Advertisement

அவளே என் பிரபாவம் 13 
“என்ன..? என்ன சொல்றீங்க..?” என்று ப்ரேம் சொன்னதை நம்பமுடியாமல் மது அதிர்ச்சியுடன் கேட்டாள். 
“ஏன் அதை வேற  நான் இன்னொரு முறை என் வாயால சொல்லுணுமா..?” என்று ப்ரேம் கோவம் குறையாமல் கேட்க,  
“இல்லை.. அது.. அப்பா..” என்று என்ன சொல்வது என்று தெரியாமல் திணறிய மதுவை கண்ணை சுருக்கி பார்த்தவன், 
“என்ன உங்க அப்பாவை பத்தி சொன்னவுடனே வார்த்தை வரமாட்டேங்குதா..? எப்படி வரும்..? அவர்தான் உங்க அப்ப்பாபா ஆச்சே..?” என்று கோபத்துடன் வெடித்தவனிடம்,  
“ப்ளீஸ்.. கோபப்படாம  கொஞ்சம் பொறுமையா பேசலாமே..?”  என்றாள்.  
“என்ன கோபப்படாம பேசணுமா..? ஏன் சொல்லமாட்ட..? உங்க அப்பா உனக்கு பார்த்த மாதிரி எங்க வீட்லயும்  எனக்கு பார்த்திருந்தா  தெரிஞ்சிருக்கும் உனக்கு அதோட வலி, வேதனை, கோவம் என்னன்னு..?   எல்லா பிரச்சனையும் அவனவனுக்கு வந்தாதாண்டி  தெரியும்..”  என்று  பொரிந்தவனின் வார்த்தையில் இருந்த  உண்மை சுட, ப்ரேமை வருத்தத்துடன் பார்த்தவள்.  
“அப்பா ஏன் இப்படி செஞ்சாருன்னு தெரியல, ஆனா கண்டிப்பா என்னை கேட்காம எதுவும் செஞ்சிருந்திருக்க மாட்டார்..” என்று சொல்லிவிட, ப்ரேமின் கூர் பார்வை அவளை துளைக்க, வார்த்தைகள் அம்புகளாக வந்து விழுந்தது. 
“அப்போ உன்னை கேட்டு உன் சம்மந்ததோட தான்  நம்ம நிச்சயத்தையும் உடைச்சாரா..?” என்று கேட்க, அதிர்ந்து போன மது, 
“இல்லை கேட்கல, சொல்ல மட்டும்தான் செஞ்சார்..” என்றாள் வேகமாக. 
“அதே மாதிரி இதையும் உனக்கு சொல்ல மட்டும் செஞ்சிருந்தா என்ன பண்ணியிருப்ப..?” என்று தீர்க்கமாக கேட்டான். 
“என்ன..? இப்படி கேட்கிறீங்க..?” என்று மது திணறினாள். 
“பதில் இல்லை தானே..? அப்பறம் என்ன உங்க அப்பாக்கு சப்போர்ட்  வேண்டியிருக்கு..? அவர் என்ன செஞ்சாலும் உனக்கு வேணும்ன்னா சரியா இருக்கலாம், எனக்கு இல்லை..”
“அவர் என்னோட வாழ்க்கையை என்கிட்ட இருந்து மொத்தமா பறிக்க பார்த்தவர், ஊரறிய நிச்சயம் செஞ்ச நம்ம கல்யாணத்தை நிறுத்தினவர்..”
“இத்தனைக்கும் உன்னை என் கையில் பிடிச்சு கொடுத்தது அவர்தான், பிடிங்கினதும் அவர்தான், இதுல என் தப்பு எங்க இருக்கு..? அவரால நான் ஏன் ஸபர் ஆகணும்..? அவருக்காக நான் ஏன்  உன்னை விட்டு கொடுக்கணும்..?  என்னால முடியாது..”
“எனக்கு என் வாழ்க்கைதான் முக்கியம், அவர் எனக்காக ஒரு பர்சன்ட் கூட யோசிக்கத்தப்போ நான் மட்டும்  அவருக்காக ஏன் யோசிக்கணும்..?  முடியாது, எனக்கு அந்தளவு பரந்த மனப்பான்மையும் இல்லை, நான் சுயநலவாதியாவே இருந்துட்டு போறேன், எனக்கு அதைபத்தி கவலை  இல்லை..”
“என்னோட கவலை எல்லாம் நீதான், நீ மட்டும்தான்.. நீ என்னை பத்தி யோசிக்காததுதான், எனக்காக பார்க்காததுதான்.. அப்போ மட்டுமில்லை இப்போ உன் கழுத்துல தாலி கட்டினத்துக்கு அப்பறமும்தான்..” 
“இதோ இன்னிக்கும்  நான் கொஞ்ச நேரம்  உன்னை அவர்கிட்ட விடலைன்னுதும் அப்படி கோவப்படற..  என் கையைவே  உதறிட்டு போற.. ஒரே நாள்ல சில மணி நேரத்துக்கே உங்களால முடியல, கோவம், அழுகை.. எல்லாம் வருது..”
“அப்போ இத்தனை நாள் உன்னை பிரிஞ்சிருந்த  எனக்கு எப்படி இருந்திருக்கும்..? எவ்வளவு தவிச்சிருப்பேன்..? உன்னை எந்தளவு தேடியிருப்பேன்..?  அதுவும் நினைச்ச நேரத்துக்கு பார்க்க முடியாத ஊர்ல உட்கார்ந்திருக்கிட்டு எப்படியெல்லாம் கஷ்ப்பட்டிருப்பேன்..?
“அதெல்லாம் உனக்கு ஏன் தெரியல, ஏன் எப்போவும் எனக்காக யோசிக்க மாட்டேங்கிற..? ஏன்  எனக்காகன்னு எங்கேயும்  நிற்கமாட்டேங்கிற..?, உங்க அப்பாவா..?  நானான்னு..?  வரும்போது நீ எப்போவும் உங்க அப்பாவை தான் தேர்ந்தெடுக்கிற.. என்னை மறுத்துடுற..”
“அது உனக்கு வேணும்ன்னா  ஈஸியா இருக்கும், ஆனா எனக்கு எந்தளவு வலிக்கும்ன்னு உனக்கு தெரியுமா..?”
“எப்போவும் மறுக்கிறவங்களை விட மறுக்கபட்டவங்களுக்கு தான் வலியும் வேதனையும் அதிகம்.. அதைத்தான் எனக்கு நீ கொடுத்துட்டே   இருக்க..” என்று இத்தனைநாள் அழுத்தம், மனவுளைச்சல், ஏமாற்றம், ஆதங்கம் எல்லாம் வெடித்து சிதற, எரிமலையென நின்றிருந்தவனை நெருங்க முடியாமல், மது தவிப்புடன் கண்கள் கலங்க நின்றுவிட, அவளை எரித்து பார்த்தவன், 
“என்னை இப்படி மாத்தினதும் நீதான்.. போடி..” என்று கையை வீசிவிட்டு பெட்டில் சென்று விழுந்தவன்தான் அந்நாள் முடிந்த பின்னும் எழவில்லை. அப்படியொரு தூக்கம்.. 
கிட்டத்தட்ட இரண்டு வாரமாக தூங்க முடியாத தூக்கத்தை எல்லாம் சேர்ந்து தூங்கி கொண்டிருந்தான். இடையில் மது சாப்பிட எழுப்பியபோதும் அவனால கண்ணையே திறக்க முடியவில்லை, அப்படியொரு தூக்கம். மதுவும் அவனின் அலைச்சல் புரிந்து தூங்க விட்டுவிட்டாள். 
*****************************
“ஏங்க இப்படி படுத்துறீங்க..? அவங்க தூங்கிட்டு எதுவும் இருக்க போறாங்க, அதுக்குள்ள என்ன பதட்டம்..? கொஞ்சம் பொறுங்க உங்க பொண்ணே உங்களை கூப்பிடுவா..?” என்று மகளின் போனையே எதிர்பார்த்து காத்திருக்கும்  கணவனிடம் கோவத்தோடு சொன்னார் வசந்தா. 
“எல்லாம் எனக்கு தெரியும், நீ போ..” என்ற வடிவேலு போனை எடுத்து பார்ப்பதும்,  வைப்பதுமாக தான் இருந்தார். 
மது  அவரை விட்டு பிரிந்து சென்று முழுதாக ஒரு நாள் கூட ஆகவில்லை, அதற்குள்ளே மகளுக்கான தேடல் தொடங்கி விட்டது. படிப்புக்காக, வேலைக்காக என்று மது பலமுறை வடிவேலுவை பிரிந்திருந்தாள்  தான், ஆனால் அது எல்லாம்  அவரின் மகளாக..? 
இது அப்படி இல்லையே..? திருமணம் முடிந்து புகுந்து வீடு செல்லும் ஒரு பெண்ணின் நிரந்தர பிரிவு, 
அவள் எந்த நொடியில்  ப்ரேமின் மனைவியாக அடையாளம் காணப்பட்டாளோ அந்த நொடியே மகள் மீதான தன் உரிமை குறைந்து போனதை அவரும் உணர்ந்தே  இருந்தார். 
இன்னும் சொல்ல போனால் உணர்த்தி இருந்தான் ப்ரேம். அவரும் ஓர் ஆண் தானே, ப்ரேமின் எண்ணங்கள் புரியாமல் இருக்குமா..? ஆனால் இது எதுவரை செல்லும்..? என்பது தான் அவரின் யோசனையாக இருந்தது. 
“ம்ம்.. பார்ப்போம்..” என்று பெருமூச்சு விட்டவரின் போன் ஒலிக்க ஆரம்பிக்கவும், மகள் என புரிந்து,வேகமாக எடுத்தவர், 
“சொல்லுடா.. பத்திரமா போய் சேர்ந்துட்டிங்களா…? சாப்பிட்டிங்களா..? எங்க தங்கி இருக்கீங்க..? ஹோட்டல் மாதிரியா..? இல்லை இந்த ரிசார்ட் மாதிரியா…? எல்லாம் வசதியா இருக்கா..? ஒன்னும் பிரச்சனை இல்லையே..?” என்று மகளை பேசவே விடாமல் அடுக்கடுக்காய் கேள்விகள் அடுக்கி கொண்டே செல்ல, வசந்தா தலையில் அடித்து கொண்டார். 
“ப்பா.. ப்பா.. ரிலாக்ஸ், நாங்க பத்திரமா வந்துட்டோம், சாப்பிட்டோம், ரிசார்ட்ல தான் தங்கியிருக்கோம், ஒன்னும் பிரச்சனை இல்லை,  எல்லாம்  நல்லா போயிட்டிருக்கு..” என்று மது அவரின்  ஒவ்வொரு கேள்விக்கும் நிதானமாக பதில் சொல்லி முடித்தாள். 
“சரிடா.. சரிடா..” என்று இருவரும் சில நிமிடங்கள் பொதுவாக பேசியபிறகு,  
“ப்பா. எனக்கு உங்ககிட்ட ஒன்னு கேட்கணும்..” என்றாள் மது. 
“சொல்லு மது.. என்ன கேட்கணும்..?” என்று வடிவேலு யோசனையுடன் கேட்டார். 
“அது.. அது.. எனக்கு அலையன்ஸ்.. மாதிரி யாராவது பார்த்திருந்தீங்களா..?” என்று கேட்டுவிட்டாள். 
“உனக்கு யார் சொன்னா..?”  என்று வடிவேலு சந்தேகத்துடன் கேட்க, 
“உங்க மாப்பிள்ளை தான்..” என்று  மது சொல்லவும், வடிவேலுவிடம் லேசான சிரிப்பு சத்தம். 
“ஓஹ்.. அதுக்கு பயந்துகிட்டுதான் நின்ன நிலுவையில பிடிவாதமா  கல்யாணத்தை முடிச்சுகிட்டாராமா..?” என்று கிண்டலாக சொன்னார். 
“ப்பா.. என்னது இது..? நீங்க முதல்ல ஏன் அப்படி செஞ்சீங்க..?” என்று மது அதிர்ப்தியாக சொல்லிவிட, புரிந்து கொண்ட தந்தை, 
“ஏன் செய்ய கூடாது..? ஒரு அப்பாவா என் பொண்ணுக்கு மாப்பிள்ளை பார்த்தது என்ன அவ்வளவு பெரிய குத்தமா..?” என்று கோவத்தோடு கேட்டார். 
“ப்பா.. கண்டிப்பாவே தப்புதான், எனக்குத்தான் இவர் இருக்காரே..?” என்று மதுவும் பேச, வடிவேலுவுக்கு மகள் ப்ரேமின் மனைவியாக பேசுவது புரிய, வார்த்தைகள் சுள்ளென்று வந்து விழுந்தது. 
“அது எனக்கெப்படி தெரியும்..? நான் பார்த்தவரைக்கும் உனக்கும், அந்த தம்பிக்கும் சுத்தமா பேச்சு வார்த்தையே இல்லை,  விலக்கிட்டீங்களோன்னு நினைச்சுத்தான் சரவணன் அவன் மகனுக்கு உன்னை கேட்கவும், சரி நல்ல இடமா இருக்கே, உன்கிட்ட கேட்டுட்டு சொல்றேன்னு  டைம் கேட்டிருந்தேன்..”
“அப்போதான் அந்த டீலர் என்னை பார்த்து நீ செஞ்சதை எல்லாம் சொல்லிட்டாரு, அதிலே எல்லாம் முடிஞ்சு போச்சு, இதுக்கும்  மேல உன்னை பிடிச்சு வச்சு என்ன செய்ய போறேன்னுதான் உங்க விருப்பப்படியே உன்னை விட்டுட்டேனே..? இன்னும் என்ன வேணுமாம் அவருக்கு..?” என்று வடிவேலு பேச, மதுவுக்கு ஆயாசமாக இருந்தது. 
“ப்பா.. அவரை ஏன் இழுக்கிறீங்க..? அவர் ஒன்னும் சொல்லலை..” என்று ப்ரேமிற்கு ஆதரவாக பேச, 
“யாரு..? அவர் ஒன்னும் பேசலையா..? நம்பிட்டேன்..” என்று ப்ரேமின் குணம் தெரிந்து சொன்ன வடிவேலு, 
“இங்க பாரு மது.. என் பொண்ணுக்கு மாப்பிள்ளையை பார்த்தது என் உரிமை, அதை கேள்வி கேட்க யாருக்கும் அதிகாரம் இல்லை, உனக்குமே சேர்த்ததுதான் சொல்றேன்..” என்று கோவத்தோடு பேசினார். 
“ப்பா.. ஒரேடியா இப்படி பேசாதீங்க…? அவருக்கு  நாம செஞ்சதும் தப்புதானே..? நீங்களேதானே அவரை எனக்கு மாப்பிள்ளையா கேட்டு உறுதி செஞ்சு எல்லாம் பண்ணீங்க, கடைசில நீங்களே அதை உடைச்சா கோவம் வராதா..? சொல்லுங்க பார்ப்போம்..” என்று மது கேட்க, 
“அதுக்காக நீ கஷ்டப்படுவேன்னு தெரிஞ்சும் உன்னை கொடுத்திருக்கணும் சொல்றியா..? எங்க அம்மாவோட மறுஜென்மம்  நீ..!! நான் வேண்டி வேண்டி வாங்கி வந்த வரம் நீ..!!  உன்னை அப்படி கஷ்டப்படவிட என்னால முடியுமா..?” 
“முடியாது.. கண்டிப்பாவே முடியாது, அதனாலதான் நிச்சயம் முடிஞ்சாலும் பரவாயில்லைனு  உங்க சம்மந்தத்தை நிறுத்தினேன், இது ஒரு அப்பாவோட பாசம், அதை தப்பு சொல்ல யாருக்கும் உரிமை இல்லை, 
“எனக்கு என் பொண்ணோட  வாழ்க்கை  நிம்மதியா சந்தோசமா   இருக்கணும் அவ்வளவுதான், அதுக்காக என்னவேணாம்ன்னாலும் செய்வேன், நீ இன்னொரு வீட்டுக்கு போனாலும் இது  மாறாது..”
“என் உடம்புல உயிர் இருக்கிற வரைக்கும் என் மகளுக்கு ஒன்னுன்னா நான் நிப்பேன், அதை யாரும் தடுக்க முடியாது..” என்று சிறிதும் விட்டு கொடுக்காமல் அடித்து பேசினார். 
“ப்பா.. நீங்க எனக்காக இருப்பீங்கன்னு எனக்கு தெரியும்ப்பா.. இவரும் என்னை அப்படி எல்லாம்  கஷ்டபட எல்லாம் விடமாட்டார்ப்பா, சந்தோஷமாதான் வச்சுப்பார், நம்புங்க..” என்று மது ப்ரேமிற்காக சொல்ல, 
“பார்க்கதானே போறேன்.. அப்போ இருக்கு உங்களுக்கு..” என்று கோவத்தோடே  வைத்துவிட, மது ஆயாசத்துடன்  போனை வெறித்தாள். அவளால் இருவரையும் ஒரே நேர்கோட்டில் எடுத்து செல்ல முடியவில்லை, எப்படியாவது முட்டி கொள்கின்றனர். 
“என்னதான் செய்வது..?” என்றவளின் பார்வை பெட்டில் படுத்திருந்த கணவன் மேல் விழுக, நூறாவது முறையாக கணவன் பேசியது மனதில் ஓடியது. 
“ம்ம்..  என்னுடைய மறுப்பு இவரை  இந்தளவு பாதிச்சிருக்கா..? ஆனா நான் என்ன செஞ்சிருக்க முடியும்..? இவருக்காக நான் யோசிக்கல, சப்போர்ட் செய்யலங்கிற மாதிரி நினைக்கிறாரே..?” என்று வேதனைபட்டவளுக்கு, முதல்ல ப்ரேமை சரி செய்ய வேண்டும் என்ற உறுதி எழுந்தது. 
“என்னோட காதலை அவருக்கு புரிய வைக்காதது என்னோட தப்புதான், அதை நான்தான் சரி செய்யணும்..” என்றவளின் எண்ணப்படி, ப்ரேம் நடுஇரவு எழுந்து ப்ரெஷ்அப் செய்து வரவும், அவனை பார்த்து முறைத்து உதடு சுழித்தாள். 
“ஏய்ய்.. என்னடி..?” என்று அவளின் நக்கலான சுழிப்பில் அதட்டலாக கேட்டவன், 
“என்ன உங்க அப்பாவை பத்தி பேசினத்துக்காக இந்த  சுழிப்பா..? அப்படியே முகத்தை பேத்துருவேன் பார்த்துக்கோ..” என்று மிரட்டினான். 
“போதுங்க.. திரும்பவும் ஆரம்பிக்காதீங்க, எவ்வளவுதான் சண்டை போடுவீங்களோ..?”  என்று  சலிப்பு மேலிட கேட்டாள். 
“எனக்கு மட்டும் என்ன புது பொண்டாட்டிகிட்ட கோவப்பட்டு பேச ஆசையா..? அதுவும் இவ்வளவு தூரம் டார்ஜிலிங் வந்து சண்டை போடணும்ன்னு வேண்டுதல் பாரு..” என்று கடுப்பாக பொரிந்தவன், 
“என்னை இப்படி நடந்து வைக்கிறது நீயும், உங்க அப்பாவும் தான்டி..”   என்று காய்ந்தவனை, மது தலையை ஆட்டி பார்த்தவள்,எழுந்து பெட்டுக்கு சென்று படுத்துவிட, 
“ஏய்.. என்னடி..? நான் பேசிட்டே இருக்கேன்..? நீ எனக்கென்னனு தூங்க போற..?” என்று தானும் பெட்டிற்கு வந்தவன், அவளை திருப்பி கேட்டான். 
“பின்ன வேறென்ன தான் செய்ய சொல்றீங்க..?  நான்கூட டார்ஜிலிங்க்கு எதோ ஹனிமூன்க்கு தான் கூட்டி வந்தீங்களோன்னு நினைச்சேன், ஆனா இப்போதான் தெரியுது, ப்ரீயா சண்டை போடவும், கவுந்து படுத்து தூங்கவும்ன்னு தான்..” என்று நக்கலாக சொல்லிவிட, ப்ரேம் தான் பெவென்று நின்றான்.  

Advertisement