Advertisement

35

ஆத்திசூடி – பீடு பெற நில்

பொருள் – பெருமையை அடையும் படியான நல்ல நிலையிலே இரு.

வாசலில் அழைப்பு மணி ஒலிக்க ‘இந்த நேரத்துல யாரா இருக்கும். அண்ணாவும் இந்துவும் அப்போவே கிளம்பி போயிட்டாங்களே. சாயங்காலம் தானே வருவாங்க’ என்ற யோசனை ஓட கதவை திறந்த அகல்யா எதிரில் நின்றிருந்தவனை கண்டதும் ஒன்றும் சொல்லாது கதவை திறந்துவிட்டாள்.

“உள்ள வாங்க” என்று அவள் சொன்ன பிறகு தான் அவன் உள்ளே வந்தான்.

நேற்று இரவு இருவருக்கும் அப்படியொரு சண்டை நடந்திருந்தது. திருமணமாகி இத்தனை நாட்களில் இருவருக்குள்ளும் சிறு சிறு உரசல்கள் அவ்வப்போது இருந்திருந்தது.

ஆனால் இவ்வளவு பெரியதாய் ஒரு நாளும் அவர்கள் சண்டையிட்டு கொண்டதில்லை. கோபத்தில் போனை அணைத்தும் வைத்துவிட்டிருந்தாள் அகல்யா.

காலையில் இப்படி வந்து நிற்பான் என்று அவள் நினைக்கவில்லை. “நேத்துல இருந்து எதுவுமே சாப்பிடலை பசிக்குது” என்று அவன் சொல்லவும் கண்கள் கலங்கிவிட “ஒரு அஞ்சு நிமிஷம் இருங்க தோசை ஊத்திட்டு வர்றேன்” என்று வேகமாய் சமையலறை புகுந்தாள்.

அடுப்பில் கல்லை வைத்து காய வைத்துக் கொண்டிருக்க பின்னாலேயே வந்திருந்தான் அகிலேஷ். “எனக்கு எதுவும் வேணாம்” என்று அவன் சொல்லவும் ஏன் என்ற பார்வை பார்த்தாள்.

“சாப்பிட பிடிக்கலை”

“சாப்பிடுங்க அப்புறம் பேசலாம்”

“இல்லை வேணாம்” என்று பிடிவாதமாய் அவன் சொல்ல தோசையை ஊற்றிவிட்டு அவன் புறம் திரும்பினாள்.

“அப்புறம் எதுக்கு என்கிட்ட பசிக்குதுன்னு சொன்னீங்க??”

“உன்கிட்ட தானே சொல்ல முடியும்”

“இப்போ நான் என்ன செய்யணும்??” என்றாள் பொறுமையை இழுத்து பிடித்த குரலில். அவனுடன் பேசிக் கொண்டிருந்தாலும் தோசையை ஊற்றுவதை நிறுத்தவில்லை.

“நானும் அதை கேட்டுட்டு போகலாம்ன்னு தான் வந்தேன். இன்னைக்கு நான் ஆபீஸ் போகலை, போன் பண்ணி லீவ் கூட இப்போ வரை சொல்லலை”

“நான் போன் பண்ணி சொல்லணுமா உங்க ஆபீஸ்க்கு” என்றாள் சுள்ளென்று.

“தேவையில்லை”

“அப்புறம் எதுக்கு சொல்றீங்க. என்னால தான் எல்லாம்ன்னு சொல்லிட்டு போகலாம்ன்னு வந்தீங்களா??”

“அகல்யா நீ இப்படி கிடையாது எதுக்கு இப்படி என்னை கஷ்டப்படுத்துற மாதிரி பேசறே”

“நான் இதெல்லாம் உன்கிட்ட சொன்னது உன்னை குற்றம் சொல்றதுக்காக இல்லை. நீ இல்லாம என்னால எதுவும் செய்ய முடியலை. நேத்து நைட் போன் ஆப் பண்ணி வைச்சுட்ட, உன் கூட பேசக்கூட முடியலை”

“நைட்டெல்லாம் பைத்தியக்காரன் மாதிரி தூங்காம இருந்தேன். எத்தனை தரம் உனக்கு போன் பண்ணி பார்த்திட்டே இருந்தேன் தெரியுமா”

“எனக்கு இப்போ என்ன செய்யன்னு தெரியலை. அம்மாவை என்னால விட முடியாது, நீ இல்லாம என்னால இருக்க முடியாது. இப்போ நான் என்ன பண்ணணும்ன்னு நீயே சொல்லு” என்று அவன் சொல்லவும் ஒரு மாதிரியாகிப் போனது அவளுக்கு.

ஒன்றும் பதில் சொல்லவில்லை. தோசையை எடுத்து தட்டில் வைத்து சாம்பாரும் சட்டினியும் ஊற்றி அவன் முன் நீட்டினாள். அதை வாங்காது அவளையே பார்த்திருந்தான்.

“முதல்ல சாப்பிடுங்க அப்புறம் பேசலாம்” என்றாள் அவன் முகம் பார்த்து.

அதுவே அவனுக்குரிய சம்மதத்தை கொடுத்ததாக உணர்ந்தான். இருந்தாலும் தட்டை இன்னமும் வாங்காது பார்த்திருந்தான் தன் மனைவியை.

“நான் என்ன பண்ணணும்??”

தான் பதில் சொல்லாது அவன் உணவருந்தப் போவதில்லை என்று நன்றாகவே புரிந்தது. தன்னை இக்கட்டில் நிறுத்துக்கிறானோ என்ற எண்ணம் எழாமல் இல்லை.

அதற்குமேல் அவளை எதுவும் கேட்காது தட்டை வாங்கியவன் வேகமாய் உணவருந்த அவன் உண்மையாகவே பசியாக இருக்கிறான் என்று புரிய மனம் சங்கடப்பட்டது.

சாப்பிட்டு முடித்தவன் போனை எடுத்துக்கொண்டு வெளியில் சென்றவன் அவன் அலுவலகத்துக்கு அழைத்து விடுப்பு சொல்லிவிட்டு வர அகல்யா சோபாவில் அமர்ந்திருந்தாள் யோசனையுடன்.

அவள் அருகில் சென்று அவன் அமரவும் “என்ன??” என்று அவன் ஆரம்பிக்கவுமே தன் கரம் கொண்டு அவன் வாயை மூடினாள்.

“இந்துவும் அண்ணாவும் வரட்டும் சொல்லிட்டு கிளம்பலாம்” என்று அவள் சொல்லவும் தான் அவன் முகமே மலர்ந்தது. அப்படியொரு மலர்ச்சியை அவனிடத்தில் இப்போது தான் காண்கிறாள்.

“அவங்க வர்றதுக்கு லேட் ஆகும்ல. விளக்கு வைச்சுட்டா உன்னை அனுப்ப மாட்டங்கல்ல” என்று அவன் சொல்லவும் சிரிப்பு வந்தது அவளுக்கு.

“ரெண்டு பேருமே சீக்கிரம் வந்திடுவாங்க ரொம்ப கவலைப்பட வேணாம்”

“தேங்க்ஸ்” என்றான் உள்ளார்ந்து.

“உங்களுக்காக தான் வர சம்மதிக்கறேன்”

“தெரியும்”

“அத்தை எதுவும் பேசினா இதுநாள் வரைக்கும் இருந்த மாதிரி நான் இருக்க மாட்டேன்”

“ஹ்ம்ம்”

“நானும் பதிலுக்கு பேசிடுவேன், அவங்க பேசுறது பொறுத்துக்க முடியாம போற பட்சத்தில தான் இதெல்லாம் நடக்கும். அத்தை என்னை பேசலாம் ஏன்னா நான் அவங்க மருமக ஆனா எங்க அண்ணனை இந்துவை பேச அவங்களுக்கு எந்த உரிமையும் இல்லை”

“இதை நீ எனக்கு சொல்ல வேண்டியதில்லை அகல். இனிமே தப்பா எதுவும் நடக்காது, நான் பார்த்துக்கறேன்”

இந்திரசேனா வரவும் இருவரும் அவளிடம் விடைபெற்றுக் கொண்டு வீட்டிற்கு கிளம்பியிருந்தனர். அபராஜிதனிடம் போன் செய்து சொல்லிய பிறகே கிளம்பினர்.

கிளம்புமுன் இந்திரசேனா அகல்யாவிடம் கேட்டாள். “அகல் நான் உன்னை கூட்டிட்டு வந்து விட வரட்டுமா”

“தேவையில்லை இந்து நான் அவர் கூட போய்டுவேன்”

“இல்லை உன்னை கூட்டிட்டு வந்தது நானு”

“நீ கூட்டிட்டு வந்தா மட்டும் நான் வந்திடுவேனா, நானும் சம்மதிச்சு தானே வந்தேன். நீ உன்னைப்போட்டு குழப்பிக்காதே. நடந்ததுல உன் தப்பு எதுவுமே இல்லை. நீயும் அண்ணாவும் எனக்காக சண்டை போடாம ஒழுங்கா ஒத்துமையா இருங்க சரியா”

“சண்டை போட்டாலும் சமாதானம் ஆகிடணும் எங்களை மாதிரி” என்று சொல்லும் போது தன் கணவன் குறித்த பெருமிதம் அதில் தெரிந்தது. தனக்காக அவன் இறங்கி வந்தது அவள் மனதை தொட்டிருந்தது.

“சந்தோசமா போயிட்டுவா உங்க அண்ணனை பத்தியும் என்னைப் பத்தியும் கவலைப்படாம நீ போயிட்டு வா. அண்ணா பார்த்துக்கோங்க” என்றாள் அகிலேஷிடமும்.

“இந்தும்மா எங்களால நீங்க சண்டை போட்டீங்களா??”

“என்னங்க அண்ணன் இந்துவை…” என்று அகல்யா தன் கணவனிடம் சொல்ல வந்ததை தடுத்தாள் இந்திரசேனா.

“அதெல்லாம் ஒண்ணுமில்லை நாங்க சமாதானம் ஆகிட்டோம்” என்று ஏதேதோ சொல்லி சமாளித்து அவர்களை கிளம்பி விட்டிருந்தாள்.

—————

நீதிமன்றத்தில் இருந்து கிளம்பியிருந்த அபராஜிதன் மனதிற்குள் ஏதோ முடிவெடுத்தவனாய் அங்கிருந்து கிளம்பியிருந்தான். 

பள்ளிக்கு வந்ததும் முதல் வேலையாய் பிரின்சிபாலை முதலில் சந்தித்தவன் “சார் நீங்க டீச்சர்ஸ் எல்லாருக்கும் சர்க்குலர் அனுப்புங்க. ஸ்கூல் முடிஞ்சதும் பத்து நிமிஷம் மீட்டிங் இருக்குன்னு சொல்லி மீட்டிங் ஹால்ல அசெம்பிள் ஆகச் சொல்லுங்க” என்றான்.

“என்ன விஷயம் சார்” என்றார் அவர்.

“உங்களுக்கு நடந்த விஷயம் நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை”

“தெரியும் சார் ஆனா…”

“மத்தவங்களுக்கு பதில் சொல்றதுக்கு முன்னாடி உங்ககிட்ட கேட்கறேன். நீங்க என்ன நினைக்கறீங்க??”

“சார் உங்களைப்பத்தி தப்பா நினைக்க எதுவுமில்லை. ஆனா எங்க தப்பு நடந்திருக்குன்னு எனக்கும் தெரியலை. ஒரே நாள்ல இப்படி நடக்க எல்லாம் வாய்ப்பில்லை சார்” என்று மட்டும் அவர் சொன்னார்.

“ஓகே உங்க அசெம்ப்ஷன் எல்லாம் கிட்டத்தட்ட சரி தான். மத்த டீச்சர்ஸ் பார்க்கறதுக்கு முன்னாடி மீனா மிஸ்ஸை வரச்சொல்லுங்க. அவங்க தானே சித்திரலேகாவோட கிளாஸ் மிஸ்”

“ஆமா சார்”

“நீங்களும் அப்போ என் கூட இருங்க”

“ஷ்யூர் சார்” என்றவர் சர்க்குலரை தயார் செய்து அனைவருக்கும் அனுப்பினார்.

சற்று நேரத்தில் அபராஜிதனின் அறைக்கதவை மீனா மிஸ் தட்டிவிட்டு உள்ளே வரவும் பிரின்சிபாலும் அவருடன் வந்தார். “உட்காருங்க” என்று சொல்லு இருக்கையை காட்டினான் இருவருக்கும்.

அபராஜிதன் நேரடியாக விஷயத்திற்கு வந்துவிட்டான் “அன்னைக்கு நீங்க அந்த பொண்ணு சித்திரலேகா பத்தி ஏதோ சொல்ல வந்தீங்களே என்ன விஷயம் மிஸ்”

‘ஹப்பா இப்போவாச்சும் கேக்க தோணுச்சே இவருக்கு’ என்று எண்ணிய அந்த ஆசிரியை “சார் அந்த பொண்ணுக்கிட்ட ஏதோ தப்பிருக்கு. அவ எல்லாமே வேணும்ன்னே செஞ்ச மாதிரி தான் எனக்கு தோணுச்சு”

“அவளோட ஆக்டிவிட்டிஸ் எல்லாமே சொல்லும்படியா இல்லை. இன்பாக்ட் அவ ஒரு நாள் கூட கிளாஸ் ஒழுங்கா கவனிச்சதில்லை. கிரவுண்ட் பக்கம் தான் அவ பார்வை இருக்கும். என்ன ஹோம் வொர்க் கொடுத்தாலும் எதையுமே அவ செஞ்சதில்லை”

“ஒண்ணு ரெண்டு டைம் நான் கிளாஸ்ல எழுதியே ஆகணும்ன்னு சொன்னப்பிறகு தான் செய்வா. அன்னைக்கும் அப்படித்தான் ரொம்ப அடமென்ட்டா அவ நடந்துக்கிட்டா அதுக்கு பிறகு தான் அவளை வெளியவே போகச் சொன்னேன்”

“நல்லா படிக்கலைன்னா சொல்லித்தரலாம் சார். படிக்கவே மாட்டேன்னு அடம் பிடிக்கறவங்களுக்கு எப்படி சார் சொல்லி புரிய வைக்குறது. அன்னை நான் அதைத்தான் சொல்ல வந்தேன். நீங்க…” என்று ஆரம்பித்துவிட்டு பாதிலேயே நிறுத்திக் கொண்டாள்.

பள்ளியின் கரெஸ்பான்டன்ட்டை கை நீட்டி குற்றம் சொல்வது போலாகும் என்று எண்ணியே மேற்கொண்டு பேசாது அமைதியாய் நின்றார் அந்த ஆசிரியை.

“சாரி மிஸ் அன்னைக்கு நீங்க சொன்னதை நான் கேட்டிருக்கணும். என்னோட தப்பு தான் இனிமே இப்படி நடக்காது” என்று அபராஜிதன் சொல்லவும் ஆவென்று பார்த்தார் அந்த ஆசிரியை.

“சார் நீங்க என்கிட்ட எதுக்கு சாரி கேட்கறீங்க”

“தப்பு செஞ்சா மன்னிப்பு கேட்கணும். தப்பை ஒத்துக்கணும், அது தான் நான் கத்துக்கிட்ட பாடம்” என்ற சொன்னவனின் எண்ணத்தில் இந்திரசேனா வந்திருந்தாள்.

“சார்…”

“இப்போ என்ன இஸ்யூ போயிட்டு இருக்குன்னு உங்களுக்கு தெரியும் தானே…”

“தெரியும் சார் கேள்விப்பட்டேன்”

“ஸ்கூல்ல??”

“யாரும் நம்பலை சார்… ஒண்ணு ரெண்டு பேரு இருக்கலாம்ன்னு நினைக்கறாங்க… இங்க இருக்க அத்தனை லேடிஸ் டீச்சர் சார்பா சொல்றேன் சார் எங்க யாருக்கும் உங்க மேல அப்படியொரு எண்ணம் வரலை. நாங்க உங்களை நம்பறோம்” என்று உறுதியான குரலில் சொன்னார் அவர்.

“நன்றி மேடம் உங்க எல்லாரோட நம்பிக்கையும் நான் கண்டிப்பா காப்பாத்துவேன்”

“ஓகே நீங்க கிளம்புங்க. மீட்டிங்ல உங்க எல்லாரையும் சந்திக்கறேன்” என்று சொல்லி அவரை அனுப்பியவன் மேற்கொண்டு நடக்க வேண்டியதைபற்றி பிரின்சிபாலிடம் பேசிக் கொண்டிருந்தான்.

———————

மாலை நேரமாகவே வீட்டிற்கு வந்துவிட்டிருந்தான் அபராஜிதன். இந்திரசேனா உள்ளறையில் ஏதோ உருட்டிக் கொண்டிருந்த சத்தம் கேட்டது.

குளித்து வேறு உடைக்கு மாறியவன் சத்தமின்றி அவளருகே வந்து நின்றான். அவன் வரவை உணர்ந்தவள் போல் திரும்பி அவனைப் பார்த்தாள். “ஏதாச்சும் வேணுமா” என்று.

“ஒரு டீ கிடைக்குமா??”

“கொண்டு வர்றேன்” என்றவள் “என்னாச்சு தலை வலிக்குதா??” என்றாள் அவனின் சோர்ந்த முகத்தைப் பார்த்து.

அவனுக்கு தெரியும் அவளுக்கு எல்லாமும் தெரியும் என்று. மாணிக்கவாசகத்தை அவன் நன்கறிவான். மகளிடம் அவர் கண்டிப்பாக எதையும் சொல்லாது இருக்க மாட்டார் என்று அறிந்திருந்தான்.

தன் மனைவி அதைப்பற்றி ஒரு வார்த்தை கூட கேட்காது சாதாரணமாய் இருப்பது கண்டு நெகிழ்ச்சியாய் உணர்ந்தான். இப்போதும் கூட அவனின் முகம் பார்த்து அவனுக்கு உடல் நல குறைவோ என்று அவள் அக்கறையாய் விசாரித்தது அவனுக்குள் உவப்பாய் இருந்தது.

“என்னாச்சுங்க??” என்றாள் மீண்டும் அழுத்தி.

“ஒண்ணுமில்லை நான் நல்லா இருக்கேன்”

“ஸ்கூல்ல வேலை அதிகமா. ஆன்னுவல் டேக்கு எல்லாரையும் அழைச்சுட்டீங்களா??”

“இன்னும் எல்லாம் கிட்டத்தட்ட முடிஞ்சது. முக்கியமான ரெண்டு சீப் கெஸ்ட் அழைக்க வேண்டியது தான் பாக்கி. அவங்களை எப்படி கூப்பிடப் போறேன்னு தான் தெரியலை”

“அதையே யோசிச்சு உடம்பை கெடுத்துக்காதீங்க. வேற யார்கிட்டயாச்சும் அந்த பொறுப்பை கொடுத்திட்டு நீங்க ரெஸ்ட் எடுங்க”

“நோ நோ அந்த சீப் கெஸ்ட் அழைக்க நானே தான் நேர்ல போகணும். அவங்க கால்ல விழுந்தாச்சும் அவங்களை கூட்டிட்டு வரணும்” என்றான் ஏதோ யோசனையோடு.

“கால்ல விழுந்து கூட்டிட்டு வர்ற அளவுக்கு பெரிய ஆளுங்களா அவங்க”

“நிச்சயமா”

“ஹ்ம்ம் சரி நீங்க போய் வெளிய உட்காருங்க நான் டிய போட்டு கொண்டு வர்றேன்” என்றுவிட்டு அவள் திரும்பி வேலை பார்த்துக் கொண்டிருந்தாள். அபராஜிதன் அவ்விடம் விட்டு அசையாதவனாய் அங்கேயே நின்றிருந்தான்.

அவன் சென்றிருப்பான் என்று அவள் எண்ணியிருக்க அவனோ அவளருகே நெருங்கி வந்திருந்தவன் “சேனா” என்று மெல்ல அழைக்க திடுக்கிட்டு திரும்பினாள்.

அவள் என்னவென்று கேட்கும் முன்னேயே அவளை இறுக்கி அணைத்திருக்க ‘நீ மட்டும் தான் அணைப்பியா நானும் அணைப்பேன்’ என்பது போல் பொங்கிய பால் வழிந்து நெருப்பை அணைத்திருந்தது.

“பால்…” என்ற அவள் தீனமான குரலில் “அடுப்பையும் அணைச்சுட்டேன்” என்று இருபொருள்பட கூறியவனின் கரம் தன் மனைவியை இன்னமும் அதிகமாய் நெருக்கியது.

Advertisement