Advertisement

33

ஆத்திசூடி – காப்பது விரதம்

பொருள் – தான் தொடங்கிய தருமத்தை விடாமல் செய்வதே விரதமாகும்

இந்திரசேனா தீவிரமாய் யோசித்துக் கொண்டிருந்தாள். அகல்யா விஷயத்தில் மொத்த முடிவையும் அவளே எடுக்க முடியாது. அதை எடுக்க வேண்டியவள் அகல்யா மட்டுமே, அகிலேஷ் சொல்வது ஏற்றுக் கொள்ளும்படி இருந்தாலும் அவனே முழு நேரமும் அகல்யாவுடன் இருந்துவிட முடியுமா.

ஒன்று சம்மந்தப்பட்ட பெண்கள் இருவரும் ஒத்துப்போக வேண்டும். இல்லையேல் ஒதுங்கிப் போக வேண்டும், அதுவும் இல்லையென்றால் ஒருவரை ஒருவர் எதிர்க்கும் துணிவு இருவருக்கும் இருக்க வேண்டும். பெரியம்மாவை சமாளிக்க அகல்யா கற்றுக்கொள்ள வேண்டும்.

தான் இதில் அதிகம் யோசிக்கிறோமோ அதிகம் தலையிடுகிறோமோ என்று கூட சில நேரம் அவளுக்கு தோன்றியது. தலையிருக்க வால் ஆடக்கூடாது என்று அவளின் சித்தப்பா அவளுக்கு அவ்வப்போது சொல்வார்.

வீட்டின் பெரியவராய் மாமனார் அவருக்கு பின் அவரின் பெரிய மகள் என்று இருவர் இருக்கிறார்களே. அவர்களுக்கு இவ்விஷயத்தைப் பற்றி சொல்ல வேண்டும் தானே என்று அவளின் மனசாட்சி அவளை கேள்விக் கேட்டுக் கொண்டிருந்தது. 

அவளின் சிந்தையை கலைக்கவென்றே வந்து சேர்ந்தான் கேசவன். தன் முன் நிழலாடவும் நிமிர்ந்து பார்த்தாள் அவள். கேசவன் நிற்கவும் என்னவென்று வாய்மொழியாய் கேட்காது பார்வை மட்டுமே கொடுத்தாள்.

“சார் உன்னை வரச்சொன்னாரு” என்றவன் வேறு பேசாமல் அவளை கடந்து செல்லப் போக “என்ன கேசவா அவ்வளவு தானா. என்கிட்ட பேச வேற ஒண்ணுமில்லையா??”

“அதை நான் உன்கிட்ட கேட்கணும். நீ என்கிட்ட கேட்கறே??”

“கேசவா??”

“தெரியலையா உனக்கு??”

“என்ன கேட்கிறே எனக்கு புரியலை கேசவா??”

“உன்னோட கேசவாங்கற அழைப்பிலேயே எனக்கு புரிஞ்சுப்போச்சு. நீ நீயா இல்லைன்னு, என்னாச்சு உனக்கு?? ஏன் எப்போ பார்த்தாலும் ஏதோ யோசிச்சுட்டே இருக்கே…”

“புதுசா கல்யாணம் ஆனா பொண்ணோட மலர்ச்சியை உன்கிட்ட என்னால பார்க்க முடியலை”

“கே7??”

“போதும் போதும் நீ கே7ன்னு கூப்பிட்டா நீ நார்மல் ஆகிட்டேன்னு நான் நம்புவேன்னு நினைச்சியா?? அதுக்கு வேற ஆளைப்பாரு” என்றான் அவன்.

“போடா நீ கல்யாணம் ஆகாத முரட்டு சிங்கிளா இருக்கே. உனக்கு எப்படி இதெல்லாம் புரியும்”

“உன்னோட நடிப்பை எனக்கே படம் போட்டு காட்டாத இப்போதான் எனக்கு ரொம்ப அதிகமா டவுட் வருது. உங்க வீட்டில ரொம்ப அவசரப்பட்டு உன்னை அபராஜிதனுக்கு கல்யாணம் பண்ணிக் கொடுத்திட்டாங்களோ எனக்கு தோணுது”


“கேசவன் ப்ளீஸ் நீயா ஏதாச்சும் கற்பனை பண்ணிட்டு பேசாத. எனக்கு ஒண்ணும் நேத்து கல்யாணம் நடக்கலை, அது நடந்தது ஆறேழு மாசம் ஆகுதுல இன்னும் புது பொண்ணுன்னு சொல்லிட்டு இருக்கே”

“அதுக்கு தான் பேச வந்தா நீ பாட்டுக்கு ரயில் வண்டி கணக்கா உன் கற்பனையை வளைச்சு வளைச்சு ஓட்டிக்கிட்டு இருக்க போடா”

“எப்படியோ போ நான் எதுவும் பேசுறதா இல்லை. சார் கூப்பிட்டாரு வா…”


“நீ போ நான் வர்றேன். ஒரு இம்பார்டன்ட் கால் பேசணும் பேசிட்டு வந்திடறேன்”

“ஓகே” என்றவன் கிளம்பியிருந்தான்.

இந்திரசேனா அகிலேஷுக்கு அழைத்திருந்தாள். “சொல்லும்மா அகல்யா வீட்டுக்கு வர சம்மதிச்சிட்டாளா??” என்றான் எடுத்த எடுப்பிலேயே வெகு ஆர்வமாய்.

“அண்ணா அண்ணா கூல். அதெல்லாம் எதுவுமில்லை, நேத்து அவ்வளவு தூரம் பிரச்சனை நடந்திருக்கு நான் அகல்யாவை இங்க கூட்டிட்டு வந்திட்டேன், உங்களுக்கு போன் பண்ணி நடந்த விஷயத்தையும் சொல்லிட்டு தான் வந்தேன்”

“எல்லாம் உங்களுக்கு தெரிஞ்சும் நீங்க ஏன் இன்னும் வந்து அகல்யாவை பார்க்கலை”

“நான் எப்படிம்மா அங்க வர முடியுமா. அபி என்னைப்பத்தி என்ன நினைப்பான்??”

“நீங்க அவரை கல்யாணம் பண்ணிக்கலை”

“இந்தும்மா!!”

“அகல்யாவை தானே கல்யாணம் பண்ணீங்க. உங்களுக்கு உங்க பொண்டாட்டியும் வேணும் அம்மாவும் வேணும்ன்னா நீங்க தான் இறங்கி வரணும். அம்மாவுக்காக பேசிட்டீங்க, இனி பொண்டாட்டிக்கு என்ன பண்ணப் போறீங்கன்னு அவங்களுக்கு நீங்க தான் காட்டணும்”

“நான் உங்களைவிட சின்னப்பொண்ணு உங்களுக்கு நான் எதுவும் சொல்லித்தர வேண்டியதில்லை. அகல்யா வீட்டில தான் இருக்கா. நான் கோர்ட்ல இருக்கேன், அவர் ஸ்கூல்க்கு போயிட்டார். நாங்க ஈவினிங் தான் வீட்டுக்கு வருவோம்”

“வீட்டில அகல்யா மட்டும் தான் தனியா இருக்கா. போய் பாருங்க, அடிச்சுக்குவீங்களோ, புடிச்சுக்குவீங்களோ என்னமோ பண்ணுங்க. அகல்யாகிட்ட பேசுங்க அவ்வளவு தான்” என்றுவிட்டு போனை வைத்துவிட்டாள்.

இப்போது தான் மனம் சற்று நிம்மதியாக உணர்ந்தது. அவர்கள் முடிவை அவர்களே எடுக்கட்டும். ஒருவரை ஒருவர் நேரில் பார்க்கும் போது ஒரு வேளை அவர்கள் வருத்தம் மறைந்து போகலாம், போகும் என்று நம்பிக்கையாய் எண்ணிக்கொண்டு மாணிக்கவாசகத்தை தேடிச் சென்றாள் அவள்.

———————–

அபராஜிதன் அங்கு வினாயகத்தை சத்தியமாய் எதிர்பார்க்கவில்லை. ஆனால் அவ்வளவு நேரம் இருந்த டென்ஷன் அவனைவிட்டு சற்று தள்ளிச் சென்றது. காரணம் அவர் பேசிக் கொண்டிருந்தது அப்பெண்ணிடம்.

யாரவள்?? அப்பெண் அவன் பள்ளியில் பதினோராம் வகுப்பு படிக்கும் பெண். பெயர் சித்திரலேகா இந்த வருடம் தான் அப்பள்ளியில் புதிதாய் சேர்ந்திருந்தாள். பத்தாவது வரை வேறு பள்ளியில் படித்து முடித்திருந்தாள்.

ஒரு நாள் அவள் வகுப்பு வாசலில் அழுதுக்கொண்டே அவள் நின்றிருக்க அவ்வப்போது பள்ளிவளாகத்தை ரவுண்ட்ஸ் வரும் அபராஜிதனின் கண்ணில்ப்பட்டாள்.

“என்னம்மா பிரச்சனை எதுக்கு அழுதுட்டு நிக்கறே??” என்றான் அவளைப் பார்த்து, உடன் உள்ளே பாடம் நடத்திக் கொண்டிருக்கும் ஆசிரியரையும் ஒரு பார்வை பார்த்தான்.

ஆசிரியர் பாடம் நடத்துவதைவிட்டு இவர்களை நோக்கி வந்தார். “சொல்லும்மா என்னாச்சு??”

“இல்லை சார் ஒண்ணுமில்லை” என்றாள் அவள் இன்னமும் அழுதுக் கொண்டே!!

“என்னாச்சு மேடம்??” என்றான் இப்போது பார்வை ஆசிரியரின் புறம் திருப்பி.

“ஒரு வாரமா இவ நோட்ஸ் எதுவும் ஒழுங்கா எடுத்திட்டு வர்றதேயில்லை சார். இன்னைக்கு எடுத்திட்டு வர்றேன் நாளைக்கு எடுத்திட்டு வர்றேன்னு சாக்கு சொல்லிட்டே இருக்கா, வீட்டில பேரண்ட்ஸ் கூட்டிட்டு வான்னு சொல்லியும் கூட்டிட்டு வரலை”

“அதான் பனிஷ் பண்ணேன் சார்”

அபராஜிதன் திரும்பி அப்பெண்ணை பார்த்தேன். “வாட்ஸ் யுவர் நேம்”

“சித்திரலேகா”

“ஓகே சீ சித்ரா டீச்சர் உங்க நல்லதுக்கு தானே படிக்க சொல்றாங்க. அவங்க சொல்றதை கேட்கறது தானே ஸ்டுடென்ட்ஸ் கடமை, நீ ஏன் அந்த நோட்ஸ் எடுத்திட்டு வரலை. என்ன பிரச்சனை உனக்கு??”

“சார் சார் அது வந்து… அது வந்து…” என்றவள் திரும்பி ஆசிரியை பார்த்தாள்.

‘என்னை எதுக்கு பார்க்குறா’ என்று யோசித்த ஆசிரியரும் அவளைத் தான் பார்த்தார்.

“என்னன்னு சொல்லும்மா”

“எனக்கு எனக்கு அவங்க சொல்லிக் கொடுத்தது புரியலை சார்” என்றாள் அழுதுக்கொண்டே!!

அந்த ஆசிரியையோ திக்கென்று அவளைப் பார்த்தார். ‘என்னைய எதுக்கு இவ போட்டு கொடுக்கறா. புரியலைன்னா என்கிட்ட கேட்டிருந்தா சொல்லிக் கொண்டிருத்தேன் இப்போ கரெஸ் முன்னாடி என்னை நிக்க வைச்சுட்டாளே’ என்று தவிப்பாய் நின்றிருந்தார் அவர்.

“தெரியலைன்னு நீ பேசாம இருந்தா அவங்களுக்கு எப்படி தெரியும். உனக்கு என்ன தெரியலையோ புரியலையோ நீ அவங்ககிட்ட கேட்டிருக்கணும் அவங்க சொல்லித் தரப் போறாங்க. அதைவிட்டு நீ பேசாம இருந்தா”

“இல்லை சார் நான் போய் கேட்டேன் அவங்க சும்மா உனக்கு டவுட் வரும் உனக்கு வேற வேலையே இல்லைன்னு சொல்லிட்டாங்க” என்று சொல்லவும் ஆசிரியை ஒன்றும் சொல்ல முடியாமல் பார்த்திருந்தார்.

“இனிமே அவங்க உனக்கு சொல்லித் தருவாங்க. கோ இன் சைடு, இனிமே இப்படி அழுதிட்டு நிக்காத” என்று அவளை அனுப்பியவன் ஆசிரியை காய்த்து எடுத்துவிட்டான்.

“சார் அவ சொல்றதை வைச்சுட்டு ஒன் சைடா முடிவு பண்ணாதீங்க சார். அவ பாதி உண்மையை சொல்லி மீதியை சொல்லலை. நான் சொல்றேன்…” என்று ஆரம்பித்தவரின் முன் கை நீட்டி தடுத்தான்.

“டூ வாட் ஐ சே, எனக்கு எந்த எக்ஸ்பிளனேஷனும் வேண்டாம். போங்க, இனிமே இந்த மாதிரி நடக்காம பார்த்துக்கோங்க” என்றுவிட்டு அங்கிருந்து நகர்ந்தவன் பிரின்சிபாலையும் அழைத்து பேசினான்.

அத்துடன் பிரச்சனை முடிந்தது என்று நினைத்திருக்க அன்றில் இருந்து தான் அவனுக்கு பிரச்சனை ஆரம்பித்தது. பள்ளி ஆண்டுவிழாவிற்கான வேலைகள் நடந்துக் கொண்டிருக்க அதை மேற்பார்வை பார்க்க சமயத்தில் மீண்டும் அப்பெண்ணை பார்த்தான்.

அன்று கலர் ட்ரஸில் வந்திருந்தாள். நிறைய மாணவர்கள் அப்படித்தான் வந்திருந்தனர், ரிகர்சல் நடந்துக் கொண்டிருந்தது. அதைப் பார்த்துக் கொண்டே அபராஜிதன் அங்கிருந்து நகர யார் மீதோ மோதி நின்றவன் விழப் போகிறவரை கீழே பிடிக்க நின்றிருந்ததோ அப்பெண்.

அவள் புடவை அணிந்திருந்தாள் இவன் கரம் அவள் இடையில் பதிந்திருந்தது. வேண்டுமென்று எதுவும் நடக்கவில்லை. அபராஜிதன் சாதாரணமாய் தான் இருந்தான். “என்னம்மா நீ பார்த்து வரமாட்டியா?? விழுந்திருந்தா என்னாகறது??”

“நான் பார்த்து தான் வந்தேன், தப்பு உங்க மேல தான்” என்று ஒரு மாதிரி குரலில் சொல்லிவிட்டு அவனை தாண்டிக் கொண்டு சென்றிருந்தாள்.

‘என்ன சொல்றா இவ??’ என்று யோசித்தவன் அதற்கு மேல் அதை பற்றி நினைக்கவில்லை. அவனுக்கு தலைக்கு மேலே ஆயிரம் வேலை இருந்தது. நாளை சீப் கெஸ்ட் அழைக்க செல்லவேண்டிய வேலை எல்லாம் இருக்கிறது என்று அவன் யோசனை அதிலேயே உழன்றது.

இரவு எட்டு மணியாகிப் போனது அவன் கிளம்ப. அறையை பூட்டிவிட்டு அவன் வெளியில் வர பியூன் மட்டுமே நின்றிருந்தான். 

“எல்லாரும் கிளம்பியாச்சா?? யாருமில்லையே?? ஒரு தரம் செக் பண்ணியாச்சா??” என்று அவனைப் பார்த்து கேட்டான்.

“பார்த்திட்டேன் சார் யாருமில்லை”

“சரி நான் கிளம்பறேன், நீ காலையில வந்து ஸ்கூல் திறந்திடு” என்றவன் கிளம்பி வெளியில் வந்தான்.

அவன் பைக் மட்டும் தனியே நின்றிருந்தது எப்போதும் நிற்கும் இடத்தில். அருகே செல்லச் செல்ல அதில் யாரோ அமர்ந்திருப்பது போல தோன்ற இருளில் ஒன்றும் தெரியவில்லை அவனுக்கு.

பின்னே திரும்பி பார்க்க பியூன் உள்ளே சென்றிருந்தான் இன்னும் சில அறைகளை அவன் பூட்டிவிட்டு தான் வருவான். தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அருகே செல்ல அமர்ந்திருப்பவளை கண்டதும் முகத்தில் எரிச்சல் அப்பட்டமாய்.

“இங்க என்ன பண்ணுறே??”

“ஏன் சார் அப்படி பண்ணீங்க??” என்றாள் அவள்.

“எப்படி பண்ணேன்??”

“என்னை கட்டிப்பிடிச்சீங்களே??” என்றாள் அவள் அழுதுக் கொண்டே!!

“உளறாத??” என்றான் கோபமாய்.

“எல்லா ஸ்கூல்ல நடக்குற மாதிரி நம்ம ஸ்கூல்லயும் நடந்திருச்சுல. நான் இதுக்கு முன்ன படிச்ச ஸ்கூல்ல டீச்சர்ஸ் கறை வைச்சு மார்க் குறைச்சாங்க. ஆனா இங்க…” என்று அழுதாள் தொடர்ந்து.

“எங்க வீட்டில என்னை தேடுவாங்க. என்கிட்ட இப்படி நடந்துக்காதீங்க சார், தப்பு சார், நீங்க பண்ணுறது ரொம்ப தப்பு” என்று அவள் பின்னாலேயே செல்ல அவனுக்கு சுத்தமாய் ஒன்றும் புரியவில்லை.

“லூசு மாதிரி பேசாத” என்றவன் சப்பென்று அவளை ஒரு அறை விட்டான்.

“அடிச்சிட்டீங்கல்ல என்னைய அடிச்சிட்டீங்கல்ல இனிமே உங்களை என்ன பண்ணுறேன் பாருங்க. போலீஸ்ல கம்பிளைன்ட் பண்ணுறேன், செச்ஷுவல் ஹாரெஸ்மென்ட்ன்னு நன் கம்பிளைன்ட் பண்ணுறேன்” என்றவள் அங்கிருந்து வேகமாய் வெளியேறினாள்.

பியூன் அங்கு வர “எல்லாரும் கிளம்பிட்டாங்கன்னு சொன்னே, அந்த பொண்ணு இப்போ தான் போகுது. என்ன வேலை பார்க்குறே நீ” என்று பியூனை கடிந்தவன் அங்கிருந்து கிளம்பியிருந்தான்,

அந்த பெண் ஏதோ உளறுகிறாள் என்று சற்று மெத்தனமாய் இருந்துவிட இரண்டு நாளில் அவள் பேரன்ட்ஸ் பள்ளி வந்தனர், அவர்கள் பெண் சூசைட் அட்டெம்ப் பண்ணியதாக சொல்லிக் கொண்டு.

அவன் மீது நடவடிக்கை எடுக்கப் போவதாக எச்சரிக்கை செய்து கிளம்பியிருக்க இதோ அவன் நீதிமன்றத்தில் வந்து நிற்கிறான்… இனி…

Advertisement