புடன் நின்றிருந்தவர், சிடுசிடு முகத்துடனே உள்ளே சென்றார். 
திவ்யா மனையில் அமரவைக்கபட்டு சடங்குகள் ஆரம்பமாகியிருக்க, மது தான் பிறந்த வீட்டின் சார்பாகவும், புகுந்த வீட்டின் சார்பாகவும் சுழன்று கொண்டிருந்தாள். சில நொடி கூட நிற்க முடியாத அளவு ஓடி கொண்டிருந்த மகளை பார்த்த வடிவேலுக்கு மகள் கஷ்டப்படுவது போலே எண்ணம். 
“நீ என்ன நின்னுட்டே இருக்க, போய் மதுவுக்கு ஹெல்ப் பண்ணு போ..” என்று மனைவியை கோபத்துடன்  கத்தியே விட, வசந்தா கணவனை புரியாமல் பார்த்தபடி மகளுக்கு உதவிக்கு சென்றார். 
வைஜெயந்தி எந்த வேலையும் செய்யாமல் வம்பாக அமர்ந்திருக்க, மது ஒவ்வொன்றிற்கும் அவரிடம் சென்று கேட்டுவந்து செய்து கொண்டிருக்க, வடிவேலுக்கு மேலும் கொதித்தது. 

Advertisement