Advertisement

அவள் நான் பயணம் – 8

உயிர் போகும்

வலியிலும் உனைக்

கண்கள் தேடுதடி..

நினைச்சேரும்

நொடிக்கென

நேரமும் நகருதடி… 

நில்லாது நீ சென்றதில் என் வானில் வெறுமையடி, உன்னோடு சென்றதில் என் கர்வமும் சேர்ந்ததடி, எல்லைகள் நான் வகுத்தேன், எரிமலையில் புழுவானேன், நடைபாதையின் சருகில் நாளொரு பூ உதிரும், இதழ்கள் உனக்கானால் உதிர்வதும் ஓர் சுகமே…

“அந்த பேசண்ட் கூட வந்தவங்க யாரு, பேசண்டோட பேரு என்ன “

“தெரியலை சிஸ்டர்”

“என்னங்க இப்படி சொல்றீங்க”

“இல்ல சிஸ்டர் இப்ப என்.ஹெச்சில நடந்த ஆக்சிடெண்ட்ல அடிபட்டவரு, கூட யாரும் வரலை போல,                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                

“அந்த பேசண்ட்டோ திங்ஸ் எதாவது இருக்கா, பேக், பர்ஸ் அதுல அவர் நேம் இருக்கா, அவர் வீட்டுக்கு எப்படி இன்பார்ம் பண்ணுவீங்க, போலீஸ் கிட்ட சொல்லியாச்சா”

“இப்படியே கேள்வி கேட்டுகிட்டே இருந்தீங்கன்னா, அவர் நெலமை என்னாகுறது சிஸ்டர்”

“அதெல்லாம் டாக்டர் பாத்துகிட்டு இருக்காங்க சார், நான் என்னோட வேலைய தான் செய்யுறேன், இன்னும் எத்தன பேர் வந்திருக்காங்க, “ என்று கேட்டுக் கொண்டிருக்கையிலேயே, அங்கே பதற்றமான சூழல் தெரிய ஆரம்பிச்சுது.

என்nai சுத்தி எல்லாரும் பரபரப்பா ஓடிகிட்டு இருக்காங்க, டாக்டர் அங்க இருந்த          நர்ஸ்கிட்ட சத்தம் போடுறது தெரியுது.

“இவ்வளவு லேட்டா கொண்டு வந்திருக்கீங்க, ஏகப்பட்ட இரத்தம் போயிருக்கு, தலையில அடி பட்டிருக்கு, ஸ்கேன் பண்ணனும், இப்ப சுய நினைவும் இல்லை, ஹரியப் ஹரியப்”

“உலகத்துக்கு இப்ப என் கண் மூடியிருக்கு ஆனா எனக்குள்ள அவளோட நினைவுகள் மட்டும் விழிச்சுகிட்டு இருக்கு. அன்னைக்கு நாங்க பேசினதுல நிறைய குழப்பம் எனக்குத் தான்.

எல்லாமே நம்ம கண்ணு முன்னாடிதான் நடக்குது, நாம இருக்கும் போது நடக்குது. ஆனா எல்லாமே நமக்கு தெரியுறதில்லை. ஒரு சில நிமிசத்துல உள்ளங்கால் உச்சந்தலைக்கு வந்தமாதிரி இருந்துச்சு. என்னைய மாதிரி தான் அவளும் இருந்திருப்பான்னு நெனச்சா, அவ என் யூகங்களுக்கெல்லாம் எட்டாத தூரத்துல இருந்தா.

ஒரு நாள் பாத்து ஒரு வாரம் நெனச்சிகிட்டே இருந்து அவ தான் எனக்கு நான் தா அவளுக்குன்னு முடிவான அப்புறம் அவகிட்ட சொல்லணும்னு தோணுன என் காதல் தான் எனக்கு பெருசா தெரிஞ்சுது. நான் மறந்து போன ஒரு விசயம், நான் யோசிக்காத விசயம் அவளோட காதல் அது எனக்கு உரைக்கவே இல்லை.

எப்பயுமே நம்மளோட கண்ணோட்டத்துல தெரியுறத வைச்சு அவங்க இவ்வளவுதான்னு யூகிக்கிறது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்னு, அவ அந்த கடைசி வார்த்தைய சொல்லும் போது நெனைச்சேன்.

என்ன சொன்னா திரும்பவும் ஞாபகத்துக்கு கொண்டு வந்து பாக்குறேன், மறக்கிற மாதிரியா சொன்னா, கல்யாணம் முடிஞ்சி ஒரு மாசம் கழிச்சு சண்டை போடுறவரைக்கும் நானே செய்யுறேன், ஆனா நீங்க மனசில வந்த காதல கூட சொல்லாம மறைச்சு வச்சுக்கோங்க,….

உண்மையிலயே அப்பதான் பூமி சுத்துதுன்னு நான் புரிஞ்சுகிட்டேன். இது என்னடா மாறா லாஜிக், அவ சொன்னதுக்கும் பூமி சுத்துறதுக்கும் என்ன சம்பந்தம்னு யோசிக்கிறீங்களா,… அத நெனச்சா இப்ப கூட எனக்கு தலை சுத்துதே, அப்ப சுத்தாமயா இருந்துருக்கும்.

சொல்லி முடிச்சதோட அவ கடமை முடிஞ்ச மாதிரி உள்ள போயி உக்காந்துகிட்டா, ஆனா அப்பகூட அவ கிட்ட போயி பேசி உண்மையிலயே என்ன நடந்துச்சுன்னு கேட்டுத் தெரிஞ்சுக்க என் மனசு ஒத்துக்கல, ஏன் தெரியுமா எனக்குன்னு ஒரு கெத்து இருக்கு, ஏன் இதை நான் கேட்டு தான் அவ சொல்லனுமா, அவளாவே என்கிட்ட எல்லாத்தையும் சொல்லிருக்கனும், இல்லைன்னா நானா கண்டுபிடிக்கனும், அதை செய்யாம அவகிட்ட என்ன நடந்துச்சு ஏது நடந்துச்சுன்னு கெஞ்சி கேட்டு, தெரிஞ்சிக்கனுமா என்ன,,…

எல்லாமே அவளால தான் முடியும்னு, எனக்கு எதுவுமே தெரிலயலைன்னு இல்ல நெனப்பா, ஆயிரம் இருந்தாலும், அட ஏங்க ஐந்நூறு இருந்தாகூட நாமளா தான் கண்டுபிடிக்கனும்னு முடிவு பண்ணுனேன்.

ஆனா இப்படியே விடவும் மனசில்ல, திரும்பவும் தனியா உக்காந்து யோசிக்க ஆரம்பிச்சேன். முடிவா எனக்கு கிடைச்ச பதில், சின்ன வயசுல நடந்ததா சொன்ன அத்தணையுமே பொய். அதனால தான் அந்த ஞாபகங்கள் எதுவுமே எனக்கு இல்லை.

அம்மா உட்பட எல்லாருமே பொய் சொல்லி எனக்கு இவளை கல்யாணம் பண்ணி வச்சிருக்காங்க, என்னோட மனசும் காதலும் இவங்களுக்கு விளையாட்டா இருந்திருக்கு, ச்சே என்ன வாழ்க்கை இது…

ஒரு பொண்ணு ப்ளான் பண்ணி இப்படி முட்டாளாக்கி, என்னையும் என் காதலையும் கைப்பொம்மையாக்கி விளையாடீட்டான்னு அப்ப தான் எனக்கு புரிஞ்சது.

கல்யாணமே ஆனாக்கூட அவளோட மனசுல என்னைப் பத்தி என்ன நெனக்கிறா… என்னைய உண்மையிலயே பிடிச்சுதான் கல்யாணம் பண்ணிகிட்டாளா, இல்லை பெத்தவங்க சொல்றத கேட்டு பண்ணிகிட்டாளா, என் மனசில வந்த காதல் அவளுக்குள்ளயும் இருக்கா, இல்லையா அதுவே தெரியாம அவகிட்ட மனசால கூட நெருங்க முடியலையேன்னு பைத்தியம் பிடிச்ச மாதிரி உக்காந்திருக்கேனே…

இப்படியெல்லாம் பொங்குற அடிமனசை அடக்க அடக்க, அது கோபமா வெடிக்க ஆரம்பிச்சுது, கோபம் மாதிரி காதலையும் கட்டுப்படுத்தி வச்சிருந்தா அது வெடிக்கத்தானே செய்யும், அவகிட்ட போனேன். அலைகள் ஓயாம அடிச்சுகிட்டு இருக்க கடலையும், கடலோட அவ்வளவு ஆர்ப்பரிப்பையும் காலடியில போட்டுட்டு  அழுத்தமா இருக்க நிலாவையும் சன்னல் வழியா பாத்துகிட்டு இருந்தா… இப்ப நான் கடல் அவ நிலா….

என்னோட பரபரப்புக்கும் சலசலப்புக்கும் ஆரம்பத்துல இருந்தே அவ அழுத்தமாகவும் நிதானமாகவும் தானே இருந்துகிட்டு வர்றா, இன்னிக்குத் தானே அந்த நிதானம் நழுவி ஒரு வார்த்தை வெளியில வந்திருக்கு. இன்னமும் எல்லாத்தையும் என்கிட்ட சொல்லணும்னு அவளுக்கு மனசு வரல.

நான் வந்து நிக்குறதை பாத்துட்டு திரும்பவும் அதே மாதிரி திரும்பிக்கிட்டா… என்னோட பொறுமைக்கும் ஒரு எல்லை இருக்கில்லையா,….

”இன்னமும் எவ்வளவு பாக்கி இருக்கு, நீ போட்ட திட்டத்துல”

“என்ன திட்டமா…”

“என்ன புரியாத மாதிரி கேக்குற, ஆரம்பத்துல இருந்தே நீ ப்ளான் பண்ணித்தானே எல்லாத்தையும் பண்ணியிருக்க”

”இப்ப ப்ளான் போட்டு உங்க சொத்தையெல்லாம் ஏமாத்தி வாங்கிட்டு ஓடியா போயிட்டேன். உங்க முன்னாடிதானே இருக்கேன். அதுவும் உங்க பொண்டாட்டியா தானே நிக்குறேன்.”

“இதெல்லாம் தானே உன் திட்டம், நெனச்ச மாதிரியே, என்னெல்லாமோ கதையெல்லாம் எனக்குச் சொல்லி என்ன கல்யாணம் பண்ணிகிட்ட. இன்னும் என்ன பண்றதா இருக்க…”

”கொஞ்சம் கூட புரிஞ்சுக்காம பேசாதீங்க”

“இவ்வளவு நாளா புரிஞ்சுக்காமத்தான் இருந்துட்டேன், இப்ப தானே புரிய ஆரம்பிக்குது”

“நீங்க என்ன நெனச்சிகிட்டு பேசிகிட்டு இருக்கீங்க, எதையோ தப்பா புரிஞ்சிகிட்டு…..”

“ ஏய் நான் இப்ப தான் டி சரியா புரிஞ்சுக்க ஆரம்பிச்சிருக்கேன். நீ பொய் பொய்யா அளந்துவிட்டுருக்க டீ, அதனால தான் அது எதுவுமே எனக்கு ஞாபகம் வரல”

“ஏங்க என்ன பேசுறீங்க, நான் என்ன கதை சொன்னேன் உங்க கிட்ட, உங்கம்மா தானே சொன்னாங்க, அவங்க ஏன் பொய் சொல்ல போறாங்க, அதுக்கு அவசியமே இல்லையே, தேவையில்லாம வார்த்தைய விடுறீங்க பின்னாடி வருத்தப்பட போறீங்க”

”இத்தனை வருசத்துல எங்கம்மா ஒரு நாள் கூட இந்த கதையெல்லாம் சொன்னதே இல்லை, எங்கம்மாகிட்ட என்னத்த சொல்லி இப்படி பேசவச்ச… இப்பயே வருத்தபட்டுகிட்டு தானே டி இருக்கேன், இதுல தனியா பின்னாடி வேற படனுமா”

“என்னமோ ஏமாத்தி கல்யாணம் பண்ணிகிட்டேன்னு சொல்லுறீங்க, நான் பொய் சொன்னேன்னு சொல்லுறீங்க, நான் என்ன சொன்னேன், உங்களால மட்டும் எப்படி இப்படியெல்லாம் யோசிக்க முடியுது, கொஞ்சமாவது ப்ராக்டிக்கலா திங்க் பண்றீங்களா… உங்களால திங்க் பண்ண முடியலைன்னா போய் உங்கம்மாவ கேளுங்க, அதை விட்டுட்டு, உங்க கற்பனை வளத்தையெல்லாம் என்கிட்ட ப்ரூவ் பண்ணாதிங்க, எதாவது கதையா எழுதுங்க, படிக்க வேணும்னா நல்லாயிருக்கும்”

“ஏய் என்னடி சொன்ன….”

“இந்த பல்ல கடிக்கிற வேலையெல்லாம் இங்க வேணாம், நானும் ஆரம்பத்துல இருந்து பொறுமையா இருக்கேன், ஆனா நீங்க என்னை அனாவசியமா சீண்டிப்பாக்குறீங்க.”

“என்னடி பேச்சுல திமிர் தெரியுது”

“என்ன டீ போட்டு பேசுறீங்க, நானும் டா போட்டு பேசவா, என்னமோ நான் தான் உங்களை கல்யாணம் பண்ணனும்னு ஒத்தகால்ல நின்ன மாதிரி பேசிகிட்டு இருக்கீங்க, ….”

“ஓ அப்ப நான் ஒத்த கால்ல நின்னேனா”

“நீங்க ஒரு கால்ல நின்னீங்களோ இல்ல அந்தரத்துல தொங்குனீங்களோ, எனக்குத் தெரியாது, நீங்களும் உங்கம்மாவும் வந்து பொண்ணு பாத்தீங்க, ஓகே, சொன்னீங்க, இதுல சரியாப் பாக்கலைன்னு ஒன்ஸ்மோர் வேற, வீட்டுக்கு போனதும் பேசி முடிங்கன்னு நீங்க தான் சொல்லிருக்கீங்க, பதினைஞ்சு நாள்ல நிச்சயம், ஒரு மாசத்துல கல்யாணம், நிச்சயத்துக்கு வந்து டேரா வேற, அப்பயும் நீங்களா வந்து பேசுனீங்க, கண்ணுல காதல் கடைசியில மோதல்னு வந்து இப்ப என்னடான்னா, இப்படி சொல்றீங்க”

“ஆமான் டி நான் தான் எல்லாம் பண்ணுனேன். இப்ப என்னாங்குற, இதுக்கெல்லாம் நடுவுல, நீ சொன்னியே ஒரு வார்த்தை அதுல தான் பிரச்சனையே”

“என்ன சொன்னேன் என்னைய யாருன்னு தெரியுதான்னு கேட்டேன் அவ்வளவு தானே”

“அவ்வளவு தானான்னு கேக்குற அதுனால தான் இவ்வளவு பிரச்சனையும்”

“அதை பிரச்சனையா நீங்க எடுத்துகிட்டதுக்கு நான் பொறுப்பில்ல, எவ்வளவு அழகா வாழ வேண்டிய வாழ்க்கை அதை நீங்க கஷ்டமா பாத்தா உங்க கண்ணுல தான் பிரச்சனை”

இப்படி சொல்லீட்டு அவ அமைதியாயிட்டா,.. அவளோட பக்கம் அவ தெளிவா தான் இருந்திருக்கா, ஆரம்பத்துல இருந்தே எனக்குத் தான் குழப்பம், 

இதுக்கு மேலயும் பேசி பிரயோஜனம் இல்லைன்னு முடிவு பண்ணி வெளியில கிளம்பி போயிட்டேன். ஆனா என் மனசுல இருக்குற கேள்விகளுக்கு பதில் தான் இன்னமும் கிடைச்ச பாடில்லை.

அளவுக்கு அதிகமான கோபம் மட்டும் தான், அதுவும் சக்தி மேல… ஏன் ஏன் ஏன்…. பதில் மட்டும் கிடைக்கவே இல்லை.

அமைதி தேடி கால் போன போக்குல நடந்து போய்கிட்டே இருந்தேன். பௌர்ணமி அன்னைக்கு கடலோட அழகே அழகுன்னு ரசிச்ச நாட்கள திரும்ப நெனச்சு பாத்துகிட்டு இருந்தேன்.

நேரம் போனதே தெரியல, மணி பாக்கலாம்னு மொபைலை தேடும் போது தான் தெரிஞ்சுது, போனை வீட்டிலேயே வைச்சுட்டு வந்துருக்கேன்னு, நேரம் பாக்க மணிகட்டை திருப்புன காலமெல்லாம் போயே போச்சு…

அடுத்த அரை மணி நேர நடராஜா சர்வீஸ் வீட்டுக்கு வந்து சேர்ந்தேன். சண்டை போட்டப்போ இருந்ததவிட அவ கோவமா இருக்க மாதிரி தெரிஞ்சுது.

“போகும் போது எங்க போறீங்கன்னு சொல்றது இல்லை, இந்த போனையாவது எடுத்துகிட்டு போக வேண்டியது தானே” என்னைக் கடிக்க முடியாமல் வார்த்தையை கடிச்சா…

“ஏன் இப்ப என்ன…? “ – உடனே பணிஞ்சுட்டா நம்ம கெத்து என்ன ஆகுறது,

”எதோ ஒரு அவசரம்னா எப்படி உங்கள கூப்புடுறது”

”இப்பத்தான் வந்துட்டேன்ல சொல்லு என்ன?”

அவ வாயில இருந்து பதில் வர்றதுக்கு முன்னாடி கண்ணுல இருந்து தண்ணி வந்திருச்சு, எனக்கு ஒரு நிமிசம் உசிரே போயிடுச்சு, இவ்வளவு நேரம் நடந்த வாக்குவாதம், என் கோபம் இதெல்லாம் பாஸ்போர்ட் எடுத்துகிட்டு எங்க போனுச்சுன்னே தெரியல…

“ஹே சக்தி என்னாச்சு எதுக்கு இப்ப அழுகுற என்னாச்சுமா, சொல்லு டா நான் தான் வந்திட்டேனே, இங்க பாரு மாமாகிட்ட சொல்லுடா”

கீழ விழுந்த குழந்தைய கண்டுக்காம விட்டா அழுகாதாம் அச்சோ என்னாச்சுன்னு கேட்டா தான் ரொம்ப அழுகுமாம், அந்த கதை தான் இங்கயும் நடந்துச்சு, நான் கேட்க கேட்க ரொம்ப அழுக ஆரம்பிச்சுட்டா…

“இங்க பாரு இங்க பாருடா, என்னன்னு சொல்லு”

தேம்பி தேம்பி அழுகுறா

“சக்தி……………………..” நான் போட்ட சத்தத்துல தான் நிறுத்துனா, அவ முகத்தை கையில ஏந்தி கண்ணீரை துடைச்சு விட்டேன், அவ நிமிந்து பாத்தா…. இந்த முறை நான் கேக்கவே இல்லை.

அவ கண்ணுகுள்ள பயணிக்க ஆரம்பிச்ச என்னோட பார்வை அவ இதயத்தை தொட்டிருக்கனும், பதிலுக்கான என் தேடல் அவ குரலா வெளிய வர கொஞ்சம் நேரம் ஆனுச்சு, காத்திருந்தேன்,

கண்ணுக்கு அணை போட்ட என் காதுக்கு வேலை வந்துச்சு,

“அத்தை அத்தை…”

“அம்மாவுக்கு என்னாச்சு…………”

“இப்ப தான் போன் வந்துச்சு”

“என்னாச்சு……..என்னன்னு சொல்லு சக்தி அம்மாவுக்கு ஒண்ணுமில்லையே”

“மாமா பேசுனாங்க, அத்தைக்கு சுகர் அதிகமாயிடுச்சாம், ஹாஸ்பிட்டல் அட்மிட் பண்ணியிருக்காங்க, சீரியஸா இருக்காங்கன்னு சொன்னாங்க”

“அம்மா……………….. “

”அத்தைக்கு ஒண்ணும் ஆகாதுங்க, நாம உடனே கிளம்புவோம்”

“எப்ப எப்ப போன் பண்ணுனாங்க……..”

“அரைமணி நேரம் முன்னாடி இருக்கும், நானும் உங்க போனுக்கு ட்ரை பண்ணுனேன், இங்கயே இருந்துச்சு, இந்த நேரத்துல உங்க எங்கேன்னு போயி நான் தேடுறது”

அவளோட பேச்சு எதுவும் என் காதுல விழுகல, என் போனை தேடி எடுத்து உடனே அம்மாவுக்குக் கால் பண்ணேன், ரிங்க் போயிட்டே இருந்துது, யாரும் எடுக்கல, அப்பாவுக்கு கால் பண்ணேன், ரெண்டு ரிங்குக்கு அப்புறம் எடுத்தார்.

“அப்பா அப்பா அம்மாவுக்கு என்னாச்சு பா”

“டாக்டர் பாத்துகிட்டு இருக்காரு டா, எனக்கு ஒண்ணுமே புரியல, உங்கம்மாவ இந்த மாதிரி நான் பாத்ததே இல்லைடா, பயமா இருக்குடா மாறா, சீக்கிரம் கிளம்பி வாடா…..”

“அம்மாக்கு ஒண்ணும் ஆகாதுபா, கிளம்பீட்டேன் பா வந்துகிட்டே இருக்கேன் பா நீங்க பதட்டபடாம அம்மா கூட இருங்க டாக்டர் என்ன சொல்றாங்கன்னு பாருங்கப்பா, “

“உள்ள கொண்டு போய் ஒருமணிநேரம் ஆச்சுடா இன்னும் ஒண்ணும் சொல்ல மாட்றாங்கடா”

“இங்க இருந்து காலையில கிளம்பும் போது நல்லாத்தானே பா இருந்தாங்க, திடீர்னு எப்படிப்பா, நீங்க சொல்றத பாத்தா ஒருமணி நேரத்துக்கு முன்னாடி தானே அம்மா வீட்டுக்கு வந்திருப்பாங்க, எப்படிப்பா”

“எனக்கு எல்லாம் கனா கண்ட மாதிரி இருக்குப்பா, ஒண்ணுமே புரியல, நீ சீக்கிரம் வா”

“நீங்க பயப்படாம இருங்கப்பா, கூட யார் இருக்காங்க”

“யாரும் இல்லடா”

“என்னப்பா சொல்றீங்க, பக்கத்தில யாரையாவது அழைச்சிகிட்டு வந்திருக்கலாம்ல, சரி எந்த ஹாஸ்பிட்டல் பா”

“ஃப்ரண்ட்லைன் ஆஸ்பிட்டல்,  தம்பி சீக்கிரம் வாடா”

இதுக்கு மேலயும் போன்ல பேசிகிட்டு இருந்தா சரிவராதுன்னு, அப்பாவை தைரியமா இருக்க சொல்லீட்டு, திருச்சியில இருந்த என் நண்பனுக்கு போன் பண்ணி அவன போய் அப்பா கூட இருக்க சொல்லீட்டு கிளம்புனேன்.

எனக்கு முன்னாடி பையோட அவ நின்னுகிட்டு இருந்தா, அந்த நேரம் வேற ஏதும் பேசுற மனநிலை ரெண்டு பேருக்குமே இல்லை. கல்யாணமாகி வந்தப்போ நாங்க வந்த வேகத்துக்கும் இப்ப போற வேகத்துக்கும் சம்மந்தமே இல்லாம இருந்துச்சு.

”என்ன ஊர்ல இல்லாத அம்மா, சுகர் தானே அதிகமாயிருக்கு அதுக்கு இந்த ஆர்ப்பாட்டமெல்லாம் கொஞ்சம் அதிகம் தான். அம்மாவுக்கு ஒண்ணுன்னா உடனே பதறுமே… அதெல்லாம் ஒண்ணும் ஆயிடாது. நீங்க கொஞ்சம் நிதானமாவே போங்க”

சடன்ப்ரேக் அடிச்சு நிறுத்துனேன். திரும்பி பாத்தா அவ கண்ணுல கண்ணீரோட அளவு குறையவே இல்லை, அதோட நான் ஏன் இப்படி காரை நிப்பாட்டுனேன் அப்படீங்கிற கேள்வியும் தொக்கி நின்னுச்சு.

தலை உலுக்கிகிட்டு நியூட்ரல்ல இருந்து கியரை மாத்துனேன். ஒரு சராசரி பொண்ணு இப்படித் தான் இருப்பான்னு நம்ம சீரியல் உருவகப்படுத்தி வச்சிருக்க மருமகளா என் சக்திய நெனச்சு பாத்ததுல வந்த டையலாக் தான் அது.

ஆனா அவளோ அதுக்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாம அவளோட அம்மாவுக்கே நடந்த மாதிரி ஃபீல் பண்ணிகிட்டு இருந்தா, மற்றவை எப்படியோ நான் இன்னிக்கு போட்ட சண்டைக்கு வேற எந்த பொண்ணாயிருந்தாலும் இப்படி ஒரு ரியாக்‌ஷன், கொஞ்சம் கஷ்டம் தான்.

இக்கட்டான சூழ்நிலையிலையும் எனக்காக யோசிக்கிறவ, என்னோட உறவுகளுக்கு முன்னுரிமை கொடுக்குறவ, என்னோட உணர்வுகளை மதிக்காமயா இருந்திருப்பா. ஒரு வேளை நாம தான் அவள தப்பா நினைச்சிட்டோமா

மனசு இருக்கே, எப்பவாச்சும் தான் சரியான வழியில் யோசிக்கும், அதுலயும் காதல் வயப்பட்ட மனசு இருக்கே, சுத்தி இருக்கவனுகள பத்தியே சரியா யோசிக்காது, அதுலயும் அவங்கள பத்தின ஒரு கருப்புள்ளி விழுந்துட்டா, அது பொண்டாட்டியாவே இருந்தாலும் அது மறையுறது ரொம்ப கஷ்டம்.

இதுவும் சக்தி விசயத்துல பொய்யாயிடுச்சு, அவமேல வந்த கோபமெல்லாம் அதிகப்படியான காதலாலன்னு நான் புரிஞ்சுக்க இத்தன நாள் ஆயிருக்கும் போது அன்னிக்கே எப்படி புரியும்.

அடுத்தவங்களோட செயல்பாடு முடிவு இதெல்லாம் புரியலைன்னா பிரச்சனை அவங்க கிட்ட, நம்மளோட செயல்களே நமக்கு விசித்திரமா இருந்தா என்ன பண்ண முடியும்,…

யோசிச்சு யோசிச்சு அவகிட்ட பேசின அத்தணையும் அர்த்தமில்லாம போயிடுச்சு, எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாம சத்தமும் இல்லாம அவ கையில ஒரு மிதமான அழுத்தம் குடுக்கனும்னு தோண வச்ச, அவளோட கண்கள் இப்ப ஆயிரம் அர்த்தம் சொல்லுது, அத்தணையும் காதல்…  

அது புரியாம போன மோதல் தான் இன்னிக்கு வரைக்கும் விடாம என்னை துரத்தி இப்படி படுக்க வச்சிருச்சு…

கண்ணைத் திறப்பேனா மாட்டேனா அவள பார்ப்பேனா….

Advertisement