Advertisement

9

ஆத்திசூடி – செய்வன திருந்தச் செய்

பொருள் – செய்யும் செயல்களை தவறும் குறையும் இல்லாமல் செய்யவும்.

அபராஜிதன் ஏதோ வேலையாய் மேடை நோக்கிச் செல்ல அவனை பிடித்துக்கொண்டார் அவனின் தூரத்து உறவில் இருந்த சித்தி ஒருவர்.

“அபி… அபி…” என்று செல்லும் அவனை அழைக்க நின்று திரும்பி பார்த்தான் அவரை.

“சொல்லுங்க சித்தி”

“மாப்பிள்ளை பக்கத்துல நிக்கற பொண்ணு யாரு அபி?? அவரோட தங்கச்சியா??”

“தங்கச்சி எல்லாம் இல்லை ஆனா தங்கச்சி மாதிரி தான். ஆமா நீங்க எதுக்கு அவளைப்பத்தி விசாரிக்கறீங்க. உங்களுக்கு அவளை முன்னாடியே தெரியுமா??” என்றான்.

“தங்கச்சி மாதிரின்னா சித்தி பொண்ணு அப்படியா??”

“அப்படியும் சொல்லிக்கலாம்”

“என்னடா நீ ஒரு விவரம் ஒழுங்கா சொல்ல மாட்டேங்குற??”

“இப்போ எதுக்கு என்னை நிறுத்தி இந்த விசாரணை, அதை முதல்ல சொல்லுங்க”

“ஒண்ணும்மில்லை அபி நம்ம சித்துவுக்கு அவளை கேட்கலாமான்னு தான். பொண்ணு நல்லா இருக்கால்ல, படிச்ச பொண்ணாவும் இருக்கா, பார்க்க வசதியாவும் தெரியுது. நம்ம ஆளுங்க தானே??”

“அது எனக்கு தெரியாது” என்றான்.

“மாப்பிள்ளை வீட்டு சொந்தம்ன்னா நம்ம ஆளுங்கா தான் இருப்பாங்க” என்று தனக்குள் அவரே சொல்லிக்கொண்டார்.

‘நல்லா இருக்காளா வெளிய பார்த்து ஏமாந்துட கூடாது. வாய் வாய் அவ்வளவு வாய் அவளுக்கு, திமிரு வேற கூடவே இருக்கு’ என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டான்.

ஒரு வழியாய் ரிஷப்சன் முடியும் நேரம் அவளின் சித்தி நாயகி இந்திரசேனாவை உணவருந்துவதற்காய் அழைத்தார். “சாப்பிட வா இந்தும்மா”

“சித்தி அதுக்குள்ள என்ன அவசரம்” என்றான் அகிலேஷ்.

“டேய் அவ பசி தாங்க மாட்டாடா??”

“ஹேய் சொல்ல வேண்டியது தானே” என்று அருகில் நின்றவளை பார்த்து கடிந்தவன் “போ முதல்ல”

“இருக்கட்டும் அண்ணா நீங்க சாப்பிடும் போது சாப்பிடுறேன். அதெல்லாம் வேணாம் நீ போ, இன்னும் கொஞ்ச பேரு வேற இருக்காங்க எல்லாம் முடியவும் தான் நாங்க சாப்பிட முடியும். நீ போ” என்று சொல்லி அகிலேஷ் அவளை அனுப்பி வைத்தான்.

அவர்கள் அனைவரும் குடும்பமாய் சென்று உணவருந்தினர். ஒரு வரிசை முழுதும் அவர்களின் குடும்பம் மட்டுமே அமர்ந்திருந்தது பார்க்கவே கவிதையாகத் தான் இருந்தது.

“சாது” என்று சாதனாவின் கையை இடித்தார் நாயகி.

“சொல்லு நாயகி”

“நாளைக்கு வீட்டுக்கு போனதும் எல்லாரையும் உட்கார வைச்சு சுத்திப் போடணும்”

“நானும் அதே தான் நினைச்சுட்டு இருக்கேன். எல்லார் கண்ணும் நம்ம புள்ளைங்க மேல தான் இருக்கு”

“எல்லார் மேலயும் தான் இருக்கு” என்றார் நாயகி.

“கவனிச்சியா நம்ம இந்திராவையே ரெண்டு மூணு பேரு நோட்டம் விட்டுட்டு இருந்தாங்க” என்றார் அவரே தொடர்ந்து.

“பொண்ணுன்னா எல்லாரும் பார்க்கறது தானே நாயகி”

“எங்க ஆளுங்க யாரும் இந்துவை பொண்ணு கேட்டா நீ கட்டி கொடுப்பியா சாது”

“லூசு அதென்ன நீ கட்டி கொடுப்பியான்னு கேட்குறே. அவ உனக்கும் பொண்ணு தான், பையன் நல்ல பையனா இருந்தா பொண்ணை கட்டிக்கொடுக்க வேண்டியது தான்” என்ற சாதனாவை கண்கள் கலங்க பார்த்தார் நாயகி.

“ச்சு எதுக்குடி கண்ணு கலங்குது உனக்கு”

“ஒண்ணுமில்லை போ” என்றவர் உணவருந்துவதை தொடர்ந்தார்.

“இதுக அக்கபோரு தாங்கலையே” என்று தன்னருகில் இருந்த நகுலனின் மனைவி திவ்யாவின் காதை கடித்தாள் அபிமன்யுவின் மனைவி நளினா.

“என்ன நளினா??”

“நம்ம மாமியாருங்களை தான் சொல்றேன். கொஞ்சம் ஓவரா தான் போகுறாங்கப்பா. தாங்க முடியலை இவங்க ரவுசு” என்றாள் தொடர்ந்து.

“ஆமாமா நானும் அதான் பார்த்திட்டு இருக்கேன். எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகைன்னு பாட்டு மட்டும் தான் பாடலை. ஒரே விக்ரமன் படம் மாதிரி சீன் ஓட்டிட்டு இருக்காங்க” என்று நொடித்தாள் மற்றவளும்.

ஒரே வீட்டு மருமகள்கள் என்றாலும் இருவரும் இருவேறு குணாதிசயங்கள் கொண்டவர்கள். மற்ற விஷயத்தில் அவர்களுக்குள் கருத்துவேருபாடு இருந்தாலும் தங்களின் மாமியார்மார்களை குறை சொல்வதில் இருவரும் ஒன்று போல.

இரு வேறு குணாதிசயங்கள் ஒன்றாய் இருப்பதும் வேறாய் இருப்பதும் ஒன்றாகவே அவ்வீட்டில் காணலாம். மருமகள்களுக்கு மாமியார்களின் மீது மிகப்பெரிய குறை.

அவர்களின் வீடு கீழே மாடி ரெண்டு இரண்டு பகுதிகளை கொண்டது. கீழ் வீட்டில் நான்கு அறைகள் மேல் வீட்டில் நான்கு அறைகள் என்று இருந்தது.

முதன் முதலில் வீடு கட்டப்பட்ட போது கீழ் பகுதி மட்டுமே இருந்தது. அபிமன்யுவின் திருமணம் முடிந்த பிறகு தான் மேலே இருந்த வீட்டை எடுத்து கட்டியிருந்தனர்.

நளினாவிற்கும் அபிமன்யுவிற்கு திருமணம் முடிந்த புதிதில் அனைவருமே கீழ் வீட்டில் தான் இருந்தனர். மேல் வீடு அப்போது தான் கட்ட ஆரம்பித்து இருந்தனர். 

வீடு கட்டி முடித்த பின்பு மகனையும் மருமகளையும் மாடிக்கு அனுப்பிவிட்டனர். அதுவரையிலும் கூட அனைவருக்கும் ஒரே சமையலாக மட்டுமே இருந்தது வீட்டில்.

நகுலனின் திருமணம் முடிந்த பிறகு அவ்வப்போது இரு மருமகள்களுக்கும் அங்கொன்றும் இங்கொன்றுமாய் சிறு சிறு பூசல்கள் ஆரம்பிக்க இரு மாமியார்களும் சொல்லிவிட்டனர்.

இனி கீழே ஒரு சமையல் மேலே ஒரு சமையல் என்று. திருமணமாகாத பிள்ளைகள் அவர்களுடனே இருப்பார்கள் என்றும் அவர்கள் தங்கள் கணவர்களுக்கும் தங்களுக்கும் சேர்த்து சமைத்துக் கொள்ள சொல்லி சொல்லிவிட்டிருந்தனர்.

அஸ்வின் எந்த வீட்டில் வேண்டுமானாலும் சாப்பிடலாம் சிறு குழந்தை அவன் என்று சொல்லி இருந்தார்கள். அதில் தான் மருமகள்கள் இருவருக்கும் வருத்தம். நளினா கொஞ்சம் சுறுசுறுப்பு நேரமாக எழுந்து எல்லாமே செய்வாள்.

ஆனால் திவ்யா சற்று நிதானம் அனைத்திலும். ‘அப்புறம் செய்யலாம் என்ன அவசரம்’ என்ற எண்ணம் உண்டு அவளுக்கு. 

அவளின் கணவன் காலையிலேயே கிளம்பிவிடுவான் என்பதால் அவளும் நேரமாகவே எழுந்து நளினாவிற்கு உதவ வேண்டியதாக போனது. அவளின் தூக்கம் கெட்டது அதில். அதெல்லாம் அவளுக்கு கொஞ்சம் வருத்தம் தான்.

சாதனாவும், நாயகியும் எதை நினைத்து அவர்களை தனியாக செய்ய சொன்னார்களோ அது தன்னாலே கொஞ்சம் கொஞ்சமாய் நடக்கத்தான் செய்தது.

முன்பு போல இருவரும் அடிக்கடி சண்டையிட்டு கொள்வதில்லை. இப்போதும் வேறுபாடுகள் உண்டு தான், ஆனாலும் பொறுத்து போக பழகிக் கொண்டிருந்தனர்.

நகுலனும், அபிமன்யுவும் தங்கள் மனைவி மீது ஆசை உண்டென்றாலும் அவர்கள் சிறு வயது முதலே தங்கள் பெற்றவர்களை பார்த்து வளர்ந்தவர்கள் என்பதால் மனைவிகள் கோள் சொல்வதை கேட்டு சண்டை என்று எதையும் வளர்த்ததில்லை.

மனைவியை தான் இருவருமே திட்டுவர். அதற்கு பயந்தே அவர்கள் பெரிதாய் தங்கள் கணவர்களிடம் எதற்கும் செல்வதில்லை.

அவர்கள் அனைவரும் சாப்பிட்டு எழுந்தனர். இந்திரசேனா மட்டும் இன்னும் அமர்ந்திருக்க நாயகி கையை கழுவிவிட்டு அவளருகே வந்து உட்கார்ந்து கொண்டார்.

“இங்க என்ன பண்றீங்கம்மா?? நீங்க போங்க நான் வர்றேன்”

“நீ சாப்பிடுறதுல மட்டும் ஏன் தான் இவ்வளவு நிதானமோ. மத்த எல்லா விஷயத்துலயும் சுறுசுறுப்பா தானே பாப்பா இருக்கே??”

“சாப்பாடெல்லாம் ரசிச்சு ருசிச்சு அனுபவிச்சு சாப்பிடணும் நாயகிம்மா” என்றவள் இனிப்பை ரசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.

“ம்மா நான் வர இன்னும் பத்து நிமிஷம் ஆகும். நீங்க போய் உங்க அக்காவுக்கு ஏதாச்சும் ஹெல்ப் பண்ணுங்க போங்க. என்னைய பார்த்து கண்ணு வைக்காதீங்க போங்க முதல்ல”

“அப்படியே அந்த சமையல்க்காரர்கிட்ட எனக்கு இன்னும் கொஞ்சம் அல்வா வைக்கச் சொல்லுங்கம்மா”

“போதும்டி கழுதை வயிறு வலிக்க போகுது”

“அதெல்லாம் போதாது நீங்க போய் சொல்லுங்க” என்று அவரை அனுப்பி வைத்தாள்.

“ம்மா… ம்மா…” என்று செல்லும் அவரை அழைக்க “என்னம்மா??” என்றார் அவர்.

“அப்பாகிட்ட நான் அல்வா சாப்பிடுறேன்னு சொல்லாதீங்க. அப்புறம் ஓவரா அட்வைஸ் மழை பொழிவார். கல்யாண வீடாச்சேன்னு அடக்கி வாசிக்கிறார். நான் அல்வா சாப்பிடுறேன்னு சொன்னா, அதெல்லாம் பார்க்க மாட்டார் எல்லார் முன்னாடியும் என் மானத்தை வாங்குவார்” என்றாள் அவள்.

“மாமா சொல்றதை நீ கேட்டா தான் என்னவாம்” என்றவாறே நகர்ந்திருந்தார் அவர்.

அடுத்த ஆட்கள் சாப்பிட வந்திருக்க இந்திரசேனா இலையை விட்டு எழுந்தே ஆக வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானாள். அவளின் எண்ணம் புரிந்தவராய் நாயகி ஒரு பேப்பர் கப்பில் அவளுக்கு அல்வாவை கொண்டுவர வாயை குமித்து அவருக்கு முத்தமிடுவது போல செய்து கைகழுவ சென்றாள்.

“எல்லாரும் முதல்ல இனிப்பு சாப்பிட்டா நீ மட்டும் கடைசியில சாப்பிடுற…”

“ம்மா நாம கடைசியா சாப்பிடுறது தான் ரொம்ப நேரத்துக்கு நம்ம நாக்குலவே இருக்கும். எல்லாம் சாப்பிட்டு கடைசியா இனிப்பை சாப்பிட்டா அது அதோட சுவை தான் நம்மோட நினைப்புலயும்  நாக்குலையும் ஒட்டி இருக்கும்” என்று புதிதாய் சொன்னாள்.

“என்னவோ போ நான் கிளம்பறேன், சீக்கிரம் சாப்பிட்டு வந்து சேர்” என்று அங்கிருந்து நகர்ந்தார் அவர்.

இந்திரசேனா சாப்பிடும் இடத்தில் இருந்து வெளியே வந்து அங்கிருந்த வெட்ட வெளியில் நிற்க தூரத்தே ஒரு கல் பெஞ்சு தெரிய அங்கு சென்று அமர்ந்தாள். அல்வாவை ரசித்து சாப்பிட்டாள், அதன் ருசி இன்னமும் அவள் தொண்டையிலேயே இருக்கும் உணர்வு.

அதை அனுபவித்து அமர்ந்திருந்தாள் கண்களை மூடி. அபராஜிதன் அந்த பக்கம் வந்தவன் ‘இவ என்ன இங்க உட்கார்ந்திருக்கா’ என்று பார்த்துவிட்டு நகரப் போக கண்களை திறந்தாள் அவள்.

எதிரே அபராஜிதன் இருக்கவும் சும்மாயில்லாமல் அவன் முன்னே சென்று நின்றாள். “என்ன??” என்றான் எரிந்து விழுந்தவாறே.

“என்னோட குருவைப் பத்தி நான் சொன்னது உண்மையாகிடுச்சா??” என்றாள் அவன் கண்களை ஊடுருவி.

“எல்லாருக்கு தேவை இருக்கலாம் அந்த தேவை முடிஞ்சதும் அடுத்த தேவை வரும். நீங்க என்ன பரமாத்மாவா எல்லாரோட தேவையும் தீர்த்து வைக்க. எப்பவும் ரொம்பவே பேசக்கூடாது”

“அதை நீ சொல்றியா எனக்கு??”

“என்னோட வேலை அது, நான் பேசலைன்னா நிரபராதிக்கு தண்டனை கிடைச்சுடும். பேச வேண்டிய இடத்துல சரியா பேசணும் அதைத்தான் நான் சொல்ல வந்தேன்”

“போதும் உன் அட்வைஸ் எல்லாம். நீயெல்லாம் பேசுற அளவுக்கு நான் இறங்கி போய்ட்டானா. போடி பேசாம” என்றான் ஆத்திரமாய். 

இந்திரசேனா பேசப் பேச அவனுக்கு அவள் மீதான கோபமும் துவேஷமும் அதிகரிக்கவே செய்தது. “உண்மையை சொன்னா உங்களுக்கு கோபம் வருதா”

“தப்பு செஞ்சிட்டு என்னை போடின்னு சொல்றே”

“நான் என்னடி தப்பு செஞ்சேன்?? எல்லாமே சரியா இருக்கணும்ன்னு நினைச்சு தான் என் தப்பா?? பழி ஒரு இடம் பாவம் ஒரு இடமா. பிரின்சிபால் செஞ்ச தப்புக்கு நான் என்ன செய்ய முடியும்”

“அவர் செஞ்சது ஒரு தப்புன்னா நீங்க செஞ்சது மகா மகா பெரிய தப்பு”

“நா… நான் தப்பு செஞ்சேனா. நான் என்ன செஞ்சேன்??”

“முதல் தப்பு அந்த பிரின்சிபால் செஞ்சதை மறைக்க நினைச்சது. ரெண்டாவது தப்பு அதை மறைக்க நீங்க லஞ்சம் கொடுத்தது” என்று அவள் சொல்லவும் அவன் முகம் அப்படியே சிவந்து போனது.

அவள் சொன்னது உண்மை தானே. அதை அறிவு ஏற்றுக் கொண்டாலும் மனது ஏற்றுக்கொள்ளவில்லை. அவள் சொன்னதை அவனால் தாளவே முடியவில்லை. உண்மை கசந்தது அவனுக்கு அந்நேரம்.

“இனிமேயாச்சும் புத்தியோட பிழைக்க பாருங்க. பிரின்சிபால் தண்டிச்சதுனால மட்டும் பிரச்சனை முடிஞ்சு போயிட்டதா ஆகாது. தவறுகளை நடக்காம பார்த்துக்கறது தான் ரொம்பவே முக்கியம்”

“தப்பு ஒரு தரம் செய்யும் போது தான் திருத்திக்க முடியும். தொடர்ந்து செஞ்சா அது பழக்கமாகிடும். நீங்க பழகிடாதீங்க, இனிமே இப்படி செய்யாதீங்க” என்று அவனுக்கு நீளமாய் அறிவுரை சொல்லி அவள் நகர செல்லும் அவளையே குரோதமாய் பார்த்தது அவன் விழிகள்.

Advertisement