Advertisement

“அப்பா இங்கதான் இருக்கார்.. விடுங்க..” என்ற மதுவின் மெலிதான குரலில் தெரிந்த வித்தியாசத்தில் ப்ரேமின் முகம் சட்டென இறுகி போக, கை தன்னாலே விலகியது. 
“மதுமா.. பூ எடுத்து வரவா..”  என்று ஹாலில் இருந்த பக்க கதவின் வழியே தோட்டத்தில் வந்து நின்றவளிடம், “வேண்டாம்..” என்றுவிட, அவர் அங்கிருந்து செல்லவும், அவளின் கண்கள் அந்த தோட்டத்தை வெறித்தது. 
அவளுக்கு பிடிக்கும் என்பதற்காக வடிவேலு பார்த்து பார்த்து செய்த ரோஜா தோட்டம், அங்கிருக்கும் ஒவ்வொரு ரோஜா மலரும் பூத்து குலுங்கி கொண்டிருக்க, மதுவின் மனமோ வாடி வதங்கி கொண்டிருந்தது. 
“ஏன்..? ஏன் இப்படி..? பிறந்ததில் இருந்து என்னை தாங்கின அவருடைய அடையாளத்தை  மொத்தமா தொலைச்சிட்டு போகபோறேன், அதுவும் அவருக்கு வருத்தத்தை, வேதனையை கொடுத்திட்டு போறேன்..”, 
“ஆனா  எனக்கு வேறவழியும் இல்லையே.. என்னால ரெண்டு பேரையும் விட்டு கொடுக்க முடியாதே.. நான் என்ன செய்யட்டும்..?” 
“முதல் முறை அப்பாக்காக ப்ரேமை ஹர்ட் பண்ணேன், இரண்டாம் முறை ப்ரேமுக்காக அப்பாவை ஹர்ட் பண்ணிட்டேன்.. என்னால  ரெண்டு பேருக்குமே உண்மையா இருக்க முடியல..”  என்று கைகளை இறுக்க கட்டி கொண்டு கண் மூடி  அரற்றியவளுக்கு கண்ணில் நீர் நிறைந்து உடைய நேரம் பார்த்து கொண்டிருந்தது. 
“மது.. என்னடா..” என்று தனியாக இருந்த மகளை தேடிவந்த வசந்தாவிற்கு அவளின் தவிப்பான முகம் தெரிய கவலையாக கேட்டார். 
“ம்மா..” என்று அம்மாவின் குரலில் கண் திறந்தவளின் அணை உடைந்தேவிட, அவரை வேகமாக அணைத்து கொண்டு கதறியேவிட்டாள். இத்தனை நாள் மனஅழுத்தம், பிரிவு, தந்தையின் விலகல் என எல்லாவற்றையும் நினைத்து கதறியவளுக்கு, வடிவேலுவின் மதுமா.. அழைப்பு வேண்டும் போல் இருந்தது. 
 “மது.. மது.. என்னடா இது..? ஏன் இப்படி அழற..?” என்று வசந்தாவும் மகளை  அணைத்து கண்ணீர் விட, ஹாலில் இருந்து இதை பார்த்துகொண்டிருந்த ஆண்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் பாதிக்கபட்டனர். 
“மது..”  என்று ரவி தங்கையிடம் ஓடியே வர, வடிவேலுவும், ப்ரேமும்  இருக்கும் இடத்தை விட்டு அசையாமலே மதுவை பார்த்தனர்.
“மது.. ஏண்டா  இப்படி அழற..? ப்ளீஸ் கண்ட்ரோல் பண்ணு..” என்று ரவி தங்கையின் கதறலை தாங்கமுடியாமல் சமாதானம் செய்ய, மதுவின் அழுகையோ இன்னும் இன்னும்தான் அதிகமாகியது. 
“மது.. என்னடா ஆச்சு..? ஏன் இப்படி அழற..?  சொல்லேன், எனக்கு பயமா இருக்குடி, சொல்லு..” என்று வசந்தா தொடர்ந்து கேட்க, 
“ம்மா.. ம்மா.. அப்பா.. அப்பா என்னை மதுன்னு கூப்பிடறாரும்மா,  அப்படி கூப்பிட வேணாம்ன்னு சொல்லுங்கம்மா, மதுமா… கூப்பிட சொல்லுங்கம்மா.. ஒரே ஒரு முறை மட்டுமாவது மதுமா.. கூப்பிட சொல்லுங்கம்மா..” என்று கதறியவளின் கதறல், வடிவேலுவுக்கும், ப்ரேமுக்கும் கேட்க இருவரின் கண்களும் சிவந்தது. 
வடிவேலுவின் கண்கள் அடக்கப்பட்ட துக்கத்தில் சிவந்திருக்க,  சட்டென எழுந்து ரூமிற்குள் சென்றுவிட, ப்ரேமின் கண்களோ அடக்கப்பட்ட கோவத்தில் சிவந்து மேலும் இறுகி போனான். 
“சரி.. சரி.. அப்பாவை மதுமா கூப்பிட சொல்லணும், அவ்வளவுதானே, அதுக்கேன் இப்படி அழுகிற..? இதோ இப்போவே கூப்பிட சொல்றேன், ரவி.. ஓடு, போய்  அப்பாவை கூட்டிட்டு வா.. போ..” என்று மகனை விரட்ட, மகன் இருக்குமிடம் அசையாமல்தான் நின்றான். 
அவனுக்கு தெரியும் வடிவேலு கண்டிப்பாக கூப்பிடமாட்டார் என்று.. அதற்கான காரணமும் அவனுக்கு தெரியும்தானே, 
“ரவி.. போன்னு சொல்றேன் இல்லை..” என்று நகராமல் இருக்கும் மகனை கோவமாக  அதட்ட, 
“ம்மா..” என்று அவருக்கு மேல் அதட்டி, “அவர் கூப்பிடமாட்டார்.. உனக்கு தெரியாது விடு..”  என்று அம்மாவை அடக்கியவன், 
“மது.. மது.. உன்னைதான் இங்க பாரு, அழுகையை நிறுத்து முதல்ல,  நிறுத்துன்னு சொல்றேன் இல்லை..”, என்று அம்மாவிடம் இருந்து தங்கையை பிரித்து தானே கண்ணீரை துடைத்தவன், 
“மது.. நீ கேட்டாலும் அப்பா உன்னை அப்படி கூப்பிடமாட்டார், அது  உனக்கு நல்லா தெரியும் தானே, அப்பறம் ஏன்..? விடு, அவர்கிட்ட பொறுமையா பேசலாம், கண்டிப்பா உன்னை புரிஞ்சிப்பார், சரியா..?” என்று தொடர்ந்து ஆறுதல் சொல்ல, மதுவின் அழுகை குறைந்து  தேம்பலில் நின்றது. 
“ம்மா.. மதுக்கு காபி கொண்டுவாங்க.. போங்க..” என்று தங்களையே சந்தேகத்துடன் பார்க்கும் அம்மாவை அனுப்பி வைத்தவன், 
“மது.. அப்பா உன்னை ஏன் மதுமா கூப்பிடறார்ன்னு உனக்கு தெரியும்தானே..?, அவர் உன்னை அவரோட சின்ன வயசுலே இறந்து போன அம்மாவா பார்க்கிறார்..”
“எந்த ஒரு அம்மாவும் பிள்ளையை எந்த சூழ்நிலையிலும் விட்டு கொடுக்க மாட்டாங்க, அப்படித்தான் அப்பாவும் உன்கிட்ட எதிர்பார்த்தார். ஆனா அது ரொம்ப தப்பு..  அவருக்கு நீ  மகள், அம்மா இல்லை..”
“உனக்குன்னு தனியா  ஒரு வாழ்க்கை இருக்கு, அதுக்கான கடமையும், உரிமையும் உனக்கு இருக்கு, அதைதான் நீ வாழணும், அவருக்கு  நீ மகளா மட்டுமே இருக்க முடியுமே தவிர, எல்லாமுமாக இருக்க முடியாது, அதுக்கான உரிமை ப்ரேமுக்கு மட்டுமே உண்டு..”
“அதுக்காக அப்பாவை நான் தப்பா சொல்லலை, அவரோட எண்ணங்களை, உரிமையை காலப்போக்கிலே மாத்திக்க தயாரா இருக்கணும்தான் சொல்றேன்..”
“அவரும் மாத்திக்க நினைச்சிருக்கலாம், ஆனா அதுக்குள்ள ப்ரேம்.. வடிவேலுன்ற ஈகோ பிரச்சனை, உரிமை போராட்டம், போட்டின்னு எல்லாம் தப்பா போயிருச்சு..”
“ஆனா இது இப்படியே இருக்காது, கண்டிப்பா ஒரு நாள் மாறும், ரெண்டு பேருமே உன்னை புரிஞ்சிப்பாங்க, அப்போ அப்பாவே  உன்னை மதுமா.. கூப்பிடுவார், கவலைப்படாத, சரியா..?” என்று நிதானமாக விளக்க, மதுவின் அழுகை முற்றிலும் நின்றாலும், மனம் இருவரிடையே அல்லாடி கொண்டுதான் இருந்தது.  
“கிளம்பலாமா..?” என்று ரவி சென்னை செல்ல காரை எடுக்க, ப்ரேம் எல்லோரிடமும் சொல்லி கொண்டான். 
“திவ்யா.. உடம்பை பார்த்துக்கோ..”, என்று தங்கையின் தலையை தடவி சொன்னவன், வசந்தாவிடம் “வரேன் அத்தை..” என்று மலர்ந்த முகத்துடன் விடைபெற்று கொண்டான். 
இறுதியாக வடிவேலுவிடம் சென்றவன், “வரேன்..” என்று மொட்டையாக சொல்லிவிட்டு காரில் ஏறிக்கொள்ள, மது நன்றாக மூச்சை இழுத்து தன்னை கட்டுப்படுத்தி கொண்டவள், 
“அண்ணி.. வரேன், உங்களையும், பேபியையும் பார்த்துக்கோங்க..” என்று திவ்யாவிடம் சொல்லிக்கொள்ள, அவள் “ம்ம்..” என்று மட்டும் தலையை ஆட்டினாள். 
“ம்மா..” என்று வசந்தாவை அணைத்து கொண்டவளின் கண்ணீர் அவரின் தோளை நனைக்க,
 “ஷ்ஷ்.. போதும் மது..  ரொம்ப நேரமா அழுதுட்டேதான் இருக்க, கண்ணை துடை..” என்று தானும் கண்ணீரோடு மகளை அதட்டி, தேற்றியவரிடம், “வரேன்ம்மா..” என்று சொல்லி கொண்டவள், இறுதியாக தந்தையிடம் வந்து நின்றாள். 
இருவரின் கண்களும் கலங்கியிருக்க, முகம் தெளிவாக தெரியாமல் போக, இருவருமே அவசரமாக  கண்களை துடைத்து கொண்டனர். 
“மது..” என்று வடிவேலு  எதோ சொல்ல வரவும், 
“வேண்டாம்ப்பா.. என்னை எப்போ நீங்க மதுமா.. கூப்பிடுறீங்களோ, அப்போ என் பேரை சொல்லி கூப்பிட்டா போதும், அதுவரைக்கு தயவு செஞ்சு என் பேரை சொல்லி கூப்பிடாதீங்க.. வேண்டாம்..” என்று வழியும் கண்ணீரை துடைத்து சற்று கோவமாகவே சொன்னவளின் கோவம் எல்லோருக்கும் ஆச்சரியத்தையே கொடுத்தது. 
மதுவின் கோவம்.. அரிது.. அதுவும் தந்தையிடம் என்பது அகராதியிலே இல்லை..  
“மது.. என்ன இது..?” என்று கணவனின் சுருங்கிய முகத்தில் வசந்தா மகளை  கண்டிப்புடன் அதட்டினார். 
“ம்மா.. வேண்டாம், வராதீங்க, இது எனக்கும் எங்க அப்பாவுக்குமானது, இடையில் நுழைய யாருக்கும் அனுமதி இல்லை..” என்று சத்தமாகவே சொல்ல, வடிவேலுவின் முகம் மலர்ந்தது  என்றால் ப்ரேமின் முகம் சுருங்கி போனது. 
“உங்களுக்கு எப்போ என்னை மதுமா.. கூப்பிட தோணுதோ அப்போ என்னை கூப்பிட்டா போதும், அதுவரை பேர் சொல்லி கூப்பிடணும்ன்னு அவசியம் இல்லை, உடம்பை பார்த்துக்கோங்க, டேப்லெட் கரெக்ட்டா எடுத்துக்கோங்க.. வீக்லி செக்கப் மறக்காம போங்க, நான் வரேன்ப்பா..” என்று கண்ணில் நீர் வழிந்தாலும், குரல் கோபத்துடன் கணீரென்றே ஒலித்தது. 
ப்ரேம் ரவியின் பக்கத்தில் அமர்ந்திருக்க,  எல்லோருக்கும் கை காட்டி பின் சீட்டில் அமர்ந்துகொண்ட மது,  மௌனமாக கண்ணீர் சிந்தியபடியே சென்னை ஏர்போர்ட் வந்தடைந்தாள். 
“வரேன்ண்ணா.. அப்பாவை பத்திரமா  பார்த்துக்கோ, ஏதா இருந்தாலும் உன்னைத்தான் கேட்பேன்..” என்று மிரட்டலாகவே சொன்னவளை, சிரிப்புடன் தோளோடு அணைத்து கொண்ட அண்ணன்காரன், 
“சரிங்க மேடம்.. உங்க அப்பாவை நான் கண்ணுக்குள்ளே வச்சு பார்த்துகிறேன் போதுமா..?” என்று குறும்பாக சொல்ல, மதுவின் முகத்தில் லேசான சிரிப்பு. 
அதே சிரிப்புடன் அண்ணனிடம் விடைபெற்றுகொள்ள, ப்ரேமும் ரவியை அணைத்து விடைபெற்று கொண்டவர்கள், அடுத்த சில நிமிடங்களில்  செக்கின் முடிந்து பிளைட்டில் அமர்ந்திருந்தனர். 
“சீட் பெல்ட் போடு..”  என்று பிளைட் கிளம்பவும், ப்ரேம் தன் மௌனத்தை கலைக்க, மது பெல்ட்டை எடுத்து மாட்டினாள். அடுத்த சில மணி நேர பயணத்திற்கு பிறகு பேட்டோக்ரா ஏர்போர்ட் வந்தடைந்தனர். 
அங்கிருந்து தனி கார் மூலமாக டார்ஜீலிங் கிளம்பியவர்களின் பயணம் முழுவதும் மௌனம்.. மௌனம் மட்டுமே.. டார்ஜீலிங்கில் அவர்களுக்கென ஏற்பாடு செய்யபட்டிருந்த  ரிசார்ட்டிற்கு வந்தடைந்தவர்கள், அடுத்த சில நிமிடங்களில்  தங்களை ரெஃப்ரஷ் செய்து கொண்டனர். 
ப்ரேம் போன் செய்து டீ கொண்டுவர செய்ய, இருவரும் அமைதியாகவே குடிக்க, ப்ரேமின் அடக்கப்பட்ட கோவம் வெடிக்கும் நேரத்தை நெருங்கி கொண்டிருந்தது. 
“சோ.. உனக்கும்.. உங்க அப்பாவுக்கும் இடையில் நுழைய யாருக்கும் அனுமதி இல்லை.. அப்படித்தானே..?” என்று டீ  குடித்து முடிக்கவும், ப்ரேம் தன் புது மனைவியை கூர்மையாக பார்த்து கேட்க, மது அவனை நேருக்கு நேராக பார்த்தவள், 
“இல்லை.. எங்க உறவுக்குள்ள மட்டுமில்லை எந்த உறவுக்குள்ளும் நுழையவும் யாருக்கும் அனுமதி இல்லை, நம்ம உறவையும்  சேர்த்துதான்..” என்று சொல்ல, சத்தமாக சிரித்த ப்ரேம், 
“எப்படி..? எப்படி..? நம்ம உறவையும் சேர்த்தா..?  அப்பறம் எப்படி  மேடம் உங்க அப்பா நிச்சயம் செஞ்ச நம்ம உறவுக்குள்ள வலுக்கட்டாயமா  நுழைஞ்சு அதை முறிச்சார்..?”  என்று கேட்க, மது கணவனை ஆயாசத்துடன் பார்த்தாள். மறுபடியும் ஆரம்பித்த இடத்திற்கே வந்தாகிவிட்டது. 
“அதுக்குத்தான் எங்க அப்பாவை பாடப்படுத்துட்டீங்களே..?  இன்னும் என்ன..?” என்று மது ஆதங்கத்துடன் கேட்டாள். 
“அவர்  பார்த்த வேலைக்கு நான் இந்தளவு அவரைவிட்டதே பெரிய விஷயம்..” என்று ப்ரேம்  கடுமையாக சொல்ல, மது அவனை புரியாமல் பார்த்தவள்.
“எங்க அப்பா என்ன செஞ்சார்..?” என்று கேட்டாள்.
“என்ன செஞ்சாரா..? உனக்கு மாப்பிள்ளை பார்த்திருந்தார்..” என்று ஆத்திரத்துடன் வெடித்த ப்ரேமை பயத்துடன்  பார்த்தாள் மதுமித்ரா.

Advertisement