Advertisement

24

ஆத்திசூடி – இணக்கம் அறிந்து இணங்கு

பொருள் – ஒருவரிடம் நட்பு கொள்ளும் முன்பு அவர் நல்ல குணங்கள் உள்ளவரா எனத்தெரிந்த பிறகு அவருடன் நட்புக் கொள்.

“உன் சித்தப்பனுக்கு என்ன பைத்தியமா ஏன் நான் அந்த பணத்தை கட்ட மாட்டேனா. அவ்வளவு கூட என்னால செய்ய முடியாதாமா. நீ தான் அவருக்கு போன் பண்ணி சொன்னியா இப்படி செய்யச் சொல்லி” என்று தன் மனைவிடம் அவன் பாய அவளோ வெகு நிதானமாய் ரசித்து ருசித்து அந்த பாதாம் அல்வாவை ஒவ்வொரு மிடறாக விழுங்கினாள்.

அதை பார்க்க பார்க்க அவனுக்கு இன்னும் கோபம் அதிகரிக்கத் தான் செய்தது. “என்னை பார்த்தா எப்படி தெரியுது உனக்கு??”

“அதை கண்ணாடியில பார்த்தா தெரியப் போகுது என்னை ஏன் கேட்கறீங்க??” என்றாள் சற்றும் அசராமல்.

“உங்களுக்கெல்லாம் ரொம்ப கொழுப்பு. உன் சித்தப்பன் எதுக்கு எல்லாத்துக்கும் முன்னாடி வர்றான்னு எனக்கு தெரியலை”

“இங்க பாருங்க இவ்வளவு நேரம் பேசிட்டு இருந்தீங்க ஏதோ கோபத்துல பேசறீங்கன்னு பேசாம இருக்கேன். சும்மா சும்மா எங்க சித்தாவை பத்தியும் என்னைப்பத்தியும் தேவையில்லாம பேசாதீங்க. நான் எப்பவும் ஒரே மாதிரி இருக்க மாட்டேன். அன்னைக்கு உங்களுக்கு எவ்வளவு சிரிப்புல எவ்வளவு இளக்காரமா என்னைப் பார்த்தீங்க”

“நான் என்னைக்கு அப்படி செஞ்சேன்”

“என்னைக்காச்சும்னா ஞாபகம் இருக்கும் அதான் நீங்க தினமும் என்னையும் சித்தாவை பேசறீங்களே”

“போன வாரம் என்னெல்லாம் சொன்னீங்க உங்க சித்தா இப்போ என்ன செய்வார்ன்னு நீ கட்டினா என்ன நான் கட்டினா என்னன்னு கேட்டீங்கல்ல. இப்போ அவர் செக் கொடுக்கவும் உங்களுக்கு பொறுக்க முடியலைல்ல”

“ஏன் நான் செய்ய மாட்டேனா அதை?? அப்படி வக்கத்து போயிருக்கேனா நானு, என்னை அசிங்கப்படுத்தணும்ன்னே அந்தாளு அப்படி செய்யறாரு…”

“அப்படி செய்யறவரா இருந்தா அதை நீங்க சத்தமில்லாம செஞ்சிருக்கணும் இப்படி சொல்லி காட்டியிருக்கக் கூடாது. அவர் ஒண்ணும் உங்களை அசிங்கப்படுத்த அதை செய்யலை. என் மேல உள்ள பிரியத்துல தான் அதை அவர் செஞ்சார்”

“அதை நீ வேணா நம்பு நான் நம்பத் தயாரா இல்லை”

“நீங்க நம்பித்தான் ஆகணும்ன்னு நானும் எதிர்பார்க்கலை. உங்களுக்கு ஒரு விளக்கம் கொடுத்தேன் அவ்வளவு தான் அதை நம்புறதும் நம்பாததும் உங்க இஷ்டம்” என்றாள்.

“என்னை நம்பாமத் தானே உன் சித்தப்பன் இந்த செக்கை கொடுத்திருக்கான், அப்புறம் நான் மட்டும் ஏன் நம்பணும்”

“அவர் உங்களை நம்பாம இருந்திருந்தா இப்போ நான் இங்க இருந்திருக்க மாட்டேன். அவர் நம்பினதுனால மட்டும் தான் நான் இங்க உங்க மனைவியா இருக்கேன்” என்று அவள் சொல்லவும் அவனின் ஆத்திரம் கண்மண் தெரியாமல் ஆனது.

“ஆமா நான் தெரியாம தான் கேட்கறேன். அவன் நிஜமாவே உனக்கு சித்தப்பன் தானா. பெத்த அப்பாவைப் பத்தி நீ பேசினதில்லை, அம்மாவைப் பத்தி பேசினதில்லை, ஏன் அண்ணனை பத்தி கூட நீ இவ்வளவு கவலைப்பட்டதில்லை”

“ஆனா அந்தாளை பேசினா மட்டும் உனக்கு பொத்துக்கிட்டு வருது ஏன்?? இதுல அந்தாளு ஒத்து ஊதுற மாதிரி வந்திருக்கான் பாரு அவன் புள்ளை அவனை மாதிரியே, நீங்க செய்யறதுன்னா தனியா செய்ங்கன்னு என்கிட்டவே சொல்றான்”

“இதுல வேற வந்ததுல இருந்து உன்னை பாப்பா, பாப்பான்னு வேற கொஞ்சிகிட்டு ச்சே கண்ட்ராவி” என்று அவன் சொல்லவும் முகமெல்லாம் சிவந்து போனது இந்திரசேனாவிற்கு.

“அவர் என் சித்தப்பா மட்டுமில்லை என்னோட குரு”

“மாதா, பிதா, குரு, தெய்வம்ன்னு தான் சொல்வாங்க. குரு மூணாவது இடத்துல தான் இருக்கார். நீ அவரைத் தானே முதல்ல வைச்சிருக்கே, அம்மா அப்பா எல்லாம் உனக்கு தேவையே இல்லை போல இருக்கே”

“உங்களுக்கு தெரியுமா எனக்கு அவங்க தேவையில்லைன்னு. சும்மா கண்டதும் பேசாதீங்க, உங்களுக்கு ஏன் என் சித்தாவை கண்டா எரியுது, அவர் என்ன செஞ்சாலும் உங்களுக்கு பிடிக்க மாட்டேங்குது அது ஏன்??”

“அவரை ஏன் எனக்கு பிடிக்கலைன்னு நான் உன்கிட்ட முன்னாடியே சொல்லிட்டேன். இதுல வேற அவன் உன்னை பாப்பான்னு கூப்பிடுறதை பார்த்தாலே எனக்கு ரொம்ப எரிச்சலா இருக்கு”

“உங்களுக்கு ஏன் எரிச்சல்??”

“எனக்கு பிடிக்கலை அவ்வளவு தான்”

“உங்களுக்கு அவர் மேல பொறாமை”

“பொறாமைப்படுற அளவுக்கு அவர்கிட்ட என்ன இருக்கு??”

“அவரோட அன்பு மொத்தமும் என் மேல இருக்கு”

“உன்கிட்ட எல்லாம் மனுஷன் பேச முடியாது” என்றவன் கோபமாய் கிளம்பிவிட்டான் வெளியே.

அவன் சென்ற பிறகு எதுவோ அவளைப் போட்டு படுத்தியது. ‘சந்தோசமா சுத்தி வந்திட்டு இருந்தேன் எங்க வீட்டுல. எந்த கவலையும் எனக்கு இருந்ததேயில்லை. எதைப்பத்தியும் யோசிச்சதில்லை’

‘எனக்காக யோசிக்க எனக்காக பேசன்னு வீட்டில இருக்கவங்க தான் எல்லாமேவா இருந்தாங்க. அப்படியே இருந்திருந்தா வாழ்க்கை எவ்வளவு நல்லா இருந்திருக்கும்’

‘இந்த வாழ்க்கையில எனக்கு என்ன கிடைச்சது நான் சந்தோசமா இருக்கேனான்னு கூட எனக்கு தெரியலை. இவரை எனக்கு பிடிச்சிருக்கா பிடிக்கலையா சகிச்சுக்கிட்டு வாழறேனான்னு எதுவுமே புரியலை. என்ன வாழ்க்கை இது ஆண்டவா’ என்று மனதார பேசிக் கொண்டிருந்தவளின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது.

நிமிர்ந்து அமர்ந்தவள் கண்களை துடைத்துக் கொண்டாள். ‘இப்படி ஒரு நாள் கூட எங்க வீட்டில நான் அழுததேயில்லை’ என்று எண்ணியவளுக்கு அழுவதும் கூட பிடிக்கவில்லை.

அபராஜிதன் அவளைப் பொறுத்தவரையில் நன்றாகவே இருந்தான். அவன் சொன்னது போல அவளை பிடித்து தான் அவன் வாழ்கிறான். வெறும் பிடித்தம் மட்டும் போதுமா, அதையும் தாண்டிய புரிதல் மட்டும் தானே அந்த உறவை பிணைக்கும் கயிறாய் இருக்கும். அதை இருவரும் புரிந்துக் கொள்ளும் நாள் எப்போதோ??

—————-

“இந்து இந்து அர்ஜென்ட்டி” என்று வேகமாய் ஓடி வந்து அவள் முன் முச்சிறைக்க நின்றாள் அவளின் கல்லூரி தோழி சாரா.

அவளும் அங்கு தான் வேறு ஒரு வழக்கறிஞரிடம் ஜூனியராக வேலை பார்க்கிறாள். நீதிமன்றத்தில் இருவரும் அவ்வப்போது சந்தித்துக் கொள்வது தான். இன்று அவள் தான் அவசரமாய் ஓடி வந்து இவள் முன் நின்றிருந்தாள்.

“அர்ஜென்ட்ன்னா போக வேண்டியது தானேடி, இதெல்லாமா என்கிட்ட கேட்பே, ஸ்கூல் பிள்ளைங்க மாதிரி”

“அடியேய் நான் என்ன கேட்கிறேன்னு தெரியாம போடி லூசு. கொஞ்சம் அவசரமா பென்னு கொடுடி”

“பென் கூடவா வைச்சுக்க மாட்டே நீ”

“அதை அந்த லூசு பாலாஜி சுட்டுட்டான்டி. இப்போ நீ கொஞ்சம் கொடுடி உடனே திருப்பித் தர்றேன். நாளைக்கு பத்து பேனா வாங்கி வைச்சுக்கறேன் போதுமா”

இந்திரசேனாவோ நிதானமாய் தன் தோழியின் மீது கைப்போட்டுக் கொண்டு “ஆனா பாரு சாரா நீ கேட்கும் போது உனக்கு ஹெல்ப் பண்ண முடியாம போய்டுச்சுடி”

“என்னடி சொல்றே??”

“என்னோட பெண்ணை நம்ம அசோக் சார் தான் தீர்ப்பு எழுதுறதுக்காக வாங்கிட்டு போயிருக்கார்” என்றவளை நம்பாத பார்வை பார்த்தாள் மற்றவள்.

“நீ நம்ப மாட்டேன்னு எனக்கு தெரியும். நீ நம்பலைன்னாலும் அது தான் பேபி நிஜம். என்னோட பேனா தான் அவருக்கு எப்பவும் ராசின்னு தீர்ப்பு எழுதுற அன்னைக்கு மட்டும் என்கிட்ட வந்து கடன் வாங்கிட்டு போயிருவார்” என்று இவள் கதை சொல்லிக் கொண்டிருக்க “இந்திரா” என்றொரு குரல் கேட்க தோழிகள் இருவருமே திரும்பி பார்த்தனர்.

சாராவிற்கு அங்கு நின்றிருப்பவரை பார்த்து ஒரு புறம் மரியாதையும் பயமும் என்றால் மற்றொரு புறம் சிரிப்பு வேறு வந்து தொலைத்தது, பின்னே அங்கு நின்றிருந்தது அவள் அவ்வளவு நேரமாக கதை சொல்லிக் கொண்டிருந்த ஜட்ஜ் அசோக் அங்கே இருந்தாரே.

“உன்னோட பேனா” என்று அவர் அவளிடம் நீட்ட சாரா அதிர்ச்சியாய் பார்த்தாள். அவ்வளவு நேரம் வரையில் இந்திரசேனா ஏதோ விளையாடுகிறாள் என்று எண்ணியிருக்க அசோக் சார் வேறு அவளிடம் பேனாவை நீட்டுவதைப் பார்த்தால் அவள் சொன்னது தான் நிஜமாக தோன்றியது அப்போது.

“யூ” என்று அவர் சாராவின் புறம் கை நீட்டி கேட்க “சா… சாரா சார்”

“ஓகே சாரா இங்க என்ன பண்ணுறே??”

“பிர… பிரண்டு சார், பேசிட்டு இருந்தேன்” என்று தந்தியடித்தாள் அவள்.

“பேசியாச்சா”

“ஆச்சு சார்”

“அப்போ கிளம்பு” என்று அவர் சொல்லவும் விட்டால்போதுமென்று ஓடியே சென்றுவிட்டாள் அவள்.

செல்லும் அவளை திரும்பி பார்த்தவர் அவள் தலை மறையவும் இந்திரசேனாவை பார்த்தார்.

“தீர்ப்பு எல்லாம் எழுதி முடிச்சாச்சா”

“கழுதை உன்கிட்ட நான் பென்னு வாங்கினது ஒரு குத்தமா என் மானத்தை வாங்குறே நீ இப்படி எல்லார் முன்னாடியும்”

“நான் அப்படி எதுவும் செய்யலை. நீங்க செய்யறது பார்த்து அவங்களுக்கு அப்படி தோணியிருக்கும்” என்றாள் கூலாய்.

“உனக்கு ரொம்ப வாயாகிடுச்சு. உன்னோட பேனால தான் நான் தீர்ப்பு எழுதறேன் அது இதுன்னு கதை விட்டுட்டு இருக்கே. ரொம்ப விளையாட்டு உனக்கு”

“அதான் அவ நம்பலையே”

“சரி விடு இந்த சன்டே நீ ப்ரீயா??”

“ப்ரீயோ ப்ரீ தான் ஆமா எதுக்கு கேட்கறீங்க??”

“கல்யாணம் ஆகி இத்தனை நாளாச்சு. உங்க ஆன்ட்டி வேற உன்னை கூப்பிடலைன்னு என்னை தினம் போட்டு நச்சரிக்கறா”

“எதுக்கு அங்கிள்??”

“உன்னை விருந்து கூப்பிடலைன்னு தான். இந்த வாரம் நீயும் உன் புருஷனும் வந்திடுங்க எங்க வீட்டுக்கு” என்றார்.

“இதெல்லாம் நல்லா இருக்கா உங்களுக்கு. இப்படித்தான் கோர்ட்ல வைச்சு என்னை வீட்டுக்கு வான்னு கூப்பிடுறதா” என்று அவள் அடுத்து ஏதோ சொல்ல வரும் முன் அவளைத் தடுத்தார்.

“வாயாடி உன்னை பேசவிட்டா பேசிட்டே இருப்பே, முறைப்படி உங்க வீட்டுக்கு வந்து நானே அழைக்கறேன். அதுக்கு முன்ன என்னைப்பத்தி நீ உன் புருஷன்கிட்ட ஒரு வார்த்தை சொல்லி வைக்கணும்ல அதுக்கு தான் சொன்னேன்”

“அங்கிள் நிஜமாவா சொல்றீங்க நீங்க எங்க வீட்டுக்கு வந்து அழைக்க போறீங்களா”

“பின்னே சும்மா சொன்னேன்னு நினைச்சியா” என்றவர் சொன்னது போலவே மறுநாளே அவர்கள் வீட்டிற்கு வந்து முறைப்படி அவர்களை விருந்திற்கு அழைத்து சென்றிருந்தார்.

அவர் சென்றதும் “ஜட்ஜ் எல்லாம் உனக்கு ரொம்ப பழக்கம் போல” என்றான் அபராஜிதன்.

“கோர்ட்ன்னா எல்லாரையும் தெரிஞ்சு வைச்சுக்கறது தானே”

“அது எனக்கும் தெரியும் நான் கேட்கிறது அந்த அர்த்ததுல இல்லை. ரொம்ப நெருங்கிய உறவினர் போல இருக்கே அதான் கேட்டேன்”

“அவர் என்னோட பிரண்டு”

“என்னது பிரண்டா?? எப்படி??”

“அதை அவரே உங்ககிட்ட அன்னைக்கு சொல்வாரு”

———————

நீதிபதி அசோக்கின் வீட்டிற்கு தம்பதி சமேதராய் இருவரும் விருந்திற்கு சென்றனர். சிரிக்க சிரிக்க பேசினார் அவர்.

தான் ஒரு நீதிபதி என்றோ உயர்ந்த பதவியில் இருப்பவன் என்று துளி கூட அவர் அதைக் காட்டிக் கொள்ளாத இயல்பாய் பழகியது அவனுக்குமே பிடித்தது.

உணவு முடிந்து அனைவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க அசோக்கின் பேச்சு முழுவதும் இந்திரசேனாவைப் பற்றியே இருந்தது.

“அபராஜிதன் எப்படி சமாளிக்கறீங்க இவளை??” என்று ஆரம்பித்தார் அவர்.

அவனோ புரியாது பார்த்தான் அவரை. “இல்லை ரொம்ப சேட்டை பண்ணுவாளே எப்படி சமாளிக்கறீங்கன்னு கேட்கறேன்??”

“அங்கிள்” என்று இவள் அவரை முறைத்தாள்.

“இவளை எனக்கு எப்படி தெரியும்ன்னு உங்களுக்கு தெரியுமா?? சொல்லியிருக்காளா??”

“இல்லை கேட்டேன் ஆனா சொல்லலை” என்றான் அவன்.

“முக்கியமான ஆர்கியூமென்ட் நடந்திட்டு இருக்கும் கோர்ட்ல. அப்போ ஏதோ உர் உர்ருன்னு ஒரு சத்தம் கேட்கும், பார்த்தா மேடம் அவ சித்தப்பா தோள் மேல சாஞ்சு விழுந்திட்டு இருப்பாங்க தூக்கத்துல”

“அச்சோ அங்கிள் என் மானத்தை வாங்காதீங்க” என்றவள் இரு கைகளாலும் முகத்தை மூடிக் கொண்டாள். அதை பார்த்து சிரித்துக் கொண்டே அவர் பேச்சை தொடர்ந்தார். அபாரஜிதனும் ஒருவிதமாய் சிரித்துக் கொண்டே அவர் பேச்சைக் கவனித்தான்.

“ஒரு நாள் கூட இவ முழிச்சுட்டு இருந்ததை நான் பார்த்ததேயில்லை. வெளிய வந்தா தான் அவளுக்கு முழிப்பே வரும். ஆரம்பத்துல இவ பண்ணுற அட்டகாசத்தை பார்த்து கோபம் வரும்”

“சில சமயம் சிரிப்பும் வரும். ஒரு முறை சிரிச்சு இவகிட்ட நான் மாட்டிக்கிட்டேன், அன்னையில இருந்து நானும் அவளும் பிரண்ட் ஆகிட்டோம். அப்படியே மாணிக்கமும் என்னோட கிளோஸ் பிரண்ட் ஆகிட்டான்” என்று கதை சொன்னார் அவர்.

“அங்கிள் என்னைப் பத்தி அவர் உங்ககிட்ட கேட்டாரா. இப்படி வாக்குமூலம் கொடுக்கறீங்க”

“உண்மை அவருக்கும் தெரிஞ்சிருக்கணும்ல இந்தும்மா”

“ஏங்க புள்ளைய இப்படி அவர்கிட்ட போட்டு கொடுக்கறீங்க. நம்ம வீட்டு புள்ளைய நாம நல்லவிதமா தான் சொல்லணும். ஒரு நாள் எல்லாரும் வாதம் பண்ணிட்டு இருக்கும் போது அவ தூக்கத்துல எழுந்து நடந்து போனான்னு சொன்னீங்களே. அதை சொல்லாம விட்டுட்டீங்க நீங்க” என்று அவர் மனைவி வேறு சொல்ல அங்கு ஒரே சிரிப்பு தான்.

“போங்க ரெண்டு பேரும் என்னை கூப்பிட்டது இப்படி கலாய்க்க தானா”

“ஹா ஹா இந்தும்மா எது எப்படியோ உன்னை பார்த்து நான் வியக்கற ஒரு விஷயம் இருக்கு. நீ கிளாஸ்ல கூட தூங்கித்தான் விழுவேன்னு மாணிக்கம் கூட என்கிட்ட சொல்லியிருக்கான். ஆனா எல்லாத்தையும் மீறி நீ பர்ஸ்ட் கிளாஸ்ல பாஸ் பண்ணியிருக்கே, கோல்ட் மெடல் வேற”

“பொறுப்பில்லாத பொண்ணுன்னு உன்னை கண்டிப்பா சொல்லவே முடியாது. உன்னோட ஆர்கியூமென்ட்ஸ் பத்தி சிவா கூட சொன்னான். பர்ஸ்ட் கேஸ் மாதிரியே இல்லை, ரொம்ப நல்லா வாதம் பண்ணேன்னு.ரொம்ப சந்தோசமா இருக்கும்மா” என்றார் அவளைப் பார்த்து.

அபராஜிதனும் ஆச்சரியத்தோடு அவளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான். பேச்சு மெல்ல திசை திரும்பி அபராஜிதனைப் பற்றி சென்றது.

அசோக் அவன் தொழிலைப் பற்றி விசாரித்துக் கொண்டிருந்தார். “அப்புறம் உங்க ஸ்கூல் எல்லாம் எப்படி போயிட்டு இருக்கு??”

“நல்லபடியா போய்கிட்டு இருக்கு அங்கிள்”

“மாணிக்கம் சொன்னான் ஏதோ பிரைப் விஷயம் பத்தி. அதெல்லாம் முடிஞ்சதுல்ல, இப்போ எதுவும் பிரச்சனையில்லைல” என்று அவர் சொல்லவும் அபராஜிதனின் முகம் மாறிற்று.

அதுவரையில் இயல்பாய் இருந்தவனது முகம் இறுக்கமானது. எதிரில் இருப்பவரை கருத்தில் கொண்டு தன்னை இயல்பாய் காட்டிக்கொண்டு அவரிடம் தொடர்ந்து பேசினான்.

அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு தான் புரிந்ததே வேதாளம் முருங்கை மரம் ஏறிவிட்டது என்று. அதற்கு மேல் அபராஜிதனுக்கு அங்கு இருப்பு கொள்ளவில்லை. அதை உணர்ந்தவளாய் இந்திரசேனாவும் கிளம்ப அவர்கள் இருவருக்கும் மரியாதை செய்து வழியனுப்பி வைத்தனர். இதோ வீட்டிற்கும் வந்தாயிற்று மௌனம் மட்டுமே அங்கு நிலவியது. அபராஜிதனின் முகத்தை பார்க்கவே அவளுக்கு பயமாக இருந்தது.

Advertisement