Advertisement

25

ஆத்திசூடி – மண் பறித்து உண்ணேல்

பொருள் – பிறர் நிலத்தை ஏமாற்றி அதன் மூலம் வாழாதே

நீதிபதி அசோக்கின் வீட்டில் இருந்து வந்ததில் இருந்தே அபராஜிதன் அவளிடத்தில் ஒரு வார்த்தை கூட பேசியிருக்கவில்லை. வரும் வழியில் கூட இறுக்கமாகவே வண்டியை ஓட்டிக் கொண்டு வந்தான்.

அவனைப் பார்க்கவே அவளுக்கு அச்சமாக இருந்தது. தைரியமான பெண் தான் ஆனாலும் அந்நொடி அவளுக்கு அப்படித்தான் தோன்றியது. அவனிடம் வீணே சென்று பேசி ஏன் புண்ணாகிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் அவளும் ஒன்றுமே கேட்கவில்லை.

வீட்டிற்கு வந்து தொலைக்காட்சியை கூட அவள் உயிர்ப்பித்திருக்கவில்லை. வந்ததும் காய வைத்த துணியை எடுப்பது, மடிப்பது வீட்டை ஒதுங்க வைப்பது என்று நேரத்தை போக்கிக் கொண்டிருந்தாள். 

மாடி வீட்டில் இருந்த பெண்மணி இவளை அழைக்க அவருடன் சென்று பேசிக் கொண்டிருந்தாள். மோட்டர் போட்டால் தண்ணீர் சீக்கிரமே தீர்ந்து போகிறது என்றும் அவர்கள் வீட்டு குழாயில் கசிவு இருப்பதையும் சொல்லிக் கொண்டிருந்தார்.

“நான் அவர்கிட்ட சொல்லி ஆளைக் கூப்பிட்டு பார்க்க சொல்றேன்க்கா” என்றாள் அவரிடம்.

“தேங்க்ஸ்ம்மா, நீ இருக்கவே உன்கிட்ட கொஞ்சம் ப்ரீயா சொல்ல முடியுது. அந்த பொண்ணு அகல்யா இருக்கும் போதும் கொஞ்சம் நல்லா பேசுவா. அவங்க அண்ணனும் அப்பாவும் இருந்தா வெளியவே வரமாட்டா”

“நீ பரவாயில்லைம்மா இன்னும் நல்லாவே பேசுறே. அப்பாவும் பிள்ளையும் இருப்பாங்க, ஒரு பிரச்சனைன்னா இவரை போய் சொல்ல சொன்னா நீ வீட்டில தானே இருக்கே நீ போய் சொல்லுன்னு கிளம்பிடுவாரு. நீயே சொல்லும்மா பொம்பளைங்க யாராச்சும் இருந்தா நான் போய் என்ன விவரம்ன்னு சொல்லலாம். ஆம்பிளைங்க இருக்கும் போது நம்ம வீட்டு ஆம்பிளை தானே பேசணும்”

அவர் பாட்டுக்கு பேசிக் கொண்டிருக்க இவள் நேரத்தை கடத்தினால் போதும் என்பது போல் அவர் பேச்சுக்கு தலையாட்டிக் கொண்டிருந்தாள்.

ஒருவழியாய் அவரும் பேசி முடித்து கிளம்பியிருக்க இரவு சமையலை கவனிக்க ஆரம்பித்தாள். இரவு உணவின் போது மாடி வீட்டு பெண்மணி சொல்லிய விஷயத்தை அவனிடம் சொல்லிக் கொள்ளலாம் என்று விட்டுவிட்டாள்.

இரவு உணவுக்கு அவனை அழைக்க “வேணாம்” என்றான் ஒற்றைச் சொல்லாய்.

“ஏங்க அசோக் அங்கிள் வீட்டில சாப்பிட்டதே வயிறு டொம்ன்னு இருக்கா??”

“கொஞ்சமா சாப்பிடுங்களேன், ரசம் வேணா ஊத்தி தரட்டுமா செரிக்கும்” என்றாள்.

அவன் பதில் எதுவும் பேசவில்லை. அவளும் அவன் சொல்லும் பதிலை ஆவலாய் கேட்க காத்திருக்கவில்லை தான். பசிக்கலைன்னா நாம என்ன செய்ய முடியும் என்று தோளைக் குலுக்கிக் கொண்டவள் அறையை விட்டு வெளியேறி சென்றுவிட்டாள்.

அபராஜிதனுக்கோ மனதே ஆறவில்லை. வேணாம்ன்னு சொன்னா போய்டுவாளா, என்னன்னு கூட கேட்க மாட்டாளா என்றிருந்தது. எல்லாம் கொழுப்பு அவ சித்தப்பன்னுக்கு இருக்கறது இவளுக்கும் இருக்கு என்று தான் நினைத்தான்.

சிறிது நேரம் பொறுத்து பார்த்தான் மனதின் ஒரு ஓரத்தில் சிறு நினைப்பு மனைவி வந்து அழைப்பாள் மீண்டும் என்று. அந்தோ பரிதாபம் அவள் வரவேயில்லை.

இவனே வெளியில் வந்து பார்க்க அவள் உணவருந்திக் கொண்டிருந்தாள். பார்க்க பார்க்க அப்படியொரு ஆத்திரம் அவனுக்கு, இங்க நான் சாப்பிடலை அதைப்பத்தி கொஞ்சம் கூட இவளுக்கு கவலையில்லை, இவ பாட்டுக்கு கட்டு கட்டுன்னு கட்டிட்டு இருக்கா என்று பொருமினான்.

இவன் வரவை உணர்ந்தாளோ அன்றி தானாய் நிமிர்ந்து பார்த்தாளோ வாயில் உணவு கவளத்துடன் ஏறிட எதிரில் நின்றிருந்தான் அபராஜிதன்.

“என்னங்க??” என்றாள் வாயில் வைத்துக் கொண்டிருந்த கவளத்தை விழுங்கியவாறே.

“உனக்கு என்னைப்பத்தி எதுவுமே தோணலையா??”

திடிரென்று அவன் வந்து அப்படி கேட்கவும் என்னவென்று புரியாது விழித்தாள் அவள்.

“என்ன புரியாத மாதிரி ஒரு லுக்கு, உனக்கு அவார்ட் தான் கொடுக்கணும்” என்று அவன் ஒரு மாதிரி குரலில் சொல்லவும் அவளுக்கு சுர்ரென்று கோபம் ஏறியது.

“என்ன வேணும்??” என்றாள் அதே பாவத்தோடு.

“என்ன வேணும்ன்னு இப்போ தான் உனக்கு கேட்கணும்ன்னு தோணியிருக்கு. புருஷன் ஏன் ஒரு மாதிரி இருக்கான் அவனுக்கு என்னாச்சு ஏதாச்சுன்னு கூட உனக்கு கேட்க தோணலைல உனக்கு”

“நீங்க ஒரு மாதிரி இருந்தா நான் என்ன பண்ண முடியும், உங்களுக்கு வெளிய ஆயிரம் டென்ஷன் இருக்கும் அதுக்கெல்லாம் நான் என்ன செய்யணும்ன்னு எதிர்பார்க்கறீங்க”

“ஆமாமா நீ எதுவும் செய்ய முடியாது. உன்னால சாப்பிட தானே முடியும். நீ பாரும்மா அதை நீ திவ்யமா பாரு, நான் சாப்பிட்டா உனக்கென்ன சாப்பிடலைன்னா உனக்கென்ன” என்று அவன் சொல்லவும் கையில் எடுத்து வைத்திருந்த மற்றொரு கவளம் உணவை தட்டில் அப்படியே போட்டாள்.

இனி ஒரு வாய் உணவு இறங்காது அவளுக்கு. அழுகை தொண்டையை அடைத்தது. தட்டோடு சமையலறை சென்றவள் மீதமிருந்த உணவை குப்பையில் போட்டுவிட்டு கை கழுவி வெளியே வந்தாள்.

“என்ன உங்க பிரச்சனை??”

“நீ எதுக்கு சாப்பிடுறதை பாதியில விட்டே என்னைப்பத்தி உனக்கென்னம்மா கவலை” என்றான் அவன்.

“இப்போ உங்களால சொல்ல முடியுமா முடியாதா??” என்றாள்.

“என்ன சொல்லணும் உனக்கு?? இல்லை கேட்கறேன் உன் சித்தப்பன் மனசுல என்ன தான் நினைச்சுட்டு இருக்கான். என்னை ஊர் பூரா அசிங்கப்படுத்தணுமா அவனுக்கு”

“அந்த ஜட்ஜ்கிட்ட போய் என்னைப் பத்தி சொல்லியிருக்கார். ஸ்கூல்ல நடந்த பிரின்சிபால் விஷயம் எல்லாம் எனக்கு அப்போ எப்படி இருந்துச்சு தெரியுமா. முதல்ல நான் பெரிய தப்பு பண்ணறேன் சொல்லி நீ என்னை அசிங்கப்படுத்தினே, இப்போ உன் சித்தப்பன் ஜட்ஜ் வரை சொல்லி ஸ்கூல் மானத்தை வாங்கிட்டான்”

மாணிக்கவாசகம் அதை நண்பர் என்ற முறையில் தான் அசோக்கிடம் பகிர்ந்திருந்தார். அதுவும் அந்த பிரச்சனை நடந்த புதிதில் மட்டுமே. அப்போது அவருக்கு தெரியாதே அவன் அவர்கள் வீட்டு மாப்பிள்ளையாவான் என்று தெரிந்திருந்தால் சொல்லியிருப்பாரா என்ன??

அப்போதும் கூட மாணிக்கவாசகம் அவனை குறையாய் எதுவுமே அசோக்கிடம் சொல்லியிருக்கவில்லை. இப்படி பிரச்சனை அதை அவர்களே சுமூகமாய் தீர்த்துக் கொண்டார்கள் என்று தான் சொல்லியிருந்தார்.

அபராஜிதன் பேசப்பேச அவன் கோபத்திற்கான காரணம் விளங்கியது இந்திரசேனாவிற்கு. “அங்க அவர் என் மானத்தை வாங்கினார், நீ இங்க வந்து அதைப்பத்தி என்கிட்ட ஒரு வார்த்தை கூட கேட்கலை”

“எனக்கெப்படி தெரியும் நீங்க அதுக்காக தான் கோபமா இருக்கீங்கன்னு??”

“ஒத்துக்கறேன் நானும் அசோக் சாரும் அந்த விஷயம் பேசிட்டு இருக்கும் போது நீ அங்க இல்லை சரி ஆனா வீட்டுக்கு வந்து இவ்வளவு நேரமா உனக்கு என்னை எதுவும் கேட்கணும்ன்னு ஏன் தோணலை”

“நான் சாப்பிடலைன்னா கூட உனக்கு கவலையில்லை நீ பாட்டுக்கு சந்தோசமா சாப்பிட்டுட்டு இருப்பல்ல” என்று அவன் மனக்குமுறலை இறக்குகிறேன் என்று அவளை காயப்படுத்திக் கொண்டிருந்தான் அவன்.

அப்போதும் கூட அவள் நிதானத்தையே கடைப்பிடித்தாள். “சரி இப்போ நான் என்ன செய்யணும்ன்னு நீங்க நினைக்கறீங்க??”

“ஸ்கூல் மானம் போகக்கூடாதுன்னு சுமூகமா பேசி தீர்த்த ஒரு விஷயத்தை நீயும் உன் சித்தப்பனும் ஏன் இப்படி பெரிசுப்படுத்தறீங்க. உன் சித்தப்பன் இனிமே இப்படி எவன்கிட்டயாச்சும் இப்படி பேசி வைச்சான்னு எனக்கு தெரிஞ்சுதுன்னா நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது”

“என்ன பண்ணுவீங்க??”

“என்ன வேணாலும் பண்ணுவேன்??”

“எப்படி ஆதாரமா இருந்த போனை விலை கொடுத்து வாங்கி அந்த பிரச்சனையை முடிச்ச மாதிரி எதுவும் செய்வேன்னு சொல்றீங்க அதானே”. அபராஜிதனோ பதில் சொல்லாது அவளை அலட்சியமாய் பார்த்தான்.

“சொல்லிட்டீங்கல்ல இனி என்ன பண்ணனும்ன்னு நான் பார்த்துக்கறேன்”

“முதல்ல உன் சித்தப்பன்கிட்ட பேசு” என்றவனை முறைத்தவாறே “எதுக்கு பேசணும்??” என்றாள்.

“லூசா நீ இவ்வளவு நேரமும் நான் என்ன சொல்லிட்டு இருந்தேன்னு உனக்கு புரியலையா”

“அது உங்களோட பிரச்சனை இதுல என்னை ஏன் நடுவுல இழுக்கறீங்க??”

“ஓ!! நீ அப்படி வர்றியா அப்போ நான் அந்தாளை என்ன பண்ணாலும் நீ கேட்க மாட்டல்ல” என்றவனிடம் “கண்டிப்பா கேட்பேன் என்னோட குருவுக்கு ஒண்ணுன்னா நான் தான் முன்னாடி நிப்பேன்” என்றாள்.

“உனக்கு புருஷனைவிட குரு தான் முக்கியமா”

“ஆமா கண்டிப்பா. மாதா, பிதா, குரு, தெய்வம்ன்னு தானே வருது, இதுல எங்கயும் புருஷன்னு வரலையே” என்று அவன் அன்றொரு நாள் சொன்னதை அவனுக்கு திருப்பி படிக்க அவன் முகம் கோபத்தில் இன்னுமே சிவந்தது.

“ராட்சசி, ராட்சசி உன்கிட்ட மனுஷன் பேச முடியாது. உனக்கு இருக்கறது நாக்கா இல்லை வாளா இப்படி குத்திக்காட்டுறே” என்றவன் கோபமாய் வெளியே சென்றுவிட்டான்.

மனதில் மிகப்பெரிய பாறாங்கல் அழுந்தியது போன்ற உணர்வு. தன் வாழ்க்கை குறித்த பயம் முதன் முறையாய் அவளுக்கு தோன்றியது. தன்னை வாள் போல குத்துவதாக சொன்னவன் அவளின் மனதை குத்தி கிழித்து காயப்படுத்தி சென்றுவிட்டானே என்ற வருத்தம் அவளை வாட்டியது.

அப்படிப்பட்டவனுடன் தன் வாழ்க்கை முழுதும் பயணிக்க வேண்டும் என்று எண்ணமே அவளுக்குள் ஓடியது. நீதிமன்றத்திற்கு வரும் ஆயிரக்கணக்கான விவாகரத்து வழக்கையெல்லாம் சந்தித்திருக்கிறாள்.

அப்போதெல்லாம் அவளுக்கு தோன்றும் ஒரு விஷயம் கொஞ்சம் விட்டுக்கொடுத்து சென்றால் சந்தோசமாக இருக்கலாமே என்று தான். எல்லாருக்கும் அது போல தோன்றாது, சில கொடுமைக்கார கணவனும் சில கொடுமைக்கார மனைவியும் விட்டுப்பிரிந்தால் பெரிதாய் அலட்டிக் கொள்ள மாட்டாள்.

சிலரை பார்க்கும் போது அப்படித் தோன்றும் இவர்கள் இருவரும் சற்று விட்டுக்கொடுத்து வாழ்ந்தால் ஒன்றாக இருக்கலாம் என்று. ஆனால் தனக்கு வந்தால் தான் தெரியும் காய்ச்சலும் தலைவலியும் என்று அப்போது அவளுக்கு புரிந்தது.

விவாகரத்து போன்ற பெரிய எண்ணமெல்லாம் அவளுக்கு எழவில்லை தான். கணவன் மனைவி என்றால் இது போன்ற சண்டை சச்சரவுகள் வரும் என்பதை அப்போது தான் கண்டிருந்தாள்.

தலையெல்லாம் வலிப்பது போல இருந்தது. ஹாலில் இருந்த சோபாவிலே தான் அமர்ந்திருந்தாள், பசி வேறு வயிற்றை கிள்ளியது. ‘இனி இந்த வீட்டில் உணவருந்தக் கூடாது’ என்ற எண்ணம் மட்டும் வீம்பாய் எழுந்தது அவளுக்கு.

நேரம் பார்க்க மணி பன்னிரண்டை தாண்டி ஓடிக் கொண்டிருந்தது. வெளியே சென்றிருந்த அபராஜிதன் இன்னமும் வீட்டிற்கு வந்திருக்கவில்லை. அவனுக்கு போன் செய்யவும் மனதில்லை. 

ஆனாலும் பாழாய் போன மனம் கேட்காது அவள் போனை எடுத்த வேளையில் லேசான தள்ளாட்டத்துடன் அபராஜிதன் வீட்டிற்குள் வந்திருந்தான்.

Advertisement