Advertisement

அபராஜிதன் அன்றைய நினைவில் இருக்க அவன் எண்ணத்தை கலைத்தது அவன் மனைவியின் பேச்சு. “சித்தா இன்னைக்கு ஸ்கூல்ல இப்படிலாம் பேசுவாங்கன்னு நான் நினைக்கவே இல்லை.சட்டுன்னு பேசிட்டாங்கல” என்றாள் அவள்.

பள்ளியில் அவரை பேச அழைத்த போது இறுதியில் அவரின் பேச்சு அபராஜிதனை பற்றி சொல்ல ஆரம்பித்தது.

“உங்க எல்லாருக்கும் என்னோட சின்ன அறிவுரை என்ன தெரியுமா. தப்பு செஞ்சாலும் அதை தைரியமா ஒத்துக்கணும், அந்த மனசு எல்லாருக்கும் வந்திடாது”

“தவறை மறைக்க மறைக்க தான் அது சின்னது பெரிசுன்னு குட்டி போட்டு வளர்ந்திட்டே இருக்கும். ஆனா அதை ஒத்துக்கிட்டா மனசுல வர்ற நிம்மதி வேற எதுலயும் கிடையாது”

“இந்த ஸ்கூல்ல சில நாட்களுக்கு முன்ன என்ன நடந்துச்சுன்னு உங்களுக்கெல்லாம் தெரிஞ்சிருக்கலாம், இல்லை தெரியாமலும் இருக்கலாம். தெரிஞ்சாலும் தெரியலைன்னாலும் அதைப்பத்தி சொல்ல வேண்டியது என்னோட கடமை”

“இந்த பள்ளியில டொனேஷன்ங்கற பேர்ல கூடுதல் கட்டணம் வாங்குறதா சில மாசம் முன்னாடி ஒரு கம்பிளைன்ட் வந்துச்சு. ஏன் உங்கள்ளயே சிலர் டொனேஷன் கொடுத்து கூட ஸ்கூல்ல சேர்ந்திருக்கலாம்” என்று அவர் சொன்ன போது ஓரிருவரின் பெற்றோர்கள் கையை தூக்கியதை அவர் பார்த்தார்.

“அதை செஞ்சது யார்ன்னு உங்களுக்கு தெரிஞ்சிருக்க நியாயமில்லை. சிலருக்கு தெரிஞ்சும் இருக்கலாம், எஸ் இந்த பள்ளியோட முன்னாள் முதல்வர் தான் அந்த தப்பை செஞ்சது. பள்ளியோட பேரு கெட்டிட கூடாதுன்னு அவரோட தப்பை மறைச்சு, ஆனா அவரை தொடர்ந்து பள்ளியில இருக்க விடாம டிஸ்மிஸ் பண்ணி அனுப்பினது நம்ம நிர்வாகி அபராஜிதன் தான்”

“அதுல பாதிக்கப்பட்டதா நினைச்ச அந்த முதல்வர் திருவாளர் அபராஜிதனை பழிவாங்க செஞ்ச வேலையால அவரோட பேரு கெட்டுப்போச்சு. அதெல்லாம் அவர் பொருட்படுத்தவே இல்லை”

“இதெல்லாம் முடிஞ்சு போன கதை தானே ஏன் இவன் இதெல்லாம் சொல்றான்னு உங்களுக்கு தோணலாம். நடந்த எல்லா விஷயத்தையும் விட அவர் செஞ்சதுல என்னை ரொம்பவும் பாதிச்ச, கவர்ந்த விஷயம் எதுன்னா 

அவர் அவரோட தப்பை ஒத்துக்கிட்டது தான்”

“எப்படி ஒத்துக்கிட்டார் தெரியுமா பல பேர் கூடிய சபையில நீதிமன்றத்தில அதை செஞ்சார். பத்திரிகையில வரும் என்னென்னவோ நடக்கும், பள்ளியோட பேரு கெட்டு போகும்ன்னு எல்லாம் தெரிஞ்சும் ஒத்துகிட்டார்”

“நீங்க கவலையே பட வேணாம் மாப்பிள்ளை. இப்போ வேணா பேரு கெட்டு போயிருக்கலாம், பள்ளியோட மதிப்பும் பார்க்கறவங்க மத்தியில குறைஞ்சு போயிருக்கலாம். ஆனா அதெல்லாம் எவ்வளவு நாளைக்கு அடுத்ததா ஒரு பூதாகரம் வர்ற வரைக்கும் தான்”

“அதுக்காகவெல்லாம் நீங்க எப்பவும் கவலைப்பட தேவையேயில்லை. உங்களோட கடமையை நீங்க எப்பவும் போல செய்ங்க, அது தான் இந்த பள்ளியோட கல்வித்தரம் குறையாம பார்த்துக்கோங்க”

“அது தான் உங்களுக்கு நல்ல பேரை கொடுக்கும். தவிர இப்போ நடந்த விஷயம் கூட எல்லாருக்கும் புரிஞ்சு இருக்கும், நீங்க தப்பு செஞ்சா பேசாம இருக்க மாட்டீங்க, யாரா இருந்தாலும் அதை கண்டிச்சு அவங்களோட தப்பை அவங்களே உணர செய்வீங்கன்னு எல்லாருக்கும் புரிஞ்சா விட்டு போனது எல்லாம் தேடி வரும்” என்று அவர் பேசி முடிக்கவும் பலத்த கரகோஷம் எழுந்தது அங்கு.

அபராஜிதன் கண்கள் மட்டுமல்ல இந்திரசேனாவின் கண்களும் கலங்கிப் போனது. அபராஜிதன் செய்தது அனைத்தும் அவள் சொன்னது தானே, லேசாய் ஒரு பெருமிதமும் எழுந்திருந்தது அந்த கணத்தில்.

“நாளைக்கு எங்க வீட்டுக்கு போயிட்டு வரலாமா??”

“கண்டிப்பா போகலாம், அப்புறம் சேனா சாரி” என்றான்.

“எதுக்கு சாரி??”

“அகல்யாவோட மாமியார் உன்கிட்ட என்ன பேசினாங்கன்னு அகிலேஷ் என்கிட்ட சொன்னார்” என்று மட்டும் தான் அவன் சொன்னான்.

“இந்த நேரத்துல அவங்களைப்பத்தி எதுக்கு பேசிட்டு விடுங்க” என்றாள் அவள்.

“நான் தான் அன்னைக்கு உன்னை ரொம்ப பேசிட்டேன்” என்றான் அவன்.

“அப்போ இனிமே நீங்க என்னை பேச மாட்டேன்னு சொல்ல வர்றீங்களா”

“ஹ்ம்ம்ஹூம் இல்லவே இல்லை”

“அப்போ எதுக்கு டயலாக் எல்லாம் விடறீங்க??”

“எனக்கு குறுந்தொகையில ஒரு பாட்டு ஞாபகத்துக்கு வருது”

“பாட்டா அதுவும் செய்யுள்லயா. என்னைய நூறு கேஸ் லா வேணா படிக்கச் சொல்லுங்க, படிப்பேன். ஆனா தமிழ் செய்யுள் மட்டும் எனக்கு மனப்பாடம் செஞ்சி கூட படிக்க வராது” என்று அவள் சொல்ல மெல்ல நகைத்தான்.

“உன்னை யாரும் இப்போ மனப்பாடம் செய்யச் சொல்லலை. நான் ஒண்ணும் முழுப்பாட்டும் சொல்லப் போறதில்லை, அதுல வர்ற ஒரு வரி தான், சொல்லவா”

“வேணாம்ன்னா விடப் போறீங்களா என்ன சொல்லுங்க” என்றாள் சலிப்பது போல். ஆனால் உண்மையில் அவன் என்ன சொல்லப் போகிறான் என்ற ஆர்வம் அவளுக்கு இருக்கவே செய்தது.

பூழ்க்கால் அன்ன செங்கால் உழுந்தின்

ஊழ்ப்படு முதுகாய் உழையினங் கவரும்

அரும்பனி அச்சிரம் தீர்க்கும்

மருந்து பிறிதில்லை, அவர் மணந்த மார்பே.

அவன் சொல்லி முடிக்கவும் அவளுக்கு அதன் அர்த்தம் புரிகிறதா என்று அவள் பார்த்தும் சற்றும் அவளுக்கு அது மட்டுப்படவில்லை.

அவர் மணந்த மார்பே மட்டும் ஏதோ தலைவன் தலைவிப்பற்றியதாய் இருக்கும் என்று உணர வைத்தது. தீர்க்கும் மருந்து என்ற வார்த்தை அவளுக்கு ஏதோ நோய்க்கு மருந்துப் பற்றி சொல்கிறார்கள் என்ற எண்ணம் வந்தது.

“நான் சொன்னதுக்கு அர்த்தம் உனக்கு புரிஞ்சிருக்க வாய்ப்பில்லை நானே சொல்லிடறேன்” என்றவன் பொருளுரைத்தான் அவளுக்கு.

காடையின் கால்களைப் போன்ற சிவந்த நிறத்தையுடைய தாளையுடைய உழுந்துச் செடிகளின் முற்றியக் காய்களை மான் கூட்டங்கள் தின்னும் பொருட்டுக் கொள்ளும் தாங்குதற்கரிய பனி பெய்யும் இந்த முன்பனிக்காலத்தால் உண்டாகிய என்னுடைய காதல் நோய்க்கு என்னை மணந்த என் தலைவனின் மார்பு தான் மருந்து.  வேறு மருந்து யாதும் இல்லை

“இது தான் அந்த பாடலுக்கான பொருளுரை”

“இப்போ என்ன உங்க மேல நான் சாஞ்சிக்கணுமா அதுக்கு தான் இதெல்லாம் சொன்னீங்களா…”

“இல்லைடி பொண்டாட்டி அதை சொல்ல வரலை. ஆனா நீ சொன்ன மாதிரி அதுவும் நல்லாத்தான் இருக்கும்” சற்று தள்ளி நின்றிருந்தவளையும் அவர்களுக்கு இடையில் இருந்த இடைவெளியையும் மாற்றி மாற்றி பார்த்தான்.

அவன் பார்வை புரிந்தாலும் அதை கண்டுக்கொள்ளாதவளாக அவள் வேறுபுறம் பார்க்க அவள் கரம் பற்றி இழுத்தவன் அவளை தன் மீது சாய்த்துக் கொண்டான்.

“எனக்கு மனசுல பட்டது என்ன தெரியுமா தாங்கிக்கொள்ள முடியாத குளிரையும் தீர்க்கும் மருந்தா அந்த தலைவனுடைய மார்பு இருக்கும்ன்னு தலைவி சொன்ன மாதிரி, தாங்கிக்கொள்ள முடியாத துன்பம் வந்த போதும் அதை தீர்க்கற மருந்தா என்னோட தலைவி நீ என் பக்கத்துல இருக்கன்னு எனக்கு தோணுச்சு” என்று அவன் சொல்லும் போது என்ன சொல்வதென்றே அவளுக்கு தெரியவில்லை.

இதைவிட வேறென்ன வேண்டும் எனக்கு என்ற எண்ணம் உள்ளுக்குள் ஓடாமல் இல்லை. ‘நீ என் கூட சண்டை போடு, திட்டு என்ன வேணா செஞ்சிக்கோ. ஆனா எல்லாத்துக்கும் மேலா இந்த அன்பை எனக்கு அதிகமா கொடு’ என்று தான் எண்ணத் தோன்றியது அவளுக்கு. மனம் நிறைந்து போனது அவளுக்கு.

மெல்லக் கேட்டாள் “நாளைக்கு எங்க வீட்டுக்கு போகலாமா”

உடனே அவன் சொன்னான் “அங்க உன்னை பாப்பான்னு யாரும் கூப்பிட மாட்டாங்களே??”

————————–

“இந்த வீட்டில என்ன நடக்குது, நானா மூணாவது மனுஷங்க மூலமா விஷயத்தை கேள்விப்பட்டு ஓடி வர்றேன்” என்ற கரிகாலனுக்கு மகன் தன்னிடத்தில் ஒன்றும் சொல்லவில்லை என்ற ஆதங்கம்.

“அப்பா அதான் எல்லாம் நல்லபடியா முடிஞ்சுதுலப்பா”

“முடிஞ்சது சரி தான் நான் எதுக்கு இருக்கேன் அபி, உங்களுக்கு ஒண்ணுன்னா நான் உங்க கூட இருக்க வேண்டாமா. அகல்யா சொல்லித்தான் அவளோட பிரச்சனையும் எனக்கு தெரிஞ்சது”

“மாமா…”

“நீ எதுவும் பேசாதம்மா உன்னை என் மருமக மாதிரியா நான் பார்த்தேன் மக மாதிரி தானே நினைச்சேன். நீ கூட எதுவுமே என்கிட்ட சொல்லலை” என்றார் கொஞ்சம் கோபமாக.

“மாமா உங்க பொண்ணு உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லலைன்னா நீங்க கோவிப்பீங்களா. நாங்க உங்ககிட்ட மறைக்க நினைக்கலை, உங்களுக்கு வருத்தத்தை நாங்க கொடுக்க விரும்பலை. நீங்க இப்படி சங்கடப்படுவீங்கன்னு தான் அகல்யாகிட்ட சொல்ல வேணாம்ன்னு சொன்னேன்”

“அவ சொல்லலை அவளோட மாமியார் தான்… அப்புறம் தான் அகல்யா சொன்னா… எவ்வளவு நடந்திருக்கு, எனக்கு என்ன சொல்லன்னு தெரியலை. நீ நிதானமா இல்லைன்னா ரெண்டு குடும்பம் இப்போ உடைஞ்சு போயிருக்கும்”

“நீ நிதானமாவும் பொறுமையாவும் இதை கையாண்டிருக்க, அந்த விதத்துல எனக்கு சந்தோசம் தான். உன் மாமியார் இருந்தா என்ன செஞ்சிருப்பாளோ நீயும் அதை தான் செஞ்சிருக்கே” என்று சொல்லும் போது அவர் குரல் நெகிழ்ந்திருந்தது. “அபி… இந்திரசேனா உனக்கு பொண்டாட்டி மட்டுமில்லை இன்னொரு அம்மா, விட்டிறதா அவளை” என்றார். அபராஜிதன் மனைவியை பெருமிதமாய் பார்த்தான்.

——————-

“ஹேய் பாப்பா… என்ன பாப்பா நீ நேத்தே வருவேன்னு பார்த்தேன், இப்போ தான் வர்றே” என்று வீட்டிற்குள் நுழைந்தும் நுழையாததுமாக அவளின் சின்ன அண்ணன் முகிலன்.

அண்ணனின் பாசமான அழைப்பு கண்டவள் தன்னையுமறியாமல் திரும்பி தன் கணவனைப் பார்க்க அவன் பல்லைக் கடிப்பது நன்றாக தெரிந்தது, சிறு சிரிப்புடன் உள்ளே நுழைந்தாள் அவள்.

“பாப்பா மச்சான் அசத்திட்டாருன்னு அப்பாவும், பெரியப்பாவும் சொல்லிட்டு இருந்தாங்க. நான் தான் அன்னைக்கு அங்க வராம மிஸ் பண்ணிட்டேன் போல” என்றான் வருத்தத்தொனியில்.

அப்போது “முகில்” என்ற கண்டிப்பான குரலில் திரும்பி பார்த்தவன் “அப்பா” என்று எழுந்திருந்தான். “உன் தங்கச்சி ஒண்ணும் சின்ன பா… குழந்தையில்லை” என்றவர் பாப்பா என்று சொல்ல வந்து குழந்தை என்று மாற்றிக் கொண்டிருந்ததை அபராஜிதன் புரிந்துக் கொண்டிருந்தான்.

“அவளுக்கே இன்னும் கொஞ்ச நாள்ல பாப்பா பிறந்திடும் அப்போ வரைக்கும் நீ அவளை பாப்பான்னே சொல்லுவியா”

“அப்பா பாப்பா எனக்கு எப்பவும் பாப்பா தான்ப்பா. பாப்பாவுக்கு பாப்பா பிறந்த அந்த பாப்பாவையும் நான் பாப்பான்னு தான் கூப்பிடுவேன். வேணும்ன்னா சின்னப்பாப்பான்னு கூப்பிடவாப்பா” என்று அடிக்கொரு பாப்பாவை போட ‘இவனை மாத்துற கஷ்டம்டா சாமி’ என்று விழித்தார் மாணிக்கவாசகம்.

அபராஜிதனுக்கு சிரிப்பு வந்தது அவன் சொன்ன பாப்பாவில். மருமகனின் சிரிப்பை கண்டதும் தான் சற்று ஆசுவாசமானது மாணிக்கவாசகத்திற்கு.

“இந்தும்மா அடுத்த வாரம் எக்ஸாம்லாம் வருது, எப்படி பிரிப்பேர் பண்ணியிருக்கே”

“நைட்டெல்லாம் முழிச்சு படிக்கிறா மாமா, சொன்னா கேட்க மாட்டேங்குற. எக்ஸாம்ல போய் இவ தூங்கி வழிஞ்சா நல்லாயிருக்குமா சொல்லுங்க” என்று கவலைப்பட்டான் அபராஜிதன். “அதெல்லாம் நான் தூங்கி வழிய மாட்டேன்” என்றாள் அவள்.

“அவளுக்கு இதெல்லாம் பழக்கம் தான்ப்பா” என்று அவனிடம் சொன்னவர் “நல்லா பண்ணு, நான் அரசுதரப்பு வக்கீல் ஆனதைவிட எனக்கு சந்தோசம் தரக்கூடிய ஒரு விஷயம்ன்னா அது நீ நீதிபதி ஆகுறது தான்” என்றார் அவர் மகளிடம்.

“கண்டிப்பா சித்தா… ஆமா வீட்டில யாருமில்லையா…”

“நீ வர்றேன்னு சொல்லாம கொள்ளாம வந்திருக்கே, எல்லாரும் கோவிலுக்கு போயிருக்காங்க குலதெய்வம் கோவிலுக்கு. நீ நல்லபடியா பரீட்சை எழுதணும்ன்னு வேண்டிட்டு வர போயிருக்காங்க. நாளைக்கு வந்திடுவாங்க” என்று அவர் சொல்லவும் குளிர்ந்து அவளுக்கு.

“பாப்பா எனக்கு அப்போவே தெரியும் பாப்பா நீ வருவேன்னு. எனக்கு தோணுச்சு பாப்பா அதான் நான் அவங்ககூட போகலை பாப்பா…” என்று முகிலன் தொடர்ந்து பாப்பா புராணம் பாட சத்தம் போட்டு சிரித்துக் கொண்டிருந்தான் அபராஜிதன். அவன் சந்தோசத்தில் நாமும் பங்குகொண்டு அவர்கள் இனி மகிழ்வாகவும் சந்தோசமாகவும் வாழ்வார்கள் என்று வாழ்த்தி விடைபெறுவோம்.

Advertisement