Advertisement

அவளே என் பிரபாவம் 10  1
“ஏன் ப்ரேம் இப்படி..? மது என்ன செய்வா சொல்லுங்க..?”  என்று ரவி ஆதங்கத்துடன் ப்ரேமிற்கு அழைத்து கேட்டுவிட்டான். அவனுக்கு வேறு வழியும் தெரியவில்லை. 
காலை பெங்களூர் செல்வதற்காக சென்னை வந்திருந்தவனுக்கு வீட்டின் சூழ்நிலை சரியில்லாததகாக தோன்ற வசந்தாவிடம் விசாரித்தான். 
“ஏன்மா..? என்ன ஆச்சு..? மது ஆர்டர் நல்லபடியா முடிஞ்சிடுச்சுதானே..? அப்புறம் ஏன் அப்பாவும், மதுவும் எப்படியோ இருக்காங்க..?” என்று கேட்டான். 
“ம்ப்ச்.. என்ன சொல்ல ரவி..? என் பொண்ணு இப்படி தவிக்கணும்ன்னு அவ விதியில இருக்கும் போல..” என்று துயரத்துடன் ப்ரேம் போன் செய்து பேசியதை சொல்ல, கேட்டிருந்த ரவிக்கு இது முடியவே முடியாதா..? என்றிருந்தது. 
“அப்பா.. அப்பாக்கு தெரியுமா..?” என்று தந்தையின் அசாதாரண மௌனம் உண்டாக்கிய சந்தேகத்தால் கேட்டான். 
“எல்லாம் தெரியும்..? ஒரே வீட்ல தானே இருக்கோம்.. மது என்கிட்ட சொன்னதே கேட்டிருக்கும்..”  என்று வசந்தா கணவன் மேல் கொண்டிருந்த கோவத்தால் இடித்து பேசினார். 
“ஓஹ்.. தெரியுமா..? இதை பத்தி மதுகிட்ட, உங்ககிட்ட எதுவும்  பேசலையா..?”  என்று லேசான ஆவலுடன் கேட்டான். 
“அவராவது இதை பத்தி  பேசறதாவது..? போ ரவி.. அமைதியாவே உட்கார்ந்திருக்கார்.. என்ன நினைக்கிறான்னு கூட கண்டு பிடிக்க முடியல.. மது விஷயம்ன்னு  வந்தா ஆளே மாறிடறாரு.. புருஷனா நினைச்சா கிட்ட கூட நெருங்க முடியறதில்லை..”  என்று சலிப்பாக சொன்னார். 
“சரி இதுக்கு என்னதான் வழி..? அப்பாவும், ப்ரேமும் சேர்ந்து மதுவை நெருக்குனா அவ என்ன பண்ணுவா..? யாரை விட்டு கொடுப்பா..? யாருக்காக பேசுவா..? இது  ஏன் ரெண்டு பேருக்கும் புரியவே மாட்டேங்குது..” என்று ரவி  தங்கையின் நிலையை நினைத்து பொங்கினான். 
“எனக்கும் அதுதான் புரியல ரவி.. அப்பாக்கும் சரி, அந்த ப்ரேம் தம்பிக்கும் சரி மதுதான் உயிரே.. ஆனாலும் அவளை இப்படி அல்லாடவைக்க ரெண்டுபேருக்கும் எப்படித்தான் மனசு வருதோ தெரியல போடா.. இதுக்கு ரெண்டுபேரும் என் பொண்ணு மேல பாசம் வைக்காமலே இருந்திருக்கலாம்..” என்று வடிவேலுவின்  தலை தெரிந்து வேண்டுமென்றே பேசினர் இருவரும். 
“நீங்க சொல்றதும் சரிதான்மா.. இவங்க பாசம் தான் மதுவை ரொம்ப கஷ்டப்படுத்துது.. பாருங்க எப்படி இருந்தவ இப்போ எப்படி ஆயிட்டான்னு.. எந்நேரமும் போராட்டமாவே இருந்தா எப்படி..?” என்று ரவியும் பேச,  வடிவேலு உள்ளே சென்று மறைவது  தெரிய, அம்மாவும் மகனும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். 
“டேய் ரவி.. ரொம்ப அதிகமா பேசிட்டோமா..? அப்பா ஏதாவது  வருத்தப்படுவாரா..?”  என்று வசந்தா கணவனின் மனநிலை குறித்து கவலையுடன் கேட்டார். 
“கண்டிப்பா வருத்தப்படுவார்.. ஆனா அதேசமயம் யோசிக்கவும் செய்வார்மா,  எனக்கு அப்பா மேல முழு நம்பிக்கை இருக்கு..”  என்று ரவி உறுதியாக சொல்ல, அதை ஆமோதித்த வசந்தா, 
“நமக்கு இதை விட்டா வேற வழியும் இல்லைடா ரவி, அவர்கிட்ட போய் நேரா பேசவே முடியாது, என் பொண்ணுக்கும், எனக்கும் இடையில யாரும் வரக்கூடாதுன்னு வெட்டிடுவார்.. அப்பறம் எப்படித்தான் பேச..?” என்ற வசந்தா, 
“இந்த மது பொண்ணும் அவங்க அப்பாகிட்ட போய் பேச  ரொம்பவே தயங்குறா..? என்னமோ சரியில்லடா ரெண்டுபேருக்கும், அந்த பணம் விஷயத்துக்கு  அப்பா அவகிட்ட இப்படி நடந்துப்பார்ன்னு எனக்கு தோணல..” என்று வசந்தா ரவியை சந்தேகமாக பார்த்தவர், 
“ரவி.. உனக்கு தெரியும் தானே..? அம்மாகிட்ட சொல்லு..  என்ன ஆச்சு..? மது பணம் எங்க..?”  என்று கேட்க, ‘இதென்ன பந்து  நம்ம பக்கம் வருது..’  என்று  உஷாரான ரவி, 
“ம்மா.. எனக்கென்ன தெரியும்..? நீ உன் மகளையே கேட்கவேண்டியது தானே..? இல்லை உன் புருஷனை கேட்கவேண்டியது தானே..?”  என்று வேகமாக சொன்னான், 
“க்கும்.. கேட்டுட்டாலும்..  உங்க யாருக்கும் தான் என்னை பார்த்தா ஒரு ஆளாவே தெரியல..” என்று  நொடித்து கொண்டவருக்கு மருமகளின் செயல் மனத்தாங்கலை கொடுத்தது.  
இன்று அவளும் தான் ட்ரைனில் ரவியுடன் பெங்களூர் செல்வதாக ஏற்பாடு, ஆனால் அம்மா வீடு சென்றதும் போனும் செய்து பேசுவதில்லை, அவரிடம் ஊரிலே இருந்து கொள்வதாக  சொல்லவும் இல்லை, 
இவரே தான் மனசு கேட்காமல் தினமும் மருமகளுக்கு அழைத்து பேசி கொண்டிருக்கிறார். அப்படியும் அவள் அம்மா வீட்லே நின்று கொள்வதை பற்றி ஒரு வார்த்தை கூடசொல்லவில்லை. அதை பற்றி அவளிடம் கேட்கவும் வசந்தாவிற்கு மனம் இல்லை, 
“தெரியாமல் செஞ்சா பரவாயில்லை, தெரிஞ்சே செஞ்சா என்ன கேட்க..? வீணா பிரச்சனை.. மனசு கஷ்டம்தான்.. இருக்கிறதே போதும்..”   என்று பெரு மூச்சு விட்டு கொண்டவர், 
“ரவி.. அப்போ உனக்கு எதுவும் தெரியாது அப்படித்தானே..?” என்று மீண்டும் கேட்டார்.  
“ம்மா.. அதை விடுங்கம்மா..  ப்ரேம் கேட்டதுக்கு என்ன வழின்னு பார்ப்போம்..” என்று மாற்றிவிட, வசந்தாவும் அதையே பேசினார். 
“நாம என்ன பார்க்கிறது ரவி..? ஒன்னு ப்ரேம்  விட்டு கொடுக்கணும், இல்லை  மதுக்காக அப்பா  பார்க்கணும்.. இங்க ரெண்டுமே நடக்கிற வழியை காணோம்..”  என்று வசந்தா அங்கலாய்ப்பாக சொன்னார். 
“ ப்ரேம்  கொஞ்சம் பொறுமையா போலாம் இல்லைம்மா, அவளை போட்டு இப்படி ரெண்டுபக்கமும்  உருட்டுனா அவ என்ன செய்வா..?” என்று ரவி மனத்தாங்கலாக சொன்னான். 
“இதுல இன்னிக்கே  முடிவை கேட்டு மதுக்கு போன் பண்றேன்னு வேற சொல்லயிருக்கார்..”  என்று வசந்தா சொல்ல, 
“ஒரே நாள்ல அவ என்ன முடிவு எடுப்பா..? என்ன நினைச்சிட்டு இருக்கார்..? மதுவை பத்தி கொஞ்சம் கூட யோசிக்காம என்ன இதெல்லாம்..?” என்று பொறுமியபடி ப்ரேமிற்கு அழைத்து கேட்டும் விட்டான். 
“என்ன ப்ரேம் இது..? ஒரே நாள்ல முடிவை கேட்டா அவ  என்ன செய்வா..?”  என்று எடுத்தவுடனே  சிறிது ஆவேசத்துடன்   கேட்க, ப்ரேமோ ரவியின் ஆவேசத்தை கணக்கில் கொள்ளாமல்,  
“எப்படி இருக்கீங்க ரவி..? என்று மிக நிதானமாக அவனின் நலம் விசாரிக்க,  ரவி விழிக்கவே செய்தான்.
“திவ்யா எப்படி  இருக்கா..? அங்க நம்ம வீட்லே கொஞ்ச நாள் இருக்கேன்னு நின்னுட்டா போல.. இப்போ நீங்க மட்டும்தான் பெங்களூரா..?” என்று மேலும் தொடர்ந்து கேட்டு கொண்டிருக்க , பல்லை கடித்த ரவி, 
“ப்ரேம் என்ன இது..? நான் மதுவை பத்தி பேசிட்டிருக்கேன்..” என்று கோபத்துடன்  கேட்க, ப்ரேமிடம் இருந்து ஒரு ஆழ்ந்த மூச்சு சீறலாக  கேட்டதை தொடர்ந்து,   
“ரவி.. எனக்கும், மதுவுக்கும் இடையில் யார் வர்றதையும்  நான் விரும்பல,  எனக்கும், அவளுக்கும் நாங்களே போதும்.. வேறு யாரும் வேண்டாம்.. நாங்க.. நாங்க மட்டும்தான்.. இடையில் யாரும் கிடையாது..”  என்று மிக நிதானமாக, அழுத்தமாக சொல்ல, ரவிக்கு அடுத்த வடிவேலுவா என்றிருந்தது. 
“ம்மா..” என்று தன் பக்கத்தில் நின்று ஸ்பீக்கரில் கேட்டுக்கொண்டிருந்த வசந்தாவை பரிதாபமாக பார்க்க, அவர் போனை கண்ணை சுருக்கி முறைத்து பார்த்துகொண்டிருந்தார். 
“இப்படி சொன்னா எப்படி ப்ரேம்..? மது எங்க  வீட்டு பொண்ணு..”  என்று ரவி விடாமல் கேட்டான். 
“அவ உங்க வீட்டு பொண்ணுதான்.. நான் இல்லைங்கலையே..” என்று ப்ரேம்  சொல்லவும், 
“அதை வேற இல்லைன்னு சொல்வியா நீ..?” என்று ரவியும், வசந்தாவும் நறநறத்தனர். 
“ப்ளீஸ் ரவி.. நான் உங்ககிட்ட பொறுமையாவே சொல்றேன்.. நான்.. மது.. இடையில் யாரும் வேண்டாம்.. யாருமே தான்..”  என்று மறுபடியும் அழுத்தி சொல்ல. ரவிக்கு அவன் வடிவேலுவை  சொல்வது புரிந்தது. 
“இனி எங்களைப்பத்தி நீங்க பேசமாட்டீங்கன்னு நம்புறேன்..” என்று முடித்த ப்ரேம், 
“ரவி.. இது இப்போதைக்கு மட்டுமில்லை.. எப்போவும் தான்..” eஎன்று வைத்துவிட, ரவியும், வசந்தாவும்  ஒருவரை ஒருவர் பார்த்துகொண்டனர். 
“என்னடா இது..?  இவர் தான் இப்படின்னு பார்த்தா இந்த தம்பியும் இப்படியே இருக்காரே..?” என்ற வசந்தாவின் பேச்சு ரவியின் ரவியின் காதில் ஏறவில்லை, 
அவனுக்கு ப்ரேமின் பேச்சில் தெரிந்த தீவிரம் அவனின் மனஉணர்வுகளை கண்டு கொள்ள வைக்க, உடனடியாக, தங்கையை காண  அவளுடைய பொட்டிக் கிளம்பிவிட்டான். 
“வாண்ணா.. நானே வீட்டுக்கு வரத்தான் கிளம்பிட்டிருக்கேன், நீ எப்போ வந்த..?”  என்று அண்ணனிடம் கேட்டாள் மதுமித்ரா. 
“கொஞ்ச நேரத்துக்கு முன்னாலதான் வந்தேன், வீட்டுக்கு கிளம்பிட்டன்னா போலாமா..?” என்று கேட்டபடி மதுவின் காரை தானே கிளப்பினான். 
“சொல்லுங்கண்ணா..”  என்று  ரவி ஏதோ  பேச வந்திருப்பதை உணர்ந்து மதுவே ஆரம்பிக்க, லேசாக சிரித்த ரவி, தங்கையின் தலையை ஆதுரமாக வருடியவன். 
“நீதான் சொல்லணும் மது..? அம்மா ஏதேதோ சொல்லிட்டிருக்காங்க..” என்று  கேட்டான். 
“ஆமாண்ணா.. என்ன செய்றதுன்னு பார்க்கணும்..” என்று உள்ளுக்குள் குழம்பி தவித்தபோதும் வெளியே பொறுமையாகவே பேசும் தங்கையை, கனிவுடன் பார்த்த ரவி, 
“மது.. இதுல நீ செய்ய  எதுவும் இல்லை, இது ப்ரேம், அப்பாவுக்குமான ஒரு போராட்டம் தான், அதுவும் ப்ரேம் அப்பாமேல செம காண்டுல இருக்கார்.. இந்தமுறை அவர் அமைதியா போவார்ன்னு எனக்கு நம்பிக்கை இல்லை..”
“மே பி நீ வேண்டாம்ன்னு  சொன்னா  கிளம்பி வந்து  பிரச்சனை செய்யகூட வாய்ப்பிருக்கு.. அவர் இப்போ முன்னபோல இல்லை.. நிறைய மாற்றம் தெரியுது..” என்று ப்ரேமிடம் தென்பட்ட தீவிரத்தில் ரவி சொன்னான். 
“ண்ணா.. நாம அவருக்கு செஞ்சதும் தப்பு தானே..? அவங்க நம்மகிட்ட வரல, நாமளேதான்  அவங்ககிட்ட கேட்டு  உறுதி செஞ்சு, நாமளே அதை களைச்சு.. ம்ப்ச்.. என்ன சொல்லி நியாயப்படுத்தண்ணா..? அப்போவும்  அவர் என்னை நம்புனார்.. நான்தான்..?”  என்று ப்ரேமின் திருமண ஆசையை மறுத்ததை நினைத்து கொண்டாள். 
“மது.. அப்பாவும் உன்னோட நல்லதுக்குதான் பார்த்தார்..”  என்று ரவி சொல்ல, 
“ண்ணா.. எனக்கு அப்பா பத்தி தெரியாதா..? அவருக்கு என்னோட சந்தோசம்தான் முக்கியம், ஆனா இதை அவர்  ஏத்துக்கணும் இல்லை, அங்க கேள்வி குறியா இருக்கிறது எங்களோட பரஸ்பர அன்பு,  நம்பிக்கை தானே..”
“அதை நானுமே உடைச்சிருக்கேன்ண்ணா, அப்படியும் என்னை விடமுடியாமல் அவரும் கஷ்டபடுறார்தானே..?’’ என்று மது சொல்ல, ரவிக்கு ப்ரேமை புரிந்து கொள்ள முடிந்தது. 
“விடுங்கண்ணா.. என்ன செய்றதுன்னு பார்க்கலாம்..”  என்று முடித்துவிட்ட மதுவிற்கு,  ப்ரேம் போன் செய்து கேட்டால்  என்ன சொல்லி அவனை சமாளிக்க  வேண்டும் என்ற சிந்தனையே..? 
“ஆம்.. வேறு வழி இல்லை, இன்னும் சிறிது காலத்திற்கு  ப்ரேமை  சமளித்துதான் ஆகவேண்டும், வடிவேலுவிடம் சென்று கண்டிப்பாக  பேசமுடியாது, முன்பனால் பரவாயில்லை..”
“இப்போது ப்ரேமிற்காக இவள் அவரை ஒதுக்கி வைத்திருக்கிறாள். எந்த முகத்தை வைத்து கொண்டு கேட்பது..? வேண்டாம்.. அது இன்னும் இருவருக்குள்ளும் பிளவை கொண்டு வந்துவிடும், நாமே சமாளிப்போம்..”  என்று ப்ரேமின் உறுதி தெரியாமல்  தனக்கு தானே முடிவெடுத்து கொண்டவளை ப்ரேம் போன் செய்து அடி அடியென்று அடித்துவிட்டான்.
“என்ன..? இன்னும் கொஞ்ச நாள் போகட்டுமா..?” என்று மது சொன்னதை கேட்டு வெடித்தவன், 

“அந்த கொஞ்ச நாள்ங்கிறது இன்னும் எத்தனை வருஷத்துக்குன்னு சொல்ல முடியுமா..? ஏன்னா அதுக்குள்ள நான் போய் சேர்ந்துடா கூடாதில்லை..” என்று பட்டென சொல்லவிட, மதுவுக்கு மறுபடியும் இதே சொல்லா என்ற கோவத்துடன் தொண்டை அடைத்தது. 
அன்று குமார் ஹோட்டலில் வைத்து பேசும்போதும் இப்படித்தான் பேசினார்.. இப்போவும் இப்படித்தான்.. என்று அளவில்லா கோவத்தில் மௌனமாகிவிட, ப்ரேமிற்கு அவள் மௌனம் பெரிதாக தோன்றவில்லை. 
“சொல்லு.. இன்னும் எத்தனை வருஷத்துக்கு நான் காத்திருக்கணும்..? ஏன் உங்க அப்பா ஒத்துக்கவே மாட்டாரா..? அவருக்குத்தான் நீன்னா உயிராச்சே.. உனக்காகவாகூட  நம்ம கல்யாணத்தை நடத்த மாட்டார்..”
“கடைசிவரை மகளை இப்படியே  அவரோடவே வச்சிக்க போறாரா..? அவர் ஒரே செல்ல மகளுக்கு குடும்பம், பிள்ளைகுட்டி எல்லாம்  வேண்டாமா..? மகனுக்கு மட்டும் இருந்தா  போதும்ன்னு நினைச்சிட்டாரா..?”  என்று ஆத்திரத்துடன் கொந்தளித்தவன், 
“இங்க பாருடி.. இனியும் நான் யாருக்காகவும் பார்க்கறதா இல்லை, போதும் உங்க  பேமிலி சென்டிமென்ட்ஸ்.. போதும் உன் அப்பா பாசம்.. போதும் உங்க  ஜாதக குடைச்சல்.. எல்லாம் போதும்..”
“இன்னும் எத்தனை நாளைக்கு நான் எல்லோருக்காகவும் பார்த்துட்டே இருக்கிறது..? எனக்குன்னு  வாழ்க்கை இல்லை.. கனவு இல்லை.. ஆசாபாசம் இல்லை.. நானும் ஒரு குடும்பமா வாழவேண்டாமா..?”
“உனக்காக.. உங்க அப்பாக்காகன்னு நான் தேவுடு காத்துக்கிட்டே இருக்கணுமா..? முடியாது, போடி..  இனி நான் என்னை பத்தி மட்டும்தான் யோசிக்க போறேன், உனக்காக  கூட பார்க்க மாட்டேன்.. நீயாச்சு.. உங்க அப்பாவாச்சு.. உங்க அந்த சோ கால்ட்  பந்தமாச்சு..” 
“உனக்கு உங்க அப்பா பாசம் முக்கியம்ன்னா.. எனக்கு நீ முக்கியம், இனியும் அவர் நம்ம ரெண்டு பேர்க்கும் இடையில எப்படி வறார்னு நானும் பார்க்கிறேன்.. அவர் பொண்ணா நீ இருந்தா தானே வருவார்..? அதை முதல்ல பிடிங்கி எறியறேன் இரு..”  என்று மதுவின்  மேல் இருந்த  பொஸசிவ்நஸில் எறிந்தவன்,
“இந்த முறை என்னை யாரும் ஸ்டாப் செய்ய முடியாது.. முக்கியமா நீ..? நான் இந்த ப்ரொஜெக்ட் முடிச்ச அடுத்த செகண்ட்  கிளம்பி சென்னை வரேன், நாம கல்யாணம் செஞ்சுகிறோம்.. இதுல எந்த மாற்றமும் இல்லை, அப்படி மாற்றவும் நான் விடமாட்டேன்..”
“ஏதோ இந்த முறையாவது எனக்காக பார்ப்பேன்னு உன்னை நம்புனதுக்கு நல்ல பலன் கொடுத்துட்ட, வரேன்.. வந்து உன் கழுத்துல தாலி கட்டிட்டு வச்சுகிறேன் கச்சேரியை..”  என்று எரிமலையாக வெடித்து சிதறியவன், வைத்துவிட, மது சுழலும் புயல் காற்றில் மாட்டி தவித்து கொண்டிருந்தாள்.

Advertisement