Advertisement

26

ஆத்திசூடி – கொள்ளை விரும்பேல்

பொருள் – பிறர் பொருளை கவருவதற்கு ஆசைப்படாதே

ஒரு வாரம் எப்படியோ பறந்திருந்தது. இந்திரசேனா அபராஜிதனிடம் பேசுவதையே முற்றிலும் தவிர்த்திருந்தாள்.

அவளால் அன்றைய நிகழ்வை மட்டும் மறக்கவே இயலவில்லை. அவன் தள்ளாட்டத்துடன் வந்ததும் அதன் பின்னே நிகழ்ந்தவைகளும் நிழலாய் கண் முன்னே ஓடியது.

அபராஜிதன் வாயிலிலேயே தள்ளாடிக் கொண்டு நிற்க இந்திரசேனாவிற்கு வந்த ஆத்திரத்திற்கு அளவே இல்லை. அவளுக்கு இது போன்ற நிகழ்வு ஒன்றும் புதிதல்ல தான்.

அவள் வீட்டிலும் கூட அவளின் அண்ணன் அபிமன்யுவிற்கு அப்பழக்கம் உண்டு. முதல் முறை கல்லூரியில் நண்பர்கள் பழக்கிவிட்டதில் ஒரு நாள் தள்ளாடிக் கொண்டு வந்திருந்தவனை அவளுடைய அன்னை அடி வெளுத்துவிட்டார்.

அது முதல் அது போல அவன் செய்யவில்லை. முதல் முறை நடந்த விஷயம் அகத்தியன் காதுக்கு சென்றிருக்கவில்லை. பின் அபிமன்யு வேலைக்கு சென்ற பின்னே சோசியல் டிரிங்ஸ் என்ற பெயரில் ஆரம்பித்தது தொடர்கதையாகவும் விஷயம் அகத்தியன் காதுக்கு வந்தது. சோசியல் டிரிங்க் படிப்படியாய் முன்னேறி மனைவியிடத்தில் தினமும் சண்டை என்று வந்து நிற்க அவள் கோபித்துக் கொண்டு அவளின் அம்மா வீட்டிற்கு சென்றுவிட்டிருந்தாள்.

அதன் பின்னே அகத்தியன் அவ்விஷயத்தில் தலையிட வேண்டியதாய் இருந்தது. யாரும் அவருக்கு முன்பே  சொல்லியிருக்காவிட்டாலும் மகனின் பழக்கத்தை அவர் அறிந்தே தானிருந்தார்.

மகனுக்கு அவர் செய்தது ஒரே அறிவுரை தான். “தோளுக்கு மிஞ்சி வளர்ந்திட்ட அடிச்சு திருத்துற வயசில்லை உனக்கு, மதுப்பழக்கம் சரியான பழக்கமில்லை. நீ அதுக்கு பழகிட்ட உன்னால அதைவிட்டு வெளிய வரமுடியலைன்னு தெரியுது”

“உன்னோட அப்பாவா சொல்லணும்ன்னா உனக்கு இந்த பழக்கம் வேண்டவே வேண்டாம்ன்னு தான் சொல்வேன். ஒரு டாக்டரா உனக்கு நான் சொல்றது ஒண்ணே ஒண்ணு தான், உன்னோட கட்டுப்பாட்டுல மது இருக்க வரைக்கும் உன்னோட வாழ்க்கையும் உன் கையில இருக்கும்”

“மதுவோட கட்டுப்பாட்டுல நீ போக ஆரம்பிச்சுட்டா உன் வாழ்க்கை உன்னைவிட்டு போயிடும், நான் வாழ்க்கை சொல்றதுல எல்லாமே அடக்கம், புரிஞ்சு நடந்துக்கோ…” என்று அவர் சொன்னதை புரிந்துக் கொண்ட அபிமன்யு இன்று வரை அதை சரியாகவே கடைப்பிடித்தான்.

அதற்கு பின்பு ஒரு நாள் கூட அவன் நடையில் தள்ளாட்டத்தை கண்டிருந்ததில்லை. மனைவி குழந்தையுடன் சந்தோசமாகவே இருந்தான். வீட்டில் பிரச்சனை என்று வந்ததையும் அவளும் கண்டிருக்கவில்லை.

அது போன்றதொரு நிகழ்வு தற்போது அவளுக்கே நடக்கும் போது அதை அவளுக்கு எப்படி கையாளுவது என்று புரியவில்லை. நீதிமன்றத்தில் கூட அவள் அது போன்றவர்களை சந்தித்திருக்கிறாள் தான். அப்போதெல்லாம் குடித்துவிட்டு வருபவர்களை ஒரு முகச்சுளிப்புடன் கடந்து விடுவாள்.

இது வீடாகிற்றே அவளால் அப்படி கடந்து செல்வது இயலாதே. அபராஜிதன் இன்னமும் வாயிலிலேயே நின்றிருக்க வேகமாய் சென்று கிரில் கதவை திறந்துவிட அவன் உள்ளே நுழைந்திருந்தான் தடுமாற்றத்துடன்.

கதவெல்லாம் அடைத்துவிட்டு அவள் திரும்பவும் அபராஜிதன் மெல்ல நடந்து அங்கிருந்த சோபாவில் தலையில் கை வைத்து அமர்ந்திருந்தான். ஒரு விதமாய் அவனிடத்தில் இருந்து ஏப்பம் போன்று சத்தம் வர இந்திரசேனாவிற்கு புரிந்து போனது அடுத்து என்ன நடக்கும் என்று.

அப்படியே அவன் தலை முடியை பிடித்து தண்ணியில் முக்கி முக்கி எடுக்க வேண்டும் போல ஆத்திரம் எழுந்தது அவளுக்கு. அவள் கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு அவனருகே வந்தவள் அவனை கைக்கொடுத்து எழுப்ப எழுவேனா என்று அமர்ந்திருந்தான்.

“எழுந்திருங்க” என்று பல்லைக் கடித்தவாறே சொன்னாள் அவள்.

“சேனா”

“எழுந்திருய்யா” என்றாள் மரியாதையைவிட்டு.

மெல்ல அவன் எழ முயற்சி செய்ய உடன் இந்திரசேனாவும் கைக்கொடுக்க ஒரு வழியாய் எழுந்து நின்றிருந்தான். அவனை அவர்கள் அறைக்கு அழைத்துச் சென்றவள் நேரே குளியலறையில் சென்று நிறுத்தினாள்.

அவன் பேன்ட் பாக்கெட்டில் கை விட நெளிந்தவனை கண்டு அவள் முறைக்கவும் அமைதியாய் பார்த்தான். அதிலிருந்த பர்ஸ், கைக்குட்டை, வண்டி சாவி எல்லாம் எடுத்து வெளியே வந்து கட்டிலில் வைத்தவள் அவன் சட்டையை கழற்றிவிட்டு ஷவரை திறந்துவிட்டு வெளியே வந்துவிட்டாள்.

அவள் வெளியே வரவும் உள்ளே அவன் ஓங்கரிக்கும் சப்தம் அவளுக்கு நன்றாகவே கேட்டது. 

அவனை மனதார நன்றாக திட்டித் தீர்த்தாள். இன்னமும் குளியலறையில் இருந்து அவன் வெளியே வந்திருக்கவில்லை. நாளை அவளுக்கு முக்கியமான கேஸ் ஒன்று உள்ளது.

அதைப்பற்றி சில குறிப்புகளை அவள் தேடி எடுக்க வேண்டி இருந்தது. அவ்வளவு நேரமும் அவனுடன் சண்டை, அவன் வீட்டு வரவில்லை என்பதை யோசித்து யோசித்தே அவள் எந்த குறிப்பும் எடுக்கவில்லை. இப்போது அடுத்த தலைவலியை அவன் அவனைப்பற்றி யோசிக்க வைத்துவிட்டானே என்று வேறு எரிச்சல் மூண்டது அவளுக்கு.

அவனாய் வெளியே வருவதாய் காணோம் என்று அவளே கதவை தட்ட திறந்திருந்த கதவு தானே வேகமாய் திறந்துக் கொண்டது.

அங்கு அபராஜிதன் ஒரு புறம் வாந்தி எடுத்திருக்க அது சுத்தம் செய்யப்படாமலே இருந்தது அவனோ ஒன்றும் புரியாமல் அப்படியே தலையை பிடித்துக் கொண்டு அங்கு நின்றிருக்க இயலாமை, கோபம், கண்கள் எப்போது வேண்டுமானாலும் கரையுடைத்து விடுவேன் என்று காத்திருந்தது.

அவனை இழுத்துச் சென்று ஷவரின் அடியில் நிற்க வைத்துவிட்டு வேகமாய் அந்த இடத்தை சுத்தம் செய்தாள் விழிகளில் வழிந்துவிட்ட நீருடன். அதற்குள் அபராஜிதன் சற்று தெளிந்திருந்தான் போலும் ஒன்றும் பேசாமல் ஷவரை மூடிவிட்டு அவளைப் பார்த்திருந்தான்.

கை காலெல்லாம் கழுவிட்டு வெளியே வந்த இந்திரசேனா ஒரு டவலை எடுத்து அவனிடம் நீட்ட அவன் துடைத்துக்கொண்டு வெளியே வந்திருந்தான்.

இந்திரசேனாவோ அவனிடத்தில் ஒரு வார்த்தை பேசவில்லை. வேறு உடைமாற்றி அவன் வர தலைவலி வந்திருந்தது இந்திரசேனாவிற்கு.

சமையலறை விரைந்தவள் அவனுக்கு இரவு உணவை எடுத்துக்கொண்டு வந்து கட்டிலில் அமர்ந்திருந்தவனின் முன்பு நீட்ட தலை குனிந்து அமர்ந்திருந்தவன் நிமிர்ந்து அவளைப் பார்த்தான்.

நீட்டிக் கொண்டிருந்த தட்டை வாங்கி கட்டிலில் வைத்தவன் சட்டென்று அவளை இடையோடு கட்டிக்கொள்ள அப்படியொரு ஆத்திரம் எழுந்தது அவளுக்கு.

“சாரி சேனா” என்றிருந்தான் அவன்.

சத்தியமாய் அவன் அதை சொல்லுவான் என்று அவள் எதிர்பார்க்கவில்லை.

இந்திரசேனா பேசாமலிருந்தாள், “எனக்கு தெரியும் நான் பண்ணது தப்பு. எனக்கு… இது எனக்கு ஒத்துக்காதுன்னு தெரிஞ்சும் நான் இப்படி செஞ்சிருக்கக் கூடாது, இனிமே இப்படி செய்ய மாட்டேன் சேனா, ப்ளீஸ் என்கிட்ட பேசு” என்றான்.

‘நான் பேசினா உன்னை மன்னிச்சுட்டது போல ஆகிடும். நீ பண்ணதை என்னால மன்னிக்கவே முடியாது’ என்று மனதார அவனுக்கு பதில் கொடுத்தவள் அவன் பிடித்திருந்த கையை விலக்கிவிட்டு அங்கிருந்து நகர்ந்திருந்தாள்.

இதோ இன்று வரையில் அவனிடம் ஒரு வார்த்தை பேசவில்லை அவள். அபராஜிதன் முதல் நாள் மட்டுமே அவளிடம் கெஞ்சிக் கொண்டிருந்தான்.

மறுநாளெல்லாம் அவனும் முறுக்கிக் கொண்டு தான் திரிந்தான். ‘போய் மன்னிப்பு கேட்கறேன் அப்படியென்ன அவளுக்கு வீம்பு, நானே இறங்கி பேசியும் கூட திமிரா பேசாம போறா. உனக்கே அவ்வளவு இருக்குன்னா ஆம்பிளை எனக்கு எவ்வளவு இருக்கும்’ இப்படித்தான் அவன் எண்ணிக் கொண்டிருந்தான்.

இருந்தாலும் ஒரு வாரமாக அவள் பேசாமல் இருந்தது அவனை அதிகமாகவே பாதித்தது. திருமணமாகி இத்தனை நாட்களில் இது போன்று ஒரு நாளும் இருந்ததில்லை.

அவள் பேசாமலிருந்தால் நல்லது என்று எப்போது எண்ணுபவனுக்கே அவள் எப்போதடா பேசுவாள் என்று தோன்ற ஆரம்பித்திருந்தது.

இந்திரசேனா வீட்டில் சாப்பிட்டும் ஒரு வாரத்திற்கு மேலாகிவிட்டது. காலை உணவு முற்றிலும் தவிர்த்திருந்தாள். 

வெளியே அவளால் வாங்கி சாப்பிட முடியும் தான், ஆனால் வாங்கி அருந்த அவளுக்கு தான் மனதில்லை. இந்த ஒரு வேளை சாப்பாட்டுக்காக தானே அவன் அன்று பேசினான் என்ற எண்ணமே அவளை சாப்பிட விடாமல் செய்தது.

மதிய உணவு மாணிக்கவாசகத்துடன் என்பதால் எந்த பிரச்சனையும் இல்லாமல் சென்றுக் கொண்டிருந்தது. மாலை வேளை கேசவனும் அவளுமாக காபியும் சிற்றுண்டி சேர்ந்து சாப்பிடுவர்.

அன்று மாணிக்கவாசகம் வேறு ஒரு கேஸ் விஷயமாக வெளியே சென்றுவிட்டிருந்தார், கேசவனும் உடன் கிளம்பியிருந்தான்.

அன்றைய முழு நாளும் அவள் ஒன்றுமே சாப்பிட்டிருக்கவில்லை. வெகுவாய் சோர்ந்து போயிருந்தாள், வயிறு வேறு ஏதாவது சாப்பிடேன் என்று கெஞ்சியது.

உனக்கு மான ரோசமே இல்லையா என்று அதை திட்டி அதை மேலும் வாடவைத்தாள் அவள். அவளும் அவள் தோழி சாராவும் ஒன்றாய் கேன்டின் சென்று காபி அருந்தி வந்திருந்தனர்.

அன்று முழுதுமே அவள் எடுத்துக் கொண்டது காலையில் ஒரு காபி மாலையில் ஒரு காபி அவ்வளவு தான். காபி அருந்தியது வயிற்றை பிரட்டியது. எப்படியோ சமாளித்துக் கொண்டு ரயிலில் ஏறி இருந்தாள்.

ரயிலில் ஏறிய பின் கண்ணை மூடி சாய்ந்துக் கொண்டாள் இருக்கையில். யாரிடமும் எதுவும் பேசவில்லை. இடையில் அவளுக்கு வந்த அழைப்பை கூட எடுக்கவில்லை.

எப்படியோ சமாளித்துக்கொண்டு வந்தவளால் நடக்கக் கூட முடியவில்லை. இன்னும் சற்று தூரம் தான் வீடிருந்தது. அதற்கு மேல் நடக்க முடியாது கண்கள் இருட்டிக் கொண்டு வர மயங்கி அப்படியே விழுந்திருந்தாள் கீழே.

அவள் விழுந்த இடத்துக்கருகில் புதிதாய் வீடு கட்டிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் சாலையில் கொட்டி வைத்திருந்த கருங்கல்லின் மீது தான் விழுந்திருந்தாள் அவள். 

கீழே கூராய் இருந்த கல்லொன்று அவள் பின்னந்தலையில் பதம் பார்த்திருக்க ரத்தம் கசிய ஆரம்பித்திருந்தது.

Advertisement