Advertisement

3

ஆத்திசூடி – கடிவது மற

பொருள் – யாரையும் கோபத்தில் கடிந்து பேசிவிடாதே

அபராஜிதன் தூக்கி எறிந்த காகிதத்தையே வெறித்துக் கொண்டிருந்தான். அதீத கோபத்தில் இருந்தான் அவன், ஒரு ஆழ்ந்த மூச்சை உள்ளெடுத்து பின் வெளியேற்றினான்.

கோபம் சற்று மட்டுப்பட்டதாக உணர்ந்தான். தந்தைக்கு போன் செய்ய போனவன் அழைக்காமலே நிறுத்திவிட்டான்.

‘நாம பொறுப்பெடுத்து சந்திக்கிற முதல் பிரச்சனை இதை நாமே சரி பண்ணுறது தான் நல்லது. இப்போ அப்பாவை கூப்பிட்டா ஒவ்வொண்ணுக்கும் அவரோட துணையை தான் தேடும். இது ஒரு சின்ன பிரச்சனை நம்மால முடியும்’ என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டான்.

பிரின்சிபாலை அழைத்தான் தன்னை வந்து பார்க்கும் படி. மெல்ல கதவை தட்டியவர் உள்ளே வந்தார். “உட்காருங்க சார்” என்றதும் அவர் இவனை பார்த்தார். வயதில் இவன் தந்தையை ஒத்தவர். 

“சார் நம்ம ஸ்கூல்ல டொனேஷன் எல்லாம் வாங்குறோம்ல” என்று ஆரம்பித்தான்.

“ச்சே ச்சே இல்லை சார். நம்ம கரிகாலன் சார் ஸ்கூல் ஆரம்பிச்சதுல இருந்து நான் இங்க இருக்கேன். இதுவரைக்கும் அப்படியொரு சம்பவமே நடந்ததில்லை சார். ஏன் உங்களுக்கு தான் தெரியுமே, நீயும்…” என்று விட்டு “நீங்களும் இங்க தானே படிச்சீங்க. நம்மோட இன்னொரு ஸ்கூல்ல நீங்க வேலையும் பார்த்து இருக்கீங்களே. உங்களுக்கே தெரிஞ்சு இருக்குமே” என்று நீளமாக விளக்கம் கொடுத்தார் அவர்.

“ஆர் யூ ஷ்யூர்”

“இதுல என்ன டவுட் அபி?? சாரிப்பா பழைய ஞாபகத்துலவே கூப்பிட்டு இருக்கேன்”

“நான் எப்பவும் உங்க பழைய அபி தான் சார். நீங்க அப்படியே கூப்பிடுங்க. சோ அப்படி எதுவும் இல்லைன்னு சொல்றீங்க??”

“ஆமாப்பா அப்படி எதுவும் இல்லவே இல்லை”

“இதை பாருங்க” என்று அவரிடம் அவன் சற்று முன் கசக்கி எறிந்த காகிதத்தை சரி செய்து வைத்ததை நீட்டினான்.

“என்னப்பா இது??”

“படிச்சுப் பாருங்க” என்றுவிட்டு இருக்கையில் சாய்ந்து அமர்ந்தான்.

படித்து முடித்தவரின் முகம் இருண்டிருந்தது. “உங்க கருத்து என்ன அங்கிள்??”

“அ… அது எனக்கு புரியலை தம்பி யார் இப்படி செஞ்சிருப்பாங்க”

“யார் செஞ்சிருப்பாங்கன்னு உங்களுக்கு தெரியலையா அங்கிள். லெட்டர் அனுப்பினது நம்ம ஸ்கூல்க்கு சீட் கேட்டு வந்த யாரோ ஒருத்தர்”

“அது தெரியுது தம்பி அவருக்கு நம்மகிட்ட என்ன பிரச்சனை??”

“அதுவும் தான் அந்த நோட்டீஸ்ல தெளிவா இருக்கே அங்கிள்”

“தம்பி நான் அதை சொல்லலை. நம்ம ஸ்கூலோட வளர்ச்சி பிடிக்காத யாரோ தான் இப்படியெல்லாம் செய்யறாங்கன்னு நினைக்கிறேன் தம்பி” என்று அவர் சொல்லவும் அவன் எண்ணமும் அப்படியும் இருக்குமோ என்று நினைக்க ஆரம்பித்தது.

“ஓகே அங்கிள் நான் உங்ககிட்ட இதை தெளிவுப்படுத்திக்கத்தான் கேட்டேன். நான் பார்த்துக்கறேன் அங்கிள்”

“தம்பி அப்பாகிட்ட??”

“நான் ஸ்கூல் டேக் ஓவர் பண்ணதும் சந்திக்கற முதல் பிரச்சனை இதுக்காக அப்பாவை டிஸ்டர்ப் பண்ணணுமான்னு பார்க்கறேன். நான் பார்த்துக்கறேன் அங்கிள் நீங்க உங்க வேலையை பாருங்க” என்று அவன் சொல்லவும் அவனை திரும்பி பார்த்தவாறே வெளியேறி சென்றுவிட்டார் அவர்.

—————–

அன்று மிக முக்கியமான நாள் இருவருக்கு. ஒன்று நம் நாயகன் இன்னொருவர் சொல்ல வேண்டுமா அது இந்திரசேனாவே தான். இருவரும் ஒருவரை ஒருவர் சந்திக்கப் போகும் நாள்.

அவர்கள் வாழ்வை மாற்றியமைக்க போகும் நாள். தெரிந்திருந்தால் இருவருமே அந்நாளை கடந்து போயிருப்பார்களோ பார்ப்போம் இருவரின் எண்ணமும் என்னவென்று.

அபராஜிதன் காலையிலேயே வீட்டிலிருந்து கிளம்பியிருந்தான். காலை உணவு வேளையின் போது கரிகாலன் மகனின் முகத்தை பார்த்துவிட்டு கேட்டார். “என்ன அபி எதுவும் பிரச்சனையா??”

“ஒண்ணுமில்லைப்பா??”

“இல்லை ஏதோ யோசனையா இருக்கியே அதான்”

“அகல்யா கல்யாணம் நெருங்கி வருதுலப்பா அதான்”

“அதான் நான் பத்திரிகை கொடுக்க போயிட்டு வர்றேனேப்பா. அது தான் வேணாம்ன்னு சொல்றேன், நீங்க எதுக்குப்பா அலையறீங்க”

“பின்னே பொண்ணு கல்யாணம்ன்னா அப்பாவுக்கு அலைச்சல் இருக்காதா??” என்றவாறே வந்து சேர்ந்தாள் கல்யாணப்பெண் அகல்யா.

“நீ கொஞ்சம் அப்பாக்கு ஹெல்ப் பண்ணலாம்ல”

“ஏன் அண்ணா கல்யாண பொண்ணேவா பத்திரிகை கொடுக்க போவாங்க??”

“நீ சொல்றது சரி தான். அக்காவை சீக்கிரம் கிளம்பி வரச்சொல்லி இருக்கலாம்ப்பா நீங்க??” என்றான் தன் தந்தையை பார்த்து.

“பெரியவனுக்கு எக்ஸாம் நடக்குதுல, முடிஞ்சதும் வருவா. நேத்து பேசினப்போ சொன்னாப்பா”

“சரிப்பா நான் இன்னும் ரெண்டு நாள்ல எல்லா வேலையும் முடிச்சுட்டு ப்ரீ பண்ணிக்கறேன். அப்புறம் நாம சேர்ந்தே போவோம்ப்பா. அகல்யாக்கு இன்னும் வாங்க வேண்டிய திங்க்ஸ் எல்லாம் இருக்குலப்பா”

“ஆமா அபி சரி நீ ஸ்கூல்க்கு கிளம்புப்பா நான் பார்த்துக்கறேன்” என்றார் கரிகாலன்.

வெளியே வந்த பிறகு தான் அவனால் நிம்மதியாக மூச்சுவிட முடிந்தது. தந்தை தன்னை கண்டுக்கொண்டு கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டார். வேறு பேச்சை ஆரம்பித்து அதை திசை திருப்பிவிட்ட பெருமை அவனையே சேரும்.

‘இந்த பிரச்சனை சால்வ் ஆகட்டும் அப்புறம் அப்பாகிட்ட சொல்லணும்” என்று எண்ணிக்கொண்டே வண்டியை விரைந்து செலுத்தினான்.

மாணிக்கவாசகம் அண்ட் அசோசியேட்ஸ் என்ற பெயர் பலகையை பார்த்தவாறே பைக்கை அங்கு நிறுத்தினான். இந்திரசேனா அப்போது தான் வந்தவள் கதவை திறந்து உள்ளே சென்றாள்.

‘இப்போ தான் திறக்கறாங்க போல, கொஞ்ச நேரம் ஆகட்டும்’ என்று எண்ணியவாறே அங்கே சில நிமிடம் நின்றிருந்தான். பின் மெதுவாய் கதவை தட்டிவிட்டு அவன் நுழைய “உள்ள வாங்க சார்” என்றாள் இந்திரசேனா.

“மாணிக்கவாசகம்??”

“சார் இனிமே தான் வருவாரு நீங்க வாங்க, உட்காருங்க” என்று இருக்கையை காட்டினாள்.

“எப்போ வருவார்??”

“இன்னைக்கு காலையில ஒரு ஹியரிங் இருக்கு. சார் அங்க போயிருக்கார், முடிஞ்சதும் ஒரு பதினோரு பன்னிரண்டு மணிக்கு வந்திடுவார்”

“ஓ!! லேட் ஆகுமா அப்போ… நீங்க??”

“அவரோட ஜீனியர் இந்திரசேனா”

“நீங்க என்ன நினைக்கறீங்கன்னு எனக்கு புரியுது சார். ஜீனியர்ன்னு சொல்லிட்டு கோர்ட்டுக்குபோகாம இங்க இருக்கனேன்னு தானே யோசிக்கறீங்க. இங்க ஒரு கிளையன்ட் வருவாங்க நீ டீடைல்ஸ் கலெக்ட் பண்ணி வைன்னு சார் சொன்னார் அதான் இங்க இருக்கேன்”

அவனோ “நான் எதுவும் நினைக்கவே இல்லையே” என்று சொல்லி அவளுக்கு பல்பு கொடுக்க ‘போடா’ என்று திட்டிக்கொண்டாள்.

“ஓகே நீங்க வந்த விஷயம்??” என்றாள் அவளும் கட்டன் ரைட்டாக.

“அதை அவர்கிட்ட் பேசிக்கறேன்” என்று அவன் சொன்னதில் அவள் தன்மானம் சீண்டப்பட “என்னன்னு சொல்லிட்டு போங்க சார். அப்போ தான் சார் வந்தா நான் சொல்ல முடியும்”

“காந்திமதி ஹையர் செகண்டரி ஸ்கூல்ல இருந்து வந்து போனேன்னு சொல்லுங்க. என் பேரு அபராஜிதன் ,இது என்னோட கார்ட்” என்று அவளிடம் நீட்டினான்.

“ஓ!! அந்த நோட்டீஸ் விஷயமா வந்தீங்களா. அதுக்கு லெட்டர் டைப் பண்ணதே நான் தான். ஒரு கிராமர் மிஸ்டேக் கூட இல்லையில. ஆமா நீங்க யாரு ஸ்கூல் சார்பா வந்திருக்கீங்களா, வக்கீலா?? பார்த்தா அப்படி தெரியலையே… ஸ்கூல்ல வேலை பார்க்கறீங்களா??” என்று அவள் வளவளக்கவும் அவனுக்கு அப்படியொரு கோபம் வந்தது.

“என்னை பார்த்தா எப்படி தெரியுது உனக்கு?? நான் அந்த ஸ்கூலோட கரெஸ்பான்டன்ட் மரியாதையா பேசுங்க”

அவன் அப்படி சொல்லவும் அவள் இப்போது அவனை முறைத்தாள். “இருந்துட்டு போங்க அதுக்காக உங்க கால்லயா நான் விழ முடியும். நான் இப்போ என்ன மரியாதை குறைவா பேசிட்டேன்”

“உன்கிட்டலாம் எனக்கென்ன பேச்சு நான் மாணிக்கவாசகம் வரவும் பேசிக்கறேன்” என்றுவிட்டு கிளம்பினான் அவன்.

“ஹலோ அவர் என்னோட சீனியர் அவரை மரியாதை இல்லாம பேசுறதை நான் அனுமதிக்க முடியாது”

“ஸ்கூல்ல என்ன நடக்குது ஏது நடக்குதுன்னு எதுவும் தெரிஞ்சுக்காம எவனோ ஏதோ சொன்னான்னு ஸ்கூல்க்கு நோட்டீஸ் அனுப்பினவருக்கு எல்லாம் என்னால மரியாதை கொடுக்க முடியாது” என்றான் அவன்.

அவனுக்கு தான் பொறுப்பேற்று சந்திக்கும் முதல் பிரச்சனை அதை சரி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் அவன் சற்று காட்டமாகவே பேசினான்.

அவளுக்கோ தன் சீனியரை அவன் மரியாதை குறைவாக பேசுகிறான் என்று ஆரம்பித்த கோபம், அவன் இறுதியில் பேசியதில் இன்னும் அதிகமாகியது. பின்னே அவர்கள் எதையும் சரிவர தெரியாமலா ஒரு விஷயத்தில் இறங்குவார்கள்.

என்னவோ எல்லாம் எனக்கு தான் தெரியும் என்ற ரீதியில் அவன் பேசுவது அவளுக்கு எரிச்சலைக் கொடுக்க அவளும் சூடாகவே பதில் கொடுத்தாள்.

“உங்க ஸ்கூல் பத்தி எங்களுக்கு எதுவும் தெரியாதுன்னு நினைச்சீங்கலா. உங்களுக்கு தான் எங்க சீனியர் பத்தி எதுவும் தெரியலை, எங்களை சொல்ற நீங்க முதல்ல சரியா இருக்கீங்களா”

“நான் ஒண்ணும் எதையும் விசாரிக்காம நோட்டீஸ் அனுப்பலை. எது உண்மையோ அதை நல்லா விசாரிச்சு தான் அனுப்பியிருக்கோம். சும்மா இங்க வந்து கத்துற வேலை வைச்சுக்காதீங்க”

“நீங்க தப்பே பண்ணலைன்னா பதில் நோட்டீஸ் அனுப்ப வேண்டியது தானே. நேரா எதுக்கு வந்தீங்க கையில கால்ல விழவா” என்று அவள் பேசவும் அவனின் ஈகோ நன்றாகவே சீண்டப்பட “வாயை மூடு” என்றான் அவன் சத்தமாகவே.

“மூடலைன்னா என்ன செய்வே”

“அதுக்கான பலனை நீ அனுபவிப்பே??”

“உன்னை மாதிரி நிறைய பேரை நாங்க பார்த்தாச்சு. நீ கிளம்பு, இன்னும் இரண்டு நாள்ல நோட்டீஸ்க்கு பதில் வரலைன்னா நான் அடுத்த ஆக்சன்ல இறங்கிடுவோம்” என்றாள்.

“பதில் சொல்லலைன்னா அடுத்த கட்டமா என்ன செய்வீங்க” என்று இரு கைகளையும் கட்டிக்கொண்டு தோரணையாய் நின்றுக்கொண்டு ‘உங்களால் என்ன முடியும்’ என்ற தினுசில் அவன் கேட்க முறைத்தாள் இந்திரசேனா.

“எதுவும் பண்ண முடியும்??”

“அதான் என்ன??”

“என்ன செய்யப் போறோம்ன்னு உங்ககிட்ட சொல்ல வேண்டிய அவசியமில்லை. இப்போ நீங்க கிளம்புங்க”

“என்னை வெளிய போடான்னு சொல்றியா??” என்றான் கோபமாய்.

“அப்படியும் வைச்சுக்கலாம்”

“உன்னை அப்புறம் வைச்சுக்கறேன்”

“உங்க பூச்சாண்டி எல்லாம் வெளிய போய் காட்டுங்க சார். நான் ஒண்ணும் பச்சை குழந்தையில்ல நீங்க சொல்றதை கேட்டு பயப்பட”

“நீ ரொம்ப பேசறே??”

“நீங்க தான் என்னை பேச வைக்கறீங்க. இடத்தை காலி பண்ணுங்க சார், ஒரு நோட்டீஸ்க்கே இப்படி பதறியடிச்சு வந்து நிக்கற ஆளை இன்னைக்கு தான் பார்க்கறேன்” என்றாள் அவள்.

“என்னடி அதிகமா பேசறே?? என்னடி பெரிய நோட்டீஸ் நோட்டீஸ்ன்னு பயமுறுத்தற. அந்த நோட்டீஸையே ஒண்ணும் இல்லாம பண்றேன் பார்க்கறியா??” என்று சவால்விட்டான் அவன்.

அவள் பேசியதில் அவன் தன்மானம் சீண்டப்பட பதில்க்கு பேசிவிட்டவனை “போடா” என்று அவள் சொல்லிவிட கோபத்துடன் வெளியேறினான் அவன்.

—————

“சித்தா…” என்று கத்தியவாறே வீட்டிற்குள் நுழைந்தாள் இந்திரசேனா. 

அவளுக்கு அப்படியொரு கோபம் அதை தணிக்க முடியாதவளாய் காளி ரூபமாய் கிளம்பி வீட்டிற்கு வந்திருந்தாள் அவள்.

அபராஜிதன் சொன்னதை செய்துவிட்டான் நடந்ததை ஒன்றுமே இல்லாததாக ஆக்கிவிட்டான். அதை அவளிடமே வந்து சொல்லவும் செய்தான். அவளின் சீனியர் விலை போய் விட்டார் என்று இகழ்ந்து கேலி பேசினான் அவன்.

Advertisement