Advertisement

“உனக்கு எத்தனை முறைதான் சொல்றது..? மது விஷயத்துல தேவையில்லாம பேசாதன்னு, கேட்கவே மாட்டா இல்லை, அப்போ இப்படிதான்..” என்று சாதாரணமாக சொன்ன கணவனை வெறித்தவள், 
“அதுக்காக உங்க அப்பா இப்படி எல்லாம் பேசுவாரா..?” என்று எகிறினாள். 
“பேசாம.. அவர் இடத்துல நீ இருந்தாலும் இப்படித்தான் உன் பொண்ணுக்காக பேசியிருப்ப..” என, திவ்யா பதில் சொல்ல முடியாமல் நின்றாள். 
“இங்க பாரு திவ்யா.. நான் திரும்ப திரும்ப சொல்றேன், மது அப்பா உறவு வேற, அதுல வீம்புக்காக தலையை கொடுக்காத,  அப்பறம் உனக்குத்தான் கஷ்டம்.. பார்த்துக்கோ..” என்று சென்றுவிட, திவ்யா பொறுமிய மனதுடன் வையந்திக்கு அழைத்து புலம்பினாள். 
“விடு திவ்யா… இதெல்லாம் இன்னும் எத்தனை நாளைக்கு நாமளும் பார்க்கதானே போறோம், நீ எதுக்கு இதுக்காக எல்லாம் டென்சன் பட்டுக்கிற, விடு பார்த்துக்கலாம்..”
“நம்மளை மீறி எல்லாம்  எங்க போயிட போறாங்க, நமக்குன்னு ஒரு நேரம் வரும், அப்போ பார்த்துக்கலாம் இவங்களை..” என்று அவரும் மகளுடன் சேர்ந்து கருவிகொண்டவர், 
“இன்னும் ஒன்னிரண்டு மாசத்துல உனக்கு ஏழு மாசம் ஆரம்பிச்சுரும், அப்போவே உனக்கு வளைகாப்பு வச்சு நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வந்துடுறேன், நீ கவலைப்படாத..” என்று மகளை தேற்றி போன் வைத்தார். 
********************************
“என்ன அதிசயமா சார் இவ்வளவு சீக்கிரம் வந்திருக்கார்..?”  என்று மாலை நேரத்தில் பொட்டிக்கிற்கு வந்த  கணவனை பார்த்த மது ஆச்சரியமாக கேட்டாள். 
“ஏன் வரக்கூடாதா..?” என்ற ப்ரேம் ரிலாக்ஸாக சேரில் அமர, கணவனுக்கு காபியை  வரவைத்து கொடுத்தாள். 
“ரிப்போர்ட் சப்மிட் செஞ்சுட்டிங்க போல..” என்று மது கேட்கவும், 
“ம்ம்.. இன்னிக்கு தான் முடிஞ்சது..”  என்று காபியை குடித்து வைத்தவன், “கிளம்பு போலாம்..” என்றான். 
“இருங்க.. ஒரு பைவ் மினிட்ஸ், இந்த டிசைனை மட்டும் முடிச்சிட்டு வந்துடறேன்..” என்ற மனைவியிடம் ஆமோதிப்பாக தலை ஆட்டிய ப்ரேம், வெகு நாட்களுக்கு பிறகு மனைவியை ஆசை தீர பார்த்தான்.  
சென்னை வந்ததில் இருந்து வெளிநாட்டில் செய்த ப்ராஜெக்ட் ரிப்போர்ட், அடுத்த கன்டினியூஷன் ப்ராஜெக்டிற்கான வேலை என்று  லீவே இல்லாமல் தொடர்ந்து ஓடி கொண்டிருந்தான். நடுஇரவு வருபவன், மறுநாள் காலையிலே ஓடி விடுவான், 
மதுவிடம் சேர்ந்தார் போல பத்து நிமிடங்கள் பேசுவதே பெரிதாகி போனது. ஆனாலும் மது கணவனின் ஓட்டத்தை புரிந்து வழிவிட்டு நின்றுவிட, ப்ரேம் வீட்டின் டென்சன் இல்லாமல் நல்லபடியாக அவனின் வேலையை சீக்கிரமே முடித்து கொடுத்துவிட்டு வந்திருந்தான். 
‘இவள் பொறுமைசாலின்னு  தெரியும், ஆனா இந்தளவு என்னை புரிஞ்சு எனக்காக பொறுமையா இருந்தது..” என்று மனைவியை காதலாக பார்த்த ப்ரேமின் பார்வையில்  தடுமாறிய மது, 
“ச்சு.. கொஞ்சம் உங்க பார்வையை வேற பக்கம் திருப்புறீங்களா..?” என்று நிமிர்ந்து கணவனை பார்த்து அதட்ட, 
“முடியாது.. நானே ரொம்ப நாள் கழிச்சு இப்போதான் என் பொண்டாட்டியை பார்க்கிறேன்..” என்றவாறே  மேலும் தீவிரமாக பார்த்த கணவனின் பார்வையை எதிர் கொள்ள முடியாமல், டிசைனை எடுத்து ஓரங்கட்டியவள், 
“வாங்க..கிளம்பலாம்..” என்று கணவனுடன் கிளம்பிவிட்டாள். 
“நைட் டின்னருக்கு என்ன பிளான்..?” என்று ப்ரேம் கார் ஓட்டியபடி கேட்க, 
“என்ன செய்யலாம் சொல்லுங்க..” என்றாள் மது  கணவனை அறிந்தவளாக. 
“வழியிலே முடிச்சிடலாம்..” என்று  இரவு உணவை வழியிலே முடித்து கொண்டவர்கள் வீடு திரும்பினர். மது ரூம் சென்று ரெப்ரெஷ் செய்து வர, ப்ரேம் அவளின் கையில் காபியை கொடுத்தவன், தான் ரெப்ரெஷ் ஆக சென்றான். 
மாலை வேலை இருந்ததால் அவனுக்கு மட்டும் தான் காபியை வரவைத்து கொடுத்திருக்க, இப்போது அவன் தனக்காக காபி கொடுத்துவிட்டு செல்ல, மது நிறைந்த மனதுடன் காபியை ரசித்து குடிக்க ஆரம்பித்தாள். 
இது போல சில சில செயல்களே போதும் மனைவியை மகிழ்ச்சியுடன் வாழவைக்க, அதை ப்ரேம் திருமணம் ஆன நொடியிலிருந்து  சரியாக  செய்து வர, மது கணவனின் மேல் இன்னமும் காதலாகி போனாள். 
அவன் அவளுடன் இருக்கும் சில நிமிடங்களிலும் அவனின் காதலை உணரவைக்க தவறுவதே இல்லை, எதோ ஒரு வார்த்தையில், செயலில், அக்கரையில் என மனைவி உடன் இருக்கும் நேரங்களில் அவளை முழுவதுமாக  தாங்கினான் என்றுதான் சொல்ல வேண்டும். 
“எப்படி அவர்கிட்ட சண்டை போட்டு வருஷகணக்கா பார்க்காம இருந்தேன், பேசாம இருந்தேன்.. நானா அது..? இல்லை இதுதான் நானா..?” என்று முன்னர் இருந்த மதுவுக்கும், இப்பொது இருக்கும் மதுவுக்குமான வித்தியாசத்தில் மதுவே மலைத்து போனாள். 
முதல் ஆறு மாதங்களை தவிர்த்து அவள் பார்த்தது எல்லாம் ஒரு கோவக்கார, முரட்டு தனமான ப்ரேமைதான், இன்னும் சொல்ல போனால் அவள் விஷயத்தில் முழுதும் சுயநலமாக இருந்த ப்ரேமை கண்டு நிறைய வேதனையும் பட்டிருக்கிறாள். 
ஆனால் அது எல்லாம் போன ஜென்மமோ எனும் அளவு அவளின் வாழ்க்கை வண்ண மையமாக சென்று கொண்டிருந்தது. இந்த சில நாட்களாக அவனால் அவளுடன் இருக்க முடியாமல் போனாலும், அவளை தொடர்வதை அவன் விடவில்லை, 
அவளின் தேவைகள், வீட்டு தேவைகள் என முழுதும் அவன்தான் செய்தான், மறுத்தாலும் கண்டுகொள்ளாமல் இது போல ஏதாவது செய்பவன் மேல் மது பித்தாகமல் இருக்க முடியுமா..? 
“என்ன மேடம் ரொம்ப தீவிரமான யோசனை போல..?” அவளின் பக்கத்தில் அமர்ந்தவனின் கையோடு தன் கையை கோர்த்து கொண்டவள், அவன் தோள் மேல் சாய்ந்து கொண்டாள். 
“என்ன ஆச்சு..? என்னை ரொம்ப மிஸ் பண்ணியா..?” என்று ப்ரேம் அவளின் தோளோடு அணைத்து கேட்க, 
“இல்லை..” என்று முதலில் தலை ஆட்டியவள், பின்பு “ஆமாம்..” என்று தலையை ஆட்டவே, லேசாக சிரித்த ப்ரேம், 
“என்னடி பதில் இது..?” என்றான். 
“இதுதான் பதில்..” என்ற மதுவின் போன் ஒலிக்க எடுத்து பார்த்தவள், வடிவேலுவின் என தெரியவும், கணவனை கெஞ்சலாக பார்த்தாள். 
“பேசித்தொலை.. ரெண்டு நிமிஷம் தான்..” என்று எரிச்சலாக சொன்னவன், தன் மொபைலில் மூழ்கிவிட, மது தந்தையிடம் பேச செய்தாள். 
“சொல்லுங்கப்பா.. வீட்லதான் இருக்கோம்,  இப்போதான் வந்தேன்ப்பா, வேலை எல்லாம் முடிஞ்சுதுன்னு சீக்கிரமா வந்துட்டார்..” என்று சொல்லி கொண்டிருக்க, திரும்பி முறைத்தவன், போனை பிடுங்க வர, வேகமாக கையை இழுத்து கொண்டாள். 
“சாப்பிட்டோம்ப்பா.. ஆமாம்ப்பா ஹோட்டல்தான்..” என்று மேலும் சில நிமிடங்கள் பேசியே வைக்க, ப்ரேம் அவளை கடுப்பாக பார்த்தான். 
“என்னடி உங்க அப்பா ஓவரா என்னை பத்தியே கேள்வி கேட்டுட்டு இருக்கார், இவர் என்னமோ பொண்டாட்டி கூடவே இருக்கிற மாதிரி, ஒருநாள் கூட விடாம கடையில் போய் உட்கார்ந்துட்டு என்னை குடைஞ்சிட்டு இருக்காரா..?” என்று பொரிந்தவனை பார்த்து மது தலையிலே கைவைத்து கொண்டாள். 
“அச்சோ.. போதும் விடுங்க, அவர் சாதாரணமாதான் கேட்டார்..” என்று மது அவனின் தோள் சாய்ந்து கன்னம் பிடித்து கெஞ்சிய பிறகே நிறுத்தியவன், 
“நான் கொஞ்சம் சந்தோஷமா இருந்தா உங்க அப்பா மூக்குலே வேர்த்துருமே. வந்துடுவார் கரடி வேலை பார்த்துகிட்டு..” என்று மேலும் பொரிய, கிண்டலாக சிரித்த மது,  
“இந்த டெலிபதி எல்லாம் உங்க ரெண்டு பேருக்கும் தான்பா நல்லா  வொர்க் அவுட் ஆகுது, இதுக்கு பேர்தான் ஜென்ம பந்தமோ..?” என்று சிரிப்புடன் சீண்ட, அவளின் காதை பிடித்து இழுத்தவன்,  
“எத்தனை முறை சொல்றேன்..? அவரையும் என்னையும் சேர்த்து பேசத்தான்னு, கேட்க மாட்ட இல்லை,  போ உனக்கு கிப்ட் கேன்சல்..” என்று எழுந்து ரூமிற்கு செல்ல, பின்னாலே சென்ற மது, 
“ஆமா.. பொல்லாத கிப்ட், எப்படியும் கொலுஸாதான் இருக்கும்..” என்று குறும்பாக சொன்னபடி பெட்டில் குப்புற படுத்திருந்த கணவனின் மேல் ஏறி படுத்து கொண்டாள். 
“ஏய்.. இறங்குடி கீழ, என் கிப்டை கிண்டல் செஞ்சுட்ட இல்லை..” என்று  முறுக்கியவனை கண்டு கொள்ளாமல் சுகமாக படுத்திருத்தவள், 
“பின்ன..? இதுவரைக்கும் நீங்க எனக்கு வாங்கி கொடுத்த கொலுசுல ஒரு கடையே வைக்கலாம்.. எப்போ பாரு கொலுசுதான்..” என்று மேலும் சீண்ட, அவளை அப்படியே பெட்டில் தள்ளி விட்டவன், அவள் மேல் தான் ஏறி முழுவதுமாக படுத்து கொண்டான். 
“அய்யோ.. மூச்சு முட்டுது, இறங்குங்க.. ப்ளீஸ்.. இனி கிண்டல் செய்ய மாட்டேன்.. ப்ளீஸ்..” என்று மூச்சு விட முடியாமல் திணறிய மனைவியை நக்கலாக பார்த்தபடி கீழறங்கியவன், 
“இனி என் கிப்டை கிண்டல் பண்ணுவ..?” என்று மிரட்ட வேறு செய்தான்.

“கிண்டல் செய்ய மாட்டேன், போடவும் மாட்டேன்.. போங்க..” என்று கோவமாக திரும்பி படுத்தவள், நிமிடங்கள் கடந்தும் தன் பக்கத்தில் சத்தமே இல்லாமல் போக, திரும்பி பார்த்தாள். 
அதுவரை கண்களில் சிரிப்புடன் மனைவியை பார்த்திருந்தவன், அவள் திரும்பவும் சத்தமாகவே சிரித்துவிட, பொங்கியெழுந்த மது அவனை அடிக்க, கையை பிடித்து தடுத்தவன், தன்னோடு சேர்த்து அணைத்துகொண்டான். 
“விடுங்க.. என்னை விடுங்க..” என்று திமிறியவளை சாதரணமாக அடக்கி, தன் கைக்குள் வைத்து கொண்டவன், 
“போதும் அடங்குடி.. ரொம்பத்தான்..” என்று செல்லமாக அதட்ட, மது உதடு சுழித்து அவன் நெஞ்சின் மீது சாய்ந்து கொண்டாள். 
“ஏதோ பெருசா கிப்ட்  இருக்குன்னு எல்லாம்  சொன்னேங்க.. எல்லாம் பொய்யா..?” என்று மதுவே சில நிமிடங்கள் கழித்து கேட்க, சிரித்த ப்ரேம், 
“யாரோ.. வேணாம், போடமாட்டேன்னு எல்லாம் சொன்னாங்க..” என்று மனைவியை கிண்டல் செய்தவாறே எட்டி பக்கத்தில் வைத்திருந்த பாக்ஸை எடுத்தான். 
“அதே கொலுசுதானே..” என்ற மதுவின் முன் கொலுசை தொங்கவிட, அதன் அழகில் மது மயங்கித்தான் போனாள். 
ஒற்றை முத்து வைத்து இரண்டு அடுக்காக வளைந்து வளைந்து சேரும் இடங்களில் எல்லாம் மெருன்  கலர் எனாமல் டிசைன் செய்து பார்க்கவே மதுவிற்கு அவ்வளவு பிடித்திருந்தது. 
“பிடிச்சுருக்கு போலயே..” என்றவன், எப்போதும் போல தானே அவளின் பாதங்களில் கொலுசை மாட்டிவிட, மது தன் பாதங்களில் மின்னிய கொலுசையே மகிழ்ச்சியுடன் பார்த்தாள். 
“ரொம்ப நல்லா இருக்குங்க..” என்று விரலால் வருட, 
“இது அங்க டார்ஜிலிங்ல பார்த்தேன், ரொம்ப பிடிச்சிருந்தது, அதான் இதே போல செய்ய சொல்லி போனவாரம் ஆர்டர் கொடுத்திருந்தேன், இன்னிக்கு தான் வந்தது..” என்றவனின் இதழ்கள் அவளின் பாதத்தில், விரல்களில் ஈரம் செய்ய, மது எப்போதும் போல கணவனின் காதலில் மயங்கித்தான் போனாள். 

Advertisement