Advertisement

அவளே என் பிரபாவம் 16
“எனக்கு இப்படி ப்ரேம் திடீர்ன்னு கேட்கவும், என்ன சொல்லி சமாளிக்கன்னு தெரியாம டீலரோட பொண்ணுதான் டிசைனர்ன்னு சொல்லிட்டேன், ஆனா அவன் இப்படி அவங்களை பார்க்க கேட்பான்னு நான் நினைக்கவே இல்லை.. சாரி மது..” என்று மது போன் செய்யவும் குமார் சொன்னான். 
“சாரியெல்லாம் எதுக்குண்ணா..? அவர் இப்படி கேட்பாருன்னு நானும் எதிர்பார்க்கல, விடுங்க பார்த்துக்கலாம்..” என்றாள் மது. 
“உன் ப்ரண்டை ப்ரேம் பார்த்திருக்கிறானா மது..?” என்று குமார் சந்தேகத்துடன் கேட்க, 
“இல்லைண்ணா.. அவளை அவர் பார்த்ததே இல்லை, அவ என்னோட எந்த பங்க்ஷனுக்கும் வரல, அவங்க அக்கா வீடு மும்பையில் இருந்தா..” 
“அப்போ சரி மது.. உன் ப்ரண்ட் ப்ரேம் பேசினா சமாளிச்சிடுவாங்க இல்லை..”
“சமாளிச்சிடுவாண்ணா..  அவளும் என்னோட டிபார்ட்மென்ட்தான், சோ பிரச்சனையில்லை..” என்று மது சொல்லவும், 
“ஓகே மது.. அப்போ நீங்க ரிட்டர்ன் வரவும் இதை முடிச்சிடலாம்..” என்று குமார் வைத்துவிட, மது அவளின் தோழி ராஜியிடமும் போன் செய்து முன்னமே பேசியிருந்ததை நினைவுபடுத்திவிட்டு  உள்ளே வந்தாள். 
ப்ரேம் இன்னமும் குளித்து கொண்டிருக்க, இருவர் சாப்பிட உணவு ஆர்டர் செய்தவள், நாளை ஊருக்கு கிளம்புவதற்கான ஏற்பாட்டில் இறங்கினாள். 
“என்ன பேக் பண்ண ஆரம்பிச்சிட்டியா..? எப்போ.? எப்போன்னு இருந்தியாக்கும்..?” என்று ப்ரேம் சுணக்கத்துடன் கேட்டான். 
அவனுக்கு இன்னமும்  டார்ஜெலிங்கிலே இருக்க வேண்டும் என்றுதான் ஆசை, ஆனால் அவனுடைய கம்பெனியில் ப்ராஜெக்ட் முடிந்ததற்கான ரிப்போர்ட்டை உடனே கொடுக்க சொல்லி ஆர்டர் வந்துவிட்டதால்  நாளை கிளம்பவேண்டிய கட்டாயம். 
“நான் ஒன்னும் எப்போ..? எப்போன்னு எல்லாம் இல்லை,  வேணும்ன்னா சொல்லுங்க இப்போவே டிக்கெட் கேன்சல் பண்ணிட்டு இங்கேயே இருக்கலாம்..” என்று மது கிண்டலாக கேட்க, அவளை முறைத்தவன், 
“என்ன நக்கலா..? நான் போய்தான் ஆகணும்ன்னு தெரிஞ்சு என்னை கிண்டல் பண்ற பார்த்தியா..?” என்றான். 
“விடுங்க.. இப்போ என்ன..? உங்க வேலை எல்லாம் முடிச்சுட்டு இன்னொரு முறை இப்படி வருவோம், இப்போ கொஞ்சம் சிரிங்க பார்க்கலாம்..” என்று கணவனை நெருங்கி அவனின் கன்னத்தை பிடித்து இழுத்து கேட்டாள். 
“ம்ம்.. கண்டிப்பா வரணும்டி, எனக்கு இது போதவே இல்லை, உன்னோட இருந்த பீலே இல்லை..” என்று மனைவியை அணைத்து கொண்டான். 
“ரெண்டு வாரத்துக்கு மேல இருந்தும் இப்படி சொல்றது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியல..” என்ற மது சிரிப்புடன் கணவனை தானும் அணைத்து கொண்டாள். 
“தெரியலையே.. என்ன செய்ய..? அவ்வளவு ஏங்கி போயிருக்கேன் என் பொண்டாட்டிக்காக..?” என்று ப்ரேம் உணர்ந்தே சொல்ல, மது நெகிழ்வுடன் அவனை அணைத்தபடி நின்றாள். 
இருவருக்கும் மனம் நிறைந்துதான் இருந்தது. என்ன ப்ரேம்க்கு தான் மனைவியுடன் இன்னும் சிறிது நாட்கள் இருக்க முடியவில்லை என்ற ஆதங்கம். 
அதற்கு பிறகான நேரங்கள் முழுவதும் ப்ரேம்  மனைவியை தன் கையிலே தான் வைத்திருந்தான். இரவு தூங்கவும் விடவில்லை, சென்னை போய்விட்டால் ரிப்போர்ட் வேலை இரவு பகலாக இருக்கும் என்று ப்ரேம்க்கு நன்றாகவே தெரிந்திருந்ததால் மனைவியுடனான நேரங்களை முழுவதுமாக அனுபவித்தான். 
“கிளம்புங்க போலாம்..” என்று மறுநாள்  மது முன்னதாகவே கணவனை கிளப்பி கொண்டிருக்க, கணவனோ கிளம்பி இருந்த மனைவியை இழுத்து தன் மடியில் உட்காரவைத்து கொண்டான். 
“ச்சு..  ஏங்க இப்படி பண்றீங்க..? வீட்ல எல்லோருக்கும் ஏதாவது வாங்கிட்டு போகணும் இல்லை..” என்று மது சலிப்பாக கேட்டபடி கணவனின் நெஞ்சின் மீது சாய்ந்து படுத்தாள். 
“வாங்கலாம்.. கொஞ்சநேரம் இப்படியே இரு..” என்று மனைவியை சுகமாக நெஞ்சின் மீது தாங்கியவன், அவளின் தலையை வருடி கொண்டிருந்தான். 
மதுவுக்கும் கணவனின் இந்த இதமான வருடல், அணைப்பு, அவனின் இதயதுடிப்பு எல்லாம் வேண்டியதாக இருக்க, அவளும் கண்மூடி அந்த நொடிகளை அனுபவித்தாள். 
இத்தனை மாத பிரிவு,  கோவம், சண்டை, மனவருத்தம், ஆதங்கம் எல்லாம் கடந்து இருவரும் சேர்ந்திருக்கும் இந்த நொடிகளின் இனிமை இருவருக்கும் இன்னும் வேண்டும் போல் தான்  இருந்தது. 
ஆனால் வாழ்க்கையின் எதார்த்தம் எந்த நிலையிலும் நிற்காமல் ஓடுவதில் தானே இருக்கிறது. அது இன்பமாக இருந்தாலும் துன்பமாக இருந்தாலும் சரி.. கடந்து செல்லத்தான் வேண்டும். தேங்கி நிற்க முடியாதே..? 
அதுபோலே ப்ரேம் தம்பதியினரும் தங்களின் ஓட்டத்தை  ஆரம்பித்தனர். ரிசார்ட்டில் இருந்து கிளம்பியவர்கள், வழியில் உள்ள பெரிய மார்க்கெட்டில் வீட்டுக்கு  வாங்க செய்தனர். 
“மித்ரா.. யாருக்கும் ரொம்ப வாங்கிட்டு இருக்காத, பிளைட்டுக்கு டைம் ஆகிடும்..”என்று ப்ரேம் எச்சரிக்கையாக சொல்ல, அவனை திரும்பி செல்லமாக முறைத்த மனைவி, 
“இதுக்குத்தான் முதல்லே கிளம்பலாம் சொன்னேன்..” என்றாள். 
“விடுடி..” என்று ப்ரேம் சிரிப்புடன் சொல்ல, மதுவும் சிரிப்புடன் எல்லோருக்கும் கண்ணில் பட்டதை வாங்க தொடங்கினாள். 
“மித்ரா.. நீ பாரு, நான் இதோ வந்துடுறேன்..” என்று பெண்களுக்கான அலங்கார பொருட்கள் விற்கும் கடைக்கு சென்றவனை புரியாமல் பார்த்தவள், நேரமின்மையால் அவனின் பின் செல்ல முடியாமல் எல்லோருக்கும் வாங்கும் வேலையில் ஈடுபட்டாள். 
“போலாமா..?” என்று வந்த கணவனின்  கையில் ஒன்றும் இல்லாமல் இருப்பதை பார்த்து, அவனை கேள்வியாக பார்த்தாள். அவளின் கேள்வி புரிந்தும், ஒன்றும் சொல்லாமல் மனைவியிடம் இருந்த பைகளை வாங்கி கொண்டவன், 
“பணம் எவ்வளவு ஆச்சு..?” என்று பர்ஸை எடுத்தான். 
“நானே கொடுத்திட்டேன்..” என்று மது சொல்லவும், ப்ரேமுக்கு சரியாக அந்நேரம்  முன் அவள் பணமில்லாமல் இருந்தது ஞாபகத்திற்கு வந்தது. 
“ம்ப்ச்.. அதைபத்தி என்னன்னு மித்ராகிட்ட கேட்கவே இல்லையே..? சரி.. வீட்டுக்கு போய் கேட்டுக்கலாம்..” என்று நினைத்து கொண்டவன், மனைவியுடன் கிளம்பி ஏர்போர்ட் வந்து சென்னை வந்திறங்கினர். 
அவர்களை அழைத்து செல்ல சண்முகம் அனுப்பியிருந்த கார் வந்திருக்க, மது கணவனை பார்த்து உதடு சுழித்தாள். பின்னே அவளின் கார் இங்கே சென்னையிலே இருக்க, வேண்டாம் என்றுவிட்டு தந்தையிடம் சொல்லி கார் வரவைத்திருந்தான். 
அவளின் சுழிப்பிலே அவளின் சுணக்கத்தை புரிந்து கொண்டவன், “அது மிஸ்டர் வடிவேலு காருடி.. எனக்கு வேண்டாம்..” என்று கடுப்பாக சொல்ல, அவனை நன்றாகவே முறைத்தவள், 
“அப்போ நான்..? நானும் மிஸ்டர் வடிவேலு மகள்தான்..” என்றாள் நொடிப்பாக. 
“அது உன் கழுத்துல தாலி கட்டாத வரைக்கும்தாண்டி.. இப்போ நீ மிஸ்ஸர்ஸ் ப்ரேம்.. தெருஞ்சுக்கோ..” என்று அழுத்தத்துடன் சொன்ன ப்ரேம், மனைவியுடன் காஞ்சிபுரம் பயணமானான். 
“வாப்பா.. வாம்மா..” என்று வரவேற்ற சண்முகத்திடம் சில நொடி நின்று பேசிய ப்ரேம், வைஜெயந்தியை பார்க்க, அவர் முகத்தை தூக்கி வைத்து உட்கார்ந்திருந்தார். 
“இவங்க அடங்க மாட்டாங்க..” என்று தோளை குலுக்கிய ப்ரேம், 
“சரிப்பா.. நாங்க கொஞ்ச நேரம் தூங்கறோம்..” என்று மனைவியை கூப்பிட, 
“நீங்க போங்க.. நான்  வந்துடறேன்..” என்று கணவனை அனுப்பிய  மது, அவர்களுக்காக வாங்கியவற்றை எடுத்து கொடுத்தாள். 
“இது உங்களுக்காக மாமா..” என்று அவருக்கு மிகவும் பிடித்த வெங்கடேஸ்வரர் படத்தை 3டி பெய்ண்டில் கொடுக்க,  சந்தோஷத்துடன் வாங்கி கொண்டவர், 
“ரொம்ப  நல்லா இருக்கும்மா..” என்றார். 
“இது உங்களுக்காக அத்தை..” என்று மது கொடுத்த சால்வையையும், கைவினை பொருட்களையும் முகம் சுளிப்போடு வாங்கி பார்த்த வைஜெயந்தி, 
“நான் என்ன ஊட்டியிலா இருக்கேன்..?” என்ற நக்கலாக கேட்க, மதுவின் முகம் வருத்தத்தை காட்டியது. இதுவே அவள் கடைசி நிமிடங்களில் தான் வாங்கியிருந்தாள், 
ப்ரேம்தான் அவள் வெளியே செல்லவே அனுமதிக்கலையே..?  அதை சொல்ல முடியாமல் சங்கடத்துடன் நின்றவளை, பார்த்த சண்முகம், மருமகளின் உதவிக்கு வந்தார். 
“இங்க சென்னையிலும் மழை காலத்துல குளிரும் தானே..? அப்போ யூஸ் செஞ்சுக்கோ..” என்றவர், 
“நீ போய் ரெஸ்ட் எடுமா.. நைட் எல்லாம் ட்ராவல், தூக்கமே இருந்திருக்காது, போய்  கொஞ்ச நேரம் தூங்கு, போம்மா..” என்று அத்தையின் முகம் பார்த்து தயங்கி நின்ற மருமகளை அனுப்பிவைக்க, மதுவும் அவர் சொல்லை கேட்டு ரூமிற்கு வந்தாள். 
அங்கு ப்ரேம் பாத்ரூமில் குளிக்கும் சத்தம் கேட்க, தானும் குளிக்க உடைகள் எடுத்து வைத்தவள்,  ரூமை ஒதுங்க வைத்தாள். 
“மித்ரா.. தூங்காம என்ன செஞ்சிட்டிருக்க..? வா தூங்குவோம்..” என்று குளித்து ட்ராக் பேண்ட் அணிந்து டீ ஷார்ட் போட்டு வந்தவன், மனைவியையும் தூங்க கூப்பிட்டான்.
“நீங்க தூங்குங்க, நானும் குளிச்சிட்டு வந்துடுறேன்..” என்று தானும் குளித்து விட்டு வந்தவள், கணவனின் பக்கத்தில் சென்று படுக்க, அவனும் பாதி தூக்கத்திலே மனைவியை இழுத்து தன் நெஞ்சின் மீது போட்டு கொண்டான். 
“தம்பி.. தம்பி.. மதும்மா..” என்ற காவேரியின் கதவு தட்டும் சத்தத்தில் மதுவுக்கும், ப்ரேமுக்கும் முழிப்பே வந்தது. நேரம் பார்க்க அது மணி நான்கை காட்டியது. 
“இதோ வரேன்ம்மா..” என்று குரல் கொடுத்து கொண்டே சென்ற மது கதவை திறக்க, 
“உங்களை பார்க்க குமார் தம்பி வந்திருக்கார்..” என்றார் அவ்வீட்டின் சமையல் செய்யும் பெண்மணி காவேரி. 
“சரிங்கம்மா..” என்று  உள்ளே வந்தவள், கணவனிடம் சொல்ல, 
“ம்ம்.. ஒரு டூ மினிட்ஸ் மித்ரா..” என்று ப்ரேம் மறுபடியும் படுத்து கொண்டான். 
“சரி.. நீங்க வாங்க..” என்று தான் மட்டும் ரெப்ரஷ் செய்து கொண்டு கீழே சென்றாள். 

Advertisement