Advertisement

அடுத்தது திருமண இன்விடேஷன்.. வடிவேலு ஒரு மாடல் பார்க்க, ப்ரேம் அவர் முதலில் தூக்கியடித்த இன்விடேஷன்தான்  வேண்டும் என்றான். அதிலும் இரு பக்கத்திற்கும் அந்த இன்விடேஷன் தான் என்று பிடிவாதமாக  நின்றான். 
“என்ன மது இதெல்லாம்..? என் பொண்ணு கல்யாணத்துக்கு இன்விடேஷன் செலக்ட் பண்ற உரிமை கூட எனக்கில்லையா..?” என்று எப்போதும் போல மகளிடம் ஆரம்பிக்க,  அவள் ப்ரேமிற்கு போன் செய்து பேச, அவனோ, 
“உங்க அப்பாக்கு எவ்வளவு  இருந்தா நம்ம முதல் இன்விடேஷனை தூக்கி அடிச்சிருப்பார், அதுவே இருக்கட்டும்..” என்று உறுதியாக பேசினான். 
“சரி.. அதுவும்  இருக்கட்டும்,   அப்பா பார்த்ததும்  இருக்கட்டும், விட்டுடுங்க..”  என்று பொறுமையாகவே  சொன்ன போதும்,  “முடியாது..” என்று ப்ரேம் பிடிவாதமாக நிற்க, கடுப்பான மது,
“இப்போ என்னதான் செய்யணுங்கிறீங்க..? ஏன் தொட்டதுக்கெல்லாம் அவர்கிட்ட வம்பு பண்றீங்க..?” என்று  கோபத்துடன் கேட்டாள். 
“ஆமா அவரு எனக்கு முறைப்பொண்ணு பாரு வம்பு வளர்க்க, போடி..”  என்று ப்ரேம் சொல்ல, மதுவுக்கு மெலிதான புன்னகை. 
“இருக்கலாம்.. போன ஜென்மத்துல ரெண்டுபேரும் அப்படித்தான் இருந்திருப்பீங்க போல..” என்று  சீண்டவே, பொங்கிய ப்ரேம்,  
“எனக்கு அவர் முறைப்பொண்ணா..? அநியாயமா பேசாதடி, அப்பாவும் அந்த மனுஷன்  உனக்கு அப்பாவாதான் இருந்திருப்பார்..” என்று கடுப்பாக சொன்னான்.  
“நீங்க சொல்றது சரிதான், எங்க அப்பா  எல்லா ஜென்மத்திலும் எனக்கு அப்பாவாதான் இருந்திருப்பார்..” என்று மது தந்தையை நினைத்து பாசத்துடன் சொல்ல, ப்ரேமிற்கு காதில் புகை வந்தது. 
“ஆரம்பிச்சிட்டியா..? பெரிய ஜென்ம பந்தம் ரெண்டுபேருக்கும், போடி, அதுக்கு நீ உன்னையும் என்னையும் சொன்னாகூட தகும்..” என்று பொறாமையோடு சொல்ல, 
“அதை சொல்லனுமா என்ன..? நமக்கே தெரியாது..” என்று மது உணர்ந்து சொல்ல,  ப்ரேமின் மனம் காதலில் திளைத்தது. அதனாலே, 
“சரி.. பொழைச்சு போ, ரெண்டு இன்விடேஷனும் இருக்கட்டும், ஆனா இதுதான் கடைசி, இதுக்கு மேல  எதையும் விட்டு கொடுக்க மாட்டேன், நீயும்  உங்க அப்பாக்கு சப்போர்ட் செஞ்சுட்டு என்கிட்ட  வரக்கூடாது..” என்று சொல்ல, மதுவிற்கு மலைப்பு. 
“என்ன..?  இன்னமும் இருக்கா..?” என்று சோர்வாக கேட்டாள். 
“பின்ன..? மண்டப அலங்காரம், கேட்டரிங், ரிசப்ஷன்,  கடைசி தாம்பூலம் வரைக்கும் இருக்கு..” என்று முடிக்க, மதுவிற்கு ஆயாசமாக இருந்தது. 
“ஏன் இப்படி..? இது  கல்யாணமா..? இல்லை, உங்களுக்கும், எங்க அப்பாவுக்கும் நடக்கிற  போட்டியா..?” என்று கேட்டேவிட்டாள். 
“இது போட்டி இல்ல, எனக்கும் அவருக்குமான தன்மான பிரச்சனை,  உரிமை போராட்டம்டி, இதெல்லாம் உனக்கு புரியாது.. போ.. போய் கல்யாணத்துக்கு ரெடியாகுற  வழியை பாரு..” என்று வைத்துவிட்டான். 
“எங்க ரெடியாக..? விடிஞ்சாலே என்ன பஞ்சாயத்துன்னு இல்லை இருக்கு..” என்று நொந்துகொண்டவளின் இடிபடும் நிலை  திருமணத்திற்கு இரண்டு  நாள்முன்  ப்ரேம் இந்தியா வந்து சேர்ந்த  பின்னும் நீடித்தது.
“கிளம்பு.. போலாம்..” என்று வந்ததும் வராததமுமாக வெளியே கிளம்ப சொல்லும் அவனை மது நொந்து போய் பார்க்க, வடிவேலு முறைத்து பார்த்தார். 
“என்ன மது இதெல்லாம்..?” என்று எப்போதும் போல அவர் ஆரம்பிக்க, ப்ரேம் இன்னும் விறைப்பாக நின்றான். 
“ப்ரேம்.. மதுவுக்கு இன்னிக்கு தான் கங்கணம் கட்டியிருக்கு, வெளியே எல்லாம் போக கூடாது..”  என்று ரவி பொறுமையாக சொல்ல, மது அண்ணனை நன்றியுடன் பார்த்தாள். 
“இருக்கட்டும் ரவி, இங்க பக்கத்துலதான்.. உடனே வந்துடுவேன்..” என்று பிடிவாதாமாக நிற்க, கண்டான வடிவேலு, 
“பக்கத்து வீட்டுக்கே கூட  போககூடாது, இதுல எங்க பக்கத்துல..? அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் ரவி..” என்று சொல்ல, ப்ரேமின் முகத்தில் நக்கல் சிரிப்பு, 
“ஏன் ரவி..? நாளைக்கு  ஈவினிங் மித்ராவை கல்யாண மண்டபத்துக்கு கூட்டி வருவீங்கதானே, அதுகூட உங்க வீட்ல இருந்து ஒரு ரெண்டு, மூணு கிலோமீட்டர் தூரம் இருக்குமில்லை..” என்று கிண்டலாக சொல்ல, வடிவேலு மருமகனை நன்றாகவே முறைத்தார். 
“போதும் ரவி.. என்னை பாசமா பார்த்தது, நாங்க போய்ட்டு உடனே வந்துடுவோம்..” என்று கிளம்ப பார்க்கவும், அதுவரை அமைதியாக நின்றிருந்த வசந்தா, “மாப்பிள்ளை..” என்று உரிமையாக கூப்பிட்டவர்,  
“மாப்பிள்ளை.. சடங்கு சம்பிரதாயெல்லாம் நம்ம நல்லதுக்கு தானே, உங்க மாமா கூட உங்க  கல்யாண வாழ்க்கை நல்லா இருக்கணும்ன்னு தான் சொல்றார்..”
“கங்கணம் கட்டிக்கிட்டு வெளியே போறது நல்லது இல்லை மாப்பிள்ளை, நீங்க இன்னிக்கு தான் வந்ததால உங்களுக்கு இன்னமும் கங்கணம் கட்டல, அதனாலதான்  உங்க  வீட்ல விட்டுட்டாங்க, ஆனா மதுவுக்கு நாம காலையிலே கட்டிட்டோம்..”
“அவங்க அப்பா பொண்ணு வாழ்க்கை நல்லா இருக்கனும்ன்னு ஒவ்வொரு  சடங்கு சம்பிரதாயத்தையும் பார்த்து பார்த்து செய்றார், வெளியே எல்லாம் போக வேண்டாமே  மாப்பிள்ளை..” என்று வேண்டுகோளாகவே சொல்ல, ப்ரேம் அவரின் அணுகு முறைக்கு கட்டுநின்றான். 
“ப்ரேம்.. அம்மா சொல்றது சரிதான், அதோட  நீங்களும் ரொம்ப டையர்டா தான் இருக்கீங்க, போய் நல்லா ரெஸ்ட் எடுங்க..” என்று ரவியும் சொல்லி கொண்டிருக்கும் போதே,  ப்ரேமின் கையில் மதுவால்  காபி கொடுக்கப்பட்டது. 
ப்ரேம் மறுக்காமல் எடுத்து கொள்ள, இருவருக்கும் தனிமை கொடுத்து எல்லோரும் சென்றுவிட, ப்ரேம் அமைதியாகவே அமர்ந்து காபியை குடிக்க ஆரம்பித்தான். 
“இதுக்கேன் இவ்வளவு அப்செட் ஆகிறீங்க..?” என்று மது ப்ரேமின் பக்கத்தில் அமர்ந்து கொண்டு கேட்டாள். 
“ச்சு..  என்னோட  கிப்ட்டா  உனக்கு கல்யாண செட் எடுத்து கொடுக்கணும்ன்னு ஆசைப்பட்டேன்..” என்று சொல்ல, மதுவிற்கு எதிலோ தப்பித்த உணர்வு, 
பின்னே..? வடிவேலு  மகளுக்காக   ரிசப்ஷன் செட், திருமண செட், மறுவீடு செட் என எல்லாவற்றையும் பார்த்து பார்த்து வாங்கி குவித்திருருந்தார். 
“பரவாயில்லை விடுங்க..”  என்றவள், மிக நீண்ட நாட்களுக்கு பிறகு அவனை பார்ப்பதால் நன்றாக பார்க்க, அவன் மெலிவு வருத்தத்தை கொடுத்தது.  
“ஏன் இப்படி மெலிஞ்சிட்டீங்க..?  ஒழுங்கா சாப்பிடலையா..? ரொம்ப சோர்ந்து போயிருக்கீங்களே..?” என்று கவலையாக கேட்டாள். 
“ம்ப்ச்.. ப்ரொஜெக்ட் நான் நினைச்சதை விட ரொம்ப இழுத்துருச்சு,  முடிச்சாதான் கிளம்ப முடியும்ன்னதால லாஸ்ட் வீக் புல்லா  டே அண்ட் நைட் வேலை பார்க்க வேண்டியதாகிடிச்சு,  ரெஸ்ட் எடுத்தா சரியாகிருவேன்..”  என்றவன், மதுவின் கையை எடுத்து தன் இரு கையிலும்  பொத்தி கொண்டவன். 
“என்மேல ரொம்ப கோவமா இருக்கியா..?”  என்று அவளின்பக்கம் நன்றாக திரும்பி  அமர்ந்து கேட்டான். 
“இல்லைன்னு சொல்ல முடியாது..” என்று மது உண்மையை ஒத்துகொள்ள. லேசாக சிரித்த ப்ரேம், 
“உன்கிட்ட நிறைய பேசணும், இப்போ முடியாது,  கல்யாணம் முடிஞ்சு யாரோட தொந்தரவானா பார்வையும் இல்லாம ப்ரீயா  பேசலாம்..” என்றவனின் கண்கள் வடிவேலுவின் தலையை பார்த்து சத்தமாக சொல்ல, மது ப்ரேமை நன்றாகவே முறைத்தாள். 
“அவருக்கு பயம்.. எங்க நீங்க என்னை வெளியே கூட்டிட்டு போயிடுவீங்களோன்னு.. என்ன செய்ய..? எங்க அப்பாவை அப்படி பயமுறுத்தி வச்சிருக்கீங்க..”  என்று நொடித்தாள். 
“ஆமா.. அப்படி பயமுறுத்திட்டேன் போடி.. ஆனாலும் நீ ரொம்பத்தான் அப்பா பொண்ணு..” என்றவனின் பார்வை  அங்கு தனியாளாக ஓடியாடி வேலை பார்த்து கொண்டிருந்த வசந்தாவின் மேல் விழுக, தங்கையின் மேல் கோவம் வந்தது. 
மசக்கையை காரணமாக  வைத்து கொண்டு தங்களின் வீட்லே நீண்ட நாட்களாக  இருந்துவிட்ட தங்கையை நினைத்து பல்லை கடித்தவன், அவளிடம் சென்று பேசவேண்டும் என்று நினைத்து கொண்டான்.
“மாப்பிள்ளை.. சாப்பிட வாங்க..”  என்று வசந்தா வரவும்தான், வெகு நேரம் இருவரும் பேசி கொண்டே இருந்துவிட்டது புரிந்தது. 
“இருக்கட்டும் அத்தை.. நான் கிளம்பனும், அப்பா சீக்கிரமே வரச்சொன்னார்..” என்று மறுத்தவனை, ரவியும் வசந்தாவும் வற்புறுத்தி சாப்பிட அழைத்து சென்றனர். 
‘உங்க அப்பா வரலையா..?” என்று ப்ரேம் சாப்பிடமுன் கேட்க, 
“வேண்டாம் ப்ரேம்.. இங்க ஆல்ரெடி எல்லா சாப்பாடும் சூடாத்தான் இருக்கு, நீங்க ரெண்டுபேரும் கண்ணாலே நெருப்பை பத்தவச்சு சூடேத்த வேண்டாம்..” என்று குறும்பாக சொல்லி சிரிக்க, ப்ரேமின் முகத்திலும் சிரிப்பு. அதே சிரிப்புடன் விடைபெற்று கொள்ள, எல்லோருக்கும்  நிம்மதியாக இருந்தது.
“திவ்யா.. நீ ஏன் இன்னும் உங்க வீட்டுக்கு போகாம இங்கேயே இருக்க..? அங்க அத்தை தனியாளா எல்லா வேலையையும் பார்த்துட்டு  இருக்காங்க.. கிளம்பு முதல்ல..” என்று ப்ரேம் சென்று தங்கையிடம் சொல்ல, அவளோ உதவிக்காக அன்னையை பார்த்தாள். 
“என்ன ப்ரேம் பேசுற நீ..? அவளே முடியாதவ.. அவ போய்  அங்க என்ன வேலை செய்வா..?” என்று வைஜெயந்தி மகளுக்காக பேசினார். 
“ம்மா.. அதுக்காக அவ இங்கேயே இருக்க முடியுமா..? போய் ஏதாவது ஒன்னு இரண்டு வேலையாவது செய்யலாம் இல்ல.. இதோ இன்னும் ஒரு நாள்ல கல்யாணமே வந்திருச்சு, இவ இன்னும் இங்கேயே இருக்கா.. இதெல்லாம் முறையா..?”
“அந்த வீட்டு மருமக நான்னு உரிமை மட்டும் பேச தெரிஞ்ச  உன் பொண்ணுக்கு கடமை கண்ணுக்கு தெரியலையா..? எல்லாம் உங்களை சொல்லணும்..” என்று அம்மாவையும் பேசியவன், 
“இங்க பாரு திவ்யா நீ அந்த வீட்டு மருமக, மித்ரா உன்னோட நாத்தனார், அவளோட கல்யாணத்துக்கு செய்ய வேண்டியது உன்னோட கடமை, கிளம்பு போய் அங்க ஆகுற வேலையை பாரு..”  என்று கண்டிபாக சொல்லி சென்றுவிட, அம்மாவும் மகளும் திகைத்து  நின்றனர். 
“பாருங்கம்மா.. அந்த மது எதோ சொல்லி விட்டுருக்கா.. அதனாலதான் அண்ணன் என்னை போக சொல்லிருச்சு..” என்று கண்ணில் நீர் சூழ பேச, அவளை அணைத்து கொண்ட வைஜெயந்தி, 
“விடு திவ்யா.. அந்த மது   எங்க போயிட போற, நம்ம வீட்டுக்கு தானே வரணும், பார்த்துக்கலாம்..” என்று மகளை தேற்ற, அவர்களை அதிர்ப்தியாக பார்த்த சண்முகம், 
“என்ன பேசிட்டிருக்கீங்க நீங்க ரெண்டு பேரும்..? தப்பு நம்ம மேல, நான் முதல்லே சொன்னேன், அவளை அவங்க வீட்டுக்கு அனுபிச்சுவிடுன்னு, என் பேச்சை கேட்கல, இப்போ ப்ரேம் சொல்லவும், பழியை தூக்கி மது மேல போடுறீங்க, சரியில்லை ஜெயா..” என்று மனைவியை கண்டித்தவர், 
“திவ்யா.. நீ ரொம்ப தேவையில்லாம பேசிட்டிருக்கிற.. உன்னோட குடும்பத்தை காப்பாத்துகிற வழியை பாரு, உன் புருஷன் எத்தனை நாளா உன்னை வான்னு கூப்பிட்டுட்டு இருக்காரு.. வீணா அவரையும் கஷ்டப்படுத்திகிட்டு இங்கேயே   உட்கார்ந்திருக்கிற..”  
“உங்க வீட்டுக்கு கிளம்பு முதல்ல.. போய் அந்த வீட்டு மருமகளா ஏதாவது செய்..” என்று மகளை அவளின் புகுந்த வீட்டுக்கு அனுப்பிவிட, அம்மாவுக்கும் மகளுக்கும் மேலும் தான் வன்மம் அதிகம் ஆகியது.
இப்படியே போட்டியும், வெறுப்புமாக கல்யாண நாள் விடிந்தாலும், மதுமித்ரா, ப்ரேமின் காதலால் அந்த நாள் அவர்களின் வாழ்க்கையின் நன்னாளாக மாறியது.

Advertisement