Advertisement

27

ஆத்திசூடி – அறனை மறவேல்

பொருள் – தருமத்தை எப்போழுதும் மனதில் நினைக்க வேண்டும்

இந்திரசேனா கண் விழித்த போது அபராஜிதன் அவள் கைப்பிடித்து அமர்ந்திருந்த தோற்றம் தான் கண்ணில் விழுந்தது.

தலை கனத்தது அவளுக்கு, ‘என்னாச்சு தலை வலிக்குது எனக்கு. இவர் இங்க என்ன பண்றாரு’ என்று யோசித்தவள் அதை அவனிடத்தில் கேட்கவும் செய்தாள்.

“என்னாச்சு எதுக்கு இப்படி உட்கார்ந்து இருக்கீங்க??” என்றாள் சோர்வாய்.

அபராஜிதன் ஒன்றும் சொல்லாது எதிரில் பார்க்க ‘நான் பாட்டுக்கு கேட்டுட்டு இருக்கேன் இவர் எங்க பார்க்கறாரு’ என்று நினைத்துக் கொண்டவள் அப்போது தான் சுற்றுப்புறம் உணர்ந்தாள்.

“இந்தும்மா” என்று கலங்கிய குரல் கேட்கவும் அவள் பார்க்க அங்கு அவள் அன்னை சாதனாவும், நாயகிம்மாவும் இருந்தனர்.

“நீங்கலாம் இங்க என்ன பண்றீங்க??”

“என்னாச்சு இந்து உனக்கு நீ தான் திடீர்ன்னு மயக்கம் போட்டு விழுந்திருக்கே. உங்க வீட்டில குடி இருக்கவங்க தான் பார்த்திட்டு மாப்பிள்ளைக்கு போன் பண்ண அவர் வந்து உன்னை ஆஸ்பிட்டல்ல சேர்த்திட்டு எங்களுக்கு போன் பண்ணி சொன்னாரு. என்னாச்சுடா உனக்கு??” என்று நாயகிம்மா தழுதழுத்த குரலில் கேட்கவும் தான் எதற்கு மயங்கி விழுந்திருப்போம் என்ற நினைவு வந்தது அவளுக்கு. திரும்பி அவளருகே அமர்ந்திருந்தவனை பார்த்தாள்.

அவன் கண்களில் அப்படியொரு கவலை தெரிந்தது. அது பொய்யில்லை என்பதை அவளால் உணர முடிந்தது. ஆனாலும் அவன் பேசியதெல்லாம் அவளால் மறக்கவே முடியவில்லை. அவனை அவர்களின் முன் காட்டிக்கொடுக்க அவளுக்கு விருப்பமில்லை.

கணவன் மனைவிக்குள் நடக்கும் சின்ன சின்ன சண்டைகளுக்கெல்லாம் வீட்டினரை பஞ்சாயத்துக்கு அழைக்கும் ரகம் அவளல்லவே.

‘நாம சொல்லலைன்னா டாக்டர் எதுவும் சொல்லியிருக்க வாய்ப்பிருக்கா’ என்ற யோசனை ஓடவும் மருத்துவர் வரவும் சரியாய் இருந்தது.

அகத்தியனும் அப்போது உள்ளே வந்திருந்தார். “ஹலோ டாக்டர்” என்றவாறே உள்ளே நுழைந்தவரை மற்றவருக்கு அடையாளம் தெரிந்திருந்தது.

“அகத்தியன் தானே”

“ஆமா…”

“என்ன இந்த பக்கம்??”

“என்னோட பொண்ணு” என்று இந்திரசேனாவை நோக்கி கை காட்டியவர் “என்னாச்சு இவளுக்கு தலையில அடிபட்டு ஆஸ்பிட்டல்ல சேர்ந்திருக்கோம்ன்னு மாப்பிள்ளை போன் பண்ணவும் ஓடி வர்றேன்”

“நத்திங் பெரிசா எதுவும் அடிபடலை. சின்ன கல்லு ஒண்ணு தலையில குத்தினதுல கொஞ்சம் ப்ளீட் ஆகியிருக்கு. ப்ளட் லாஸ் ரொம்ப இல்லை, தலையும் ஸ்கேன் பண்ணி பார்த்தாச்சு. எதுவும் இல்லை, அவங்க நார்மலா தான் இருக்காங்க”

“ஸ்டிச்சஸ் எதுவும் போட்டிருக்கீங்களா”

“அதான் சொன்னேனே அகத்தியன் காயம் அந்தளவுக்கு எல்லாம் இல்லை. ஒரு லேயர் தான் ஓபன் ஆகியிருக்கு, மருந்து போட்டாலே போதும் அது க்ளோஸ் ஆகிடும், உங்களுக்கு தெரியாததா” என்றார் அவர்.

“மயக்கம் எதனால??”

“சரியா சாப்பிடாம இருந்திருக்காங்க” என்றார் அவர்.

“வேற ஒண்ணும் பிரச்சனையில்லையே” என்று அவர் வரிசையாய் அடுக்கவும் அவர் வெகு நிதானமாகவே பதில் கொடுத்தார் ஒவ்வொன்றுக்கும்.

அவர்கள் இருவரும் பேசிக்கொண்டே அப்புறம் செல்லவும் “ஏன் இந்தும்மா நீ சரியா சாப்பிடலை, சாப்பாடு எதுவும் பிடிக்கலையா உனக்கு. நாள் எதுவும் தள்ளி போயிருக்கா” என்று அவள் அன்னை கேட்க இதுக்கு இப்படியெல்லாம் கூட அர்த்தம் கற்பிக்கலாமா என்ற ரீதியில் அவள் யோசித்தாள்.

“நாயகி வாயேன் நாம டாக்டர்கிட்டவே கேட்டிறலாம்” என்று அவர்கள் இருவரும் நகர்ந்துவிட கணவன் மனைவி இருவர் மட்டுமே அங்கு. அபராஜிதன் இதுவரை ஒரு வார்த்தை அவளிடத்தில் பேசவில்லை.

“என்னாச்சு உங்களுக்கு நீங்க எதுவுமே கேட்கலை??” என்றாள் அவனை ஆழ நோக்கி.

“என்ன கேட்கணும்?? அதான் தெரியுதே அன்னைக்கு ஒரு வார்த்தை சொல்லிட்டேன் அதை மனசுல வைச்சுட்டு இப்போ எங்க கொண்டு வந்து நிருத்தியிருக்கன்னு பார்த்தியா”

“அன்னைக்கு ஏதோ கோபம் பேசிட்டேன். அதுக்காக நீ சாப்பிடாம இருந்து என்னை பழி வாங்கிட்டல்ல” என்றான் அவன் வேதனையான குரலில்.

அவள் பதிலேதும் பேசவில்லை. “உனக்கு ஒண்ணு கெடக்க ஒண்ணு ஆகியிருந்தா என் நிலைமையை யோசிச்சியா. எங்கப்பாவுக்கு நாங்க இருந்தோம் எனக்கு அப்படி எந்தவொரு பிடிப்பும் இல்லை, நீ இல்லைன்னா வெறுமே என் வாழ்க்கையை நான் வாழுவேன்னு நினைச்சியா”

“நீ இல்லைன்னா நானும் இல்லை. டயலாக் பேசறன்னு உனக்கு தோணலாம். நான் சொன்ன வார்த்தையை உணர்ந்து தான் சொல்றேன். இனிமே நான் உன்னை எதுவுமே சொல்ல மாட்டேன்” என்றவன் அவ்வளவு தான் பேச்சு முடிந்தது என்பது போல் எழுந்து வெளியே சென்றுவிட இந்திரசேனாவிற்கு ஒரு மாதிரியாகிப் போனது. ‘இவனை எதில் சேர்ப்பது’ என்று புரியாத மனநிலை அவளுக்கு. 

—————–

உமையாள் அழைத்திருந்தாள் அபராஜிதனுக்கு. அப்போது தான் பள்ளிக்கு கிளம்பிக் கொண்டிருந்தான் அவன். தமக்கை அழைக்கவும் போனை எடுத்து காதில் வைத்தான் “ஹலோ” என்றவாறே.

“அபி எப்படிடா இருக்கே??”

“நான் நல்லாயிருக்கேன் அக்கா நீ எப்படி இருக்க?? வீட்டில எல்லாரும் எப்படியிருக்காங்க??”

“எல்லாருமே நல்லாயிருக்காங்க அபி. ஒரு சந்தோசமான விஷயம் சொல்லத்தான் போன் பண்ணேன்”

“சொல்லுக்கா”

“கல்பனா சடங்காகிட்டா அபி, அதை சொல்லத்தான் கூப்பிட்டேன்”

“ரொம்ப ரொம்ப சந்தோசம்க்கா”

“சந்தோசமெல்லாம் அப்புறம் இருக்கட்டும் அபி. நீ தான் தாய்மாமனா முன்னாடி வந்து நிக்கணும், இந்திரா எங்கே அவகிட்ட போனை கொடு அபி. அவளையும் கூட்டிட்டு சீக்கிரமா ஊருக்கு வாங்க” என்றாள் அவள்.

“அக்கா சேனா இப்போ இங்க இல்லை”

“என்ன?? என்னடா சொல்றே?? எங்கே போனா?? இன்னும் கோர்ட்ல இருந்து வரலையா??”

“இல்லைக்கா…” என்றவன் அவள் மயங்கி விழுந்து தலையில் அடிபட்டு மருத்துவமனையில் இருந்ததை சொன்னான்.

“என்ன அபி சொல்றே?? இதெல்லாம் நீ ஏன் அப்போவே சொல்லலை. நான் உடனே கிளம்பி வர்றேன் அபி” என்றாள் அவள்.

“அக்கா… அக்கா இரு ஒண்ணும் அவசரமில்லை. அவளுக்கு இப்போ ஓகே தான். அவங்க வீட்டில இருக்கா, கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு வரட்டும்ன்னு சொல்லிட்டேன். ஊருக்கு வர்றதுனா நான் மட்டும் தான்க்கா வருவேன்”

“அதெல்லாம் ஒரு பிரச்சனையும் இல்லை அபி. நீ உனக்கு முடியும் போது வா… நான் இந்திராகிட்ட பேசறேன்” என்றுவிட்டு வைத்தவள் அடுத்து அழைத்தது தன் தம்பி மனைவிக்கு.

ஒரே ரிங்கிலேயே போனை எடுத்த இந்திரசேனா “ஹலோ அண்ணி சொல்லுங்க நல்லாயிருக்கீங்களா” என்றாள்.

“உனக்கு என்னாச்சு இந்திரா, மயங்கி கீழே விழுந்து அடிபட்டிடுச்சுன்னு அபி சொன்னான். அதை கேட்கத்தான் போன் பண்ணேன்”

“பரவாயில்லை அண்ணி இப்போ கொஞ்சம் சரியாகிட்டேன்”

“நிஜமாவே பரவாயில்லையா, கல்பனாவை தனியா விட்டுட்டு இந்த நேரத்துல வரமுடியாது இல்லைன்னா ஓடி வந்திருவேன்”

“என்னாச்சு அண்ணி கல்பனாக்கு??” என்றவள் “பெரிய பிள்ளையாகிட்டாளா??” என்று உமையாள் பதில் சொல்லும் முன் அவளாகவே ஊகித்து கேட்க “ஆம்” என்றாள் மற்றவள்.

“ரொம்ப சந்தோசம் அண்ணி, எப்போ??”

“கொஞ்சம் முன்னாடி தான். முதல் தாய் மாமனுக்கு தானே சொல்லணும். இப்போ தான் அபிகிட்ட பேசினேன். உன்கிட்ட பேசணும் கேட்கவும் தான் அபி உனக்கு அடிபட்ட விஷயம் சொன்னான்”

“நீ ஊருக்கு வர முடியாதுல அதான் கொஞ்சம் கஷ்டமா இருக்கு. நீ நல்லா ரெஸ்ட் எடு நான் கல்பனாக்கு தலைக்கு தண்ணி ஊத்தினதும் இங்க யாராச்சும் துணைக்கு வைச்சுட்டு உன்னை வந்து பார்க்கறேன். இந்த அகல்யா நேத்து கூட போன் உன்னைப்பத்தி எதுவும் என்கிட்ட சொல்லவே இல்லை. அவளுக்கு இருக்கு” என்ற உமையாள் மேலும் ஏதேதோ பேசிவிட்டு போனை 

வைத்தாள்.

—————–

“விருதுநகர் தாண்டிருச்சு இன்னும் கொஞ்ச நேரத்துல ஸ்டேஷன் வந்திடும்” என்று அபராஜிதன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே டீ விற்பவர் அந்த கோச்சை கடக்க “டீ குடிக்கறியா” என்றான் இந்திரசேனாவை பார்த்து.

அவள் தலையாட்டவும் டீ வாங்கி அவளுக்கு கொடுத்துவிட்டு தானும் ஒன்றை எடுத்துக் கொண்டான். அபராஜிதன் மட்டுமே சிவகாசிக்கு கிளம்புவதாக இருக்க இந்திரசேனா தான் அடம்பிடித்து இதோ அவனுடன் சிவகாசியை நோக்கி பயணப்பட்டுக் கொண்டிருக்கிறாள்.

திருமணமாகி முதன் முறையாய் உமையாள் வீட்டிக்கு இப்போது தான் கணவனும் மனைவியும் செல்கின்றனர். உமையாள் அவர்கள் திருமணம் முடிந்த நாள் முதலாகவே அழைத்துக் கொண்டிருக்கிறாள். அபராஜிதனின் வேலையை முன்னிட்டு தள்ளிப்போட்டுக் கொண்டிருந்தனர்.

இதோ இப்படித்தான் செல்ல வேண்டும் என்று இருக்கிறது போல அவர்களுக்கு. அகல்யாவும் அகிலேஷும் அவர்களுடன் தான் வந்திருந்தனர்.

Advertisement