Advertisement

36

ஆத்திசூடி – மனந்தடு மாறேல்

பொருள் – எந்த சூழ்நிலையிலும் மனக்கலக்கம் அடையாதே.

“என்ன தம்பி எப்படியிருக்கீங்க??” என்றவாறே அபராஜிதனின் அருகே வந்து நின்றார் விநாயகம் நக்கலான சிரிப்புடன்.

“உங்க புண்ணியத்துல ரொம்ப நல்லாயிருக்கேன்” என்றான் அவன்.

“அப்புறம் என்ன விஷயமா இந்தப்பக்கம் உங்க பொண்டாட்டியை பார்க்க வந்தீங்களா??”

“என் பொண்டாட்டியை கோர்ட்டுக்கு வந்து பார்க்க என்ன இருக்கு. அவளை வீட்டில தான் பார்க்கறேனே தினமும்”

“ஆனா நீ எனக்கு நன்றி சொல்லணும்”

‘எதுக்காகவோ??’ என்ற பார்வை பார்த்தான் அவன்.

“என்னால தானே நீ உன் வக்கீலம்மாவை பார்த்தே அதுக்கு தான்”

“கண்டிப்பா நன்றி சொல்லணும். ஆனா உங்களுக்கில்லை அவளுக்கு தான்” என்று அவன் சொல்லவும் முகம் சுருங்கியது அவருக்கு.

இருந்தும் விடாது “பெரிய பிரச்சனையோ??” என்றார் சும்மாயில்லாது.

“அதை தெரிஞ்சுகிட்டு நீங்க என்ன பண்ணப் போறீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா”

“இல்லைப்பா பொண்டாட்டியை துணைக்கு கூட்டிட்டு வராம தனியா வந்திருக்கியே அதான் என்னன்னு கேட்டேன்”

“என் பொண்டாட்டி வந்திருந்தா இன்னைக்கு நடக்கிற கதையே வேற. அவ வராததுனால தான் கண்ட நாய்களும் குறைச்சுட்டு இருக்கு” என்று சொல்லிவிட்டு நேருக்கு நேராய் அவர் கண்களை நோக்கியே சொன்னான். அதில் மேலும் அவரின் முகம் கருத்தது.

“நீ இந்த வாய்க்கு தான் அழியறே. இன்னும் அனுபவிப்பேடா நீ??” என்று சபித்தார்.

“நான் யாரையும் கெடுத்தது இல்லை. சோ நீங்க சொல்றது நடக்கறதுக்கு வாய்ப்பில்லைன்னு நினைக்கிறேன். ஆனா நீங்க சொன்னதெல்லாம் எனக்கு நடக்கப் போற மாதிரி தெரியலை. உங்களுக்கே நடக்கப் போற மாதிரி தெரியுது”

“நீ என்ன ஆகப் போறேன்னு பார்க்கத்தானே காத்திட்டு இருக்கேன்” என்று ஒரு மாதிரிக் குரலில் சொல்லிவிட்டு அவர் நகர “எங்க போறீங்க?? கொஞ்சம் நில்லுங்க” என்றான் அவன்.

“என்னடா??” என்றார் அவர் முற்றிலும் மரியாதைவிட்டு. விநாயகத்திற்கு அபராஜிதனின் மீது தீராத கோபமும் பழிவெறியும் இருந்தது.

அந்த பள்ளியில் தானே ராஜா தானே மந்திரியாக அவர் கோலோச்சிக் கொண்டிருந்த காலமது. கரிகாலன் தாளாளராய் இருந்த போது அவர் விநாயகத்தை முழுதாய் நம்பி பொறுப்பை ஒப்படைத்திருந்தார். 

அவரில்லாத நேரமாக இருந்தாலும் நாட்களாக இருந்தாலும் அவருக்கு பதிலாய் இருந்தது விநாயகமே. முதலில் சிறிய அளவில் அவர் செய்துக் கொண்டிருந்ததை நாளடைவில் பெரிதாக்கி கொண்டிருந்தார். 

அதாவது பள்ளியில் சேர்க்க பிள்ளைகளுக்கு இட ஒதுக்கீடு செய்ய கொஞ்சமாய் வாங்கிக் கொண்டிருந்த பணம் அவருக்கு பெரும் போதையை கொடுக்க அவரின் தேவையும் பெரிதாகியது, ஆசையும் பெரிதாகியது.

அவருக்கு தெரியும் கரிகாலனுக்கு பிறகு அவரின் மகன் பொறுப்பேற்கக் கூடும் என்று. அதுவரையிலும் தன்னால் முடிந்தவரை என்ன செய்ய முடியுமோ அதை செய்வது என்று தான் எண்ணியிருந்தார்.

அபராஜிதன் அதே பள்ளியில் சில மாதம் ஆசிரியராய் வேலைப் பார்த்திருந்தான். அவர்களின் அனைத்து பள்ளியிலும் வேலை செய்த அனுபவம் அவனுக்கு இருந்தது. அது அனைத்தும் கரிகாலனின் ஏற்பாடே, மகன் கீழிருந்து மேல் வரை அனைத்தும் கற்றுத் தேற வேண்டும் என்று தான் அப்படியொரு ஏற்பாடு செய்திருந்தார்.

அவன் விநாயகத்திற்கு கீழ் வேலை செய்த போது அப்படியொரு பணிவோடு தான் இருந்திருந்தான். அதுவே அவன் பள்ளியின் தாளாளராய் பொறுப்பேற்ற பின் அவனின் போக்கே அதிகாரமாய் இருக்க அங்கேயே அடிவாங்கினார் அவர்.

விநாயகத்திற்கு இன்னுமொரு ஆசையும் எதிர்பார்ப்பும் இருந்தது. அது கரிகாலன் அவர் மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் நம்பிக்கையும் வைத்திருந்ததால் அவர் வேலை பார்க்கும் பள்ளிக்கு அவரையே தாளாளராய் நியமிப்பார் என்று எண்ணியிருந்தார்.

அபராஜிதன் வந்த பிறகு அவரால் பெரிதாய் எதுவுமே செய்ய முடியவில்லை. அதற்குள் அவன் விஷயமறிந்து வேலையை விட்டே தூக்கிவிட்டது அவருக்கு அவமானமாய் போனது.

அவர் பெரிதும் நம்பியிருந்த கரிகாலன் கூட எதுவுமே சொல்லாதது எல்லாம் சேர்ந்து அவரின் கோபம் மொத்தமாய் அபராஜிதனின் மேலேயே திரும்பியது.

ஒரு எச்சரிக்கை கொடுத்து மன்னிப்பை வழங்கி விட்டிருக்கலாம் தானே. எத்தனை வருடம் அந்த பள்ளிக்காக உழைத்திருக்கிறேன், ஒரு நொடியில் கண்ணாடி குடுவையை தூக்கி கீழே போடுவது போல போட்டு நொறுக்கிவிட்டானே என்று எண்ணி எண்ணி வேதனை கொண்டவரின் ஆத்திரம் அபராஜிதனின் மீது.

அவனை ஏதாவது செய்ய வேண்டும் மீண்டும் அதே பள்ளியில் இறுமாப்புடன் சென்று அமர வேண்டும் என்ற பேராசை அவர் செயலை மேலும் கீழ்தரமாக்கியிருந்தது.

இதோ அவனை பழிவாங்கவென்று அவர் செய்த செயலால் தான் நீதிமன்றத்திற்கு வந்து நின்றிருக்கிறார் நடப்பதை வேடிக்கை பார்க்கவென.

“உங்களுக்கு ஒரு படம் காட்டட்டுமா சார்??” என்றான் அபராஜிதன் இருபுருவத்தையும் மேலுயர்த்தி.

‘அந்த பணம் வாங்குற வீடியோவை வைச்சுட்டு பேசுறானோ. இல்லையே அவன் அன்னைக்கே அதை டெலிட் பண்ணிட்டானே. போனை கூட உடைச்சு போட்டுட்டான்னு கேள்விபட்டேனே, இப்போ என்னவா இருக்கும்’ என்ற யோசனை சடுதியில் ஓட நிமிர்ந்து அவனை நோக்கினார்.

“நீ தப்பு பண்ணுறே அபி அது நல்லதுக்கில்லை வேணாம்” என்றார் அவர்.

“ஆமா சார் நான் உங்க விஷயத்துல ஒரு தப்பு பண்ணிட்டேன். அப்படி நான் செஞ்சிருக்கக் கூடாது உங்களை நான் வேலையைவிட்டு தூக்கினது ரொம்ப தப்பு தான்”

“இப்போவாச்சும் புரிஞ்சு நீ நல்லபடியா நடந்தா சரி தான். அது தான் உனக்கு நல்லதும் கூட”

“நான் சொல்ல வர்றதை நீங்க முழுசா கேட்கலை. சாரி சாரி நீ முழுசா கேட்கலை” என்று அபராஜிதன் அவரிடத்தில் மரியாதைவிட்டு பேசவும் அவரின் முகம் இருண்டது.

“என்னடா நினைச்சுட்டு இருக்கே??”

“உன்னையெல்லாம் வேலையைவிட்டு தூக்கி நான் பண்ண முட்டாள்த்தனத்துனால தான் நீயெல்லாம் இங்க நின்னு பேசிட்டு இருக்கே”

“உன்னோட தப்பை அன்னைக்கே ஊரறிய வெளிச்சம் போட்டு காட்டி உன்னை அப்போவே கதறவிட்டிருக்கணும். அதை நான் செய்யாம விட்டது தான் தப்பு”

“பல வருஷமா நம்ம ஸ்கூல்ல வேலை பார்த்தவராச்சே. அவரை மரியாதை குறைவா நடத்தக் கூடாதுன்னு நான் நினைச்சதுக்கு எனக்கு நீங்க நல்ல பாடம் கத்துக் கொடுத்திட்டீங்க”

“பேசாம அமைதியா என் வேலையை பார்த்திகிட்டு இருந்தவனை நீங்க சீண்டிவிட்டுடீங்க. இனிமே நடக்குறதுக்கு நான் பொறுப்பில்லை, மொத்த பொறுப்பும் நீங்க தான்”

“உன்னால என்னடா செய்ய முடியும். நான் அதுக்கு முன்ன உனக்கு வேட்டு வைச்சிருக்கேன் முதல்ல அதுல இருந்து உன்னால வெளிய வரமுடியுதான்னு பாரு. அப்புறம் என்னைப்பத்தி யோசிப்பே. என்னை யாருன்னு நினைச்சே என்னை அசிங்கப்படுத்தின உன்னை எப்படி அசிங்கப்படுத்தினேன்னு உனக்கு நல்லா புரிஞ்சிருக்குமே தம்பி” என்றார் அவர் ஆங்காரமாய்.

அவரை விடவும் கோபமும் ஆங்காரமுமாய் நின்றிருந்தவன் “அடுத்த அஞ்சாவது நிமிஷம் நான் கோர்ட்டுக்குள்ள போவேன். நான் போன பத்தாவது நிமிஷத்துல நீங்க என்னென்ன பண்ணீங்களோ அதையெல்லாம் நீங்களே உங்க வாயால ஒத்துக்கலைன்னு வைங்க”

“நான் என்ன பண்ணேன் நான் எதை ஒத்துக்கணும்”

“அதை இந்த வீடியோவை பார்த்ததுக்கு அப்புறம் நீங்களே முடிவு பண்ணுங்க. நடந்ததை உங்க வாயால சொல்றதா இல்லை அந்த சித்திரலேகா வாயால சொல்ல வைக்கிறதான்னு” என்றவன் அவரின் வாட்ஸ்அப் எண்ணுக்கு அந்த வீடியோவை அனுப்பிவிட்டு நீதிமன்றத்திற்குள் நுழைந்தான்.

அவன் அனுப்பிய வீடியோவை டவுன்லோட் செய்தவர் அதில் ஓடிய காட்சியை அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தார். வீடியோவுடன் அவன் அனுப்பிருந்த சில டாக்குமென்ட்ஸ் எல்லாம் பார்த்தவர் மொத்தமாய் சமைந்தார்.

———————

பள்ளி ஆண்டுவிழா

எல்லோரும் பரபரப்பாய் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். இங்குமங்கும் போவதும் வருவதுமாய் ஆளுக்கொரு பக்கம் அலைந்தனர்.

மேடையின் பின்புறம் மாணவ மாணவிகள் கலை நிகழ்ச்சிக்காய் ஒப்பனை ஒரு புறம், இறுதி ஒத்திகை மறுபுறமுமாய் இருந்தனர்.

ஆசிரியர்கள் சிலர் மேடையின் மீதும் மேடையின் கீழே நின்றுக் கொண்டு சிலரும் விழா ஏற்பாடுகளை கவனித்துக் கொண்டிருந்தனர்.

முக்கிய விருந்தினர்கள் வருகை என்பதால் அனைவருக்குமே பதட்டமிருந்தது. அபராஜிதன் முதல் நாளே சொல்லிவிட்டிருந்தான் அனைவரிடத்திலும் வருபவர் மிக முக்கியப்புள்ளி என்று.

ஆனால் யாரென்று மட்டும் அவன் சொல்லியிருக்கவில்லை. பெயர் கூட தெரியாத ஒருவரை வரவேற்க அவர்கள் அனைவரும் அங்கு தயாராய் இருந்தனர்.

“சார் நீங்க வரப்போறவரோட பெயரை கூட சொல்லலையே” என்றாள் ஒரு ஆசிரியை அவனிடத்தில்.

“அதை நாளைக்கு நான் வந்ததும் சொல்றேன். அப்போ நீங்க தெரிஞ்சுக்கலாம்” என்று அவன் முடித்துவிட அவனை மறுத்து யாரால் பேச முடியும் அமைதியாகினர் மற்றவர்கள்,

“இவரு நம்ம பெரிய சார் மாதிரி இல்லை ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா தான் இருக்காரு. ஆனாலும் செம்ம தைரியம் தான் இவருக்கு. இல்லைன்னா மலை போல பிரச்சனையை ஊதித்தள்ளி வெளிய வந்திருப்பாரா” என்று பேசிக் கொண்டனர்.

அபராஜிதன் சற்று முன்பு தான் பள்ளிக்கு வந்து சேர்ந்தான். கிளம்பும் போதே இந்திரசேனாவிடம் சொல்லித்தான் வந்திருந்தான் அவளை பள்ளிக்கு வருமாறு.

“நான் எதுக்கு அங்கெல்லாம்??”

“நீ யாரு??”

“யாரு??”

“ஸ்கூல் கரெஸ் வைப், நீ வராம அங்க எப்படி பங்க்ஷன் நடக்கும்”

“இத்தனை வருஷமா நான் வந்திட்டா இருந்தேன்”

“இத்தனை வருஷமா நான் கரெஸ் இல்லையே. அப்போ கரெஸ்ஸா இருந்தவரோட மனைவி உயிரோட இருந்திருந்தா அவங்க கண்டிப்பா வரமாட்டேன்னு சொல்லி இருப்பாங்களா என்ன. இந்த ஸ்கூல் ஆரம்பிக்க காரணமா இருந்தவங்க அதை பார்க்காமலே போய்ட்டாங்க” என்றான்.

அபராஜிதனின் வாடிய முகம் கண்டவள் “சரி நான் வர்றேன்” என்றாள் ஒருமனதாய்.

“ஆனா நீங்க தான் வந்து கூட்டிட்டு போகணும்”

“என்னால கண்டிப்பா வரமுடியாது சேனா ப்ளீஸ் நீ புரிஞ்சுக்கணும். முக்கியமான சீப் கெஸ்ட் வருவாங்க, அவங்களை வரவேற்க நான் அந்த நேரத்துல அங்க கண்டிப்பா இருக்கணும்” என்றான் அவன்.

‘அப்போ நான் எதுக்குடா மடையா. சீப் கெஸ்ட் வருவாங்களாம் இவரு அவங்களை வரவேற்கணுமாம். இதுல டயலாக் வேற கரெஸ் பொண்டாட்டி வரலைன்னா எப்படின்னு?? போ நான் வரமாட்டேன் போ’ என்று மனதிற்குள்ளாக சிணுங்கினாள் அவள்.

“கண்டிப்பா வந்திடுவேல்ல” என்றான் சற்று தள்ளி நின்றிருந்த தன் மனையாளாய் இழுத்து அணைத்தவாறே.

‘வரமாட்டேன்’ என்று சொல்லத் துடித்த நாவு அவன் கண்களை கண்டு “ஹ்ம்ம்” என்று அவனுக்கு சாதகமான பதிலை கொடுத்துவிட அவள் இதழ்களை தன்னிதழால் ஈரப்படுத்திவிட்டு அங்கிருத்து கிளம்பியிருந்தான் அவன்.

பள்ளி வளாகத்திற்கு கார் ஒன்று வந்து நிற்க வேகமாய் ஓடி வந்து வரவேற்றான் அபராஜிதன்… வந்தவர்…

Advertisement