Advertisement

4

ஆத்திசூடி – சொல் சோர்வு படேல்

பொருள் – பிறருடன் பேசும் போது மறந்தும் குற்றமுண்டாகப் பேசாதே

நீதிமன்ற வளாகம்

இந்திரசேனா கையில் சில கேஸ் பைல்களுடன் எதையோ யோசித்துக் கொண்டே நடந்து வர “ஹலோ ஒரு நிமிஷம்” என்று அவளுக்கு முன் இடையிட்டு தடுத்த கைக்கு சொந்தக்காரனை மெல்ல நிமிர்ந்து பார்த்தாள்.

அபராஜிதன் நின்றிருந்தான் அவள் முன்பு. ‘இவனா!! என்ன வேணும் இவனுக்கு?? ஒரு வேளை கேஸ் கோர்ட்டுக்கு வந்திருக்குமோ. வக்கீல் நோட்டீஸ் தானே அனுப்பினோம். கேஸ் எதுவும் பைல் பண்ண மாதிரி தெரியலையே. சார் கூட எதுவும் சொல்லலையே’ என்று யோசித்தவள் ‘என்ன??’ என்ற பார்வையை அவனுக்கு கொடுத்தாள்.

‘திமிரை பாரு, என்னன்னு கேட்காம பார்வை. கண்ணை அப்படியே நோண்டிறணும்’ என்ற நினைத்தவாறே “உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணுமே” என்றான்.

அதற்கும் ‘சொல்லிக்கோ’ என்ற பார்வையை தான் பார்த்தாள் அவள்.

“என்னன்னு கேட்க மாட்டியா??”

“எதுக்கு கேட்கணும்?? நான் கேட்கலைன்னு சொன்னாலும் நீங்க விடப்போறதில்லை. என்ன சொல்லணுமோ சொல்லிட்டு போங்க” என்றாள் போனால் போகிறதென்ற தினுசில்.

“ஓகே நான் நேரா விஷயத்துக்கு வந்திடறேன்”

‘அப்போ பிடிச்சு சொல்றேன் சொல்றேன்னு கதை சொல்லிட்டு இருக்கான். இவன் மண்டையை பிளந்திட்டா என்ன’ என்று விபரீதமாய் யோசனை சென்றது.

“அந்த கேஸ் இல்லாமலே போய்டுச்சு. நீங்க அனுப்பின நோட்டீஸ் ஒண்ணுமே இல்லாம போய்டுச்சு தெரியுமா” என்றான் அவன்.

இதெல்லாம் அவள் வாழ்வில் அன்றாடம் நடக்கும் சங்கதி தானே. அதனால் அவள் அதை பெரிதாய் எடுத்துக்கொள்ளவில்லை. அப்படியா என்று தான் பார்த்தாள் அவனை. 

ஆனாலும் ஏதோவொரு உறுத்தல் அவர்களின் கிளையன்ட் அந்த பெரியவர் அவ்வளவு உறுதியாக இருந்தார் அவர் எடுத்த முடிவில். அப்படிப்பட்டவர் எப்படி பின் வாங்கி இருப்பார் என்ற யோசனை ஓடிய போதும் எதுவும் கேட்கவில்லை.

அவன் சொல்வது போல எதுவும் இருக்க முடியாது என்று லேசாய் மிக லேசாய் ஒரு நம்பிக்கை ஓடியது. இவன் வேறு யாராவது வக்கீலை பார்த்திருப்பான், அவர் கேசை உடைக்கிறேன் என்று வாக்குறுதி கொடுத்திருப்பார் அதை வைத்து பேசுகிறான் என்று நினைத்துக் கொண்டாள்.

“எப்படின்னு இப்போ நீங்க கேட்கணுமே??”

“எப்படினாலும் சொல்லத்தானே போறீங்க சொல்லுங்க??” என்றாள்.

“நான் சொல்லத்தான் போறேன். ஆனா உங்க யோசனை அப்படியெல்லாம் இருக்காதேன்னு தானே யோசிக்குது”

“ஆமா அப்படித்தான்னு வைச்சுக்கோங்க. இப்போ என்ன சார் வேணும் உங்களுக்கு, சும்மா போய்கிட்டு இருக்கவளை நிறுத்தி பேசணும்ன்னு சொல்லிட்டு அறுத்து தள்ளிட்டு இருக்கீங்க” என்று அவன் முகத்துக்கு நேராகவே சொல்லிவிட்டாள்.

“ஆனாலும் உனக்கு ரொம்ப திமிருல. என்னை நீ ரொம்ப இளக்காரமா நினைக்கிறல”

“நான் எப்படியும் நினைக்கலை, சும்மா ஏதோவொரு வக்கீலை பார்த்துட்டு வந்துட்டு நீங்க தான் ரொம்ப திமிரா பேசிட்டு இருக்கீங்க” என்று அவள் சொல்லவும் அவன் வாய்விட்டு நகைத்தான்.

“என்ன சிரிப்பு??” என்று முறைத்தாள்.

“நான் ஏன் வேற வக்கீலை தேடணும்?? அதான் அந்த நோட்டீசே ஒண்ணும் இல்லாம பண்ணிட்டேன்னு சொல்றேன் நீ நம்பலையா என்னை??”

“உனக்கு விளக்காம சொன்னாத்தான் புரியும். அதாவது எல்லாத்துக்கும் ஒரு விலை இருக்குன்னு நான் உனக்கு முன்னாடியே சொல்லியிருக்கேன்ல. அதுக்கான விலையை கொடுத்திட்டேன்னு சொல்றேன்”

இந்திரசேனா அவன் பதிலை கேட்டு குழப்பமாய் பார்த்தாள். “உனக்கு இன்னும் நான் என்ன சொல்ல வர்றேன்னு புரியலைன்னு நினைக்கிறேன். நோட்டீஸ் அனுப்ப சொன்னவர், அனுப்பினவர்ன்னு அதாவது உங்க கிளையன்ட் அப்புறம் உங்க சீனியர்ன்னு எல்லாருக்கும் விலை கொடுத்தாச்சுன்னு சொல்றேன்” என்று அவன் உரைக்கவும் அவளுக்கு கோபம் சுர்ரென்று ஏறியது.

“யாரைப்பத்தி என்ன பேசறீங்க நீங்க?? என் சீனியர் அப்படிப்பட்டவர் கிடையாது. தப்பா பேசாதீங்க அவரைப்பத்தி”

“அவரை தப்பா பேச எனக்கென்ன அவசியம். உன் சீனியர்ன்னா அவர் பெரிய இவரா, அவர் விலை போக மாட்டாரா என்ன??”

“அன்னைக்கு நான் உங்ககிட்ட கொஞ்சம் அதிகமா பேசிட்டேன். அதுக்காக நீங்க என்னை வெறுப்பேத்தணும்ன்னு பேசிட்டு இருக்கீங்க. போங்க சார் போய் வேற வேலை இருந்தா பாருங்க”

“மிஸ்” என்றவன் “அன்னைக்கு ஏதோ பேரு சொன்னீங்களே “சேனா தானே”

“இந்திரசேனா”

“ஓ!! ஓகே இந்திரசேனா உங்க மேல எனக்கு கோபம் இருக்கறது உண்மை தான். ஏன்னா அன்னைக்கு நீங்க ரொம்ப பேசிட்டீங்க, ரொம்ப ரொம்ப பேசிட்டீங்க அதை நான் என்னைக்கும் மறக்கவே மாட்டேன்”

“உங்களுக்கு சந்தேகம் இருந்தா உங்க சீனியரை கேளுங்க. இப்போ நான் கிளம்பறேன்” என்று அவன் நகர்ந்தான்.

“வாய்ப்பே இல்லை எங்க சீனியர் அப்படி செஞ்சிருக்க வாய்ப்பே இல்லை. தவிர அந்த பெரியவர் இதுல இருந்து பின்வாங்கி இருக்கவும் முடியாது. அவர்கிட்ட எவிடன்ஸ் ரொம்ப ஸ்ட்ராங்கா வைச்சிருக்கார்”

அபராஜிதன் இப்போது மீண்டும் சிரித்தான். “நீங்கலாம் எப்படி வக்கீலுக்கு படிச்சீங்க??” என்று அவன் சொல்லவும் இந்திரசேனாவின் முகம் சிவந்தது கோபத்தில்.

“அந்த ஸ்ட்ராங் எவிடன்ஸ்க்கு ரொம்பவே விலை கொடுக்க வேண்டியதா போச்சு. என்னோட ஐபோனைவிட அந்த போனோட காசு ரொம்ப அதிகம் தான்” என்று அவன் சொல்லவும் இந்திரசேனா அதிர்ந்தாள்.

அந்த போனை அவள் முன் அவன் ஆட்டிக்காட்ட உள்ளே பதைப்பாக இருந்தது அவளுக்கு. இதெல்லாம் சகஜமாய் நடக்கக்கூடிய ஒன்று தான் என்றாலும் அவளால் ஏற்றுக்கொள்ள முடியாதது மாணிக்கவாசகம் விலை போனார் என்று அவன் சொன்னதை தான்.

இதே விஷயத்தை அவள் வேறு யாரின் மூலமாவது கேள்விப்பட்டிருந்தால் அப்படியே கடந்து போயிருக்க வாய்ப்பிருக்கிறது. அபராஜிதன் வேண்டுமென்றே அவளிடம் வந்து சொன்னது அவளை ஏதோவொரு விதத்தில் காயப்படுத்தியது.

அவன் அவளை தேடி வந்து சொல்ல வேண்டும் என்று எண்ணியிருக்கவில்லை. நீதிமன்ற வளாகத்தில் அவளை பார்க்கவும் அவனால் சும்மாயிருக்க முடியவில்லை.

‘அன்னைக்கு என்னென்னலாம் பேசினா, அவளைப் பார்த்திட்டு சும்மா போறதா’ என்று அவன் மனசாட்சி எடுத்துக்கொடுக்க விளைவு அவளை இடைமறித்து அவன் பேசியிருந்தான்.

“சோ நீங்க காசு கொடுத்து வாங்கிட்டீங்க அப்படித்தானே”

“அதைத்தான் அப்போவே சொல்லிட்டனே”

“அப்போ நாங்க பொய்யா நோட்டீஸ் அனுப்பலைன்னு இப்போ உங்களுக்கு புரிஞ்சு இருக்கும்ல. நீங்க சாட்சியை தான் விலைக்கு வாங்கிட்டீங்க. ஆனா நடந்ததை அதாவது நடந்து முடிஞ்சதை இல்லைன்னு சொல்ல முடியாதுல”

“என்ன சொல்றே??”

“உங்க ஸ்கூல்ல நீங்க பண்ணுற அநியாயம் நிஜம் தானே. எத்தனை பேரன்ட்ஸ்கிட்ட இப்படி டொனேஷன்னு சொல்லி காசு புடுங்கினீங்க. வெளிய சொல்றது ஒண்ணு, உள்ள நடக்கறது ஒண்ணு”

“ஹேய் வாயை மூடு. நீ பார்த்தியா நாங்க காசு வாங்கினதை”

“அதான் அந்த எவிடன்ஸ் சொல்லிருச்சே. உங்க பிரின்சிபால் தானே காசு கேட்டார். அதை இல்லைன்னு உங்களால மறுக்க முடியுமா. போங்க சார் போய் உங்க ஸ்கூல்ல இன்னும் எப்படியெல்லாம் டொனேஷன் வாங்கலாம், பீசை கறக்கலாம்ன்னு யோசிச்சு வேலை செய்ங்க. பணம் திண்ணி கழுகுகள் நீங்கலாம்” என்று சொல்லிவிட்டு மேற்கொண்டு நிற்காது சென்றுவிட்டாள் அவள்.

அவனுக்கு தகுந்த பதிலை சொல்லி சென்றிருந்தாலும் அவள் மனம் ஏனோ தீயாய் எரிந்துக் கொண்டிருந்தது உண்மையே. அவள் சீனியர் இப்படி செய்வார் என்று அவள் எதிர்பார்க்கவே இல்லை. அவர் எப்போதும் பணத்திற்கு விலை போகாதவர் அவர் எப்படி?? என்று மனம் அதிலேயே உழன்றது. கோர்ட் வேலை முடிந்திருந்ததால் அவள் நேரே வீட்டிற்கு தான் சென்றாள்.

“சித்தா…” என்று கத்தியவாறே வீட்டிற்குள் நுழைந்தாள் இந்திரசேனா.

“என்னடி?? எதுக்கு இப்படி வாசல்ல நின்னு கத்திட்டு இருக்கே??” என்று வந்தார் அவளின் அன்னை சாதனா.

“சித்தா எங்கே??” என்று முறைப்போடு கேட்ட அவரின் மகள் அவருக்கு புதிதாய் தெரிந்தாள்.

அவளுக்கு அவளின் தந்தையை விட சித்தப்பாவை தான் அதிகம் பிடிக்கும். “சித்தா… சித்தா…” என்று வாய் ஓயாமல் சொல்லுவாள்.

“தம்பி இன்னும் வரலைடி”

“ஏன்?? ஏன் இன்னும் வீட்டுக்கு வரலை??”

“எனக்கென்னடி தெரியும். நீயும் அவரும் ஒண்ணா தானே காலையில கோர்ட்டுக்கு போனீங்க?? இப்போ வந்து என்னைக் கேட்டா எனக்கு எப்படி தெரியும். அவரோட ஜீனியர் நீ தானே உனக்கு தெரியாதா??”

“ஜீனியர்… இனிமே அப்படிச் சொல்லாதீங்க” என்ற மகளை முறைத்தார் சாதனா.

ஆம்!! மாணிக்கவாசகம் அவளின் சித்தப்பா, அகத்தியனின் உடன்பிறந்தவர். எப்போதும் கண்டிப்போடு இருக்கும் அகத்தியனை விட அவளுக்கு மாணிக்கவாசகம் தான் மிகப்பிடிக்கும்.

அவரை பார்த்து வளர்ந்தவள் அவரைப் போலவே வழக்கறிஞர் ஆக ஆசைப்பட்டு படித்தாள். அவரிடமே ஜூனியராக சேர்ந்தாள். வெளியில் அவரை தன் குருவாகவே பார்ப்பவள் குருவுக்கான மரியாதையை எப்போதும் அவருக்கு கொடுக்க தவறியதில்லை.

வீட்டில் மட்டுமே அவர் அவளுக்கு சித்தா, சித்து, சித்தப்பா. வெளியில் சார் என்று மரியாதையாக மட்டுமே அழைப்பாள். கேசவனுக்கு கூட அவள் மாணிக்கவாசகத்தின் அண்ணன் மகள் என்று தெரியாது.

இருவரும் சேர்ந்தார் போல் ஒரு நாளும் அலுவலகம் சென்றதில்லை. கோர்ட்டுக்கு கூட அவசியமன்றி அவர்கள் இருவரும் இணைந்து சென்றதில்லை. இந்திரசேனா தனித்து தான் செல்வாள். அப்படித்தான் அவளை மாணிக்கவாசகம் வளர்ந்திருந்தார்.

அப்படிப்பட்டவர் எப்படி இப்படி விலை போனார் என்ற எண்ணமே அவளுக்குள் ஓடியது. தான் தவறாக நினைக்கிறோமே என்று எண்ணி தன் எண்ணத்திற்கு கடிவாளம் போட்டு அமைதி காத்தவள் மாணிக்கவாசகம் வந்ததும் என்னவென்று கேட்டிருக்க அவரோ ஆமென்று ஒப்புக்கொண்டதில் ஏதோவொன்று உடைந்து போனது அவளுக்கு.

Advertisement