Advertisement

7

ஆத்திசூடி – நிலையிற் பிரியேல்

பொருள் – உன்னுடைய நல்ல நிலையில் இருந்து என்றும் தாழ்ந்து விடாதே.

இந்திரசேனாவிற்கு புரிந்தது மாணிக்கவாசகத்தின் கூற்று என்னவென்று. ஆனால் அதை ஏற்றுக்கொள்ள தான் அவளுக்கு மனதில்லை. அதற்கு காரணம் அபராஜிதன் தான்.

இதே விஷயம் தன்னால் நடந்திருந்து அதை பிறகு மாணிக்கவாசகம் அவளிடத்தில் சொல்லியிருந்தால் கூட அவளுக்கு எதுவும் தோன்றியிருக்காது போல. அவ்வளவு ஒன்றும் அவள் கவலைப்படும் அளவிற்கு பெரிய விஷயமில்லை தான்.

அவளுக்கு இது தேவையில்லாத ஒன்றும் தான். ஏனோ அப்படி ஒன்றுமேயில்லை என்று அவளால் விடவும் முடியவில்லை. ‘இப்படியே யோசிச்சுட்டு இருந்தா வேலைக்கு ஆகாது’ என்று முடிவெடுத்தவளாய் தன் வேலையை பார்க்க அது அவளை இழுத்துக்கொண்டது வேறெதுவும் யோசிக்கவிடாது.

நாட்கள் மெதுவே நகர்ந்தது. அபராஜிதனின் தங்கை அகல்யாவின் திருமண நாளும் நெருங்கி வந்திருந்ததில் அவன் அதில் பிசியாகினான். எப்போதாவது இந்திரசேனாவின் நினைவு வரும்.

‘அவ சீனியர் பத்தி அவர்கிட்ட கேட்டு தெரிஞ்சுட்டு இருப்பால்ல, என்ன ரியாக்ட் பண்ணியிருப்பா’ என்று நினைத்துக் கொள்வான். அதை நேரில் பார்க்கவும் ஒரு ஆர்வமிருந்தது. ‘அவளை நேர்ல வேற போய் பாக்குறாங்க’ என்று அதற்கும் குட்டிக்கொள்வான். 

————-

“இந்தும்மா”

“என்னம்மா??”

“இன்னைக்கு மதியமே வீட்டுக்கு வந்திடு”

“எதுக்கும்மா??”

“ஏன்டி நைட்டெல்லாம் சொன்னேன்ல இன்னைக்கு அகிலேஷ் ரிஷப்ஷன் இருக்கு போகணும்ன்னு”

“ம்மா நான் எதுக்கும்மா??” என்று சிணுங்கினாள் மகள்.

அதற்குள் அவளின் சின்ன அண்ணி திவ்யா அங்கு வந்தாள். “ஏன் இந்திரா நீ வரலையா?? அவங்க உன்னை கண்டிப்பா வரணும்ன்னு சொன்னாங்களே நீ மறந்துட்டியா??”

“அதில்லை அண்ணி எனக்கு ஒரு மாதிரி கூச்சமா இருக்கு??”

“ஏன் உங்க அண்ணனுங்க கல்யாணத்துல நின்னேல்ல??”

“அவங்க உன்னை எவ்வளவு வேண்டி கூப்பிட்டாங்க. பெரியத்தை சொல்லிட்டே தான் போனாங்க. மாப்பிள்ளைக்கு தங்கச்சி நீ தான். நாத்தனார் முறையெல்லாம் நீ தான் செய்யணும்ன்னு” என்றாள் அவள் தொடர்ந்து.

“நல்லா சொல்லு திவ்யா இவளுக்கு” என்று மகளை முறைத்த சாதனா உள்ளே சென்றுவிட்டார்.

வேறு ஒன்றுமில்லை நாயகியின் சொந்த தமக்கை பவானின் ஒரே மகன் அகிலேஷுக்கு திருமணம். நாயகியின் மூத்த மகன் நகுலனுக்கு இளையவன் அவன். நாயகிக்கு பவானிக்கு முன்பே திருமணம் நடந்துவிட்டிருந்தது. அவர்கள் தான் காதல் திருமணமாகிற்றே.

அவர்கள் வீட்டில் எந்த பெண் பிள்ளையும் இல்லை. அவரின் கணவர் வழியில் கூட சகோதரி முறைக்கு பெண் பிள்ளைகள் இல்லாததால் இந்திரசேனாவை தான் சகோதரியாய் பாவித்தனர்.

சிறு வயதில் இருந்தே அகிலேஷ்க்கு இந்திரசேனாவை பிடிக்கும். பத்திரிகை வைக்கும் சமயம் அவனும் வேறு அத்தனை முறை சொல்லியிருந்தான்.

“என்ன அண்ணி நீங்களும் புரிஞ்சுக்காம. என் அண்ணனுங்க கல்யாணத்துல இருக்க எல்லாரும் நம்ம சொந்தம். அங்க உரிமையோட நிக்கறது எப்படியிருக்கு. இது என்ன இருந்தாலும் இன்னொருத்தர் வீடில்லையா”

“ஆனா அந்த அத்தை உன்னை அப்படி நடத்தலை தானே” என்றாள் திவ்யா.

“திவ்யா” என்ற அதட்டல் குரலில் பெண்கள் இருவருமே திரும்ப அங்கு நாயகி நின்றிருந்தார்.

“என்ன அத்தை??”

“அவளுக்கு பிடிக்கலைன்னா கட்டாயப்படுத்த கூடாது. உங்க மாமாக்கு தெரிஞ்சுது அவ்வளவு தான்” என்றார் மருமகளிடம்.

அவள் உதட்டை லேசாய் வளைத்து ‘என்னமோ பண்ணுங்க போங்க’ என்ற ரீதியில் அங்கிருந்து நகர்ந்துவிட்டாள்.

“இந்துமா உனக்கு வர இஷ்டமில்லேன்னா வர வேண்டாம்டா. அக்காகிட்ட நான் சொல்லிக்கறேன், உங்கம்மா திட்டுவான்னு எல்லாம் யோசிக்காத சரியா” என்று மகளுக்கு பரிந்தார் நாயகி.

அவள் முகம் லேசாகி இதழ்கள் மெல்ல வளைந்தது. “நாயகிம்மா நான் இஷ்டமில்லைன்னு எப்போ சொன்னேன்”

“நீ தானே நான் எதுக்குன்னு கேட்டுட்டு இருந்தே??”

“நான் கல்யாணத்துக்கு வர்றேன் ஆனா இந்த முறைக்கு செய்றது அது தான் எனக்கு ஒரு மாதிரி இருக்கும்மா, அதுக்கு தான் சொன்னேன்”

“அதெல்லாம் பார்த்துக்கலாம்டா யாரும் உன்னை எதுவும் சொல்ல மாட்டாங்க”

“அப்போச்சரி நாயகிம்மா நான் வர்றேன்”

“சரிடாம்மா போயிட்டு சீக்கிரம் வந்திடு. உங்க சித்தா உனக்கு வேலை கொடுத்தார்ன்னா அவர் மண்டை மேலேயே ஒரு கொட்டு வைச்சுட்டு கிளம்பி வந்திடு” என்று சொல்லிக் கொடுத்தார்.

“ம்மா இதெல்லாம் சரியில்லை சொல்லிட்டேன். அவர் எங்க சீனியர்”

“அவர் என்னோட லவ்வரு” என்றார் அவர். சொல்லும் போதே லேசாய் வெட்கம் வந்துவிட்டது அவருக்கு.

“ம்மோவ் வெட்கப்படுறியாம்மா. இதுல தான் சித்தா மயங்கிட்டாரு போல” என்று அவள் சொல்லவும் “ச்சு போடி” என்றுவிட்டு உள்ளே சென்றுவிட்டார் அவர்.

அவள் கிளம்பி வெளியே வரவும் அபிமன்யு தன் குடும்பத்துடன் உள்ளே வந்துக் கொண்டிருந்தான். “என்ன இந்துமா கோர்ட்டுக்கு கிளம்பிட்டியா??”

“ஆமாண்ணா நீங்க எங்க போயிட்டு வர்றீங்க??”

“ஏன் கேட்க மாட்டே நீ?? உங்க அண்ணனுக்கு தங்கச்சியா எல்லாத்தையும் நீயும் மறந்திடுறியே” என்று குறைபட்டாள் அபிமன்யுவின் மனைவி நளினா.

கண்களாலேயே தன் அண்ணனிடம் என்னவென்று கேட்க அவன் தன் மனைவியை ஜாடை காண்பித்து பிறகு என்றான்.

“நீங்களே சொல்லுங்க அண்ணி. ஆனா அண்ணி நான் அப்படியெல்லாம் மறப்பேனா சொல்லுங்க. அண்ணன் மாதிரியெல்லாம் நான் இல்லை. நாளைக்கு உங்க கல்யாண நாளுன்னு எனக்கு நல்லாவே தெரியும்” என்று சொல்லவும் நளினா தன் கணவனை முறைத்தாள்.

நளினாவின் கையில் இருந்த அவர்கள் குழந்தை அஸ்வின் இவளை நோக்கி கையை நீட்டினான்.இவள் தூக்கிக் கொள்ளவும் “அத்தை ஐஸ்” என்று கேட்டு அவள் கன்னத்தில் முத்தம் வைத்தான்.

“ஐஸ் கேட்டு எனக்கு ஐஸ் வைக்குறியாடா நீ… வாலு பையா…” என்று கொஞ்சியவள் “அண்ணி இவனை கடைக்கு கூட்டிட்டு போயிட்டு வரவா” என்றாள்.

“வேணா இந்திரா இப்போ தான் கடையில இருந்து வரும் போது ஐஸ் வாங்கி கொடுத்தோம்”

“உங்க அண்ணன் எனக்கு நெக்லஸ் வாங்கி கொடுத்தார்” என்று அதை ஆவலுடன் அவள் வெளியில் எடுத்து தன் நாத்தனாரிடம் காண்பித்தாள்.

“சூப்பரா இருக்கு அண்ணி”

“இன்னைக்கு ரிஷப்சன் போறோம்ல அங்க இதை தான் போட்டுட்டு வரப்போறேன்”

“போட்டு வாங்க… சரிங்கண்ணி நான் கிளம்பறேன், அண்ணா பை” என்றவள் அஸ்வினை நளினாவிடம் கொடுத்தவள் அவன் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டு விடைபெற்றாள்.

சிறு வயதில் அண்ணன்களுடன் அவள் விளையாடிய நினைவுகள் வந்து போனது. காலம் வேகமாய் ஓடுகிறது. அண்ணன்கள் முன்பு போல அவளிடத்தில் பேச நேரமில்லை.

திருமணம் என்று வந்த பிறகு அவர்களுடன் விளையாட்டு பேச்சு என்பது இல்லவே இல்லை. எப்படியிருக்கிறாய் நன்றாக இருக்கிறாயா என்பது போலத்தான் பேச்சுகள் இருந்தது.

இத்தனைக்கும் ஒரே வீட்டில் தான் இருக்கிறார்கள் அனைவரும். திருமணம் ஆனா அண்ணன்கள் முதல் மாடியில் தான் இருக்கின்றனர். முகிலனும் அவளும் பெற்றோர்களுடன் தரைத்தளத்தில்.

முகிலனுக்கு சற்று தாழ்வு மனப்பான்மை உண்டு. வீட்டில் இருந்த அத்தனை பேரும் நன்றாக படித்திருக்க தான் மட்டுமே குறைத்து படித்துவிட்டோம் என்ற மனக்குறை அவனை மற்றவர்களைவிட்டு தள்ளியே இருக்க வைத்தது.

இந்திரசேனாவிடம் முன்பு ஜாலியாக பேசுவான். இப்போதும் பேசுவான் தான் ஆனால் கொஞ்சம் குறைவு தான். இந்திராவும் தன் அப்பாவை போல வக்கீலுக்கு படித்து அவரிடமே ஜூனியராக இருக்கிறாள். அதனால் அவளிடத்திலும் பேசுவது குறைந்து போனது. இத்தனைக்கும் வீட்டில் இருக்கும் ஒருவர் கூட அவனை குறையாய் சொன்னதேயில்லை.

வீட்டில் இருந்த அனைவருமே அன்று நேரமாகவே வீட்டிற்கு வந்துவிட்டிருந்தனர். நாயகியின் அக்காவின் வீட்டு விசேஷம் அவர்கள் வீட்டு விசேஷம் போல் களைக்கட்டியது. இந்திராசேனாவை அவள் அன்னையும் சித்தியும் புடவை கட்டி தயாராக சொல்ல “சோளி போட்டுக்கறேன்ம்மா” என்றவளை “சோளியாம் சோளி உன் சோலியை முடிச்சிருவேன் பார்த்துக்கோ” என்று மிரட்டினார் சாதனா.

“நாயகிம்மா நீங்க சொல்லுங்க அம்மா என்னை திட்டுறாங்க” என்று அவரை சப்போர்ட்டுக்கு அழைத்தாள் அவள்.

“இந்த விஷயத்துல நான் சாதனா கட்சி தான் பொண்ணே. நீ அம்மா சொல்றதை கேளு ஒழுங்கா போய் புடவையை கட்டு. புது புடவை வேற இருக்கு எது பிடிக்குதோ கட்டு”

“எனக்கு எதுவும் பிடிக்கலை”

“வேற எங்க நீ புடவை கட்டிட்டு போறே சொல்லு. எனக்கு தெரிஞ்சு நீ பெரிய மனுஷி ஆனப்போ ஒரு தரம் கட்டினே, அப்புறம் உங்க ரெண்டு அண்ணனுங்க கல்யாணத்துக்கு கட்டினே. இந்த மாதிரி விஷேசத்துக்கு தான் கட்டிட்டு போகப் போறே. உன்னை தினமுமா கட்டச் சொல்றோம்” என்றார் அவர்.

“போதுமே இதுல மட்டும் நீங்க ஒண்ணா சேர்ந்துக்கோங்க. கட்டிட்டு வர்றேன் போங்க” என்றுவிட்டு தன் அறைக்குள் சென்று அடைந்தாள்.

அவள் தயாராகி வரவும் வீட்டினர் அனைவரும் தயாராகியிருந்தனர். “நீ ஒருத்தி கிளம்பவும் நாங்க கிளம்பவும் ஒரே நேரம் ஆகுது. புடவை தானேடி கட்டச் சொன்னோம். நீ நைஞ்சு கட்டுட்டு வர்றியா என்ன” என்றார் சாதனா.

அவர் முறைக்க நிமிர்ந்தவள் அவரருகே அவளின் தந்தை நிற்கவும் திரும்பிக் கொண்டாள். “பாப்பா என்னதிது புடவை கட்டியிருக்க அதிசயமா இருக்கு” என்றவாறே வந்தான் அவளின் கடைசி அண்ணன் முகிலன்.

“எங்கே கேக்குறாங்க வேணாம்ன்னு சொன்னா” என்று பெரிய்வர்களை கண்களால் ஜாடை காண்பித்தாள் அவள்.

அவர்கள் வீட்டினருக்கு ஒரு பழக்கம். வீட்டினர் அனைவரும் சேர்ந்து செல்வதென்றால் அவர்கள் வேனில் ஒன்றாய் தான் செல்வர். எல்லார் வீட்டிலும் வெளியே செல்ல வசதியாய் காரைத் தான் முதலில் வாங்குவர்.

ஆனாலும் அகத்தியனும் மாணிக்கவாசகமும் முதன் முதலாய் தங்கள் குடும்பத்திற்கென்று சொந்தமாய் வாங்கியது ஒரு டெம்போ டிராவலரை. கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தவர்கள் என்பதால் எப்போதும் ஆடம்பரம் இருந்ததில்லை அவர்கள் வீட்டில்.

வசதி வந்துவிட்டதென்று அவர்கள் ஆடியதுமில்லை. பிள்ளைகளுக்கு கொடுக்க வேண்டிய சுதந்திரத்தை கொடுத்திருந்தனர், கண்டிக்க வேண்டிய இடத்தில் கண்டித்தனர் என்பதால் சிறியவர் முதல் பெரியவர் வரை மிகச்சரியாகவே நடந்துகொள்வர் எந்தவொரு விஷயமென்றாலும்.

டெம்போ டிராவல் என்றால் குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து ஒன்றாய் செல்லலாம் என்பதாலேயே அப்படி வாங்கியிருந்தனர். ஒன்றாக அவர்கள் அனைவரும் செல்வதென்றால் அதில் தான் செல்வர்.

அண்ணன் தம்பிகள் மாற்றி மாற்றி வண்டி ஓட்டிக்கொள்வர் என்பதால் டிரைவர் வைத்துக் கொள்ளவில்லை. “வண்டி எடு அபி” என்றார் மாணிக்கவாசகம்.

“நகுலன் போயிருக்கான் சித்தப்பா” என்று அபிமன்யு சொல்லவும் “சரி சரி எல்லாரும் அவங்க திங்க்ஸ் எடுத்திட்டு வெளிய போங்க. நான் பூட்டிட்டு வர்றேன்” என்று அவர் சொல்லவும் அனைவரும் வெளியே வந்தனர்.

அவர்கள் மறுநாள் தான் திரும்பி வருவர் என்பதால் உடமைகள் வேறு எடுத்துக் கொண்டிருந்தனர். வண்டி எடுக்கும் முன் எலுமிச்சையை டயரில் வைத்து நசுக்கிய பின்னேயே வண்டியை எடுத்தனர்.

அது அவர்கள் எப்போதும் செய்வது தான். குடும்பமாய் ஒன்றாய் அவர்கள் செல்லும் போது திருஷ்டியாய் இருக்கும் என்பதால் அப்படிச் செய்வர்.

அரைமணி நேர பயணத்தில் அவர்கள் திருமண மண்டபத்தை வந்தடைய பவானி வாயிலுக்கே ஓடிவந்திருந்தார்.

வந்தவர் இந்திரசேனாவின் கையை தான் கெட்டியாய் பிடித்துக் கொண்டார். “எங்கே நீ வரமாட்டியோன்னு நினைச்சேன் தங்கம், நீ சரியா வந்திட்டே. இப்போ தான் மாப்பிள்ளையோட தங்கச்சி எங்கன்னு கேட்டாங்க. இப்போ வந்திடுவாங்கன்னு சொன்னேன் நீ வந்திட்டே” என்றவர் “புடவையில பெரிய பொண்ணாட்டம் லட்சணமா இருக்கேடா, என் கண்ணே பட்டிரும் போல” என்றவர் தன் தங்கையை பார்த்தார்.

“என்னக்கா”

“அப்புறம் சுத்தி போட்டிரு அவளுக்கு, என் கண்ணு பட்டிருச்சு” என்றவரிடம் “அச்சோ பெரிம்மா பேசாம போங்க” என்றாள் கூச்சத்தோடு.

இவர்கள் வரவும் கையில் பூங்கொத்தை எடுத்துக் கொண்டு அபராஜிதன் இவளை நோக்கி வரவும் சரியாக இருந்தது. அவனை பார்த்தவளின் விழிகள் அப்படியே ஸ்தம்பித்து நிற்க இருவரின் பார்வையும் ஒருவரை ஒருவர் விழியகலாமல் பார்த்திருந்தது.

Advertisement