Advertisement

29

ஆத்திசூடி – சையெனத் திரியேல்

பொருள் – பெரியோர்கள் நம்மை வெறுக்கும் படி வீணாய்த் திரியாதே

அபராஜிதன் காலையில் நேரமாகவே பள்ளிக் கிளம்பிச் சென்றிருந்தான். இரண்டு நாட்களாகவே அவன் இப்படித்தான் கிளம்பிவிடுவதால் இந்திரசேனாவும் பெரிதாய் எதுவும் கண்டுக்கொள்ளவில்லை.

பள்ளி ஆண்டு விழா வருவதாக ஒரு வாரம் முன்பே கூறியிருந்தான். ஆண்டு விழா அன்று இந்திரசேனா தன்னுடன் கட்டாயம் வர வேண்டும் என்று முன்பே சொல்லியிருந்தான்.

விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களை அழைக்க மேற்பார்வை செய்யவென்று அவன் சற்று பரபரப்பாகவே சுற்றிக் கொண்டிருந்தான். 

“ஏங்க சாப்பிடாம கூட கிளம்புறீங்க. ரொம்பவும் அவசரமான வேலையா” என்று மட்டும் அவனிடத்தில் கேட்டிருந்தாள்.

“ஒண்ணுமில்லை பசிக்கலை இப்போ. வேலை முடிச்சுட்டு நான் சாப்பிட்டுக்கறேன்” என்றவன் என்றுமில்லாது அன்று பதட்டமாக இருந்தான். 

வேலையில் அப்படியிருக்கிறான் என்று தான் அவள் எண்ணிக் கொண்டிருந்தாள். அடுத்தொரு பெரிய பூகம்பம் வரப்போவது அறியாது. அவளும் எல்லா வேலையும் முடித்து நீதிமன்றத்திற்கு கிளம்பிக் கொண்டிருக்க அகல்யா வந்திருந்தாள்.

“ஹேய் அகல் வா வா என்ன காலையிலேயே வந்திருக்க” என்று சந்தோசமாகவே தன் நாத்தனாரை வரவேற்றாள் இந்திரசேனா.

வந்தவளின் முகமோ சோர்ந்திருந்தது, களைப்பு மட்டுமல்லாது வேறு ஏதோ இருந்தது, அழுதிருப்பாளோ என்ற சந்தேகம் இருந்தது அவளுக்கு.

“காபி சாப்பிடறியா அகல் களைப்பா இருக்கே??” என்ற அவளின் கேள்விக்கும் பதில் இல்லை அவளிடத்தில். அங்குமிங்கும் எதையோ தேடியது அவளின் கண்கள்.

“என்ன தேடுறே அகல்யா??”

“அண்ணன் எங்கே??”

“ஸ்கூல்க்கு கிளம்பிட்டாங்க காலையிலேயே ஆன்னுவல் டே வருதுல ஸ்கூல்ல அதுக்கு வேலை இருக்கும் போல அதான்”

“ஓ!!” என்றவள் “சரி நான் கிளம்பறேன்” என்று எழுந்திருந்தாள். வாயில் வரை சென்றுவிட்டவளை தடுக்காது முறைத்தவாறே நின்றிருந்தாள் இந்திரசேனா.

வெளியில் சென்று காலனியை மாட்டப் போனவள் நின்று இந்திரசேனாவை பார்க்க அவள் இருந்த இடத்தைவிட்டு அசையாது மற்றவளை குற்றம் சாட்டும் பார்வை பார்த்திருக்க வேகமாய் உள்ளே ஓடி வந்தவள் அவளைக் கட்டிக்கொண்டு அழ ஆரம்பித்திருந்தாள்.

இந்திரசேனாவிற்கு பதறிப்போனது, “அகல்யா எதுக்கு அழறே?? என்னாச்சுன்னு சொல்லு, அண்ணாகிட்ட எதுவும் சண்டையா?? என்னன்னு சொல்லு??” என்று கேட்கவும் அழுகையினூடே நடந்ததை சொல்லியிருந்தாள்.

அதை கேட்ட இந்திரசேனாவிற்கு கொதித்துக் கொண்டு வந்தது. “பெரியம்மாவுக்கு ஏன் இப்படியெல்லாம் யோசிக்க தோணுதுன்னு தெரியலையே. கேட்க யாருமில்லைன்னு நினைச்சாங்களா, நான் கேட்கறேன். நீ வா என் கூட” என்றவள் மற்றவளை கிளப்பினாள்.

“வேணாம் இந்து நான் இங்க வந்தது அவங்களுக்கு தெரியாது. கோவிலுக்கு போறேன்னு சொல்லிட்டு ஆட்டோ பிடிச்சு இவ்வளவு தூரம் வந்திட்டேன், வீட்டுக்கு போகணும்”

“லூசு மாதிரி பேசாத, அவங்களை அப்படியே சும்மாவிட சொல்றியா நீ. குழந்தை என்ன வானத்துல இருந்து உடனே குதிச்சுடுமா?? கல்யாணம் ஆகி ஒரு வருஷம் கூட முழுசா முடியலை”

“அதுக்குள்ள குழந்தை குழந்தை எதுக்கு பறக்கறாங்க. கல்யாணம்ங்கறதே குழந்தை பெத்துக்கத்தானா, நாம என்ன மெஷினா??” என்று அவள் பொரிய அவளை சமாளிப்பது தான் தற்போது அகல்யாவிற்கு பெரிய கவலையாக இருந்தது.

அவள் வீட்டில் கூட இப்படித்தான் அவள் மயங்கி விழுந்துவிட்டாள் என்றதும் குழந்தையா குழந்தையா என்று கேட்டதும் அதன்பின்னும் சும்மாயில்லாது மருத்துவரை வேறு விசாரித்து பின் இவளிடமும் விசாரித்து அவர்கள் நன்றாகவே வாங்கி கட்டிக் கொண்டார்கள் மகளிடத்தில்.

எல்லாருக்கும் ஒரு எதிர்பார்ப்பு இருக்கத்தான் செய்யும் அதை மறுப்பதற்கில்லை. அவர்களின் எதிர்பார்ப்பை மற்றவர்களின் மீது திணிப்பது தவறில்லையா.

“நீ கிளம்பு அகல் இன்னைக்கு பெரியம்மாவை நான் பார்த்தே ஆகணும்” என்று பிடிவாதமாய் அவள் நிற்க அகல்யாவினிடத்தில் இருந்து அழுகை தான் வெளிப்பட்டது.


“நீ ஏன் இப்படி இருக்கே அகல்யா. அவங்களை அங்கேயே லெப்ட் அண்ட் ரைட் வாங்கியிருக்கணும் நீ. இப்போ வந்து அழுத்திட்டு இருக்கே, அகிலேஷ் அண்ணா இதெல்லாம் கேட்காம என்ன பண்றாங்க”

“அவங்க கேட்டாங்க, அம்மாவுக்கும் புள்ளைக்கும் கூட சண்டை தான் தினமும். நான் தான் அவங்ககிட்ட சொல்லித்தர்றேன்னு அதுக்கும் என்னை திட்டுறாங்க. நான் என்ன செய்வேன்”

“நீ பேசலையா அவங்ககிட்ட”

“பேசினா மட்டும் என்ன நடக்கப் போகுது சொல்லு. நானே நொந்து போயிருக்கேன் இந்து. எனக்குமே குழந்தை எப்போ வரும்ன்னு ஆசையா தான் இருக்கு. ஒவ்வொரு மாசமும் இந்த மாசமாச்சும்  நாள் தள்ளிப்போகாதா போகாதான்னு ஏக்கமா இருக்கு??”

“முதல்ல நீ அந்த நினைப்பை நிறுத்து அகல்யா. குழந்தை வேணும் தான் இல்லைன்னு சொல்லலை. அது நடக்கும் போது தன்னால நடக்கும். அவங்க பேசிப்பேசி உன்னையும் இப்படி ஆக்கி வைச்சிருக்காங்கன்னு நினைக்கிறேன். அதான் நீ இப்படி மந்திரிச்சுவிட்ட மாதிரி இருக்கே” என்று பொருமினாள்.

அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே அகல்யாவின் கைபேசி ஒலியெழுப்பியது. “யாரு??”

“அவர் தான்”

“என்னவாம் கொடு என்கிட்ட??”

“இல்லையில்ல இந்து அவர் பாவம்” என்றவள் போனை அட்டென்ட் செய்து காதில் வைத்தாள்.

“வந்திடறேன்ங்க, ஹ்ம்ம் சரி வெயிட் பண்ணுறேன்”

“என்ன சொல்றாங்க??”

“அவங்களே வந்து அழைச்சிட்டு போறாங்களாம்”

“நீ இங்க வந்தது அவங்களுக்கு தெரியுமா”

“தெரியும் சொல்லிட்டுத்தான் வந்தேன்”

“சும்மா போயிட்டு வர்றேன் எனக்கு மனசு சரியில்லைன்னு சொன்னேன். சரி போயிட்டு வான்னு சொல்லி அனுப்பி வைச்சாங்க”

“கிளம்பும் போதும் அத்தை திட்டினாங்களா அதான் வந்ததும் நான் பாட்டுக்கு ஏதேதோ உளறிட்டேன். நீ எதையும் மனசுல வைச்சுக்காத இந்து. அங்க வந்து எதுவும் பிரச்சனை எல்லாம் பண்ணிடாதே ப்ளீஸ்”

ஒரு நீண்ட பெருமூச்சு இப்போது மற்றவளிடத்தில். “சரி நான் எதுவும் பேச மாட்டேன். ஆனா இன்னைக்கு நான் அங்க வருவேன்” என்றாள் தீர்மானமாய்.

“நீ வர்றது எனக்கு சந்தோசம் தான், ஆனா நீ எதுவும் சொல்லிட மாட்டல்ல”

“நானா வாய திறந்து அவங்ககிட்ட இதைப்பத்தி பேச மாட்டேன்” என்றாள் அவள்.

“அது போதும் எனக்கு” என்று நிம்மதியானாள் மற்றவள். அகிலேஷும் அப்போது வர இந்திரசேனா அவனிடத்தில் எதையும் காட்டிக்கொள்ளவில்லை. சாதாரணமாகவே உபசரித்து அனுப்பினாள்.

“ஈவ்னிங் நான் வீட்டுக்கு வந்து பார்க்கறேன் அண்ணா. பெரியம்மாவை பார்த்து நாளாச்சு” என்று அவள் சொல்லவும் மற்றவன் திரும்பி மனைவியை பார்த்தான் கேள்வியாய்.

“என்ன அண்ணா நான் உங்ககிட்ட சொல்லிட்டு இருக்கேன். நீங்க அகல்யாவை பார்க்கறீங்க. வா வான்னு கூப்பிடுவீங்கன்னு வர்றேன்னு சொல்றேன் வர வேணாம்ன்னு சொல்ற மாதிரி இருக்கே  உங்க பார்வை”

“இந்தும்மா நான் ஏன் அப்படி நினைக்க போறேன். நீயெல்லாம் எங்களைத் தேடி என்னை வந்திருக்கே சொல்லு, கெஞ்சி கூப்பிட்டா கூட வரமாட்டே, திடிர்ன்னு வர்றேன்னு சர்ப்ரைஸ் கொடுக்கவும் அவளை என்ன விஷயம்ன்னு கேட்கத்தான் பார்த்தேன்”

“சும்மா தான் அண்ணா அவர் வர்றதுக்கு லேட்டாகுது. வீட்டில நான் மட்டும் தனியா மொட்டு மொட்டுன்னு அவர் வர்ற வரைக்கும் சும்மா உட்கார்ந்திட்டு இருக்கேன். இன்னைக்கு கோர்ட் லீவ் தானே, ஒன்லி கிளையன்ட்ஸ் மீட் தான், அதுக்கு எவ்வளவு நேரம் ஆகும்ன்னு சொல்லுங்க”

“அம்மா வீட்டுக்கு போகலாம்ன்னு நினைச்சேன். இப்போ தானே அங்க அவ்வளவு நாள் இருந்திட்டு வந்தேன். அதான் உங்க வீட்டுக்கு வரலாம்ன்னு நினைச்சேன்” என்று நீண்டதொரு விளக்கம் கொடுத்தாள் அவள்.

அதற்கு மேல் அவனுக்கு வேறு எதுவும் தோன்றவில்லை. அவள் யார்த்தமாய் தான் கேட்கிறாள் என்று தான் தோன்றியது அவனுக்கு.

மாலை வேலை முடிந்து வீட்டிற்கு வந்த இந்திரசேனா குளித்து முடித்து வேறு உடைக்கு மாறியவள் கணவனுக்கு அழைக்க அழைப்பு தொடர்ந்து கொண்டிருந்ததே தவிர அவன் எடுத்த பாடில்லை. 

இரண்டு மூன்று முறை தொடர்ந்த அழைப்பை விடுத்தும் அவன் பதிலளிக்காததால் சரி வேலையில் பிசியாக இருக்கிறான் போலும் அதான் அழைப்பை ஏற்கவில்லை என்று புரிந்து அகல்யா வீட்டிற்கு செல்வதாக அவனுக்கு மெசேஜ் செய்துவிட்டு கிளம்பியிருந்தாள்.

“வா இந்து என்ன அதிசயமா இந்தப்பக்கம் உன் காத்தடிக்குது” என்ற பவானியின் குரலில் மருந்துக்கும் அழைப்பில்லை என்பதை உணர்ந்தாள் இந்திரசேனா.

“ஏன் பெரியம்மா நான் இங்கெல்லாம் வரக்கூடாதா. இதுக்கு முன்னாடி நான் வந்ததில்லையா??” என்றாள் அவளும் அவரைப் போலவே கத்தரித்த குரலில்.

“இதுக்கு முன்னாடி நீ இந்த வீட்டு பொண்ணா வந்தே. இப்போ அப்படியா??”

“வேற எப்படி??”

“என்னம்மா பேச்சு ஒரு மாதிரியா இருக்கு. நீ இப்படி பேசுற பொண்ணில்லையே. என்னாச்சு??” என்று அவர் குரல் உயரவும் அகல்யா அங்கு வரவும் சரியாக இருந்தது.

“வா இந்து வாசல்லையே நின்னுட்டு இருக்க உள்ள வா” என்றாள் அகல்யா.

“என்னைத்தான் உள்ளவே வரவிடாம பெரியம்மா பேசிக்கிட்டு இருக்காங்களே அப்புறம் எப்படி வர்றதாம்”

“நான் என்ன உன் கையை புடிச்சா தடுத்தேன்”

“உள்ள வான்னு நீங்க கூப்பிடவே இல்லையே”

“வான்னு சொன்னேனே”

“உள்ள வான்னு சொல்லலையே வாசல்ல நிக்க வைச்சு தானே கேள்வி கேட்டீங்க. சரி சரி சும்மா விளையாடினேன் பெரியம்மா, வாங்க உள்ள போவோம்” என்று சூழ்நிலையை அவளே இயல்பாக்கி உள்ளே நுழைந்தாள் அகல்யாவின் முகம் பார்த்து.

“நீ என்ன எங்களை வேடிக்கை பார்த்திட்டு மசமசன்னு நிக்கறே போ போய் அவளுக்கு காபி போட்டு கொண்டு வா” என்று மருமகளை விரட்டினார் பவானி.

“பெரியம்மா பெரியம்மா அதெல்லாம் வேண்டாம்”

“நீ சும்மாயிரு இந்து வராதவ வந்திருக்கே. உன்னை உபசரிக்க வேணாமா. இவ இப்படித்தான் எல்லாத்துலயும் ரொம்ப ஸ்லோ…” என்று இரு பொருள்பட பேசினார் அவர்.

“ஸ்லோ வின்ஸ் தி ரேஸ்ன்னு தெரியாதா பெரியம்மா” என்றாள்.

“நிதானம் முக்கியம் தான் ரொம்பவும் நிதானமா இருக்ககூடாதுல. அவளுக்கு சொல்லிக்கொடுக்க அம்மாவா இருக்காங்க. நான் தானே சொல்லித் தரணும்” என்று அவள் சொல்லவும் இந்திரசேனாவின் பொறுமை கொஞ்சம் தகர்ந்தது.

தனியே கிளம்பி வந்திருந்த இந்திரசேனா திரும்பி செல்லும் போது அகல்யாவையும் உடன் அழைத்து வருவோம் என்று நினைத்திருக்கவில்லை. இனி…

Advertisement