Advertisement

20

ஆத்திசூடி – சேரிடமறிந்து சேர்

பொருள் – நீ பழகுபவர்கள் நல்ல குணங்கள் உடையவர்களா என ஆராய்ந்து பின்பு பழகு.

“அப்போ நீங்க என்னை பழிவாங்க தான் கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க அப்படித்தானே” என்றாள்.

“அப்படியும் சொல்லிக்கலாம்”

“அப்படின்னா என்ன அர்த்தம்??” என்றாள்.

“அதுவும் ஒரு காரணம் தான்”

“சரி உங்களுக்கு கோபம் என் மேல தானே, நியாயமா என்னை மட்டும் தானே நீங்க பழிவாங்கணும். எங்க சித்தா என்ன செஞ்சார். அவர் எவ்வளவு பெரிய மனுஷன் தெரியுமா??” என்றாள்.

“என்ன பெரிய மனுஷன், இல்லை தெரியாம தான் கேட்கறேன் அவன்லாம் என்ன பெரிய மனுஷன். அந்தாளு எல்லாம் ஒரு பெரிய மனுஷன்னு சொன்னே அவ்வளவு தான். ஒருத்தன் இறங்கி வந்து பேசினா என்ன வேணா கேள்வி கேட்பாரா அவரு”

“நீங்க திரும்ப திரும்ப அவரை  மரியாதை இல்லாம பேசறீங்க எனக்கு அது பிடிக்கலை. இனிமே அப்படி பேசாதீங்க” என்றாள் கண்டிப்பாய்.

“அப்போ இனிமே அவரை அப்படித்தான் கூப்பிடுவேன்” என்றான் அவன் வீம்புடன்.

“தெரியாமத்தான் கேட்கறேன், என்னை பழிவாங்குற அளவுக்கு நான் உங்களுக்கு என்ன கெடுதல் பண்ணேன்”

“நீ ரொம்ப பேசினே ரொம்ப ரொம்ப பேசினே. என்னை யாருமே அப்படி பேசினதில்லை. நான் என்ன செஞ்சேன் சொல்லு நான் பெரிசா என்ன தப்பு செஞ்சிட்டேன்”

“நான் செஞ்சதுல என்ன தப்பு இருக்கு. நியாயமா எல்லாரும் என்ன செய்வாங்களோ அதைத்தானே நானும் செஞ்சேன். நான் ஒண்ணும் அந்த தப்புக்கு சூத்திரதாரியோ இல்லை தப்பை தட்டிக் கேட்காதவனோ இல்லையே”

“என் அப்பா அங்க இருந்திருந்தா என்ன செஞ்சிருப்பாரோ அதைத்தானே நானும் செஞ்சேன். அதுல நீ என்ன தப்பை கண்டுட்டே, இன்பாக்ட் உன் சித்தப்பா கூட என்னை அந்த விஷயத்துல தப்பா நினைக்கலை. அந்த ஒரு விஷயத்துல அவர் ஜென்டில்மேனா தான் இருந்தார்”

“நீ என்னமோ நான் தான் பெரிய அக்கியுஸ்ட் ரேஞ்சுக்கு பேசி உலகத்துலேயே நீயும் உன் சித்தப்பாவும் தான் யோக்கியம் மாதிரி ஓவரா பில்டப் பண்ணே. அது தான் எனக்கு சுத்தமா பிடிக்கலை. அத்தோட விட்டியா, ஒவ்வொரு தடவையும் என்கிட்ட நீ மரியாதை இல்லாம தான் பேசினே. என்னை எதிர்த்து பேசுற உன்னை கல்யாணம் பண்ணி என் பக்கத்துலவே வைச்சுக்கணும் நினைச்சேன், பண்ணிக்கிட்டேன். பெரிசா பிளான் எல்லாம் போட்டு இதை நான் செய்யலை”

“எனக்கு என் அத்தை பொண்ணோட மேரேஜ் பிக்ஸ் ஆகித்தான் இருந்துச்சு. அவளுக்கு என்னை பிடிக்கலைன்னு வேணாம்ன்னு சொல்லிட்டா, கேட்டா நான் ரோபோ மாதிரி உணர்ச்சி இல்லாம இருக்கேனாம். பாரேன் காமெடியை, நீ என்னை வில்லன் ரேஞ்சுக்கு பேசினே, அவ என்னை ஜடம் மாதிரின்னு சொல்லிட்டா”


“அப்போ தான் அப்பா உன் மனசுல யாராச்சும் இருந்தா சொல்லுன்னு கேட்டார். எனக்கு உன் ஞாபகம் தான் வந்துச்சு அதான் நீ இப்போ இங்க இருக்கே”

“இதை சொல்ல உங்களுக்கு வெட்கமா இல்லையா” என்றாள்.

“நான் எதுக்கு வெட்கப்படணும்??”

“இன்னைக்கு நான் ஒரு வார்த்தை சொன்னேன் என்னை கல்யாணம் பண்ணி உங்க பக்கத்துல வைச்சுக்கிட்டீங்க. நாளைக்கு இன்னொரு பொண்ணு உங்களை பேசினா அவளையும் கல்யாணம் பண்ணி பக்கத்துல வைச்சுப்பீங்க அப்படித்தானே. ஏன் உங்களை வேணாம்ன்னு சொன்ன உங்க அத்தை பொண்ணை உங்களுக்கு பழிவாங்கணும்ன்னு தோணலையா, இப்படி எத்தனை கல்யாணம் பண்ணுறதா உத்தேசம்” என்றாள் கோபமாய்.

“உன்னை மாதிரி திமிரா அலட்சியமா யாரும் என்கிட்ட இதுவரைக்கும் பேசினதே இல்லை. அதுக்காக மட்டும் உன்னை கல்யாணம் பண்ணிக்கலை. இன்னொன்னும் நீ சொன்னே எல்லா பொண்ணுங்களையும் பண்ணிப்பியான்னு. என்னை பார்த்தா உனக்கு எப்படி தெரியுது. பேசுறப்போ வார்த்தைகளை கவனமா பேசணும். என்னைப்பார்த்தா ஒவ்வொரு பொண்ணு பின்னாடியும் போறவன் மாதிரி இருக்கா”

“அப்புறம் ஏன் என்னை மட்டும் கல்யாணம் பண்ணீங்க??”

“உன்னை…” என்று சொல்லி தலையில் அடித்துக் கொண்டவன் “என் தலையெழுத்து உன்னை எனக்கு பிடிச்சு தொலைச்சுருச்சு. அதனால தான் உன்னை கல்யாணம் பண்ணேன். உங்க சித்தப்பன் மட்டும் இடையில புகுந்து என்கிட்ட பேசாம இருந்திருந்தா நீ மட்டும் தான் என் பேச்சை கேட்டிருக்க வேண்டியது இருக்கும்”

“உன் சித்தப்பன் பெரிய இவன் மாதிரி என் பொண்ணை பழிவாங்க வந்தியா அதுவா இதுவான்னு கேட்குறான். ஆமாடா அதுக்கு தான் கல்யாணம் பண்ணேன்னு இப்போ அவன்கிட்ட சொல்லணும் போல இருக்கு எனக்கு”

அந்நேரம் சரியாய் அவள் கைபேசி அழைப்பு விடுத்தது. “ஹலோ” என்றவளிடம் “பாப்பா அண்ணன் பேசறேன் பாப்பா” என்றான் அவளின் சின்ன அண்ணன் முகிலன்.

“சொல்லுங்க”

“அப்பா பேசச் சொன்னதா சொன்னாரு பாப்பா” என்றவன் போனை வைத்துவிட தான் செய்த முட்டாள்த்தனத்தை எண்ணி நொந்துக் கொண்டாள் அவள்.

அந்த வீட்டின் கீழ் பகுதியில் ஹாலில் இருந்து வலது புறம் இருந்த அவளது அறையில் தான் அவர்கள் இருந்தார்கள். ஹாலில் அமர்ந்திருப்பவர்களுக்கு உள்ளே ஏதோ பேசுகிறார்கள் என்று தெரியும். ஆனால் பெரிதாய் எந்த சத்தமும் இருக்காது.

மாணிக்கவாசகம் மட்டும் அந்நேரம் ஹாலில் அமர்ந்திருக்க அபராஜிதனும், இந்திரசேனாவும் பேசிக்கொண்டு இருக்கும் சத்தத்திலேயே அவருக்கு புரிந்து போனது ஏதோ பெரிதாய் சண்டையிட்டு கொள்கிறார்கள் என்று.

சத்தம் மட்டுமே கேட்டதே தவிர என்ன பேசுகிறார்கள் என்று புரியாது போனாலும் எதற்காய் இருக்கும் என்று அவருக்கு தெரியாதா என்ன

அது தெரிந்ததுமே முகிலன் அறைக்கு சென்றவர் அவனை இந்திரசேனாவிற்கு போன் செய்ய சொன்னார். “எதுக்குப்பா இந்த நேரத்துல பாப்பாக்கு கூப்பிட சொல்றீங்க??”

“காரணமாத்தான் சொல்றேன் முகிலா பண்ணு”

“சரிங்கப்பா, ஆனா என்னன்னு சொல்லட்டும்ப்பா??”

“நான் பேசச் சொன்னதா சொல்லு” என்றிருந்தார் அவர். அவனும் அவர் சொன்னதை அப்படியே செய்து முடித்திருந்தான்.

மாணிக்கவாசகம் சொன்னார் என்று சொன்னதுமே அவளுக்கு புரிந்து போனது அவர் தங்களை கவனித்துவிட்டு தான் கூறுகிறார் என்று.

‘நான் நல்லாயிருக்கணும்ன்னு தானே எல்லாரும் ஆசைப்பட்டாங்க. அவங்க முன்னாடி இப்படி நடந்தா எவ்வளவு வருத்தப்படுவாங்க. இனிமே இப்படி நடக்கக்கூடாது’ என்று தனக்குள் முடிவெடுத்துக் கொண்டு அதைப்பற்றிய சிந்தனையில் இருந்தாள் அவள்.

“என்ன போன் வந்ததும் அமைதியாகிட்டே?? பேசினது யாரு அந்தாளா, எதுனாலும் அந்தாளு சொன்னா தான் நீ கேட்பியா??” என்றவனின் முகத்தில் அப்படியொரு கோபம்.

அவள் பதிலே பேசவில்லை, பேச்சை வளர்த்த விரும்பவில்லை. கட்டிலில் ஏறி அவள் படுத்துக்கொள்ள “நான் கேட்டுட்டே இருக்கேன் நீ பாட்டுக்கு போய் படுக்கறே??” என்றான்.

“எனக்கு இப்போ பதில் சொல்ற மூட் இல்லை. அதுக்காக இந்த பிரச்சனையை இப்படியே விடுற எண்ணமும் இல்லை. நம்ம வீட்டுல போய் இதை பேசி தீர்த்துக்கலாம் இப்போ வந்து படுங்க” என்றாள் அவள்.

அவள் பேசியது அவனுக்கு கோபமூட்டினாலும் நம்ம வீட்டுல போய் பேசிக்கலாம் என்று இறுதியாய் அவள் சொன்னது அவனுக்கு இதமாயிருந்தது.  

மறுவீடு முடிந்து அவர்கள் வீட்டிற்கும் வந்துவிட்டிருந்தனர். இயல்பு வாழ்க்கை மெல்ல திரும்ப ஆரம்பித்தது.

அவள் வீட்டில் இருந்து வந்த பின்னர் மீண்டும் எந்த பேச்சு வார்த்தையும் இருவருக்குள்ளும் எழவில்லை. அன்று காலையில் அவள் நேரமே தயாராகி கிளம்பிக் கொண்டிருக்க அபராஜிதன் பார்த்துக் கொண்டிருந்தானே தவிர என்னவென்று கேட்கவில்லை, அவளும் சொல்லவில்லை.

காலை உணவு முடிந்ததும் “மாமா கொஞ்சம் இப்படி வர்றீங்களா??” என்று கரிகாலனை அழைக்க எழுந்து நின்றவர் “சொல்லும்மா” என்றார்.

“இன்னைக்கு நான் முதல் முதல்ல ஒரு கேஸ் எடுத்து நடத்தப் போறேன் மாமா. இதுவரைக்கும் சித்தா கூட சேர்ந்து ஹியரிங் அட்டென்ட் பண்ணியிருக்கேன். என்னை நம்பி வந்த முதல் கேஸ் என்னை ஆசிர்வாதம் பண்ணுங்க மாமா” என்று சொல்லி அவர் கையில் திருநீரை கொடுத்து வைத்துவிட சொன்னாள்.

அங்கு நடப்பத்தை பார்த்துக் கொண்டிருந்தவனின் முகம் உணர்வுகளை துடைத்து அவளையே பார்த்துக் கொண்டிருந்தது. ‘நான் அவ்வளவு சொல்லியும் கேட்காம கோர்ட்டுக்கு போவேன்னு நிக்கறா’ என்று தான் பார்த்தான்.

அதற்கு மேல் அவளைக் கண்டுக்கொள்ளவில்லை அவன். உணவில் கவனமாய் சாப்பிட ஆரம்பித்தான்.

“ரொம்ப சந்தோசம்மா நீ எடுக்கற கேஸ் நல்லபடியா வெற்றி பெறணும்மா. நீ நல்லாயிருப்பே” என்று வாழ்த்தி அவளுக்கு திருநீரை பூசிவிட்டார் அவர்.

“தேங்க்ஸ் மாமா”

“எப்படிம்மா போறே??”

“ட்ரைன்ல மாமா”

“லேட் ஆகிடாதும்மா”

“அதெல்லாம் ஆகாது மாமா நான் பார்த்துக்கறேன்”

“எந்த கோர்ட்ம்மா, சைதாப்பேட்டையா இல்லை எக்மோரா??”

“ஹைகோர்ட் மாமா சித்தா அங்க தானே இருக்காங்க. நானும் அங்க தான் ப்ராக்டீஸ் பண்ணேன். இப்போ கூட அங்க தான் போகணும்”

“அச்சோ அப்போ இன்னும் தூரமாச்சேம்மா”

“டைம் இருக்கு மாமா, நான் போய்டுவேன் நீங்க கவலைப்படாதீங்க”

“இல்லைம்மா அபியை வந்து உன்னை கோர்ட்ல விடச்சொல்றேன். முதல் கேஸ்ன்னு வேற சொல்றே, லேட்டா போகக்கூடாதும்மா” என்றவர் மகனிடம் திரும்பி “அபி நீ இந்திரா கூட போயி அவளை விட்டுட்டு வந்திடுப்பா”

“அப்பா எனக்கு ஸ்கூலுக்கு போகணும்ப்பா, நேரமாகிடும்”

“ஒரு நாள் நேரமான ஒண்ணுமில்லை அபி. வேணா நான் போறேன் ஸ்கூல்க்கு”

“நீங்க இன்னைக்கு டைரக்டரேட் போகணும்ப்பா”

“நாளைக்கு போய்க்கறேன்” என்றார் அவர்.

“மாமா அதெல்லாம் வேணாம் எனக்கு ஒண்ணும் பிரச்சனையில்லை. உங்க ரெண்டு பேருக்கும் வேலையிருக்கும் நான் பார்த்துக்கறேன்” என்றாள் அவள்.

அவரால் அவளை அப்படியே விடமுடியவில்லை. முதல் கேஸ் என்று வேறு அவள் சொல்லியிருந்ததால் தான் அவ்வளவு யோசித்தார் அவர்.

அவர் யோசிப்பது பார்த்து அபராஜிதன் “நானே போறேன்ப்பா” என்று தன் வாயால் சொல்லிவிட அவரின் முகத்தில் நிம்மதியின் சாயல்.

முகத்தை இறுக்கமாய் வைத்துக்கொண்டே சாப்பிட்டு எழுந்தவன் உள்ளே சென்றுவிட்டான். கரிகாலன் அவளிடம் விடைப்பெற்றுக் கொண்டு கிளம்பியிருந்தார்.

“கடைசியில போக வேணாம்ன்னு சொன்னவனையே உன் கூட வரவைச்சுட்டல்ல. சாதிச்சுட்ட நீ, உன் பிடிவாதத்துல நீ ஜெயிச்சுட்ட” என்றான் ஒரு மாதிரிக் குரலில்.

அவளுக்கு தெரியும் அவனுக்கு பிடிக்காது என்று. ஆனாலும் அவள் அதை விடுவதாயில்லை, அவள் குணத்தையோ அவள் பழக்கவழக்கத்தையோ மாற்றச் சொன்னால் கூட ஒரு வேளை அவள் மாற்றியிருப்பாளோ என்னவோ அவன் சொன்னது அவளின் வேலை குறித்து.

அதை எப்படி அவளால் விட முடியும். அவள் ஆசையாசையாய் தேர்ந்துடுத்து விரும்பி படித்த படிப்பு. அதில் ஒரு சிறு துரும்பை கூட அவள் செய்து முடித்திருக்கவில்லை, எப்படி அவளால் உடனே அவன் சொன்னதை செய்ய முடியும், எப்போதுமே அவன் சொன்னதை அவளால் செய்ய முடியாது.

காரை கரிகாலன் எடுத்து சென்றுவிட்டதால் அவனின் பைக்கில் தான் அவர்கள் பயணப்பட்டனர். குரோம்பேட்டை ஸ்டேஷனில் அவளை கொண்டு வந்து விட்டான்.

“இவ்வளவு தூரம் தான் என்னால கொண்டு வந்து விட முடியும். இனிமே நீ தான் போய்க்கணும்”

“ரொம்ப தேங்க்ஸ்”

“உன் தேங்க்ஸ் ஒண்ணும் எனக்கு வேணாம்”

“என்னை விஷ் பண்ண மாட்டீங்களா??”

“நான் எதுக்கு விஷ் பண்ணணும்??”

“என்னோட பர்ஸ்ட் கேஸ்ன்னு மாமாகிட்ட சொன்னதை நீங்க கேட்டீங்க தானே”

“ஓ!! அதை நீ உங்க மாமாகிட்ட சொன்னல்ல ஆமாமா நான் கேட்டேன். நான் உன்னோட மாமாக்கு பையன் தூரத்து சொந்தம்ல அதான் நீ என்கிட்ட எதுவுமே சொல்லலை” என்று அவள் அவனிடம் சொல்லாது போனதை மனதில் வைத்து அவளை குத்தி பேசினான்.

“நான் சொன்னா நீங்க சந்தோசப்பட்டு எனக்கு அப்போவே விஷ் பண்ணியிருப்பீங்க அப்படித்தானே” என்றாள் அவள் நக்கலாய்.

“நான் தப்பு பண்ணிட்டேன்”

“என்ன தப்பு??”

“உன்னை கல்யாணம் பண்ணணும்ன்னு நினைச்சேன் பாரு அது தான் என்னோட பெரிய தப்பு”

Advertisement