Advertisement

31

ஆத்திசூடி – நொய்ய உரையேல்

பொருள் – அற்பமான வார்த்தைகளை பேசாதே.

“இருங்க சார் நான் உள்ள போய் பேசிட்டு வந்திடறேன்” என்று வேகமாய் உள்ளே விரைந்தவன் சாவதானமாய் வெளியே வந்தான்.

அவனிடத்தில் ஒரு தயக்கம் தெரிந்தது. “சார் கொஞ்சம் வெளிய போக வேண்டிய வேலை இருக்குன்னு சொன்னார்” என்று விழுங்கி விழுங்கி அவன் சொல்ல மாணிக்கவாசகத்தின் முகம் இறுகியது.

அந்த இருவரும் தங்கள் வேலையை பார்க்க ஒருவர் பின் ஒருவராய் வெளியே செல்ல அங்கேயே நின்றிருந்த மாணிக்கவாசகம் அதிரடியாய் அவனறைக்குள் நுழைந்திருந்தார்.

அவரின் வரவை அவன் சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை. முதலில் அதிர்ந்து பின் அதை சமாளித்து பார்த்திருந்தான் அவரை.

“உங்கிட்ட கொஞ்சம் பேசணும்” என்றார் அவர்.

அவனோ அவரை அமரும்படி கூட பணித்திருக்கவில்லை. அதுவே அவருக்கு கொஞ்சம் அவமானமாகத்தான் இருந்தது. மகளுக்காக என்று பொறுத்துக் கொண்டார்.

அதே மகளை கட்டுவதற்கு தான் எதிரில் இருப்பவன் தன்னிடம் எப்படியெல்லாம் பேசினான் என்பதை நினைத்து பார்த்துக் கொண்டவரின் இதழ்கள் விரக்தியில் வளைந்தது.

காரியம் ஆகும் வரை காலைப் பிடிப்பர், காரியம் முடிந்ததும் கழுத்தையும் பிடிப்பர் என்று சொல்வது உண்மை தான் என்று உணர்ந்தார் அம்மனிதர்.

“என்ன விஷயம்??” என்றான் அவன் இருக்கையில் இருந்து கூட எழாமல்.

நீ என்ன எனக்கு மரியாதை தருவது அது கேட்டு பெறுவதல்ல. மரியாதை கிடைக்காத பட்சத்தில் அதை தனதாக்கிக் கொள்வதே சரி என்று எண்ணியவராய் இருக்கையில் அமர்ந்து அவனை உற்று நோக்கினார் அவர்.

‘இவர் எதுக்கு என்னை இப்படி பார்க்கறார்’ என்ற எண்ணம் ஓட அபராஜிதன் அவரை ஏறிட்டான்.

“என்ன பிரச்சனை??” என்றார் அவர் எடுத்த எடுப்பிலேயே.

“என்ன பிரச்சனை??” என்றான் அவனும்.

“அதை தான் உங்களை கேட்கறேன். என்ன பிரச்சனை, எதையாச்சும் நீங்க மறைக்கறீங்களா??” என்று கேட்கவும் அபராஜிதனின் முகம் நொடியில் மாறியது.

தன்னை சமாளித்தவனாய் “உங்களுக்கு யாரு சொன்னது எனக்கு பிரச்சனைன்னு. சித்தப்பனுக்கும் மகளுக்கும் வேற வேலையே இல்லையா அடுத்தவன் பிரச்சனையில மூக்கை நுழைக்கிறது தான் வேலையா”

“நான் என்ன பண்ணா உங்களுக்கென்ன. இப்படி பண்ணாத அப்படி பண்ணாதன்னு வந்து நாட்டாமை பண்ணுறது. நீங்க வெறும் வக்கீல் தான் நீதிபதி இல்லை தேவையில்லாம பேசிக்கிட்டு. பேசாம கிளம்புங்க நீங்க” என்று அவன் சொல்லவும் அதை கேட்டு சற்றும் கவலைக்கொள்ளாதவராய் இருக்கையில் நன்றாய் சாய்ந்தமர்ந்தார் அவர்.

அவரின் போக்கு அவனை இன்னமும் கோபமூட்டியது. அதே எண்ணத்தோடு அவரை நன்றாகவே முறைத்தான்.

“நான் சொல்லிட்டே இருக்கேன் இங்கவே உட்கார்ந்து இருக்கீங்க??”

“நான் கேட்டதுக்கு நீங்க உங்ககிட்ட என்னால எதுவும் சொல்ல முடியாதுன்னு சொல்லியிருக்கலாம். இல்லை ஒண்ணுமில்லை நீங்க கிளம்புங்கன்னு இன்னும் சிம்பிளா கூட முடிச்சிருக்கலாம். எனக்கு இப்போ தான் ரொம்ப ஸ்ட்ராங்கா டவுட் வருது ஏதோ பெரிய பிரச்சனைன்னு”

“நீங்க வாய் திறந்து சொல்லலைன்னா நட்டம் உங்களுக்கு தான். என் பொண்ணுக்காக தான் இப்பவும் ஓடி வந்தேன்னு நீங்க நினைக்கலாம். அது பொய்யில்லை உண்மை தான், ஆனா அதைவிட பெரிய உண்மை ஒண்ணு இருக்கு. அது உங்க மேல எனக்கிருக்க நம்பிக்கை. அந்த நம்பிக்கையால தான் எங்க பொண்ணு உங்களுக்கு மனைவியாகியிருக்கா”

“உங்களுக்கு என்கிட்ட எப்போ சொல்லணும்ன்னு தோணுதோ சொல்லுங்க. உங்களுக்குன்னு யாருமில்லாம எல்லாம் இல்லை, எல்லாரும் இருக்காங்க. அந்த வினோத் வேணாம் அவன் உங்க சொத்தையே எழுதி வாங்கிடுவான். பிரச்சனையும் வேற விதமா போகுது. பார்த்துக்கோங்க நான் வர்றேன்” என்று சொல்லிவிட்டு வாயில் வரை சென்றவர் நின்றார்.

“கடைசியா ஒண்ணு பதறிய காரியம் சிதறும்ன்னு சொல்வாங்க. பதட்டத்துல தப்பான முடிவெடுக்காதீங்க. நான் போயிட்டு வர்றேன் மாப்பிள்ளை” என்றுவிட்டு செல்லும் அவரையே அவன் விழிகள் அசையாது பார்த்திருந்தான்.

————————–

ஏதேதோ எண்ணங்கள் உள்ளே ஓடிக் கொண்டிருக்க அவனின் டென்ஷனை மேலே கூட்டவென்று பவானி வேறு போன் செய்ய ‘இவங்க எதுக்கு போன் பண்றாங்க எனக்கு’ என்று உள்ளே ஒரு சலிப்பு ஓட அட்டென்ட் செய்து பேசினான் அவன்.

“சொல்லுங்க”

“ஏன்பா இங்க என்ன நடந்துச்சுன்னு தெரியுமா” என்று ஆரம்பித்தவர் அவருக்கு சாதகமாகவே அனைத்தும் அவனிடம் பேசியிருந்தார். அவரின் மேல் தவறே இல்லாதவாறு அவனிடத்தில் பேசினார் அவர்.

“உன் பொண்டாட்டி இன்னைக்கு என்ன பண்ண தெரியுமா. உன் தங்கச்சியை கையோட வீட்டுக்கு கூட்டிட்டு போய்ட்டா. ஏன்பா ஒரு வீட்டில பெரியவங்கன்னு இருந்தா ஏதாச்சும் சொல்லத்தான் செய்வாங்க”

“ஏன் என் மருமக மேல எனக்கந்த உரிமையில்லையா சொல்லு. கல்யாணம் ஆகி இத்தனை மாசமாச்சே, குழந்தை நிக்கலையே டாக்டரை பார்க்கலாம்ன்னு ஜாடைமாடையா சொல்லிட்டேன். அது ஒரு குத்தமா, இதை நான் சொல்லிட்டேன்னு உன் பொண்டாட்டி என் மருமகளை தரதரன்னு கையை பிடிச்சு அவளோடவே கூட்டிட்டு போய்ட்டா”

“இதெல்லாம் என்னப்பா நியாயம். உன் தங்கச்சி வாழணும்ன்னு உனக்கு எண்ணமில்லையா. உன் பொண்டாட்டி அவளை வாழாவெட்டி ஆக்கிடுவா போல” என்றவர் அவனிடம் அரைமணி நேரம் பேசிய பின்பே தான் போனையே வைத்தார்.

அதே கோபத்துடனும் ஆற்றாமையுடன் வீட்டிற்கு வந்திருந்தான் அபராஜிதன். உள்ளே நுழைந்ததுமே “இந்திரசேனா” என்று வீடே அதிர கத்தியவனின் குரல் மாடியில் காய வைத்திருந்த துணியை எடுக்கச் சென்றிருந்தவளின் காதில் விழ வேகமாய் இறங்கி வந்தாள் அவள்.

“என்னங்க என்னாச்சு??” என்றாள் அவள்.

“என்னாச்சுன்னு என்னையே கேட்கறியா நீ??” என்று அவன் முறைத்தான் அவளை.

“நீங்க தானே என்னை கூப்பிட்டீங்க அப்போ நீங்க தான் என்னாச்சுன்னு சொல்லணும்” என்று இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே அகல்யா மெல்ல எட்டிப்பார்த்தாள்.

“அகல் இங்க வா” என்று இவள் அழைக்க “நீ எப்போ வந்தே அகல்யா??” என்றான் அவளின் உடன்பிறந்தவன்.

“மதியம் தான் வந்தா??” பதில் சொன்னது அவன் மனைவி.

“நான் உன்னை கேட்கலை” என்றான் அவன்.

“மதியம் வந்தோம் அண்ணா”

“எப்போ கிளம்புறே??” என்றான் அவன் அடுத்த கேள்வியாய்.

அவனின் கேள்வியே இந்திரசேனாவிற்கு புரிய வைத்தது. வந்தவன் விஷயம் தெரிந்து தான் வந்திருக்கிறான் என்று. “அதை நான் சொல்றேங்க. உங்களுக்கு போன் பண்ணி சொல்லலாம்ன்னு தான் நினைச்சேன். இதெல்லாம் போன்ல சொல்ற விஷயமில்லையே. அதான் நீங்க வரவும் சொல்லலாம்ன்னு…” அவள் முடித்திருக்கவில்லை.

“நீ கிளம்பு அகல்யா நானே உன்னை வீட்டில விட்டிட்டு வர்றேன்” என்றான் அவன்.

“என்னங்க என்ன பேசறீங்க நீங்க லூசா நீங்க??” என்று அவள் கேட்டுவிட “என்னடி லூசா நானு… நான் லூசா உனக்கு என்னை பார்த்தா லூசு மாதிரி இருக்கா” என்று பித்து பிடித்தவன் போல் அதை சொல்லியவன் அதை சொல்லி சொல்லி இந்திரசேனாவை அடித்திருந்தான்.

அடுத்த அடி விழும் முன் அவன் கரத்தை பற்றி தடுத்திருந்தாள் அவள். அகல்யாவோ அங்கு நடப்பதை பார்த்து கண்ணீர் வடித்தாள்.

“என்னால எந்த பிரச்சனையும் வேண்டாம். நான் கிளம்பறேன் அண்ணா, இந்து நான் கிளம்பறேன்” என்று வாயிலை நோக்கி அவள் செல்ல “அகல்யா ஒரு நிமிஷம்” என்றாள் இந்திரசேனா.

அங்கேயே நின்று திரும்பி பார்த்தாள் அவள். “உங்க அண்ணன் தான் என்ன பிரச்சனைன்னு புரியாம பண்ணிட்டு இருக்கார்ன்னா நீயுமா சொல்லு. உன்னை நல்ல படியா வாழ வைக்கணும்ன்னு தான் இங்க கூட்டிட்டு வந்தேன்”

“உனக்கு என் மேல நம்பிக்கை இருந்தா உள்ள போ. இல்லைன்னா உன்னிஷ்டம். ஆனா வெளிய போறது நீயா மட்டும் இருக்க மாட்டே” என்றுவிட்டு அவளைப் பார்க்க இருதலைக் கொள்ளி எறும்பைப் போலானது அகல்யாவின் நிலை.

“ஹேய் நீ லூசாடி அவளை இந்த வீட்டிலவே இருக்க வைச்சு அவ வாழ்க்கையை நாசமாக்க போறியா”

“அகல்யா நீ உள்ள போ” என்றாள் அவன் மனைவி அவனுக்கு பதிலை சொல்லாது.

அகல்யா தயங்கிக் கொண்டே இருவரையும் மாறி மாறி பார்த்தவள் அப்படியே நிற்க “என்னை நம்பு அகல் உங்க அண்ணனுக்கு என்ன நடந்துச்சுன்னு தெரியாது, உனக்கும் எனக்கும் தெரியும். சொல்றதை கேளு உள்ள போ” என்று அவள் சொன்னது வேலை செய்ய அகல்யா உள்ளே சென்றிருந்தாள்.

அவள் செல்வதை பார்த்ததும் இப்போது திரும்பி தன் கணவனை பார்த்தாள் என்ன சொல்லணுமோ சொல்லு என்ற ரீதியில்.

“என்ன பார்க்கறே?? உன் மனசுல நீ என்ன தான் நினைச்சுட்டு இருக்கே?? ஒரு மனுஷன் வேலைக்கு போயிட்டு வீட்டுக்கு வந்தா நிம்மதி இருக்கணும். இங்கயும் நிம்மதி இல்லனா என்ன செய்ய??”

“என்னமோ நீங்க மட்டும் தான் வேலைக்கு போயிட்டு கஷ்டப்பட்டு வர்ற மாதிரி பேசறீங்க. நானும் வேலைக்கு போறேன் தானே”

“உன்னை நானா போகச் சொன்னேன், நீயா தானே போறே. உன்னை நிம்மதியா வீட்டில இருக்கத்தானே நான் சொல்றேன்”

“ஓ வீட்டில இருந்தா எனக்கு நிம்மதி அப்படியா??”

“பின்னே வீட்டில இருந்தா என்ன கஷ்டமிருக்க போகுது. நான் சம்பாதிச்சு கொண்டு வந்து கொடுக்க போறேன் அதை வைச்சுட்டு நிம்மதியா வாழப்போறோம்”

“அப்படின்னு யார் சொன்னது” என்று கேட்டவளை முறைத்தான் அவன்.

“கொஞ்சம் முன்னாடி சொன்னீங்களே வீட்டில இருந்த நிம்மதின்னு. இதோ இப்போ வந்து உங்க வேலை டென்ஷன்கற பேருல உங்க கோபத்தை குப்பை மாதிரி வந்து என் மேல கொட்டுறீங்களே இதான் அந்த நிம்மதியா”

“வீட்டில என்ன நடக்குது இல்ல நடந்துச்சுன்னு எதுவுமே தெரிஞ்சுக்காம யாரோ சொன்னதை நம்பி இங்க வந்து பேசுறீங்களே. இதெல்லாம் தான் அந்த நிம்மதியை எனக்கு கொடுக்குமா”

“உங்களுக்கெல்லாம் வேலைக்கு போகாம வீட்டில இருக்க பொண்டாட்டின்னா சுகவாசியா இருக்கா அப்படிங்கற நினைப்புல”

“வீட்டில இருக்க ஒவ்வொரு பொண்ணுகிட்டயும் போய் கேளுங்க அவ சந்தோசமா தான் இருக்காளான்னு. வீடு அமைதியாவும் கட்டுக்கோப்பாவும் பொறுப்பாவும் அந்த வீடு இருக்குன்னா அதுக்கு காரணம் அந்த பொண்ணு தன்னோட சந்தோசத்தை மரிக்க வைச்சு வீட்டில இருக்க மத்த எல்லாரோட சந்தோசத்துக்காகவும் உயிர் கொடுத்திருக்கான்னு அர்த்தம்”

“எந்த ஆம்பிளைங்களுக்கும் அது புரியறதேயில்லை. நான் புடவை எடுத்து தர்றேன், அதை செய்யறேன் இதை செய்யறேன் வெளிய பெருமை பேச வேண்டியது. உன் பொண்டாட்டியோட சந்தோசத்துக்கு தேவை நீ எடுத்து தர்ற புடவையிலயும் வாங்கி தர்ற பொருள்ளையும் இல்லைன்னு உங்கள மாதிரி ஆளுங்களுக்கு எப்போ புரியும்”

“உங்களை பொண்ணும் பொருளுமா கேட்டோம். ஒரு வார்த்தை அன்பா பேசினாலே போதும் தானே கேட்கறோம். ஆனா உங்களுக்கெல்லாம் நாங்க ஒரு குப்பைத்தொட்டி, உங்க கோபத்தை கொட்டுற குப்பைத்தொட்டி”

“கறிவேப்பிலை மாதிரி எங்களை உங்க தேவைக்கு மட்டுமே பயன்படுத்துவீங்க, தேவையில்லைன்னா தூக்கி ஓரமா வைச்சுடுவீங்க அதானே” என்றவளின் கோபம் இன்னமும் மட்டுப்படவேயில்லை.

“நீங்க உங்க பொண்டாட்டிக்கு எதுவும் செய்ய வேணாம். நான் உங்ககிட்ட அதை எதிர்பார்க்கவும் இல்லை. ஒரு தங்கச்சிக்கு அண்ணனா அவளுக்கு நல்லதை செய்ங்க, நல்லதை மட்டும் செய்ங்க அதை தான் நான் கேட்கறேன்”

“பெரியம்மா என்ன பேசினாங்கன்னு என்கிட்ட வந்து ஒரு வார்த்தை கேட்டீங்களா நீங்க. அதைவிட்டு அவங்க பேசினதை வைச்சு இங்க இவ்வளவு ஆர்பாட்டம் பண்றீங்க”

“அகல்யாவை அவங்க என்ன பேசினாங்கன்னு தெரியுமா உங்களுக்கு”

“பேசி முடிச்சிட்டியா நீ. ஒரு பெரிய மெகா சீரியல் எடுக்கற அளவுக்கு நீளமா பேசுறே. என் தங்கச்சியை எப்படி வாழ வைக்கணும்ன்னு எனக்கு தெரியும். அவங்க அவளோட மாமியார் இன்னொரு அம்மா மாதிரி அவங்க அவளை பேசுறதுக்கு உரிமையில்லையா”

“நான் என்ன சொன்னாலும் உங்களுக்கு புரிய போறதில்லை. இப்போ என்ன பண்ணணும்??”

“அகல்யாவை நீயே கூட்டிட்டு போய் அங்க விட்டுட்டு வந்திடு”

“ஹ்ம்ம் அப்புறம்”

“அப்புறமென்ன நான் கதையா சொல்லிட்டு இருக்கேன்”

“இல்லைன்னா அதையும் சொல்லிடுங்க”

“நீ போகலைன்னா நானே கூட்டிட்டு போய் விட்டு வந்திடுவேன். அவளை மட்டுமில்லை உன்னையும் சேர்த்து” என்றுவிட்டு உள்ளே சென்றுவிட்டான் அவன்.

 

Advertisement