Advertisement

37

ஆத்திசூடி – மாற்றானுக்கு இடம் கொடேல்

பொருள் – பகைவன் உன்னை வெல்வதற்கு இடம் கொடுக்காதே.

காரில் இருந்து இறங்கியது இந்திரசேனாவின் அன்னையும் தந்தையும் மற்றும் அவளின் சித்தி நாயகியும் தான். வந்தவர்களை வரவேற்று தகுந்த இருக்கையில் அமர வைத்து தானும் அவர்கள் அருகில் அமர்ந்திருந்தான் அபராஜிதன்.

இன்னும் இந்திரசேனா பள்ளிக்கு வந்திருக்கவில்லை. அவளுக்கு தான் அழைப்பு மேல் அழைப்பு விடுத்தாகிறது எங்கே எடுத்தால் தானே. உள்ளுக்குள் சற்று தவிப்பாகத் தான் உணர்ந்தான்.

அவன் பொறுப்பேற்ற பின் வரும் முதல் விழா அதை சிறப்பாக நடந்த வேண்டும் என்ற எண்ணம் அவனுக்குள் ஓடிக்கொண்டே இருந்தது. அவன் தந்தைக்கு கூட போன் செய்து வருமாறு அழைப்பு விடுத்திருந்தான்.

அவருக்கு தான் சிவகாசியில் சற்று வேலையிருப்பதால் வர இயலாது என்றுவிட்டிருந்தார். அகல்யாவை அழைத்தால் அவள்  இப்போது தன்னால் வரமுடியாது என்று சொல்லியிருந்தாள்.

தனக்கு மிகவும் வேண்டியவர்கள் யாரும் அருகில்லாதது அவனுக்கு சற்று வருத்தம் தான். இந்திரசேனா அவள் வீட்டினர் யாரையும் அழைக்க வேண்டும் என்று அவனிடத்தில் சொல்லியிருக்கவில்லை. அவனாகவே தான் அழைத்திருந்தான்.

‘பரவாயில்லையே நம்மாளுக்கு கொஞ்சம் பொறுப்பு வந்திருக்கு போல’ என்று எண்ணிக்கொண்டாள் அவள்.

அவன் மனைவியும் வந்திருக்கவில்லை, மாணிக்கவாசகமும் இன்னமும் வந்திருக்கவில்லை. ‘ஒருவேளை அவருக்கு என் மேல இன்னமும் கோபமிருக்குமோ. பின்னே இருக்காதா, நீ கொஞ்ச நஞ்சமா பண்ணே. பொண்ணை கொடுத்திட்டார்ன்னு கொஞ்சம் ஓவரா தான் பண்ணிட்ட’ என்று அவன் மனசாட்சி அவனை இடித்துரைத்தது.

‘அவர் தான் வரலைன்னா இவளும் வராம இருக்கா’ என்று பதைப்பு ஓட அதை வெளிக்காட்டாது மறைத்தவாறே “மாமா எப்போ வருவாங்க??” என்றான் தன் மாமனாரை திரும்பிப் பார்த்து.

மருமகனுக்கும் தன்னுடன் பிறந்தவனுக்கும் இடையே நடக்கும் பனிப்போர் அறியாதவரல்ல அகத்தியன். அவர் அதைப்பற்றி தோண்டி துருவ மாட்டாரே தவிர அனைத்தும் அறிந்து தான் வைத்திருப்பார். 

தவிர மருமகனை எதிர்த்து என்ன கேட்பது என்பதால் அவ்விஷயத்தில் அவர் முழுதுமாய் கண்டும் காணாதவர் போலவே இருந்துக் கொண்டார். அபராஜிதன் தன் தம்பியின் வருகை குறித்து கேட்டதிலேயே உள்ளம் குளிர்ந்து தான் போனது அவருக்கு.

எப்போதும் தன் வேலையை யாருக்காகவும் தள்ளி வைப்பதோ, விடுப்பு எடுப்பதோ என்றுமே அவர் செய்ததில்லை. அதி முக்கிய பணி என்றால் மட்டுமே விடுப்பு எடுப்பார்.

மருமகன் அழைத்ததால் மட்டுமே அன்று மாலை குழந்தைகள் பார்வை நேரத்திற்கு விடுப்பு விட்டிருந்தார். காலையிலேயே சொல்லிவிட்டு தான் வந்திருந்தார் மருத்துவமனையில். மருமகன் தன்னையே நோக்கிக் கொண்டிருப்பது உணர்ந்தவர் அவனுக்கு பதில் கொடுத்தார்.

“கோர்ட்ல ஏதோ முக்கியமான ஹியரிங்ன்னு சொன்னான், முடிச்சுட்டு வந்திடுவான்”

“ஹ்ம்ம் சரிங்க மாமா”

“பங்க்ஷன் எப்போ ஸ்டார்ட் ஆகுது??”

“இன்னும் சிலர் வரணும் மாமா அதுக்கு தான் வைடிங்”

“இந்து இன்னும் வரலை போல. கோர்ட்லயா இல்லை வீட்டில தானா??” என்றார் அவர்.

“இன்னைக்கு எங்கயும் போகல அவ, வீட்டில தான் இருக்கா. என் கூடவே வந்தா அவளுக்கு ரொம்ப போர் அடிக்கும் அதான் கொஞ்சம் நேரம் கழிச்சு வரச்சொன்னேன், வந்திடுவா” என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே வந்து சேர்ந்திருந்தாள் அவன் மனையாள்.

அலைபேசி ஓசையெழுப்ப முகம் மலர அதை எடுத்துக்கொண்டு சற்று நகர்ந்து வந்தான். “எங்கே இருக்கே??” என்றான் ஆர்வமாய்.

“உங்க புடதிக்கு பின்னாடி தான் இருக்கேன் ஓவர் ஓவர்…” என்று வடிவேலை போல அவள் சொல்ல சிரிப்புடன் அவன் திரும்பி பார்க்க வாயிலைத் தாண்டி அவன் தேவதை நடந்து வந்துக் கொண்டிருந்தாள்.

கருநாவல் பழ நிறத்தில் டிசைனர் புடவையும் அதற்கு தோதான ரவிக்கையும் அணிந்து வந்தவளின் கூந்தலில் மல்லிகை மொட்டுக்கள் சரமாய் வழிந்தது அவளின் இடது புற தோளில்.

கண்கள் அவளைவிட்டு எங்கும் திரும்ப மாட்டேன் என்று அடம்பிடிக்க ஓடிச்சென்று அவளை அணைத்துக் கொள்ளத் துடித்த கரத்தையும் மனதையும் கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டவன் அவளை நோக்கி வேக எட்டுக்கள் போட்டிருந்தான்.

“இதான் உங்க டக்கா, என்னமோ என்னை வா வான்னு கூப்பிட்டு நீங்க சாவகாசமா வர்றீங்க வரவேற்க. ஒரு பொக்கே இல்லை, ஒரு சின்ன பூ கூட கொடுக்கலை. அவ்வளவு தானா” என்று விளையாட்டு போலத்தான் கேட்டாள் அவள்.

அபராஜிதனோ அவளுக்கு பதில் சொல்லாது அவளையே வருடிக் கொண்டிருந்தான் தன் பார்வையால். அவன் பார்வை புதிதாய் அவளைப் பார்க்க முறைத்தாள் தன் கணவனைப் பார்த்து.

“க்கும்…” என்று கனைத்தாள்.

“வரமாட்டியோன்னு நினைச்சேன்”

“ஏன் அப்படி நினைக்கணும்??”

“தெரியலை, தோணுச்சு”

“தோணும் தோணும் எம் புருஷன் ஸ்கூல்ல வேலை பார்க்கிறதை பார்க்க நான் வராம வேற யாரு வருவாங்களாம்”

“ரொம்ப சீக்கிரம் வந்திட்டே”

“நானா சீப் கெஸ்ட்டு எப்போ வந்தா என்ன??” என்று தோளைக் குலுக்கி கேட்டவளைப் பார்த்து மெல்ல புன்னகைத்துக் கொண்டான்.

இந்திரசேனாவுடன் அவன் வருவதைப் பார்த்து ஆசிரியர்கள் ஓரிருவர் அடையாளம் கண்டுக்கொண்டு அவர்களை நோக்கி வந்தனர். 

ஓரிரு நிமிடங்கள் அவர்களுடன் பேசிக் கொண்டிருந்துவிட்டு அவளை அழைத்து வந்து அவள் வீட்டினரின் அருகில் அமர வைத்து வேறு வேலையாய் அங்கிருந்து நகர்ந்திருந்தான்.

“நீங்களாம் எப்போ வந்தீங்க?? ஏன் எனக்கு ஒரு போன் கூட பண்ணலை?? நாயகிம்மா எங்க அண்ணனெல்லாம் ஆளைக் காணோம்”

“கொஞ்சம் மூச்சு வாங்குறியா நீ… எல்லா கேள்வியும் கேட்டுட்டே இருக்கியே, பதில் சொல்ல கொஞ்சம் நேரம் கொடுத்தா தானே நாங்களும் பேச முடியும்… கல்யாணம் ஆகிடுச்சு இன்னும் பொறுப்பு வரலை உனக்கு…” சொன்னது சாதனா அவளின் அன்னை.

அவர் சொன்னதை காதிலே ஏற்றிக் கொள்ளவில்லை அவள். “நாயகிம்மா நீங்க சொல்லுங்க” என்று அவரிடம் பேச “இங்க நானும் இருக்கேன்” என்றார் அவளின் தந்தை.

‘என்னடா இது உலக அதிசயமா இருக்கு. இவரு நம்ம கூடலாம் பேசவே நேரமில்லாம ஓடுவாரு. இவரு என்ன இப்படி சொல்லுறாரு’ என்று பார்த்தாள் அவரை.

“தெரியும்ப்பா நீங்க பிசியா இருப்பீங்க அதான் நாயகிம்மா பேசலாம்” என்று சொன்னவள் சத்தியமாக உளறினாள்.

அவளின் பேச்சில் அவருக்கு சிரிப்பு வந்தது. அவளிடம் தந்தையாய் முழு உரிமையுடன் இருப்பவர் மாணிக்கவாசகம் மட்டுமே. அகத்தியன் ஒன்றும் கடமை தவறியவர் என்றெல்லாம் சொல்லிவிட முடியாது.

அவரின் வேலை அப்படி முன்பு மருத்துவமனையில் குழந்தைகள் நலப்பிரிவில் வேலையில் இருந்தவருக்கு எப்போது வேண்டுமானாலும் அழைப்பு வரும். உடனே கிளம்பிவிடுவார், வீட்டினருடன் அவர் இருக்கும் பொழுதுகள் சற்று குறைவு தான். அதனால் வந்த இடைவெளி தானே தவிர அன்பில் என்றும் இடைவெளி இருந்ததில்லை அவர்களிடத்தில்.

“எங்க உன்னோட சீனியர்??” என்றார் மகளைப் பார்த்து.

‘என்னது??’ என்று பேந்த விழித்தாள் அவள்.

“என்ன இந்தும்மா மாமா கேக்குறாங்கல்ல சொல்லு. உன் சீனியர் எங்க??” என்றார் அவர் மகளிடத்தில் கிண்டல் குரலில் முகத்தில் சிரிப்பை மறைத்து.

“நாயகிம்மாஆஆஆஆஆஆஆ…” என்று பல்லைக் கடித்தாள் அவள்.

அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே அந்த இடம் சற்று பரபரப்பாக யாரோ முக்கியமானவரின் வருகை என்று புரிய அமைதியாகினர் அவர்கள்.

அபராஜிதனை சூழ்ந்து கொண்டு இன்னும் சிலர் அம்முக்கியமானவருடன் வர வருபவர் யாரென்று யாருக்கும் தெரியவில்லை.

மேடையருகில் அவர் வரும் போது தான் எழுந்து நின்று பார்க்க இந்திரசேனா வாயடைத்து போனாள். கண்கள் கரித்து கலங்கிவிட இமை மூடி மூடி திறந்து விழிநீர் கொட்டிவிடாமல் சமாளித்தாள்.

அபராஜிதன் தன் வீட்டினரை அழைக்கப் போவதாக சொன்ன போது கூட அவன் எப்போதும் போல மற்றவர்களை தான் அழைப்பான் என்பதால் அவள் தன் சித்தியிடம் விசாரித்த போது கூட மாணிக்கவாசகம் பற்றிய பேச்சை எடுக்கவில்லை.

அவள் அவனிடத்தில் மாணிக்கவாசகம் குறித்த பேச்சு எதையுமே எடுப்பதில்லை. அவரைப்பற்றிய பேச்சு தான் தங்களுக்குள் பெரும்பாலான சண்டைக்கு காரணம் என்பதாலோ என்னவோ அவள் அவர் பெயரை தேவைப்பட்டாலொழிய வேறெந்த தருணத்திலும் வெறும் பேச்சுக்காய் கூட இழுப்பதில்லை.

வந்ததும் மற்றவர்களைப் பற்றி கேட்டிருந்தாள் ஆனால் மறந்தும் கூட அவள் நாவு மாணிக்கவாசகம் பற்றி விசாரிக்கவில்லை.

காலையில் அவரிடம் ஒரு கேஸ் விஷயமாய் போனில் பேசும் போது கூட இன்றைய நிகழ்வு பற்றி அவள் சொல்லவேயில்லை.

இப்போது அவரே நேரில் அதுவும் தன் கணவன் அவரை அழைத்துவருவதை பார்த்தால் அந்நிகழ்வின் தலைமை விருந்தினரே அவர் போலத்தான் தோன்றியது.

“சேனா” என்றழைத்தான் இவர்களையே பார்த்துக் கொண்டிருந்தவளை பார்த்து.

“என்ன அங்க நிக்கறே இங்க வா” என்று அவன் அழைக்கவும் நகரத் தோன்றாமல் அங்கேயே நின்றிருந்தாள்.

“இந்தும்மா மாப்பிள்ளை கூப்பிடுறாங்கல்ல போ” என்று அகத்தியன் சொல்லவும் தான் நகர்ந்தாள்.

“எழில் அந்த பூங்கொத்தை மேடம் கையில கொடுங்க அவங்க தான் நம்ம சீப் கெஸ்ட்டை வரவேற்ப்பாங்க” என்று சொல்ல மாணிக்கவாசகமுமே ‘என்ன இது’ என்பது போலத்தான் பார்த்தார்.

இந்திரசேனாவுக்கும் அப்போது தான் புரிந்தது மாணிக்கவாசகத்திற்கு கூட அவன் அத்தகவலை தெரிவிக்கவில்லை என்று.

“சேனா என்னை எதுக்கு பார்த்திட்டு இருக்கே கொடு” என்று அவன் சொல்லவும் அவர் கையில் பூங்கொத்தை கொடுத்தாள்.

“பா…” என்று ஆரம்பித்தவர் சூழ்நிலை கருதியும் முக்கியமாய் அபராஜிதனை கருத்தில் கொண்டு பாப்பா என்ற அழைப்பை தவிர்த்து தன் மகளை பார்த்தார்.

“எனக்கும் தெரியாது” என்றாள் அவள் வாய்விட்டு.

அபராஜிதன் வேகமாய் மேடையேறி மைக்கை கையில் எடுத்தவன் “நம்ம சீப் கெஸ்ட் ரெண்டு பேரும் வந்திட்டாங்க. அவங்களை இந்த நேரத்துல இங்க வரவேற்கிறதுல எனக்கு ரொம்பவே பெருமை”

“என்னடா இவன் சீப் கெஸ்ட்ன்னு சொல்லிட்டு அவனோட பேமிலி மெம்பர்சை கூட்டிட்டு வந்திருக்கானேன்னு உங்களுக்கெல்லாம் தோணலாம். உங்க எண்ணம் தப்பேயில்லை”

“அவங்க என்னோட உறவினர்கள் தான். ஆனா அவங்க தான் இப்போ நம்மளோட சீப் கெஸ்ட். அரசு வழக்கறிஞராக பதவியேற்றிருக்கும் திரு. மாணிக்கவாசகம் அவர்களையும், விரைவில் நீதிபதியாகப் போகும் திருமதி. இந்திரசேனாவையும் நம் பள்ளி ஆண்டுவிழாவிற்கு வரவேற்பதில் மிகப் பெருமிதம் கொள்கிறேன்” என்று சொல்ல முன்வரிசையில் அமர்ந்திருந்த அகத்தியன், சாதனா, நாயகி மட்டுமல்லாது அனைவரும் பெருத்த கரவோசை எழுப்பினர்.

கட்டுப்படுத்த முயன்றும் முடியாமல் கண்களில் நீர் வழிந்துவிட தன் முன் கைக்குட்டை நீண்டிருக்க நிமிர்ந்து பார்க்காது அதை வாங்கி கண்களை துடைத்துக் கொண்டு திரும்பிக் கொடுத்தவளை இமைக்காது பார்த்தான் அபராஜிதன்.

கண்களால் தன் மனைவிக்கு ஆறுதல் கொடுத்தவன் மற்றவர்களுடன் சேர்ந்து விழாவை பார்க்க ஆரம்பித்திருந்தான்.

தலைமை ஏற்க வந்திருந்த மாணிக்கவாசகத்தை பேச வருமாறு அழைத்திட கூச்சமாக இருந்தது அவருக்கு. பேசுவது ஒன்றும் அவருக்கு புதிதில்லை, மணிக்கணக்காக மட்டுமில்லை, நாள் கணக்காக கூட பேசுவார்.

ஆனால் இது போன்ற பொது நிகழ்வு அவருக்கு புதிது. பேசும் வார்த்தையும் கவனத்துடன் கையாள வேண்டும் என்பதை மனதில் கொண்டு மேடையை நோக்கிச் சென்றார்.

கூடியிருந்த அனைவருக்கும் மரியாதை செலுத்திவிட்டு தன் பேச்சை கவனமாக தொடங்கினார் அவர். அனைவருமே அவரின் பேச்சை கவனித்தனர், முக்கியமாக மாணவச் செல்வங்கள்.

சில இடத்தில் சிரிக்க பேசியும், சில இடத்தில் யோசிக்க வைத்தும் அவர் பேசிய பேச்சு அனைவரையுமே கவரத்தான் செய்தது.

இறுதியில் அப்படியொரு பேச்சை அவர் ஆரம்பிப்பார் என்று அபராஜிதன் எதிர்பார்த்திருக்கவில்லை. அவனுக்கு எந்த வேலையும் இல்லாது அவர் பேசிய பேச்சு அவர் மீதான மதிப்பை இன்னமும் கூட்டியது அவனிடத்தில் என்றால் மிகையாகாது.

———————-

“எப்படி இதெல்லாம் நடந்துச்சு??” என்று வீட்டிற்கு வந்ததுமே அதுவரை பொறுத்திருந்ததே பெரிது என்பது போல் அபராஜிதனை தோண்டி துருவ ஆரம்பித்துவிட்டாள் அவன் மனைவி.

“சேனா இப்போ தான் வீட்டுக்குள்ள நுழையறோம். போய் ரெப்ரெஷ் பண்ணிட்டு பேசுவோம். எனக்கும் உன்கிட்ட பேச முக்கிய விஷயமிருக்கு” என்றவன் நேரே குளியலறை நோக்கி விரைந்திருந்தான் துவாலையுடன்.

குளிக்கும் போது அவன் யோசனை முழுக்க தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருந்த கத்தியில் இருந்த வெளிவந்தது தான்.

சில நாட்களுக்கு முன்

“சார் ஆனா நம்ம ஸ்கூலோட பேரு இப்போ கெட்டு போய்டுமே சார்” என்று பிரின்சிபால் சொல்லிக் கொண்டிருக்கும் போதே மற்ற ஆசிரியர்கள் அனைவரும் உள்ளே வந்திருந்தனர்.

சற்று முன்பு தான் அனைவரையும் வரவழைக்க சொல்லியிருந்தான். அங்கிருந்தோருக்கு அங்கு நடக்கும் விஷயம்பற்றி அவனே சுருங்கச் சொன்னான். 

“சார் நான் ரிசைன் பண்ணிக்கறேன் நான் இங்க வேலை பார்க்கறேன்னு தெரிஞ்சா எல்லாரும் என்னை ரொம்ப கேவலமா பார்ப்பாங்க” என்று ஆசிரியர் ஒருவர் சொல்ல அவனைத் தொடர்ந்து இன்னும் இருவருமே அதையே ஒப்புவித்தனர்.

“அது உங்க இஷ்டம் இந்த அகடமிக் நீங்க இங்க இருந்து தான் ஆகணும். அட்லீஸ்ட் புது டீச்சர்ஸ் வர்ற வரைக்கும்” என்றவன் “ஓகே நீங்க எல்லாரும் இப்போ கிளம்புங்க. நீங்க எல்லாம் பானிக் ஆகாம உங்க வேலையை பாருங்க. பசங்க இதுல எக்காரணத்தை கொண்டும் டிஸ்டர்ப் ஆகக்கூடாது”

“எல்லா பிரச்சனையும் தன்னால சரியாகும். தப்பு செஞ்சவன் தான் பயப்படணும், தப்பு பண்ணாதவங்க பயப்படத் தேவையில்லை. நான் இதை பேஸ் பண்ண ரெடி ஆகிட்டேன். நீங்க கிளம்புங்க” என்று அவர்களை அனுப்பிவிட்டிருந்தவன் சித்திரலேகாவின் வீட்டிற்கு ஆளனுப்பி அவர்களை வரச் சொல்லியிருந்தான்.

வந்தவர்கள் அவனைப் பார்த்து எகிறிக் கொண்டு வந்தனர். “எவன்யா அது பண்ணுற தப்பும் பண்ணிட்டு எங்களை ஸ்கூல்க்கு வந்து பார்க்கச் சொன்னவன். என்ன காசுக் கொடுத்து செட்டில் பண்ணிடலாம்ன்னு நினைச்சானா” என்று தரையிறங்கி பேசியவாறே உள்ளே நுழைந்திருந்தனர் சித்திரலேகாவின் பெற்றோர்.

“என்னடா பண்ணுறதும் பண்ணிட்டு எங்களை இங்க வந்து பார்க்க சொல்றே. நாங்க என்ன நீ வைச்ச வேலைக்காரங்களா” என்று தாம்தூம் என்று குதித்தனர். “உங்க பொண்ணு வயசென்ன??” என்றான் அபராஜிதன் நிதானமாய்.

“என்னய்யா கேள்வி கேட்குறே நீ?? அது பதினோராவது படிக்குற புள்ளைக்கு என்ன வயசாவுமோ அந்த வயசு தான் என் பொண்ணுக்கு”

“அப்போ பதினோறாம் வகுப்பை உங்க பொண்ணு பதினைஞ்சு வருஷமா படிச்சாலும் அதே வயசு தான் சொல்வீங்களா??” என்று நிறுத்தி நிதானமாய் கேட்டவன் எழுந்து சித்திரலேகாவின் தந்தையின் அருகே வந்தவன் ஓங்கி ஒரு அறைவிட்டான் அவரை.

Advertisement