Advertisement

22

ஆத்திசூடி – ஊக்கமது கைவிடேல்

பொருள் – முயற்சியை எப்போதும் கைவிடாதே

நீதிமன்றத்தில் முக்கியமான வழக்கொன்று நடைப்பெற்றுக் கொண்டிருக்க கேசவன், மாணிக்கவாசகம் மற்றும் இந்திரசேனா மூவரும் அங்கு தானிருந்தனர்.

தீவிரமான விவாதம் அங்கு நடந்துக் கொண்டிருந்தது. மாணிக்கவாசகத்தின் மீது யாரோ சாய்வது போலிருக்க அவருக்கு புரிந்து போனது அது இந்திரசேனா என்று. யாரும் அறியாது அவள் தோளை தட்டினார் அவர்.

“ஹாவ் சொல்லுங்க” என்றாள் மெல்ல அவரை திரும்பி பார்த்தவாறே.

“பாப்பா முக்கியமான கேஸ் போகுது”

“சாரி சார் தூக்கம் வந்திடுச்சு”

“சரி பரவாயில்லை கவனி. ஜட்ஜ்க்கு எக்ஸாம் எழுதப்போறேன்னு சொன்னேல பாப்பா. இந்த கேசை கவனி உனக்கு நிறைய விஷயம் கிடைக்கும். எவ்வளோ கேசை பாயின்ட் அவுட் பண்ணுறாங்க பாரு” என்று சொல்லிக் கொடுத்தார் அவர்.

“ஹ்ம்ம் ஓகே சார்” என்றவள் இரு கைகளாலும் கண்களை அழுந்த மூடி பின் திறந்தாள். அதன் பின் சில நிமிடங்கள் கவனிக்க முயற்சி செய்தவளை தூக்கம் ஆக்கிரமிக்க தொடங்கியது.

“கேசவா” என்று அவருக்கே அமர்ந்திருந்தவனை அழைத்தார்.

“சார்”

“பாப்பா தூங்குறா”

“எப்பவும் நடக்குறது தானே சார்??”

“இப்போ ஜட்ஜ் பிரேக் விடுவார்ன்னு நினைக்கிறேன். நீ அவளை கூட்டிட்டு போ, எனக்கு இங்க வேலையிருக்கு. நான் கொஞ்ச நேரத்துல வர்றேன்”

“சரி சார்” என்று அவன் கிசுகிசுக்கவும் நீதிபதி இடைவேளை விட்டார்.

கேசவன் அவளை அழைத்துக்கொண்டு செல்ல “எதுக்குடா K7என்னை எழுப்பறே??”

“பின்னே இங்க உள்ள நீ தூங்கவா”

“அதென்னமோ தெரியலைடா K ஏழுடா”

“என்ன??”

“அதான்டா K7 இல்லையா அதை தான் K ஏழுன்னு கூப்பிட்டேன். நல்லாயிருக்குல நானே கண்டுப்பிடிச்சேனாக்கும்” என்று அவனைப் பார்த்து சொல்ல அவன் முறைத்தான்.

“உனக்கு மட்டும் எப்படி இப்படியெல்லாம் தோணுது”

“சரி அதை விடு கேசவா எனக்கு வெளிய எல்லாம் தூக்கமே வரமாட்டேங்குது. உள்ளே விவாதம் நடக்கும் போது தான் கன்னாபின்னான்னு தூக்கமா வருது என்ன வியாதியா இருக்கும்” என்றாள் அவனிடம் அதி முக்கிய சந்தேகமாய்.

“அந்த வியாதிக்கு பேரு கொழுப்பு சூடு வைச்சா அது நல்லா கரைஞ்சுடுமாம்” என்றான் அவன் நக்கலாய்.

“K7 நீ என்னை கலாய்க்கிறியாடா”

“இந்த காபியை குடி முதல்ல” என்றவன் பேசிக்கொண்டே கேண்டீன் வந்திருக்க காபியை வாங்கி அவளிடம் நீட்டியிருந்தான்.

“டீ தான் வேணும் இதை நீயே குடி” என்றவள் டீயை வாங்கிக்கொண்டு வந்து அவன் முன் அமர்ந்தாள்.

“சார் ரொம்ப திட்டினாரா??”

“இன்னைக்கு என்ன அதிசயமோ அவர் திட்டலை. நானே அதைத்தான் பார்த்திட்டு இருந்தேன்”


“நிஜமாவாடா சொல்றே. நான் தூக்கக் கலக்கத்துல இருந்தேன் கவனிக்கலை”

“உனக்கு எப்பவும் விளையாட்டு தான் இந்திரா. இனிமே இப்படி செய்யாத பாரு உன்னால நானும் கேசை கவனிக்காம வந்திட்டேன்”

“நீ போய் கவனி”

“உன்னை தனியாவிட்டு போகக்கூடாதுன்னு சார் சொல்லியிருக்காரு”

“அவர் ஒண்ணும் சொல்ல மாட்டாரு நீ போ” என்று அவனை அனுப்பி வைத்தாள்.

தனக்கு வடை ஒரு செட் சொல்லியிருந்தாள் அது வந்திருக்க அதை சாப்பிட்டு கொண்டிருக்கும் போதே மாணிக்கவாசகம் இவளை நோக்கி வந்தார். ஓரிருவர் அவருக்கு மரியாதை செலுத்த அவரும் தலையசைத்து பின் அவளருகில் வந்து அமர்ந்தார்.

“வடை வேணுமா??”


“வேணாம்”

“டீ??”

“எதுவும் வேணாம்?? என்னாச்சு உனக்கு??”

“எதுவும் ஆகலையே??”

“இன்னைக்கு எதுக்கு தூங்கினே??”

“நைட் சரியா தூங்கலை அதான் தூக்கம் வந்திடுச்சு”

“தினமும் இப்படித்தானா??”

“எனக்கும் தூக்கம் வரமாட்டேங்குது அந்த வீட்டில” என்றாள்.

“பாப்பா!!”

அவரின் குரலின் பேதம் உணர்ந்ததும் “இல்லை புது வீடுல எனக்கு இன்னும் பழகலை அதான்”

“நிஜமா தான் சொல்றியா பாப்பா” என்றார் அவர் கனிந்த குரலில்.

“நான் ஒண்ணு சொல்வேன் கேட்பீங்களா??” என்றாள் வெகு சீரியசான குரலில்.

“சொல்லு பாப்பா”

“தயவு செஞ்சு என் மேல அக்கறை காட்டி பேசாதீங்க இனிமே. எனக்கு முன்ன மாதிரி இல்லை ரொம்ப அழுகையா வருது. கல்யாணத்துக்கு முன்னாடி யார் என்ன சொன்னாலும் ஒரு பொட்டு அழுகை கூட வந்ததில்லை எனக்கு”

“இப்போலாம் பொசுக்கு பொசுக்குன்னு அழுக்காச்சி ஆகுறேன். எனக்கே அது பிடிக்கலை, இதுல நீங்க வேற இப்படி பேசினா நான் அவ்வளவு தான். எப்பவும் போல நீங்க என்னை திட்டுங்க சந்தோசமா வாங்கிக்கறேன். இப்படி கனிவா எல்லாம் பேசாதீங்க தாங்க முடியலை” என்றாள்.

“பாப்பா நீ சந்தோசமா இருக்கியா??”

“சித்தா ப்ளீஸ் கோர்ட்க்குள்ள நீங்க எப்பவும் போல எனக்கு குருவாவே இருங்க. உங்க பொண்ணு பாசத்தை எல்லாம் நான் வீட்டுக்கு வரும் போது மட்டும் காமிங்க. இனிமே இப்படி நீங்க பேசுறதா இருந்தா நான் உங்களை பார்க்கவே வரமாட்டேன்” என்றுவிட்டு எழுந்து சென்றேவிட்டாள் அவள். செல்லும் மகளையே வருத்தத்தோடு பார்த்திருந்தார் அவர்.

—————

“சேனா” என்ற அபராஜிதனின் அழைப்பு எப்போதும் போல வெறுப்பை கொடுக்க வேண்டா வெறுப்பாய் எழுந்துச் சென்றாள் அவள்.

“சொல்லுங்க”

“உன்னை எவ்வளவு ஆசையா கூப்பிட்டேன். நீ என்னமோ முகத்தை தொங்க போட்டுட்டு வர்றே??”

முகத்தை இயல்பாய் மாற்றி கஷ்டப்பட்டு “சொல்லுங்க” என்று புன்னகைப்பது போல அவள் இதழ் வளைத்து சொல்ல “ஒண்ணுமில்லை” என்றான் அவன்.

‘ஒண்ணுமில்லைன்னா போ’ என்பது போல எண்ணிக்கொண்டு அவள் தன் வேலையை கவனிக்க சென்றுவிட்டாள்.

“இந்த திமிரு தான் இவகிட்ட குறையவே மாட்டேங்குது” என்று முணுமுணுத்தான் அவன். இந்திரசேனாவை ஆசையாய் வெளியே அழைத்துச் செல்ல தான் நேரமாக அன்று வீட்டிற்கு வந்திருந்தான்.

அவளோ சுவராசியமில்லாது பேசவும் கோபம் வந்துவிட அவனும் அப்படியே விட்டுவிட்டான். இரவு உணவின் போது “நெக்ஸ்ட் அகாடமிக் தொடங்கப் போகுது. நாளையில இருந்து பார்ம் வாங்க போகன்னு ஆளுங்க வருவாங்க”

“காலையில நான் சீக்கிரம் கிளம்பிடுவேன். நீ ஆட்டோ பிடிச்சு ஸ்டேஷன்க்கு போய்டு. நான் ஈவினிங் வர்றதுக்கும் கூட லேட் ஆகும்” என்றான்.

“ஹ்ம்ம் சரி” என்றாள்.

ஏதோ தோன்ற மெல்ல சிரித்தான் அபராஜிதன். ‘எதற்கு சிரிக்கிறான்’ என்பது போல நிமிர்ந்து அவனைப் பார்த்தாள் அவள்.

“எதுக்கு சிரிக்கறேன்னு கேட்க மாட்டியா??” என்றான் சிரித்துக்கொண்டே!!

“நீங்களே சொல்லுங்க”

“இல்லை உங்க சித்தப்பா ஒரு விஷயம் சொன்னாரே ஞாபகம் இருக்கா??”

‘என்ன விஷயத்தை பத்தி பேசுறாரு’ என்று பார்த்தாள் அவள்.

“அதான்மா யாரோ ரெண்டு பசங்களுக்கு சீட் கேட்டாரே. நான் கூட ஓகே சொன்னேன்ல”

‘அதுக்கென்ன இப்போ’ என்று பார்த்தாள் அவள்.

அதே பார்வை கோழி முட்டை கண்ணை வைச்சுட்டு இருடி ஒரு நாள் உன் கண்ணை பிடிங்கி காக்காக்கு போடத்தான் போறேன் என்று சொல்லிக்கொண்டான் மனதிற்குள்.

“அதுக்கென்ன இப்போன்னு யோசிக்கறே அதானே. உன் சித்தப்பா அன்னைக்கு என்ன சொன்னாரு நீ அந்த பசங்களை படிக்க வைக்கப் போறேன்னு தானே. நீ படிக்க வைச்சா என்ன நான் படிக்க வைச்சா என்ன. எப்படியும் உனக்காக நான் தான் அந்த பசங்களுக்கு காசு கட்டப் போறேன்” என்றுவிட்டு அவன் எகத்தாளமாய் அவளைப் பார்க்க அவன் சொல்ல வரும் விஷயம் அவளுக்கு புரிந்து போனது.

முகம் சுண்டைக்காயாய் சுருங்கிப் போனது அவனின் பேச்சில். ‘நானே கட்டுறேன்’ என்று அவள் இப்போது சொன்னாலும் அவன் சொன்னது போல நானும் அவனும் வேறு வேறில்லை என்று அவன் சொன்னது தான் நிஜமாகும். இவனிடம் தோற்றுவிட்டேனா நான்…

Advertisement