Advertisement

5

ஆத்திசூடி – குணமது கைவிடேல்

பொருள் – நன்மை தரக்கூடிய நல்ல குணங்களை பின்பற்றுவதை நிறுத்திவிடாதே.

“அப்பா எங்கே இருக்கீங்க??” அழைத்தது அபராஜிதன்.

“பத்திரிகை வைக்க வந்திருக்கேன் அபி. என்னப்பா விஷயம்??”

“முடிச்சுட்டு எனக்கு கூப்பிடுங்கப்பா…”

“நான் வைச்சுட்டு வெளிய தான் வந்தேன் அபி, சொல்லுப்பா”

“நீங்க உடனே நம்ம ஸ்கூலுக்கு வரணும்ப்பா. ஒரு முக்கியமான முடிவெடுக்கணும்??”

அதற்கு மேல் மகனை தோண்டி துருவாமல் அவர் பள்ளிக்கு கிளம்பினார். போனில் சொல்ல முடியாத ஏதோவொரு விஷயம் என்று மட்டும் உணர்ந்தார். விரைவாகவே வந்திருந்தார் பள்ளிக்கு.

மகன் பொறுப்பெடுத்த பிறகு அவர் பள்ளிக்கு வருவதில்லை. சிறிய மகளின் திருமண வேலைகளில் முழுமூச்சாய் இறங்கிவிட்டிருந்தார்.

பதினைந்து நாட்களுக்கு பிறகு மீண்டும் பள்ளிக்கு வருகிறார். வரும் வழியில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வணக்கத்திற்கு பதில் வணக்கம் சொல்லி அவர் வந்ததும் செல்லும் அறைக்கு நேரே செல்ல அங்கு தான் அபராஜிதன் அமர்ந்திருந்தான்.

அவன் முகத்தில் என்னவென்று கண்டுப்பிடிக்க முடியாத உணர்வு. நாலைந்து நாட்களுக்கு முன்பு அவன் ஏதோ யோசனையாக இருந்தானே என்று நினைவு வந்தது அவருக்கு.

‘அவனிடம் இன்னமும் சரியாக விசாரித்திருக்க வேண்டுமோ’ என்ற யோசனை ஓட அதை தள்ளி வைத்து “அபி” என்றழைத்தார்.

“வாங்கப்பா சாரிப்பா நீங்க வந்ததை நான் கவனிக்கலை. உட்காருங்கப்பா” என்று அவன் இருந்த இருக்கையை விட்டு எழுந்து அவரை அமர்ந்து கொள்ளுமாறு பணித்தான்.

“இருக்கட்டும் அபி நான் இங்க உட்கார்ந்துக்கறேன்”

“நோ அப்பா நீங்க இங்க தான் உட்காரணும்” என்றவன் எழுந்து எதிர்புறம் சென்று அமர்ந்துக்கொண்டான்.

மகனை நினைத்து உள்ளுக்குள் பெருமை ஓடியது அத்தந்தைக்கு. “சொல்லு அபி என்ன பிரச்சனை??” என்று நேராகவே விஷயத்திற்கு வந்தார் அவர்.

அபராஜிதன் அவன் கையில் இருந்த அலைபேசியில் இருந்த வீடியோவை ஓடவிட்டு அவரிடம் நீட்டினான். அதை கையில் வாங்கி பார்த்தவர் கொஞ்சம் அதிர்ந்து தான் போனார். பல வருடமாய் அவர் கட்டி காத்து வந்த நற்பெயரை அழிக்கக்கூடிய செயலை கண்ட அதிர்ச்சியா அன்றி நம்பிக்கை வைத்தவர் பொய்த்து போனார் என்ற அதிர்ச்சியா என்று பிரித்தறிய முடியாத நிலை.

ஆனாலும் முகத்தில் ஒன்றும் வெளிப்படுத்திக் கொள்ளவில்லை அவர். அபராஜிதன் அவர் முகத்தை தான் பார்த்திருந்தான் எதுவும் கண்டுப்பிடிக்க முடிக்கின்றதா என்று.

அப்பாவுக்கு தப்பாத பிள்ளை அவன் என்பதா, பிள்ளைக்கு தப்பாத அப்பா அவர் என்பதா என்று பட்டிமன்றமே வைக்கும் அளவிற்கு இருவரும் எந்த பிரதிபலிப்பும் காட்டாது அமர்ந்திருந்தனர்.

“நீ என்ன நினைக்கிறே அபி??”

“இதுக்கு முன்னாடி இது போல…”

“நடந்ததில்லைன்னு என்னால இப்போ சொல்ல முடியலை அபி”

“நான் ஒரு முடிவுக்கு வந்திட்டேன்ப்பா. நீங்க அதை எப்படி எடுத்துப்பீங்கன்னு எனக்கு தெரியலை, நம்மகிட்ட பலவருஷமா இருக்காரு”

“நீ என்ன முடிவெடுத்தாலும் நான் அதுல தலையிட மாட்டேன் அபி. பொறுப்பு முழுக்க உன்னோடதுன்னு அப்போவே சொல்லிட்டேன்”

“அப்பா பொறுப்பு வேற. இதுல ஒரு மகனா நான் செய்யறது சரியான்னு தெரிஞ்சுக்கவும் தான் உங்ககிட்ட கேட்கறேன்ப்பா”

“நீ எது செஞ்சாலும் அது சரியா தான் இருக்கும் அபி. ஆனா அபி இதை நீ எப்படி கண்டுப்பிடிச்சே??” என்று அவர் கேட்கவும் அவன் நடந்ததை மறைக்காமல் அவரிடம் சொன்னான்.

இந்திரசேனாவிற்கும் அவனுக்கும் நடந்த வாக்குவாதத்தை பற்றியெல்லாம் தன் தந்தையிடம் சொல்லவில்லை.

“நீ ஏன் அபி இதை முன்னாடியே எனக்கு சொல்லலை??”

“சொல்லக்கூடாதுன்னு எல்லாம் நினைக்கலைப்பா. பிரச்சனை என்னன்னு தெரிஞ்சுக்காம உங்ககிட்ட எப்படிப்பா சொல்றது. தவிர நான் முழுசா நம்பினேன் இப்படியொரு விஷயம் நடந்திருக்கவே நடந்திருக்காதுன்னு”

“யாரோ நம்ம ஸ்கூல் பேரை கெடுக்கத்தான் இப்படி செய்யறாங்கன்னு நினைச்சேன். விஷயம் என்னன்னு தெரிஞ்சப்போ கூட நான் நம்பலை. சம்மந்தப்பட்டவங்களை நேர்ல பார்த்து பேசினப்போ கூட நான் நம்பலை. இந்த வீடியோவை அவங்க காட்டுற வரை நான் உறுதியா நம்பினேன்ப்பா”

“எனக்கு வேற வழி தெரியலைப்பா. பிரச்சனையை முடிச்சுட்டு வந்து உங்களை பார்க்கணும்ன்னு நினைச்சேன். இதோ இப்போ வந்து நிக்கறேன்” என்றான் அபராஜிதன்.

“நீ கொஞ்சம் யோசிச்சு செஞ்சிருக்கலாம் அபி” என்று மட்டும் சொன்னார் அவர்.

“ஏன்பா அப்படி சொல்றீங்க??”

“எனக்கு என்னமோ பிரச்சனை முடிஞ்ச மாதிரி தெரியலை. புதுசா ஏதோ பிரச்சனை வரப்போற மாதிரி தான் தோணுது” என்றார் பெரும் யோசனை முகமாய்.

“எதுவும் வராதுப்பா??”

“நீ பணம் கொடுத்து அவங்க வாயை அடைச்சதுக்கு பதில் அந்த குழந்தைக்கு நம்ம ஸ்கூல்ல ஒரு இடம் கொடுத்திருந்தா இந்த பிரச்சனை ரொம்ப சுலபமா முடிஞ்சிருக்குமே”

“அப்போ நான் பண்ணது தப்புன்னு சொல்ல வர்றீங்களா??”

“இல்லை அபி நான் அப்படி சொல்ல வரலை. கொஞ்சம் நிதானமாவே இதை ஹாண்டில் பண்ணியிருக்கலாம் அதைத்தான் யோசிச்சேன்”. அவரின் அனுபவம் அவரை பக்குவமாய் யோசிக்க வைத்தது. 

“அப்பா நான் பிரின்சிபாலை வரச்சொல்லியிருக்கேன் இப்போ வந்திடுவார்”

“ஓகே அபி” என்று அவர் சொல்லி முடிக்கவும் கதவை நாசூக்காய் தட்டிவிட்டு பிரின்சிபால் விநாயகம் உள்ளே நுழைந்தார்.

“சார் நீங்க வரப்போறதா சொல்லவே இல்லை” என்றார் கரிகாலனை பார்த்து.

“ஒரு வேலையா வரவேண்டியதா போச்சு” என்றார்.

“ஓ!!” என்றவர் “தம்பி நீங்க வரச்சொன்னீங்களாம்??” என்றார் கேள்வியாக.

“ஹ்ம்ம் ஆமா. அன்னைக்கு உங்ககிட்ட ஒரு விஷயம் கேட்டேன்ல”

“என்ன விஷயம் தம்பி??”

“நம்ம ஸ்கூல்ல டொனேஷன் வாங்குறது பத்தி”

‘இவர் அதை விடமாட்டாரா. சும்மா அதே கேட்டு தொணதொணக்கறாரே’ என்று தான் இருந்தது பிரின்சிபாலுக்கு.

“ஆமா சார் கேட்டீங்க”

“நீங்க கூட அப்படியெல்லாம் இல்லைன்னு சொன்னீங்களே”

“உண்மையை தானே தம்பி சொன்னேன்”

“நீங்க இப்போ கூட உண்மையை தான் சொல்றீங்களா??”

“என்ன தம்பி என்னை சந்தேகப்படுறீங்களா??” என்றவரின் குரல் மாறியது. அவரின் பார்வை இப்போது கரிகாலனின் மீதிருந்தது, ‘நீங்கள் இதைப் பார்த்து கொண்டு வேடிக்கை பார்ப்பதாய்’ என்று.

“அப்பாவை எதுக்கு பார்க்கறீங்க?? கொஞ்சம் இதை பாருங்க” என்றவன் வீடியோவை ஓடவிட பதட்டத்தில் அவருக்கு இப்போது வியர்த்தது.

“இதை நான் உங்ககிட்ட இருந்து எதிர்ப்பார்க்கலை” என்றார் கரிகாலன் குற்றம் சாட்டும் பார்வையோடு.

“சார் வசதியானவங்க கொடுக்கறதுல என்ன தப்புன்னு தான் நான்…”

“போதும் சார் நீங்க பண்ண தப்புக்கு சாக்கு சொல்லாதீங்க. இந்த ஸ்கூல் ஆரம்பிச்சதோட நோக்கம் எல்லாரும் படிக்கணும்ன்னு தான். ஸ்கூல் பீஸ் கூட மத்த ஸ்கூல் விட இங்க கம்மி. எதுக்கு நம்ம சம்பாதிக்கவா இதை செய்யறோம்”

“ஆப் கோர்ஸ் சம்பாத்தியம் வேணும் தான். ஆனா மெயின் மோட்டிவ் எல்லாருக்கும் தரமான கல்வியை கொடுக்கறது தான். மிடில் கிளாஸ் எல்லாம் என்ன சார் செய்வாங்க நமக்கு டொனேஷனை கொட்டிக் கொடுத்திட்டா”

“கஷ்டப்பட்டு படிக்கலாம் சார் தப்பில்லை. படிக்க வைக்கவே கஷ்டப்படணும்ன்னா அது தப்பில்லையா சார்” என்றான் அபராஜிதன்.

மகனை பேச்சை கேட்டு அவனுக்கு மனதிற்குள் சபாஷ் போட்டுக் கொண்டார் அத்தந்தை. நல்ல வேளையாய் அவனுக்கு புரிந்திருந்தது அவர் எதை நினைத்து அப்பள்ளியை ஆரம்பித்தாரோ அந்நோக்கம் புரிந்து வைத்திருந்தான் அபராஜிதன்.

“சார் உங்க பையன் பேசிட்டே இருக்கான். நீங்க எதுவும் சொல்லலை. நான் இந்த ஸ்கூல் ஆரம்பிச்ச காலத்துல இருந்து இருக்கேன். இப்படித்தான் என்னை அவமானப்படுத்துவீங்களா”

“விநாயகம் உங்ககிட்ட இதை நான் எதிர்பார்க்கலை. நீங்க சொன்னீங்க இந்த ஸ்கூல் ஆரம்பிச்ச காலத்துல இருந்து இருக்கீங்கன்னு. ஒத்துக்கறேன் அது உண்மை தான் ஆனா அப்போ என்ன நோக்கத்தோட இதை ஆரம்பிச்சோம்ன்னு அபியைவிட உங்களுக்கு நல்லா தெரியும் தானே”

“நீங்க அவனுக்கு சொல்லிக்கொடுக்கற இடத்துல இருக்கீங்க. ஆனா அவன் உங்களுக்கு சொல்லி கொடுக்கும்படியா வைச்சுட்டீங்க. இதுக்கு யார் காரணம்”

“அப்புறம் நாங்க உங்களை அவமானப்படுத்துறதா சொன்னீங்க. நடந்தது என்ன தெரியுமா உங்களால எங்களுக்கு தான் அவமானம். நம்ம ஸ்கூல்க்கு வக்கீல் நோட்டீஸ் வந்திருக்கு உங்களால”

“நீங்க செஞ்ச செயலால இப்போ தலை குனிஞ்சு நிக்கறோம் நாங்க. அதுக்கு நீங்க என்ன பதில் சொல்லப் போறீங்க” என்றார் அவர்.

பதில் சொல்ல முடியாமல் அமர்ந்திருந்தார் விநாயகம். இதை அவர் எதிர்பார்த்திருக்கவில்லை. வக்கீல் நோட்டீஸ் வரை சென்றிருக்கிறது என்றால் என்ன நடந்திருக்கும் என்று யோசித்துக் கொண்டிருந்தார்.

அவரின் யோசனை எப்படி இருந்தால் எனக்கென்ன என்ற ரீதியில் இருந்த அபராஜிதன் அவர் முன் ஒரு கவரை நீட்ட ‘என்னவென்பது’ போல அவனைப் பார்த்தார்.

“வாங்கிக்கோங்க” என்றான் அவன்.

அதை வாங்கி மெல்ல பிரித்தவர் முற்றிலும் நொந்து போனார். அது அவரை வேலையில் இருந்து நீக்கியதற்கான ஆணை.

“சார்” என்று கரிகாலனை பார்த்தார் அவர்.

“சாரி விநாயகம்” என்று முடித்துவிட்டார் கரிகாலன்.

“நீங்க கிளம்பலாம்” என்றான் அபராஜிதன் பேச்சு முடிந்தது நீ வெளியே போ என்ற தொனியில்.

விநாயகம் இருக்கையில் இருந்து சட்டென்று எழுந்தவர் அபராஜிதனை ஒரு முறை முறைத்தவாறே வெளியேறி இருந்தார்.

Advertisement