Advertisement

சோமு மூலம் விஷயம் கேள்விப்பட்டு வடிவேலுவே நேரே வந்துவிட்டார். அவரின் வரவை எதிர்பார்க்காமல் திகைத்தாலும் மரியாதையுடனே வரவேற்று உபசரித்தனர். 
“முதல்ல என்னை மன்னிச்சுடுங்க.. நான் என் பொண்ணை தரமாட்டேன்னு சொல்றது ரொம்ப தப்பு.. ஆனா என் நிலையையும் நீங்க புரிஞ்சுக்கணும், என் பொண்ணுன்னா எனக்கு உயிரு.. அவதான் எனக்கு எல்லாமே..”
“அதிர்ந்து கூட பேசமாட்டா, ரொம்ப அமைதி.. அவளை உங்க மகனுக்கு நான் கொடுக்க நினைச்சதே உங்க குடும்பமும், தம்பியையும் ரொம்ப பிடிச்சு போய் தான், ஆனா ஜோசியர் சொன்னதுக்கு அப்பறமும்  துணிஞ்சு என் பொண்ணை கொடுக்க எனக்கு மனசு வரலைங்க..”
“இது உங்க பிஸ்னஸ் லாஸை  பத்தின விஷயம் கிடையாது, அவளுக்காக உங்க மொத்த கடனையும் என்னால் அடைக்க முடியும்தான், ஆனாலும் எதோ ஒரு சங்கடம் எனக்கு.. முடியலைங்க.. நிறைய யோசிச்சேன்.. என்னை மன்னிச்சுருங்க..”
“அதுக்காக  உங்க பொண்ணை என் மகனுக்கு தரமாட்டேன்னு சொல்லாதீங்க, இப்போவும் உங்க குடும்பம், பொண்ணு பிடிச்சு போய் தான்  விடாம கேட்கிறேன்.. யோசிச்சு சொல்லுங்க..” என்று தன்மையாகவே பேசி சென்றுவிட, பெரியவர்கள் தான் குழம்பும் நிலைக்கு தள்ளபட்டனர். 
அவர்களின் குழம்பிய நிலையில் சோமு விடாமல் பேசி அவர்களை ஒத்துகொள்ளவும் வைத்தார். ஒரு திருமண சம்மந்தம் முறிக்கபட்டு ஒரு சம்மந்தம் மட்டும் நிலைத்தது.
இங்கு இப்படி இருக்க, அங்கு இரண்டு உள்ளமும் கிடந்தது தவித்து கொண்டிருந்தது. ப்ரேமிற்கு ஏனோ மனதே  சரியில்லாமல் போக கிளம்பி சென்னை வந்துவிட்டான்.
“எனக்கு உன்னை பார்க்கணும் போல இருக்கு.. வந்திருக்கேன்.. கீழ வர்றியா..?” ப்ரேம்  போன் செய்து   மதுவிடம்   கேட்டான்.  மதுமித்ரா சென்னையில் தனியே பிளாட் எடுத்து தங்கி கொண்டிருந்தாள். நேரம் இரவு  ஏழை நெருங்கும் நேரத்தில் பெங்களூரிலிருந்து தன்னை காண வந்து நின்ற  ப்ரேமை  காண மதுவும்  ஓடி வந்தாள். 
“டிஸ்டர்ப் செஞ்சுட்டேனா..?” என்று கேட்டவனிடம், 
“இல்லை.. அப்படி எல்லாம் இல்லை..” என்று மறுத்தவள், அவனின் சோர்ந்த முகத்தை பார்த்து  “சாப்பிட போலாமா..?” என்று கேட்டாள். 
“ம்ம்..” என்று தலையாட்டிய ப்ரேமிடம் தன் கார் சாவியை கொண்டு வந்து கொடுத்தாள். அவனும்  காரை எடுத்தவன், ஹோட்டலில் சென்று நிறுத்தினான். இருவரும் அமைதியாகவே சாப்பிட்டு முடித்தனர்.
“உனக்கு வீட்டுக்கு போகணுமா..?” என்று ப்ரேம்  கேட்க, 
“ம்ஹூம்.. வேண்டாம்..” என்றுவிட்டாள். 
“சரி..” என்று காரை எடுத்தவனும், பக்கத்தில் அமர்ந்திருந்தவளும் மவுனமாகவே பயணித்தனர். இருவருக்கும் அதிகமான பேச்சு என்றும் இருந்ததில்லை. அமைதியான பேர்வழிகள். கார் பாண்டிச்சேரி செல்லும் வழியில் மிதமான வேகத்துடன் சென்று கொண்டிருந்தது. 
“உன் பொட்டிக் எப்படி போகுது..?” என்று ப்ரேம்  ஆரம்பித்தான். 
“ம்ம்..  நல்லா போகுது, பரவாயில்லை..”  
“ஓகே.. நானும் இங்க சென்னைக்கு ட்ரான்ஸ்பர் கேட்டிருக்கேன், பார்க்கலாம், கூடிய சீக்கிரம் கிடைச்சுடும்..” என்றவன், “காபி.. சாப்பிடுறியா..?” என்று கேட்டு வழியில் உயர்தர ஹோட்டலில் நிறுத்தியவன், 
“நீ ரிப்ரெஷ் செஞ்சுக்கோ..” என்று அனுப்பினான். தன் முகத்தை வைத்தே தன் சங்கடத்தை உணர்ந்தவனின் புரிதலில் மதுவின்  நெஞ்சம் விம்மியது. 
“அவளுக்கு தெரியும் அவர்களின் சம்மந்தம் முறிந்துவிட்டது என்று..!!??” அவளின் தந்தை அவளிடம் சொல்லிட்டே முறித்தார்.  மது எவ்வளவு கேட்டும் மறுத்துவிட்ட அவரின் பிடிவாதத்தில் மது தோற்று தான் போனாள். 
அவளின் நலன், நிம்மதி, சந்தோசம்.. ஒன்றே வடிவேலுவுக்கு முக்கியம் என்று அவளுக்கு தெரியும்..  அதில் இவள் தலையிட்டாலும் அவர் பொருட்படுத்த மாட்டார். இப்பொது மட்டுமில்லை அவள் பிறந்ததில் இருந்தே அவர் அப்படித்தான். இவள் என்று வந்துவிட்டால் அவரின் போக்கே வேறுதான். என்ன செய்ய..? என்று தந்தையை நினைத்து மருகியவள், 
“ரவி.. திவ்யா  சம்மந்தம் மட்டுமாவது நடக்க வேண்டும்..”  என்று முடிவாகவே தந்தையிடம் சொல்லிவிட்டாள். அவரும் அதை  ஏற்றுகொண்டார். 
“நடந்து முடிந்து விட்ட விஷயங்கள் ப்ரேமிற்கு தெரிய வரும் போது  என்னவாகும்..?” என்றே நினைத்து இன்று முழுவதும் தவித்திருந்தாள். அதை உணர்ந்தோ என்னமோ அவனே நேரில் வந்து நின்றான். 
இதை எல்லாம் நினைத்து சூழ்நிலையை நிந்தித்தபடி   ரெப்ரெஷ் செய்து வந்தவள், அவளுக்காக காத்திருந்த இட்லியை பார்த்தாள். 
“சாப்பிடு, அப்போ சரியாவே சாப்பிடல..” என்றவன், தனக்கு காபி எடுத்து கொண்டான். மறுக்க தோன்றாமல் அடைத்த இட்லியை விழுங்கியவளுக்கு காபி வரவைத்து கொடுத்தான். சிறிது நேரம் அங்கேயே அமர்ந்திருந்தவர்கள், காருக்கு திரும்பினார்கள். 
அந்த நேரத்தில் அவனின் போன் ஒலிக்க, மதுவிற்கு  புரிந்து போனது. கண் மூடி தன்னை சமன் செய்தவள், ரோட்டில வேகமாக செல்லும் வண்டிகளை பார்த்து நின்றுவிட்டாள்.
“என்ன..? என்னமா சொல்றீங்க..?” என்ற இந்த மூன்றே வார்த்தைகள் தான் அவன் பேசியது. அதற்கு பிறகு முழுவதும் மௌனம். போன் வைத்த பிறகும் அதே மௌனம் நீடித்தது. 
“சோ.. உனக்கு தெரியும்..” என்று சில நிமிடங்கள் கழித்து  கோவத்தை தாங்கி விழுந்த அவனின் வார்த்தைகள் காதில் விழ, தலையை அவன் பக்கம் திருப்பாமலே, 
“ஆமாம்..” என்றாள். 
“என்ன செய்யலாம்…?” என்ற அவனின் கேள்வி, புரிந்தும் புரியாமலும் அவனை திரும்பி பார்த்தாள். 
“ம்ம்.. சொல்லு மித்ரா  என்ன செய்யலாம்..?” என்று அதே கேள்வியை அவளின் முகம் பார்த்து நிதானமாக கேட்டாலும் இறுக்கிய கைகளின் இறுக்கம் அவனின் அளவில்லா கோவத்தை காட்டியது. 
“நீங்க என்ன செய்ய நினைக்கிறீங்க..?” என்று  மதுமித்ரா   பொறுமையாகவே கேட்டாள். 
“நாம கல்யாணம் செஞ்சுக்கலாம்.. எங்க..? எப்போன்னு..? நீதான் சொல்லணும்..” என்று அவளின் கண் பார்த்து முடிவாக கேட்டான். 
“இது தப்பில்லையா..? வேண்டாம்..” என்ற  மதுவை  வெறித்து பார்த்தவன், 
“அப்போ நம்ம வாழ்க்கை.. அது வேண்டாமா உனக்கு..?” என்று கேட்டான். 
“வேண்டாம்ன்னு நான் நினைப்பேனா..? கோவத்துல நிதானம் இழக்காதீங்க, அது ரெண்டு பேருக்கும் கஷ்டத்தை தான் கொடுக்கும்..”
“சரி.. நான் பொறுமையாவே கேட்கிறேன், எங்க..? எப்போ கல்யாணம் செஞ்சுக்கலாம் சொல்லு…? எனக்கு நாளைக்கே.. ம்ஹூம்.. இந்த செகண்டே கூட ஓகே தான்..” 
“ப்ளீஸ், அவசரப்படாதீங்க, இதுல நம்ம கூட பிறந்தவங்க வாழ்க்கையும் அடங்கியிருக்கு, எனக்கு எல்லோரும் வேணும்..”
“எனக்குமே எல்லோரும் வேணும்.. மித்ரா.. ஆனா.. உனக்கு எப்படி புரியவைப்பேன்..? கண்ணை வித்து சித்திரம் வாங்கிற மாதிரி தான் நம்ம நிலையும்..” 
“நம்ம குடும்பத்துக்காக   நம்ம வாழ்க்கையை இழக்கணும்.. அதுல எனக்கு உடன்பாடு இல்லை  மித்ரா.. எனக்கு நீ வேணும்.. நீ இருந்தா தான் எனக்கு அது  வாழ்க்கை.. இல்லை.. அது.. ம்ப்ச்.. அதை பத்தி நினைக்க கூட என்னால முடியல, உனக்கும் அப்படித்தான்னு எனக்கு நல்லா தெரியும்..”
“ப்ளீஸ்.. நீ என்னை நம்பு.. நான் கண்டிப்பா ரவி.. திவ்யா கல்யாணம் நடத்துவேன்.. நம்ம கல்யாணத்தால அவங்க வாழ்க்கை கெட நான் விடமாட்டேன்.. என்னை நம்புற தானே..?” என்று நீண்ட விளக்கம் கொடுத்ததிலே அவனின் தவிப்பு புரிய, நெஞ்சம் அடைத்தது. 
“நீங்க இதுல ஒன்னு யோசிக்கவே இல்லையே..  ஒரு மகனா நீங்க உங்க குடும்பத்துக்கு செய்ய வேண்டிய கடமை.. அவங்களுக்கு இப்போ உங்களோட சப்போர்ட் அவசியம் தேவை..”
“கண்டிப்பா.. அதெப்படி நான் யோசிக்காம போவேன்..? லாஸ்ல இருந்து வெளியே வர தேவையான ஸ்டெப் எடுத்துட்டு இருக்கேன், இன்னும் இரண்டு மாசத்துல எனக்கு ஆன்சைட் வித் ப்ரோமொஷனோட கிடைக்குது..”
“அதுல என்னோட வருமானம்  உயரும், அதோடு இன்னும்  கொஞ்சம் லோன் போட்டு சமாளிச்சிடலாம்.. வேற கொஞ்சம் பிளான்ஸும் இருக்கு,  எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு, சோ.. அதை விடு, நீ நம்மை பத்தி சொல்லு..”

“எனக்கு  நீ இல்லாம ஆன்சைட் போக முடியாது, அங்க போன எப்போ திரும்புவேன்னு எனக்கே தெரியாது, அதுவரைக்கும் நானும், நீயும் பிரிஞ்சிருக்கணும், அது முடியாது, ரொம்ப ரொம்ப கஷ்டம்..”
“உங்க அப்பா.. ம்ஹூம்.. அவர் நாம கல்யாணம் செய்ய இப்போ மட்டுமில்லை எப்போவும் ஒத்துப்பார்ன்னு எனக்கு நம்பிக்கை இல்லை.. அதனாலதான் சொல்றேன், நாம கல்யாணம் முடிச்சுட்டு ரெண்டு பேரும் சேர்ந்தே ஆன்சைட்  போலாம்..” என்று சொல்ல, மதுமித்ராவிற்கு அதிர்ச்சி தான், 
அதெப்படி இரு குடும்பத்தையும் எதிர்த்து திருமணம் செய்வது..? முடியுமா..?   ரவி.. திவ்யா திருமணம்.. சண்முகத்தின் இக்கட்டான நிலை, இந்த நேரத்தில்  ஒரு மகனாக அவர்களுக்கு தோள் கொடுக்காமல்  மேலும் வருத்தபட  வைப்பது சரியா..? 
வடிவேலு.. அவர் என்னாவார்..? நினைக்கவே பயமாக இருந்தது, அவரின் மிகப்பெரிய பலவீனம் நான்.. எந்நேரமும் எனக்காகவே யோசித்து வாழும் ஜீவன்.. அவருக்கு துரோகம் செய்ய முடியுமா..? இப்படி எல்லாரையும் துன்பப்படுத்தி தாங்கள் மட்டும் திருமணம் செய்து வெளிநாடு செல்வது.. நினைக்கவே கசந்தது.. 
“வேண்டாம்… இது தப்பு.. இதை நாம செய்ய வேண்டாம்..”  என்று மிக மிக உறுதியாக சொன்னவளை ஓர் நிமிடம் இமைக்காமல் பார்த்தவன், 
“மதுமித்ரா.. நான் சொன்னதை எல்லாம் நல்லா யோசிச்சு முடிவெடு.. நம்மை பத்தி யோசி…?” என்று சிறிது கெஞ்சலாகவே  கேட்டான்.  
“நான் நல்லா  யோசிச்சு தான் சொல்றேன்,  கொஞ்ச வருஷம் போகட்டும், இங்க  எல்லாம் செட்டில் ஆகட்டும்..” என்றவளை கை காட்டி  இடை மறித்தவன், 
“திரும்ப திரும்ப சொல்றேன்.. எனக்கு உன்னை விட்டு ஆன்சைட் போகமுடியாது, போனா வர எத்தனை வருஷம் ஆகும் தெரியாது.. எனக்காக கேட்கிறேன்.. நாம கல்யாணம் செஞ்சுக்கலாம்.. யோசிச்சு சொல்லு.. இப்போ நீ சொல்றதுல தான் நம்ம வாழ்க்கையே இருக்கு..” என்று தீவிரமாக சொல்ல, அவனின் எண்ணம் அறியா மதுமித்ரா, 
“இப்போ வேண்டாங்க. இன்னும் கொஞ்ச வருஷம் போகட்டும்.. 
“மித்ரா.. நான் திரும்பவும் கேட்கிறேன், எனக்காக யோசி..”
“ஏன் இப்படி பிடிவாதம் பிடிக்கிறீங்க, இப்போ  வேண்டாங்க..” என்றவளை ஓர் நொடி பார்த்தவன்,
“போலாம்..” என்று காருக்கு சென்று ஸ்டார்ட் செய்துவிட, அவனின் இறுகிய முகத்தை பார்த்தபடியே ஏறிகொண்டாள். 
“சீட் பெல்ட்டை போடு..” என்று அவ்வளவு கோவத்திலும் அவளின் பாதுகாப்பை உறுதி செய்தவனின் கையில் கார் பறந்தது. அவளின் பிளாட் முன் சென்று காரை நிறுத்தி இறங்கியவன், மதுமித்ரா கையில் கார் சாவியை கொடுத்தான். 
“நீங்க..” என்று பேச ஆரம்பித்தவளை   தீர்க்கமாக பார்த்தவன், 
“போறேன்..” என்றான் ஒரே வார்த்தையாக. அதில் திக்கென்று அதிர்ந்த மதுமித்ரா, 
“ஏன்..? ஏன் இப்படி..?” என்று திணறியவளின் விழியோரத்தில் கண்ணீர் துளி. 
“இனி   இதுதான் உனக்கும்..   எனக்கும் நிரந்தரம்..”  என்று அவளின் விழி நீரை சுண்டிவிட்டவன், அங்கிருந்து மொத்தமாக  சென்றுவிட்டான்.

Advertisement