Advertisement

“எவ்வளவு நேரம்டி உங்க அப்பாகிட்ட பேசுவ..?” என்று மனைவியிடம் கடுப்பாக கேட்க, அவனை கண்ணை சுருக்கி பார்த்தவள், 
“நீங்க ஏதாவது வேலை செய்யும் போது, இல்லை போன் பேசும் போது இப்படித்தான் நான் எங்க அப்பாகிட்ட பேசிட்டிருக்கேன்.. அதையும்  பேசக்கூடாதுன்னா அப்பறம்  எனக்கு கோவம் வந்துடும் பார்த்துக்கோங்க..” என்று மது தந்தையை விட்டு கொடுக்காமல் பேசினாள்.
“க்கும்.. இல்லைன்னா மட்டும் உனக்கு கோவம்  வராது பாரு.. போடி, உங்க அப்பாவை பத்தி பேசினாலே நீ வடிவேலு மகளா மாறிடுற.. எனக்கு பிடிக்கவே இல்லை, எப்போவும் என் பொண்டாட்டியாவே இரு..” என்று ப்ரேமும்  விடாமல் பேச, ஆயாசத்துடன் தலையை ஆட்டிய மது,
 
“எங்க அப்பாவை நீங்க கொஞ்சினது போதும், இன்னிக்காவது  என்னை வெளியே கூட்டிட்டு போற ஐடியா இருக்கா இல்லை.. எப்போவும் போல  இப்படி ரிசார்ட்லே இருக்க வேண்டியதுதானா..?” என்று கோவத்தோடு கேட்டாள். 
“என்ன..? வெளியே போகணுமா..? எதுக்கு போகணும்..? இன்னும் வந்த வேலையைவே முடிக்கல..” என்று குறும்பாக சொல்ல, அவனை முறைத்தவள், 
“போதும்.. முடிச்சவரை போதும்.. கிளம்புங்க.. போகலாம்..” என்று ஒரு வாரத்திற்கு மேலாகியும் ரூமிற்குள்ளே அடைந்து கிடக்கும் கோவத்தில் பொரிந்தாள். 
“ம்ப்ச்.. மித்ரா.. இங்கேயே இருக்கலாம்டி, வெளியே செமயா குளிருது, அப்பறம் உனக்குத்தான் உடம்பு முடியாம போயிடும்..” என, 
“அதெல்லாம் எனக்கு ஒன்னுமாகாது.. நீங்க கிளம்புங்க, நாம  இன்னிக்கு வெளியே போயே ஆகணும்..” என்று தயாராக ஆரம்பித்தாள். 
“நாம எங்கேயும் போக போறதில்லை.. இங்கேயே இப்படித்தான் இருக்க போறோம்..” என்று தயாராக செய்தவளின் பின் சென்று அணைத்து கொண்டு அவளின் கழுத்தில் முகம் புதைந்தான். 
“அப்போ நான் சொன்னா நீங்க கேட்கமாட்டேங்க..? நீங்க சொன்னா மட்டும் நான் கேட்கணுமா..?” என்று கடுப்பாக கேட்டாள். 
“ஏய்.. இப்போ எல்லாம் நீ சொல்றதை மட்டும் தான் நான் கேட்கிறேன்.. முன்னமாதிரி இல்லை தானே..” என்று கண்ணடித்து கட்டிலை காட்டி சொல்ல, வெட்கத்தோடு கோவமும் கொண்ட மது, 
“உங்களை..” என்று அவனை தள்ளிவிட்டு முறைக்க, மறுப்படியும் இழுத்து தன் கைவளைவில் கொண்டு வந்தவன், 
“ஏன் வெளியே போகணும்..? இங்கேயே இருக்கலாம் ப்ளீஸ்டி..” என்றவாறே அவளின் இடையை தடவ, அவனின் கையை தட்டிவிட்டவள், 
“சரி.. இங்கேயே இருக்கலாம், ஆனா நீங்க  என் பக்கத்துல வராம இருந்தா..”என்று கண்டிப்புடன் சொன்னாள். 
“சரி..” என்று உடனே ஏற்றுகொண்ட  கணவனை சந்தேகத்துடன் பார்த்தவள், 
“நான் நம்பமாட்டேன்..” என்றாள். 
“ஏய்.. நான் சீரியஸா தான் சொல்றேன், எனக்கு உன்னோட இருந்தா போதும் மித்ரா.. கிட்டத்தட்ட ஒன்றரை வருஷமா உன்னை பார்க்க கூட முடியாம பிரிஞ்சி இருந்திருக்கேன்டி..”
“அப்போ  எல்லாம் உன்னை ரொம்ப ரொம்ப மிஸ் பண்ணுவேன், உன்னை பார்க்கணும், உன்கூட பேசணும், உன்னோட டைம் ஸ்பென்ட் பண்ணணும்ன்னு அவ்வளவு தேடுவேன், ஆனா முடியாதே, அப்போ ஒரு ஏமாற்றம், கோவம் வரும் பாரு..”
“அப்போதான் முடிவெடுத்தேன்,  கல்யாணம் முடிச்ச கையோடு உன்னை எங்கேயாவது போயிடணும், யாரும் நம்மளை தொந்தரவே செய்ய கூடாது, போதும் .. போதுங்கிற அளவு உன்னோட  டைம் ஸ்பென்ட் பண்ணனும்ன்னு..” 
“அதனாலதான் தாலி கட்டின கையோட யார் என்ன சொன்னாலும் கவலைபடாம பிடிவாதமா நின்னு உன்னை என்னோட இங்க கூட்டிட்டு வந்துட்டேன்..” என்று காதலாக சொல்ல, மது தானே சென்று கணவனை அணைத்து கொண்டாள்.
அவளும் ப்ரேமை பிரிந்திருந்த நாட்களில் அவனை மிகவும் தேடினாள்தான், ஆனால் அவன் மேலிருந்த கோவம், டிசைன் கமிட்மென்ட்ஸ், பணப்பிரச்சனை என்று சற்று அல்லாடியதில் ப்ரேம் அளவு அவள் அவனை தேடவில்லை என்பதுதான் உண்மை. 
அதுவும் தான் இங்கு குடும்பத்தோடு சொந்த மண்ணில் இருக்க, அவன் அங்கு வேறொரு நாட்டில் முற்றிலும் தனிமையில்  எவ்வளவு கஷ்டபட்டிருப்பான்..? என்பது அந்த நொடி புரிந்தது. 
இதில் தானும்  அவன் மேல் கோவம் கொண்டு பேசாமல் தள்ளி வைத்தது எவ்வளவு பெரிய தவறு என்பதும் புரிய லேசான குற்றஉணர்ச்சி.  
“சாப்பிடலாமா..?” என்று ப்ரேம்  தன் நெஞ்சின் மீது சாய்ந்து நின்றிருந்தவளை கேட்க, 
“ம்ம்..” என்று தலையாட்டினாலும் நகராமலே நின்றாள். 
“என்னாச்சு..?” என்று மனைவியின் ஒட்டுதலில் கனிவாக கேட்டான். 
“சாரி..” என்று மது சொல்ல, 
“எதுக்கு இந்த திடீர் சாரி..?” 
“அது.. உங்களோடு பேசாம இருந்ததுக்கு..” என்று வருத்தத்தோடு சொன்னாள். 
“ம்ம்.. அப்போ உன்னோட பேசாம இருந்தது ரொம்ப கஷ்டமா இருந்ததுதான், ஆனா இப்போ இல்லை..” என்று மனைவியை மேலும் நெருக்கமாக அணைத்து கொண்டவன், 
“நாம தனியா இருக்கும்போதும் சரி, எதாவது பிரச்சனையில் இருக்கும் போதும் சரி, இல்லை மனசளவுல தனியா ஒரு மாதிரி அழுத்தமா பீல் பண்ணும் போதும் சரி  ரொம்ப தேடுறது நம்ம சோல்மெட்டை தான்..”
“அப்படி நானும் உன்னை அடிக்கடி  தேடுயிருக்கேன், அந்த மாதிரி நேரத்துல உனக்கும் போனும் பண்ணுவேன், ஆனா நீ எடுக்காதப்போ கோவம் வரதை விட ஒரு மாதிரி வெறுமையாதான் தோணும்..” 
“ஏன் என்கூட பேசமாட்டேங்கிற..? உன்னை பிடிச்சு உலுக்கணும் போல கூட இருக்கும், ஆனா.. அதுவும் என்னால செய்யமுடியாதே, நீ எங்கேயோ இருக்க, நான் எங்கேயோ இருக்கேன்.. ம்ஹ்ஹ்ம்.. அதெல்லாம் ஒரு கொடுமையான பீல்..” என்று சொல்லும்போதே அவனின் உடலில் அப்படி ஒரு இறுக்கம், 
“ஏன் கல்யாணத்துக்கு முன்னாடி உன்னை பார்க்க வந்தப்போ கூட  மனசுக்குள்ள அவ்வளவு கோவம் இருந்துச்சு, தனியா உன்னை கூட்டிட்டு போய் நல்லா சண்டை போடணும்ன்னு கூட நினைச்சேன், ஆனா உங்க அப்பா எப்போவும் போல வில்லன் வேலை பார்த்துட்டார்..” என்று வடிவேலுவை நினைத்து கடுப்புடன் நொடிக்க, மதுவுக்கு சிரிப்பு. 
“அப்போ எனக்கு கிப்ட் வாங்கி கொடுக்கத்தான் வெளியே கூப்பிட்டேன்னு சொன்னது பொய்யா..?” என்று நிமிர்ந்து பார்த்து கண்ணை சுருக்கி கேட்டாள். 
“ஏய்.. அது உண்மைதாண்டி..” என்றவனை  ஏற்று கொண்டு பார்த்த மது, 
“இப்போவும் என்மேல அந்த கோவம் எல்லாம் இருக்கா..?” என்று கேட்டாள். 
“ம்ஹூம்.. கொஞ்சம் கூட இல்லை, இன்னும் சொல்ல போனால் அதெல்லாம் ஏதோ போன ஜென்மம் மாதிரி இருக்கு, நவ் ஐயம் தி ஹாப்பியஸ்ட் பர்ஸன்.. அண்ட் பிளஸ்ட் பர்ஸன்  இன் தி வொர்ல்ட்..” என்று நிறைவாக காதலாக சொல்ல, மதுவுக்குள்ளும் அந்த சந்தோஷம் நிறைந்தது.
இருவரும் மனம் விட்டு பேசியதாலோ என்னவோ அதற்கு பிறகான நேரங்கள் இன்னும் இன்னும் இனித்தது இருவருக்கும். இத்தனை நாட்கள் பேசாததை எல்லாம் சேர்த்து வைத்து பேசினர், 
அதிலும் ப்ரேம் நிறைய நிறைய பேசினான். அவனுக்கு மனைவியிடம் சொல்ல ஆயிரம் விஷயங்கள் இருந்தது. அவனின் வெளிநாடு வாழ்க்கை, ப்ராஜெக்ட், வருங்கால கனவு, திரும்பவும் வெளிநாடு செல்வது பற்றி என்ன முடிவெடுப்பது என்று எல்லாவற்றையும் மனைவியிடம் பேசினான்.. கேட்டான். 
எல்லாம் நன்றாகதான் சென்று கொண்டிருந்தது, ஆனால் அவன் கடையையும், பணத்தையும் பற்றி பேசாத வரை.. 
கடை விஷயத்தில் என்ன செய்தான், பணபிரச்சனை எப்படி சமாளித்தான், எவ்வளவு லோன் எடுத்தான், எவ்வளவு கட்டியிருக்கிறான், அடுத்து என்ன..? இப்படி எல்லாவற்றையும் தெளிவாக பேச, மதுவுக்குள் முதல் முறையாக ஏதோ ஒரு பயம். 
அதிலும் அவன் குமாரிடம் டீலரை பற்றி, அவர்கள் கடை டிசைனரை பற்றியும் கேட்டிருக்கிறான் என்று தெரிந்த நொடியில் இன்னும் அதிகமாகியது. 
“டிசைனரை பத்தி என்ன.. எதுக்கு கேட்டேங்க..?  என்று தன் பயத்தை மறைத்து கேட்க, 
“அவங்களை பார்க்கதான் கேட்டேன் மித்ரா.. நம்ம கடை இந்தளவு  சக்ஸஸ் ஆக அவங்க டிசைனும் ஒரு முக்கியமான காரணம், அதுக்குத்தான் நேர்ல பார்த்து பர்சனலா நிறைய நன்றி சொல்லணும்..”
“அதுவும் இல்லாம அந்த டிசைனர் நம்ம  டீலரோட பொண்ணுதானாம், இப்போதான் குமார் சொன்னான், அதான் ரெண்டுபேரையும் அடுத்த  வாரம் மீட் பண்ண கேட்டிருக்கேன், நாம போனவுடனே அவங்களை போய் பார்த்துட்டு வந்துடலாம்.. என்ன சொல்ற..? என்று கேட்டான்.
“அதான் நம்ம கல்யாணத்துல டீலரை பார்த்து நன்றி சொல்லிட்டீங்களே..?” என்று மித்ரா தன் தடுமாற்றத்தை மறைத்து  கேட்டாள். 
“என்ன பேசுற நீ..? நமக்கு எவ்வளவு பெரிய உதவி செஞ்சிருக்காங்க, ரெண்டு பேரையும் நேர்ல பார்த்து நன்றி சொல்றதுதான் முறை..” என்று கண்டிப்புடன் பேச, அந்த நொடி அவனை பார்த்த மித்ராவுக்கு அவன் முதலில் இருந்த கோவக்கார, பிடிவாத ப்ரேமாகவே தெரிய உள்ளுக்குள் நடுக்கம். 

Advertisement