Advertisement

அவளே என் பிரபாவம் 10 2
“நான் சொல்றதை கொஞ்சம் கேளு வடிவேலு.. ஏன்  இவ்வளவு பிடிவாதம்..?  உன் பொண்ணு தலையில அவன்தான் மாப்பிள்ளைன்னு எழுதியிருந்தா நீ என்ன பண்ண முடியும்..? விட்டுடு போகட்டும்..” என்று சோமு, நண்பனிடம் சொல்ல, அவரை நிதானமாக பார்த்த வடிவேலு, 
“நீ எனக்கு நண்பனாவே இல்லைப்பா.. எப்போ இந்த சம்மந்த பேச்சு நமக்குள்ள வந்ததோ அப்போவே நமக்குள்ளே வேற்றுமை ஆரம்பிச்சுடுச்சு.. என்னமோ எல்லாம் என்னை விட்டு போறது போல இருக்கு..” என்று வெறுமையாக சொல்ல, நண்பனாக பதறி போன சோமு, 
“ஏன்ப்பா இப்படி எல்லாம் பேசுற..? நமக்குள்ள போய் என்ன வேற்றுமை இருக்கு..? அதெல்லாம் ஒன்னுமில்லை..” என்று சோமு வருத்தத்துடன் சொன்னார். 
“இல்லப்பா.. நான் என் பொண்ணு சம்மந்தத்தை நிப்பாட்டினத்தில் இருந்து நீ என்னை பார்க்க வரதே இல்லை, ரவி கல்யாணத்துக்கு கூட சும்மா மூணாவது மனுஷன் போல தலையை காமிச்சிட்டு போயிட்ட.. ம்ப்ச்.. இருக்கட்டும்..” என்ற வடிவேலுவின் மனதில் ஏனோ ஒரு வகையான விரக்தி. 
“வடிவேலு.. ஏன் இப்படியெல்லாம் யோசிக்கிற..? எனக்கு ரவி கல்யாணத்துல  வந்து செய்ய கூடாதுன்னு எல்லாம் இல்லை, ஒரு சம்மந்தம் முறிஞ்சு போச்சேங்கிற ஒரு ஆதங்கம், தப்பு செஞ்சுட்டோமேன்னு ஒரு வருத்தம், மத்தபடி எதுவும் இல்லை..”  என்று சோமுவும் தன் மனதில் இருப்பதை சொன்னார். 
“ம்ம்..  அதுக்குதான் மறுபடியும் வந்திருக்கிறியே..?” என்று வடிவேலு கேட்டார். 
“இல்லப்பா..  ப்ரேம் தம்பி தான் உன்னை  கேட்க சொல்லிச்சு..”  என்று சோமு தயக்கத்துடன்  சொல்லவும், 
“எது எப்போ கல்யாணம் வச்சுக்கலாமான்னா..?  இதுதான் முறையா..?” என்று வடிவேலு கோபத்துடன் கேட்டார். 
“அது.. அது.. அந்த தம்பி வெளிநாடுல இருந்து  வந்தவுடனே கல்யாணம் செய்ய நினைக்குது போல..” 
“இருக்கட்டும், வெளிநாடுல இருந்து நேரா மணவறைக்கு வரட்டும்.. அதுக்காக இப்படியா..? உள்ள ஏற்கனவே நிறைய பிரச்சனை போயிட்டிருக்கு, அதை ஏதும் கண்டுக்காம நேரா  கல்யாணம் செஞ்சுக்க நினைக்கிறது  சரியா..? வரைமுறை வேண்டாம்..?  என்று வடிவேலு பொரிந்தார். 
“நீ சரின்னு சொன்னா சண்முகம் குடும்பத்தோடு வந்து முறையா பேசுவார் வடிவேலு..”
“அதான் நானும் கேட்கிறேன்..? அவங்க வந்து முறையா பேச என்ன இருக்கு..? நான்தான் என் பொண்ணை அங்க கொடுக்க முடியாதுன்னு முதல்லே சொல்லிட்டேன் இல்லை, மறுபடியும் இப்போ வம்படியா வந்து எப்போ கல்யாணம் வச்சுக்கலாம்ன்னு கேட்கிறது  எப்படி இருக்கு..?  சொல்லு, அப்போ என் பொண்ணுக்கு நான் ஒன்னுமே இல்லையா..?” என்று ஆதங்கத்துடன் வெடித்தார். 
“அதெப்படி இல்லாம போயிடும்..?  அப்பா பொண்ணு உறவுங்கிறது விட்டுபோற உறவா..?”  என்று சோமு மற்றவற்றை விடுத்து இதை மட்டும் சொல்லி சமாளிக்க, அவரை முறைத்த வடிவேலு,  
“சமளிக்கறதா நினைப்போ..? இங்க பாரு சோமு,  என் பொண்ணு வாழ்க்கைக்கு நான்தான் பொறுப்பு, அவ வாழ்க்கைக்கு ஏத்ததை தான் நான் கொடுப்பேன், இப்படி எதுவும் சரிப்பட்டு வராத இடத்துல  எப்படி நான் என் பொண்ணை  கொடுக்க முடியும்..?”  என்று வடிவேலு மறுப்பாகவே பேசி கொண்டிருந்தார்.  
“இங்க பாருப்பா.. அந்த தம்பி முன்னபோல் அமைதியா விலகி போகும்ன்னு  எனக்கு நம்பிக்கை இல்லை, அது பேச்சிலே ஒரு தீவிரம் தெரியுது, அந்த தம்பி எனக்கு போன் செஞ்சு சொன்னதே எப்போ முகூர்த்தத்தை   வச்சுக்கலாம்ன்னு உங்க நண்பர்கிட்ட கேட்டு சொல்லுங்கன்னுதான்.. பார்த்துக்கோ..”  என்று சோமு முடிக்க, வடிவேலுவுக்கு கோவமும், ஆத்திரமும் பொங்கியது.  
“என்ன மிரட்டுறாரா..? முடியாதுன்னு சொன்னா என்ன செய்வார்..?”  என்று வடிவேலு கேட்க, அதற்கு பதில் அவரின் கையில் கல்யாண பத்திரிகையா வந்து சேர்ந்தது. 
“என்ன..? என்ன இது..?” என்று வடிவேலு, எடுத்து வந்த  கடைக்காரரிடம் ஆத்திரத்தோடு கர்ஜிக்க, மிரண்டு போன அவர், 
“இது.. இது உங்க பொண்ணு கல்யாண பத்திரிக்கை, எல்லாம் சரியா இருக்கான்னு செக் செஞ்சுக்க சொன்னாங்க.. ஏதாவது கரெக்ஷன் இருந்தா..” என்று சொல்லி கொண்டிருக்கும் போதே, வடிவேலு கோவத்தோடு அந்த பத்திரிகையை தூக்கி அடித்தார். 
“என்னங்க..?” என்று வசந்தா சென்று அதை எடுக்க, அவரை அடித்துவிடுவது போல்  நெருங்கிய வடிவேலு, 
“அதை முதல்ல தூக்கி போடு..” என்று அவரிடம் இருந்து பிடுங்கி  எறிந்தவர், 
“முதல்ல இங்கிருந்து  ஓடி போயிடு, இல்லை எனக்கு வர்ற ஆத்திரத்துக்கு உன்னை..” என்று அந்த கடைக்காரரை  விரல் நீட்ட மிரட்ட, அவர் வேகமாக ஓடியே போனார். 
“என்னங்க.. ஏன் இவ்வளவு கோவம்..? கொஞ்சம் பொறுமையா இருங்க..” என்று வசந்தா கணவரின் அதீத கோவத்தில் பயந்து கெஞ்ச, வடிவேலுவோ நிலை கொள்ளாமல் அங்கும் இங்கும் நடந்தபடி கத்த ஆரம்பித்துவிட்டார். 
“எவ்வளவு தைரியம் அந்த தம்பிக்கு..?  என்னை பார்த்தா எப்படி தெரியுதாம்..? என்னையவே கார்னர் செய்றாங்களா..? நடக்காது.. அவங்க எண்ணம் நடக்கவே நடக்காது..  என்ன செய்றேன் பாரு..” என்று கொதித்தவரின் ரத்த கொதிப்பு அதிகமாகி தலை சுற்றி விழுகவே போய்விட்டார். 
“என்னங்க..”  என்று வசந்தா ஓடி சென்று கணவரை தாங்கி படுக்க வைத்தவர், உடனே குடும்ப டாக்டருக்கு அழைத்து  வீட்டிற்கே வரவைத்து பார்த்தவர், பிள்ளைகளுக்கும்  போன் செய்து சொல்லி ஒரே அழுகை. பதறிப்போன பிள்ளைகளும் அன்றே வீடு வந்து  சேர்ந்தனர். 
“என்னப்பா..? ஏன் இவ்வளவு கோவம்..? பார்த்துக்கலாம் இருங்க, நம்மை மீறி எதுவும் நடக்காது..”  என்று ரவி தந்தையின் அருகில்  நின்று பேச, மது கலங்கிய கண்களோடு அவரை பார்த்து கொண்டிருந்தாள்.  வந்ததுமே வசந்தா எல்லாம் சொல்லியிருக்க, மதுவுக்கு தந்தையை நெருங்க முடியவில்லை. 
அவளால் ப்ரேமையும் சமாளிக்க முடியவில்லை, தந்தைக்கும் சப்போர்ட்டாக நிற்க முடியவில்லை, இருவருமே வேண்டும் என்ற பட்சத்தில் யாரையும் விட்டு கொடுக்க முடியாமல் திணறவே செய்தவள், பொறுக்க முடியாமல் ப்ரேமிற்கு அழைத்தாள்.
“ஏன் இப்படி எல்லாம் செய்றீங்க..? அப்பாக்கு  உடம்பே முடியாம போயிடுச்சு..” என்று  வேதனையோடு சொல்ல, ஓர் நொடி மௌனம் காத்த ப்ரேம், 
“அப்போ நான்.. நான் மட்டும் இங்க குளுகுளுன்னு இருக்கேனா..?” என்று கேட்டான். 
“ம்ப்ச்.. ஏன் இப்படி..?” என்று மது சலிப்பாக கேட்டாள். 
“பின்னே.. எப்போ பார்த்தாலும் அப்பா.. அப்பான்னு அவரை பத்தி மட்டுமே யோசிச்சிட்டிருக்கிற  உன்கிட்ட இப்படித்தான் பேசமுடியும், கொஞ்சமாவது என்னை பத்தி யோசிச்சா இந்த பிரச்சனைகளே இருக்காது, ஆனா நீ  ம்ஹூம்.. எப்போவும் அப்பாதான்.. அப்போ நான் இப்படித்தான் செய்ய முடியும்..”  என்று சிறிதும் விட்டு கொடுக்காமல் பேசுபவனிடம் எத்தனை முறை தான் முட்டி கொள்வது. 
“ப்ளீஸ்.. கொஞ்சம் பொறுமையா இருங்க, என்ன செய்றதுன்னு பார்க்கலாம், இப்படி அவசர வேண்டாம்..” என்று மது விடாமல் கேட்க, நக்கலாக சிரித்த ப்ரேம், 
“எப்படி.. எப்படி.. நான் இன்னும் கொஞ்சம் பொறுமையா இருக்கணுமா..? எதுவரைக்கும்..? பதில் சொல்லு, எந்த வருஷம்..?, எந்த மாசம்..?, எந்த தேதின்னு..?  உறுதியா சொல்லிடு.. அப்படியே இந்த செகண்டே எல்லா ஏற்பாட்டையும்  நிப்பாட்டிடுறேன்..” என்று கேட்க, மதுவால் நேரம் காலம் சொல்ல முடியுமா..? 
“பதில் கிடையாது இல்லை, அப்போ வாயை மூடிட்டு கல்யாணத்துக்கு தயாராகிற வழியை பாரு.. எப்போ பார்த்தாலும் பேசினதையே பேசிகிட்டு..” என்று முடித்தான். 
“எனக்கென்னமோ நீங்க அவசரப்படுறீங்களோன்னு தோணுது, இப்போ சூழ்நிலை எதுவும்  சரியா இல்லை, தயவு செஞ்சு யோசிங்க.. எனக்கு என்னமோ எல்லாம் தப்பா போயிடுமோன்னு பயமா இருக்கு, மனசு உறுத்தது..” என்று மது வருங்கால பயத்தை சொல்ல, ப்ரேமிற்கு அதை ஏற்கும் எண்ணம் இல்லை, 
அவன் கேள்விப்பட்டது அவனை மனிதனாக இருக்க விடவில்லை, 
“இங்க பாரு   மித்ரா.. முதல்ல நீ கல்யாணம் வேண்டாம்ன்னு சொன்ன.. நான் கேட்டுகிட்டு விலகி  இருந்தேன்இல்லை.. இப்போ நான் கல்யாணம் வேணும் சொல்றேன், நீ ஏன் கேட்டுக்க மாட்டேங்கிற..?”
“உனக்காக..  உங்க அப்பக்காக நான் இத்தனை வருஷம் பொறுமையா இருந்தேன் தானே..? நீ உங்க அப்பாக்காகன்னு கேட்டுக்கிட்டதால  அரேஞ் செஞ்ச கல்யாணத்தை நிப்பாட்டவும் செஞ்சேன் தானே..?”
“இப்போ என் முறை மித்ரா.. நீ எனக்காக உங்க அப்பாகிட்ட பேசு, அவரை கல்யாணத்துக்கு ஒத்துக்க வை, உனக்காக நான் விட்டுக்கொடுத்தது போல  அவரையும்  விட்டுக்கொடுக்க சொல்லு, நம்ம கல்யாணத்தை நடத்த சொல்லு…”  
“ இல்லை உன்னால  உங்க அப்பாகிட்ட  முடியாதுன்னா சொல்லு  நான் பேசுறேன், இந்த செகண்டே போன் செஞ்சு பேசுறேன்..” என்று சொல்ல, பதறிப்போன மது, 
“இல்லை..  இல்லை வேண்டாம்..” என்று வேகமாக மறுத்தாள். 
“இது.. இதுதான் பிரச்சனை.. நான் எப்போ உங்க அப்பாகிட்ட பேச கேட்டாலும் நீ வேண்டாம்ன்னு சொல்ற.. சரின்னு உன்னை பேசச்சொன்னா நீ அவர்கிட்ட பேசாம, என்கிட்ட  வந்து பேசுற.. நான் என்ன செய்யட்டும் சொல்லு..”, 
“கடைசியா  வேற வழி இல்லாமத்தான் சோமு அங்கிளை விட்டு உங்க அப்பாகிட்ட பேசசொன்னேன், ஆனா உங்க அப்பா ஒத்துக்க முடியாதுன்னா என்ன செய்வேன்னு கேட்டிருக்கார், அதுக்குத்தான் இந்த பத்திரிக்கை.. அதையும் தூக்கி அடிச்சிருக்கார்..”
“அடுத்து கல்யாண மண்டபம், ஜவுளி தான், நான் பின் வாங்க போறதில்லை மித்ரா,  பார்த்துக்கோ..” என்று உறுதியாக நின்றவனிடம்,  
“விட்டே கொடுக்க மாட்டேங்களா..? அப்பா முடியவே முடியாதுன்னு சொல்லிட்டா செய்ய முடியும்..?” என்று மது கேட்க, மெலிதாக சிரித்த ப்ரேம், 
“கல்யாணங்கிறது என்ன மதுமித்ரா..? ஒரு மஞ்ச கயிறு, அதுல ஒரு தாலி.. அதை என்ன செய்யணும்ன்னா அப்படியே உன் கழுத்துல கட்டி ஒரு மூணு முடிச்சு போடணும்..”
“இதை மண்டபத்துலதான் வச்சி கட்டணும்ன்னு  இல்லை, உங்க வீட்ல வச்சு கூட கட்டலாம், இல்லை ரோட்ல வச்சு கூட கட்டலாம், இல்லை உன் ட்ரீம் பிளேஸ் அந்த பொட்டிக்ல வச்சு கூட கட்டலாம்..”
“நீ எங்க என் கண்ணுல சிக்கிறியோ  அங்கேயே உன் கழுத்துல அந்த மஞ்ச கயிறை கட்டி என்னோட பொண்டாட்டி ஆக்கிடலாம்.. ரொம்ப  சிம்பிள்.. இதுக்கு மொத்தமா ஒரு நிமிஷம் கூட ஆகாது, என்ன சொல்ற..?” என்று நக்கலாக கேட்க, மதுவுக்கு இது ப்ரேம்தானா என்ற சந்தேகமே வந்துவிட்டது. 
 “என்ன பேசிட்டிருக்கீங்க நீங்க..? உங்ககிட்ட இருந்து நான் இதை எதிர்பார்க்கல..”  என்று அதிர்ப்தியாக கேட்டாள். 
“இனிமேல் எதிர்பாரு.. போ..  போய் உங்க அப்பாகிட்ட பேசற  வழியை பாரு.. எல்லா  நேரமும் அவர்  பாசமே  ஜெயிக்கணும்ன்னு இல்லை, என் காதலும் ஜெயிக்கட்டும்..”
“பார்க்கிறேன் இந்த முறை  அவரா..? நானா..?ன்னு..”  என்று வடிவேலுவின் மேல் சுயமரியாதை கொண்டு சிலிர்த்து நின்றான். 
“இதுல நீங்களா..?  அப்பாங்கிறது…?  எங்கிருந்து வந்தது..? ஏன் இப்படி பர்சனலா எடுத்துகிறீங்க..? இது நல்லதுகில்லை..”  என்று மது தெளிவாக சொல்ல, 
“இதை அப்படியே போய் உங்க அப்பாகிட்ட சொல்லுடி..” என்று வைத்துவிட, மது தலை மேல் கை வைத்து அமர்ந்துவிட்டாள்.
“என்னங்க.. சோமு அண்ணா போன் பண்ணியிருந்தார், சம்மந்தி வீட்ல நாளைக்கு வரச்சொல்லவான்னு கேட்கிறார்..” என்று வசந்தா  சொல்ல, வடிவேலு மகளை பார்த்தவர்,  
“நீ என்னம்மா சொல்ற..?” என்று நீண்ட நாட்களுக்கு பிறகு மகளிடம் பேசினார். ஆனால் அதற்கு பதில் சொல்லத்தான் மதுவால் முடியவில்லை. 
“ப்பா.. நான்.. நான்..” என்று திணறுபவளை வெறுமையாக பார்த்தார். 
“பரவாயில்லை சொல்லும்மா..  அப்போதானே மாப்பிள்ளை வீட்ல சொல்ல  முடியும்.?” என்று மீண்டும் கேட்க, மது என்னவென்று சொல்வாள்..? 
“ஏங்க.. மதுகிட்ட போய்  கேட்டா  அவ என்னங்க சொல்லுவா..?” என்று வசந்தா கணவனிடம் ஆட்சேபித்தார். 
“சரி நீ சொல்லு, உன் பொண்ணு விஷயத்துல நான் என்ன முடிவு எடுக்கட்டும்..?” என்று மனைவியை கேட்டார். 
“நான் என்ன சொல்லுவேன்..? என் பொண்ணுக்கு யாரை பிடிச்சிருக்கோ அவங்களை கல்யாணம் செஞ்சு வைங்கன்னு தான் சொல்லுவேன்..” என்று  வசந்தா முதல் முறையாக மகளுக்காக கணவனை எதிர்த்து நிற்க தயாரானார். 
“அப்போ அவளுக்கு பிடிச்சவரு எனக்கு பிடிக்கலைன்னா பரவாயில்லையா..?” என்று வடிவேலு கொந்தளிப்பாக கேட்டார். 
“உங்களுக்கு பிடிச்சு நீங்க கை காட்டின மாப்பிளையை தான் என் பொண்ணுக்கு பிடிச்சிருந்தது..” என்று வசந்தா  பட்டென சொல்லிவிட,  பிள்ளைகள் தாயை ஆச்சரியமாக பார்த்தனர்.
“நான் இல்லங்களையே..? ஆனா அது சரிவரதுன்னுதானே வேண்டாம்ன்னு சொல்றேன்..”  என்று வடிவேலு சொல்ல, அவரை தீர்க்கமாக பார்த்த வசந்தா, 
“நல்லா இருக்குங்க நீ பேசறது, நீங்க பாரு சொன்னா அவ பார்க்கணும், வேண்டாம்ன்னு சொன்னா அவ  விட்ரனும்.. அப்படித்தானே..? இது இவங்க ரெண்டு பேரோட வாழ்க்கை சம்மந்தப்பட்ட விஷயம்..”
“ நீங்க எடுக்கிற முடிவால பாதிக்கபடுறது அந்த தம்பி மட்டுமில்லை, உங்க  பொண்ணும் தான், அதை மனசுல வச்சுக்கிட்டு பேசுங்க..” என்று ஒரு அம்மாவின் ஆதங்கத்துடன் வெடித்தவரை, கூர்மையாக பார்த்த வடிவேலு, 
“அப்போ நான்தான் தப்புன்னு சொல்றியா..?” என்று கேட்டார். 
“எனக்கு நீங்க தப்பா.. ரைட்டான்னு எல்லாம் தெரியாதுங்க.. அதை பத்திபேசவும் நான் வரல, எனக்கு என் பொண்ணோட சந்தோசம் முக்கியம்.. அவ்வளவுதான்..” என்று கறாராக பேச, வடிவேலுவிற்கு  சுற்றி நடப்பது எல்லாம் அவருக்கும், அவர் மகளுக்கும் எதிராக நடப்பது போலே இருந்தது. 
“அப்போ எனக்கு என் பொண்ணு சந்தோசம் முக்கியம் இல்லைன்னு சொல்றியா..?” என்று வெறுமையாக கேட்டார். 
“அப்படி என்னால மட்டுமில்லை யாராலும் சொல்ல முடியாது,  உங்களுக்கு உங்க பொண்ணு தான் எல்லாம்ன்னு எல்லோருக்கும்  தெரியும், அது பேச்சில்லை, நான் சொல்றது,   அவ உங்களுக்கும் அந்த தம்பிக்கும் இடையில மாட்டுகிட்டு அல்லாடறதை பாருங்கன்னு சொல்றேன்..”
“அவ மனசை புரிஞ்சுக்கோங்கன்னு சொல்றேன், அவ ஆசையை பத்தி நினைச்சு பாருங்கன்னு சொல்றேன், உங்களுக்காக அவங்க பொறுத்து போறது போல நீங்க அவங்களுக்காக யோசிங்கன்னு சொல்றேன்.. நம்ம பொண்ணு சந்தோஷத்துக்காக  நீங்க  கொஞ்சம் தள்ளி நிக்கலாம்ன்னு சொல்றேன்..”  என்று சொல்லிவிட, வடிவேலுவுக்கு கடைசி வார்த்தை உயிர் வரை சென்று குத்த, மது பதறி போனாள். 
“ம்மா.. என்ன பேசிட்டிருக்க நீ..?” என்று அம்மாவை பார்த்து கோவத்தோடு கேட்கவும் செய்தாள். 
“நீ சும்மா இரு மது, இது எனக்கும் என் புருஷனுக்குமான பேச்சு, என் மகளுக்காக நான் கேட்டுக்கிட்டிருக்கேன், நீ உள்ள வராத..” என்று மகளை கண்டிப்புடன்  அதட்டியவர், 
“இங்க பாருங்க.. எல்லா வீட்லயும் சண்டை வரும்,  கஷ்டம் இருக்கும், எல்லாம்தான் இருக்கும், அதை எல்லாம்  ஏத்துக்கிட்டு சாமாளிச்சு தான் வாழனும், அதை விட்டு என் பொண்ணு எந்நேரமும் சந்தோஷமா சிரிச்சிகிட்டே இருக்கனும் நினைச்சா முடியுமா..? சொல்லுங்க..”
“இத்தனை வருஷம் அவளை கண்ணுக்குள்ள வச்சு வளர்த்துட்டு இப்போ அவ வாழ்க்கையோட முக்கியமான கட்டத்துல அவளை கஷ்டப்படுத்தாதீங்க,  அவளுக்கு பிடிச்ச வாழ்க்கையை அமைச்சு கொடுங்க..”
“அவ விருப்பம் அங்கதான் இருக்குன்னு தெரிஞ்சும் இப்படி அவளை  இழுத்து பிடிக்கிறது  அவளுக்கு நீங்க  செய்ற அநியாயமா தான்..”  என்று முடித்துவிட, வடிவேலுவால் என்ன பேச முடியும்..? 
அவர் பக்கம் ஆயிரம் காரணம்   இருந்தாலும், மகளின் விருப்பம் எனும் இடத்தில் எல்லாம் அடிபட்டு போவதை உணர்ந்தவருக்கு மனதில் ஒரு தளர்வுடன் கூடிய இறுக்கம். 
மகள் விலகி செல்லும் தளர்வு, அதை தாங்கமுடியா இறுக்கம்.. என்ன செய்ய..? பெண்ணை பெற்ற எல்லா அப்பாக்களும் ஒரு நேரத்தில் அனுபவிக்கும் ஓர் கொடிய உணர்வு.. அதை இந்த நொடி வடிவேலுவும் உணர்ந்தார். 
“மது.. நான் என்ன செய்யட்டும் சொல்றா..? அப்பாக்கு எதுவும்  தெரியல.. உனக்கு அவரைதவிர யாரும் வேற யாரும் வேண்டாமா..?” என்று இறுதியாக மகளிடம்  கேட்டார். 
“மது.. சொல்லு, அமைதியா இருக்காத, சொல்லு மது..” என்று வசந்தாவும், 
“உன் மனசுல இருக்கிறதை அப்பாகிட்ட சொல்லுடா..” என்று ரவியும் தொடர்ந்து வற்புறுத்த,  ப்ரேமின் தீவிர பேச்சும்  மனதில் பயத்தை கொடுக்க, அப்பாவை கெஞ்சுதலாக பார்த்தவள், 
“ப்பா.. எனக்கு.. எனக்கு அவர்.. அவர் மட்டும்தான்.. கடைசிவரை.. ப்ளீஸ்ப்பா.. ஒத்துக்கோங்க..” என்று சொல்லியும் விட, வடிவேலுவுக்கு எங்கோ தோற்ற உணர்வுதான்  வந்தது. 
“சரிம்மா.. சம்மந்தி வீட்ல  வரசொல்லிடு..”  என்று வசந்தாவிடம் சொல்லவிட்டு எழுந்து சென்றுவிட, 
“ஏய்… மது.. அப்பா ஒத்துக்கிட்டார்டா.. சூப்பர்..” என்று ரவியும், வசந்தாவும் மதுவை மகிழ்ச்சியோடு அணைத்து கொள்ள மதுவிற்கு தந்தையின் வெறுமையான முகம்தான்  மனதில் நின்றது.
“ஏன் ஓகேன்னு சொல்லமாட்டாங்க..? அதான் எங்க பிரச்சனை எல்லாம் தீர்ந்துடுச்சு இல்லை, எங்க கடையும் ஓகோன்னு ஓடுது, என் மகனுக்கும் பெரிய பெரிய ப்ராஜெக்ட் எல்லாம் கிடைச்சி வெளிநாட்ல இருக்கான், எப்படி விட முடியும்..?” என்று  சோமு சென்று விஷயத்தை சொல்லவும் வைஜெயந்தி திமிராக பேச, சோமுவுக்கே முகம் விழுந்துவிட்டது. 
“என்ன இப்படி பேசுறீங்க..? பணம் எல்லாம் அவங்களுக்கு ஒரு விஷயமே கிடையாது..” என்று முகத்துக்கு நேரே சொல்லிவிட்டார். 
“அதெப்படிங்க இப்போ மட்டும் ஜாதகம் எல்லாம் நேரா  இருக்கா..?” என்று வைஜயந்தி விடாமல் கேட்க, சோமு, திமிராக அமர்ந்திருந்த  திவ்யாவை பார்த்தார். 
“என்ன இந்த பொண்ணும் ஒன்னு சொல்ல மாட்டேங்குதே.. சரியில்லையே..” என்று நினைத்தவர்,  
“இங்க பாரும்மா.. பசங்க ஆசைபட்டாங்கதான் வடிவேலு இறங்கி வந்திருக்கார்.. அதுக்காக இப்படி எல்லாம் பேசாதீங்க..” என்று சற்று காரமாகவே சொன்னார். 
“ஜெயா.. நீ கொஞ்சம் அமைதியா இரு.. நம்ம மகனோட விருப்பம்தான் நமக்கு முக்கியம்..” என்று மனைவியை அமைதிப்படுத்திய சண்முகம், 
“நாங்க நாளைக்கே பேச வரோம்ன்னு சம்மந்திகிட்ட சொல்லிடுங்க..” என்று முடித்துவிட்டார்.

Advertisement