Advertisement

38

ஆத்திசூடி – மேன்மக்கள் சொற்கேள்

பொருள் – நல்லொழுக்கம் உடைய பெரியோர் சொல்லைக் கேட்டு நட.

“யோவ் எதுக்குய்யா என்னய அடிச்சே?? ஒரு பெரிய மனுஷன் செய்யற வேலையா இது??” என்று அந்த ஆள் தாம்தூம் என்று குதிக்க “இப்போ நீ உண்மையை சொல்லலை நான் போலீசை இங்க வரவழைப்பேன் அவங்க கேட்கிற விதத்துல கேட்பாங்க”

“அப்போ நீ உண்மையை சொல்லித்தான் ஆகணும். சொல்லு…” என்ற அபாரஜிதனின் முகத்தில் கடுமை தெரிந்தது.

அதைக்கண்டு உள்ளுக்குள் லேசாய் உதைத்தாலும் எவ்வளவோ பார்த்திட்டோம் இதெல்லாம் எங்களுக்கு எம்மாத்திரம் என்ற எண்ணம் ஓட “என்னய்யா போலீஸ்ன்னு சொன்னா நாங்க பயந்திருவோமா. உன்னால ஆனதை பார்த்துக்கோய்யா கேஸ் தான் கோர்ட்டுக்கு போயாச்சுல்ல, இனி உன்னை அங்க பார்த்துக்கறேன்” என்றார் அம்மனிதர் அசட்டையாய்.

“ஓகே நான் கடைசியா உனக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கலாம்ன்னு நினைச்சுத்தான் உன்னை இங்க வரச்சொன்னேன். நீ தான் கோர்ட்டுக்கு போறியே போ. அங்க வைச்சு நீ, அப்புறம் உன் பின்னாடி இருக்கற ஆளுங்க எல்லாத்துக்கும் மேல காசுக்காக என் மேல பழி போட்டாளே உன் பொண்ணு அவ எல்லாரும் சேர்ந்து அசிங்கப்படுங்க”

“அதைப் பார்க்கத்தான் நான் காத்திட்டு இருக்கேன். இப்போ நீங்க கிளம்பலாம், போங்க வெளிய” என்றான் அபராஜிதன் தன் கோபத்தை அடக்கிய குரலில்.

“என்ன?? என்ன?? எங்களை பயமுறுத்தி பார்க்கறியா??”

“உனக்கு அசிங்கமா இல்லையா??”

“எ… எதுக்கு நான்… நான் எதுக்கு அசிங்கப்படணும்?? என்றான் அவன் சற்றே திக்கிய குரலில்.

“உன் பொண்ணை வைச்சு இப்படியெல்லாம் செய்யறியே உனக்கு வெட்கமா இல்லை”

“ஏய் என்ன ஓவரா பேசுறே?? அவ என் பொண்ணே…” என்று அவன் ஆரம்பிக்கவும் அதுவரை சற்று அடக்கியே வாசித்திருந்த அவன் மனைவியோ “யோவ் வாயை மூடுய்யா, நீ பேசாத நான் பேசிக்கிறன் அந்தாளுகிட்ட” என்று தன் கணவனை பார்த்து சொன்னவள் அபராஜிதனின் புறம் திரும்பினாள்.

“என்னய்யா என்ன பிரச்சனை உனக்கு. இப்போ என்ன நாங்க கேசை வாபஸ் வாங்கணுமா, அதெல்லாம் பண்ண முடியாது. உன்னால ஆனதை பார்த்துக்கோ” என்றவள் “யோவ் வாய்யா போலாம்” என்று தன் கணவனின் கரம் பற்றி இழுத்துக் கொண்டு வாயில் வரை சென்றுவிட்டவளை அபராஜிதனின் குரல் நிறுத்தியது.

“போங்க அப்படியே நீங்க ஸ்கூல்ல கொடுத்த பேக் சர்டிபிகேட்டுக்கு நான் போடுற கேசையும் சேர்த்து பார்த்துக்கோங்க. கோர்ட்ல தெரியும் யார் பொய் சொன்னாங்க யார் உண்மை சொன்னாங்கன்னு”

“என்… என்ன சொல்றீங்க??” என்று இருவருமே கலவரமாய் திரும்பி பார்த்தனர். கலவரம் மட்டும்மல்ல சற்றே அதிர்ச்சியும் தான், இவன் கண்டுப்பிடித்துவிட்டானோவென அதிர்ச்சி தான் அவர்களுக்கு.

‘அந்தாளு சொன்னான்னு தானே இதுக்கெல்லாம் ஒத்துக்கிட்டோம். இப்போ இவன் வேற ஜெயிலுக்கு அனுப்பறேன்னு சொல்றான், ஒரு கேசுக்கு ரெண்டு கேசாகிப் போச்சுன்னா தண்டனையும் அதிகமாகுமே’ இப்படியெல்லாம் தான் அவர்களுக்குள் ஓடியது.

இருந்தாலும் அனைத்தையும் உள்ளே மறைத்துக் கொண்டு “என்ன ரொம்ப கற்பனை பண்ணி பேசுறீங்க??” என்று மிதப்பாய் கேட்டாள் அப்பெண்ணின் தாய்.

“கற்பனை பண்ணுறது நானா இல்லை பொய்யா கதை கட்டினது நீங்களா. போதும் உங்க நடிப்பெல்லாம் எல்லாமே முடிஞ்சு போச்சு. இனி மறைக்க எதுவுமில்லை, முழு பூசணிக்காயும் வெளிய வந்து நாளாச்சு. அதை ஊரறிய நாளைக்கு கோர்ட்டுல வைச்சு பேசிக்கலாம்” என்றான் அபராஜிதன்.

“சார் இன்னா சார் சொல்றே, நாங்களே இப்போ தான் ஆறு மாசமா வெளிய இருக்கோம். நீ சொல்ற மாதிரி பார்த்தா நாங்க வெளிய வரவே வருஷக்கணக்காவும் போலயே. எங்களை ஆளை விடு சார், நாங்க உன் வழிக்கே வரலை” என்று சட்டென்று பணிந்தாள் சித்திரலேகாவின் தாய்.

“அவ்வளவு சீக்கிரமெல்லாம் உங்களை விட்டிற முடியுமா??” என்றான் அவன் ஒரு மாதிரிக் குரலில்.

“நாங்க இன்னா சார் பண்ணணும்” என்றான் அவளின் கணவன்.

“இதுவரைக்கும் நடந்ததை நீங்க முதல்ல என்கிட்ட சொல்லுங்க, நாளைக்கு என்ன நடக்கணும் எப்பை நடக்கணும்ன்னு நான் சொல்றேன்” என்றான் அபராஜிதன்.

மறுநாள் நீதிமன்றத்தில் அவன் நினைத்தது போலத்தான் அனைத்துமே நடந்தது. விநாயகம் தான் சித்திரலேகாவின் மூலம் பெரிய நாடகத்தையே அரங்கேற்றி இருந்தார். அதை சித்திரலேகா உட்பட அவளின் குடும்பமே நீதிமன்றத்தில் ஒத்துக்கொண்டது. 

அவர் பள்ளியை விட்டு சென்ற பின் பெரிதாய் திட்டம் போட்டுத்தான் சித்திரலேகாவை பள்ளி மாணவியாய் உள்ளே அனுப்பி அபாரஜிதனை சிக்க வைக்க நினைத்திருந்தார். அவரின் எண்ணப்படி எல்லாமே நன்றாகவே தான் நடந்தது.

சித்திரலேகா பார்ப்பதற்கு தான் சிறு வயது பெண் போல இருப்பாள். அவளுக்கு உண்மையிலேயே இருபத்தி மூன்று வயதாகிறது.

அவளின் தந்தை சிறு வயதிலேயே இறந்துவிட்டார். மகளை காப்பாற்ற அவளின் தாய் திருட்டு தொழிலை கையில் எடுத்திருக்க பலன் ஜெயிலுக்கும் வீட்டுக்குமாய் அலைந்திருந்தார்.

அப்பழக்கத்தில் தான் தற்போது தந்தை என்று வந்து நின்றிருந்தவரை அவர் திருமணம் செய்துக் கொண்டிருந்தார். விநாயகம் தேடிப்பிடித்து தான் அவர்களை இங்கு கொண்டு வந்திருந்தார்.

போலி சான்றிதழ்கள் கொடுத்து பள்ளியில் சேர்த்துவிட்டார். அதற்கு அங்கு பணிபுரிந்த அவரின் விசுவாசியும் உடந்தை. அபராஜிதனுக்கு இவ்விஷயம் எல்லாம் பள்ளி ஆசிரியை மீனா அவளைப்பற்றி சந்தேகமாய் சொன்ன பின்னே ஆரம்பித்திருந்தது.

அப்போது கூட அதை சற்று பெரிதாய் எடுக்காது விட்டவன் நீதிமன்றத்தில் மாணிக்கவாசகம் கொடுத்த கோப்பை பார்த்ததுமே அவன் சந்தேகம் உறுதியானது. மாணிக்கவாசகம் அவனிடத்தில் நடந்ததிற்கும் நடப்பதிற்கும் பின்புலமாய் விநாயகம் இருப்பதை உறுதி செய்யும் ஆவணங்களைத் தான் அவனிடத்தில் கொடுத்திருந்தார்.

அதை வைத்து தான் சித்திரலேகாவையும் மற்றவர்களையும் அவன் வட்டத்திற்குள் கொண்டு வந்திருந்தான். இதோ நடந்ததை அவர்களே தங்கள் வாயால் நீதிமன்றத்தில் ஒத்துக் கொண்டிருந்தனர் அனைத்தையும்.

அபராஜிதனும் விநாயகம் முன்பு செய்த தவறை தான் மறைத்த குற்றத்தை ஒப்புக் கொண்டிருக்க அதில் அவரின் முகம் இன்னமும் கருத்தது. ‘இப்படி எல்லாத்தையும் போட்டுக் கொடுத்திட்டானே’ என்று.

‘இவன்கிட்ட தேவையில்லாம மோதிட்டமோ’ என்று அவர் எண்ணாமலும் இல்லை. அபராஜிதன் தன் குற்றம் ஒப்புக் கொண்டிருந்த போதிலும் நீதிபதி அவனை கண்டிக்கவும் பாராட்டவும் தவறவில்லை. கண்டிப்பு அவன் செய்த தவறுக்காகவும், பாராட்டு அவன் அதை மனமுவந்து நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டதிற்காகவும் தான். 

முகத்தில் வழிந்துக் கொண்டிருந்த நீரை வலக்கரத்தால் மேலிருந்த கீழாக சுத்தமாய் துடைத்தவன் திறந்திருந்த ஷவரை மூடிவிட்டு துவாலையை எடுத்து துடைத்துக் கொண்டே வெளியில் வந்தான்.

“இப்போவாச்சும் சொல்லுங்க” என்றவாறே குளியலறை வாயிலிலேயே நின்றிருந்தாள் அவன் மனைவி.

“எது நடந்திருந்தாலும் நல்லதா தானே நடந்திச்சு??” என்றவன் அவளுக்கு பதில் சொல்லாது. அதில் அவள் முகம் சுருங்க ‘போடா’ என்று எண்ணிக்கொண்டு முகத்தை தூக்கி வைத்தவாறே அவள் வெளியே செல்ல எட்டி அவள் கரம் பிடித்தான் அவளின் கணவன்.

“நில்லுடி பொண்டாட்டி”

“நிக்க முடியாது போடா”

“ஹேய் என்னடி டா சொல்றே??”

“ஹேய் என்னடா டி சொல்றே??” என்றாள் அவளும் அவனைப் போல. அவள் சொன்ன விதம் இருவருக்குமே சிரிப்பை வரவழைக்க புன்னகைத்துக் கொண்டனர்.

அவளை அருகிழுத்து அணைத்துக் கொண்டான். “சீய் போய் சட்டை போடுங்க” என்றாள்.

“ஏன் நான் இப்படி உன்னை கட்டிப்பிடிச்சதில்லையா” என்று அவன் சொல்லவும் அவன் வாயை தன் கரத்தால் மூடினாள்.

“போதும் போதும் கொஞ்சம் விட்டா பேசிட்டே இருப்பீங்க”

“என்ன நீ பேசு பேசுன்னு சொன்னே, பேசினா போதும் போதும்ன்னு சொல்றே”

“பேச வேண்டியதை பேசாம பேசக் கூடாததை எல்லாம் பேசுறது”

மெல்ல சிரித்தவன் அவள் கன்னத்தில் இதழ் பதித்தான். “ஒண்ணும் வேணாம்” என்றவள் அதை துடைத்துக் கொள்ள மற்றொரு கன்னத்தில் முத்தமிட்டான். இம்முறையும் அவள் துடைத்துக் கொள்ள குறும்பான சிரிப்புடன் அவள் இதழை முற்றுகையிட்டான் இப்போ என்ன செய்வே என்பது போன்ற பார்வை.

சில நொடிகள் கழித்து அவளை விடுதலை செய்ய ‘நீ மட்டும் தான் செய்வியா உனக்கு மட்டும் தான் உரிமை இருக்கா எனக்கும் தான்’ என்ற பார்வையுடன் இப்போது இந்திரசேனா அவன் இதழை சிறை செய்தாள்.

“சேனா இது ரொம்ப நல்லாயிருக்கு” என்றான் தன்னை விடுவித்த தன் மனைவியை பார்த்து. அதில் அவளுக்கு வெட்கம் வந்துவிட அவன் கையில் நறுக்கென்று கிள்ளிவிட ஆவென்றான் அவன்.

“சித்தா எப்படி ஸ்கூல்க்கு வந்தாங்க”

“நான் தான் போய் கூப்பிட்டேன்…”

“எப்போ??”

“எப்போ கூப்பிட்டா என்ன நான் கூப்பிட்டேன் அவங்க வந்திட்டாங்க” என்றான் மரியாதையாய். அதை குறித்துக் கொண்டவளின் மனம் நிறைந்திருந்தது.

“என்னால நம்பவே முடியலை”

“ஏன்??”

“எனக்கும் சித்தாக்குமான உறவை உங்களுக்கு புரிய வைக்கவே முடியாதோ, உங்க ரெண்டு பேரையும் சகஜமா பேச வைக்க முடியாதோன்னு நான் எவ்வளவு கவலைப்பட்டிருக்கேன் தெரியுமா”

“உங்க உறவு எனக்கு புரியாம இல்லை செல்லம். ஆனா உண்மையை நான் சொல்லியே ஆகணும், உனக்கு என்னைவிட உன்னோட சித்தா தான் பெரிசுன்னு எனக்குள்ள ஒரு எண்ணம்”

“அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை” என்று சொல்ல வந்தவளை கைக்கொண்டு தடுத்தான், தான் பேசுகிறேன் என்பதாய்.

“தெளிவா சொல்லணும்ன்னா உங்க ரெண்டு பேரோட உறவு எனக்கு ரொம்ப பொறாமையா இருந்துச்சு”

“உங்களோட அன்பும் புரிதலும் உரிமையான பேச்சும் எனக்கு பார்க்க பார்க்க பொறாமை பொங்கி எழுந்துச்சு. உன்னை கல்யாணம் பண்ணிக்கணும்ன்னு ஆசைப்பட்டப்போ அவர்கிட்ட தான் முதல்ல போய் நின்னேன்”

“எனக்கு தெரியும் அவர் வேணாம்ன்னு நினைச்சிருந்தா எதுவுமே நடந்திருக்காதுன்னு. ஏற்கனவே நீ சித்தா சித்தான்னு உருகுவே, அதுக்கு மேல அவர் என்கிட்ட பேச வரும் போது என்னை ரொம்ப தூண்டி துருவி கேள்விக்கேட்டவும் அப்படியொரு கோபம்”

“பொண்ணைத் தானே கேட்டேன், இவரோட சொத்தையா கேட்டேன். இப்படி அலட்டிக்கறாருன்னு. தவிர உங்கப்பா பேசியிருந்தா கூட எனக்கு எதுவும் தெரிஞ்சிருக்காது. இவரு வெறும் சித்தப்பா தானே அதுக்கு இப்படி தான் ஓவரா பண்ணுவாரான்னு செம எரிச்சல் எனக்கு. அங்க ஆரம்பிச்சது தான் அவர் மேல பிடித்தமின்மை. கல்யாணம் மட்டும் நடக்கட்டும் அப்புறம் இருக்கு அவருக்குன்னு முடிவு பண்ணேன், அதுக்கு அப்புறம் நடந்தது எல்லாம் தான் உனக்கே தெரியுமே”

“நீங்க பழைய கதை தான் சொல்லிட்டு இருக்கீங்க”

“சரி சரி விஷயத்துக்கு வர்றேன். உங்க வீட்டுக்கு போனப்போ உங்க சித்தா அங்க இல்லை, மத்த எல்லாரையும் நேர்ல அழைச்சேன். உங்கப்பாக்கிட்ட கேட்டப்போ உங்க சித்தா வர நேரமாகும்ன்னு சொன்னார்”

“நான் அவரோட ஆபீஸ்க்கே போய் நேர்ல மீட் பண்ணிட்டேன்”

“எப்போ?? அது எப்படி எனக்கு தெரியாம நடந்துச்சு. நானும் தான் தினமும் ஆபீஸ் போயிட்டு இருக்கேன். எனக்கே தெரியாம நீங்க எப்போ அவரை மீட் பண்ணீங்க”

“நீ அங்க இருந்தாலும் இல்லைன்னாலும் நான் அன்னைக்கு அவரை மீட் பண்ணுறதுல உறுதியா இருந்தேன். பட் நீ அப்போ அங்க இல்லை, ஏதோ வேலையா வெளிய போய் இருந்தேன்னு மாமா சொன்னாங்க” என்று அவன் சொல்லும் போது அவள் முகத்தில் மென்மை தெரிந்தது. 

அது அவன் அவளின் சித்தாவை உரிமையாய் மாமா என்றதில் வந்தது என்பதை அவன் புரிந்துக் கொண்டான்.

“நான் நேர்ல போய் கூப்பிட்டதும் அவங்க அதை எதிர்பார்க்கவே இல்லை போல. அப்புறம் அவங்களை கெஞ்சி கூத்தாடி அவங்களை நம்ம ஸ்கூல் பங்க்ஷனுக்கு கூட்டிட்டு வந்திட்டேன்” என்று முடித்தான்.

‘அவ்வளவு தானா, உப்புசப்பில்லாம சொல்றாரு’ என்று எண்ணிக்கொண்டாள் அவன் மனைவி.

ஆனால் உண்மையிலேயே அங்கு நிறைய நடந்தது. அதை மனைவியிடத்தில் அவன் கூறாது விடுத்திருந்தான். மாணிக்கவாசகம் அவன் வரவை எதிர்பார்த்திருக்கவில்லை.

அவரை அழைத்துக்கொண்டு அவருடனே அவன் வீட்டிற்கும் வந்து மீண்டுமொரு அனைவரையும் அழைத்ததும், கிளம்பும் தருவாயில் அனைவரின் காலில் விழுந்து ஆசி வாங்குவது போல மாணிக்கவாசகத்தின் காலிலும் அவன் விழுந்திருக்க மனிதர் ஆடிப்போய்விட்டார்.

அலுவலகத்திலேயே அவன் அவரிடம் மன்னிப்பை கோர அதை பெருந்தன்மையாய் மன்னித்தவர், அவன் காலில் விழுந்து ஆசி வாங்குவது போல மன்னிப்பைத்தான் கேட்டிருக்கிறான் என்று புரியாதவரா என்ன.

Advertisement