Advertisement

23

ஆத்திசூடி – நூல் பல கல்

பொருள் – அறிவை வளர்க்கும் நூல்களைப் படி

“டேய் அண்ணா என்னடா சொல்லாம கொள்ளாம வந்து நின்னு சர்பிரைஸ் கொடுக்கறே எனக்கு” என்றாள் இந்திரசேனா முகிலனை கண்ட உற்சாகத்தில்.

“ஏன் உன் வீட்டுக்கு வர்றதுக்கு முன்னாடியே சொல்லிட்டு தான் வரணுமா??”

“நீ வர வேண்டாம்ன்னு யாரு சொன்னது… ஒரு வேளை நான் இந்த நேரத்துல வீட்டுல இல்லைன்னா என்ன செஞ்சிருப்பியாம்”

“அதெல்லாம் கூடவா தெரியாம வந்திருப்போம். அதைச் சொல்லத்தான் எங்ககிட்ட உங்க சீனியர் இருக்காரே” என்றான் அவன் சிரிப்புடன்.

“எங்க சீனியர்ன்னு கிண்டல் பண்றியா. உன்னை கொல்லப் போறேன் பாரு. சித்தா அதுக்கு தான் என்னை சீக்கிரம் கிளம்புன்னு இன்னைக்கு சொன்னாரா. நாளைக்கு போய் பேசிக்கறேன் அவர்கிட்ட, அவர் கூட ஒரு வார்த்தை சொல்லலை நீ வர்றேன்னு, போடா” என்று பொய்யாய் கோபித்துக் கொண்டாள்.

“நான் தான் அப்பாகிட்ட சொன்னேன் உன்கிட்ட சொல்ல வேண்டாம்ன்னு, நேர்ல வந்து உனக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கலாம்ன்னு வந்தா என்னை நீ உள்ள கூட கூப்பிடாம வெளியவே வைச்சு பேசிட்டு இருக்கே. என்னை அப்படியே வந்த வழியோட அனுப்பிடறதா உத்தேசமா??”

“சாரிடா அண்ணா நீ உள்ள வாடா முதல்ல”

“எனக்கு மட்டும் எப்படித்தான் இப்படி தேடித்தேடி மரியாதை கொடுக்கறியோ தெரியலை”

அவன் கிண்டலாய் சொல்வதை உணர்ந்தவளின் முகத்தில் ஈயென்ற இளிப்பு மட்டுமே பதிலாய்.

“இந்தா??” என்று அவன் ஒரு ஹாட்பாக்சை நீட்ட “என்னதுடா??”

“உனக்கு பிடிச்சது தான், பாதம் அல்வா சுடச்சுட இருக்கு இப்போவே சாப்பிடு அப்படி சாப்பிடத்தானே உனக்கு பிடிக்கும்”

“எப்படிடா அவ்வளவு தூரத்துல இருந்து கொண்டு வந்தே?? அதுவும் சூடா வேற எடுத்து வந்திருக்கே”

“கடையில அப்போவே சொல்லி வைச்சுட்டேன். அவன் அவனோட பாக்ஸ்ல போட்டு கொடுத்ததை நான் நம்ம பாக்ஸ்க்கு ஷிப்ட் பண்ணிட்டேன். அதான் ஹாட்டாவே இருக்கு. உனக்கு பிடிக்கும்ல சாப்பிடு பாப்பா” என்று அவன் சொல்லவும் கண்கள் லேசாய் கலங்கிவிட்டது அவளுக்கு.

“ஏன்டா இப்படிலாம் பண்றே??”

“என்ன பண்ணேன்?? எப்பவும் செய்யறது தானே, புதுசாவா உனக்கு வாங்கிட்டு வர்றேன். இன்னைக்கு ட்ரிப்ளிகேன் பக்கம் போனேன். கடையை பார்க்கவும் உன் ஞாபகம் தான் உடனே வாங்கிட்டு வந்திட்டேன்”

“கடைய பார்க்கவும் தான் உனக்கு என் ஞாபகம் வந்திச்சா”

“இல்லை உன் ஞாபகம் வந்ததுனால தான் கடைக்கே போனேன் பாப்பா” என்றான் அவன் மறையாது.

“போடா நீங்க பண்ணுறதுலாம் பார்த்து இப்போலாம் எனக்கு அடிக்கடி கண்ணு வேர்க்குது”

“நீ இப்படியே பேசிட்டு தான் இருப்பியா பாப்பா. அண்ணன் உன் வீட்டுக்கு வந்திருக்கேன் ஒரு வாய் காபி டீ எதுவும் கொடுக்கற ஐடியா உனக்கிருக்கா?? இல்லையா??”

“ஆமா இவர் விருந்தாளி பாரு வந்ததும் காபி டீ கொடுக்க, இருந்தாலும் போனா போகுது வீட்டுக்கு முதல் முதல்ல வந்திருக்கே அதனால நான் போய் உனக்கு காபி போட்டு கொண்டு வர்றேன்” என்று எழுந்தாள்.

“சும்மா தான் கேட்டேன் நீ முதல்ல அல்வா சாப்பிடு பாப்பா”

“இல்லை நீ முதல்ல காபி குடி, நீ வேற வாயை திறந்து கேட்டுட்டே உன் விதியை யாரால மாத்த முடியும் நான் நிமிஷத்துல கொண்டு வந்திடறேன்” என்றுவிட்டு சமையலறை நுழைந்தாள்.

“மாப்பிள்ளை எப்போ வருவாரு??” என்றான் அவன் சத்தமாய்.

“வர்ற நேரம் தான்” என்றாள் அவள் உள்ளிருந்து.

திடிரென்று ஏதோ சந்தேகம் வந்தவளாய் “அண்ணா நீ என்னை பார்க்க வந்தியா இல்லை அவர பார்க்க வந்தியா”

“ரெண்டு பேரையும் தான் பாப்பா”

“தப்பிச்சுட்ட போ” என்று சொல்லிக்கொண்டே அவனுக்கு காபி கோப்பை கொண்டு வந்தாள் அவள்.

“குடி” என்றவள் ஒரு தட்டில் அவனுக்கு முறுக்கும், ஸ்வீட்டும் கொண்டு வந்து கொடுத்தாள்.

“எங்க பாப்பாவா இது??” என்று அவன் ஆச்சரியமாக அவளைப் பார்த்தான்.

“இப்போ எதுக்கு இந்த லுக்கு??”

“பின்னே உனக்கு காப்பி போட்டு, ஸ்னாக்ஸ் எல்லாம் உன் கையில நாங்க கொண்டு வந்து தருவோம். இங்க நீ இதெல்லாம் செய்யறியா அதான் ஆச்சரியமா இருக்கு”

“அம்மாவும் நாயகிம்மாவும் இதெல்லாம் செஞ்சா உனக்கு அதிசயம் இல்லை நான் செஞ்சா அதிசயமா??”

“அதில்லை பாப்பா நீ நம்ம வீட்டுல ஒரு துரும்பை கூட கிள்ளினதில்லை. ஏன் பாப்பா ரொம்ப வேலையோ!!” என்று நிஜமாகவே அவன் அக்கறையாக கேட்டதில் தனக்கான உறவுகளை எண்ணி உள்ளம் உவகை கொண்டது.

“அப்படிலாம் இல்லை அண்ணா”

“மறைக்காத பாப்பா”

“நிஜமாவே இல்லை உனக்கு தான் தெரியுமே நான் காலையில சீக்கிரமே எழ மாட்டேன்னு. சில நாள் அலாரம் வைச்சு எழுந்துக்குவேன், சில நேரம் அலாரம் அடிச்சாலும் என் காதுல விழுகாது. அப்போலாம் அவரே எழுந்து எல்லாம் செஞ்சி வைச்சிடுவாரு”

“பாப்பா அதெல்லாம் தப்பு பாப்பா. நீ தான் எழுந்து செய்யணும்??”

“ஏன் அவர் செஞ்சா என்ன தப்பு?? வீட்டுல பொம்பளைங்க தான் எல்லா வேலையும் செய்யணுமா. நாளைக்கு நீயும் உன் பொண்டாட்டி வந்தா இப்படித்தான் சொல்வியா. ஆம்பிளைங்க வேலை செஞ்சா ஆகாதா” என்று சில நொடியில் அவள் அவனிடம் சண்டை வளர்ப்பது போல பேச ஆரம்பித்தாள்.

“அய்யோ பாப்பா… பாப்பா… ஆளைவிடு பாப்பா நான் தெரியாம சொல்லிட்டேன். என்னை மன்னிச்சுடு. என் பொண்டாட்டி வந்தா அவளை உட்கார வைச்சு நானே சமைச்சு போடுறேன் போதுமா”

இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே வாசலில் பைக் நிற்கும் சத்தம் கேட்டது. இந்திரசேனா அதன் சத்தத்தில் சட்டென்று அலர்ட்டாகி “அவர் வந்திட்டார்” என்றாள் அண்ணனிடம்.

“ஏன் பாப்பா மாப்பிள்ளை பைக்ல தான் ஸ்கூல்க்கு போயிட்டு வருவாரா??”

“ஆமா”

“ஏன் பாப்பா கார் என்னாச்சு??”

“அது மாமாவோட யூஸ்க்கு வாங்கினது”

“இல்லை பாப்பா ஸ்கூல் கரெஸ் போய் இப்படி பைக்ல”

“அவர் காதுல விழுகுற மாதிரி இதை கேட்டு வைக்காத அண்ணா. அவ்வளவு தான் நம்ம காது தீயிற அளவுக்கு கதை சொல்வாரு”

“கதையா என்ன கதை??”

“அது யாரோ சொன்ன கதை அதை கேட்டுட்டு இவர் இன்னும் சொல்லிட்டு இருக்காரு”

“அதான் என்ன கதை??”

“நம்ம சைக்கிள்ள போகற அளவுக்கு வசதி இருக்கும் போது நடந்து போகணுமாம். பைக் வாங்குற அளவுக்கு வசதி இருக்கும் போது சைக்கிள்ள போகணுமாம். கார் வாங்குற அளவுக்கு வசதி இருக்கும் போது பைக்ல போகணுமாம்”

“பாப்பா போதும் போதும்”

“பார்த்தியா நான் சிம்பிளா சொன்னதை கேட்டே உனக்கு போதும் போதும்ன்னு ஆகுது. ஒரு நாள் தெரியாத்தனமா இதை அவர்கிட்ட கேட்டுட்டு என் காதுல ரத்தம் தான் வந்துச்சு”

அபராஜிதன் அவர்கள் பேச்சை கேட்டவாறே உள்ளே நுழைந்திருந்தான். மரியாதை நிமித்தமாய் முகிலன் எழுந்து நின்றிருந்தான் “வாங்க மாப்பிள்ளை” என்றவாறே.

“நீங்க எப்போ வந்தீங்க??” என்றான் அவனும் பதிலுக்கு.

“அரை மணி நேரம் தான் ஆச்சு மாப்பிள்ளை”

“காபி சாப்பிட்டீங்களா??” என்றவாறே தன் மனைவியை பார்த்தான், கொடுத்தியா என்பது போல.

“அதெல்லாம் பாப்பா கொடுத்தாச்சு மாப்பிள்ளை. உங்களை பார்த்துட்டு கிளம்பலாம்ன்னு தான் காத்திட்டு இருந்தேன்”

“ஒரு ஐஞ்சு நிமிசத்துல வந்திடறேன் நீங்க பேசிட்டு இருங்க” என்றவன் தன் மனைவியை ஒரு பார்வை பார்த்து உள்ளே சென்றுவிட்டான்.

“பாப்பா மாப்பிள்ளை ஏன் டென்ஷனா இருக்காரு. ரொம்ப வேலையோ??”

“அவர் எப்பவும் அப்படி தான் அண்ணா”

“சரி பாப்பா நீ போய் அவரைப் பாரு நான் உட்கார்ந்திருக்கேன்” என்றவன் தன் போனை எடுத்து அதை நோண்ட ஆரம்பிக்க இந்திரசேனா உள்ளே சென்றாள்.

அவன் குளியலறை புகுந்திருக்க இவள் சமையலறை நோக்கிச் சென்றாள் அவனுக்கு காபி எடுத்து வருவதற்காய்.

‘பாப்பாவாம் பாப்பா, இவளை எந்த ஆங்கிள்ள பார்த்தாலும் பாப்பா மாதிரியே தெரியலையே. இவனும் இவன் அப்பனும் எதுக்கு இவளை பாப்பா பாப்பான்னு கூப்பிடுறானுங்க’ என்று குளியலறைக்குள் குளித்துக் கொண்டே தனக்குள் பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருந்தான் அபராஜிதன்.

‘இவளைப் பார்த்தா பாப்பா மாதிரியா தெரியுது. பீப்பா மாதிரி இருக்கவளைப் போய் இன்னும் பாப்பான்னு கூப்பிடுறானுங்க. அப்போ எங்களுக்கு குழந்தை பிறந்தா குட்டிப் பாப்பாவை எப்படி கூப்பிடுவானுங்க’ என்று இன்னும் தீவிரமாய் விவாதம் ஓட அவன் குளித்து முடித்திருந்தான்.

தன் மூளைக்குள் ஓடிய விவாத போட்டிக்கு தற்காலிகமாய் விலக்கு கொடுத்து வேறு உடைக்கு மாறி அவன் வெளியில் வர இந்திரசேனா சூடான காபியை அவன் முன் நீட்டினாள்.

அதை வாங்கிப் பருகியவன் முகிலனின் எதிரே இருந்த சோபாவில் அமர்ந்தான். சொல்லு என்பதாய் ஒரு பார்வை பார்த்து.

“வேலையெல்லாம் எப்படி போகுது மாப்பிள்ளை”

‘அது தெரிஞ்சு நீ என்ன பண்ணப் போறே’ என்று அவன் மனசாட்சி குதர்க்கமாய் ஒரு பதிலை கொடுத்த போதும் வெளியே அப்படி பேச முடியாதே என்றெண்ணியவனாய் “நல்லா போகுது” என்றான்.

“உங்களை பார்க்கத்தான் ரொம்ப நேரமா காத்திட்டு இருந்தேன்”

“சொல்லுங்க என்ன விஷயம்??”

“அதுக்கு முன்ன பாப்பா” என்று அவன் அழைக்க “சொல்லு அண்ணா” என்றாள் இந்திரசேனா.

“மாப்பிள்ளைக்கு அல்வா கொடும்மா” என்றான் அவன்.

‘என்னது எனக்கு அல்வா கொடுக்கணுமா எதுக்குடா’ என்று ஓடியது அவனுக்கு.

“ஹ்ம்ம் கொண்டு வர்றேன்” என்றவள் உள்ளே ஓடினாள்.

“பாப்பாவுக்கு பாதாம் அல்வான்னா ரொம்ப பிடிக்கும் அதும் சூடா சாப்பிடணும்ன்னா ரொம்ப இஷ்டம் அதான் வாங்கிட்டு வந்தேன். நீங்களும் சாப்பிடுங்க”

‘என் வீட்டுல வந்து என்னையே உபசாரம் பண்றான்’ என்று பொருமினான் அவன் மனதிற்குள். அவனின் பிடித்தமின்மையை அவன் முகம் அப்பட்டமாய் காட்ட அவனுக்கு தட்டில் பாதாம் அல்வாவை கொண்டு வந்தவளின் கண்களில் அது நன்றாகவே பதிந்தது.

“எதுவும் முக்கியமான விஷயம் பேசணுமா??”

“ஆமா மாப்பிள்ளை” என்றவன் எழுந்திருக்க ‘இவன் என்ன முக்கியமான விஷயம்ன்னு சொல்லி எழுந்துக்கறான்’ என்று யோசித்தான் அபராஜிதன்.

தன் பேன்ட் பாக்கெட்டில் இருந்து ஒரு காசோலையை வெளியே எடுத்த முகிலன் அதை அபராஜிதனிடம் நீட்டியிருந்தான்.

“என்ன இது??”

“செக்”

“இது செக்குன்னு எனக்கு தெரியுது என்கிட்ட எதுக்கு கொடுக்கறீங்க??”


“பசங்க ரெண்டு பேருக்கு அட்மிஷன் கேட்டு இருந்தாங்களாமே அப்பா. அவங்களுக்கு பீஸ் கட்டணும்ல அதோட செக்கு தான் இது. இதை உங்ககிட்ட கொடுத்திட்டு வரச் சொன்னாங்க அப்பா” என்றான் அவன்.

அதைக் கேட்ட இந்திரசேனாவின் முகம் மலர்ந்துவிட அபராஜிதன் முகம் சுருங்கியது. “அது சேனா தானே காட்டுறதா சொன்னாங்க. அவ கட்டினா என்னா நான் கட்டினா என்ன நான் பார்த்துக்க மாட்டேனா. என் மேல நம்பிக்கை இல்லையா உங்கப்பாவுக்கு” என்றான் சற்றே காட்டமாகவே.

அந்த குரலின் பேதமையை உணர்ந்த முகிலன் அவனை தணிக்கும் பொருட்டு “மாப்பிள்ளை இது பாப்பாவுக்கு அப்பா மாசம் மாசம் கொடுக்கற காசு தான். அவ அப்பாகிட்ட தானே ஜூனியரா இருக்கா அதோட காசு தான் இது”

“பார்க்கப் போனா இது நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து செய்யற மாதிரி தான்”

“இந்த செக்கெல்லாம் வேணாம் எடுத்துட்டு போங்க. உங்கப்பாகிட்ட சொல்லுங்க அந்த காசை நானே கட்டிக்கறேன்னு”

“மாப்பிள்ளை நீங்க செய்யணும்ன்னு ஆசைப்பட்டா உங்க பொண்டாட்டி பேரைச் சொல்லி இன்னும் ரெண்டென்னா நாலு பிள்ளைங்களை கூட படிக்க வைங்க. ஆனா இது வேற மாப்பிள்ளை. அப்பா சொன்னா அந்த பேச்சை எங்களால மீற முடியாது” என்றவன் செக்கை டேபிளின் மீது வைத்திருந்தான்.

“நான் கிளம்பறேன் மாப்பிள்ளை” என்று இருவரிடமும் பொதுவாய் சொல்லி அவன் கிளம்பிட இந்திரசேனாவின் முகத்தில் தெரிந்த பூரிப்பை கண்டும் காணாமல் பார்த்திருந்தான் அபராஜிதன்.

‘எப்பவும் போல என் சித்தா என்னோட கவுரவத்தை என் மரியாதையை காப்பாத்திட்டார்’ என்று சந்தோசமாய் குதூகலித்தது அவள் மனம். நிமிர்வாய் ஒரு பார்வையை அபராஜிதனை நோக்கி பரவவிட்டாள் ஹாட்பாக்ஸில் இருந்த சூடான அல்வாவை அவனுக்கு ஒரு கிண்ணத்தில் கொண்டு வந்து கொடுத்தவள் தானும் ஒன்றை எடுத்துக் கொண்டாள்.

அவனைப் பார்த்துக்கொண்டே அதை ஒவ்வொரு வாயாக உள்ளே தள்ளினாள்.

Advertisement