Advertisement

அவளே என் பிரபாவம் 11
“என்ன தம்பி இதெல்லாம்..? நீங்க விருப்பப்பட்டுத்தானே மதுவை மறுபடியும் உங்களுக்கு பேச சொன்னீங்க..? ஆனா உங்க வீட்ல வேற மாதிரி இல்லை பேசிட்டு இருக்காங்க..”  என்று சோமு போன் செய்து ப்ரேமிடம் கேட்டார். 
“என்ன சொல்றீங்க அங்கிள்..? எங்க வீட்லையா..? யார் என்ன பேசினாங்க..?” என்று ப்ரேம் கேட்க, 
“உங்க அம்மாதான் தம்பி.. ரொம்ப சரியில்லாம பேசுறாங்க, பணம், ஜாதகம் பத்தியெல்லாம் பேசுறாங்க.. ஏன் நீங்க தான் விட்டுப்போன சம்மந்தத்தை மறுப்படியும் எடுத்து பேசுறதுன்னு உங்க அம்மாவுக்கு தெரியாதா..? அப்பறம் ஏன் அவங்க  வடிவேலுவை தாக்கி பேசுறாங்க..?”
“அதுவும் பிஸ்னஸ் பத்தியெல்லாம் பேசுறாங்க, உங்க காசு பணம் பார்த்துதான் மறுப்படியும் வடிவேலு உங்களோட சம்மந்தம் வச்சுக்கிற மாதிரி பேசுறாங்க, இப்போ மட்டும் ஜாதகம் எல்லாம்  கூடி வந்திருச்சான்னா வேற கேட்கிறாங்க. இதெல்லாம் கொஞ்சம் கூட சரியில்லையே..” 
“உங்க அம்மா நினைச்சிட்டுகிற மாதிரி உங்க பணம் எல்லாம் வடிவேலுவுக்கு ஒரு பொருட்டே கிடையாது, அவனுக்கு தேவையானது எல்லாம் அவன் பொண்ணு சந்தோஷமா இருக்கனும், அவ்வளவுதான், அதை புரிஞ்சிக்காம  தேவையில்லாம பேசிட்டு இருந்தா என்ன அர்த்தம்..”  
“சரி..  அவங்கதான் ஏதேதோ  பேசுறாங்கன்னு பார்த்தா, உங்க அப்பாவும், தங்கச்சியும் கூட அமைதியாவே இருக்காங்க, அதுவும் உங்க தங்கச்சி அந்த வீட்டு மருமக.. ஒன்னும் சொல்றதுக்கில்லை போங்க..” என்று ப்ரேம் குடும்பத்தை காட்டு காட்டு என்று காட்டியவர்,
“இங்க பாருங்க தம்பி..   உங்க குடும்பம்  ரொம்ப நல்ல மாதிரின்னு கேள்விப்பட்டு  நான் தான் உங்க சம்மந்தத்தையே வடிவேலுவுகிட்ட கொண்டு போனேன், ஆனா நடக்கிறதை பார்த்தா எல்லாம் தப்பா போயிடும் போலயே..” என்று மிகவும் அதிர்ப்தியாக பேசி வைத்துவிட, ப்ரேம் உடனே வீட்டிற்கு அழைத்துவிட்டான்.
“சொல்லு ப்ரேம்..” என்று போன் எடுத்த சண்முகம் கேட்க, 
“ப்பா.. அம்மா, திவ்யா எல்லாம் எங்க..?” என்று கேட்டான். 
“இங்க பக்கத்துல தான் இருக்காங்கப்பா..” என்று சண்முகம் சொல்லவும், 
“சரி.. போனை ஸ்பீக்கர்ல போடுங்க..” என்றவனின் குரல் எதோ சரியில்லாததாக தோன்ற, எந்த கேள்வியும் கேட்காமல் உடனே  மகன் சொன்னபடியே செய்தார். 
“ம்மா.. சோமு அங்கிள் வீட்டுக்கு வந்திருந்தாரா..?” என்று நேரடியாக வைஜெயந்தியிடமே கேட்டான். 
“ஆமா.. வந்திருந்தார்..” என்று வைஜெயந்தியும்  நொடித்து சொல்ல, கண்டு கொண்ட ப்ரேம், 
“என்ன பேசுனீங்க அவர்கிட்ட..?”  என்று சற்று அதட்டியே கேட்டான். 
“ஏன் உன்கிட்ட சொல்லலையா அவர்..?” என்று வைஜெயந்தியும் மகனுக்கு சளைக்காமல் பேசினார். 
“அவர் சொல்றது இருக்கட்டும், நீங்க சொல்லுங்க முதல்ல..? என்ன பேசுனீங்க அவர்கிட்ட..? எதோ  பணம், ஜாதகம்ன்னு எல்லாம் பேசியிருக்கீங்க..?” 
“ஆமா பேசினேன்தான், ஏன் அதெல்லாம் உண்மைதானே..? நம்ம பிஸ்னஸ் லாஸ் பார்த்து நிச்சயம் செஞ்ச கல்யாணத்தையே நிறுத்தினவங்க தானே அவங்க, இப்போ எதோ கடவுள் அருளால நம்ம பிஸ்னஸ் மறுபடியும் நல்லா போகவும், திரும்பவும் ஒட்டிக்க பார்க்கிறாங்க..”  என்று வைஜெயந்தி மிகவும் திமிராக  பேச, ப்ரேமிற்கு பொறுமை பறந்து கொண்டு இருந்தது. 
“ம்மா..  என்ன பேசிட்டிருக்கீங்க நீங்க..? வாய்க்கு வந்ததை எல்லாம் பேசிடுவீங்களா..? இந்த சம்மந்தத்தை மறுபடியும் எடுத்து  பேசறது நான்தான் அவங்க இல்லை..”,  என்று  ப்ரேம் அழுத்தமாக  சொன்னான். 
“சரி.. இப்போ மட்டும் ஜாதகம் எல்லாம் ஒத்து வந்துடுச்சாமா..? எப்படி நீ கேட்டதுக்கு அவர் ஒத்துக்கிட்டாரு..? சொல்லு பார்ப்போம்..” என்று சவாலாக  கேட்க, பல்லை கடித்த ப்ரேம், 
“ம்மா.. நீங்க ரொம்ப தேவையில்லாம பேசிட்டிருக்கீங்க, இப்போவும் அவர் ஒத்துக்கல,  என்னோட அழுத்தத்துலதான் இந்த கல்யாணமே நடக்குது, இதை முதல்ல தெரிஞ்சுக்கிட்டு பேசுங்க..”    என்று பொறுமையை இழுத்து பிடித்து பேசினான். 
“அப்படியென்ன அழுத்தம் கொடுத்து அந்த மதுவை கல்யாணம் செஞ்சுக்கணும் சொல்லு..? நம்ம சொந்தத்துல கூட ரெண்டு மூணு நல்ல சம்மந்தம் இருக்கு, பொண்ணுங்களும் நல்ல குணமா, அழகா இருக்காங்க..” என்று சொல்ல, ப்ரேமின் பொறுமை பறந்தே விட்டது. 
“என் மித்ராவை விட எந்த பொண்ணும் எனக்கு அழகும்  இல்லை, குணமும் இல்லை, இனியொருமுறை இந்த பேச்சு உங்க வாயில இருந்து வரவே கூடாது, இதுதான்  கடைசியா இருக்கட்டும், இல்லை..” என்று எச்சரிக்கையாகவே சொன்னான். 
“என்ன ப்ரேம் இப்படி பேசுற..? உன் நல்லத்துக்குத்தானே சொல்றேன், அந்த மது  சம்மந்தம் நமக்கு வேண்டாம், அவங்க நம்ம கஷ்டத்தை பார்த்து ஓடி போனவங்க, சொன்னா கேளு..” என்று வைஜெயந்தி வெறுப்பாக சொன்னார். 
“ம்மா.. வேண்டாம், இதோட எல்லாம் நிறுத்திடுங்க, நீங்க தேவையில்லாம பேசி பிரச்சனை செய்ய பார்க்கிறீங்க..” என்று மகன் கடுமையாக பேச, அம்மாவினால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
“யாரு..?  நானு தேவையில்லாதது எல்லாம் பேசி பிரச்சனை செய்றேனா..? ஏன் சொல்லமாட்ட..? உனக்கு எப்போவும் அந்த மதுதானே முக்கியம், அவளுக்காக தானே எங்களை இப்படி இறக்கி வச்சு பேசுற..” என்று ஆத்திரத்தோடு கேட்க, 
“ஆமா..  எனக்கு  அவதான் முக்கியம்ன்னு நான் சொல்லிட்டா நீங்க என்ன செய்ய முடியும்..?” என்று மிக மிக நிதானமாக கேட்க, வைஜெயந்தி திகைத்து நின்றுவிட்டார். 
“தாங்க மாட்டீங்க இல்லை, என்னை அந்த நிலையில கொண்டு வந்து நிறுத்திராதீங்க, நான் ஒருநேரம் போல ஒருநேரம் இருக்க மாட்டேன்..”
“ம்மா..   நான்  இந்த செகண்ட் வரைக்கும் உங்களுக்கு ஒரு  நல்ல மகனா, உங்க பொண்ணுக்கு ஒரு  நல்லா அண்ணனா தான் இருந்திட்டு இருக்கேன், என்னோட கடமையில இருந்து எப்போவும்  நான்  விலக  நினைச்சதே இல்லை, இனியும் அப்படித்தான்..”
“ஆனா அது ஒரே குடும்பமா இருந்து செய்றேனா..? இல்லை தனியா இருந்து செய்றேனா..?ங்கிறது உங்க கையிலதான் இருக்கு, இன்னொரு முறை  மித்ராவா..? நீங்களா..?ன்னு பேசிட்டிருக்காதீங்க..? அப்பறம் நான் என்ன முடிவெடுப்பேன்னு எனக்கே தெரியாது..” என்று முடித்துவிட, அவனின் குடும்பத்தினருக்கு வாய் அடைத்த நிலை. 
“ப்பா.. நீங்க  அங்கதான் இருக்கீங்களா..?” என்று சண்முகத்திடம் கோவத்தோடு கேட்டான். 
“சொல்லு… சொல்லு ப்ரேம்..” என்று தந்தை தொண்டையை கனைத்து பேச, 
“போதும்ப்பா.. நீங்க அம்மாவை பேசவிட்டு வேடிக்கை பார்த்தது எல்லாம் போதும், போங்க.. போய் உங்க மகனுக்கு எந்த பிரச்சனையும் இல்லாம கல்யாணம் செய்ற வழியை பாருங்க.. இல்லை உங்களால  முடியாதுன்னா சொல்லிடுங்க, என் கல்யாணத்தை எப்படி நடத்திக்கணும்ன்னு எனக்கு தெரியும்..?” என்று அதே கோவத்தோடு சண்முகத்திடமும் காய்ந்தான். 
“ப்ரேம்.. ஏன் இப்படி எல்லாம் பேசுற..? நான் செய்றேன் இரு..”  என்று சண்முகம் இறங்கிவர, 
“நல்லது ஆரம்பிங்க..”  என்று வைத்துவிட்டான்.  
“ம்மா.. என்னம்மா இது..? அண்ணன் அந்த மதுவுக்காக நம்மளை எப்படி எல்லாம் பேசிருச்சு பாரேன்..” என்று அதுவரை உஷாராக வாய் மூடி கொண்டிருந்த திவ்யா ஆரம்பித்தாள். 
“போதும்  திவ்யா.. ஆரம்பிக்காத,  இனியும் இதைப்பத்தி பேசுறதுல எந்த பிரயோஜனமும் இல்லை, ப்ரேம் முன்ன மாதிரி  இல்லை, அவனை வீணா சீண்டாதீங்க, அது நமக்கு தான் நல்லதில்லை, அவன் ஆசைப்பட்டமாதிரி அவனோட கல்யாணத்தை  செஞ்சு வச்சிரலாம், அதுதான் நமக்கு மரியாதையும் கூட..”  என்று சண்முகம் மகனுக்காக பேசினார். 
“எங்களுக்கு ஒன்னும் ப்ரேமுக்கு கல்யாணம் செய்ய கூடாதுன்னு எல்லாம் இல்லை, அந்த மதுவைத்தான் செய்ய பிடிக்கல..” என்று வைஜெயந்தி வெறுப்போடு சொன்னார். 
“ஏன் ஜெயா..? மது நல்ல பொண்ணுதானே, ஏன் அவமேல உங்களுக்கு இவ்வளவு வெறுப்பு..? வடிவேலுவுதான் ஜாதகத்தை காரணமா வச்சு  கல்யாணத்தை நிறுத்தினார், மது இல்லையே..?”
“இவ்வளவு ஏன் அவ ப்ரேமுக்காகத்தானே இத்தனை நாள் ஆகியும்  கல்யாணம் செஞ்சுக்காம  இருக்கா..”  என்ற சண்முகம் தொடர்ந்து, 
“இங்க பாரு ஜெயா.. எல்லாம் முடிஞ்சுச்சுருச்சு, இனிமேல் நீ தலைகீழா நின்னாலும் இந்த கல்யாணத்தை  நிறுத்த முடியாது,  ஏன்னா இதை ரொம்ப தீவிரமா இறங்கி செஞ்சிட்டு இருக்கிறது உன் மகன்தான், அவங்க இல்லை..”
“அதனால நாமளும் பெத்தவங்கங்கிற மரியாதையோட முன்னாடி நின்னு அவன் கல்யாணத்தை செஞ்சு வச்சிடலாம், அதுதான்  நமக்கு கௌரவமும் கூட, அதைவிட்டு முடியாதுன்னா அவனே செஞ்சுப்பான்.. அவ்வளவுதான்.. பார்த்து நடந்துக்கோங்க..”  என்று முடித்துவிட்டவர், உடனே போன் செய்து வடிவேலுவிடமும்  பேசச்செய்தார். 
“சம்மந்தி.. நாங்க நாளைக்கு வீட்டுக்கு வரோம்,  என்ன..? எப்படிங்கிறதை பேசிடலாம். ப்ரேம் வெளிநாட்டில இருந்து வந்தவுடனே கல்யாணம் முடிக்கிற மாதிரி பார்த்துக்கலாம்..” என்று சண்முகம் ஒரு பொறுப்பான தந்தையாக மகனின் திருமணத்தை எடுத்து செய்ய ஆரம்பித்துவிட்டார். 
அதன்படியே திருமண வேலைகளும் ஆரம்பித்துவிட்டதுதான், ஆனால் இதில் வைஜெயந்தியும், திவ்யாவும் எதுவும் செய்ய தேவையில்லாத வகையில் வடிவேலுவும், ப்ரேமுமே முட்டி கொள்ள ஆரம்பித்தனர். 
முதலில் கல்யாண செலவுகள் யார்  செய்வது என்பதில் ஆரம்பித்தது பிரச்சனை. வடிவேலு முறைப்படி பெண் வீட்டார்தான் செய்ய வேண்டும் என்று உறுதியாக நிற்க, 
ப்ரேமோ, அவரின் பணத்தில் தன் திருமணம் நடக்க கூடாது என்று போர்க்கொடி பிடித்தான். எப்போதும் போல மதுதான் இருவரிடமும் மாட்டிக்கொண்டு முழிபிதுங்கி நின்றாள். 
“என்ன மது இதெல்லாம்..? என் பொண்ணு கல்யாணத்தை செய்ய கூட எனக்கு உரிமை இல்லையா..? நான்தான் செய்வேன், போய் சொல்லு அவர்கிட்ட..” என்று வடிவேலு மகளிடம் குமுற, 
“அவர் காசுல என்னை கல்யாணம் செஞ்சுக்க சொல்றியா..? முடியாதுடி..” என்று ப்ரேமும் வெடித்தான். 
“மது ஆரம்பமே ரணகளாமா இருக்கு, நம்மால முடியுமா..?” என்று ரவியே  தங்கையிடம் கவலைப்படமளவுக்கு எல்லா விஷயத்திலும்  முட்டி கொண்டனர்.  

Advertisement