Advertisement

30

ஆத்திசூடி – நாடு ஒப்பனை செய்

பொருள் – நாட்டில் (சமுதாயத்தில்) உள்ள மக்கள் ஒத்துக்கொள்ளத்தக்க நல்ல காரியங்களை செய்.

“வாப்பா மாணிக்கம் என்ன இந்த பக்கம் உன் காத்து வீசுது”

“இன்னைக்கு இங்க ஒரு ஹியரிங் இருக்குப்பா சக்தி. ஆமா உனக்கு எப்படி போய்கிட்டு இருக்கு”

“எங்கப்பா நமக்கெல்லாம் ஒரே சில்லறை கேசா தான் வருது. பெரிய பெரிய கேசை எல்லாம் நம்ம ரெட்டைங்க தான் போட்டி போட்டுக்கிட்டு பார்த்துகிட்டு இருக்காங்க. அடுத்து ஒரு செம கேஸ்ப்பா அதான் வினோத் இருக்கானே அவன் பாக்குறான். அவனுகளுக்கு எங்கயோ பெரிசா மச்சம் இருக்குய்யா அதான் இப்படி கேசா சிக்குது. பணம் புரளுது பாரு அவனுங்க கையில… ஹ்ம்ம் பயங்கரம்”

“ஓ!!”

“என்னய்யா நீ சிம்பிளா ஓன்னு சொல்ற. என்னன்னு கேளேன்??”

“நான் கேட்கலைன்னா நீ விடவா போறே. சொல்லு என்னன்னு கேட்போம்”

“உனக்கு ஒண்ணும் நேரமாகிடலையே”

“என்னைப்பத்தி உனக்கு தெரியாதா. பன்னிரண்டு மணி ஹியரிங்க்கு நான் இரண்டு மணி நேரம் முன்னாடியே வந்திடுவேன்னு”

“அது சரி” என்றவர் அவர் பேச்சை தொடர்ந்தார். “நம்மாளுககிட்ட வசமா ஒருத்தன் சிக்கிட்டான். அதும் ஏதோ பொண்ணு விவகாரம் வேற, ஸ்கூல் படிக்கிற பொண்ணுப்பா அதுக்கிட்ட அந்த விளையாண்டுட்டான் போல அந்த ஸ்கூலோட முக்கிய புள்ளி”

“விஷயம் பெரிசாகி பொண்ணு சைட்ல கேஸ் கொடுப்போம்ன்னு வந்து நிக்குது. அந்த ஸ்கூல் பெரிய தலை இப்போ இவனுங்க முன்னாடி வந்து நிக்குது அய்யாசாமி என்னை காப்பாத்துன்னு”

“நம்ம வினோத்தை பத்தி தான் உனக்கே தெரியுமே. ஸ்கூலையே எழுதி வாங்காம விடமாட்டான். அவனுக்கு ஆப்போசிட் வழக்கம் போல ராஜகோபால் தான். இருந்தாலும் இந்த ராஜகோபால் ரொம்ப வக்கீலா இருக்கான்ப்பா”

“ராஜகோபால் ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கான், சம்மந்தப்பட்ட ஆளுக்கு தண்டனை வாங்கி தரணும்ன்னு. வினோத் மொத்தமா சுருட்டுற வரைக்கும் கேசை இழுத்தடிச்சுட்டு அப்புறம் ஜகா கொடுத்திடுவான்” என்று அவர் பாட்டுக்கு வளவளத்துக் கொண்டிருக்க மாணிக்கவாசகமோ அவர் பேச்சை ஒரு பக்கம் காதில் வாங்கிக்கொண்டு தன் குறிப்பை எடுப்பதில் தான் கவனமாயிருந்தார்.

“பாவம் அந்த ஸ்கூல்…” என்று அந்த பள்ளியின் பெயரை சக்தி சொல்லவும் அதிர்ந்து போய் நிமிர்ந்து பார்த்தார் மாணிக்கவாசகம்.

“இன்னொரு ரகசியம் உனக்கு சொல்றேன் மனசுலையே வைச்சுக்கோ மாணிக்கம். நாளைக்கு அந்த பொண்ணு நேரா கோர்ட்டுக்கு தான் வருதாம். இங்க இருந்தே மீடியாக்கு பேட்டி கொடுத்திட்டு பெட்டிஷனும் கொடுக்க போகுது போல”

“அதை தடுக்க அந்த ஸ்கூல் தலையும் படு முயற்சி எடுக்குது. ஆனா அது முழுக்க தோல்வி தான்னு பாவம் அந்தாளுக்கு தெரியாது. நம்ம பிபி ராஜகோபால்பத்தி தான் உனக்கே தெரியுமே, அந்த பொண்ணு நேரா அவன்கிட்ட தான் போய் சொல்லி இருக்கு”

“அவன் தான் நீதி நேர்மைன்னு ஓவரா பேசுவானே. அவனே தான் முன்ன நின்னு எல்லாம் செஞ்சிருக்கான். கேஸ் கூட அவன் தான் வாதாடுவான் போல. அந்த ஸ்கூல் பார்ட்டி ஜோலி முடிஞ்சது”

“அந்தாளுக்கும் அது தேவை தான் பொண்ணுங்ககிட்ட விளையாடுனா ஈசியா வெளிய வந்திடலாம்ன்னு நினைக்கிறான் போல. அதுவும் படிக்கிற பிள்ளை மேல கையை வைச்சிருக்கான் அவனெல்லாம் நல்லாவே இருக்க மாட்டான்” என்று அவர் சொல்லச் சொல்ல மாணிக்கவாசகத்தின் முகம் இறுக்கிக் கொண்டே சென்றது.

———————-

“இந்து நாம கொஞ்சம் அவசரப்பட்டுட்டமோ” என்று அழுதுக் கொண்டே மீண்டும் ஆரம்பித்தாள் அகல்யா.

“அகல் கொஞ்சம் பேசாம இருக்கியா. என்ன அவசரப்பட்டுட்டோம் நாம, சொல்லு அப்படி என்ன அவசரப்பட்டோம். பெரியம்மா இந்தளவுக்கு பேசுவாங்கன்னு நான் நினைச்சு கூட பார்க்கலை”

“நீ இனியும் அங்க இருந்து கஷ்டப்பட வேண்டாம்ன்னு தான் உன்னை கூட்டிட்டு வந்தேன். வரட்டும் அகிலேஷ் அண்ணா வரட்டும் உன்னைத் தேடி இங்க, அவங்களுக்கு போன் பண்ணி சொல்லிட்டு தானே உன்னை இங்க கூட்டிட்டே வந்தேன். நீ ஏன் அகல் கவலைப்படுற??”

“அண்ணன் வந்தா என்ன சொல்லுமோன்னு…”

“உங்க அண்ணா நான் செஞ்சது தான் சரின்னு சொல்லுவாரு”

“எனக்கு ரொம்ப பயமாயிருக்கு”

“உன்னோட பயம் தான் உனக்கு எதிரி. அதைத்தான் பவானி பெரியம்மா அவங்களுக்கு சாதகமாக மாத்திக்கிட்டாங்க. பெரியவங்களை மதிக்கணும் தான், அவங்க பேச்சை கேட்கலாம் நல்லதா இருந்தா. தப்புன்னா எதிர்த்து கேட்கணும் அகல்” என்றாள் இந்திரசேனா.

அவள் இவ்வளவு தூரம் மற்றவளுக்கு அறிவுரை சொன்னதிற்கு காரணமுண்டு. அகல்யாவை காண அவளின் வீட்டிற்கு சென்ற போது நடந்த நிகழ்வுகளே அதற்கு காரணம்.

அகல்யா காபி போட உள்ளே சென்றிருக்க பவானியோ அவள் மீது குறையாய் படித்தார். “சொல்றேன்னு தப்பா எடுத்துக்காத இந்தும்மா. உங்க அண்ணிக்கு அறிவுங்கறது ரொம்பவே கம்மி தான்”

“ஒரு வேலை சொன்னா எனக்கு பத்து வேலை வைக்கிறா. எதையும் அவளுக்கு ஒரு தடவைக்கு நூறு தடவை சொல்ல வேண்டியதா இருக்கு. அம்மா இருந்து வளர்த்திருந்தா எல்லாம் தெரிஞ்சிருக்கும். இப்போ நான் தான் அனுபவிக்க வேண்டி இருக்கு”

“பெரிம்மா” என்றாள் இந்திரசேனா ஒருவித அழுத்தத்துடன்.

“உன் புருஷனோட தங்கச்சியை சொல்றேன்னு உனக்கு கோபம் வரலாம் அதுக்காக இதெல்லாம் நான் சொல்லாம இருக்க முடியாது. ஒரு வேலை செய்யத்தான் அவளுக்கு நேரமெடுக்குதுன்னா குழந்தை பெத்துக்க கூட அவளுக்கு வலிக்குது”

“பெரியம்மா நீங்க பேசுறது சரியில்லை” என்றாள் இந்திரசேனா கோபமாய்.

“இங்க பாரு இந்து அவங்கப்பாவை கூப்பிட்டு நானே இதெல்லாம் சொல்லலாம்ன்னு தான் இருந்தேன். இப்போ நீ வரவும் சொல்லிட்டேன், நீ எப்படி வேணா எடுத்துக்கோ…”

“எனக்கென்னவோ இவளுக்கு மட்டும் இந்த பிரச்சனை இருக்கும்ன்னு தோணலை. இவ அண்ணனுக்கும் பிரச்சனை இருக்கும் போல அதான் நீ இன்னும் உண்டாகலை” என்று அவர் பேசவும் இந்திரசேனாவால் கோபத்தை கட்டுப்படுத்தவே முடியவில்லை.

“போதும் வாயை மூடுங்க. இதுக்கு மேல பேசுனீங்க அப்புறம் மரியாதை கெட்டு போயிடும். அகல்யாவை பேசுறதுக்கே உங்களுக்கு உரிமை கிடையாது இதுல என் புருஷனைப்பத்தி தரக்குறைவா பேச உங்களுக்கு யாரு அதிகாரம் கொடுத்தது”

“நீங்க யாரு அவரை பேசுறதுக்கு. அகல்யா உங்க மருமக பேசுனீங்கன்னு வைச்சுக்கிட்டாலும் என் புருஷனை நீங்க எப்படி பேசலாம். மருமகளை கொடுமை படுத்தறீங்கன்னு கேஸ் கொடுத்த என்னாகும் தெரியுமா”

“எல்லாம் தெரியும் நீ வாயை மூடு. இதுக்கு தான் நாங்க அப்போவே சொன்னோம். வக்கீலை எல்லாம் கல்யாணம் பண்ணாதடி வம்பு வழக்குன்னு இருப்பான்னு எங்க அந்த நாய் நாயகி கேட்டுச்சு” என்று அவர் தொடர்ந்து பேச “ஏய்…” என்று உச்சஸ்தாயில் கத்தினாள் இந்திரசேனா.

அகல்யாவோ அவர்கள் பேசுவதை ஒருவித அச்சத்துடனே பார்த்துக் கொண்டிருந்தாள். காபி போட்டுக் கொண்டிருந்தவளுக்கு வெளியே பேசும் தன் மாமியாரின் குரல் அடுக்களை வரை எட்டியதில் அடுப்பை அணைத்துவிட்டு வந்திருந்தாள் அவள் அப்போதே.

“என்னடி என் முன்னாடியே கை நீட்டுற. கண்ட நாயெல்லாம் என் வீட்டுக்குள்ள வந்துட்டு என்னையவே முறைக்குதுங்க. இதுக புத்தி இப்படின்னு தெரிஞ்சும் போய் குழியில விழுந்த என் தங்கச்சிய சொல்லணும். நாயை குளிப்பாட்டி நடுவீட்டுல வைச்சாலும் அது தெருவுக்கு தான் போகுமாம். அப்படி புத்தி தான் உன் குடும்பத்துக்கு…”

இந்திரசேனா இப்போது அவரிடம் பேசுவதை முற்றிலும் தவிர்த்தவள் “அகல்யா” என்றிருந்தாள் சத்தமாய்.

அகல்யா அவளருகே வர அவள் கையை பிடித்துக் கொண்டவள் “இனிமே நீ இந்த வீட்டில இருக்க வேண்டாம். இப்படி ஒருத்தவங்க கூட நீ ஒண்ணா ஒரே வீட்டில இப்போ மட்டுமில்ல எப்பவும் இருக்க வேண்டாம்” என்றவள் மற்றொரு கையில் இருந்த போனை எடுத்து அகிலேஷிற்கு அழைத்து பேசினாள்.

பவானி அதிகமாய் பேச ஆரம்பித்த போதே அவர் பேச்சை ரெக்கார்ட் செய்திருந்தாள் அவள். அதை அப்படியே அவனுக்கு அனுப்பியும் இருந்தாள். அவனிடம் “அகல்யாவை நான் வீட்டுக்கு கூட்டிட்டு போறேன். உங்களுக்கு உங்க பொண்டாட்டி வேணும்ன்னா நீங்க தனிய வீடு பார்த்து உங்க பொண்டாட்டி கூட்டிட்டு போய் வாழுங்க”

“இல்லை அம்மா தான் வேணும் அவங்க கூட தான் இருப்பேன், என் வாழ்க்கையை நானே கெடுத்துப்பேன்னு நீங்க நினைச்சா அதுவும் உங்க இஷ்டம் தான். நாங்க கிளம்பறோம்” என்று அவனை பேசவும் விடாது அவளே பேசி முடித்து போனை வைத்திருந்தாள்.

“ஏய் என்னடி அவளை எங்க கூட்டிட்டு போறே. போலீஸ் ஸ்டேஷன்க்கா போய் கம்பிளைன்ட் கொடுத்திருவியா” என்று பவானி பேச “இதுவரைக்கும் அப்படி எண்ணம் எனக்கு வரலை. இனிமே நீங்க நடந்துக்கறதை பொறுத்து தான் நான் முடிவெடுப்பேன்”

“உங்களை மாதிரி எடுத்தோம் கவிழ்த்தோம்ன்னு என்னால பேச முடியாது. உங்களை மாதிரி தரக்குறைவா நான் நடந்துக்கவும் மாட்டேன். இப்போதைக்கு இவளை இங்க இருந்து கூட்டிட்டு போறேன்”

“இனி அகிலேஷ் அண்ணா வந்தா தான் எந்த முடிவும் எடுப்போம். எதுவா இருந்தாலும் இனி அவர்கிட்டவே பேசிக்கறேன்” என்றுவிட்டு அகல்யாவை வீட்டிற்கு அழைத்து வந்திருந்தாள் அவள்.

———————-

“சார் நீங்க யாரு??”

“மாணிக்கவாசகம்”

“எது இந்த திருவாசகம் எழுதினாரே அவரா” என்று சொல்லி தங்களுக்குள் சிரித்துக் கொண்டனர் அங்கிருந்த புதியவர்கள். 

மாணிக்கவாசகம் அவர்களை முறைத்த முறைப்பில் சட்டென்று அடங்கிய ஒருவன் “சாரி சார் நீங்க உங்களைப்பத்தி தெளிவா சொல்லலை அதான் அவன் அப்படி பேசிட்டான். நீங்க சொல்லுங்க சார் நீங்க எங்க இருந்து வர்றீங்க. எதுக்கு கரெஸ் பார்க்கணும் சொல்றீங்க”

“என் பேரு மாணிக்கவாசகம்”

“டேய் இந்தாளு புதுசா எதுவும் சொல்ல மாட்டானாடா. என் பேரு சூர்யா என் ஊரு இந்தியான்னு தெலுங்கு பட டைட்டில் மாதிரி சொல்லிக்கிட்டு இருக்காரு” என்று சும்மாயில்லாமல் மற்றவனின் காதை கடித்தான் அருகிருந்தவன்.

“நீ கொஞ்சம் பேசாம இருக்கியா” என்று அவனை அடக்கியவன் போனை எடுத்து யாருக்கோ போட்டான். “இதோ கேட்டு சொல்றேன்” என்று ஏதோதோ பேசிவிட்டு போனை வைத்தவன் “சார் அவர் இப்போ பிசியா இருக்காராம். யாரையும் பார்க்கற மூட்ல இல்லைன்னு சொல்லிட்டார்”

“உங்க டீடைல்ஸ் விசாரிச்சுட்டு உங்ககிட்ட போன் நம்பர் வாங்கிக்க சொன்னார் சார்…” என்றான் அவன்.

“அட்வகேட் மாணிக்கவாசகம் வந்திருக்கேன்னு அவர்கிட்ட சொல்லுங்க. அவரோட பொண்டாட்டியோட சித்தப்பான்னு சொன்னா அவருக்கு இன்னும் நல்லா ஞாபகம் வந்திடும்”என்று அவர் சொல்லவும் அங்கிருந்த இருவரும் என்று விழித்தனர். 

Advertisement