Advertisement

21

ஆத்திசூடி – நேர்பட ஒழுகு

பொருள் – ஒழுக்கந் தவறாமல் நேர் வழியில் நட

கரிகாலன் சிவகாசிக்கு சென்று ஒரு மாதம் ஓடிவிட்டது. வீட்டில் இருவர் மட்டுமே தான். ஆனால் இருவருக்குள்ளான பேச்சுவார்த்தை என்பது எப்போதும் பச்சைமிளகாயை கடிப்பது போன்று காரசாரமானதாகவே இருக்கும்.

அபராஜிதனை பொருத்த வரை அவனுக்கு தான் செய்வது சரியே என்ற எண்ணம் எப்போதும். அவன் பேச்சை இதுவரை யாரும் சரியானதில்லை என்று கூறியதில்லை. அதனால் அவனுக்கு தான் செய்வது அனைத்தும் சரியே என்ற நினைப்பு.

அவன் தப்பை சுட்டிக்காட்டும் இந்திரசேனா அவனுக்கு தப்பாகவே தெரிந்தாள். அவளை நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டாம் என்று சொல்லியும் அவள் சென்றதும் அதை தொடர்வதும் அவன் கோபத்தை இன்னும் அதிகமாக்கியது.

அவனின் வெறுப்பு மொத்தமும் மாணிக்கவாசகத்தின் மீதும் திரும்பியது. நகுலனின் மனைவி திவ்யாவின் சீமந்தத்திற்கு அவனை கூட்டி வருவதற்குள் இந்திரசேனா படாதபாடு பட்டாள் என்று சொன்னால் மிகையாகாது.

மாணிக்கவாசகமும், நாயகியும் மட்டுமல்லாது அகத்தியன் மற்றும் சாதனாவும் கூட வீட்டிற்கு வந்து அழைத்தார்கள் அவர்களை. வீடு தேடி வந்துவிட்டதால் சற்று இன்முகமாகவே அவர்களிடம் நடந்துக் கொண்டான் போலும். அப்படித்தான் தோன்றியது அவளுக்கு.

அவர்கள் சென்ற பின்னே “ஏங்க நாம ரெண்டு நாள் முன்னாடியே அங்க போய்டலாம்ல” என்று இந்திரசேனா அவனிடம் கேட்க “ரெண்டு நாள் முன்னாடி எதுக்கு??” என்றான் அவன்.

“இல்லை பங்க்ஷன்??”

“நீ போயிட்டு வந்திடு பங்க்ஷன் அன்னைக்கு போனா போதாது. முன்னாடியே போறதுனாலும் போயிட்டு வா. எனக்கொண்ணும் பிரச்சனை இல்லை. நான் சொல்லி நீ எதை கேட்கப் போறே” என்றுவிட்டு அவன் பள்ளிக்கு கிளம்பிவிட அய்யோவென்றானது அவளுக்கு.

ஏன் தான் அப்படியொரு விசேஷம் தாங்கள் வீட்டில் நடக்கிறதோ என்று எண்ணுமளவிற்கு அவளுக்கு பெரும் தலைவலியை கொடுத்தான் அபராஜிதன். ஒவ்வொரு விஷயத்திலும் சொல்லிக் காட்டிக்கொண்டே இருந்தான்.

இரண்டு நாட்களாய் அவள் வீட்டில் இருந்து போன் மாற்றி போன் செய்துக் கொண்டிருக்கிறார்கள் அவளை வந்து தங்குமாறு சொல்லி.

“ஏங்க நாளைக்கு வேணா கிளம்பி போயிட்டு வந்திடுவோமா??”

“எங்க??”

“திவ்யா அண்ணி சீமந்தத்துக்கு”

“நான் எதுக்கு?? உங்க அண்ணிக்கு சீமந்தம்ன்னா சொல்லு போயிட்டு வருவோம். உங்க சித்தப்பா பையனோட வைப் சீமந்தத்துக்கு நான் எதுக்கு வரணும்??” என்றான் கொஞ்சம் கூட இரக்கமில்லாமல்.

சட்டென்று விழிகள் கலங்கி கண்ணீரை பொழிய தயாராய் நின்றது. அவன் முன் அழுது அவன் தன்னை இன்னும் இளக்காரமாய் நினைப்பான் என்ற எண்ணம் எழ இமை தாழ்த்தி தன் கண்ணீரை சமாளித்தாள் அவன் முன் காட்டாது.

‘உனக்கொரு நேரம் வந்திருக்கு நீ பேசறே, எனக்கும் ஒரு நேரம் வரும் பேசுறதுக்கு’ என்றிருந்தவள் அதன்பின் அவனிடம் எதுவும் கேட்கவில்லை.

மறுநாள் நீதிமன்றத்தில் மகளை சந்தித்த மாணிக்கவாசகத்தின் முகத்தை பார்க்க முடியாது அவள் அவருக்கு போக்குக்காட்டிக் கொண்டிருக்க கேசவன் வந்து அவளை அழைத்தான்.

“இந்திரசேனா” என்று அவள் முழுப்பெயரை அழைக்கவும் எதையோ குறிப்பெடுத்துக் கொண்டிருந்தவள் நிமிர்ந்து பார்க்க கேசவன் நின்றிருந்தான்.

“சொல்லு K7”

“என்னாச்சு உனக்கு முன்ன மாதிரி கலகலன்னு இல்லையே நீ” என்றான் அவளையே அளவெடுக்கும் பார்வையுடன்.

“அதெல்லாம் ஒண்ணுமில்லையே நான் எப்பவும் போலத்தானே இருக்கேன்”

“இங்க பாரு என் கண்ணை பாரு அப்புறம் இதே பதிலை சொல்லு” என்றான் அவன் அவளையே ஊடுருவும் பார்வை பார்த்து.

“இப்போ என்ன பிரச்சனை உனக்கு??” என்றாள் அவன் கண்களை நேருக்கு நேராய் சந்தித்து.

“சார் உன்னை பார்க்கணும்ன்னு சொன்னார். நான் அப்போவே உனக்கு போன் பண்ணேன்ல ஏன் வரலை??”

“எனக்கு வேலையில்லையா நான் சும்மாவா உட்கார்ந்து இருக்கேன். கூப்பிட்டதும் ஓடி வர” என்றாள் சிடுசிடுப்பாய்.

“மேடம் நானும் வக்கீல் தான் நீ என்ன வேலையா இருக்கேன்னு எனக்கும் தெரியும். கிளிக்கு ரெக்கை முளைச்சுடுத்து அது பறந்து போய்டுத்துங்கற மாதிரி இருக்கு உன்னோட நடவடிக்கை எல்லாம். நீ பண்ணுறது சரியில்லை”

“உனக்கு என்ன பிரச்சனைன்னு என்கிட்ட சொல்லு இந்து. என்னை உன் அண்ணனா நினைச்சு சொல்லு”

“போதும் சாமி எனக்கு ஒண்ணுக்கு மூணு அண்ணனுங்க இருக்கானுங்க. அதுவே போதும் ஆளை விடு”

“சரி பிரண்டா நினைச்சு சொல்லு”

“கேசவா ப்ளீஸ் என்னை கொஞ்சம் நிம்மதியா இருக்க விடேன்”

“உன்னிஷ்டம் ஆனா ஒண்ணு நீ எல்லாரையும் ரொம்ப கஷ்டப்படுத்தற. சார்கிட்ட நீ அவரை பார்க்க முடியாதுன்னு சொன்னதா சொல்லிடறேன்” என்று அவன் நகர “நான் எப்போ அப்படிச் சொன்னேன்”

“நீ போ நான் பார்க்கறேன்” என்றுவிட்டு தலையில் கை வைத்து அமர்ந்திருந்தாள்.

அவரை பார்த்தால் அவர் என்ன கேட்பார் என்று அவளுக்கு நன்றாகவே தெரியும். ஒரு பெருமூச்சை வெளியேற்றி அவரின் சேம்பர் நோக்கிச் சென்றாள்.

மகளை பார்த்ததுமே அவர் முகத்தில் லேசாய் வருத்தம் தெரிந்தது. எப்போதுமே கலகலவென்று சிரித்துக்கொண்டு குறும்பாய் சுற்றிக்கொண்டிருந்த மகளை தொலைத்துவிட்டோம் என்று மட்டும் புரிந்தது அவருக்கு.

“சொல்லுங்க சார்” என்று வந்து நின்றவளை ஒன்றும் சொல்லாது பார்வையில் வருடினார்.

“சாப்பிட்டியா??”

“இன்னும் இல்லை சார்”

“என்னோட வா” என்று அவர் எழ “நான் கொண்டு வந்திருக்கேன் சார்”

“சரி அதை எடுத்திட்டு வா சேர்ந்து சாப்பிடலாம்” என்றார் அவர் நான் உனக்கு தகப்பன் என்னும் பாவனையில்.

“இல்லை நான் கொஞ்சம் லேட்டா தான் சாப்பிட போறேன்”

“எத்தனை மணிக்குன்னு சொல்லு நானும் சேர்ந்துக்கறேன். நீ முன்னாடியே சொல்லு நான் சுகர் டேப்லெட் வேற போடணும்” என்று அவர் சொல்ல கெஞ்சும் பார்வை பார்த்தாள் அவரை. அவர் அதற்கெல்லாம் அசையபவரா.

அவள் தான் வேறு வழியில்லாது “இப்போவே சாப்பிடலாம்” என்றவள் தன் உணவை எடுத்துக்கொண்டு வந்தாள்.

உணவை இருவருக்கும் எடுத்து வைத்து சாப்பிட ஆரம்பித்தனர். பாதி சாப்பாடு முடித்த பின்னே மெல்ல ஆரம்பித்தார் மாணிக்கவாசகம் “பாப்பா என்ன பிரச்சனை??”

என்னவென்று புரியாது பாவனை கொடுத்தாள் அவள். “மாப்பிள்ளை பங்க்ஷனுக்கு வரமாட்டேன்னு சொல்லிட்டாரா” என்று அபராஜிதனை சரியாய் கணித்து கேட்டார் அவர்.

அவள் ஆமென்றும் இல்லையென்றும் சொல்லவில்லை. “சரி விடு பாப்பா நீ கவலைப்படாதே”

“நான் வேணா அவர்கிட்ட பேசறேன்”

“எதுக்கு??” என்றாள் அவசரமாய் மறுத்து.

“நீ வராம எப்படி பாப்பா??”

“நான் வரமாட்டேன்னு எப்போ சொன்னேன்??”

“அப்போ இன்னைக்கே வர்றியா பாப்பா”

“நாளைக்கு வருவேன்”

“யாரோ மாதிரி தான் வந்து கலந்துப்பேன்னு சொல்றியா” என்றார் வருத்தம் தோய்ந்த குரலில்.

“சித்தா நீங்க தெரிஞ்சு தான் பேசறீங்களா??”

“ரொம்ப கஷ்டமா இருக்கு பாப்பா. நான் தப்பு பண்ணிட்டனா பாப்பா. நீ என்கிட்ட முடிவெடுக்க சொன்னப்போ நான் உன்னை யோசிச்சு வேணாம்ன்னு சொல்லியிருக்கணுமோ. பெரிசா உனக்கு நல்லது பண்ணுறதா நினைச்சு தப்பு பண்ணிட்டனோன்னு இருக்கு பாப்பா” என்றவர் சாப்பிட முடியாமல் அப்படியே தட்டை வைத்துவிட்டு கையை கழுவிட அவளுக்கு வருத்தமாக இருந்தது.

“என்ன சித்தா பேசறீங்க நீங்க. அவர் நீங்க சொன்ன மாதிரி நல்லவர் தான். என் மேல அன்பா தான் இருக்கார்” என்றாள் அவள். “அது மட்டும் தான் பாப்பா எனக்கு இப்போ ஆறுதல்” என்றார் அவர் விரக்தியாய்.

“சித்தா ப்ளீஸ் எனக்கு ஒண்ணுமில்லை, நீங்க பீல் பண்ணுற அளவுக்கு. நான் நல்லா இருக்கேன் உங்களுக்கு தான் அவர் வேலையை பத்தி தெரியும்ல. இப்போ வீட்டிலையும் யாருமில்லை, அவரை தனியா விட்டு நான் எப்படி நம்ம வீட்டுக்கு வந்து தங்குறது. அதனால தான் சித்தா நான் வரலை”


“அதான் நாளைக்கு பங்க்ஷனுக்கு நான் வரப்போறேன்ல. அப்புறம் எதுக்கு நீங்க இவ்வளவு சோக கீதம் வாசிக்கறீங்க. ஒழுங்கா சாப்பிட்டு எழுந்திருங்க இல்லைன்னா நாயகிம்மாக்கு போன் பண்ணி சொல்லிருவேன்” என்று சட்டென்று இயல்பாய் பேசிய மகளை கூர்ந்து நோக்கினார் அவர்.

“நீங்க இப்படி உத்து பார்க்கிற அளவுக்கு எல்லாம் ஒண்ணுமில்லை. நான் நிஜம் தான் சொல்றேன்” என்றாள்.

“பாப்பா வக்கீல்கிட்ட பொய் சொல்லக்கூடாது சரி தான். வக்கீலுங்களுக்குள்ள பொய் பேசலாம்ன்னு நினைச்சுட்ட போல. நான் அப்படி உனக்கு சொல்லித் தரலையே பாப்பா” என்றார் அவர்.

“சரி விடு பாப்பா உன்னை நாளைக்கு விஷேசத்துல பார்க்கறேன்” என்றவர் கிளம்பி சென்றுவிட செல்லும் அவரையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

‘நாளைக்கு எப்படி அவரில்லாம நான் விஷேசத்துக்கு போகக் போறேன்’ என்று தனக்குள் பேசிக்கொண்டாள் அவள். அவளின் பிரச்சனை தீர்க்கவென்று வந்து சேர்ந்தாள் அகல்யா.

“வாங்க என்ன இந்த நேரத்துல??”

“ஏன் கேட்க மாட்டீங்க. நாம சேர்ந்து விஷேசத்துக்கு போகலாம்ன்னு நான் கிளம்பி வந்திருக்கேன். நீங்க என்னடான்னா பங்க்ஷனுக்கு கிளம்பாம என்ன பண்ணிட்டு இருக்கீங்க??”

“ஹ்ம்ம் கிளம்பலாம் என்ன அவசரம்??” என்று அசட்டையாய் பதில் சொன்னாள் அவள்.

“என்னம்மா உடம்பு எதுவும் சரியில்லையா” என்றான் அகல்யாவின் கணவன் அகிலேஷ்.

“ஒண்ணுமில்லை அண்ணா நான் நல்லா தான் இருக்கேன்”

“பேஸ் ரொம்ப டல்லடிக்குது இந்தும்மா. முன்ன மாதிரி இல்லையே நீ. அந்த துருதுருப்பு இல்லையே உன்கிட்ட”

“கல்யாணம் ஆகிடுச்சு அண்ணா பொறுப்பு கூடுதுல்ல. விளையாட்டை எல்லாம் ஒதுக்கி வைச்சுட்டு நடந்துக்கணும்ல” என்று பதில் கொடுத்தவளை ‘அப்படியா’ எனும் பார்வை பார்த்தான் அவன்.

“அப்படித்தான் என்ன சாப்பிடறீங்க??”


“நாங்க சாப்பிட வரலை உங்க கூடத்தான் சித்தி வீட்டுக்கு போகணும்ன்னு வந்திருக்கோம். நான் நேரா அங்க போகலாம்ன்னு தான் சொன்னேன், அகல்யா தான் அண்ணன் கூட சேர்ந்து போகலாம்ன்னு இங்க கூட்டிட்டு வந்திட்டா”

இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே உள்ளிருந்து வந்தான் அபராஜிதன். அவன் பள்ளிக்கு செல்ல கிளம்பி தயாராய் வந்திருக்க “இந்து அண்ணன் கூட கிளம்பி ரெடியா இருக்கு. நீ என்ன இப்படி லேட் பண்ணுறே”

“என்ன சொல்றே அகல்யா??” என்று தங்கையை பார்த்து கேட்ட அபராஜிதன் அகிலேஷிடம் நலம் விசாரித்துக் கொண்டான்.

“ஹ்ம்ம் இன்னைக்கு திவ்யா அக்காவுக்கு சீமந்தம் இல்லையா. அதுக்கு தான் நாங்க கிளம்பி வந்திருக்கோம், உங்க கூட சேர்ந்து போகலாம்ன்னு. நீ கிளம்பிட்டே இன்னும் இந்து கிளம்பலைல அதான் கேட்டுட்டு இருக்கேன்” என்றாள் அவள்.

‘இதென்ன புது தலைவலி’ என்ற யோசனையுடன் திரும்பி தன் மனைவியை பார்த்தான் அவன். அவளோ அவனை பாராது தன் பார்வையை வேறு புறம் திருப்பி நின்றாள்.

“என்ன யோசிச்சுட்டு நிக்கறீங்க. இந்து நீ போய் ரெடியாகி வா. அண்ணா சொல்லு” என்று வேறு அவள் சொல்ல பிடித்து வைத்த பிள்ளையாரை போல அசையாமல் நின்றான் அபராஜிதன்.

‘நீ சொல்லாம நான் கிளம்பவே மாட்டேன்’ என்பது போல அங்கேயே நின்றாள் இந்திரசேனா. 

“நீங்க உட்காருங்க முதல்ல” என்று அவர்களிடம் சொன்னவள் சமையலறைக்குள் செல்ல பின்னாலேயே வந்தான் அபராஜிதன்.

“எல்லாம் உன் பிளானா??”

“நான் எதுக்கு பிளான் போடணும்??” என்றாள் அவனை நேருக்கு நேராய் நோக்கி.

“நீ நினைச்சதை சாதிக்கிறல்ல??” என்றான் இதழ் வளைத்து.

“நான் எதையுமே சாதிக்கலை. வெளிய இருக்கறது உங்க தங்கச்சி அவங்ககிட்ட நீங்களே போய் சொல்லுங்க நாங்க எங்கயும் வரலைன்னு. அப்படியே இதையும் சேர்த்து சொல்லுங்க நீங்க வராம நான் எங்கயும் வரமாட்டேன்னு” என்றவள் பாலை அடுப்பில் ஏற்றி காய்ச்ச ஆரம்பித்தாள்.

அங்கேயே குறுக்கும் நெடுக்குமாய் அவன் நடக்க அகல்யாவின் குரல் வெளியில் இருந்து கேட்டது. “சீக்கிரம் வாங்க டைமாகுது நாமளே லேட்டா போகக்கூடாதுல” என்று.

இந்திரசேனா காபியை போட்டுக்கொண்டு அவனைத் தாண்டி வெளியே செல்லும் வரை அங்கேயே நடந்துக் கொண்டிருந்தான் அவன்.

“இப்போ எதுக்கும்மா காபி எல்லாம்”

“பரவாயில்லை குடிங்க அண்ணா” என்றவள் அகல்யாவிடமும் ஒன்றை நீட்டினாள். 

அவள் பின்னே வந்து நின்ற அபராஜிதனிடமும் ஒன்றை நீட்டினாள். அதைப் பெற்றுக்கொண்டவன் “சீக்கிரம் கிளம்பு போயிட்டு வந்திடலாம்” என்று சொன்ன பின்பே அவள் சீமந்தத்திற்கு கிளம்பினாள்.

ஐந்தே நிமிடத்தில் தயாராய் வந்தவளை கண்டு அகல்யாவிற்கு ஆச்சரியமே. ஒருவழியாய் அவர்கள் ஒன்றாய் கிளம்பிச் சென்று விசேஷத்தை நிறைவாக்கினர்.

Advertisement