Advertisement

8

ஆத்திசூடி – பருவத்தே பயிர் செய்

பொருள் – ஒரு செயலை செய்யும் போது அதற்குரிய காலத்திலே செய்ய வேண்டும்.

அபராஜிதனின் தங்கை அகல்யாவின் திருமண வரவேற்பு அன்று. பெண்ணின் தமையனாய் முன்னால் நின்று அனைத்தும் செய்துக் கொண்டிருந்தான் அவன். யாரும் எந்த குறையும் சொல்லிவிடக்கூடாது என்பதில் மிகுந்த கவனம் அவனிடத்தில்.

ஒவ்வொன்றும் பார்த்து பார்த்து செய்துக் கொண்டிருந்தான். அவன் தமக்கையின் திருமணத்தின் போது பள்ளியில் படித்துக் கொண்டிருந்தான் அவன். தந்தை சொல்லும் வேலைகளை செய்தான் அவ்வளவே.

அவன் தமக்கை உமையாளுக்கும் அபராஜிதன், அகல்யாவிற்கும் இடையே பத்து, பதிமூன்று வருட இடைவெளி என்பதால் அவளின் திருமணத்தின் போது அவர்கள் பள்ளியில் படிக்கும் பாலகர்களாகவே இருந்தனர்.

தங்கை அவனுக்கு மிகவும் செல்லம். அதிகம் பேசிக் கொள்ளாவிட்டாலும் அவளுக்கானதை அவன் சரியாகவே செய்வான் எப்போதும். அவள் ஒன்று கேட்டு இல்லையென்று அவன் எப்போதுமே சொன்னதில்லை.

இன்று அவளின் திருமணம் தான் முன்னின்று நடத்தி வைக்கும் திருமணம் அதை சிறப்பாய் செய்திட வேண்டும் என்ற கவனமும் முனைப்பும் அவனுக்கிருந்தது. மாப்பிள்ளையை பார்த்தது கரிகாலன் என்றாலும், மாப்பிள்ளையை பற்றி முழுதுமாய் அலசி ஆராய்ந்தது அவனே.

அவனுக்கு சரியென்று ஆனபின்னே தான் திருமணத்திற்கு அவன் சம்மதமே தெரிவித்தான். அதன் பின்னர் தான் மாப்பிள்ளையை அகல்யாவிற்கே காட்டினர்.

மணமகள் கையில் வைத்துக்கொள்ள பூங்கொத்து அப்போது தான் தயாராகி வர அதை வாங்கிக் கொண்டு தங்கையை தேடிச் சென்றவனை வழியில் யாரோ தந்தையை அழைக்குமாறு கூறியிருக்க வாசலுக்கு வந்தால் அங்கு இந்திரசேனா பரிவாரத்துடன் உள்ளே நுழைந்துக் கொண்டிருந்தாள்.

ஆம் அவள் பின்னால் பத்து பேர் புடைசூழ வந்தது அவனுக்கு பார்க்க அவள் தன் பரிவாரத்துடன் வந்தது போலத்தான் தோன்றியது.

‘இவளா??’ என்று அவனும் ‘இவனா??’ என்று அவளும் விழியகலாமல் பார்த்துக் கொண்டிருந்தது காதலால் அல்ல காழ்ப்பினால்.

இருவருமே ஒருவித அவஸ்தையான உணர்வுடன் இருந்தனர். அப்பட்டமான பிடித்தமின்மையை இருவரின் முகமுமே ஒருங்கே காட்டியது.

‘இவ எங்க வந்தா எனக்கென்ன நான் ஏன் இவளை கவனிக்கணும்??’ என்ற எண்ணம் மனதில் ஓட பார்வையை திருப்பியவனின் வட்டத்திற்குள் இப்போது விழுந்தது மாணிக்கவாசகம்.

‘இவருமா இங்கே?? என்னடா நடக்குது இங்கே??” என்று ஓடிய போதும் நேரே அவர் முன் சென்று நின்றான் இவன். 

இவனை கண்டு அவருக்கும் ஆச்சரியமே “நீ எங்கப்பா இங்க??” என்று அவன் கேள்வியை கேட்கும் முன்னே அவரே கேட்டிருந்தார்.

“கல்யாண பொண்ணு என்னோட தங்கச்சி சார்” என்றவன் “சார் நீங்க எப்படி இங்க??” என்று ஆரம்பிக்கவும் மணமகனின் தாய் பவானி வேகமாய் அவர்கள் அருகே நெருங்கியிருந்தார்.

“இப்போ தான் வருவீங்களா. நான் தான் சொன்னேன்ல நீங்க ஒரு நாள் முன்னாடியே வரணும்ன்னு. ஏன்டி நீ தானே முன்ன நின்னு எல்லாரையும் அழைச்சுட்டு வந்திருக்கணும்” என்று தங்கையை கடிந்தார் அவர்.

“நான் தானேக்கா எல்லாரையும் அழைச்சுட்டு வந்திருக்கேன்” என்றார் நாயகி.

“போடி இவளே” என்று தங்கையை முறைத்துவிட்டு திரும்பியவரின் அருகே அபராஜிதன் நிற்கவும் “நீ என்னப்பா இங்க பண்ணிட்டு இருக்கே??” என்றார் அவர்.

“என்னை பார்க்கத்தான் வந்தாரு??” என்று மாணிக்கவாசகம் பதில் கொடுத்தார் அவனுக்கு முன்.

“உனக்கு இவரை முன்னாடியே தெரியுமா??” என்று அவர் அவனை பார்த்து கேட்டார்.

“தெரியும் அத்தை பார்த்திருக்கேன். இவங்க…” என்று அவன் முடிக்கும் முன்னே அவர் பதில் கொடுத்திருந்தார்.

“என் தங்கச்சி வீட்டுக்காரர் இவர். இவ என் தங்கச்சி…” என்றவர் ஒவ்வொருவராய் அறிமுகம் செய்ய ஆரம்பிக்க அவர் ஆரம்பித்ததுமே “வாங்க நாம உள்ள போகலாம் அவங்க பேசிட்டு இருக்கட்டும்” என்று மெல்லிய குரலில் சொன்ன இந்திரசேனாவை பின் தொடர்ந்திருந்தனர் அவளின் அண்ணன்மார்கள்.

‘இங்க பேசிட்டு இருக்காங்க. கொஞ்சம் கூட மதிக்காம உள்ள போறா பாரு. இவ யார் கூட வந்திருப்பா. ஒரு வேளை இவளோட சீனியர் மாணிக்கவாசகம் சார் கூட்டிட்டு வந்திருப்பாரோ. ஜூனியர்ன்னா அது கோர்ட்ல மட்டும் தானே எதுக்கு கூடவே வைச்சுட்டு சுத்துறாரு’ என்று யோசித்துக் கொண்டிருந்தவனை யாரோ அழைக்கும் குரல் கேட்க கலைந்தவன் அவர்களிடம் சொல்லிக்கொண்டு அங்கிருந்து நகர்ந்திருந்தான்.

பவானி வந்தவர்களுக்கு அவர்கள் தங்கும் அறையை காண்பித்தவர் இந்திரசேனாவை அவர் கையோடு கூட்டிச் சென்றார். தன் அன்னையையும் சித்தியையும் மாறி மாறி பார்த்தவாறே பவானியுடன் சென்றாள் அவள்.

“நாயகி நீயும் கூட போ. அதுக்கு தான் அவ திரும்பி பார்த்திட்டே போறா” என்று சாதனா சொல்ல “தெரியும் சாது அவ போய் கொஞ்சம் பேசட்டும் ஒரு அஞ்சு நிமிஷம் கழிச்சு நான் போறேன்” என்றார் அவர்.

“இந்தும்மா நீ தான் அண்ணன் கூடவே நிக்கணும்டா. அவன்கிட்ட நீ வருவேன்னு சொல்லியிருக்கேன். அப்போ பிடிச்சு உன்னைய தான் கேட்டுட்டு இருந்தான்” என்ற பவானி அவளை கூட்டிக் கொண்டு மேடைக்கு சென்றார்.

இந்திரசேனாவிற்கு பெரும் சங்கோஜமாய் இருந்தது. அகிலேஷ் இவளைப் பார்த்ததும் சிநேகமாய் சிரித்தான். “வா இந்து என்ன இவ்வளவு நேரம் வர்றதுக்கு. உன்கிட்ட சொல்லிட்டு தானே வந்தேன், யாரோ ஒருத்தர் வீட்டு கல்யாணம் மாதிரி நீ இவ்வளவு லேட்டா வர்றே” என்று செல்லமாய் கடிந்துக் கொண்டான் அவளை.

“நான் கிளம்பிட்டேன் அண்ணா எல்லாம் உங்க சித்தி கிளம்பத்தான் லேட்டு”

“எங்க சித்தியா உன் நாயகிம்மா இல்லையா”

“ரெண்டும் ஒண்ணு தானே அண்ணா”

“உன்கிட்ட பேச முடியுமா நீ தான் வக்கீலம்மாவாச்சே”

“அண்ணன்க்கு எல்லாம் மறந்திடுச்சு பெரியம்மா” என்றாள் பவானியிடம் திரும்பி.

“என்னடா மறந்திட்டான்??” என்றார் அவர்.

“அவருக்கு மட்டுமில்லை உங்களுக்கும் தான்”

“எனக்கா என்னது அது??” என்றார் அவர்.

“ஹலோ அண்ணி நான் இந்திரசேனா. அகிலேஷ் அண்ணாவோட ரிலேடிவ் தங்கச்சி முறை. அதாவது உங்களுக்கு நாத்தனார் முறை” என்று சொல்லி அவளே அகிலேஷின் அருகில் நின்ற அகல்யாவிற்கு கைக்கொடுக்க அவளும் புன்னகை முகமாவே கைக்கொடுத்தாள்.

“இதை தான் சொன்னியா நாங்க மறந்திட்டோம்ன்னு” என்றான் அகிலேஷ் அவளை பொய்யாய் முறைத்தவாறே.

“ஆமா அவங்களை எனக்கு அறிமுகம் செஞ்சு வைக்காம நீங்க பாட்டுக்கு ஏதேதோ பேசிட்டு இருக்கீங்க??”

“உனக்கு தனியா அறிமுகமே செய்யத் தேவையில்லாம நீயே அறிமுகம் ஆகிட்டியே” என்ற அகிலேஷ் “இவ இந்திரசேனா. இவ எனக்கு தங்கச்சி மாதிரி எல்லாம் இல்லை தங்கச்சி தான். என்னோட சித்தி நாயகிக்கு செல்லப் பொண்ணு”

“உங்க சித்தி பொண்ணா நீங்க சொல்லவே இல்லை”

“அதெல்லாம் எப்படி அண்ணி சொல்வாரு. அதுக்கெல்லாம் அவருக்கும் உங்களுக்கும் ஏது டைம்” என்று அவள் கண்ணடிக்க “ஹேய் வாலு” என்றான் அவன். இவர்கள் பேசிக்கொண்டிருக்க பவானியை யாரோ அழைக்க அப்போதே மேடையைவிட்டு கீழே இறங்கிவிட்டிருந்தார் அவர்.

“எனக்கு ஒரு சின்ன ரிக்வெஸ்ட்??” என்றாள் அகல்யா.

என்னவென்பது போல இருவரும் பார்த்தனர் அவளை. “நீங்க என்னை அண்ணின்னு கூப்பிட்டா எனக்கு ஒரு மாதிரி இருக்கு. நமக்கு சேம் ஏஜ் தானே இருக்கும். பேர் சொல்லியே கூப்பிடலாமே” என்றவளை பார்த்து கையை நீட்டினாள் இந்திரசேனா.

“அப்போ நீ என் பிரண்ட், தேங்க்ஸ் அகல்யா” என்று இயல்பாய் பேசியவளை அகல்யாவிற்கு பிடித்து போனது.

“தேங்க்ஸ் எதுக்கு பிரண்ட்ஸ்குள்ள” என்றாள் அவள்.

“என்னடா நடக்குது இங்க??” என்றான் அகிலேஷ்.

“எதுவும் நடக்கலை அண்ணா பங்க்ஷன் ஆரம்பிக்க போகுது. நீங்க வர்றவங்களை பாருங்க நான் கீழே போறேன்” என்று அவள் இறங்கப்போக “ஏய் எங்க போறே நீ இங்கவே நில்லு. அம்மா சொன்னாங்கல்ல” என்றவன் அவளை தன்னருகே நிறுத்திக்கொண்டான்.

அகல்யாவிற்கு துணையாய் உமையாளின் மகள் கல்பனா வந்து நின்றிருந்தாள். விழா நடந்துக் கொண்டிருக்க யாரோ தன்னையே பார்ப்பதை உணர்ந்த இந்திரசேனாவின் எதிரே அவளையே ஒரு புருவச்சுளிப்புடன் நின்று பார்த்திருந்தான் அபராஜிதன்.

பவானி இந்திரசேனாவிடம் எதையோ எடுத்து வரச்சொல்ல அங்கிருந்து நகர்ந்தவள் அறையை நாடிச் சென்றாள். கையில் ரோஜாக்கள் அடங்கிய பையை அவள் கொண்டு வர இடைமறித்தான் அபராஜிதன்.

என்னவென்பது போல நிமிர்ந்து அவனைப் பார்த்தாள். “உன் சீனியர்கிட்ட கேட்டுட்டியா??”

என்ன கேட்கணும் என்பது போல பார்த்தாள். ‘பதில் சொல்லாம பார்க்குறா பாரு, இவ கண்ணை நோண்டி எடுத்திடணும். முட்டைக்கண்ணி கண்ணுலவே எல்லாம் கேட்டிருவா போல’ என்று மீண்டும் நினைத்துக் கொண்டான்.

“என்னமோ அன்னைக்கு பெரிசா பேசுனியே எங்க சீனியர் அப்படி இப்படின்னு அவரே சொல்லியிருப்பாரே, என்கிட்ட உதவி கேட்டதை பத்தி”

“இப்போ என்ன அதுக்கு??”

“நீ அவ்வளவு அளந்தியே அன்னைக்கு அதான் கேட்டேன். எல்லாருக்கும் ஒரு தேவை இருக்கு, அதை கொடுத்திட்டா யாரும் யார் விஷயத்துலயும் தலையிட மாட்டாங்க. அதை நீ புரிஞ்சுக்கோ அதைச் சொல்லத்தான் கூப்பிட்டேன்” என்று அவளுக்கு புரிய வைத்ததாய் எண்ணி சொல்லியிருந்தான்.

“ஹலோ” என்று சொடக்கு போட்டு செல்லும் அவனை நிறுத்த அதில் ஏகக்கடுப்பு அவனுக்கு. ‘அதென்ன சொடக்கு போட்டு கூப்பிடும் பழக்கம், நீட்டிய விரலை அப்படியே மடக்கி ஒடித்துவிட வேண்டும்’ என்று தான் அவன் எண்ணம் சென்றது.

“என்ன சொன்னீங்க எல்லாருக்கும் தேவை இருக்கு அதை கொடுத்திட்டா யாரும் யார் விஷயத்துலயும் தலையிட மாட்டாங்க அப்படித்தானே. என்ன தேவைக்கு இப்போ இதெல்லாம் நீங்க என்கிட்ட சொன்னீங்க”

“அ… அது…”

“உங்களை நான் தப்பா நினைக்கக்கூடாதுன்னா”

‘அப்படியும் இருக்குமோ, இவ என்னை எப்படி நினைச்சா எனக்கென்ன?? நான் எதுக்கு இவளுக்கு விளக்கம் கொடுக்கணும், இல்லை ஏன் கொடுத்தேன்’ என்று அவனுக்கே குழப்பம் வந்துவிட்டது.

“நீங்க என்ன நினைச்சு செஞ்சாலும் சரி அது என்னை எந்தவிதத்துலயும் பாதிக்காது. என் எண்ணமும் மாறாது, அப்புறம் சொன்னீங்களே ஏதோ விலைன்னு நீங்க அப்படி நினைச்சா நினைச்சுக்கோங்க. என்னோட குரு அவரோட கடமையை தான் செஞ்சார்”

“உங்ககிட்ட அவர் ஒண்ணும் காசு வாங்கலையே. அன்னைக்கு என்ன பேச்சு பேசுனீங்க அவர் காசு வாங்கின மாதிரி. உங்ககிட்ட அவர் உதவி தான் கேட்டார், அதை செய்யறேன்னு நீங்க ஒத்துக்கிட்டீங்க. அப்புறமென்ன”

“உதவியும் கூட நான் செய்யணும்ன்னு என்ன இருக்கு. அதை அவருக்கு கொடுக்கற பீஸா தான் நான் நினைச்சுக்கிட்டேன். நல்லா சொன்னீங்க பீஸ்ன்னு. வக்கீல் பீஸ் வாங்கினதுல எந்த தப்பும் இல்லையே. என்னோட குருவை தப்பு சொல்ல உங்களுக்கு எந்த யோக்கியதையும் இல்லை”

“தப்பு உங்க பக்கம் இருக்கு அதை மறைக்க நீங்க கொடுத்த விலை அது. உங்க பிரின்சிபாலை காப்பாத்த செஞ்ச வேலை அது”

“அவரை ஒண்ணும் நான் காப்பாத்தலை. அவர் செஞ்ச தப்புக்கு அவரை வேலையைவிட்டு அனுப்பிட்டேன்”

“தப்பு அவர் மட்டுமா செஞ்சாரு” என்று அவள் சொல்லும் போது யாரோ அவளை அழைக்க பேச்சை பாதியில் விட்டுவிட்டு அவள் நகர்ந்துவிட்டாள்.

வெள்ளை நிறம் கொண்டிருந்தவனின் முகம் சிவந்து கன்றிப்போனது கோபத்தினால். இந்திரசேனா சொன்ன உண்மையை அவனால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை.

அபராஜிதனையும் வேறு வேலைகள் இழுத்துக்கொள்ள அவனும் தற்காலிகமாய் அந்த பிரச்சனையை விடுத்து வேலையில் கவனமானான். ஒருவாறு ஓய்ந்து போய் கால்கள் கொஞ்சம் எனக்கு ஓய்வு கொடேன் என்று கெஞ்ச ஆரம்பிக்க ஓரமாய் காலியாய் இருந்த இருக்கை ஒன்றில் அமர்ந்தான்.

மேடையை பார்க்க இந்திரசேனா இன்னும் சில ஆண்கள் என்று வரிசையாய் ஒரு கூட்டம் வீற்றிருக்க கல கலவென்று சிரித்துக் கொண்டிருந்தது அப்பட்டாளம். 

‘இவ யாரு அகிலேஷ்கூட நிக்கறா. அகிலேஷ் இவளைப் பத்தி நம்மகிட்ட எதுவும் சொன்னதேயில்லையே’ என்று இவன் யோசித்துக் கொண்டிருந்த வேளையில் அப்போது சரியாய் மாணிக்கவாசகம் அவனை அழைத்தார். ‘இவர்கிட்டவே கேட்டிறலாம்’ என்று நினைத்துக் கொண்டான்.

“சொல்லுங்க சார்” என்று எழுந்து நின்றிருந்தான்.

“ஒரு நிமிஷம் தம்பி” என்றவர் மேடையில் நின்றிருந்த இந்திரசேனாவை வருமாறு சைகை செய்ய அவளும் சொல்லிக்கொண்டு இவர்களை நோக்கி வந்துக் கொண்டிருந்தாள்.

அவள் வரவும் அவளை ஒரு பார்வை பார்த்தவர் “தம்பி நான் உங்ககிட்ட ஒரு ரிக்வெஸ்ட் பண்ணியிருந்தேன் ஞாபகமிருக்கா??” என்று அவர் சொல்லவும் அபராஜிதனின் பார்வை தன்னையுமறியாமல் ஒருவித ஏளன புன்னகையோடு இந்திரசேனாவை தொட்டு மீண்டது.

‘பாரு இது தான் உன் குருவோட லட்சணம்’ என்ற பொருள் அதிலிருந்ததை அவன் சொல்லாமலே புரிந்தாள் அவள். முகம் கன்றிப் போனது அவளுக்கு. முயன்று எதுவுமில்லை என்பது போல் காட்டிக்கொண்டாள்.

“ஞாபகமிருக்கு அங்கிள். நான் தான் உங்க ரிக்வெஸ்ட் அக்செப்ட் பண்ணிட்டனே அங்கிள்”

“அது தெரியும்ப்பா. அதுக்கு நிஜமாவே உனக்கு நான் நன்றி தான் சொல்லணும். ஆனா என் பொண்ணுக்கு அதுல விருப்பமில்லை, அந்த குழந்தைகளை நான் படிக்க வைக்கிறேன்னு சொல்றா”

“சோ அந்த குழந்தைகளுக்கு நீங்க சீட் கொடுத்தா மட்டும் போதும். அவங்களோட படிப்பு செலவை என் பொண்ணே பார்த்துப்பா” என்று இந்திரசேனாவை அவர் பார்க்க அப்படியொரு பெருமிதம் அவள் முகத்தில்.

“பொண்ணா??” என்று குழப்பமாய் அவரிடம் கேள்வியை கேட்டவனின் பார்வை மொத்தமும் அவருக்கு அருகே நின்றிருந்தவளின் மீதே இருந்தது.

“ஆமா சொல்ல மறந்திட்டேன் தம்பி. இந்திரசேனா என்னோட ஜூனியர் மட்டுமில்லை, என்னோட பொண்ணும் தான். இவ எங்க அண்ணன் பொண்ணு. எங்க வீட்டு செல்லக்குட்டி”

“அவளுக்கு குழந்தைகளை அவளே படிக்க வைக்க எண்ணம். நீங்களே படிக்க வைக்கிறேன்னு சொன்னதும் என்கிட்ட கோவிச்சுக்கிட்டா அதான் உங்ககிட்ட நாங்களே அந்த குழந்தைகளோட படிப்பு செலவை பார்த்துக்கறோம்ன்னு சொல்லிடலாம்ன்னு கூப்பிட்டேன் தம்பி” என்றவர் “என்னம்மா உனக்கு இப்போ சந்தோசம் தானே” என்று இந்திரசேனாவை பார்த்தார்.

“நீங்க செய்யறேன்னு சொன்ன உதவியை வேற ரெண்டு குழந்தைகளுக்கு செய்ங்க. இந்த இரண்டு குழந்தைகளோட பொறுப்பை என் பொண்ணு செய்வா” என்று தொடர்ந்து அவர் முடிக்க இந்திரசேனாவின் முகத்தில் அப்படியொரு பெருமிதம். ‘பாரு என்னமோ சொன்னே’ என்று அவனை கர்வம் பொங்க பார்த்தாள்.

அவளுக்கு அப்படியொரு மட்டற்ற மகிழ்ச்சி மாணிக்கவாசகத்தின் அச்செயலில். பின்னே அவள் குழந்தைகளின் படிப்பு செலவை தான் பார்த்துக் கொள்கிறேன் என்று அவரிடம் சொல்லவே இல்லையே.

தனக்கு பிடிக்கவில்லை என்ற ஒரே காரணத்திற்காக அபராஜிதனிடம் அவர் தன்னையும் விட்டுக்கொடுக்காது அவரின் கவுரவத்தையும் விட்டுக்கொடுக்காது தலைநிமிர்ந்து நின்றுவிட்டாரே.

சற்று முன்பு கூட அபராஜிதன் அவ்வளவு பேசினான். ‘எங்கே இப்போ நீ பேசு. பாரு இது தான் என்னோட குரு, அவர் எப்பவும் எதுக்கும் விலை போகமாட்டார்’ என்று கர்வமாய் அவனை பார்த்து வைத்தாள் அவள்.

அவளின் அந்த பார்வை அவனை கொன்று கூறுப்போட்டது. தான் இவளிடம் மேலும் மேலும் அசிங்கப்படுகிறோம் என்று அவனுக்கு ஆதங்கமாகவும் அதே சமயம் கோபமாகவே இருந்தது.

இயலாமை, ஆத்திரம், கோபம் என்று அனைத்தும் தன் மேலேயே வந்திருக்க அவ்விடம் விட்டு வேகமாய் நகர்ந்திருந்தான் அவன்.

Advertisement