Advertisement

34

ஆத்திசூடி – நைவினை நணுகேல்

பொருள் – பிறர் வருந்தத் தரும் தீவினைகளைச் செய்யாதே

நீதிமன்ற வளாகம்

அபராஜிதனால் நடந்து முடிந்ததை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அப்பெண் சித்திரலேகாவை அவன் சாதாரணமாய் எடைப் போட்டுவிட்டான்.

அன்று அவள் அவனை தவறாக பேசிய அன்று கூட அவள் ஏதோ மனரீதியாக பாதிக்கப் பட்டிருக்கிறாளோ அவள் வீட்டினரை அழைத்து பேசலாம் என்ற முடிவோடு தான் அன்று அங்கிருந்து கிளம்பியிருந்தான்.

அவன் அழைப்பதற்கு முன்னதாக அவர்களே அவனைத் தேடி வந்து எச்சரிக்கை செய்ய அப்போதும் கூட வேறு யாரோ செய்ததை, தான் என்று அவர்கள் தவறாக நினைத்து பேசுகிறார்களோ என்ற எண்ணம் தான் ஓடியது அவனுக்கு.

நடப்பதை அவனாலேயே முழுதாய் நம்ப முடியாததால் இந்திரசேனாவிடமும் பகிரலாமா வேண்டாமா என்ற யோசனையில் எதையுமே சொல்லாது விட்டான். அனைத்திற்கும் மேலாக அவன் எப்போதும் பிடித்து தொங்கிக் கொண்டிருக்கும் அந்த வேதாளம் ஈகோவையும் அவனால் விட முடியவில்லை.

விநாயகத்தை சித்திரலேகாவுடன் சேர்ந்து பார்க்கவும் எழுந்த ஆத்திரத்தை அவனால் கட்டுப்படுத்தவே முடியவில்லை. அவர்களை நோக்கி அவன் நடக்க ஆரம்பிக்க அவனை நோக்கி எதிரில் வந்துக் கொண்டிருந்தார் மாணிக்கவாசகம்.

‘இவர் எதுக்கு இங்க வர்றாரு’ என்ற சலிப்பு எழுந்தது. முகம் தன்னைப்போல எரிச்சலாகியது. இருக்கிற பிரச்சனையில் இவர் வேறு என்று யோசனை தான் அவனுக்கு.

வந்தவர் அவனிடத்தில் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அவனிடம் எதையோ நீட்டினார், அதை வாங்காது என்னவென்பது போல பார்த்தான் அவன்.

அவனுக்கு மாமனார் ஆகியிற்றே அவனை விடவும் வீம்பு அவருக்கு இருக்காதா என்ன. இதை வாங்கி பார் எனும் பதில் பார்வையை அழுத்தமாய் அவனை நோக்கி வீச எப்போதும் அவர் பார்க்கும் பார்வையல்ல அது என்று உணர்ந்தவனின் கரம் தன்னைப்போல அவர் கையில் இருந்ததை வாங்கிக் கொண்டது.

“என்ன இது??” என்று கேட்டிருந்தான்.

“படிங்க புரியும்” என்றுவிட்டு அங்கிருந்து நகர்ந்துவிட்டார் அவர்.

‘இவர்க்கு வேற வேலையே இல்லையே என்னையவே பின் தொடர்ந்திட்டு இருக்காரு’ என்று நினைத்துக் கொண்டே வேண்டாவெறுப்பாய் அவர் கொடுத்த கோப்பை திறந்து பார்த்தவன் சுற்றுப்புறம் மறந்தவனாய் அதையே மீண்டும் மீண்டும் திருப்பிப் பார்த்துக் கொண்டிருந்தான்.

——————-

“மே ஐ கமின் சார்” என்று வேண்டுமென்றே கேட்டுக் கொண்டே வந்தவளை நிமிர்ந்து பார்த்தார் மாணிக்கவாசகம்.

“வரவேணாம்ன்னு சொன்னா போயிடுவியா??”

“நீங்க வரச்சொன்னாதா அந்த கே7 சொன்னதெல்லாம் டூப்பா… அவனை…” என்றவளின் பார்வை வேண்டுமென்றே அங்குமிங்கும் அவனை தேடுவது போல் பாவனை செய்தது.

“போதும் போதும் வந்து உட்காரு”

“என்ன விஷயம்??”

“சாப்பிட்டியா??” என்றார் சுற்றுப்புறத்தை ஒரு பார்வை பார்த்தவாறே. அவர் அருகே இன்னும் சில வழக்கறிஞர்கள் அமர்ந்திருந்தனர் அவரவர்கள் இருப்பிடத்தில்.

“உங்களுக்கு என்கிட்ட கேட்க வேற எதுவுமில்லையா, எப்போ பார்த்தாலும் சாப்பிட்டியான்னே கேட்கறீங்க??”

“உன்கிட்ட அதைத்தானே நான் கேட்க முடியும்” என்று சிரித்தவரை முறைத்தாள் மகள்.

“சரி நான் கேட்டதுக்கு நீ இன்னும் பதில் சொல்லவே இல்லை”

“அதெல்லாம் அப்போவே ஆச்சு”

“எனக்கு உன்கிட்ட கொஞ்சம் பேசணுமே”

“அதுக்கு தானே வரச்சொன்னீங்க என்னன்னு சொல்லுங்க”

அவர் யோசித்துக் கொண்டிருக்க “உங்களுக்கு என்ன வேணும் இப்போ வெளிய போய் பேசணுமா. கிளம்புங்க போவோம், இந்நேரம் நம்ம சலீம் பாய் கடையில சூடா ஆனியன் சமோசா போட்டிருப்பான். மணக்க மணக்க இஞ்சி, ஏலக்காய் டீயோட அதை டேஸ்ட் பண்ணிட்டு வருவோம் வாங்க” என்று அவள் அனுபவித்து சொன்ன தினுசில் அவருக்கு லேசாய் சிரிப்பு எட்டிப் பார்த்தது.

“எப்பவும் இப்படியே இரு பாப்பா” என்று சொல்லிக் கொண்டே அவளுடன் கிளம்பியிருந்தார் அவர்.

“எனக்கு நாளைக்கு கவிதா கேஸ் இருக்கு போயிட்டு வந்து அந்த வேலையை வேற பார்க்கணும்”

“அதை கேசவன் பார்த்துப்பான் நீ என்னோட வா”

“அப்படி என்ன முக்கியமான விஷயம் சித்தா??” என்றாள்.

“போயிட்டே பேசலாம்” என்றவர்கள் வெளியே வந்திருந்தனர்.

“என் வண்டியில தான் வரணும்” என்றாள் முதல் ஆளாய் தன் வண்டியை நோக்கி சென்றவள்.

“சரி சரி வர்றேன் போதுமா”

நான்கு தெரு தள்ளியிருந்த அந்த சலீம் பாய் கடையில்  நுழைந்தவர்கள் தங்களுக்கு தேவையானதை சொல்லிவிட்டு அமர்ந்திருந்தனர்.

“பாப்பா வீட்டில ஒண்ணும் பிரச்சனையில்லையே??” என்று ஆரம்பித்திருந்தார் மாணிக்கவாசகம்.

“பிரச்சனையா??” என்றாள் ஒற்றைப் புருவம் உயர்த்தி.

“ஒண்ணுமில்லை நீ டல்லா இருக்கியே அதான் கேட்டேன்”

“உங்ககிட்ட ஏற்கனவே சொல்லிட்டேன் என்னை விசாரிக்கிறேன்னு சொல்லி கஷ்டப்படுத்தாதீங்கன்னு” என்று கண்டிப்பாய் அவள் சொல்ல அமைதியானார் மாணிக்கவாசகம்.

அபராஜிதன் நடந்ததை அவளிடம் சொல்லியிருப்பான் என்று அவருக்கு தோன்றவில்லை. தெரிந்தும் ஒன்றும் சொல்லாமல், தான் இருந்துவிட்டதாக மகள் நினைக்கக்கூடாதே என்று எண்ணியவர் எப்படி ஆரம்பிப்பது என்று யோசித்து ஒருவாறாய் தானறிந்த வகையில் நடந்த பிரச்சனைகளை அவளிடம் சொல்லி முடித்திருக்க கடைக்காரன் அவர்களுக்கு கொண்டு வந்து வைத்திருந்ததை அவள் உண்டு முடித்திருந்தாள்.

“பாப்பா நான் இவ்வளவு சொல்லி இருக்கேன் நீ பேசாம அமைதியா இருக்கே. உனக்கு அபராஜிதன் மேல நம்பிக்கை…” என்று முடிக்கும் முன்னே அவள் ஆரம்பித்திருந்தாள்.

“அதுக்கும் நான் பேசாம இருக்கறதுக்கும் என்ன சம்மந்தம்”

“இவ்வளவு நடந்திருக்கு நீ அமைதியா இருக்கே. உனக்கு எதுவும் தோணலையா??”

“எனக்கு என்ன தோணனும் சித்தா??”

“உனக்கு கோபம் வரலையா??”

“யார் மேல அவர் மேலயா??”

“அந்த விநாயகத்து மேலயும் தான்”

“அந்தாளைப் பத்தி நான் ஏற்கனவே அவர்கிட்ட எச்சரிக்கை பண்ணிட்டேன். நம்பாதது அவரோட தப்பு இதுல நான் என்ன செய்ய முடியும். இதை ஆரம்பிச்சு வைச்சது அவர் தான், அவரே அதை முடிச்சா தான் நல்லது. நான் இதுல நடுவுல புகுந்து எதுவும் செய்ய விரும்பலை சித்தா”

“அபராஜிதனை நீ சந்தேகப்படுறியா??”

“சித்தா என்னைப் பார்த்து எப்படி நீங்க இப்படி கேட்கலாம். எனக்கும் அவருக்கும் ஆயிரம் மனவருத்தங்கள், கருத்து வேறுபாடுகள் இருந்திருக்கு, இப்பவும் இருக்கு. அதுக்காக அவரை நான் சந்தேகப்படுவேனா என்ன”

“அந்த பொண்ணு மட்டும் என் கையில கிடைச்சா அவ கைமா தான்… என்கிட்ட அவர் ஒரு நாள் மாட்டுவா அன்னைக்கு இருக்கு அவளுக்கு கச்சேரி”

“இப்போ சொன்னதை எதுக்கு இன்னொரு நாள் செய்யணும் இப்போவே செய் பாப்பா”

“முடியாது சித்தா, இந்த பிரச்சனையை விட்டு அவர் நிச்சயம் வெளிய வந்திடுவார்ன்னு எனக்கு தெரியும். அவரால முடியும், ஆனா அதுக்கு அவர் எந்த வழிய தேர்ந்துடுக்கப் போறார்ன்னு தெரிஞ்சுக்க நான் ரொம்ப ஆவலா இருக்கேன்”

“பாப்பா பிடிவாதம் பிடிக்காத பாப்பா, பிரச்சனை வேற விதமா போகுது. அந்த விநாயகம் நம்ம மாப்பிள்ளையை பழிவாங்க எப்படி இறங்கி இருக்கான் பாரு. யாரா இருந்தாலும் லேடிஸ் பக்கம் தான் யோசிப்பாங்க”

“நம்ம குடும்பத்துக்கு அசிங்கம் வந்திடும் பாப்பா. அவர் அசிங்கப்பட்டா உனக்கு பரவாயில்லையா” என்றார் மகளின் தந்தையாய் அவளின் வாழ்க்கை குறித்த கவலையில்.

“அந்த விநாயகத்தை அப்போவே கம்பிளைன்ட் பண்ணி உள்ள தள்ளியிருந்தா இப்போ இதெல்லாம் நடந்திருக்காது தானே. நான் படிச்சு படிச்சு சொன்னேன், புரிஞ்சுக்காம நடந்ததுக்கு அனுபவிக்க வேண்டியது தான்”

“அவர் யாரோ போல பேசுறியே பாப்பா”

“யாரோவா இருந்திருந்தா நான் ஏன் சித்தா இதெல்லாம் யோசிக்கப் போறேன்”

“அப்புறம் ஏன் பாப்பா??”

“அவரோட சேர்ந்து நானும் அனுபவிக்க தயாரா தான் இருக்கேன் சித்தா” என்று அசராது பதில் கொடுத்தவளிடம் மேற்கொண்டு எந்த பேச்சு வார்த்தையும் நடத்த முடியவில்லை அவரால்.

காலையில் தான் மாணிக்கவாசகம் விநாயகத்தை பற்றிய தகவல்களை ஒன்று திரட்டி எக்மோர் நீதிமன்றத்திற்கு வந்திருந்த அபராஜிதனிடம் கொடுத்துவிட்டு வந்திருந்தார். 

இருந்தாலும் அடுத்து என்னாகுமோ என்ற கவலை அவருக்கு இருக்கவே செய்தது. தன்னைத்தான் அருகே அண்டவிடவில்லை. மகளை அப்படி செய்ய முடியாதே என்ற எண்ணத்தில் தான் இந்திரசேனாவிடம் நடந்ததை சொல்லியிருந்தார். இதோ அவளும் பிடி கொடுக்காது பேசவும் என்னவோ போலானது அவருக்கு.

மாணிக்கவாசகத்தின் தொய்ந்த முகத்தை பார்த்தவளுக்கும் மனம் வலித்தது. தனக்காய் தானே தன்னால் தானே இவர்கள் இவ்வளவு கவலைக்கொள்ள வேண்டியதாகிப் போனது என்று அவளுக்கும் தோன்றாமல் இல்லை.

“சித்தா” என்று அவள் அழைக்கவும் நிமிர்ந்து மகளைப் பார்த்தார்.

“நான் இந்த பிரச்சனையில தலையிடலை சித்தா. நான் அவரை காப்பாத்தினேன்னு இருக்க வேணாம் சித்தா. சும்மாவே என்கிட்ட ஈகோ பார்க்கற மனுஷன், அவருக்கா என்கிட்ட இந்த விஷயம் சொல்லி நீ ஹெல்ப் பண்ணுன்னு கேட்டா நான் கண்டிப்பா செய்வேன் சித்தா”

“பாப்பா என்ன வாழ்க்கை நீங்க வாழ்ந்திட்டு இருக்கீங்கன்னு உங்களுக்கு புரியுதா. அவருக்கு ஒண்ணுன்னா நீயும் உனக்கு ஒண்ணுன்னா அவரும் ஓடி வந்து எதுவும் செய்ய மாட்டீங்களா”

“செய்யத்தான் சித்தா ஆசை. நீங்க சொல்வீங்களே உங்க பாட்டியோட ஒரு கண்ணசைவில தாத்தா அவங்ககிட்ட சம்மதம் வாங்குவாங்கன்னு அது போல ஒரு வாழ்க்கை வாழ எனக்கும் ஆசை தான். அதுக்கு நான் மட்டும் புரிஞ்சுக்கிட்டு என்ன செய்ய”

“நான் தப்பு பண்ணிட்டேன் பாப்பா” என்றவர் முற்றிலும் உடைந்து பேச ‘தான் அதிகமாய் உளறிவிட்டோம்’ என்று புரிந்தது இந்திரசேனாவிற்கு.

“சித்தா” என்றாள் அழுத்தமாய்.

“மாப்பிள்ளை குடிப்பாரா??” என்று அவர் தொடர்ந்து அடுத்த கேள்வியை முன் வைக்கவும் சித்தா என்ற அவளின் அழைப்பில் சுரத்தே இல்லாது மெலிதாய் ஒலித்தது.

“தெரியும் பாப்பா நான் இதை எதிர்பார்க்கலை. அவர் அப்படி செய்வார்ன்னு ஒருத்தர் கூட சொல்லலை, எல்லாருமே நல்ல விதமா தான் சொன்னாங்க. உனக்கு ஒவ்வொரு விஷயமும் பார்த்து பார்த்து சொல்லிக் கொடுத்திருக்கேன். ஆனா உனக்கான வாழ்க்கையை நான் சரியா தேர்ந்தெடுக்காம விட்டுட்டேன் பாப்பா”

“வீட்டில எல்லாரும் என்னை நம்புனாங்க. ஏன் நீ கூட என்னை தானே நம்பினே, நான் தான் பெரிய தப்பு பண்ணிட்டேன் பாப்பா” என்று வெகுவாய் கலங்கியவரின் குரல் உடையத் தொடங்கவும் “சித்தா” என்று அவள் சத்தம் போட்டதில் அருகில் அமர்ந்திருந்தவர்கள் இவர்களை திரும்பி பார்த்தனர்.

அதை உணர்ந்ததும் தன் குரலை தழைத்தவள் “உங்களுக்கு இது தான் கடைசி சித்தா. இனிமே சொல்ல மாட்டேன், என் வாழ்க்கையை பத்தி நீங்க யாரும் தயவு செஞ்சு யோசிக்காதீங்க”

“நடந்ததை மாத்த முடியாது தானே. இனி இது என் வாழ்க்கை இதை சந்தோசமா எப்படி மாத்திக்கணும்ன்னு எனக்கு தெரியும். நீ நல்லா இருக்கியா, சந்தோசமா இருக்கியான்னு நீங்க யாருமே என்கிட்ட கேட்கக்கூடாது சொல்லிட்டேன்”

“எனக்கென்ன குறைச்சல் என்னை நல்லா படிக்க வைச்சிருக்கீங்க. உங்க முடிவு மட்டும் என் முடிவாகிடாது, எனக்குன்னு சொந்தமா அறிவிருக்கு. அந்த அறிவு சொல்றதை தான் கேட்டு நடந்திருக்கேன்”

“என் வாழ்க்கையை ரொம்பவே நல்லபடியா என்னால வாழமுடியும், வாழ்ந்து காட்டுவேன். இது சவாலெல்லாம் இல்லை நம்பிக்கை, என் மேல உள்ள நம்பிக்கை மட்டுமில்லை, அவர் மேல உள்ள நம்பிக்கையிலும் தான் சொல்றேன்”

“என்னைப்பத்தி கவலைப்படுறதை விட்டுட்டு உங்களுக்குன்னு ஒரு குடும்பம் இருக்கு. நாயகிம்மா இருக்காங்க, அவங்களுக்குன்னு நிறைய ஆசையிருக்கு. நீங்களும் அவங்களும் தனியா ஊட்டிக்கு செகண்ட் ஹனிமூன் போகணும்ன்னு உங்க பர்ஸ்ட் நைட் அன்னைக்கு பேசுனீங்களாமே”

“இன்னும் கூட்டிட்டு போகலைன்னு அவங்களுக்கு ரொம்ப வருத்தம். அதை முதல்ல செய்ங்க போங்க. அதைவிட்டு என்னையவே பாப்பா பாப்பான்னு கொஞ்சிட்டு இருக்கீங்க. நாளைக்கு எனக்கு ஒரு குட்டி பாப்பா பிறந்தாலும் என்னைய பாப்பான்னே கூப்பிடுவீங்க போல” என்று காரசாரமாய் ஆரம்பித்து சட்டென்று சூழ்நிலையை சாதாரணமாய் மாற்றியவளை பெருமையாக பார்த்தார் மாணிக்கவாசகம்.

“ஏன் பாப்பா உங்க சித்தி சொன்னாளாக்கும் நான் அவளை ஊட்டிக்கு கூட்டிட்டு போகலைன்னு”

“ஆமா சொன்னாங்க”

“சரி அதை அவகிட்ட பேசிக்கறேன். அப்புறம் என்ன சொன்னே பாப்பான்னு உன்னை கூப்பிட கூடாதா. உனக்கு பாப்பா பிறந்தாலும் சரி அந்த பாப்பாவுக்கே பாப்பா பிறந்து நீ பாட்டி ஆனாலும் எனக்கு நீ பாப்பா தான். நான் அப்படித்தான் கூப்பிடுவேன்”

“நான் அப்படி கூப்பிடுறது உன் புருஷனுக்கு பிடிக்காது. ஆனாலும் நான் அப்படித்தான் கூப்பிடுவேன்” என்றவருடன் சேர்ந்து புன்னகைத்தாள் அவள்.

——————

ஓரிரு நாளில் விநாயகம் தன் தவறை ஒப்புக்கொண்டு தானே சென்று நீதிமன்றத்தில் தன் குற்றத்தை ஒப்புக்கொண்டிருந்தார்.

Advertisement