Advertisement

அத்தியாயம் – 2
அம்மா என்றழைக்காத உயிரில்லையே…
அம்மாவை வணங்காது உயர்வில்லையே…
நேரில் நின்று பேசும் தெய்வம்
பெற்ற தாயன்றி வேறொன்று ஏது……
டிவியில் சூப்பர் ஸ்டார் அன்னையைப் பாடிக் கொண்டிருக்க கூட சேர்ந்து பாடிக் கொண்டே வீட்டை மாப் போட்டு துடைத்துக் கொண்டிருந்த ரகுவரன் மேசை மீது ஒளிர்ந்த அலைபேசியின் சிணுங்கலைக் கேட்டு ரிமோட்டில் டிவியை மியூட் ஆக்கினான்.
“அன்னையின் எண்ணைக் கண்டதும் முகம் மலர்ந்தவன் உற்சாகத்துடன் எடுத்து காதுக்குக் கொடுத்தான்.
“அம்மா… இப்பதான் உங்களை நினைச்சேன்… உடனே கால் பண்ணறீங்க… உங்களுக்கு நூறாயுசு…”
“அப்படியாடா கண்ணா… எதுக்கு அம்மாவை நினைச்சே…”
“அது, டீவில நம்ம ரஜினி அங்கிள் அவர் அம்மாவைப் பார்த்துப் பாடிட்டு இருந்தார்… அதான் உங்க நினைவு வந்திருச்சு… அப்புறம் அப்பா எப்படி இருக்கார் மா…”
“ஓ அப்படியா… அப்பா நல்லாருக்கார் பா… இன்னைக்கு சண்டே ஆச்சே… உன்னோட கொஞ்சம் ப்ரீயா பேசலாம்னு தான் கூப்பிட்டேன்… உனக்கு எதுவும் வேலை இருக்கா…”
“இல்ல மா, சமையல் முடிச்சிட்டு வீடு துடைச்சிட்டு இருந்தேன்… இனி ஒரு குளியலைப் போட்டுட்டு திவ்யமா சாப்பிட்டு கொஞ்சம் தூங்கி எழுந்தா சண்டே ஓவர்…”
“ம்ம்… வேலைக்குப் போயிட்டு வீட்ல சமையலும் செய்திட்டு உனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும்ல… அதான், உனக்கு ஒரு ஆளைத் துணைக்கு அனுப்பலாம்னு இருக்கோம்…”
“எனக்குத் துணையா… என்ன மம்மி விளையாடறீங்களா… என் ஒருத்தனுக்கு என்னால சமைக்க முடியாதா… எதுக்கு வேலைக்காரி எல்லாம்… வேண்டாம்மா…”
பவ்யமாய் மறுத்த மகனை எண்ணி தலையில் அடித்துக் கொண்டவர், “அடேய், வேலைக்காரி இல்ல, வீட்டுக்காரியை அனுப்பலாம்னு இருக்கோம்…” என்றார் சிரிப்புடன்.
“என்னமா சொல்லறீங்க, யூ மீன் ஒயிப்…”
“ஆமா ரகு, நம்ம கோபி அண்ணன் இப்ப நாம இருக்கற முகவரியைத் தெரிஞ்சுகிட்டு வீட்டுக்கு வந்திருந்தார்… உஷாகிட்டயும் போன்ல பேசினோம்…”
“யாரு, நம்ம ஐஷூ அப்பா, அம்மாவா…”
“ஆமாடா, இப்ப அவங்க மதுரைல இருக்காங்க… அதே அன்பு மாறாம அப்படியே இருக்காங்க…” சொல்லும்போதே பழைய நட்புகளைக் கண்ட சந்தோசம் வார்த்தையில் பீறிட்டது.
“ஓ… சூப்பர் மா, எப்படி இருக்காங்க, அப்புறம் அவளைப் பத்தி விசாரிச்சீங்களா… எப்படி இருக்காளாம்…”
“யாரைப் பத்திடா…” தெரியாத போல கேட்டார் மேனகா.
“அதான்மா… உங்க மருமக, ஐஷு எப்படி இருக்காளாம்…” கேட்கும்போதே இதயத்தில் ஜிவ்வென்று ஒரு உணர்வு பரவ சின்னதாய் ஒரு வெட்கம் எட்டிப் பார்த்தது.
அதைப் புரிந்து கொண்ட அன்னை சிரித்தார்.
“டேய் ரகு கண்ணா, ஐஷு பேரை சொல்லும்போதே மனசுக்குள்ள கொண்டாட்டம் போலருக்கு…”
“ப்ச்… கிண்டல் பண்ணாம சொல்லுங்க மா…” சிணுங்கினான்.
“உன் சிணுங்கலையும், வெக்கத்தையும் பார்த்தா அடிக்கடி எனக்கே கன்பியூஸ் ஆகிடுது…” என்று சிரிக்கவும், “என்ன கன்பியூஸ் மா…” என்றான் மகன்.
“ஹூம்… நான் பெத்தது ஆம்பளப் பையனா, இல்ல பொம்பளப் புள்ளையானு தான்…”
“போங்க மா, அதென்னமோ ஐஷு பத்தி யோசிச்சா மட்டும் எனக்கு ஒரு மாதிரி இருக்கு… சரி, அவ இப்ப என்ன பண்ணறா, எங்க இருக்கா… அவ போட்டோ இருக்கா… மாமாவும் அத்தையும் என்ன சொன்னாங்க…” வரிசையாய் கேள்விகளை அடுக்க அவர் சிரித்தார்.
“இருடா… அதை சொல்லத்தான் கூப்பிட்டேன்… அவ பி டெக் பைனல் இயர் பண்ணறா… ரெண்டு மாசத்துல படிப்பு முடிஞ்சிரும்… மதுரைல தான் இருக்காங்க… என் மருமக போட்டோவை அண்ணன் காட்டினார்…”
“அப்படியா எப்படி இருக்கா மா…” ஆவலாய் பறந்தான் மகன்.
“அப்படியே தேவதை மாதிரி இருக்காடா… என்ன அழகு… குழந்தையா இருக்கும்போதே கொள்ளை அழகா இருப்பா… இப்ப சொல்லவே வேண்டாம்… பார்த்துட்டே இருக்கலாம் போல அவ்ளோ அழகு…” அன்னையின் வார்த்தைகளைக் கேட்கும்போதே அவன் மனம் வானத்தில் பறந்தது. உடனே ஓடிச்சென்று அவளைக் கண்டு கைகளில் ஏந்திக் கொண்டு கொஞ்ச வேண்டும் போலத் தோன்றியது உப்பு மூட்டை ஏற்றிக் கொண்டு ஊரை வலம் வர மனசு துடித்தது.
சின்ன வயதில் புரியாமலே அவள் மீது ஏற்பட்டிருந்த அன்பு அப்படியே பசுமை மாறாமல் வளர்ந்து ஒரு ஈர்ப்பாய் மாறி இப்போது காதலாய் நிறைந்திருந்தது. இப்போதும் அவளது நான்கு வயதில் பிறந்தநாள் கொண்டாடும்போது எடுத்த போட்டோவைப் பர்ஸில் வைத்திருந்தான். தன் மனதில் அவள் மீது உண்டான காதலுக்கு சக்தி இருந்தால் தேடாமலே அவளை விதி தன்னிடம் கொண்டு வந்து சேர்க்குமென்ற நம்பிக்கையோடு காத்திருந்தான்.
அவளுக்கு தன்னைக் கண்டால் பிடிக்குமோ பிடிக்காதோ, நினைவிருக்குமோ, இருக்காதோ அதெல்லாம் இரண்டாம் பட்சம்… ஆனால் தனது காதல் உண்மையென்றால் அவளை மீண்டும் தான் சந்திக்கும் சமயம் வருமென்று காத்திருந்தான். அந்த நம்பிக்கையும், காத்திருப்பும் அவன் பெற்றோருக்கும் தெரியுமென்பதால் அவர்களும் தேட எந்த முயற்சியும் செய்யவில்லை. இப்போது அவன் மனம் போலவே கோபிநாத் தானாகவே அவர்களைத் தேடிச் செல்லவும் அனைவரின் மனமும் உற்சாகத்தில் மிதந்தது.
மேனகாவும், ரகுவரனும் நண்பர்களைப் போல எல்லா விஷயத்தையும் பேசிக் கொள்வர்… புருஷோத்தமனுக்கு எல்லா இடத்துக்கும் சென்று வருவது கஷ்டம் என்பதால் அன்னையும் மகனும் தான் நண்பர்களைப் போல ஒன்றாய் சென்று வருவர். மகனின் மனதிலுள்ள நம்பிக்கை பலிக்க வேண்டுமென்ற மேனகாவின் நெடுநாளைய பிரார்த்தனை கை கூடி வந்ததன் சந்தோஷத்தில் இருந்தார்.
“அம்மா, நான் எப்ப ஊருக்கு வரணும்… எனக்கு உடனே ஐஷூவைப் பார்க்கணும்னு ஆசையா இருக்கு மா…” மகனின் குரலில் வழிந்த ஆர்வத்தை உணர்ந்த மேனகா, “எனக்கும் அப்படி தான் ரகு இருக்கு… ஆனா, கோபி அண்ணன் வீட்ல பேசிட்டு சொல்லறேன்னு சொன்னார்… அதுக்குதான் வெயிட்டிங்…””என்றார் மேனகா.
“ஏன்மா, ஐஷுக்கு அப்ப என்னைப் பிடிச்ச போல இப்பவும் பிடிக்குமா… என்னை இன்னும் மறக்காம இருப்பாளா…” அவனது குரலில் ஒலித்த கவலை மேனகாவுக்கும் இல்லாமல் இல்லை.
இருந்தாலும் அதெல்லாம் கடவுள் பார்த்துக் கொள்வார் என்ற நம்பிக்கையில் இருந்தார்.
“மேகி, ரகு என்னமா சொல்லுறான்… குடு நானும் பேசறேன்…” என்றார் புருஷோத்தமன் மனைவியிடம்.
“கண்ணா, அப்பா பேசணுமாம் கொடுக்கறேன்…” என்றவர் கணவரிடம் கொடுக்க வாங்கியவர் பேசிக் கொண்டிருந்தார்.
“கோபியை பார்த்து எத்தனை வருஷமாச்சு… இப்பவும் நேத்துப் பார்த்த போல அப்படியே இருக்கான்… சுபாவமும் அப்படித்தான்… நீ சீக்கிரமே ஊருக்கு வர போல இருக்கும்பா… நாம கோபி வீட்டுக்குப் போயி எல்லாரையும், பார்த்திட்டு வந்திடலாம்…” என்றார் உற்சாகத்துடன்.
“சரிப்பா… எப்பன்னு சொல்லுங்க வந்திடறேன்…”
“ம்ம்… நீ சாப்டியா ரகு…” என்ற தந்தையிடம், “இன்னும் இல்லப்பா… குளிச்சுட்டு சாப்பிடணும்…” என்றான்.
“ஓ… ஏதாச்சும் ஹாஸ்டல்ல தங்கிக்கன்னு சொன்னாலும் கேக்காம தனியா பிளாட் எடுத்து தங்கிருக்கே… வேலைக்கும் யாரையும் வச்சுக்கிறதில்ல… எதுக்கு இப்படி கஷ்டப்படறே…”
“அப்படிலாம் ஏதும் இல்லப்பா… உங்களுக்கே தெரியும்… எனக்கு இருக்கற இடமும், சாப்பாடும் எப்பவும் தரமா சுத்தமா இருக்கணும்னு… ஹாஸ்டல்ல தங்கினாலோ, மெஸ்ல சாப்பிட்டாலோ சரிப்பட்டு வராதுப்பா… நம்ம வேலையை நாமளே கவனிச்சுக்கறது ஒரு சுகம் தானே… எனக்கு எந்த சிரமமும் இல்லப்பா… இதான் பிடிச்சிருக்கு…” என்ற மகனின் பேச்சைக் கேட்டு பெருமிதமாய் புன்னகைத்தார்.
“நீ இப்படி பொறுப்பா பேசறதைக் கேட்க மனசுக்கு ரொம்பப் பெருமையா இருக்குடா… “இந்தக் காலத்துப் பசங்கல்ல நீ ரொம்ப வித்தியாசமான பையன்டா…” என்றார்.
“சரிப்பா, உடம்பைப் பார்த்துக்கோங்க… அம்மாட்ட கொஞ்சம் கொடுங்கப்பா…” என்றான் மகன்.
மேனகா வாங்கியதும், “அம்மா, ஐஷூ போட்டோவை எனக்கு அனுப்பி வைங்கம்மா… ப்ளீஸ்…” என்றதும், “சரி, சரி நான் அனுப்பறேன்… நீ முதல்ல வேலைய முடிச்சு சாப்பிடு… டைம் ஆச்சு… வச்சிடறேன்டா…” என்றவர் போனை வைத்ததும் ரகுவின் மனம் துள்ளிக் குதித்தது.
அவன் வாட்ஸ்அப்பில் அன்னை போட்டோ அனுப்புகிறாரா என்று பார்த்துக் கொண்டிருக்க முதலில் மெசேஜ் வந்தது.
“முதல்ல குளிச்சு சாப்பிடு… ஒரு மணி நேரத்துல போட்டோ அனுப்பறேன்…” என்ற அன்னையின் மெசேஜை கண்டவன், சரியான கேடி மம்மி… நான் சாப்பிடாம இருப்பேன்னு டைம் கால்குலேட் பண்ணி அப்புறம் அனுப்பறேன்னு சொல்லுது பாரு… மிலிட்டரிக்காரர் பொண்டாட்டியாச்சே…” புலம்பிக் கொண்டே எழுந்தவன் துடைக்க மீதமிருந்த தரையைத்  துடைத்துவிட்டு குளியலை முடித்து சாப்பிட அமர்ந்தான். இறங்குவேனா என்று அடம் பிடித்த சாப்பாட்டை சிக்கன் கிரேவியுடன் வலுக்கட்டாயமாய் உள்ளே தள்ளிவிட்டு கைகழுவி எழுந்தபோது மெசேஜ் டோன் கேட்டது.
வேகமாய் அலைபேசியை எடுத்தவன் இதயம் தாறுமாறாய் தாளமிட இரத்த நாளங்களில் ஒரு புதுப் பிரவாகத்தை உணர்ந்தான்.
“என் மருமக எப்படி இருக்கான்னு பாரு…” என்ற வார்த்தைக்குப் பின் ஒளிர்ந்த போட்டோவில் ரோஜாப் பூவை சுரிதாரில் பொதிந்தது போல் நிற்கும் அந்த மெகா சைஸ் ரோஜாப்பூவை கண்கள் விரியப் பார்த்தான்.
பளிச்சென்ற அவள் புன்னகை இன்ஸ்டன்ட் காபியாய் இதயத்தில் ஒட்டிக் கொள்ள, கண்களுக்குள் அந்த உருவம் பசையின்றி பச்சக் என்று ஒட்டிக் கொண்டது. வெகு நேரம் கண்ணெடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தவனின் மனம் ஒருவித மோன நிலையில் மிதந்து கொண்டிருக்க இதயம் அவளைத் தேடி அலைந்து கொண்டிருந்தது.
அவள் கண்கள் இரண்டும் அவனை நோக்கி சிமிட்டுவது போலத் தோன்ற சட்டென்று அதிசயித்து நோக்கியவன் பிரமிப்புடன் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
“ஐஷூ, என் ஐஷூ… அச்சோ எவ்ளோ அழகாருக்கா…” மீண்டும் பார்த்துக் கொண்டவன் அலைபேசியை நெஞ்சோடு அணைத்துக் கொண்டு கண்ணை மூடி அவள் உருவத்தை தனக்குள் தேடிக் கொண்டிருந்தான்.
எங்கேயோ பார்த்த மயக்கம்…
எப்போதோ வாழ்ந்த நெருக்கம்…
தேவதை இந்த சாலையோரம்
வருவது என்ன மாயம் மாயம்…
கண் திறந்திவள் பார்க்கும்போது
கடவுளை இன்று நம்பும் மனது….
மனம் உற்சாகத்தில் பாடிக் கொண்டிருக்க அவளை உடனே காண மனம் துடிக்க கணபதிக்கு வேண்டிக் கொண்டான்.
“பிள்ளையாரப்பா… என் ஐஷூ எனக்கே கிடைக்கணும்… எங்க கல்யாணத்தை நல்லபடியா நடத்திக் கொடுத்திட்டா உனக்கு 101 தேங்கா உடைக்கறேன்… ப்ளீஸ் என் அப்ளிகேஷனைக் கன்சிடர் பண்ணுப்பா…” வேண்டுதல் வைத்தான்.
இமை மூடி கேட்கிறேன்
இறைவா… என்
இதய தேவதையை
இல்லை என்றிடாதே…
வீட்டுக்கு அருகிலிருந்த பிள்ளையார் கோவிலுக்கு பாட்டியுடன் வந்திருந்த ஐஸ்வர்யா பிள்ளையாரை முறைத்துக் கொண்டு நின்றிருந்தாள்.
“யோவ் ஜி, கொஞ்சமாச்சும் உனக்கு பொறுப்பிருக்கா… நீ என் பிரண்டு தானே… எனக்கு வரப்போற புருஷன் எப்படிலாம் இருக்கணும்னு உன்கிட்ட ஆல்ரடி சொல்லிருக்கேன் தான… அப்புறம் எதுக்கு இப்ப எனக்கு இப்படி ஒரு புரபோசலை வரவச்சிருக்கே… இந்த அப்பா, அம்மா உலகத்துலேயே பெஸ்ட் மாப்பிள்ளையைக் கண்டு பிடிச்ச மாதிரி நான் அவனையே கட்டிக்கணும்னு உருகுறாங்க… உனக்கு வார வாரம் நான் எத்தனை பூஜ பண்ணிருக்கேன்… உன்னை சுத்தி வந்தா நல்ல புருஷன் கிடைப்பான்னு அதையும் செய்தேன்… சுண்டல், கொழுக்கட்டைன்னு நான் படச்சதை எல்லாம் நல்லா மொக்கிட்டு உன்னோட மூஞ்சூறு போல இருக்கறவனை மாப்பிள்ளைன்னு கொண்டு வந்திருக்கே… இதுல நான் சம்மதிச்சே ஆகணும்னு இந்த கோமு கூட என்னை டார்ச்சர் பண்ணுது…” திட்டிக் கொண்டிருந்தவளைப் பிள்ளையார் பரிதாபமாய் பார்த்துக் கொண்டிருக்க, அவளது மைன்ட் வாய்ஸ் பாட்டிக்கு கேட்டதோ என்னவோ அவர் இவளையே பார்த்துக் கொண்டிருந்தார்.
“ஐஷூ, போதும் வாடி… நீ முறைக்கிற முறைல அந்தப் பிள்ளையார் கோச்சுட்டு எழுந்து போயிடப் போறார்…” என்ற பாட்டியின் குரலில் திரும்பியவள் முறைத்தாள்.
“வேணாம் கோமு, நானே டென்ஷன்ல இருக்கேன்… கடுப்பேத்தாத…” என்றவளை நோக்கிப் புன்னகைத்தார்.
“ஐஷூ, இப்ப எதுக்கு தேவையில்லாம டென்ஷன் ஆகற… உன் அப்பாவுக்கு அவங்க கிட்ட மறுத்து எதும் சொல்ல முடியாது… ஆனா நீ சொல்லலாம் தானே.. இப்போதைக்கு ஓகே சொல்லு… அவங்க வந்து பார்க்கட்டும்… நேர்ல அந்த ரகுவைப் பார்த்தும் உனக்குப் பிடிக்கலன்னா, தனியாப் பேசணும்னு சொல்லி உனக்குப் பிடிக்கலன்னு சொல்லிடு… வேலை முடிஞ்சுது… இதுக்குப் போயி சும்மா புசுபுசுன்னு கோபப்பட்டுட்டு இருக்க… ஹவ் ஈஸ் மை ஐடியா…” என்று புருவத்தைத் தூக்கிக் கொண்டு புன்னகையுடன் கேட்ட பாட்டியை யோசனையுடன் பார்த்தாள்.
அவளுக்கும் இந்த ஐடியா சரியாய் வரும் போலத் தோன்றவே முகம் மலர்ந்தாள்.
“ம்ம்… இந்த ஐடியா நல்லார்க்கே… இனி நடக்கறதைப் பாரு… அந்த ரகுவரன் இந்த வரனே வேண்டாம்னு நாலு கால்ல தெறிச்சு ஓடற போல பண்ணறேன்…” என்றவள் சமாதானத்துடன் புன்னகைக்க,
“தட்ஸ் இட்… கமான் லெட்ஸ் கோ…” என்று முன்னில் நடந்த பாட்டியைப் புன்னகையுடன் தொடர்ந்த பேத்தி, “கோமு, பரவால்ல, அப்பப்போ உனக்கும் மூளை வேலை செய்யுது…” என்றாள் சிரிப்புடன்.
“ம்ம்… ஈவன் திஸ் வில் பாஸ் அவே பேபி…” என்றார் அவர்.
“ம்ம்… அப்பப்போ நீயும் இங்கிலீஷ்ல கலக்கற கோமு…” சொல்லிக் கொண்டே திரும்பியவள் அங்கிருந்த கடை ஒன்றில் பள்ளித் தோழி ஒருத்தி இடுப்பில் குழந்தையுடன் நின்றிருக்க அவளைக் கண்டதும் முகம் மலர்ந்தாள்.
“ஏய் ரமா… எப்படி இருக்க… எத்தன வருஷமாச்சு, உன்னைப் பார்த்து…” என்ற தோழியைப் பார்த்து புன்னகைத்த ரமா, “ம்ம்… இருக்கேன்டி நீ எப்படி இருக்க… இவங்க யாரு உன் அம்மாவா…” என்று சுரிதாரில் இருந்த பாட்டியைக் கேட்க, இவளுக்கு கண், காது, மூக்கு வாய் எல்லாவற்றிலும் புகை வர பெருமையாய் தலையைக் கோதிக் கொண்ட பாட்டியை எரிச்சலுடன் பார்த்தாள்.
“நோ மா… ஷீ ஈஸ் மை கிரான்ட் டாட்டர்…” என்றதும், “ஓ… ரொம்ப யங்கா இருக்கீங்க பாட்டி…” என்றதும் அவரைக் கையிலேயே பிடிக்க முடியவில்லை. பெருமையுடன் பேத்தியை பார்த்துக் கொண்டே “தேங்க்ஸ்மா…” என்றார்.
“இது யாரு குழந்தை ரமா… அழகாருக்கு…” ஐஸ்வர்யா கேட்கவும், “என் குழந்தை தான்…” என்ற ரமாவின் முகம் ஏதோ கவலையில் சுருங்கிப் போனது.
“ஓ சூப்பர்… ஏண்டி என்னை கல்யாணத்துக்கு கூப்பிடவே இல்லை… ஏன் ஒரு மாதிரி சோர்வா இருக்க…” என்று கேட்க,
“ப்ச்… அது ஒரு அவசரக் கல்யாணம்… நான் ஒருத்தரை லவ் பண்ணிட்டு இருந்தேன்… என் வீட்டுல எங்க மாமா பையனைக் கட்டிக்க சொல்லி கம்பெல் பண்ணாங்க… அவர் பார்க்க கறுப்பா, நல்லாவே இருக்க மாட்டார்… ஆனா நான் லவ் பண்ணவன் சினிமா ஹீரோ போல அழகாருப்பான்… அழகைப் பெருசா நினைச்சு மாமா பையனைக் கட்டிக்காம அவனைத் தான் கட்டிப்பேன்னு அடம் பிடிச்சு கல்யாணம் பண்ணேன்… அவன் எனக்கு வயித்துல புள்ளையைக் கொடுத்துட்டு வேறொருத்தி கூட ஓடிப் போயிட்டான்… இப்ப அம்மா வீட்டுல இருந்து வேலைக்குப் போயிட்டு இருக்கேன்… நம்மள பெத்து வளத்துன பெத்தவங்க நம்ம நன்மைக்கு தான் சொல்லுவங்கன்னு புரியாம புத்தி கெட்டுப் போயி என் இஷ்டத்துக்கு கல்யாணம் பண்ணினதுக்கு கடவுள் எனக்கு நல்ல தண்டனை கொடுத்துட்டான்… இப்பதான் வாழ்க்கைன்னா என்னன்னு புரியுது… வெறும் அழகு மட்டுமே வாழ்க்கைக்கு உதவாதுன்னு பட்ட பின்னால புரிந்து என்ன புண்ணியம் சொல்லு…” என்ற தோழியைக் காணவே பரிதாபமாய் இருந்தது.
“டோன்ட் வொர்ரி மா… பீ பிரேவ்… அழகு நிரந்தரமில்லை… அது உங்க வயசுப் பொண்ணுங்களுக்கு புரியறதில்லை… உனக்குன்னு ஒரு செல்ப் ஐடன்டிடி தேடிக்கோ… எல்லாம் சரியாகும்…” என்றார் கோமு.
ஐஸ்வர்யாவும் அவளுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு அவளது அலைபேசி எண்ணை வாங்கிக் கொண்டு விடை பெற்றவள் பாட்டியுடன் நடந்தாள்.
அவளது மௌனம் யோசனையின் தீவிரத்தை உணர்த்த கோமுவும் எதுவும் பேசாமல் அமைதியாய் நடந்தார்.
அன்பின் புரிதலுக்கு
அழகென்றும் தீர்வில்லை…
வாழ்வின் தேடலுக்கு
வசீகரம் தேவையில்லை…
எதையும் பட்டுதான்
தெரிந்து கொள்வேன் என்றால்
வாழ்க்கையில் படாதபாடு
பட வேண்டி வரும்…

Advertisement