Advertisement

அத்தியாயம் 1
“வடிவேலு.. இப்போ நீ  என்னதான் சொல்ல வர..?” என்று அவரின் நண்பர்  சோமு கேட்டார். 
“ஏன் நான் என்ன சொல்ல வரேன்னு உனக்கு தெரியலையா சோமு..? இந்த சம்மந்தம் சரிப்பட்டு வராது, முடிச்சுக்கலாம்ன்னு சொல்றேன்.. அவ்வளவுதான்..” என்று முடிவாக சொன்னார் வடிவேலு. 
“நீ பேசறது நியாயமா வடிவேலு..? ரெண்டு ஜோடிக்கும் நிச்சயதார்த்தம் முடிஞ்ச பின்னாடி நீ இப்படி அந்த சமந்தத்தை உடைகிறது சரியில்லைப்பா, இதனால பாதிக்க படப்போறது உன்னோட பொண்ணும், பையனும் தான், அதை மறந்துடாத..” என்று அதிர்ப்தியாக சொன்னார் சோமு. 
“அதுக்காக என் பொண்ணோட வாழ்க்கையில நான் விளையாட முடியுமா சோமு..? அவ என் உயிர், அவளுக்கு இந்த சம்மந்தம் சரிப்பட்டு வராதுன்னு தெரிஞ்சபின்னாடி எப்படி அதை செய்ய என்னால முடியும்..? வேண்டாம்ப்பா, முடிச்சுக்கலாம்..” என்று வடிவேலு வருத்தத்தோடு சொன்னாலும் உறுதியாக தான் சொன்னார். 
“என்னப்பா இப்படி சொல்ற..? நீதானே அங்க பொண்ணு கொடுத்து பொண்ணு எடுக்கணும்ன்னு முடிவெடுத்த..? இப்போ நீயே இப்படி மாத்தி பேசற, அப்படி என்ன பிரச்சனை உனக்கு..?”
“ஏன் இந்த சம்மந்தம் சரிப்பட்டு வராதுன்னு சொல்ற..? ஒருவேளை சண்முகத்துக்கு பிஸ்னஸ் லாஸ் ஆனதால வேணாம்ன்னு சொல்றியா..?” என்று சோமு கேட்டார். 
“அவருக்கு பிஸ்னஸ் லாஸ் ஆனது எனக்கும் வருத்தம் தான், ஆனா அதுக்காக நான் வேண்டாம்ன்னு சொல்லலை, தேவைப்பட்டா என் பொண்ணுக்காக அவங்க மொத்த கடனையும் கூட நான் அடைக்க தயாரா இருக்கேன்..” என்று வடிவேலு சொல்லவும், 
“அப்போ வேறென்னதான் பிரச்சனை உனக்கு..? ஏன் அங்க உன் பொண்ணை தரமாட்டேன்னு சொல்ற..? மாப்பிள்ளை பையனை உனக்கு ரொம்ப பிடிச்சு தானே நீயே சம்மந்தம் பேசின..? இப்போ மட்டும் என்ன வந்துடுச்சு..?”
“இப்போவும் சொல்றேன், மாப்பிள்ளையை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு, அவர்கிட்ட எந்த குறையும் இல்லை, ஆனா அவரோட என் பொண்ணு சந்தோஷமா வாழமுடியாதுன்னு தெரிஞ்சதுக்கு அப்பறமும் எப்படி அவருக்கு என் பொண்ணை கொடுக்க சொல்ற..?”
“எதைவச்சு நீ இப்படி சொல்ற..? கொஞ்சம் புரியும்படித்தான் சொல்லேன் வடிவேலு..”
“இல்லை கல்யாணம் தள்ளி போறது, அவங்களுக்கு ஏற்பட்ட பிஸ்னஸ் லாஸ்.. எல்லாம் மனசுக்கு கொஞ்சம் உறுத்தலை கொடுக்கவும் இவங்க இரண்டு பேரோட  ஜாதகத்தை எடுத்துக்கிட்டு ஜோசியர் கிட்ட போனேன்..” என்றார். 
“என்னப்பா சொல்ற..? கல்யாணம் உறுதி செய்யும் போதே நான் ஜாதக பொருத்தம் பார்க்கலாம்னு சொன்னதுக்கு வேணாம்ன்னு சொல்லிட்ட, இப்போ உறுதி முடிச்சதுக்கு அப்பறம் ஏன் இப்படி செஞ்சே..?”
“அதான் சொன்னேனே சோமு, மனசுக்கு உறுத்தலா, சங்கடமா இருக்கவும் தான் போனேன், அங்க ஜோசியர், ரெண்டு பேருக்கும் மனப்பொருத்தம் பிரமாதமா இருக்கு..”
“ஆனா என் பொண்ணு அந்த தம்பியை கட்டிக்கிட்டா கொஞ்ச வருஷத்துக்கு நிறைய கஷ்டப்படும், பிரிவு கூட வரும்ன்னு சொல்லிட்டாரு.. அப்பாவும் மனசு கேட்காம இன்னும் நிறைய ஜோசியரை பார்த்தேன், எல்லோரும் ஒன்னு போல இதையே தான் சொல்ராங்க…”, 
“என்ன செய்ய..? வேண்டாம்ப்பா, என் பொண்ணு கஷ்டப்படும்ன்னு தெரிஞ்சே என்னால அதை செய்ய முடியாது, நான் ரொம்ப தெளிவா யோசிச்சு தான் இந்த முடிவு எடுத்திருக்கேன், மாத்த முடியாது..” என்று விட்டார். சோமுவும் மனது கேட்காமல் அவருக்கு புரியவைக்க எடுத்த முயற்சிகள் எல்லாம் தோல்வியில் முடிய, 
“சரி.. உன் பொண்ணு சம்மந்தம் தான் முடியாது சொல்லிட்ட, உன் மகன் சமந்தத்தையாவது முடிச்சு வைப்பா..  உனக்கு தெரியாதது இல்லை, சண்முகம் குடும்பம் ரொம்ப நல்ல மாதிரி, பொண்ணும் உங்களுக்கு ரொம்ப  பிடிச்சிருக்கே, அதுதானே முதல் சம்மந்தம், அதை நிறுத்தாத..”  என்று சோமு வேண்டுகோளாகவே கேட்டார்.
“நீ சொல்றது நூத்துக்கு நூறு சரிதான் சோமு, அவங்க ரொம்ப நல்ல மாதிரிங்கிறதாலா தான்  நான் அவங்ககூட சம்மந்தம் வைக்கவே சரின்னு சொன்னேன்..”
“அந்த பையனும் ரொம்ப தங்கமான பையங்கிறதால தான் என் பொண்ணையும் நானே வலிய சம்மந்தம் பேசினேன்.. ஆனா என்ன செய்ய..?” என்று பெருமூச்சு விட்டவரிடம், சோமு மேலும் வற்புறுத்திவிட்டு செல்ல வடிவேலுவின் முகத்தில் தீவிர சிந்தனை.
காஞ்சிபுரம் மாவட்டம்..  வடிவேலு.. வசந்தா தம்பதி.. அவர்களுக்கு 
ரவி..    மதுமித்ரா ..   இரண்டு பிள்ளைகள்.. 
தொழில் என்று பார்த்தால் ஜவுளி கடை.. காஞ்சிபுரத்தின் மெயினான இடத்தில இருக்கும் பிரம்மாண்ட ஜவுளி கடை.. 
பரம்பரை பரம்பரையாக செய்யும் தொழில்.. இவரின் வசதிக்கு பொருத்தமான இடத்தில தான் தன் மகன் ரவிக்கு முதலில் பெண் பார்த்தனர். 
  மதுமித்ரா பேஷன் டிசைனிங் முடித்துவிட்டு  சென்னையில் சிறிய அளவு ஒரு பொட்டிக் வைத்திருக்கிறாள். அவளின் கனவே இன்னும் அதில் முன்னேறுவது தான், 
அதனாலே தற்சமயம் திருமணம் வேண்டாம்.. என்று தந்தையிடம் சொல்லிவிட, அவரும் மகளை வற்புறுத்தி பழக்கம் இல்லை என்பதால் அவள் ஆசையை ஏற்றுக்கொண்டு மகனுக்கு வரன் தேடினார்.  அப்படி பார்த்ததில் அவரின் நண்பர் சோமசுந்தரத்தின் மூலம் வந்த சம்மந்தம் தான் சண்முகத்துடைய சம்மந்தம்.  
சண்முகம்..  அவருடைய தொழிலும் இவர்களை போல ஜவுளி தான்.. அவர்களின் கடையும் இவரது போல மெயினான இடத்தில தான் இருந்தது. 
சண்முகம்.. மனைவி வைஜெயந்தி.. அவர்களுக்கு 
ப்ரேம்..   திவ்யா..   என்று இரண்டு பிள்ளைகள். 
திவ்யாவை தான்  ரவிக்கு பெண் கேட்டனர். அவர்களுக்கும் வடிவேலுவின் சம்மந்தம் பிடித்துவிட கோவிலில் வைத்து பெண் பார்க்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யபட்டது. 
இரண்டு குடும்பங்களும் கோவிலில் சந்தித்தும் கொண்டனர். மணமக்களுக்கு தங்களின் இணையை பிடித்துவிட மேற்கொண்டு பேசலாம் என்கிற போது, வடிவேலு சோமுவை கூப்பிட்டு, அவரின் மகள் மதுமித்ராவிற்கு  ப்ரேமை கேட்டார்.
அவருக்கு   ப்ரேமை  பார்த்தவுடன் மதுமித்ராவிற்கு  மிகவும் பொருத்தமாக இருப்பான்.. என்று தோன்றியது. முன்னமே அவர்களின் குடும்பத்தில் எல்லோரையும் பற்றி விசாரிக்கும் போது அவ்வீட்டின் மகனாக ப்ரேமை பற்றியும் விசாரித்திருந்தார். 
அதில் எல்லோரும் அவனை பற்றி மிகவும் நல்ல விதமாக தான் சொல்லியிருந்தனர். இப்பொது அவனை நேரில் பார்க்கவும் மிகவும் பிடித்துவிட, தன் ஆசையை மகளிடம் சொன்னார். 
“மதுமா.. பொண்ணோட அண்ணன் .. ப்ரேம்  இருக்காரு இல்லை, அவரை உனக்கு பார்க்கலாம்ன்னு தோணுதுமா, என்ன சொல்ற..?”   என்று கேட்டார்.
“ப்பா.. ஏன் இப்படி..?” என்று  மதுமித்ரா  எப்போதும் போல நிதானத்தை கை விடாமல் பொறுமையாகவே கேட்டாள். 
“இல்லைடா.. உனக்கு ரொம்ப பொருத்தமா இருப்பார், கொஞ்சம் யோசிடா..” 
“ப்பா.. நான் சொல்லியிருக்கேன்  இல்லை, என்னோட கனவு வேறன்னு..  திரும்பவும் ஏன்ப்பா..?” என்றாள் சலிப்பாக. 
“நீ செய்டா, நான் மாப்பிள்ளை வீட்ல பேசிடுறேன், உன் கனவுக்காக  பார்த்து நல்ல வரனை விடமுடியாதுடா, அப்பா சொல்றதை புரிஞ்சுக்கோ..”
“நான் பார்த்தவரை பையனும் உன்னை போலவே ரொம்ப பொறுமை, நிதானம் தான், அழகிலும் உனக்கு ரொம்ப பொருத்தம்.. அந்த தம்பியும் உங்க அண்ணன் மாதிரி தான் என்ஜினீயர் முடிச்சுட்டு பெங்களூர்ல ஒரு பன்னாட்டு கம்பெனியில் வேலை பார்க்கிறார். அப்பாக்காக கொஞ்ச யோசிடா..”  என்று வடிவேலு மகளிடம் வேண்டுதலாகவே கேட்டார். 
அவரின் வேண்டுதலை மறுக்க முடியாமல்  ப்ரேமை நோக்கி தன் பார்வையை  திருப்பியவளுக்கு, வடிவேலு சொன்ன “உனக்கு ரொம்ப பொருத்தமா இருப்பார்..” என்ற வார்த்தை மிக சரியாக தோன்ற, அவளின் அந்த முதல் பிடிப்பே  அப்பாவின் ஆசைக்கு இணங்க வைத்தது. 
அதற்கு பிறகு தான் அவர் சோமுவை கூப்பிட்டு தன் ஆசையை சொன்னார். சோமுவும் வடிவேலுவின் ஆசையை ஏற்று சண்முகம் குடும்பத்திடம் சொல்ல பெரியவர்களுக்கு இதில் மறுப்பு ஏதும் இல்லை, பவித்ராவின் அழகும், அலட்டலில்லாத பாங்கும், அவர்களுக்கு பிடித்துவிட  மகனிடம் கேட்டனர். 
அவனும் மதுமித்ராவை தனக்கு பொருத்தமானவளா..? என்ற கண்ணோட்டத்தில் பார்க்க,  அவனின் மனம் அடுத்த நொடியே  “ஆமாம்..”  என்றுவிட்டது.  இளையவர்களின் சம்மதம் கிடைத்த உடனே, அன்றே கோவிலில் வைத்து உறுதியும் செய்தனர். 
அதற்கடுத்த ஒரு மாதத்தில் மிகப்பெரிய மண்டபத்தில் இரு ஜோடிகளுக்கும் பிரமாண்டமாக நிச்சயதார்த்தமும் நடந்தேறியது. இன்னும் மூன்று மாதம் கழித்து திருமணம் என்ற நிலையில்  தான் சண்முகம் குடும்பத்தின் பிரச்சனை வளர்ந்து விஸ்வரூபம் எடுத்து நின்றது. 
அவர்களின் கடை இருக்கும் தெருவிலே மிகப்பெரிய பிரம்மாண்டமான கடை திறக்கபட்டது. சண்முகத்தின் கடை நடுத்தர அளவில்தான் இருக்கும், எல்லோரும் காலத்திற்கு ஏற்றது போல கடையை விரிவாக்க, இவர் மட்டும் அப்படியே இருந்துவிட்டார். இப்போது அதுவே அவருக்கு வினையாக முடிந்து போனது. 
மக்கள் அந்த பெரிய கடைக்கு செல்ல ஆரம்பிக்க, படிப்படியாக இங்கு வருமானம் குறைந்து போனது. தொழிலை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் கடையை பெரிதாக்க நினைத்து வேலையும் ஆரம்பித்துவிட்டார். 
ஆனால் அவர்  நினைத்து போல் அது அவ்வளவு சாதாரணமாக இருக்கவில்லை. பிள்ளைகளின் திருமணத்திற்கு என்று எடுத்து வைத்த பணம் போக மீதி சேமித்த பணம் மொத்தையும் அதிலே போட்டார். அப்படியும் பற்றாமல் போக சில சொத்துக்களை அடமானம் போட்டு கடையையும் எழுப்பி விட்டார் தான், 
ஆனால் கஸ்டமர்கள் தான் இல்லை, அந்த பெரிய கடையில் அடிக்கடி தள்ளுபடி, பரிசு என்று வாடிக்கையாளர்களை தன்னிடமே  இழுத்து கொள்ள, இவர் கொஞ்சம் கொஞ்சமாக மூழ்க ஆரம்பித்தார். 
அடமானம் போட்ட சொத்துக்களுக்கு வட்டி, கடையின் மெயின்டனன்ஸ்.. என்று காசு திரும்பவும் இழுக்க ஆரம்பித்தது. இதில் ஒரு நல்ல விஷயமாக வடிவேலுவின் பக்கம் இறப்பாகிவிட திருமணம் இன்னும்  மூன்று மாதம் தள்ளி போடப்பட்டுவிட்டது. 
ஆனால் அதற்குள் உறுதி செய்த சம்மந்தமே முறிந்ததில்  சண்முகம் குடும்பத்திற்கு அதிர்ச்சியே.. 
“என்னண்ணா சொல்றீங்க..? சம்மந்தம் வேணாம்ன்னு சொல்ராங்களா..?” என்று வைஜெயந்தி கோவத்தோடு கேட்டார். 
“ஆமாம்மா..” என்று சோமு வருத்தமாக சொன்னார். 
“கடைசில எல்லாரை போல அவங்களும் காசுதான் முக்கியம்ன்னு காமிச்சுட்டாங்க இல்லை, நல்லது, எங்களுக்கும்  இப்படிப்பட்ட குடும்பத்துல சம்மந்தம் செய்ய விருப்பமில்லை..” என்று வைஜெயந்தி வெறுப்பாக சொல்ல, பதறிபோன சோமு, 
“ம்மா.. அப்படியெல்லாம் இல்லை, உங்க பிஸ்னஸ் லாஸை பத்தி வடிவேலு கவலை படவே இல்லை, இது வேற காரணம்ம்மா..” என்று முழுவதையும் சொன்னார். 
“ம்ஹூம்.. எனக்கு நம்பிக்கை இல்லைண்ணா, அவங்க பிஸ்னஸ் லாஸ் ஆனதாலதான் வேண்டாம்ன்னு சொல்ராங்க, இந்த ஜாதகம் எல்லாம் சும்மா சப்பைகட்டு தான்.. அதனால எங்களுக்கும் அந்த குடும்பத்து சம்மந்தம் ஒன்னும்  வேண்டாம்..”  என்று உறுதியாக சொன்னார். 
“அவசரபடாதம்மா..  அவங்க திவ்யாவை கட்டிக்க ரெடியா தான் இருக்காங்க, ஆனா  மது  மட்டும் முடியாதுன்னு சொல்லிட்டாங்க..”  என்று சோமு வேகமாக சொன்னார். 
“அப்படி ஒன்னும் எங்க பொண்ணுக்கு அங்க சம்மந்தம் வைக்கணும்ன்னு இல்லை, மொத்தமா முடிச்சு விடுங்க..” என்று வைஜெயந்தி  அவர் பிடியிலே  நிற்க, சண்முகத்திற்கு தொடர்ந்து வாங்கிய அடிகளில் மனதே விட்டு போனது.
“வேண்டாங்க.. பொண்ணு கொடுக்கிறதும் வேண்டாம்.. எடுக்கிறதும் வேண்டாம்..” என்று அவர் குடும்ப தலைவராக முடிவை சொல்லிவிட்டார்.

Advertisement