Advertisement

“வாங்கண்ணா..” என்று ஹாலில் அமர்ந்திருந்த குமாரை வரவேற்றவளை முகம் சுளித்து பார்த்த வைஜெயந்தி, 
“முதல் நாளே பொழுது சாயற வரைக்கும் தூங்கினா விளங்குனா மாதிரிதான்.. என்ன செய்ய..? நான் வாங்கி வந்த வரம் அப்படி..?” என்று சத்தமாகவே முணுமுணுத்து  கொண்டே  உள்ளே செல்ல, குமார் சங்கடத்துடன் மொபைலை பார்த்தபடி குனிந்து கொண்டான். 
குமாரின் முன் வைஜெயந்தி இப்படி பேசுவார் என்று எதிர்பார்க்காத மதுவும்  குமாரின் முகம் பார்க்க முடியாமல் தடுமாறவே செய்தவள், “இதோ வரேண்ணா..” என்று கிட்சனுக்கு சென்றாள்.
“என்ன ப்ரேமோட அம்மா இப்படி பேசுறாங்க..?” என்று நினைத்தபடி அமர்ந்திருந்த குமாரிடம் மது காபியை நீட்ட, வாங்கி கொண்டவன்,
“தேங்கஸ்மா.. ப்ரேம் என்ன செய்றான்..?” என்று நண்பனை கேட்டபடியே காபியை குடித்தவனிடம், 
“வந்துடுவார்ண்ணா..” என்றவளுக்கும் காலையில் இருந்து சாப்பிடாத பசி தெரிய, தனக்கும் காபி எடுத்து குடிக்க ஆரம்பித்தாள்.  
“வா குமார்..” என்றவாறே வந்த ப்ரேம் மனைவியின் பக்கத்தில் அமர்ந்து அவளிடம் இருந்து காபியை வாங்க வர, குமாரை காட்டி கண்ணாலே மிரட்டினாள் மனைவி. 
“பசிக்குதுடி..” என்று ப்ரேம் சோர்வாக சொன்னான். அவனும்தான் ஒன்றும் சாப்பிடவில்லையே..? 
“நீங்க பேசிட்டு இருங்க.. நான் இதோ  வந்துடுறேன்..” என்று கணவனின் பசி உணர்ந்து கிச்சனுக்கு சென்ற மது, என்ன இருக்கு..? என்று பார்க்க, மதியம் செய்த உணவு இருந்தது. 
எல்லாவற்றையும் சூடு செய்தவள்,  காவேரியின் துணையுடன் பஜ்ஜியையும் போட்டு முடித்தாள். ஒரு பிளேட்டில்  பஜ்ஜியை வைத்து வைஜயந்திக்கு  கொடுத்தனுப்பியவள், குமாரையும், ப்ரேமையும் சாப்பிட அழைத்தாள். 
“எனக்கு வேண்டாம்மா..” என்று மறுத்த குமாருக்கு பஜ்ஜியை கொடுத்தவள், கணவனுக்கு பரிமாற, 
“நீயும் உட்காரு.. நாமளே போட்டுக்கலாம்..” என்று மனைவியை தன் பக்கத்தில் அமரவைத்து கொண்ட ப்ரேம், குமாரிடம் பேசிகொண்டே சாப்பிட்டு முடித்தனர். 
“மகனும் சாப்பிடல, மருமகளும் சாப்பிடல.. இவங்களை  கொஞ்சமும் கண்டுக்காம ப்ரீமோட அம்மா என்ன செய்றாங்க..? அவங்க மதுகிட்ட பேசுன பேச்சும் சரியில்லையே..? ரவி அன்னிக்கு சொன்னது உண்மையோ..? என்ற குமாரின் சிந்தனையை கலைத்தான் ப்ரேம்.
“அப்பறம் குமார் டீலரை விசாரிச்சிட்டியா..? என்ன  சொல்ராங்க, எப்போ மீட் பண்ண வசதிபடுமா..?” என்று  கேட்க, மதுவை பார்த்த குமார்,  
“பேசிட்டேன் ப்ரேம், எப்போன்னு சொல்றேன் சொல்லயிருக்கார்..” என, 
“ஓஹ்.. சரிவிடு, என்கிட்டேதான்  அவர் நம்பர் இருக்குல்ல, நானும் ஒருமுறை  பேசிடுறேன்..” என்று உடனே டீலருக்கு அழைத்துவிட, மதுவும், குமாரும் ஒருவரை ஒருவர் பதட்டத்துடன் பார்த்துகொண்டனர். 
“சார்.. நான் ப்ரேம் பேசுறேன், சண்முகத்தோட மகன்..” என்று பேசியவாறே, சோபாவிற்கு செல்ல, மதுவும், குமாரும் டைனிங் டேபிளிலே இருந்துவிட்டனர். 
“மது.. உன் ப்ரண்ட்கிட்ட பேசிட்டியா..?” என்று கேட்க, 
“பேசிட்டேன்ண்ணா, சமாளிச்சிரலாம்..” என்றாள் மது.
“அவர்கிட்ட பேசிட்டேன், அவங்களே இந்த வாரம் சென்னை வராங்களாம், அப்போ மீட் பணறேன்னு சொல்லியிருக்காங்க..” என்ற ப்ரேம், குமாரிடம் பொதுவாக பேசிக்கொண்டிருக்க, ரவி வசந்தாவுடன் அங்கு வந்தான். 
“வாங்கண்ணா.. வாங்கம்மா..” என்று மது சந்தோஷத்துடன் பிறந்த வீட்டு ஆட்களை வரவேற்க, ப்ரேமும் மகிழ்வுடன் இருவரையும் வரவேற்றான். குமாரும் ரவியிடம்  கையை குலுக்கியவன், வசந்தாவிடம் மரியாதையாக  நலம் விசாரித்து விட்டு கிளம்புவதாக சொல்லி கிளம்பிவிட்டான்.  
காவேரி சென்று சொல்லவும் வந்த வைஜெயந்தி, ரவியையும் வசந்தாவையும்  வரவேற்றார். மது வீட்டு ஆளாய் இருவரையும் உபசரிக்க,  வசந்தா மகளின் எப்போதுமான பொறுப்பில் மகிழ்வுடன் மகள் கொடுத்ததை எடுத்து கொண்டார். 

“அத்தை, ப்ரேம்.. நீங்க எல்லோரும் வீட்டுக்கு விருந்துக்கு வரணும்..” என்று ரவி கூப்பிட, 
“ஆமா மாப்பிள்ளை.. கல்யாணம் முடிஞ்ச கையோட கிளம்பிட்டிங்க, சென்னை போறதுக்குள்ள ஒரு ரெண்டு நாள் அங்கிருக்கிற மாதிரி வாங்க.. சம்மந்தி நீங்களும், அண்ணாவும் வரணும்..”  என்று வசந்தா வைஜெயந்தியிடமும், ப்ரேமிடமும் வேண்டுகோளாகவே கேட்க, ப்ரேம் ஓரக்கண்ணில் மனைவியை கடுப்பாக பார்த்தான். அவனுக்கு தெரியும் இது வடிவேலுவின் வேலை என்று, 
“தங்கறது கஷ்டம் அத்தை.. நாளைக்கு நைட் சென்னை கிளம்பனும்..” என்று மறுநாள் மதிய உணவிற்கு வருவதை உறுதிபடுத்தினான். 
“சரிங்க மாப்பிள்ளை..” என்ற வசந்தாவிற்கு இதுவரை ப்ரேம் ஒத்துகொண்டதே போதும் என்றிருக்க, சிறிது நேரம் இருந்துவிட்டு கிளம்பிவிட்டனர். 
மறுநாள் சொன்னது போல் ப்ரேம் தம்பதி மட்டும் சென்றனர், வைஜெயந்தி வரமாட்டேன் என்றுவிட, அவர்கள் மட்டும் கிளம்பிவிட்டனர். அங்கு வடிவேலு மது கார் கதவு திறக்கும் போதே  மகளை எதிர்கொண்டார். 
“க்கும்.. வந்துட்டாரா..?” என்ற ப்ரேமின் முணுமுணுப்பு அப்பா, மகள் காதில் விழுகவே இல்லை, இருவரும் கையை பிடித்தபடி பேசிக்கொண்டிருக்க, காரில் இருந்து இறங்கி வந்த ப்ரேம், 
“என்ன வாசல்லே தான் நிக்கணுமா..?” என்று மாப்பிள்ளையின் அதிகாரத்துடன் கேட்டான். 
“வாங்க.. உள்ள வாங்க  மாப்பிள்ளை..” என்று வசந்தா ப்ரேமின் பேச்சில் சங்கடம் கொண்டு அவசரமாக வரவேற்றவர், மகளையும், கணவரையும் முறைத்தார். 
“சாரி.. உள்ள வாங்க..” என்று மது ப்ரேமிடம்  மன்னிப்பு வேண்ட, வடிவேலுவும் “வாங்க..”  என்று வரவேற்றார்தான் ஆனால் என்ன மாறாத முறைப்புடன். 
அதில் மேலும் தூண்டப்பட்ட ப்ரேம், மனைவியின்  கையை பற்றி தன்னோடே இழுத்து கொண்டு சென்றுவிட, வடிவேலு உள்ளே செல்லும் ப்ரேமின் முதுகை  கோபத்துடன் வெறித்தவர், 
“பார்த்தியா உன் மாப்பிளையை..? என் மகள் என்கூட  இருக்க கூடாதுன்னு வேணும்ன்னே  இழுத்துட்டு போறதை..” என்று வசந்தாவிடம் பொரிந்தார். 
“மெல்ல பேசுங்க,  காதுல விழுந்துச்சு உடனே மதுவை கூட்டிட்டு கிளம்பிடுவார்..” என்று வசந்தா எச்சரிக்கையாக சொல்லிவிட்டு செல்ல, அவன் செய்யகூடியவன் தான் என்பதால் வடிவேலு அமைதியாக உள்ளே வந்தார்.  
உள்ளேயும் எப்போதும் போல மதுவின் கையை பிடித்து கொண்டே திவ்யாவிடம் பேசி கொண்டிருந்தவனை , கடுப்பாக பார்த்தவர், எதிர் சோபாவில் அமர்ந்து மகளிடம்  பேச ஆரம்பித்தார். 
“விடுவேனா..?” என்ற ப்ரேம் தங்கையை விடுத்து மனைவியுடன்  பேச ஆரம்பித்துவிட, மது கணவனை கண்ணாலே கெஞ்சினாள். அவனும் கண்ணாலே முடியாது என்றவன், விடாமல் பேச, 
“மனுஷனா இவன்..?” என்று வடிவேலு தான் வாயை மூடி கொள்ள வேண்டியதாகிவிட்டது. ப்ரேமும் அதற்கு பிறகு சிரிப்புடன்  ரவியிடம் பேச ஆரம்பித்துவிட்டான். 
“இவங்க கடைசிவரை  இப்படியே தான் இருப்பாங்களா..? என்ற ரவியின் ஆராய்ச்சிக்கு  இறுதி வரை இப்படிதான் என்ற பதிலை அங்கிருந்த நேரம் முழுவதும் ப்ரேம் கொடுத்து கொண்டேதான் இருந்தான். 
சாப்பிடும் போதும் வடிவேலு மகளுக்காக ஏதாவது வைத்தாள், தானும் வைத்தான், அவர் ஏதாவது பேச வந்தாலே இவனும் பேச ஆரம்பித்துவிட, எல்லோருக்கும் இவர்களின் ஆடுபுலி ஆட்டம்தான் காணகிடைத்தது. 
அதிலும் திவ்யாவிற்கு ப்ரேமின்  போட்டியை காண அண்ணனா இது..? என்ற சந்தேகமே வந்துவிட்டது. இருவரும் மதுவை தாங்குவதில்  மனதில் பொறாமையும் எழாமல் இல்லை. ஆனால் ரவிக்கு பயந்து வெளிப்படுத்தாமல் கவனமாக இருந்து கொண்டாள். 
“கிளம்புறோம் அத்தை..” என்று உணவு முடிந்ததும் கிளம்ப பார்த்த ப்ரேமை, கொதிப்பாக பார்த்த வடிவேலு, ஏதோ பேசவர, சட்டென அவரின் கையை பிடித்த வசந்தா, 
“இன்னும் கொஞ்ச நேரம் இருங்க  மாப்பிள்ளை..” என்று வேண்டுகோளாகவே கேட்க, மறுக்க முடியாமல் அமர்ந்துகொண்டான். 
“மது.. உன் திங்ஸ் கொஞ்சம் இருக்கு, அதை என்னன்னு பாரு வா..” என்று வசந்தா கணவனுக்காக வேண்டி மகளை  நாசூக்காக  கூப்பிட, ப்ரேம் வேறு வழியில்லாமல் மதுவின் கையை விட, அவள் அம்மாவுடன் அவளின் ரூம் சென்றாள். 
வடிவேலுவும் சில நிமிடங்கள் கழித்து மதுவின் ரூம் செல்ல, ப்ரேம் விட்டேனா பாரு..? என்று தானும்  எழுந்துவிட, நொந்து போன ரவி, 
“ப்ளீஸ் ப்ரேம்.. போதும் விடுங்க.. அவர் பாவம், மதுவோட பேசணும்ன்னு நேத்திலிருந்தே காத்திட்டிருக்கார்..” என்று வாய் திறந்து தந்தைக்காக சொல்லியேவிட, ப்ரேம் போனால் போகட்டும் என்று அமர்ந்துவிட்டான். 
அதுவும் சில நிமிடங்கள், அதற்கு பிறகு கிளம்பியே ஆகணும் என்று உறுதியாக நின்றுவிட, மது அவர்களுக்காக டார்ஜிலிங்கில் வாங்கியதை கொடுத்துவிட்டு மனசுணக்கத்துடன் கிளம்பிவிட்டாள். 
“ஆனாலும் நீங்க ரொம்பத்தான் பண்றீங்க..?” என்று காரில் செல்லும் போது மது மனத்தாங்கலாக சொல்ல,  
“அப்படித்தான் போடி..” என்று  சிறிதும் தயவு தாட்சனையே இல்லாமல். சொன்னவனை பார்த்து மதுதான் வாயை மூடிக்கொண்டாள். இப்படியாக அப்பாவையும் மகளையும் ஆட்டிப்படைத்து அன்றிரவே மனைவியுடன் சென்னைக்கும் கிளம்பிவிட்டான். 
“வரோம்ப்பா.. வரோம்மா..” என்று ப்ரேம் கிளம்பும் முன் பெற்றவர்களிடம் விடைபெற, “சரிப்பா..” என்று சண்முகம் சொல்ல, வைஜெயந்தியோ, 
“அங்க போனதும் எப்போதும் போல எங்களை மறந்துடாத, போனாவது பண்ணு..” என்று நொடிப்பாக சொன்னார். 
“ம்மா..  எப்போதும் போல வாரத்துக்கு ரெண்டு முறைதான் பண்ணுவேன், உங்களுக்கு தேவைன்னா நீங்க பண்ணுங்க..” என்று ப்ரேமும் அடித்து சொல்லி கிளம்பிவிட, மது இருவரிடமும் சொல்லி கொண்டு கிளம்பிவிட்டாள். 
சென்னையில் அவர்களுக்காக ப்ரேம் தனி வீடு பார்த்திருக்க, மதுவின் பிளாட் வாடகைக்கு விடப்பட்டு  அவளின் பொருட்கள் புது வீட்டுக்கு மாறின. காரையே வேண்டாம் என்றுவிட்டவன்,  நிச்சயமாக வீட்டில் இருக்க  ஒப்புகொள்ள மாட்டான் என்று புரிந்து மதுவும் அமைதியாக இருந்துகொண்டாள்.
அந்த வார இறுதியிலே  டீலர் சந்திரனும், ராஜியும் சென்னை வந்தவுடன், அவர்களை தன் வீட்டுக்கே வரவழைத்த ப்ரேம், ராஜியை கண்டு கொண்டவன். 
“மித்ரா.. இவங்க உன் ப்ரண்ட்தானே..?” என்று ராஜியை கைகாட்டி  துளைக்கும் பார்வையோட கேட்க,  மது  கணவனை அதிர்ச்சியுடன் பார்த்தாள். 

Advertisement